Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

மெய்ப்பொருள் காண்பது அ(ரிது)றிவு. 

“தம்பி ஊரில என்ன நடக்குது ஒவ்வொரு நாளும் வெட்டுக்குத்து ,ஆவா குறூப்பின் அடாவடி எண்டு ஊர்ப்புதினத் தலையங்கத்தில அடிக்கடி வருது , கோயில் திருவிழாவுக்கு வேற வரோணும் இப்ப எப்பிடி நிலமை அங்க“ எண்டு தொடங்கின கனடாக் கோல் இடையிலயே cut ஆகீட்டுது. காலமை கோல் கதைச்சு முடியாமல்ல வேலைக்கு வெளிக்கிட வீட்டில மாமி வேற, “இப்ப பேப்பரைப் பாக்கவே ஏலாது முன் பக்கம் வெட்டும் கொத்தும், சண்டை எண்டுதான் இருக்கு” எண்டு புறுபுறுத்தபடி தேத்தண்ணிக் கோப்பையை கழுவப் போனா. 

இதை நம்பி வாட்டுக்குள்ள போய் வந்த newsன்டை எடுப்புக்கு ஏத்த மாதிரி நாலு “பீமன்கள்” இருப்பாங்கள், கை கால் எண்டு வெட்டுப்பட்டு தொங்கிக்கொண்டு இருக்கும், எப்பிடிப் பொருத்தப்போறம் எண்டு பாத்தா, வாளைத் தூக்கினது எண்டு சொல்லி ரெண்டு நோஞ்சான் , வெட்டு வாங்கினது எண்டு காயங்களோட மூண்டு அதை விட சொத்தல். 

அப்பதான் விளங்கிச்சுது பேப்பரில தலைப்பில வந்த அளவுக்கு weight ஆக்களுக்கும் இல்லை news க்கும் இல்லை எண்டு.

எண்பதுகளில பேப்பரை வாங்கி வாசிக்க கொஞ்சம் நேரம் எடுக்கும் ஆனாலும் வாச்சு முடிய உலகத்தையே சுத்தி வந்த மாதிரி இருக்கும். என்ன தான் ஆராவது ஒரு கதையை முழுக்கச் சொல்லி இருந்தாலும் முழுப் பேப்பரா இருந்தாலும் இல்லாட்டி special edition ஒரு பக்கப் பேப்பரா இருந்தாலும் அதை வாங்கி வாசிச்சாத்தான் ஒரு தெளிவு இருக்கும். இலங்கை முழுக்க ஆறு தமிழ்ப்பேப்பர் வரேக்க, யாழ்ப்பாணத்தில மட்டும் 3 பேப்பர் வாறது. ஈழநாடு, முரசொலி அதோட கனகாலமா தனித்து உதயன் வந்தது. வீரகேசரியும், தினபதி, தினகரனும் கொழும்புப் பேப்பர். வார வெளியீடா ஞாயிற்றுக்கிழமை வாற பேப்பரை முதலே book பண்ணி வாங்காட்டி காலமை போகக் கிடைக்காது . அதிலேம் சிந்தாமணி எண்டு வாற தினமதியின்ட ஞாயிறுப் பேப்பருக்கு demand கூட. 

அதோட எண்பதுகளில Hot Spring , Saturday review எண்டு English paperகளும் ஊரில இருந்து வாறது. English paper வாங்கவெண்டு ஒரு தனிக் கூட்டம் இருந்தது. வீட்டை வாங்கிற இங்கிலிஸ் பேப்பரை வாசி எண்டு வற்புறுத்த அதுகும் daily news எண்டா lifco dictionaryயோட தான் போகவேணும் வாசிக்க.

Dailynews காரன் “லங்கா புவத்” ஆ மாறினாப் பிறகு Sunday times ஐ சனம் கூட வாசிக்கத் தொடங்கிச்சுது. இக்பால் அத்தாசும் fifth column உம் ஆங்கிலத்தோட அரசியல் அறிவையும் தந்திச்சுது. 

வெள்ளைகாரன் மாதிரி நாங்களும் பேப்பரோட தான் toiletக்குப் போறனாங்கள் , என்ன அவங்கள் கொண்டு போறது துடைக்கிறதுக்கு நாங்கள் வாசிக்கிறதுக்கு. யாழ்ப்பாணத்தானுக்கு காலமை கட்டாயம் ஒரு கையில பேப்பரும் மற்றக்கையில பால்க்கோப்பியோ தேத்தண்ணியோ இருக்கோணும். இப்ப what’s app ஐப் பாக்க phone ஓட போற மாதிரி கக்கூசுக்கு கையில பேப்பர், கோப்பி, சுருட்டு எண்டு ஒவ்வொருத்தரும் ஏதோ ஒண்டையோ ரெண்டையோ கொண்டு போவினம். 

அப்ப பேப்பர் மட்டுமே விக்கிற கடை இருந்தது

சில கடைக்காரர் காலமை வந்து பேப்பரை வித்திட்டுப் போய் திருப்பி வந்து ஒம்பது மணி போல கடைதுறந்து மிச்ச வியாபாரத்தைச் செய்வினம். பால், பாண் எல்லாம் வீடு தேடி வந்து வியாபாரம் செய்தாலும் பேப்பரை வீடுவீடா விக்கறதோ இல்லாட்டிப் பேப்பரை வீட்டில போய் போடிற ஆக்களோ இருக்கேல்லை. கடைக்குப் போய் வாங்கின பேப்பரை கடை வாசலிலயே வைச்சு விரிச்ச மேலால மேஞ்சிட்டுத்தான் வீட்டை பேப்பரைக் கொண்டு வாறது.

காலமை வாங்கிற பேப்பரை முதல்ல ஆர் வாசிக்கிறது எண்டதிலேயே சண்டை வரும் . கடைசீல சமாதானாமா உள்பக்கம் வெளிப்பக்கம் எண்டு பக்கமா பிரிச்சு ஆளுக்கு ஒண்டொண்டா வாசிக்கிறது. ஆம்பிளைகள் எல்லாம் காலமை வாசிச்சு முடிய அம்மாமார் எல்லாம் மத்தியானம் சமைச்சிட்டு படுத்திருந்து வாசிப்பினம் . அதோட பின்னேரம் ரோட்டில நடக்கிற அரட்டை அரங்கத்தில அதைப்பத்தி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஊரில ரெண்டு மூண்டு பேப்பர் வாற காலத்தில பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிற பேப்பரை நாங்கள் வாங்கிறதில்லை பேப்பரை வாங்கி பின்னேரம் மாத்தி வாசிக்கிறது. 

இப்பத்த Breaking newsக்கு முன்னோடி எங்கடை ஊர் special edition தான். முதல் முதலா எப்ப இந்த special edition பேப்பர் வந்தது எண்டு தெரியேல்லை. திடீரண்டு வந்து பிளேன் நிவாரணம் போட இந்திய ராணுவம் வரப்போது எண்ட செய்திதான் முதல் வந்த special edition எண்டு நெக்கிறன். இது Print பண்ண முதலே வரப்போதாம் எண்டு சனம் எப்பிடியாவது கேள்விப்பட்டிடும். எனக்குத் தெரிஞ்சு அச்சகத்தில இருந்து வாற special பேப்பரை கடைக்குள்ள கொண்டு போய் வித்ததா சரித்திரம் இல்லை. எல்லாமே வாசலில வைச்சே சனம் வாங்கி முடிச்சிடும்.

ஊடகம் எண்டதுக்கு அப்ப ஊர்ப் பேப்பர்கள் தான் சரியான உதாரணம். அது ஊரெல்லாம் சனத்தோட ஊடுருவி யாழ்ப்பாணத்தில செய்தியாய் இல்லாமல் வாழ்வாய் இருந்திச்சுது. அறிவிக்கப்பட வேண்டிய மரணங்கள் கூட அறிவித்தலா இல்லாமல் செய்தியாய்த் வரும் அவசரம் உணர்ந்து. சோதினைக்கு Apply பண்ணிற ஒரு பள்ளிக்கூடத்தில பிறகு இடம்பெயர்ந்து வந்து படிக்கிறது வேறொரு பள்ளிக்கூடத்தில, கடைசியாச் சோதினை எழுதிறது இன்னொண்டா இருக்கும். முதலாவது சோதினை ஒரு பள்ளிக்கூடத்திலேம் செல்லடிச்சு ஓடிப்போய் ரெண்டாவது சோதினை எந்தப் பள்ளிக்கூடத்தில எண்டு பாக்கிறதுக்கும் Index number ஐ விடியவில தேடிக் கண்டு பிடிக்கிறதும் Paper இல தான். சோதினை index number மட்டும் இல்லை கிளாலிப்பயணத்துக்கு இண்டைக்கு எந்த token காரர் போகலாம் எண்டைதையும் பேப்பரில பாத்துத்தான் ஆக்கள் பயணம் போறது. 

சனங்கள் பேப்பர் இரவல் வாங்கிறது குறைவு , சந்தையில மரக்கறி விக்கறவரில இருந்து சைக்கிள் கடைக்காரர், சலூன் காரர் எண்டு எல்லாரும் பேப்பர் வாங்கி வேலைக்கு நடுவில கொஞ்சம் கொஞ்சமா வாசிச்சு முடிப்பினம். அப்ப எல்லாரும் பேப்பர் வாங்கி வாச்சாலும் ஊரெல்லாம் சந்திக்குச் சந்தி வாசிக சாலை இருக்கும் . சரிச்ச அடிச்ச மேசையில பேப்பருக்கு நடுவில குறுக்கால ஆரும் களவெடுக்காம இருக்க கம்பி வைச்சு பூட்டுப் போட்டிருக்கும் . அங்க போய் நிண்ட படி தான் வாசிக்க வேணும் . பழைய பேப்பர் எண்டால் இருந்து வாசிக்கலாம். அனேமா அண்டைக்கு வாற எல்லாப் பேப்பரோட weekend பேப்பரும் இருக்கும். 

வீட்டில இருக்கிற வேலை வெட்டி இல்லாத (retired ) ஆன ஆம்பிளைகளும் அதோட வெளீல இருந்து லீவில வந்திருக்கிறவை எல்லாரும் வருவினம் . என்னதான் வீட்டை பேப்பர் வாங்கினாலும் வந்து மிச்ச எல்லாப் பேப்பரையும் வாசிச்சு முடிச்சிட்டு வெளீல இருக்கிற வாங்கில இருந்து ஊர்ப்புதினம் அரசியல் நிலை எல்லாம் கதைச்சிட்டுத்தான் திருப்பி வீட்டை போவினம். இது எல்லாம் ஒரு வகை pocket political meeting மாதிரித்தான்.

வாசிகசாலை கொஞ்சம் பெரிசாக வாசிப்பைத் தாண்டி அது சனசமூக நிலையமாக மாறும். வாசிப்போட நிக்காம அறிவோட அரசியல், விளையட்டு, சமயம் எண்டு எல்லாத்தையும் வளக்கத் தான் இது. இப்ப ஊரில இருக்கிற கோயில், குளம் ,காணி, கட்டிடம் எல்லாம் ஏனெண்டு காரணம் இல்லாமல் courtஇல நிக்க அந்தக் காலத்தில எழுதப்படாத சட்டங்களால தான் இந்த சனசமூக நிலையங்கள் நடந்திச்சுது. பேப்பர் வாசிக்க எண்டு தொடங்கி வாசிச்சதோட நிக்காம கடைசீல சனத்துக்கும் சமூகத்துக்கும் சேவை எண்டு மாறினதெண்டால் அதுக்குப் பேப்பர் தான் காரணம். அந்த நாட்களில பட்டறிவை பகுத்தறிய பேப்பரும் அதைப் பகுத்துப் பாக்கிற ஆக்களும் இருந்திச்சினம். 

இப்ப எல்லாச் செய்தியையும் வாச்சிட்டு இவர் வந்தால் ஏதாவது தீர்வு கிடைக்குமா கிடைக்காதா, அவர் சொன்ன மாதிரிப் போராட்டம் வெடிக்குமா வெடிக்காதா எண்டு தேடத் தொடங்கி, குழம்பிப் போய் தொடந்து வாசிக்க accidentம் , வெட்டுக் கொத்தும் எண்ட செய்தி தான் இருக்கும். முன்பக்கத்தில வாற news முக்கியத்துவம் பெற நடக்கிற சில நல்ல விசியங்கள் வாசிக்கப்படாமலே போக ஏதோ இப்ப ஊரில எப்பவுமே பிரச்சினைதான் எண்ட மாதிரி negative thoughts மனதில வந்திடும்.

பேப்பரில இடம் நிரப்பக் குறை நிரப்புப் பேரணையாக வாழ்த்துகளும் அஞ்சலிகளும் போட்டு நிரப்பத் தொடங்கி கடைசீல அது பத்துப் பக்கமா மாறத் தொடங்க இடைவெளியை நிரப்பிறது news ஆ மாறீட்டுது. 

ஐஞ்சாம் வகுப்பில இருந்து ஆடியபாதப் பள்ளிக்கூடம் வரை pass பண்ணினதைப் பாராட்டி வாழ்த்திற பத்துப் பேரும் , இவை எல்லாருக்கும் நான் தான் படிப்பிச்சனான் எண்டு சுய விளம்பரம் போடிற ரியூசன் வாத்திமார் கொஞ்சப் பேரும், இருக்கேக்க பாக்க வராம இப்ப பக்கம் முழுக்க பாட்டி ஒண்டுக்குப் பத்தாவது வருசஅஞ்சலியும் , ஒண்டிலிரந்து நூறு வயது வரை பிறந்த நாள் வாழ்த்துகளும் தான் முக்கியத்துவம் பெறத்தொடங்கீட்டுது. வீட்டு விசேசத்தை நேர வாழ்த்தி, what’s app இல வாழ்த்தி, face book இல வாழ்த்தி அது எல்லாம் பழசாப் போக பேப்பரில படம் போட்டு வாழ்த்தீட்டு வாழ்த்துவோர் எண்டு அன்பு அப்பா , ஆசை அம்மா எண்டு அந்தக்காலத்தில ரேடியோ சிலோன் பிறந்த நாள் வாழ்த்து மாதிரி அடைமொழியோட ஊருக்கெல்லாம் தெரியப் போடிறது தான் அன்பின் வெளிப்பாடா போட்டுது. இதுக்கு மேலால கலர் படத்தோட கோயில் கும்பாபிசேகம் எண்டு வழக்கமா வாற ஐஞ்சு பேரோட இன்னும் கொஞ்சப் பேரின்டை வாழ்த்துச் செய்தியோடேம் படத்தோடேம் வாற விசேட மலர் வெளியிட்டிக் கொஞ்ச நாளிலியே சில நேரம் கோயில் நிர்வாகம் கோட்டில நிக்குதாம் எண்டு செய்தியிலேம் வரும்.  

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் எண்டதுக்குப் புத்தகம் தேவேல்லை பேப்பர் வாசிப்பதால் எண்டு போட்டாலே சரி எண்ட அளவுக்கு அப்பத்தக் காலத்தில பேப்பரும் வந்திச்சுது சனங்களும் அதை வாசிச்சுது. ஆனா இப்ப முன்பக்கம் கனக்க கவர் பண்ணிறம் எண்டு எல்லா newsஐயும் போட்டிட்டு மூண்டு பக்கத்துக்கு தொடர்ச்சி எண்டு போட மூண்டாவது தொடர்ச்சீல முதல் பக்க news மறந்தே போடும்.

அப்ப தங்கடை பேப்பருக்கு எண்டு தனித்துவமா reporters, editors எண்டிருந்த காலம் மாறி இப்ப ஒரே ஆள் தான் ஊரில இருக்கிற எல்லாருக்கும் news குடுப்பார் போல இருக்கு. ஏனெண்டால் முதல் நாள் இரவு web இல இருக்கிறது தான் அடுத்த நாள் print இலயும் வரும். அதோட ஆற்றேம் ஒராளின்டை கருத்து Facebook இல கூட likes வந்தா அது கூடக் கொஞ்ச நாளில செய்தியாக்கூட வரும்.

இன்னும் காலமை பால்த்தேத்ண்ணியோட பேப்பரை வாங்கிப் பாத்திட்டு பின்னேரம் பட்டறிவோட போய்க் கதைச்சு பகுத்தறிவோட வாற ஆக்களும், ஆராஞ்சு எழுதிற ஆசிரியர்களும் , சில பேப்பரும் ஊர் உலகத்தில இன்னும் இருக்குது எண்டது சந்தோசம்.

மெய்ப்பொருள் காண்பது அறிவாய் இருந்தது அரிதாய் போக்கூடாது , போகாது எண்ட நம்பிக்கையுடன்…….

 

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.