Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புருஜோத்தமன் தங்கமயில்

 

sajith.jpg


ஜனாதிபதித் தேர்தல் கால குதிரை ஓட்டம் சூடு பிடித்திருக்கின்றது. தேர்தல் முடியும் வரையில் யார் எந்தப் பக்கம் தாவுவார்கள் என்பதை கண்காணிப்பதே கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. தற்போது அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை நோக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களின் திரட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவினைக் காட்டிலும் அதிகளவு நிகழ்ந்து வருகின்றது. 

 

ஏற்கனவே, ராஜபக்ஷக்களின் கட்சியான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலோடு சங்கமித்துவிட்டார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவோடு இருக்க, பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ரணில் பக்கம் சென்றுவிட்டார்கள். இவ்வாறான அச்சுறுத்தலை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களும் எதிர்கொள்கிறார்கள். ஏற்கனவே, மனோ கணேசனின் கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் ரணில் பக்கம் ஓடிவிட்டார். இந்தத் தாவல் படலம் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தங்களை முன்னிறுத்தும் கட்சிகளின் உறுப்பினர்கள் வரையில் பரவும் வாய்ப்புக்களைக் காண முடிகின்றது. அதிலும், ரணிலுடனான கட்சி ரீதியான உரையாடல்கள், தனிப்பட்ட உரையாடல்கள் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பரபரப்பாக இருக்கிறார்கள். 

ராஜபக்ஷக்கள் ஆட்சியை ரணிலிடம் கையளித்துவிட்டுச் சென்ற தருணத்தில், பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற ஜனாதிபதித் தெரிவின் போது, தனக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாக ரணில் கூறியிருந்தார். அதுவும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பின் போதே, அவர் அதனை வெளிப்படையாக தெரிவித்தார். இதனை, கூட்டமைப்பினர் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படியான நிலையில், ரணிலின் அணுகுமுறை எவ்வாறானது, எங்கு எவரோடு எதனைக் கொண்டு – கொடுத்து கையாளுவர் என்பது தெளிவானது. 

நாட்டில் வாகன இறக்குமதிக்கான தற்காலிகத் தடை நீடிக்கின்றது. இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகன இறக்குமதியும் நிகழவில்லை. வாகன அனுமதிப்பத்திரத்தை வைத்து, சில கோடிகளையாவது தேற்றலாம் என்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. அதனை, தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரணில், பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த சஜித், ‘சாராய அனுமதிப்பத்திரங்களை வழங்கி ஆள்பிடிக்கும் அரசியலை தோற்கடிப்பேன்.’ என்று கூறியிருக்கிறார். வழக்கமாக தேர்தல் காலங்களில் கோடிகளில் பேரங்கள் நடைபெறும். இப்போதும் அது நிகழ்கின்றது. அதனோடு சேர்த்து மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஏற்கனவே, மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள், ரணிலின் பக்கத்தில் இருக்கவே விரும்புகின்றனர். ஏனெனில், அவர்கள் சஜித்தோடு இணைந்தால், அவர்களின் விபரங்களை வெளியிடுவோம் என்று ரணில் அணியினர் மிரட்டுவதாக தென் இலங்கையில் பேசப்படுகின்றது. அடுத்த பொதுத் தேர்தலில் தங்களினால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான், இந்தப் பேரங்களில் அவ்வளவுக்கு அடிபடவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் குறித்து சந்தேகம் கொண்டவர்கள், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில், தாவல் படலத்துக்குள் சங்கமித்து கோடிகளை அள்ளுகிறார்கள். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஓட்டத்தில் இந்தக் கணம் வரையில் சஜித்தான் முன்னிலையில் இருக்கின்றார். அவரை நெருக்கும் அளவுக்கு பக்கத்தில் யாரும் இல்லை. அதனால், அவர் பின்னால் அடுத்த பொதுத் தேர்தலில் தங்களால் வெற்றிபெற முடியும் என்று நம்பும் கட்சிகளும், தலைவர்களும் அணி வகுத்திருக்கிறார்கள். ஆனாலும் சஜித்தின் வெற்றி வாய்ப்புக்களை குறைப்பதற்கான திட்டங்களின் போக்கில், வழக்கத்துக்கு மாறாக பல வேட்பாளர்களையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். அதிலும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் பலரும் ரணிலின் பினாமிகள். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்திட்டம், சஜித்தை நோக்கி திரளும் வாக்குகளில் ஒரு பகுதியையாவது குறைப்பதாகும். இந்தப் பினாமி வேட்பாளர்கள் தங்களை இனத்தின் காவலர்கள், அப்பழுக்கற்ற மனிதர்கள் என்றெல்லாம் அறிவிக்கும் கூத்துக்கள் எல்லாமும் நடைபெறுகின்றன. சுயேட்சை வேட்பாளர்கள், பிரதான வேட்பாளர்களின் பினாமிகள் என்று, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

சஜித்தின் வாக்குகளை பிரிப்பதற்காக ரணிலால் களமிறக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களாக விஜயதாச ராஜபக்ஷ, சரத் பொன்சேகா உள்ளிட்டோரையும் தென் இலங்கை பார்க்கிறது. ஏனெனில், தென் இலங்கையிலும் சாதி சார் அரசியல் பெரும் வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது. அதன் போக்கில், சஜித்துக்கு எதிராக விஜயதாச களமிறக்கப்பட்டிருப்பதாக கருத்து உண்டு. அதுபோல, இராணுவம் உள்ளிட்ட முப்படை சார் வாக்குகள் இலட்சக்கணக்கில் உண்டு. அவற்றில் கணிசமானவை இம்முறை சஜித்துக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பக்கத்திற்கும் செல்லும் சாத்தியமுண்டு. அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே இறுதி யுத்தத்தை வென்ற தளபதி என்ற அடையாளத்தோடு பொன்சேகாவை ரணில் களமிறக்கியிருக்கின்றார் என்பதும் குற்றச்சாட்டு. அதன்மூலம், பொன்சேகாவின் விசுவாசிகள் சஜித்தை புறந்தள்ளுவார்கள் என்பது கணிப்பு. 

வடக்கு கிழக்கில் ஏற்கனவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற பெயரில் அரியநேந்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். அதனை தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புச் செய்தாலும், அதனால் ஆதாயம் அடையும் வாய்ப்பு ரணிலுக்கானது. இப்படியான இன்னொரு நடவடிக்கையாகவே, மலையக தமிழ் வாக்குகள் சஜித்தை நோக்கி திரள்வதைத் தடுப்பதற்காக திலகராஜ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார் என்பது, சஜித் அணியினரின் குற்றச்சாட்டு. இந்த  விடயங்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்தத் தேர்தலில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளில் பெரும்பான்மையானவை சஜித்தை நோக்கியே திரளும். பொது வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் அடையாளங்களைக் கொண்டு, அந்தத் திரட்சியில் ஒரு சில இலட்சம் வாக்குகளைப் பிரித்தாலே, அது ரணிலுக்கான சாதகமான விடயமாகும். ஆனால், ரணில் எதிர்பார்க்காத விடயம் ராஜபக்ஷக்களிடம் இருந்துதான் அவருக்கு பதிலடியாக கிடைத்திருக்கின்றது. 

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அடையாளப்படுத்தப்பட்டு வந்த தம்மிக்க பெரேரா, இறுதி நேரத்தில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளைக் காரணங்காட்டி போட்டியில் இருந்து விலகினார். ஆனால், அவரை விலகச் செய்ததில் ரணிலின் பங்கு இருப்பதாக ராஜபக்ஷக்கள் குற்றஞ்சாட்டினார்கள். இந்த நெருக்கடியான நிலையில், இளைய ராஜபக்ஷவான நாமல் முன்வந்து ரணிலுக்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்றிருக்கிறார். மற்றவர்களை வேட்பாளர்கள் நிறுத்தினால்தானே, அவர்களை மிரட்டி உருட்டி அடிபணிய வைக்க முடியும், தானே வேட்பாளராகிவிட்டால், வெருட்டல் உருட்டலுக்கு வழியில்லாமல் போகும் என்பது நாமலின் எண்ணம். அதனால்தான், படுதோல்வி காணும் வாய்ப்புள்ளது என்ற நிலையிலும் நாமல், ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தார். 

தம்மிக்க பெரேராவை ஒதுங்க வைத்தால், ராஜபக்ஷக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்தே ஒதுங்கி விடுவார்கள் என்பது ரணில் எதிர்பார்ப்பு. அதன்மூலம், ராஜபக்ஷ ஆதரவு வாக்குகள் தனக்கு முழுவதுமாக கிடைத்துவிடும். ஏனெனில், ஏற்கனவே  பெரமுனவின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னோடு இருக்கிறார்கள், தேர்தலில் இருந்து ராஜபக்ஷக்கள் ஒதுங்கிவிட்டால், ராஜபக்ஷ ஆதரவாளர்களுக்கு ரணிலைத் தவிர வேறு தெரிவுகள் இல்லை. இந்த கணிப்பைக் கொண்டு ரணில் காய்களை நகர்த்த, நாமல் தன்னையே களத்தில் நிறுத்தி ரணிலுக்கு செக் வைத்திருக்கிறார். இதன்மூலம், ரணில் பக்கம் திரள வேண்டிய வாக்குகளில் குறைந்தது ஐந்து இலட்சம் வாக்குகளாவது இழக்கப்படும் வாய்ப்புண்டு. ரணில், வடக்கு கிழக்கு, மலையகத்தில் சுயேட்சை வேட்பாளர்களைக் கொண்டு நடத்திய வாக்குப் பிரிப்பு வேட்டையும் தென் இலங்கையில் பொன்சேகா, விஜயதாசவைக் கொண்டு நடத்திய இராணுவ – சாதி ரீதியான அடையாள வாக்குப் பிரிப்பையும் நாமல் களமிறங்கி நாசமாக்கிவிட்டார். 

தேசிய மக்கள் சக்தியின் பின்னாலான திரட்சி தற்போது பெருமளவு அடிபடத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே தென் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மீதான அதிருப்தி என்பது கணிசமாக உண்டு. அதனை மாற்றுவதற்காக அநுர கட்சியை, பொது அமைப்புக்களோடு இணைந்து தேசிய மக்கள் சக்தியாக பெயர் மாற்றம் செய்தார். ஆனாலும் அது அவ்வளவு சாத்தியமான வெற்றிகளை பெற்றுத்தருவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அரகலய முடிந்த கையோடு தேர்தல் ஒன்றுக்கு நாடு சென்றிருந்தால், தேசிய மக்கள் சக்தி, இரண்டாமிடத்துக்கு வந்து, பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தேசிய மக்கள் சக்தி மீதான ஈர்ப்பு குறைந்துவிட்டது. அதனை, அந்தக் கட்சியின் பிரச்சாரக் கூட்டங்களிலேயே காண முடிகின்றது. முதலாவது இடத்துக்கு போட்டியிடும் ஆன்ம பலத்தோடு இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது மூன்றாமிடத்துக்கான போட்டியிலேயே இருக்கிறார்கள். சிலவேளை அதிலும் அவர்கள் நாமலிடம் தோற்கும் வாய்ப்புக்கள் உண்டு. ஏனெனில், தென் இலங்கையின் சமூக கட்டுமானம் சாதி – மத – அடிப்படைவாதம் சார்ந்தது. அது, பெரியளவில் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரித்தது இல்லை. 

தமிழரசுக் கட்சியின் ஆதரவு என்பது சஜித்தை நோக்கியதாகத்தான் இன்னமும் இருக்கின்றது. அதனை, இந்தியாவும் வலியுறுத்துவதாக தெரிகின்றது. ரணிலோடு, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தனித்துத் தனித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினாலும், இறுதியில் சஜித்தோடுதான் நிற்பார்கள் என்பதுதான் நிலை. அது, தமிழ் மக்களின்  பெருந்திரட்சி எந்தப் பக்கம் என்ற அடிப்படையிலும் நிகழ்வதுமாகும். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பொதுக் கட்டமைப்பினர் முன்வைத்தாலும், அந்தக் கட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளே தங்களின் நிலைப்பாடுகளில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. அதனால், பொதுக் கட்டமைப்பின் அரசியல் பத்தியாளர்கள் மாத்திரம் பிரச்சாரம் நடத்தி, பொது வேட்பாளரை நோக்கி, வாக்கைச் சேர்த்துவிடுவார்கள் என்று நம்புவது பெரும் அபத்தமாகும். அதனால், அது சில ஆயிரம் வாக்குகளோடு இன்னொரு எம்.கே.சிவாஜிலிங்கமாக அரியநேந்திரனை கட்டமைப்பதோடு முடிந்து போகும். அப்படியான நிலையில், பெரும்பான்மையான தமிழ் வாக்குகள் தங்களோடு இருப்பதாக காண்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி செயற்படும். அது, சஜித்தை நோக்கிய திரட்சியாகவே இருக்கும். கடந்த காலங்களைப் போன்றே, வாக்கெடுப்புக்கு சில நாட்களுக்குப் முன்னால், சஜித்தை ஆதரிப்பதான அறிவிப்பை தமிழரசு விடுக்கும். 

இன்னொரு பக்கம், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் கருத்து வெளியிட்டு வந்த தமிழரசின் முக்கியஸ்தர் ஒருவரை டில்லி அவசரமாக அழைத்திருக்கின்றது. அங்கு அவருக்கு சஜித்தை நோக்கிய நகர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கி அனுப்பியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில், சம்பந்தப்பட்ட தலைவர், பொது வேட்பாளர் பற்றி பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு இந்தியாவே இன்னமும் எஜமான்.  தென் இலங்கையின் உணர்நிலை என்பது, சஜித்தை நோக்கிய திரட்சியாக இருக்கின்ற நிலையில், அந்த ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள இந்தியா நினைக்கின்றது. அதனால்தான், சஜித்துக்கான ஆதரவு நிலையில் இந்தியா இருக்கின்றது. அதன்மூலம், எதிர்காலத்தில் சஜித்தோடு நெருக்கமாக இயங்கலாம் என்பது பிராந்திய வல்லரசின் எதிர்பார்ப்பு. ரணிலைப் போன்ற மூத்த தந்திரசாலியைக் கையாள்வது இந்தியாவுக்கு பெரும் தலையிடியானது. அப்படியான நிலையில், சஜித் அவர்களுக்கு விருப்பான தேர்வு. 

வாக்குத் திரட்சிக்கான நகர்வுகள், பிரித்தாளும் உத்திகள், கோடிகளில் பேரம் என்று எதிர்வரும் ஒரு மாத காலத்தில் அதிகமான பரபரப்புக்களை தேர்தல் களம் காட்டப் போகின்றது. இந்த அலைக்கழிப்புக்களில் அடங்காத பெரும்கூட்டமான மக்கள் தங்களின் நாளாந்த வாழ்வாதாரத்துக்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளும் முகவர்களும் தின்று கொழுத்து பெருச்சாளிகளாக திளைக்கிறார்கள். தேர்தல்கள் முடியும் வரையில் இதுதான் காட்சிகளாகப் போகின்றது. 

- காலைமுரசு பத்திரிகையில் ஆகஸ்ட் 18, 2024 வெளியான பத்தி.

http://maruthamuraan.blogspot.com/2024/08/blog-post_18.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.