Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி

பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவை அங்கே பேச அழைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் இன்று பிற்பகலில் (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா, “மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நாங்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தோம் எனச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என பள்ளியின் தலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி நிர்வாகமோ எங்களிடம் சொல்லவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பாக எங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரும் இதைத் தெரிவித்தோம்” என்று கூறினார்.

மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பள்ளி மேலாண்மைக் குழு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதும், பள்ளி வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதும் தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் என்ன நடந்தது?

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மகாவிஷ்ணு என்பவர் தனது பேச்சில் சர்ச்சைக்குரிய பல கருத்துகளை முன்வைத்தார்.

இதேபோல சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியிலும் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டார். அங்கு பேசும்போது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ - புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தப் பேச்சுக்கு அந்தப் பள்ளியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளியுமான கே.ஷங்கர் என்பவர் அந்தத் தருணத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தார்.

ஆனால், அப்படிக் கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியைவிட நீங்கள் பெரியவரா’ என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், தான் பேசுவது ‘அவருடைய ஈகோவை புண்படுத்தியதால்தான்’ இதுபோல அந்த ஆசிரியர் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி
படக்குறிப்பு, அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்தபோது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ, எய்ட்ஸோ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினர்

பள்ளி முன்பு மாணவர் அமைப்பினர் போராட்டம்

இந்த இரு அரசுப் பள்ளிகளிலும் மகாவிஷ்ணு பேசிய பேச்சின் வீடியோ துணுக்குகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. குறிப்பாக, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5), பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதைப் பகிர்ந்து, அரசுப் பள்ளிகளுக்குள் இதுபோல நடக்க அனுமதித்தது ஏன் எனக் கேள்வியெழுப்பினர்.

மேலும், பல சமுக ஊடகப் பதிவர்கள், மகாவிஷ்ணுவைப் பேச அனுமதித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குரல் எழுப்பினர்.

சமீபத்தில், விநாயகர் சதுர்த்தியை பள்ளிகளில் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியாகி, பள்ளிக் கல்வித் துறை மீது பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் கூடுதல் அனலைக் கிளப்பியது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 6) காலையில் அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்ப வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பள்ளிக்கு முன்பாக ஊடகங்கள் திரண்டிருந்தன.

அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்த போது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினர்.

சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இரண்டு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் போவதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார்.

 
மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி

பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT

படக்குறிப்பு, கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியைவிட நீங்கள் பெரியவரா’ என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்

அமைச்சரின் வாக்குறுதி, முதல்வரின் அறிக்கை

பிறகு நடந்த பள்ளியில் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் கே.ஷங்கருக்குப் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார்.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேள்வி எழுப்பிய ஆசிரியரை அவமானப்படுத்தியது தொடர்பாகப் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், மகாவிஷ்ணு என்ற நபர் எப்படி பள்ளிகளுக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்குப் பதிலளிக்க யாரும் முன்வரவில்லை. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.தமிழரசி, மகாவிஷ்ணு பேசியபோது குறுக்கிட்ட தமிழ் ஆசிரியர் கே.சங்கர், ஆகியோர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர்.

விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரும் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர். அமைச்சரிடம் கேட்டபோது, எப்படி இது ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தான் ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 
மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி
படக்குறிப்பு, செப்டம்பர் 6 காலை அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது

பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்

அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான இரா.தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

மகாவிஷ்ணு தரப்பு சொல்வது என்ன?

இந்த விவகாரம் குறித்து மகாவிஷ்ணுவின் கருத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரது அமைப்பான பரம்பொருள் ஃபவுண்டேஷனில் கேட்டபோது, "அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதால், உடனடியாக இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க முடியவில்லை. விரைவில் இந்த விவகாரத்தில் எங்களது கருத்தைத் தெரிவிப்போம்," என்று மட்டும் தெரிவித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல அரசுப் பள்ளி மாணவர்களிடம், அவர்களது தாய் - தந்தையர் படும் துயரங்கள் குறித்து ஒருவர் பேசுவதும் அதைக் கேட்கும் மாணவர்கள் கதறி அழும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின. அப்போதும் இதேபோலக் கண்டனம் எழுந்தது.

 
மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி
படக்குறிப்பு, அரசுப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியைப் பெறவேண்டும்

அரசுப் பள்ளிகளில் பேச யாரை அழைக்கலாம்? வரையறை என்ன?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து விதிமுறைகள் ஏதும் உள்ளனவா?

"அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும்.

"ஆனால், ஒரு நபர் மாணவர்கள் மத்தியில் பேச மிகத் தகுதியானவர் என பள்ளித் தலைமை ஆசிரியர் கருதினால், விதிவிலக்காக அவரே முடிவெடுக்கலாம். ஆனால், வரும் நபரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய வேண்டியது அவரது கடமை. அந்த நிகழ்வுக்கு அவரே பொறுப்பு," என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன்.

மாற்றுத் திறனாளியான கே.ஷங்கரை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிஷ்ணு மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மகாவிஷ்ணு, சென்னை, அரசுப் பள்ளி
படக்குறிப்பு, சென்னை அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்

யார் இந்த மகாவிஷ்ணு?

மகாவிஷ்ணு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலேயே மேடைப் பேச்சில் ஆர்வமுடையவராக இருந்த மகாவிஷ்ணு, தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார்.

"இந்த (அசத்தப் போவது யாரு?) நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிறகு படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதினார். அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார்.

"இதற்குப் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார்.

"ஆனால், அந்த முயற்சியில் வெற்றி ஏதும் கிடைக்காத நிலையில், தனது குருவான காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் குறிப்பிடுகிறது.

இதற்குப் பிறகு தன்னை ஆன்மீகவாதியாக முன்னிறுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறார் மகாவிஷ்ணு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாவிஷ்ணு கைது, 5 பிரிவுகளில் வழக்கு - எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம்?

மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT

படக்குறிப்பு, தமிழாசிரியர் மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின. கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 செப்டெம்பர் 2024

சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக, இந்து அமைப்பினர் விமர்சித்துள்ளனர். 'சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அரசு இதுபோன்று கெடுபிடி காட்டுவதில்லை' என்பது அவர்களது குற்றச்சாட்டு.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன?

 

சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதற்காக 'பரம்பொருள்' அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டார். அவர் தனது பேச்சில், பாவ புண்ணியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

பின்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச அழைக்கப்பட்டார். அங்கு மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத் திறனாளியும் தமிழாசிரியருமான சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் மேடையிலேயே மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின.

மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

மகாவிஷ்ணு மீது குவிந்த புகார்கள்

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனுவில், 'மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ) படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பூர் குளத்துப்பாளையத்தில் செயல்படும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனு

இதுபோன்ற நபர்களுக்கு வரவேற்பு கிடைப்பது ஏன்?

"ஆன்மிகத்துக்கு தேவையான முதிர்ச்சி மகாவிஷ்ணுவிடம் இருப்பது போல தெரியவில்லை. இந்து ஆன்மிகம் என்பது அனைத்தையும் துறப்பது தான். பரம்பொருள் என்று சொல்லும் நிலைக்கு அவர் மாறவில்லை. ஓஷோவிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு ஒரு பதில் இருக்கும். இவர்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்டால் கோபப்படுவார்கள்" என்கிறார், எழுத்தாளர் இரா.முருகவேள்.

"மகாவிஷ்ணு சிறைக்கு சென்று வந்தாலும் அவரை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். மறுபிறவி, பூர்வ ஜென்மம் ஆகிய விஷயங்களில் நம்பிக்கை உள்ள கூட்டம் அவரை ஆதரிக்கவே செய்யும்" என்று அவர் கூறுகிறார்.

"தன் மீது மக்களுக்கு பயபக்தி, மரியாதை இருக்க வேண்டும் என மகாவிஷ்ணுவை போன்றவர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அது கேள்விக்குள்ளாகும் போது கோபப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேசவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்று குறிப்பிடுகிறார் முருகவேள்.

 
மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாவிஷ்ணுவின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளர் முருகவேள்

இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு

ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் நடக்கும் தவறான விஷயங்களை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாக கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி.

"கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி பயிற்சிகளை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. மற்ற பள்ளிகளிலும் இதுபோல போலி முகாம்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபோன்று பள்ளிக்கல்வித்துறை மீது எழுந்த விமர்சனங்களை மறைப்பதற்காக நடத்தப்படும் யுக்தியாகவே இதைப் பார்க்கிறோம்". என்கிறார் ராமமூர்த்தி.

தொடர்ந்து பேசிய அவர், "மகாவிஷ்ணு விவகாரத்தை வைத்துக் கொண்டு பள்ளிகளில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதில் வழிகாட்டுதல்களை கொண்டு வருவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு முன்பு இவ்வாறு மகாவிஷ்ணு பேசியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லிக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். இதை நாடகமாகவே பார்க்கிறோம்" என்றார்.

மதத்தையும் அரசையும் தள்ளி வைப்பது என்பது வேறு. இவர்கள் இந்து மதத்தை மட்டும் தள்ளி வைக்கின்றனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று அவர் குற்றம்சாட்டுகிறார்.

மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

பட மூலாதாரம்,@ANBIL_MAHESH

படக்குறிப்பு, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

வழக்கறிஞர் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தப் பிரச்னையில் தலைமை ஆசிரியையின் பங்களிப்பு எதுவும் இல்லை. பள்ளி மேலாண்மைக் கமிட்டியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் மகாவிஷ்ணுவை கூட்டி வந்திருக்கிறார். இவ்வாறு பேசுவார் எனத் தெரிந்திருந்தால் அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதேநேரம், சைதாப்பேட்டை பள்ளிக்கு, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியையை தான் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"மெட்ராஸ் கல்வி சட்டத்தில், மதம் சார்பான எந்த நிகழ்வுகளையும் பள்ளி வகுப்பு நேரங்களில் நடத்தக் கூடாது என உள்ளது. இது அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுக்கான சலுகைகள் உள்ளன. ஆனால், வகுப்பறைகளில் நடத்தப்பட வேண்டியதை மட்டுமே அவர்கள் செயல்படுத்த வேண்டும்" என்கிறார் கண்ணப்பன்.

 
மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

மகாவிஷ்ணுவுக்கு எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்?

மகாவிஷ்ணு மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தினால் மட்டுமே வெறுப்பு பேச்சு என்ற பிரிவில் வழக்கு பதிவாகும். இன்னொரு மதத்தை பாதிக்கும் வகையில் மகாவிஷ்ணு எதையும் பேசவில்லை. பார்வை மாற்றுத் திறனாளியிடம், 'முன் ஜென்ம பாவம்' எனக் கூறியது அவர்களை அவமதிக்கும் செயல். அதற்காக அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்" என்கிறார்.

"அவதூறு என்பது தனி மனிதர்களை இலக்காக வைத்து பேசினால் வரும். அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதம் பேசும் பிரிவினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவதூறு வழக்கைப் பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

‘மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்’

"தன்னால் அனைத்தையும் சாதிக்க முடியும்; மற்றவர்களுக்கு இல்லாத சக்தி தன்னிடம் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அதுதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்" என்கிறார் மூத்த மனநல மருத்துவர் சிவநம்பி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி மாணவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்களுக்கு மனவருத்தமும் மனச் சோர்வும் ஏற்படும். பிற்காலத்தில் இது பாதிப்புகளை ஏற்படுத்தும். பொது இடத்தில் இதுபோன்று பேசும்போது பிரச்னை இல்லை. அதைக் கேட்பவர்கள் கேட்கட்டும். மற்றவர்கள் புறக்கணித்துவிட்டு செல்வார்கள். பள்ளிகளில் இவ்வாறு பேசுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்" என்கிறார்.

 

அரசின் 4 அறிவுறுத்தல்கள்

மகாவிஷ்ணு, சென்னை அரசுப்பள்ளி

பட மூலாதாரம்,@ANBIL_MAHESH

படக்குறிப்பு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்போக்கான அறிவியல்பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிடுவதற்கு தான் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப, வெள்ளிக்கிழமையன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் கண்ணப்பன் தெரிவித்தார்.

"கூட்டத்தில், எந்த சூழலிலும் தனியார் நிகழ்வுகளை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது; பாடம் தொடர்பானவற்றை மட்டும் பேச அனுமதிக்கலாம்; ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்கலாம். பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன" என்கிறார் கண்ணப்பன்.

அனைத்துப் பள்ளிகளும் வரும் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் கண்ணப்பன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல்

இந்நிலையில், 'மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கிறிஸ்துவர்' என்ற தகவல் இணையத்தில் பரவியது. "இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற முகநூல் பக்கம், ஆசிரியர் சங்கருடையது அல்ல" என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் மதுரை மகா என்ற காமடியனாக இருந்தவர், அப்படியே ஒரே பாய்ச்சலில் ஒரு ஆன்மீகக் குருவாக மாறும் அதிசயம், மகாவிஷ்ணு என்னும் பெயருடன், நடந்தது பாரதியும், புதுமைப்பித்தனும், பெரியாரும் வாழ்ந்த, திராவிடம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியிலேயே.

நித்தியானந்தா இந்த இடத்திற்கு வருவதற்கு எத்தனை வருடங்கள் எடுத்தார். எத்தனை மாஜிக் ஷோ நடத்தினார். ஆனால் மதுரை மகா அப்படியே அசால்டாக அலுங்காமல் குலுங்காமல் ஒரு ஆன்மீகக் குருவாகினார்.

சான்பிரான்ஸ்சிஸ்கோ, சிகாகோ என்று முதலீடுகளை உலகெங்கும் தேடும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது யார் இந்த மதுரை மகாவை பாடசாலைகளில் பேச அனுமதித்தது என்று. இவர்கள் சொல்வது போல அது பள்ளித் தலைமையாசிரியையோ அல்லது பள்ளி மேலாண்மைக் குழுவோ அல்ல. இதைக் கண்டுபிடித்து வெளியில் சொல்ல இன்னும் எத்தனை நாட்கள் இவர்களுக்கு தேவை?

மதுரை மகா தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு ஆன்மீக வழிகாட்டி என்றில்லை. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என்று முன்னர் கோபால் பற்பொடி விற்கப்பட்ட அததனை நாடுகளிலும் அவருக்கு கிளைகள் உண்டு. மேலதிகமாக, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என்றும் பறந்து சேவை செய்து கொண்டிருக்கின்றார்.  இங்கு அமெரிக்காவில் நித்தியின் பக்தர்கள் அடுத்த ஒரு குருவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள், அதற்கிடையில் மகாவிற்கு இப்படி ஆகிவிட்டது............🤣.       

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு

https://www.facebook.com/reel/514151514703981

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு

https://www.facebook.com/reel/514151514703981

""பாவம் நீ அதிகமாகச் செய்தாயென்றால் நீ மலத்தில் ஊரும் புழுவாகப் பிறப்பாய்""

இவனைத் தூக்கி உள்ளே போடுவதில் தவறே இல்லை. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பள்ளியில் தத்துவக் கல்வி இல்லாததன் போதாமையையே ஜக்கி, நித்தி, இப்போது மகாவிஷ்ணுவைப் போன்ற மோசடிக்காரர்கள் நிரப்புகிறார்கள். தத்துவம் என்பது ஆன்மீகம் அல்ல. பக்தி யுகத்திலும் பின்னர் கண்ணதாசன் பாடல்களாலும் அப்படி ஒரு மயக்கம் இங்கு ஏற்பட்டிருக்கிறது. தத்துவக் கல்வியானது வாழ்க்கை நெறிக்கல்வியோ யோகா பயிற்சியோ அல்ல. தத்துவம் என்பது தர்க்கம், அறம், உளவியல், பிரக்ஞையியல், தோற்றப்பாட்டியல் என பல விசயங்களை போதிப்பது. அது நம் மாணவர்களை புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்த்தும். வாழ்வின் சாராம்சம் என்ன, பொருள் என்ன, நோக்கம், இலக்கு என்ன, சுயம், மனம், உடல் என்றால் என்ன ஆகிய கேள்விகளை புறவயமாக ஆராய தத்துவக் கல்வி உதவும். தத்துவம் பயிலாமல் நேரடியாக மாணவர்கள் அறிவியலுக்கும் தொழில்நுட்பக் கல்விக்கும் போகும்போது ஒரு பெரும் வெற்றிடத்தை அகத்தே உணர்வார்கள். அதை அவர்கள் போதைப் பழக்கம், உடலீர்ப்பின் மயக்கம், பொழுதுபோக்கு மயக்கத்தின் பாற்பட்டு நிரப்ப முயல்வார்கள். அப்போதும் நுட்பமானவர்களுக்கு போதாமை தென்படும். அவர்கள் கள்ள சாமியார்களிடம் சிக்குவார்கள். அடிமையாகி அழிவார்கள். ஆனால் தத்துவப் பயிற்சி தரும் சிந்தனைத் தெளிவும் மொழிக்கூர்மையும் மகத்தானது, ஒப்பற்றது. இந்தியா முழுக்க எந்த பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்களுக்கு இப்பயிற்சி தரப்படுவதில்லை. அதை பயன்படுத்தித் தான் ஜக்கி மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார். 
 
ஒரு காலத்தில் ஆந்திராவில் இருந்தும் காஞ்சியில் இருந்தும் மகத்தான தத்துவவாதிகள் நளந்தாவுக்கு சென்று வாயிலில் காற்று நிற்கும் தத்துவவாதி காவலர்களை வாதில் வென்று உள்நுழைந்து பயின்று பெரும் பௌத்த மெய்யியலாளர்களாகி உலகையே வெல்லும் தத்துவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நாகார்ஜுனர் ஒரு உதாரணம். திக்நாகர், தம்மபாலர் வேறு சில முக்கிய மெய்யியலாளர்கள். பௌத்த ontologistகளின் சாயலில் தோன்றிய ஹுசர்ல், ஷோப்பன்ஹெர், நீட்சே, ஹைடெக்கர் போன்றோரை உலகமே இன்று படிக்கிறது. ஆனால் நாம் மகாவிஷ்ணு போன்றோர் உளறுவதை கேட்டுக்கொண்டு குழப்பமாக வீற்றிருக்கிறோம். ஊழ் என ஒன்று உண்டா என்பதற்கே நம்மால் தர்க்கரீதியாக எதிர்கொள்ள முடியவில்லை. அதை சரியாக பொருள்படுத்தி வாயை அடைக்க முடியவில்லை. வெறும் தொழில்கல்வியில் மட்டும் கவனம் செலுத்தியதன் விளைவே இது.
 
முன்பு தத்துவம் பொன்போல விளைந்த மண் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. இப்போது கோமாளிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். பெரும் அதிகாரமும் பணமும் படைத்த போலிகள் மெய்யியல் முகமூடி அணிந்து கல்லா கட்டுகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

 

முன்பு தத்துவம் பொன்போல விளைந்த மண் என்று நினைத்தாலே வியப்பாக இருக்கிறது. இப்போது கோமாளிகள் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். பெரும் அதிகாரமும் பணமும் படைத்த போலிகள் மெய்யியல் முகமூடி அணிந்து கல்லா கட்டுகிறார்கள்.

பொதுவாக ஐடி குரூப், அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் என்று தான் இந்த வலையில் போய் விழுவார்கள். ஜக்கியின் Inner Engineering, நித்தியின் கதைவைத் திற காற்று வரட்டும், ஶ்ரீஶ்ரீயின் நடனங்கள் போன்றவற்றிற்கு இவர்கள் தான் வாடிக்கையாளர்கள். இப்ப புதிதாக பாடசாலை மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கின்றார்கள் போல. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஜனரஞ்சக படங்கள் என்று விளம்பரத்துடன் வரும் படங்கள் போல, இது இந்தப் புதிய தத்துவ வகுப்புகளுக்கு குடும்பங் குடும்பங்களாக கூட்டம் சேர்க்கும் பெரிய வியாபாரத் திட்டம் போல..........🫣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழுத்த ஆடுகள்

Mahavishnu_Paramporul%201.jpeg
 
AVvXsEj6Xcr8B0hO70BF_vGSbQ2c6k1WW8m-kpSq

மகாவிஷ்ணு மதுரைப்பக்கமாக ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்போது சின்ன வயதிலேயே சொந்தமாக தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் என்று தொலைக்காட்சி செய்தியொன்றில் பார்த்தேன். அதெப்படி இவ்வளவு சீக்கிரமாக இவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என அந்த நிகழ்ச்சியிலேயே வினவுகிறார்கள். இது ஒன்றும் கடினம் அல்ல - இந்து மதத்திலும் (வேறு சில மதங்களிலும்தான்) கார்ப்பரேட் கள்ளச்சாமியார்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே நூற்றுக்கணக்கான கோடிகள் பணத்தை சேர்க்கமுடியும். உழைக்கவெல்லாம் வேண்டியதில்லை. ஓஷோவால் அமெரிக்காவில் சொந்தமாக ஒரு நகரத்தையே உருவாக்க முடிந்தது; நூற்றுக்கணக்கான விலைமதிப்பான கார்கள், தங்க வைர நகைகளை வைத்திருந்தார். "எதுவுமே என்னுடையது அல்ல, என் பக்தர்களின் பரிசுகள்" என்றார் அவர். ஏன் ஏழைகளின் பரிசுகள் அவரிடம் இல்லை? ஏன் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொடையாளர்கள் பயங்கர பக்திமான்களாக இருக்கிறார்கள்? அடுத்து ஓஷோ கைதானபிறகு அவரது பணம் எங்கே போயிற்று? ஏனென்றால் அவர் தனது பெருமளவுக்கான செல்வாக்கும் செல்வமும் இன்றிதான் இந்தியாவுக்குத் திரும்பி தன் கடைசிக் காலத்தைக் கழித்தார். மீதமிருந்த 100 கோடிப் பணத்தை அவரது வெளிநாட்டு பக்தர்கள் கையாடிவிட்டதாக ஒரு புகார் நீதிமன்றத்தில் உள்ளது. இதேதான் நித்தியானந்தாவுக்கும் அவர் இந்தியாவை விட்டுத் தப்பியோடியபோது நடந்தது. அதெப்படி தனிநபரின் பணத்தை சுலபத்தில் பறிக்கமுடியும்? அது முறையற்று சம்பாதித்த பணமென்றாலும்கூட? ஏன் ஓஷோவில் இருந்து ஜக்கி, நித்திவரை பணக்கார பக்தர்களையே முதலில் நாடுகிறார்கள்? தமது ஆன்மீகத் தொண்டுக்கு பணக்கார பக்தர்களைக்கொண்டு நிதியைத் தேடுவதாக அவர்கள் கூறினாலும் தாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தை நூற்றுக்கணக்கான கோடிகள் அவர்கள் ஏன் கொண்டுவந்து ஒரு சாமியாரின் மடியில் கொட்டவேண்டும்?

இந்தக் கேள்விகளை எனக்குத் தெரிந்து யாருமே எழுப்புவதில்லை.

இப்பணம் அடிப்படையில் கறுப்புப்பணமாகும், ஒரு பெரிய கார்ப்பரேட் சாமியாரை பெரும்பணக்காரர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள். தமது பணத்தை அயல்நாட்டில் பதுக்குவதற்குப் பதிலாக இந்த சாமியார்களுக்கு காணிக்கையாக அளித்து வருமான வரித்துறையினரின், அமலாக்கத்துறையினரின் தொந்தரவு இன்றி பாதுகாக்கிறார்கள். அதற்கு ஏற்ப இந்தியாவில் சட்டம் உள்ளது. அதனாலே அவர் சிக்கலில் மாட்டும்போது அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்கிறார்கள்.

2-3 ஆண்டுகளில் ஒருவர் உழைக்காமலே, சொந்த முதலீடுயின்றியே பெரும் செல்வந்தராகிறார் என்றால் அவர் கறுப்புப்பணத்தின் முகவராக இருக்கிறார் என்று பொருள். கார்ப்பரேட் சாமியார்கள் மிகப்பாதுகாப்பான ஒரு கறுப்பணச் சந்தை நிர்வாகியாக மாறுகிறார்கள். அதனாலே இந்த பெரும் செல்வந்தர்களும் ஊடகங்களும் சேர்ந்து அவர்களுக்கு மகத்தான ஆதரவளிக்கிறார்கள். நாம் அவர்களுடைய கருத்துக்களையும் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் அளவுக்கு அவர்களுடைய பொருளாதார செயல்பாடுகளை கவனிப்பதில்லை. மகாவிஷ்ணு விளம்பரத்துக்காகவும் யுடியூப் சேனலில் பேட்டியளிப்பதற்காகவும் நிகழ்ச்சிகளை நடத்தவும், அமைச்சர்களை அணுகவும் அவருக்குப் பின்னிருந்து கோவை, திருப்பூர் தொழிலதிபர்கள் இயக்குகிறார்கள், நிதியாதரவுத் தருகிறார்கள் என்பது என் ஊகம், கூடுதலாக வெளிநாட்டினரின் கறுப்புப் பணமும் அவர்வழியாக நம் சந்தைக்குள் புழங்குகிறது என நினைக்கிறேன். அல்லாவிடில் இவர்களால் இவ்வளவு சுலபத்தில் கல்வி நிலையங்களை ஊடுருவி, அரசியல் தலைவர்களை நெருங்க இயலாது. கட்சிகளுக்கு பெரும்பணத்தை நிதியாக அளித்துவிட்டே தம் கடையை இவர்கள் விரிப்பார்கள். எல்லா வாயில்களும் இவர்களுக்குத் திறப்பது இப்படித்தான். ஜக்கி சட்டவிரோதமாக வனநிலத்தை ஆக்கிரமித்து இன்னும் ஆசிரமம் நடத்துவது அவருக்கு உள்ள அரசியல் அணுக்கத்தைக்கொண்டே. வெறும் சன்னியாசிப் பிம்பம் மட்டும் இதைத் தீர்மானிப்பதில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கில் அனாதைச் சாமியார்கள் இருக்கிறார்களே.

ஒரு கறுப்புப் பண முகவரை நாம் இந்துத்துவவாதி, மதவாதி, சனாதனவாதி, அடிமுட்டாள் என்றெல்லாம் சாடுவது அவரைக் காப்பாற்ற மட்டுமே உதவும். அவருக்குப் பின்னால் இருக்கும் கறுப்புப் பண முதலைகள் இதைப் பார்த்து இளித்துக்கொண்டிருப்பார்கள்.

என்னை ஆச்சரியப்படுத்துவது இரண்டு விடயங்கள் தாம் -

1) இந்த கார்ப்பரேட் கறுப்புப் பணச்சாமியார்களில் ஜக்கியையும் ஶ்ரீஶ்ரீயும் தவிர பெரும்பாலானவர்களால் நிலைக்க முடிவதில்லை. ஆடு கொழுத்ததும் அறுப்பதைப்போல மொத்தப் பணத்தையும் பறித்து ஊரைவிட்டே துரத்திவிடுகிறார்கள். இதற்கும் பொருளாதாரக் காரணங்களே கணிசமாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பற்றி ஆராய்ந்து அறிந்து ஊடகங்கள் ஏன் எழுதுவதில்லை? இந்த ஊடக முதலாளிகளில் எத்தனை பேர்கள் இச்சாமியார்களிடம் தம் கறுப்புப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள்?

2) மகாவிஷ்ணு அரசுப் பள்ளியில் பேசிய பேச்சுக்காக மட்டும் கைது பண்ணப்பட்டதாக நான் கருதவில்லை. நிச்சயமாக அந்த வழக்கு நிற்காது. வேறேதோ காரணம் இருக்கிறது. அவர் செட்டில் பண்ணிவிட்டு வந்துவிடுவார் என பலரும் எதிர்பார்ப்பது அதனாலே. மலைமலையாகக் குவியும் கறுப்புப் பணம் ஒரு துரும்பைக்கூட உலகப்பிரபலமாக்கிவிடும். பொதுமக்களின் கறுப்புப்பணத்தை சட்டவரையறைக்குள் கொண்டுவர விரும்பும் அரசியல் தலைமை ஒருபோதும் பெரும் செல்வந்தர்களையும் தலைவர்களையும் அவ்வாறு கட்டுப்படுத்த நினைப்பதில்லை. அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலை உள்ளது - அதுவே இத்தகைய சாமியார்கள் எனும் கறுப்புப்பண வங்கிகள். 

என்ன நடந்தாலும் சாமியார்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு சாமியார்களும் நிதியாளர்களும் ஒழுங்காக கணக்குக்காட்ட வேண்டும் என ஒரு சட்டத்தைக் கொண்டு வர மாட்டார்கள். அப்படிச் செய்தால் இவர்களை விட ஆற்றல்மிக்க இன்னொரு கறுப்புப் பண முகமையை உருவாக்கிவிட்டே செய்வார்கள். கொழுத்தாடுகள் ஒரு நோக்கத்துடனே வளர்க்கப்படுகின்றன. நாம் ஆடுகளைப் பழிக்காமல் வளர்க்கிறவர்களைக் கேள்வி கேட்கப் பழகவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.