Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஃப்ளைட் 93

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி ஹிந்தி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்காக காத்திருந்தது. ஃப்ளைட் 93 இன் நிர்ணயிக்கப்பட்ட புறப்படும் நேரம் கடந்து ஏற்கனவே 40 நிமிடங்கள் ஆகிவிட்டன.

முதல் வகுப்பின் ஆறு வரிசைகளில் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் திரும்புவதற்கான டிக்கெட்டை வாங்கியிருக்கவில்லை.

முந்தைய நாள் இரவு அவர்கள் அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு ஆவணத்தைப் படித்தனர். ”எல்லா ஆசைகளில் இருந்தும் உங்களை அகற்றிக்கொண்டு உங்களை போராட்டத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் துறப்பதாக செய்த உறுதிமொழியை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்,” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

டாம் மெக்மில்லன் தனது 'ஃப்ளைட் 93: தி ஸ்டோரி ஆஃப் தி ஆஃப்டர்மாத் அண்ட் தி லெகசி ஆஃப் அமெரிக்கன் கரேஜ்' என்ற புத்தகத்தில், "இத்தகைய நுணுக்கமான முன்னேற்பாடுகள் இருந்தபோதிலும், விமானம் புறப்படுவதற்கு தாமதமாகலாம் என்ற சாத்தியக்கூறை அல்-கய்தா கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்

“அவர்களின் இந்த திட்டம் 1996-இல் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் முதன்முதலாக தீட்டப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டன,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கடத்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விமானங்களும் அன்று காலை 7.45 முதல் 8.10 மணிக்குள் புறப்படுபவையாக இருந்தன. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் கடத்தல் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

எல்லாம் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் நடந்திருந்தால் அந்த நான்கு விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக முக்கிய கட்டிடங்கள் மீது மோதியிருக்கும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் ராணுவத் தலைமைக்கும் சிந்திக்கக்கூட நேரம் இருந்திருக்காது.

 
'ஃப்ளைட் 93: தி ஸ்டோரி ஆஃப் தி ஆஃப்டர்மாத் அண்ட் தி லெகசி ஆஃப் அமெரிக்கன் கரேஜ்

பட மூலாதாரம்,LYONS PRESS

படக்குறிப்பு, டாம் மெக்மில்லனின் புத்தகம்

விமான காக்பிட்டுக்குள் ஊடுருவல் நடக்கலாம் என்ற எச்சரிக்கை

சரியாக காலை 8 மணி 41 நிமிடங்கள் 49 வினாடிகளுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், ’நான்காம் எண் ஓடுபாதையில் இருந்து புறப்படலாம்’ என்று விமானம் 93 இன் கேப்டன் ஜேசன் டால் மற்றும் முதல் அதிகாரி லெராய் ஹோமரிடம் கூறினார் என்று தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் பதிவுகள் தெரிவிக்கிறது.

ஒரு நிமிடம் கழித்து முதல் வகுப்பில் அமர்ந்திருந்த ஜியாத் ஜர்ரா, அஹ்மத் அல் ஹஸ்னாவி, அஹ்மத் அல் நமி மற்றும் சயீத் அல் கம்டி ஆகியோர் மிஷனுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டனர். அன்று செவ்வாய்கிழமை. தேதி செப்டம்பர் 11, 2001

சிறிது நேரத்தில் விமானம் 93 ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. 182 பேர் பயணிக்கக் கூடிய விமானத்தில் மொத்தம் 33 பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

சரியாக 8:40 மணிக்கு ஒரு விமானம் மணிக்கு 500 கிலோமீட்டர் வேகத்தில் உலக வர்த்தக மையத்தைத் தாக்கியது.

வானளாவிய அந்தக் கட்டிடத்தின் 93வது மற்றும் 99வது தளங்களுக்கு இடையே ஒரு பெரிய ஓட்டை உருவானது.

17 நிமிடங்கள் கழித்து 9:03 மணிக்கு இரண்டாவது விமானம் தெற்கு கோபுரத்தைத் தாக்கியபோதுதான் நாடு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதை அமெரிக்க நிர்வாகம் உணர்ந்தது.

காலை 9:19 மணிக்கு, யுனைடெட் ஃப்ளைட் நிறுவன விமான கண்காணிப்பாளர் எட் பாலிங்கர், அப்பகுதியில் பறந்து கொண்டிருந்த 16 விமானங்களுக்கு முதல் எச்சரிக்கையை விடுத்தார்: 'காக்பிட் ஊடுருவல் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். நியூயார்க்கில் உள்ள வர்த்தக மைய கட்டிடத்தை இரண்டு விமானங்கள் தாக்கியுள்ளன.’

ஃபிளைட் 93 க்கு இந்த செய்தி காலை 9:24 மணிக்கு கிடைத்ததாக விமான பதிவுகள் காட்டுகின்றன. காலை 9:26 மணிக்கு கேப்டன் டால், 'எட், சமீபத்திய செய்தியை மீண்டும் உறுதிப்படுத்துங்கள்,’ என்று பாலிங்கருக்கு பதில் செய்தி அனுப்பினார்.

சரியாக இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அதாவது 9:28 மணிக்கு விமானம் 93 இன் காக்பிட் கதவுக்கு வெளியே சத்தம் கேட்டது.

இது உலக வர்த்தக மையத்தின் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தாக்குதலுக்கு உள்ளான இது உலக வர்த்தக மையத்தின் படம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு கேட்ட குரல்

தலையில் சிவப்பு ஸ்கார்ஃப் அணிந்த நான்கு கடத்தல்காரர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து விரைவாக எழுந்தனர். அவர்கள் 9:28 மணிக்கு காக்பிட்டிற்குள் நுழைந்தார்கள். அந்த நேரத்தில் திடீரென்று விமானம் 30 வினாடிகளில் 680 அடி கீழே சென்றது.

அதே சமயம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு ஒரு குரல் கேட்டது, 'மேடே.. இங்கிருந்து வெளியேறுங்கள்’. 30 வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் அதே வாக்கியம், 'இங்கிருந்து வெளியேறுங்கள்' என்று மூன்று முறை கேட்டது.

அங்கு நடந்த கைக்கலப்பின் ஒலிகளும் பின்னணியில் கேட்டன. காக்பிட்டில் என்ன நடக்கிறது என்பதை கேட்கும் வகையில், டால் அல்லது ஹோமர் வேண்டுமென்றே மைக்ரோஃபோன் பட்டனை அழுத்திப் பிடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

”அடுத்த 90 வினாடிகளில், க்ளீவ்லேண்ட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஜான் வொர்த் விமானத்தைத் தொடர்பு கொள்ள ஏழு முறை முயற்சி செய்தார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அவருக்கு இதற்கான காரணம் தெரிய வந்தது,” என்று மிட்செல் ஜூகாஃப் தனது 'Fall and Rise - The Story of 9/11' இல் எழுதுகிறார்.

9:31 மணியளவில் முன்பின் தெரியாத நபர் ஒருவர் மூச்சு வாங்கியபடி விசித்திரமான தொனியில் பேச ஆரம்பித்தார்.

இந்த செய்தி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கானது. ஆனால் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இதைக்கேட்டனர்.

அந்த செய்தி, ' கேப்டன் சொல்வதை கேளுங்கள். தயவுசெய்து அமருங்கள். இருக்கையில் இருந்து எழாதீர்கள். எங்களிடம் வெடிகுண்டு இருக்கிறது.'

விமானம் 93 இன் கட்டுப்பாடு ஜியாத் ஜர்ராவிடம் வந்துவிட்டது.

 
ஜியாத் ஜர்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமான கடத்தல் குழுவின் தலைவர் ஜியாத் ஜர்ரா

'பயிற்சி இல்லாதவரைப்போல விமானத்தை கீழே இறக்கத் தொடங்கினார்'

ஜர்ரா ஃப்ளைட் 93ஐ வாஷிங்டன் நோக்கி திருப்பியபோது மணி 9:39.

பின்னர் அவர் 40 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை எடுத்துச் சென்றார். அதன் பிறகு பயிற்சி இல்லாதவரைப்போல விமானத்தை கீழே இறக்கத் தொடங்கினார்.

இதற்கு முன் காலை 9:33 மணியளவில், காக்பிட்டில் இருந்த ஒரு பெண் - ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்.... ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் என்னை ஒன்றும் செய்யாதீர்கள் ....ஓ காட்...என்று அலறுவது கேட்டது.

அந்தக் குரல் அனேகமாக முதல் வகுப்பிற்கான விமானப்பணியாளர் டெபி வெல்ஷ் அல்லது வாண்டா கிரீனுடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.

9:35 மணிக்கு, 'நான் சாக விரும்பவில்லை' என்று ஒரு பெண்ணின் குரல் மீண்டும் கேட்டது. பின்னர் காம்டி அல்-சயீத்தாக இருக்கலாம் என்று கருதப்படும் ஒரு கடத்தல்காரரின் குரல் கேட்டது, 'எல்லாம் சரியாக இருக்கிறது. நான் முடித்துவிட்டேன்.'

அதன் பிறகு பெண் பணியாளரின் குரல் எதுவும் கேட்கவில்லை. அதற்குள் அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

சயீத் அல் கம்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜியாத் ஜர்ராவுடன் காக்பிட்டில் அமர்ந்திருந்த சயீத் அல் கம்டி

தொலைபேசியில் உறவினர்களை தொடர்பு கொண்ட பயணிகள்

9:39 மணிக்கு அறிவிப்பை வெளியிட ஜர்ரா இரண்டாவது முயற்சியை மேற்கொண்டார்.

இந்த முறை அவரது குரல் முன்பை விட கட்டுப்பாடாகவும் சாதாரணமாகவும் இருந்தது. இந்த அறிவிப்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கும் கேட்டது.

'கேப்டன் பேசுகிறேன். நீங்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களிடம் வெடிகுண்டு இருக்கிறது. நாம் மீண்டும் விமான நிலையத்திற்குச் செல்ல இருக்கிறோம். எங்களுக்கு கோரிக்கைகள் உள்ளன. எனவே தயவு செய்து அமைதியாக இருங்கள்.'

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய 'வெரிசோன்' இயர்போன்கள் மூலம் வானிலிருந்து தரைக்கு பேசும் வசதி வழங்கப்பட்டிருந்தது.

விமானம் கடத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள், விமானத்தின் 12 பயணிகள், 23 மற்றும் 34 வது வரிசைகளுக்கு இடையில் பொருத்தப்பட்ட இயர்போன்களில் இருந்து தரைக்கு 35 அழைப்புகளை செய்தனர்.

இதில் 20 அழைப்புகள் உடனடியாக துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் 15 அழைப்புகளில் பரஸ்பர பேச்சு நடந்தது.

அந்த நேரத்தில் ஃப்ளைட் 93 இல் என்ன நடக்கிறது என்பதற்கான பல தடயங்களை இந்த அழைப்புகள் அளித்தன. முதலில், 9:30 மணிக்கு, டாம் பர்னெட் கலிஃபோர்னியாவில் இருந்த தனது மனைவி டினாவை அழைத்தார்.

”டாம், நீங்கள் நலம்தானே?' என்று டீனா கேட்டார். அதற்கு டாம், ''இல்லை. நான் பயணம் செய்யும் விமானம் கடத்தப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் ஒருவரை கத்தியால் குத்திவிட்டனர். விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், இது குறித்து நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்றும் எங்களிடம் சொல்கிறார்கள்,” என்று டாம் பதில் சொன்னார்,” என்று 'தி ஒன்லி பிளேன் இன் தி ஸ்கை' என்ற புத்தகத்தில், காரெட் எம். கிராஃப் எழுதியுள்ளார்.

 
'தி ஒன்லி பிளேன் இன் தி ஸ்கை'

பட மூலாதாரம்,AVID READER PRESS / SIMON & SCHUSTER

விமானத்தின் பணிப்பெண் சாண்டி பிராட்ஷா இது குறித்து முதலில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.

9.35 மணிக்கு அவர் 33-வது வரிசையில் இருந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பராமரிப்பு அலுவலகத்தை அழைத்து 'தாக்குதல்காரர்கள் காக்பிட்டை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள பயணிகள் அனைவரும் விமானத்தின் பின்புறம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,' என்று மேலாளரிடம் கூறினார்.

சாண்டி ஆறு நிமிடங்கள் அழைப்பில் இருந்தார். அவரது குரல் மிகவும் அமைதியாக இருந்தது என்று மேலாளர் தெரிவிக்கிறார்.

விமானம் 93

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமானம் 93 பயணிகளுக்கான தற்காலிக நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் உறவினர்கள் (கோப்புப் படம்)

விமானங்கள் உடனடியாக தரையிறக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டன

இதற்கிடையில் க்ளீவ்லேண்ட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஜியாத் ஜர்ராவின் அறிவிப்பைக் கேட்டவுடன் உடனடியாக பதிலளித்தது.

'ஓகே, யுனைடெட் 93 இன் அழைப்பு இது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதைப் புரிந்து கொண்டோம். மேலே சொல்லுங்கள், யுனைடெட் 93 மேலே சொல்லுங்கள்,' என்று கூறப்பட்டது. ஆனால் காக்பிட்டிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்கிடையில், 9.42 மணிக்கு அமெரிக்க வான்வெளியில் பறக்கும் அனைத்து பயணிகள் விமானங்களையும் அருகிலுள்ள விமான நிலையங்களில் தரையிறக்கும்படி அரசு உத்தரவிட்டது.

எல்லா விமானங்களும் அவசர அவசரமாக கீழே இறங்க ஆரம்பித்தன. ஆனால் ஓஹாயோ மீது பறந்துகொண்டிருந்த ஃப்ளைட் 93 மீது இந்த அறிவிப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வாஷிங்டன் டிசியை நோக்கிய தனது பயணத்தை அது தொடர்ந்தது.

அந்த விமானம் அதிபர் மாளிகையை நோக்கி அல்லது நாடாளுமன்றத்தை நோக்கி செல்கிறது என்று அமெரிக்கர்கள் உணர்ந்துகொண்டனர்.

”நாடாளுமன்றத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, 'விமானம் வருகிறது. வெளியே செல்லுங்கள்’ என்று கத்திக்கொண்டே ஓடினார். இதைக் கேட்டு பெண்கள் வெறுங்காலுடன் வெளியே ஓடினர். அபாய சைரன்கள் ஒலிக்க ஆரம்பித்தன. சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரத்தடியில் கூடினர். ஆயுதமேந்திய போலீஸ் அதிகாரிகள் அமெரிக்க செனட் தலைவர்களை, பனிப்போர் காலத்தில் கட்டப்பட்ட பதுங்கு குழிகளுக்கு அழைத்துச் சென்றனர்,” என்று மிட்செல் ஜூகோஃப் எழுதுகிறார்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஃப்ளைட் 93 தாக்கவிருந்த அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம்

எதிர்ப்பு நடவடிக்கைக்கான திட்டம்

இதற்கிடையில் விமானம் 40 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழே இறங்கியது.

விமானத்தை பறக்கச்செய்வதற்கு ஜியாத் ஜர்ரா சிரமப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. 9/11 விமானக் கடத்தல்காரர்களில் ’விமானி உரிமம்’ இல்லாத ஒரே ஒருவர் ஜர்ரா. மற்றவர்களை ஒப்பிடும்போது விமானத்தை இயக்க அவர் குறைவான நேரமே பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் கடத்தல்காரர்களை எதிர்க்க பயணிகள் மத்தியில் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

டாம் பர்னெட் தனது மனைவி டினாவிடம் தொலைபேசியில் ''தான் ஏதோ ஒன்று செய்யத் திட்டமிட்டிருப்பதாக'’ கூறினார்.

''உங்களுக்கு யார் உதவுகிறார்கள்'' என்று டினா கேட்டார். ‘'நிறைய பேர். எங்களிடம் ஒரு குழு உள்ளது,'’ என்றார் டாம். மற்றொரு பயணியான டெரெமி க்ளிக், ''நாங்கள் எங்களுக்குள் வாக்களிப்பு நடத்துகிறோம். என்னைப் போல மூன்று பலசாலிகள் இப்போது விமானத்தில் இருக்கிறார்கள். வெடிகுண்டு வைத்திருப்பதாக சொல்லும் அந்த நபரை தாக்க நினைக்கிறோம்,” என்றார்.

ஆயுதமாக எதைப் பயன்படுத்த இருக்கிறார் என்பதையும் அவர் சொன்னார். ''காலை உணவுடன் வந்த வெண்ணெய் கத்தி இப்போது என்னிடம் உள்ளது.'' என்றார் அவர் என்று டாம் மெக்மில்லன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
ஜியாத் ஜர்ராவின் பாஸ்போர்ட்

பட மூலாதாரம்,LYONS PRESS

படக்குறிப்பு, ஜியாத் ஜர்ராவின் பாஸ்போர்ட்

'நடவடிக்கையை ஆரம்பிப்போம்'

விமானத்தில் இருந்த பயணிகள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்பதை ஜியாத் ஜர்ராவும், சயீத் அல் காம்டியும் காலை 9:53 மணிக்கு முதன்முறையாக உணர்ந்தனர்.

தனது இலக்கை அடைய இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என்று ஜர்ராவுக்குத் தெரியும்.

கிளர்ச்சி செய்த பயணிகள் விமானத்தின் நடுவில் கூடினர். கடத்தல்கார்கள் மீது வீசுவதற்காக விமானப் பணிப்பெண் சாண்டி பிராட்ஷா, விமானத்தின் பின்பகுதியில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்தார். உணவு தள்ளுவண்டியை காக்பிட் மீது மோதவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக சில புலனாய்வாளர்கள் நம்புகிறார்கள்.

டாம் பர்னெட்

பட மூலாதாரம்,LYONS PRESS

படக்குறிப்பு, கடத்தல்காரர்கள் மீதான தாக்குதலுக்கு முன்முயற்சி மேற்கொண்ட டாம் பர்னெட்

காக்பிட்டை தாக்கிய பயணிகள்

சரியாக 9:57 மணிக்கு பயணிகளின் தாக்குதல் தொடங்கியது.

757 விமானத்தின் 20 அங்குல குறுகிய நடைபாதை வழியாகச்சென்று அந்த பயணிகள் விமானி அறையைத் தாக்கினர். விமானத்தை பறக்கச்செய்துகொண்டிருந்த ஜர்ராவும் அவரது கூட்டாளி கம்டியும் இவர்களின் குரல்களைக் கேட்டனர். ஏற்கனவே அந்த இருவரும் விமானத்தை ஓட்டுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த ஒலிகள் அவர்களை மேலும் குழப்பமடைய செய்தன.

பயணிகளை சமநிலை இழக்கச்செய்யும் விதமாக அவர் விமானத்தின் ’ஹேண்டிலை’(yoke) வலமிருந்து இடமாக சுழற்றத் தொடங்கினார்.

சுமார் 10 மணியளவில் பயணிகளின் தாக்குதல் தீவிரமடைந்ததால் விமானி அறையில் இருந்த கடத்தல்காரர்கள் விமானத்தை தரையில் மோதுவது பற்றி பேசினர்.

ஜர்ரா, ''இப்போதே முடித்து விடுவோமா?’' என்று கேட்டார். அதற்கு கம்டி,’' இப்போது வேண்டாம். அவர்கள் அனைவரும் உள்ளே வந்ததும் முடிப்போம்'’. என்றார்.

ஃப்ளைட் 93 மீண்டும் கீழே இறங்கியது. பயணிகளால் இன்னும் காக்பிட்டிற்குள் நுழைய முடியவில்லை. மேலும் விமானத்தின் கட்டுப்பாடு அப்போதும் ஜர்ராவிடம்தான் இருந்தது. ஆனால் அதற்குள் அவர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்.

ஃப்ளைட் 93

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஃப்ளைட் 93 விமானத்தின் சிதைவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குரல் பதிவு கருவி

விபத்துக்குள்ளான ஃப்ளைட் 93

10.01 நிமிடத்தில் விமானம் மீண்டும் மேலே செல்ல ஆரம்பித்தது.

அப்போது ஜர்ரா, ''நேரம் வந்துவிட்டதா.. நாம் இதை மோதிவிடலாமா?’' என்று கேட்டார். அதற்கு கம்டி, ‘சரி. அப்படியே செய்யலாம்’ என்று பதில் சொன்னார்.

அப்போது திடீரென பலர் குரலெழுப்பும் சத்தம் கேட்டது. விமானத்தை தொடர்ந்து ஓட்டினால் பயணிகள் விரைவில் தங்களைத் தாக்கிவிடுவார்கள் என்பதை கடத்தல்கார்கள் உணர்ந்தனர். ''சயீத், ஆக்ஸிஜனை துண்டியுங்கள்'' என்று ஜர்ரா கத்தினார்.

இதை தொடர்ந்து பயணிகள் விமானி அறையின் கதவை உடைப்பதில் வெற்றி பெற்றனர். ஜர்ரா அரேபிய மொழியில், 'கீழே மோது, கீழே மோது,’ என்று அலறினார். சில நொடிகளுக்குப் பிறகு, ‘'என்னிடம் கொடு, என்னிடம் கொடு'’ என்ற கம்டியின் குரல் கேட்டது.

அதற்குள் பயணிகள் காக்பிட்டுக்குள் நுழைந்து ஜர்ராவை தாக்க ஆரம்பித்தனர். கம்டி விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது என்று டாம் மெக்மில்லன் குறிப்பிடுகிறார்.

 
ஃப்ளைட் 93

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஃப்ளைட் 93 இன் சிதைவுகள்

பென்சில்வேனியாவின் சோமர்செட் கவுண்டியில் விமானம் தரைக்கு மிக அருகே வந்துவிட்டது. மணிக்கு 563 மைல் வேகத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் 757 விமானத்தின் மூக்கு 40 டிகிரி கோணத்தில் மின்கம்பங்களை உடைத்துக்கொண்டு தரையில் மோதியது.

அப்போது விமானத்தில் சுமார் ஐயாயிரம் கேலன் விமான எரிபொருள் இருந்தது. தரையில் மோதியவுடன் விமானம் துண்டு துண்டாக உடைந்து தீப்பிடித்து எரிந்தது. அப்போது நேரம் காலை 10:03.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி அங்கிருந்து இன்னும் 15 நிமிட தூரத்தில் இருந்தது.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.