Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 SEP, 2024 | 04:48 PM
image

டந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை தெரிவித்தபோது, மறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் அந்த முடிவு தவறானதென நான் நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்கான நியாயபூர்வமான ஆதாரங்களையும் நான் அவருக்கு சொல்லியிருந்தேன். அதிலே மிக பிரதான விடயமாக நான் கூறியிருந்த காரியம் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறபோது ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரோடு இணைந்து செய்துவந்த கருமங்களில் சிலவற்றை உடனடியாக செய்து முடிக்க இயலும் என்பதாகும்.

ஏனெனில், ரணில் தனக்கு ஆதரவு தருபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டிய ஒரு கட்டாய தேவைப்பாடு உள்ள ஒரு நிலையில் இருக்கிறார். அது மாத்திரமல்ல, கடந்த நல்லாட்சி காலத்தில் பல எதிர்ப்புகளையும் தாண்டி ஒரு வரைபு யாப்பினை செய்து முடித்திருக்கிறார். ஆகையினாலே ஐந்தே சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமது மக்களின் அடிப்படை தேவைகளில் சிலவற்றினை நாம் நிறைவேற்றலாம் என கூறியிருந்தேன்.

ஆனால், பங்காளிக் கட்சிகள் கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்துவிட்டார்கள் என சம்பந்தன் ஐயா தெரிவித்தார். வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற நாள் காலையிலே தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ள சகோதர இனத்தினை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்கள் கட்சியில் இருந்து பலர் ரணிலுக்கு ஆதரவு தருவதற்கு இணங்கியுள்ளதாகவும் அவர்கள் யார் என்பதனையும் எனக்கு தெரியப்படுத்தினார். இந்த தகவலையும் நான் சம்பந்தன் ஐயாவுக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.  அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் அரசியல் களத்தை சரியாக புரிந்து எடுத்த ஒரு தீர்மானமாக இருக்கவில்லை என்பது எனது உறுதியான நிலைப்பாடு.

அதே வழியில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள தீர்மானமும் அரசியல் களத்தினை தூர நோக்கில் சிந்திக்காத தீர்மானமாகவே நான் கருதுகிறேன். அதற்கான காரணங்கள் பலவுண்டு.

1. தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான முடிவு.

கடந்த காலங்களிலும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை அடிப்படையாகக் கொண்டே எவரை ஆதரிப்பது என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. ஆனால், தமிழர்கள் வாக்களித்துச் வென்றவர்கள் முழுமையாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள காரியங்களை நடைமுறைப்படுத்தியது இல்லை. அதைப்போன்றே தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தோற்ற வேட்பாளர்களும் தமிழர் அபிலாசைகளை பூர்த்தி செய்ததில்லை. ஆகக்குறைந்தது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்கு குரல் கொடுக்கவே இல்லை. ஆகையினாலே தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளவற்றினை கொண்டு ஆதரிப்பதும் எதிர்ப்பதும் என்பது எம்மை நாமே தேற்றிக்கொள்ளும் ஒரு செயற்பாடு மாத்திரமே.

 2. தமிழ் அரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரம்

தமிழ் மக்களை பெருபான்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழ் அரசுக்கு கட்சியின் உட்கட்சி பிரச்சினையானது அதன் எதிராளி கட்சிகளுக்கு தீனி போடுவதாக அமைந்துள்ளது. இதனால் தமிழ் அரசுக் கட்சி இன்று பல துண்டுகளாக பிரிந்துள்ளது. அதனை மிக அண்மைக்காலங்களில் அதன் தலைவர்கள் வெளியிடும் எதிரும் புதிருமான அறிக்கைகளில் இருந்து நாம் கண்டுகொள்ளலாம். ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகத்தினை சரிவர செய்ய முடியாமல் திணறுகின்ற தமிழ் அரசுக் கட்சியானது நாட்டின் ஜனாதிபதியோடு அல்லது அரசாங்கத்தோடு பேரம் பேசுகின்ற வலிமையை இழந்து நிற்பதாகவே நான் காண்கின்றேன்.

முன்னரெல்லாம் இந்திய வெளிவிவகார அமைச்சரோ அல்லது வேறு உயர் அதிகாரிகளோ விஜயம் செய்கின்றபோது தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினை மாத்திரம் சந்திப்பதே வழமையாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் அந்த நிலைமை மாறியுள்ளது. இந்த யதார்த்தத்தினை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஏகோபித்த ஒருமித்த வழியில் பயணிக்கவில்லையென்றால் வருகின்ற பொதுத்தேர்தல்களில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஓரங்கட்டப்படுவதை தவிர்க்க முடியாது. இந்த உட்கட்சி பிரச்சினை இன்று தமிழ் பொது வேட்பாளர் என்னும் ஒரு புதிய வேட்பாளரை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்கு வழி வகுத்துள்ளது.

அரியநேத்திரன் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளராக வருவதனை ஸ்ரீதரன்  விரும்பியிருந்தார் என்பது அப்பட்டமான உண்மை. அதே ஸ்ரீதரன் அவர்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து பேசினார் என்பதும் உண்மை. எனவே இலங்கை தமிழ் அரசு கட்சி கொள்கை ரீதியில் இணங்காத ஒரு விடயத்துக்கு அந்த கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் அதன் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தலைவரும் இணங்கி செயற்படுவது வேண்டுமென்றே கட்சியினை கீழே வீழ்த்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்களின் பேச்சுக்களை கேட்கின்றபோதும் அவர்களது அறிக்கைகளை பார்க்கின்றபோதும் இந்த தேர்தலை ஒரு முக்கியமான தேர்தலாக அவர்கள் கணிக்கவில்லை என்பது புலனாகிறது. யார் தெரிவானாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோநிலையே காணப்படுவதாக நான் காண்கின்றேன். 

கடந்த தேர்தல்களில் ஒரு பொது எதிரியாக ராஜபக்ஷ குடும்பம் இருந்தமையினால் தமிழ் மக்களின் வாக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி காட்டிய சின்னத்துக்கு சென்றது. ஆனால்,  இம்முறை களத்தில் உள்ள முன்னணி வேட்பாளர்கள் மூவரும் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆகவே, தமிழ் மக்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி காட்டுகின்ற சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இல்லை. ஆகவே, இம்முறை தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையின்மை மிக முக்கிய காரணமாகும்.

மிக முக்கியமாக இந்த தேர்தலில் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெறுவதற்கு இதர கட்சிகளோடு சேர்ந்து ஸ்ரீதரனும் உழைப்பார். தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஆதரவு தெரிவிக்கும் நபரை விட அரியநேத்திரனும் ரணில் விக்கிரமசிங்கவும் அதிக வாக்குகளை எடுக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பொதுச் சபையில்  உள்ள கட்சிகள் மும்முரமாக இயங்கும் என்பதில் ஐயமில்லை. அது அவ்வாறு நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிளவினை தடுக்க முடியாது.

3. தமிழ் மக்களின் வாக்கு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு பிளவடைவது முழு நிச்சயம். பிரதான வேட்பாளர்களில் எவரும் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெறமுடியாது என்பது உண்மை. தாம் ஆதரவு கொடுக்கின்ற சஜித் பிரேமதாச அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என தீவிர பிரச்சார பணிகளில் தமிழ் அரசுக் கட்சி இறங்கவில்லை. இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கின்ற நிலையில் கடைசி வாரத்தில் கள நிலவரங்கள் கணிசமான அளவு மாற்றம் அடையும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிக முக்கியமாக இந்த தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதும் உன்னிப்பாக அவதானிக்கபடவேண்டிய ஒரு விடயமாகும். 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்கள் ஒரே நிலைப்பாட்டில் வாக்களித்திருந்தமையை நாம் காணலாம். ஆனால், இம்முறை தேர்தலில் அது அவ்வாறு இருக்குமா என்பது சந்தேகமே. எனது கணிப்பின் பிரகாரம், கிழக்கு மக்களின் வாக்கு பெரும்பாலும் ரணிலுக்கும் தமிழ் பொது வேட்பாளருக்கும் கிடைப்பதற்கான அதிக சாதித்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதேவேளை வடக்கில் ஒரு சில தேர்தல் தொகுதிகளில் மாத்திரம் சஜித் முன்னிலை பெறுவார். ஏனைய பிரதேசங்களில் அவர் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது என்பது எனது ஊகம். தமிழ் மக்களின் வாக்குகள் இப்படியாக பிரிந்து போகின்ற பட்சத்தில் தமிழ் மக்கள் பேரம் பேசுகின்ற சக்தியை இழப்பது மாத்திரமல்ல, இணைந்த வடகிழக்கு என்னும் கோரிக்கையை நாம் எமது அரசியல் அபிலாசைகளில் இருந்து நீக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கும் உள்ளாவோம். இது எமது 70 வருட போராட்டத்துக்கு விழுந்த ஒரு பெரும் அடியாக காணப்படும்.

தேசிய பிரச்சினை

தமிழ் மக்களின் மிகப் பெரிய கோரிக்கையான இனப்பிரச்சினைக்கான தீர்வினை எந்தவொரு வேட்பாளரும் தமது பிரதான குறிக்கோளாக இந்த தேர்தலில் முன்வைக்கவில்லை. அது குறித்து அவர்களது பிரச்சார மேடைகளிலும் அவர்கள் பேசியது இல்லை. மூன்று பிரதான வேட்பாளர்களும் பொருளாதாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற விடயங்களை மாத்திரமே முன்வைத்து இந்த தேர்தலில் களமாடுகிறார்கள். ஆகவே இவர்களோடு தேர்தலுக்கு முன்னரான பேரம் பேசல் என்பது சாத்தியமற்ற விடயமாகும். 

எனவே தேர்தலின் பின்னர் யார் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள பேரினவாதத்தின் எதிர்ப்புகளை தாண்டி நடைமுறைப்படுத்துவார் என்பதை மையமாக கொண்டே எமது தமிழ் மக்களின் வாக்குகள் பாவிக்கப்படவேண்டும்.  

எனவே, பௌத்த சிங்கள பேரினவாத சக்திகளை கையாளக்கூடிய ஆளுமை சஜித்துக்கா, அனுரவுக்கா, ரணிலுக்கா உண்டு என்பதைக் கொண்டே தமிழ் மக்களின் அரசியல் பயணம் இருக்க வேண்டும். தமிழ் மக்கள் தமக்கு வாக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறையும் அறிவும் அதனை கையாளக்கூடிய பக்குவமும் உள்ள ஒருவருக்கு வாக்களிப்பதே சிறந்தது. ஊழல் பொருளாதார பிரச்சினை மற்றும் போதைவஸ்து பிரச்சினைகள் அரசியல் தலைவர் பொறுப்பெடுத்து தீர்க்கின்ற பிரச்சினைகள் அல்ல. அவை நாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள். ஆனால், அரசியல் தீர்வென்பது நாட்டின் தலைவர் பொறுப்பெடுக்க வேண்டிய பிரச்சினை. அது சிக்கல் நிறைந்தது. ஆகவே, ஜனாதிபதியாக வருகின்ற ஒருவர் அத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க துணிந்தவராக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

- ஆர். பாலச்சந்திரன்

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் ஊடக செயலாளர்.

https://www.virakesari.lk/article/193424

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அரசியல் தீர்வென்பது நாட்டின் தலைவர் பொறுப்பெடுக்க வேண்டிய பிரச்சினை. அது சிக்கல் நிறைந்தது. ஆகவே, ஜனாதிபதியாக வருகின்ற ஒருவர் அத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க துணிந்தவராக இருக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

இப்போது இவைகளை சொல்லும் தாங்கள்

கூட இருந்த தலைவருக்கு கொஞ்சமென்றாலும் சொல்லிக் கொடுத்திருக்கலாமே?

ஆக குறைந்தது இயலாத நேரத்திலாவது யாரைவது உங்கள் இடத்துக்கு அமர்த்திவிட்டு ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கலாமே?

கட்சிக்காக தியாகங்கள் செய்த எத்தனையோ பேர் காத்திருக்க

வெளிநாட்டுக்காரன் போட்ட உத்தரவுக்காக பின் கதவால் வந்தவர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாமே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது இவைகளை சொல்லும் தாங்கள்

கூட இருந்த தலைவருக்கு கொஞ்சமென்றாலும் சொல்லிக் கொடுத்திருக்கலாமே?

தான் சொல்லிக் கேக்கவில்லை என்று தான் எழுதுகிறார் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

தான் சொல்லிக் கேக்கவில்லை என்று தான் எழுதுகிறார் அண்ணை.

அப்ப பிழையான ஆளுடன் தனது வருமானத்துக்காக இவ்வளவு காலமும் இருந்துவிட்டு இப்போ புலம்புகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் ஒரு விடயத்தை உணர தவறி உள்ளார். பிரதான வேட்பாளர்கள் மூவருக்குமே பெருன்பான்மை இனத்தவரின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதே முதல் இலக்கு. அதில் அவர்கள் தவறுவார்களாயின் வெற்றி பெறுவதற்கான அத்திவாரமே இல்லாமல் போகும். எனவே, பெருன்பான்மை இனத்தவரின் பசிக்கு தீனி இட்டபின்னரே ஏனையோருக்கு வாக்குறுதி கொடுக்க முடியும். தமிழ்மக்கள் விடயத்தை முதலாவது பணியாக எடுக்க மாட்டார்கள். 

தமிழ் மக்கள் எப்படி தமது வாக்குகளை வெவ்வேறு தரப்பினருக்கு வழங்குகின்றார்கள் என்பதே நான் இந்த ஜனாதிபதி தேர்தலில் உற்றுநோக்கும் முக்கிய விடயம். தேர்தல் முடிவு பீத்தல்களை நிச்சயம் வெளிக்கொண்டுவரும். 

வெவ்வேறு தமிழ் தரப்பினரிடையே யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது, தமிழ் மக்கள் யார் பேச்சை கேட்கின்றார்கள், எந்த தரப்பு உதாசீனம் செய்யப்படுகின்றது என பல்வேறு விடயங்களைஅறிய, தமிழ் மக்களின் தற்போதைய மனநிலையை காண்பிக்கும் பாசித்தாள் சோதனை இந்த ஜனாதிபதி தேர்தல்.

மூக்குடைபடுபவர்கள் எப்படி சப்பைக்கட்டு கட்டி தோல்வியை நியாயப்படுத்துவார்கள் என்பதையும் இப்போதே நாங்கள் ஊகிக்கவும் தொடங்கலாம்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.