Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செஸ் ஒலிம்பியாட், இந்தியா, பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,RAMESH BABU

படக்குறிப்பு, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் இந்திய அணிகளில் இடம் பெற்றிருந்தனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 23 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் தக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, குகேஷ் டி, திவ்யா தேஷ்முக், வந்திகா அக்ராவால் ஆகியோர் வெவ்வேறு நிலைகளில் தனி நபர் ஆட்டத்துக்கு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

2022-ஆம் ஆண்டு சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது, இந்திய அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. இம்முறை இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்புகின்றன இந்திய அணிகள். இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், பெண்கள் அணியில் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

செஸ் ஒலிம்பியாட்டில் சாதித்த வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா,"செஸ் ஒலிம்பியாட்டில் கிடைத்துள்ள வெற்றி மேலும் பலரிடமும் சதுரங்கத்தை கொண்டு செல்லும். குறிப்பாக, இளைஞர்கள், குழந்தைகளிடையே சதுரங்கம் பிரபலமாகும். அது சதுரங்க விளையாட்டிற்கு நல்ல விஷயம். சென்னை ஒலிம்பியாட்டில் எங்களால் தங்கம் வெல்ல முடியவில்லை. மற்ற அணிகளுக்கு கடும் போட்டி கொடுத்தாலும் இரு பிரிவுகளிலும் வெண்கலத்தையே எங்களால் வெல்ல முடிந்தது. அந்த அனுபவத்தை பயன்படுத்தி நாங்கள் இம்முறை இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளோம். என்னுடைய ஆட்டத்தை மெருகேற்றிக் கொள்ள கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வெகுவாக உதவிபுரிந்தார்." என்று கூறினார்.

செஸ் ஒலிம்பியாட், இந்தியா, பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு, சிறப்பாக விளையாடிய குகேஷ் டி தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச செஸ் பெடரேஷனால் (FIDE) நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பொது பிரிவில் 193 அணிகளும் பெண்கள் பிரிவில் 181 அணிகளும் பங்கேற்றன.

11 சுற்றுகளிலும் வென்ற இந்திய அணி

குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராதி, மற்றும் ஹரிகிருஷ்ணா பென்டாலா ஆகியோர் கொண்ட இந்திய ஆண்கள் அணிக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் கேப்டனாக இருந்தார். போட்டி முழுவதுமே முன்னிலை வகித்த இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்றது, ஒரு போட்டி டிராவில் முடிந்தது. கடைசி சுற்றுக்கு முன்பு, இந்தியா சீனாவை விட 2 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. இறுதிச் சுற்றில், தங்கப் பதக்கத்தை வெல்ல இந்தியாவுக்கு ஒரு டிரா மட்டுமே தேவைப்பட்டது அல்லது சீனா தனது போட்டியை வெல்லாமல் இருக்க வேண்டும். இருப்பினும் இந்திய அணி 3.5 - 0.5 என்ற கணக்கில் ஸ்லோவேனியாவை வீழ்த்தி, பதக்கத்தை வென்றது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் மிக அசத்தலாக விளையாடி 10 ஆட்டங்களில் 9 புள்ளிகளைப் பெற்றார் மற்றும் முதல் போர்டில் தனிநபர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசியும் சிறப்பாக ஆடி, 11 ஆட்டங்களில் 10 புள்ளிகளைப் பெற்று போர்டு 3-இல் தனிநபர் தங்கத்தை வென்றார். இருவரும் தங்கள் FIDE மதிப்பீடுகளைக் கணிசமாக உயர்த்தியுள்ளனர். இந்த மதிப்பீடுகள் படி, உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளார் அர்ஜுன் எரிகைசி. முதல் இடத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், இரண்டாம் இடத்தில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா உள்ளனர். சதுரங்கத்தில் FIDE மதிப்பீடுகளில் 2800-க்கும் அதிகமான புள்ளிகள் பெற்றிருந்தால் அவர்கள் உலகின் சிறந்த ஆட்டக்காரர்களாக கருதப்படுவர். அந்த வகையில், அர்ஜுன் 2800 புள்ளிகளை பெறுவதற்கு மிக நெருக்கமாக உள்ளார். குகேஷ் இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

 
செஸ் ஒலிம்பியாட், இந்தியா, பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.

விட்டுக்கொடுக்காத பெண்கள் அணி

ஹரிகா துரோணவல்லி, வைஷாலி ஆர், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால் மற்றும் தானியா சச்தேவ் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணிக்கு, மகாராஷ்ட்ராவை சேர்ந்த அபிஜித் குன்டே கேப்டனாக இருந்தார். இந்திய பெண்கள் அணி மிகவும் வலுவாக தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஏழாவது சுற்று வரை தோற்காமல் போட்டியில் முன்னிலை வகித்து வந்தது. எட்டாவது சுற்றில் தடுமாறிய இந்திய அணி, போலந்திடம் தோற்றது. பின்னர் அமெரிக்க அணியுடன் டிரா செய்தது. இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, கஜகஸ்தானுடன் சமநிலையில் இருந்தது.

பின்னர் நிதானமாக விளையாடி, அஜர்பைஜானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3.5 - 0.5 என்ற கணக்கில் வென்றது. அதே நேரத்தில், கஜகஸ்தான் அமெரிக்காவுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது, இது இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18 வயது திவ்யா தேஷ்முக், அனைத்து சுற்றுகளிலும் விளையாடி, 9.5 புள்ளிகளைப் பெற்றார். அஜர்பைஜானுக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டம் இந்தியா பதக்கத்தை வெல்ல மிகவும் முக்கியமாக இருந்தது. அவர் போர்ட் 3-இல் தனிநபர் தங்கம் பெற்றார்.

 
செஸ் ஒலிம்பியாட், இந்தியா, பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,FIDE

படக்குறிப்பு, இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் (இடது புறம்) இந்திய அணிக்கு முக்கிய தருணங்களில் வெற்றியை தந்துள்ளார்.

உலக அரங்கில் முன்னேறி வரும் இந்தியா

பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு பிபிசி தமிழிடம் பேசிய போது, சதுரங்க ஆட்டத்தில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார். “ஒரு காலத்தில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய சதுரங்கத்தில் தற்போது இந்தியா முன்னேறி வருகிறது. வெகு விரைவில் இந்தியா தான் உலகில் நம்பர் ஒன் என்ற நிலை வரப் போகிறது,” என்றார்.

குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுக்குள்ளாகவே சதுரங்கப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தால் அடுத்த பத்து வருடங்களில் அவர்கள் சிறந்த வீரர்களாக இருப்பார்கள் என்கிறார் அவர்.

இந்திய சதுரங்க அணிக்கு 12 ஆண்டுகளாக பயிற்றுநராக இருந்த சென்னையை சேர்ந்த ஆர் பி ரமேஷ், இந்த வெற்றி உலக சதுரங்க அரங்கில் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியம் என்று விளக்கினார்.

“இந்திய அணியில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். குகேஷ் மற்றும் எரிகைசி துடிப்பாக ஆடிய போது, பிரக்ஞானந்தா மற்றும் விதித் எந்த ஆட்டத்தையும் இழக்காமல் நிதானமாக ஆடினர். இந்திய அணியினரின் சராசரி வயது 18 முதல் 20 ஆக உள்ளது. ஆனால் பிற அணிகளில் 30-க்கும் அதிகமாக உள்ளது. இளைஞர்களைக் கொண்டுள்ளதால் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணி மேலும் வலுவடையப் போகிறது,” என்றார்.

மேலும், “இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் உலக சதுரங்க அரங்கில் இந்தியாவுக்கு இடமே இல்லை. விஸ்வநாதன் ஆனந்த் தவிர வேறு யாரையுமே தெரியாது. ஆனால் இப்போது சதுரங்க ஆட்டத்துக்கு நிறைய கவனம் கிடைத்துள்ளது. தற்போது நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன, பயிற்றுநர்களுடன் ஆன்லைன் மூலம் பயிற்சிப் பெறலாம், இவற்றை எல்லாம் இந்திய வீரர்கள் மிக திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்,” என்றார்.

வெளிநாட்டு பயிற்றுநர்களிடம் தான் நல்லப் பயிற்சி பெற முடியும் என்பது தவறான கருத்து என்கிறார் அவர். “200 ஆண்டுகளாக வெளிநாட்டவர் ஆட்சியின் கீழ் இருந்த நமக்கு, வெளிநாட்டு பயிற்றுநர்கள் மீது ஒரு கவர்ச்சி உள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இந்திய பயிற்றுநர்களிடம் பயிற்சி பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில் இது அதிகரிக்கும்,” என்றார்.

ஆர் பி ரமேஷ், ரோமேனியா மற்றும் நார்வே நாட்டு வீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட், இந்தியா, பிரக்ஞானந்தா

பட மூலாதாரம்,R B RAMESH

படக்குறிப்பு, இந்திய அணியில் அதிக இளைஞர்கள் இருப்பது இந்தியாவுக்கு சாதகம் என்கிறார் மூத்த பயிற்றுநர் ஆர் பி ரமேஷ்.  

இந்திய வீராங்கனைகள் சாதித்தது என்ன?

இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது மிகவும் முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் நந்திதா பிபிசி தமிழிடம் பேசும் போது, “நான் விளையாட தொடங்கியப் போது ஒரு பெண் சதுரங்க ஆட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்தி ஆடுவது எளிதான விசயம் அல்ல. ஆனால் இப்போது ஆண், பெண் வித்தியாசங்கள் இல்லை, பெற்றோர்களின் மனநிலையும் மாறியுள்ளது,” என்றார்.

மேலும், “படிப்பு அல்லாமல் மற்றொரு திறனில் பிள்ளைகள் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கிறனர். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் சமீபத்தில் தான் ஆண்களுக்கு நிகரான பரிசுத் தொகை பெண்களுக்கு வழங்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கான போட்டியை ஒருங்கிணை தொடங்கியுள்ளனர். உலக அளவில் பெண்கள் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நேரத்தில், இந்தியப் பெண்கள் அணியின் வெற்றி, இளம் பெண்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும். கிராண்ட் மாஸ்டர்களுடன் பயிற்சி பெறுவது நல்ல வாய்ப்பு என்றாலும் அதற்கான செலவும் அதிகம். அரசு அந்தப் பயிற்சிகளை வழங்கினால் பலருக்கு உதவியாக இருக்கும்,” என்றார்.

“பெண்கள் சதுரங்க ஆட்டத்தை தங்கள் முக்கிய தொழிலாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை சதுரங்க ஆட்டம் தரக்கூடியது,” என்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு. “விளையாட்டு கோட்டாவில் வழங்கப்படும் பணி வாய்ப்புகள் பெண்களுக்கு அதிகமாக வழங்கினால் அது அவர்களை ஊக்கப்படுத்தும்,” என்றார் அவர்.

 

2022-ஆம் ஆண்டு இந்தியப் பெண்கள் அணி ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கத்தை மிக நெருக்கத்தில் தவறவிட்டனர். அப்போது பயிற்றுநராக இருந்த ஆர் பி ரமேஷ், “இந்திய பெண்கள் அணி ஒவ்வொரு முறையும் பலமாகிக் கொண்டே வருகிறது. கொனேரு ஹம்பி, வைஷாலி உள்ளிட்டோர் சதுரங்கத்தில் தேர்ந்தவர்களாகி வருகின்றனர். இந்த முறை 18 வயதான திவ்யா தேஷ்முக் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த ஆட்டக்காரருக்கு விருதையும் பெற்றுள்ளார். குழந்தைகளிடம் முதலீடு செய்தால் தான் அவர்கள் பதின்பருவத்தில் சிறந்த வீரர்களாக மாறுவார்கள்,” என்றார்.

மேலும், “ஒரு காலத்தில் இந்தியாவில் சதுரங்கம் என்றால் தமிழ்நாட்டில் தான் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருந்தனர். ஆனால் இப்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா என வேறு மாநிலங்களிலும் சதுரங்கம் கவனிக்கப்படும் ஆட்டமாக மாறியுள்ளது. ஒடிசாவில் அகாடெமி தொடங்கப்பட்டு சிறார்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.