Jump to content

"தூரத்துப் பச்சை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"தூரத்துப் பச்சை"

 

போரின் பின் தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க நகரமாக இன்று மாறி வரவேற்கும் இலங்கை வடபகுதியின்  எல்லையில் இன்னும் துயரமுகத்துடன் யுத்த வடுக்களை தங்கியவண்ணம் அந்தக் கிராமம் இருக்கிறது. விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி,  முகத்தில் யுத்தம் கொடுத்த கொடும் காயங்களை வரைந்தபடி அவள் தன் மகன் கண்ணனுடன் நின்றாள். வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று முன்னைய நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன.  யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் இன்னும் அதன் எல்லைப் பகுதி காணப்படுகிறது. 

இந்த கிராமமும் அதனை சுற்றிய கிராமங்களும் நம்பிக்கையுடன் மீளக் குடியேறி சில ஆண்டுகளுக்கு  மேலாகின்றன. ஆனால், அன்றைய மனதை குளிரச் செய்த காட்சிகளும் இதமான காற்றையும் வீதிக்கு அருகாக கூட வரும் ஆற்றையும் இன்று காணவில்லை.  நீண்ட கால விவசாயக் கிராமமான அது 1950களில் மக்கள் குடியேறி,  கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை கடந்த  கிராமம் இது. அப்படிச் சொல்வதைவிட ஆறு தலைமுறைகளின் உழைப்பில் வளர்ந்த கிராமம் என்றே சொல்லலாம். அது தான் இன்று பச்சையை இழந்து இப்படி வாடி இருக்கிறது.

இலங்கையின் வறண்ட வட சமவெளிகளுக்கு இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான அங்கு,  மக்கள் எளிமையான வாழ்க்கை இன்று வாழ்கின்றனர். அவர்களின் நிலம் இப்ப கடுமையாகக் காணப்படுகிறது. விளைநிலங்கள் பயிர்களை விளைவிக்க போராடுகின்றன. ஒவ்வொரு நாளும் கொளுத்தும் வெயிலுக்கும், மழைக்குப் பதிலாக புழுதியை வீசிய காற்றுக்கும், போருக்கு முந்தைய சிறந்த காலத்தின் நினைவுகளுக்கும் இடையில் இன்று அந்தக் கிராமம் தன்னை மீண்டும் கட்டியெழுப்ப போராடிக்கொண்டு இருந்தது. ஆனாலும், அந்த  மக்கள் தங்களிடம் உள்ளதைக் குறித்து பெருமிதம் கொள்வதில் எள்ளளவும் குறையவில்லை. 

மாலை நேரங்களில், அன்றைய வேலை முடிந்ததும், கிராமத்து பெரியவர் அப்பா சுந்தரத்திடம் கதைகள் கேட்க, கிராம மக்கள் ஆலமரத்தடியில் கூடுவார்கள். அவரது கதைகள் புனைவுகளால் நிரம்பியுள்ளன, சில பழமையானவை, சில போரினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் அடிக்கடி சொன்ன ஒரு கதை இருந்தது, அது "தொலை தூரத்துப் பச்சை [பசுமை]" கதையாகும். 

"இது மலைகளுக்கு அப்பால் உள்ளது," அப்பா சுந்தரம், தொலைதூர அடிவானத்தை சுட்டிக்காட்டி, "மிகவும் செழிப்பான, மிகவும் வளமான நிலம், சிறிய விதை கூட வலிமையான மரமாக வளரும். அங்குள்ள ஆறுகள் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் ஓடுகின்றன, மேலும் மண் வளமானது. பசி தெரியாத இடம், பூமி தாராளமாக செழிப்பை கொடுக்கிறது" என்றார்.

தங்கள் சொந்த முயற்சிப் போராட்டங்களால் சோர்வடைந்த இளைய கிராம மக்கள் இந்தக் கதைகளால் மயங்கினர். அன்றாட வாழ்க்கையின் சுமைகள் மறைந்து போவதாகத் தோன்றும் அந்த தொலைதூர இடத்தில் அவர்கள் வாழ்வதாக அவர்கள் அடிக்கடி கற்பனை செய்தனர். இந்த இளம் கிராமவாசிகளில் ஒருவரான அந்த கண்ணன் என்ற வாலிபன் குறிப்பாக இந்த கதையில் முற்றாக தன் மனதைப் பறிகொடுத்தான்.  

போர் அவர்களின் வயல்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பறித்தது. ஒரு காலத்தில் பசுமையாக செழித்து வளர்ந்த இடத்தில், இப்போது வறண்ட பூமி மட்டுமே, விரிசல் மற்றும் தரிசாக உள்ளது அது தான் கண்ணனின் தாயின் முக்கிய கவலை. அதை அவள் தன் மகன் கண்ணனிடம் பலதடவை கூறியுள்ளாள். 

அப்பா சுந்தரத்தின் ஒவ்வொரு சொல்லும் அவன் காதில் மோதிக்கொண்டு இருந்தன. "பரம்பரை பரம்பரை பரம்பரையாக பெரிய மரங்கள் உயர்ந்து நிற்கும் , ஆறுகள் தாராளமாக ஓடும். மோதலுக்கு முன்பு, தமிழ் விவசாயிகள் அந்த நிலத்தை நோக்கிப் போனதாகவும் அப்பா சுந்தரம் கூறியதை கண்ணன் மறக்கவில்லை. 

கிராமத்தில் மூத்தவரான அப்பா சுந்தரம், அடிக்கடி புளியமரத்தின் நிழலில் அமர்ந்து, தொலைந்து போன சொர்க்கத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார். அதை கண்ணனும் குந்தி இருந்து கேட்பான். 

“அங்கு, சூரிய ஒளி அரிதாகவே தரையைத் தொடும் அளவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. புதிய மல்லிகைப்பூவின் வாசனையுடன் காற்று இனிமையானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலம் பசுமையானது. ஆனால்…” அப்பா சுந்தரத்தின் குரல் சற்று நின்றது, “இது தூரத்து பச்சை. அதனால் நாம் இன்னும் அங்கு பொதுவாக போகவில்லை. கனவில் மட்டுமே, கதையில் மட்டுமே நின்றுவிட்டது" என்றார் 

பெரியவரின் பேச்சைக் கேட்டதும், கண்ணன் மலைகளை ஏக்கத்துடன் பார்த்தான். வறண்ட வயல்கள் மற்றும் இடைவிடாத வெப்பம் கொண்ட அவனது  கிராமம், தொலைதூர பசுமையைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் அணுஅணுவாக உணர்ந்தது.

பல மாதங்கள் கனவு கண்டு, ஒரு நாள் கண்ணன் ஒரு முடிவெடுத்தான். அவன் தன் கிராமத்தை விட்டு வெளியேறி மலைகளுக்கு அப்பால் உள்ள அந்த பசுமையான நிலத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டான் . ஆனால் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. 

"கண்ணன், இந்த நிலம் எங்கள் வீடு" என்று அவன் தந்தை கூறினார். "இது கடினமாக இருக்கலாம், ஆனால் இது நம்முடையது. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாங்கள் வாழப்பார்க்க வேண்டும். நீ  தேடுவது  பொய்யாகக் கூடப் போகலாம்?" என்கிறார். ஏன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உனக்கு தெரியாதா என்று முடித்தார். 

ஆனால் கண்ணன் மனதை உறுதி செய்தான். அடிவானத்திற்கு அப்பால் வாழ்க்கை நிறைந்த ஒரு நிலத்தை கற்பனை செய்துகொண்டிருக்கும் போது அவனது கால்களுக்குக் கீழே விரிசல் விழுந்த பூமியைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை.

ஒரு விடியற்காலையில், அவன் தனது பயணத்தைத் தொடங்கினான். அவன் போகும் வழியில், செழித்த தென்னை மற்றும் மா மரங்களுக்கு இடையில் எறிகணையால் உயிரிழந்த மரங்களும் முகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றன. அவனுக்கு  பல ஞாபகங்களை அந்தத் தெருக்கள் கிளறிக் கொண்டிருந்தன. 

அவன் இன்னும் கொஞ்ச தூரம் செல்லும் பொழுது, அண்மையில் குடியேறி பாம்பு தீண்டியதனால் மரணித்த சிறுவனின் வெற்றுடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு தூரம் உன்னை பொத்திப் பொத்தி கொண்டு வந்த பிறகு பாம்பு உன்னை தின்று விட்டதே? என்ற அந்த சிறுவனது தாயின் அழுகை அந்தப் பகுதியை மட்டும் அல்ல அவனையும்  உறைய வைத்தது. 


மேலும் பாடசாலையடி கடுமையான போர் நடந்த களமுனை போலும்,  பக்கத்தில் உள்ள பல வீடுகள் சிதைந்திருந்தன. பாடசாலையின் பக்கத்தில் உள்ள முன்பள்ளிகள் கூரை அலுவலகங்கள் கூரை  பொது மண்டபங்கள் எல்லாம் அழிந்த நிலையில் வீழ்ந்து கிடந்தன மிதிவெடிகள் விதைக்கப்பட்ட நிலம் என்று, பார்க்கும் இடமெல்லாம் ‘மிதிவெடிகள் கவனம்’ என்ற வார்த்தைகள் தொங்கிக்கொண்டு இருந்தன. 


மிதிவெடி அபாயப்பலகைகள் உக்கி உடைந்து போகும் நிலையிலும் அந்தப் பகுதிகளில் மக்கள் பெரியளவில் குடியேறவில்லை என்பதைக் கவனித்தான். பல குடும்பங்கள் திரும்பி வந்து அறிந்த தெரிந்த வர்களின் காணிகளில் கூடாரம் அமைத்திருந்தார்கள் . அந்த தெருவின் தொடக்கத்தில் ஒரு காணியில் கூடாரத்தை நட்டு ஒரு குடும்பம் இருந்ததது. அதன் முற்றத்தில் குழந்தைகள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் காணிகளுக்கு மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் குடியிருக்க அனுமதிக்காத காரணத்தினால், அந்தக் காணியில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள் போலும். அப்படி பல குடும்பங்களைப் பார்த்துக்கொண்டு தன் பயணத்தை கண்ணன் தொடர்ந்தான்.  


சனங்களறற்ற பல காணிகளை தாண்டிச் சென்ற பொழுது ஒரு குடி ஆற்றங்கரை ஒன்றின் பக்கத்தில் தங்கள் காணியில் உள்ள தென்னைகளில் விழுந்த ஓலைகளை பின்னி அழகான வீடு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வயதான தாய் ஓலைகளை பின்னிக் கொண்டிருக்கிறார். பழைய வீடு இடிந்தபடி அப்படியே பக்கத்தில் இருக்கிறது. குழந்தையும் தாயும் மண்ணெடுத்து வந்து வீட்டிற்கு கொட்டுகிறார்கள். அழகான மண் அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிற அந்த குடியைச் சேர்ந்த மூதாட்டி இந்த நிழலில் வந்து கிடக்க எத்தனை இடர்களுக்கு முகம் கொடுத்தோம் என கண்ணனிடம் சொல்லி பெரு மூச்சு விட்டார்.


இவற்றை எல்லாம் தாண்டி மலைகளில் ஏறிய அவன் தனது கிராமத்தை திரும்பிப் பார்த்தான். கிராமம் சிறியதாகவும் சோர்வாகவும் காணப்பட்டது, அதன் வயல்கள் பல வருட போராட்டத்தால் பச்சை இழந்து இருந்தது. அதை விட்டுவிட்டு போவது அவனுக்கு ஒரு நிம்மதி உணர்வைக் கொடுத்தது,  

மலைகளின் உச்சியை அடைந்ததும் அவன் இதயம் எதிர்பார்ப்பில் துடித்தது. கற்பனை நிலத்தை, தன் கனவுகளை நிரப்பிய தொலை தூரப் பசுமையைப் பார்க்க எதிர்பார்த்து அங்கேயே நின்றான். ஆனால் கீழே உள்ள பள்ளத்தாக்கைப் பார்த்தபோது, அவனதுஉற்சாகம் குழப்பமாக மாறியது. அந்த தூரத்து  நிலம் கதைகள் கூறியது போல் பசுமையாக இல்லை. உண்மையில், அது அவன் கிராமம்  போலவே இருந்தது. தன் கிராமத்தைப் போல,அதே கடுமையான வெயிலால் காய்ந்து, வாடி, தேய்ந்தது இருப்பதைக் கண்டான், ஆனால் அங்கு யுத்தத்தின் வடுக்கள் மட்டும் இல்லை.  


கண்ணன் பள்ளத்தாக்கில் இறங்கினான், ஒருவேளை அவன் போதுமான தூரம் செல்லவில்லை என்று நம்பினான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, நிலம் அவன் விட்டுச் சென்றதை விட வேறு எதையும் வழங்கவில்லை. அங்கு அவன் சந்தித்த கிராம மக்கள் அதே போராட்டங்கள், அதே வறண்ட மண், அதே மழைக்கான ஏக்கம் பற்றி பேசினர். 


கேட்காத கானங்கள் இனிமையானது.பார்க்காத ஒன்று பச்சையாக தெரியும். அருகில் சென்றால் நம்மை முகம் சுளிக்க வைக்கும். 'தெரிந்த பேய்க்கு பழகிய நிலையில் தெரியாத தேவதையை நாடுவது ஆபத்தானது' என பழமொழி உண்டு. அக்கரை பச்சைக்கு நாட்டம் இல்லை. இக்கரை எதுவோ அதுவே பூஞ்சோலை. அது அவனுக்கு அப்பத்தான் காலம்கடந்து புரிந்தது!


கண்ணன் விரைவில் உண்மையை உணர்ந்தான். அவன் கனவு கண்ட பசுமையான நிலம், குறைந்தபட்சம் அவன் கற்பனை செய்த விதத்தில் இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகவும் சரியானதாகத் தோன்றியது, உண்மையில், அவனுடய  சொந்த வீட்டிலிருந்து வேறுபட்டதல்ல. இந்த மண்ணின் போராட்டங்கள் தனது கிராமத்தில்  நடந்ததைப் போலவே இருந்தன. பசுமையான மேய்ச்சல் நிலங்களின் கதைகள் அவனது  சொந்த ஆசைகளின் பிரதிபலிப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டறிந்தான். 


கனத்த இதயத்துடன் கண்ணன் தனது கிராமத்துக்கு  திரும்பினான். கிராம மக்கள் அவனை  மீண்டும் வரவேற்றனர், அவன் தனக்கு பழக்கமான தன்னுடைய கிராம வயல்களில்  நடந்து செல்லும் போது, அவனது பார்வையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. விரிசல் விழுந்த பூமியும் வறண்ட காற்றும் ஒரு காலத்தில் அவனை விரக்தியில் ஆழ்த்தியது, இப்போது பழைய தோழர்கள் போல் தோன்றியது. கடினமான இந்த நிலம் அவனுக்குச் சொந்தமானது.


அன்று மாலை, கிராம மக்கள் மீண்டும் ஒருமுறை ஆலமரத்தடியில் கூடியபோது, அப்பா சுந்தரம் கண்ணனிடம் தன் கதையைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். கண்ணன் தன் மக்களின் முகங்களைப் பார்த்தான், ஒரு காலத்தில் தான் வெறுப்படைந்த நிலத்தைப் பார்த்து, பேசினான்.


மனம் எப்போதுமே இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க
ஆலாய் பறக்கும்.

தூரத்திலிருந்து  பார்ப்பதற்கு எல்லாமே அழகாகத்தான் தெரியும்.


மலையும் அதன் காட்சிகளும் தொலைவிருந்து பார்க்கும்போது அழகாக இருக்கும்.


பசுமையான  புல்வெளிகள் நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும் போது தான்
கொள்ளை அழகு என்று சொல்லி பிரமிக்க வைக்கும்.


இக்கரையோ அக்கரையோ எதுவாக இருந்தாலும் பசுமையாக வைப்பது நம் கையில்தான் உள்ளது.


இருப்பதில் திருப்தி கொண்டு வாழ அக்கறை எடுத்துக்
கொண்டாலே போதும்.


அக்கரையைப் போல இக்கரையையும் பச்சைப் பசேலென்று பசுமையாக வைத்துக் கொள்ளலாம். 


அவன் மனம் தனக்குள்ளே பேசிக்கொண்டது


"நான் மலைகளுக்கு அப்பால் சென்றேன், நான் எதிர்பார்த்தது இல்லை, என்பதை நான் அங்கு கண்டேன். அங்குள்ள நிலம் நமது நிலத்தை விட பசுமையானது இல்லை. நம்மிடம் இல்லாதது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கற்பனை செய்கிறோம், ஆனால் உண்மை என்ன வென்றால், ஒவ்வொரு இடத்திற்கும் அதன் அதன் போராட்டங்கள் உள்ளன. இந்த எம் நிலம், அதன் எல்லாக் கஷ்டங்களோடும், நான் தேடியதை விடக் குறைவான தகுதியுடையது அல்ல.


கிராம மக்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், மெதுவாக அவர்களிடையே புரிதல் பரவியது. வேறொரு வாழ்க்கையை, ஒரு சிறந்த இடத்தைப் பற்றி அவர்கள் நீண்ட காலமாக கனவு கண்டார்கள், அவர்கள் ஏற்கனவே வைத்திருந்தவற்றின் மதிப்பை மறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தார்கள்.


அன்று முதல் கண்ணன் புதிய நோக்கத்துடன் வயல்களில் வேலை செய்தான். சிறு சிறு வெற்றிகளைப் பார்த்தான். வறண்ட பூமியில் உந்தித் தள்ளும் பச்சைத் தளிர்களையும்  தென்றல் மழையின் வாசனையையும் கண்டான். 'உன்னிப்பாகக் கவனித்தால், நிலத்திற்குத் திரும்பும் பச்சைப் பளபளப்பைக் காண்பீர்கள். ஒரு நாள், அது எங்களிடம் திரும்பி வரும்' என்று அவன் வாய் முணுமுணுத்தது.

அவனது கிராமத்தின் நிலம் தொலைதூர நாடுகளின் கதைகள் போல் பசுமையாக இருந்திருக்காது, ஆனால் அது அவர்களுடையது. மற்றும் சில நேரங்களில், பார்க்க கடினமான விடயம் என்ன வென்றால், நம்மிடம் ஏற்கனவே இருப்பது உண்மையில் எமக்கு போதுமானது என்பதேயாகும்.  எனவே, தொலைதூரக் கனவில் அல்ல, இழந்தவற்றின் சாம்பலில் கூட பசுமை மீண்டும் வளரும் என்ற நம்பிக்கையில்  கண்ணனும் அவனது கிராம மக்களும் வாழத் தொடங்கினர்.  


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"
.

"சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மானலயும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி"


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


"கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா,
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா,"


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


"மழை நாளில் உன் எண்ணங்கள் வெயில் தேடும் - கோடை
வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்,
அது தேடி, இது தேடி அலைகின்றாய், - வாழ்வில்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்,
அவரவர்க்கு வைய்த்த இடம் அவன் போட்ட பிச்சை,
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

462083870_10226456579983568_3098453754963058734_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=H0Dbl-R2SW4Q7kNvgFNqbOj&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDlpXQa_xGaI6zxLLbiIqLEvvyn4STFX30-qez_GHChpQ&oe=6706B7F3 461992859_10226456579703561_6319706617794498210_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=e53AcwcPwEQQ7kNvgH4DOq7&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYANzWIcyng8V4A5wWHN7b8cIw3Hli1rhKyHFp2gSzlvrA&oe=6706B031 

462114802_10226456579823564_3642911581399452722_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MKjzZv8UpMMQ7kNvgFR3hvs&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDIosVV1Pjiouht7Ghyk4hKWRxIRsj_ghYGWx1k6hBs_Q&oe=6706A66E 461966375_10226456581783613_3841185650237887503_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2z-sx3cwrukQ7kNvgHEdzg3&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDoR1QQ695IkM2bhpquhgO1MU4y14mK11iwc2mxsWDnVA&oe=6706AC57

 

 


 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.