Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீலநிற சூரியன் : விமர்சனம்!

christopherOct 06, 2024 10:30AM
WhatsApp-Image-2024-10-06-at-10.27.25_3f

பெண்ணாகத் தன்னை உணரும் ஆணின் கதை!

பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வோட்டத்தில் இருக்கிற பெருஞ்சிக்கல்களைப் பேசுவதே இல்லை. சமத்துவ சமுதாயம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு உட்படப் பல விஷயங்களைப் பேசுகிற வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அப்படியொரு நிலையில், தன்னைச் சிறு வயதில் இருந்து பெண்ணாக உணரும் ஆணின் உருமாற்றத்தைப் பேசுகிறது ‘நீலநிற சூரியன்’. சம்யுக்தா விஜயன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?

Neela Nira Sooriyan movie review: Blue is indeed the warmest colour in Samyuktha Vijayan's terrific debut | Movie-review News - The Indian Express

வலிமிகு தருணங்கள்!

பானு என்ற பெயரில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பேசிப் பார்க்கிறார் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்). அப்போது, தன் குரலில் மாற்றம் பெரிய அளவில் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைகிறார். இந்தக் காட்சியில் இருந்து ‘நீலநிற சூரியன்’ திரைப்படம் தொடங்குகிறது.

அரவிந்தின் முன்கதை எப்படிப்பட்டது? எதனால் அவர் இப்படியொரு மாற்றத்திற்கு உள்ளானார்? எப்போது அதற்கான முதல் விதை விழுந்தது என்பது போன்ற விஷயங்கள் எதையும் பேசாமல் நேராக அவரது சமகால வாழ்வுக்கு நகர்கிறது திரைக்கதை. அதுவே இக்கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.

ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றும் அரவிந்த், தன் பெற்றோரிடத்தில் (கஜராஜ் – கீதா கைலாசம்) கூட அதிர்ந்து பேசுவதில்லை.

வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கித் தனது கடையை நடத்த விரும்புகிறார் அரவிந்தின் தந்தை. அதற்காக, அவரது சகோதரர் (பிரசன்னா பாலச்சந்திரன்) ஒரு பைனான்சியரிடம் அழைத்துச் செல்கிறார்.

ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், தனது மகளை அரவிந்துக்குக் கல்யாணம் செய்துவைக்க அந்த பைனான்சியர் எண்ணுகிறார். கடனாக அல்லாமல் சீதனமாகப் பணம் தர விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.
ஆனால், அரவிந்த் அதனை ஏற்பதாக இல்லை. ‘எனக்குக் கல்யாணம் வேண்டாம்’ என்கிறார்.

ஹார்மோன் மாற்றத்திற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் அரவிந்த், திருமண நிர்ப்பந்தத்தால் உடனடியாகத் தான் பெண்ணாகச் சமுதாயத்திற்குத் தெரிய வேண்டுவது அவசியம் என்றெண்ணுகிறார்.

அது வீட்டிலும், தான் பணியாற்றும் பள்ளியிலும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால், அவரிடத்தில் பெருகிய தயக்கங்கள் உடையச் சரியான தருணம் இது என்று சொல்கிறார் சக ஆசிரியை ஒருவர். நட்போடு அவர் சொல்லும் வார்த்தைகள், அரவிந்தைப் பானுவாக மாற வைக்கின்றன.

அதனால், அவர் சந்தித்த விளைவுகள் எத்தகையவை என்பதைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி.
ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக உணர்வதும், அதனைச் சமூகத்தில் வெளிப்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. யாரோ ஒருவருக்கு அது நிகழும்போது இரண்டொரு வார்த்தைகள் உதிர்த்துவிட்டுக் கடந்து போகின்றவர்கள், தமது குடும்பத்தில் அவ்வாறு நிகழ்வதை இம்மியளவு கூட விரும்ப மாட்டார்கள். ‘நீலநிற சூரியன்’ அப்படிப்பட்ட ’பேசாப்பொருட்களை’ப் பற்றிப் பேசுகிறது.

வலிமிகு தருணங்கள் பலவற்றை உள்ளடக்கிய கதை இது. ஆனாலும், அனைத்தையும் திரையில் காட்டாமல் சிலவற்றை வசனங்களில் சொல்லிச் செல்கிறது. சில விஷயங்கள் பூடகமாக உணர்த்தப்படுகின்றன. அது, இப்படத்திற்கு வேறொரு வண்ணத்தைப் பூசியிருக்கிறது.

’மெலோடிராமாவாகத் திரையில் நகர்ந்து நம்மை அயர்ச்சிக்கு உள்ளாக்குமோ’ என்று நினைக்கிற உள்ளடக்கத்தை, ரொம்பவே எளிமையாகத் திரையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன். அதுதான் ‘நீலநிற சூரியன்’ படத்தின் பலம்.

Image

சிறப்பான முயற்சி!

‘நீலநிற சூரியன்’னை எழுதி இயக்கியிருக்கும் சம்யுக்தா விஜயன், இதில் அரவிந்த் ஆக நடித்திருக்கிறார். ‘அதீதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு, ரொம்பவே சாதாரணமாகத் திரையில் வந்து போயிருக்கிறார். ஆத்திரம் பொங்குகிற தருணங்களில் கூட, அவர் அப்படி நடித்திருப்பது மட்டுமே கொஞ்சம் இடறுகிறது.

அரவிந்தின் பெற்றோராக வரும் கஜராஜ், கீதா கைலாசம் இருவருமே ‘அளவாக’ நடித்திருக்கின்றனர். அதேநேரத்தில், ’சமகாலச் சமூகத்தில் இப்படியொரு சூழலை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்களா’ என்ற கேள்வியை முன்வைக்கிறது அவர்களது நடிப்பு. பல காட்சிகள் பாதியில் தொடங்குகின்றன அல்லது பாதியில் முடிவடைகின்றன என்கிற எண்ணமே அதற்கான பதிலாகவும் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இக்கதை பொள்ளாச்சியில் நிகழ்வதாக உள்ளது. அதற்கேற்ப, கோவை வட்டாரத் தமிழ் பேசியிருக்கிறார் சித்தப்பாவாக வரும் பிரசன்னா பாலச்சந்திரன். அவரது மனைவியாக வருபவரும் அந்த உச்சரிப்பைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கிறார். இதர பாத்திரங்கள் ஏதும் அதனைப் பின்பற்றவில்லை. அது இப்படத்தின் மைனஸ்களில் ஒன்று.

பள்ளி துணை முதல்வராக வரும் கேவிஎன் மணிமேகலை, இக்கதையில் வரும் ’உணர்ச்சிமிகு தருணங்களுக்கு’ உத்தரவாதம் தருகிறார். சாதாரண மனிதர்களின் பிரதிநிதியாகத் திரையில் தெரிகிறார்.

இக்கதையில் உடற்கல்வியியல் ஆசிரியர்களாக ஆண், பெண் என்று இரண்டு பேர் காட்டப்படுகின்றனர். ஆசிரியையாக வருபவர் முதன்மை பாத்திரத்தை தோழமையுடன் நடத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது நடிப்பில் ‘இயல்பு’ நிறைந்திருப்பது அருமை.

இன்னொரு ஆசிரியராக வருபவரின் பாத்திரம் கொஞ்சம் ‘கத்தி மீது நடப்பது’ போன்றது. அதனை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது வசவுகளை வாங்குமளவுக்கு நடித்திருக்கிறார்.

மருத்துவராக வரும் சீரியல் நடிகை, அவர் பரிந்துரைக்கும் மனநல நிபுணராக வரும் கிட்டி என்று இதில் சில தெரிந்த முகங்களும் உண்டு.

இவர்கள் தவிர்த்து பள்ளி முதல்வர், தாளாளர், மாணவர்கள், மாணவிகள், அவர்களுள் ஒருவராக வரும் மசாந்த் ராஜன் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மட்டுமல்லாமல் இப்படத்தின் இசையமைப்பையும் கையாண்டிருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். உண்மையைச் சொன்னால், இப்படம் முழுக்கத் தென்படும் வண்ணங்கள் ஒரேமாதிரியான அலைவரிசையில் இருக்கின்றன. அவற்றில் எந்த ஏற்றமோ, இறக்கமோ இல்லை. டிஐயில் அது இப்படித்தான் அமையும் என்பதைத் திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்தால் மட்டுமே அது சாத்தியம்.

போலவே, கேமிரா கோணங்களிலும் பெரிதாக ‘வெரைட்டி’ காட்டவில்லை. படத்தொகுப்பை மனதில் கொண்டு, திரையில் கதை மெதுவாகவும் சீராகவும் நகரும் வண்ணம் ‘கட்’கள் அமைந்துள்ளன.

பெரும்பாலான இடங்களில் அமைதியைத் தவழவிட்டு, முதன்மைப் பாத்திரத்தின் மனவோட்டம் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிற வேளைகளில் மட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை மூன்றிலும் சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருப்பதால் மட்டுமே, ஒரு வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தை நாம் பெறுகிறோம். நிச்சயமாக, அவரது உழைப்பு சிறப்பானது.

இதைத் தாண்டி டிஐ, ஒலிப்பதிவு உட்பட இதர அம்சங்களும் இக்கதையை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளன.
ஒரு இயக்குனராக, சம்யுக்தா விஜயன் இப்படத்தில் தான் விரும்பிய ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

திருநங்கையாகத் தன்னை உணர்ந்து, அதே போன்றிருப்பவர்களோடு சேர்ந்து வாழ்பவர்கள் சிலர். மிகச்சிலர் அதில் தங்களை அடக்கிக்கொள்ளாமல் தனிமையாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரை முன்னிறுத்துவதாக ‘நீலநிற சூரியனை’ வடிவமைத்திருக்கிறார்.

பெயர் மாற்றத்திற்காக வட்டாட்சியர் அலுவலகம் செல்கையில், அங்கிருக்கும் பெண் கிளார்க் விண்ணப்பத்தில் ‘திருநங்கை’ என்று குறிப்பிடச் சொல்வதாக ஒரு காட்சி உண்டு. அது முடியும்போது, உடல்நலம் சரியில்லாத குழந்தையை ஆசீர்வாதம் செய்யுமாறு முதன்மை பாத்திரத்திடம் ஒரு பெண் வேண்டுவார்.

போலவே, தான் விரும்புகிற ஆண் ஒருவரோடு ஒரு ஹோட்டலில் முதன்மை பாத்திரம் தனியாக அமர்ந்து பேசுவதாக ஒரு காட்சி வரும்.

தன்னைப் பெண்ணாக உணர்கிற ஆண் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பார்வைகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பதை இவ்விரு காட்சிகளும் மிகச்சரியாகக் காட்டியுள்ளன.

பள்ளிக்கூடக் காட்சிகளில் கூட, அரவிந்தை பானுவாகப் பார்க்கும் மாணவர்களின் அனுபவம் எத்தகையது என்பது காட்டப்படவில்லை. போலவே, உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் கேலி, கிண்டல்கள் இதில் காட்டப்படவில்லை.
முக்கியமாக, முதன்மை பாத்திரம் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதாக ஓரிடத்தில் கூடச் சொல்லப்படவில்லை. ஆனால், இது போன்று நாம் பார்த்த பல கதைகள் அப்படிப்பட்ட அனுபவங்களையே தந்தன.

திரைக்கதையில் எந்தெந்த இடங்களைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு காட்சிகளை அமைத்திருப்பதால், இப்படம் திரையில் வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது. அதனாலே, சிறப்பானதாகவும் இம்முயற்சி அமைந்திருக்கிறது.

சிறிய பட்ஜெட்டில், சிறப்பான திட்டமிடல் உடன் கவனமாகக் கதை சொல்லலைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று காட்டியிருக்கிறது ‘நீலநிற சூரியன்’.

டீசர், ட்ரெய்லர் பார்த்துவிட்டு அல்லது இப்படம் பேசும் விஷயங்கள் எத்தகையவை என்று அறிந்துகொண்டு, அதன்பிறகு தியேட்டருக்கு வருபவர்களுக்கு ‘நீலநிற சூரியன்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்!

https://minnambalam.com/cinema/neela-nira-sooriyan-movie-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.