Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அருந்தவபாலன்

இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி அவரது அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகித்து ஆட்சி செய்ய முடியாது. அவரது ஆட்சிக்குத் தேவையான சட்டங்களை ஆக்குவதற்கு மட்டுமன்றி நிதியொதுக்கீடுகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகும். அதுவும் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வழமைக்கு மாறான மிகக் கடினமான பல தீர்மானங்களை அவர் எடுக்கவேண்டியுள்ளதால் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மட்டுமன்றி மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையும் அவருக்கு அவசியமாகும். குறைந்தது சாதாரண அறுதிப் பெரும்பான்மையான 113  ஆசனங்களை அவரது கட்சி பெற்றால் மட்டுமே அனுர தனது ஜனாதிபதி பதவியை நிலைப்படுத்த முடியும். அவ்வாறு பெறமுடியாத நிலை ஒன்று உருவாகுமானால் நாடு உறுதியற்ற ஒரு குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சி அல்லது அதனது வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அளவைக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி பெறக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையளவை எதிர்வுகூற முடியாது. ஜனாதிபதிப் பதவியை வென்ற கட்சிக்குச் சார்பான கருத்துநிலை ஒன்று இயல்பாகவே மக்களிடத்து உருவாகும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் சதவீத அளவைவிட கூடுதலான அளவு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்றாலும் அது நிச்சயமான ஒன்றெனக் கூறமுடியாது.

ஏனெனில் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகள் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றுக்கு அமைய  வெவ்வேறு தேர்தல்களில் வெவ்வேறு வகையான காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கை முழுவதும் ஒரு தொகுதியாக கருதப்படும் தேர்தல் முறையாகும். இதில் உள்ளூர் அல்லது பிரதேசம் மற்றும் தனிநபர் சார்ந்த சிறப்புக் காரணிகளின் செல்வாக்கு மிகக் குறைவாகும். தேசிய நோக்கில் நாடு தொடர்பான காரணிகளின் தாக்கமே அதிகளவில் இருக்கும்.

உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன மக்களின் தெரிவில் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியது போல இவ்வாண்டுத் தேர்தலில் கடந்த கால ஆட்சியாளரின் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள், பொருளாதாரப் பாதிப்புகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாலும் இலங்கையில் பல்லினத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வதாலும் அத்தேர்தலில் பிரதேச மற்றும் தனிநபர் சார்ந்த காரணிகள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.

இனம், மதம், மொழி போன்ற காரணிகளுடன் வேட்பாளர் தொடர்பான தனிநபர் செல்வாக்கு, பிரதேச கட்சிகளின் செல்வாக்கு போன்ற பல காரணிகள் மக்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அக்கட்சிக்கே  அதிகளவு ஆசனங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கப் போவதில்லை. பதிலாக வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கும். அதேபோல, இத்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 2.57 ஆகும். இதற்கமைய இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும். ஆனால் அவ்வாறு இருக்கப்போவதில்லை. அதைவிடக் கூடுதலான உறுப்பினர்களை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ளும்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகளில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகள் சுமார் 42% ஆகும். இதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 97 உறுப்பினர்கள் அக்கட்சிக்கு கிடைக்கவேண்டும். இந்தளவு கிடைக்குமா? அல்லது இதைவிடக் கூட கிடைக்குமா? அல்லது இதைவிடக் குறையுமா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாக இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதே வழமையாக உள்ளது. அந்த வகையில் அறுதிப் பெரும்பான்மையை (113) அல்லது மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையை (151) அக்கட்சிகள் பெற்றிருக்கின்றன.

அந்தவகையில் தேசிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 ஐ விட  கணிசமான அளவு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய காரணிகள் தேசிய மக்கள் சக்திக்குச் சார்பானவையாக உள்ளன. ஒன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் சார்பாக மக்களின் கருத்து நிலையில் ஏற்படும் மாற்றம். இதன்மூலம் அக்கட்சிக்கான வாக்குகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது, மாவட்ட ரீதியிலான சிறப்பு ஒதுக்கீட்டு (போனஸ்) உறுப்பினர்கள். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் கட்சிக்கு ஒரு உறுப்பினர் ஒதுக்கப்பட்ட பின்னரே ஏனையவை விகிதாசார அடிப்படையில் பங்கிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த அந்த 15 மாவட்டங்களிலும் அதேயளவு வாக்குகளை அக்கட்சி பெறுமிடத்து பங்கீட்டுக்கு மேலாக 15 உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இதேபோலவே தேசியப் பட்டியலிலிருந்தும் கூடிய உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வழிகளில் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அறுதிப் பெரும்பான்மையை (113) விட சற்றுக் கூடுதலான உறுப்பினர்களை இலகுவாக பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்விடயத்தில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கான வாய்ப்புக் குறைவாகும். ஏனெனில் அவரின் கட்சி ஏழு மாவட்டங்களில் மட்டும் முதன்நிலை பெற்றிருப்பதுடன், அவை வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மாவட்டங்களாக உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இக்கட்சி முதன்மை பெறுவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதற்கப்பால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இம்மாவட்டங்களில் மிகக் குறைவாகவே இருக்கும்.

இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் முதல் சுற்றிலேயே  50 % இலும் கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதிகள் தெரிவாகியிருந்தனர். ஆனால் இம்முறை 50% இலும் குறைவான வாக்குகளையே அனுர பெற்றிருந்தார். எனினும் அவரது நேர் எதிர்ப் போட்டியாளரை விட 13 இலட்சம் அதிகப்படியான வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இது 10% உயர்வானதாகும். 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்‌ஷ தனது நேரெதிர் போட்டியாளரைவிட 14 இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். அத் தேர்தலிலும் இருவருக்கிடையில் 10% வேறுபாடே இருந்தது. எனினும் அதன்பின் 2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோதாபயவின் பொதுஜன பெரமுன கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 145 உறுப்பினர்களைப் பெற்றபோது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி 54 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது.

இக்குறைவுக்கு  ஏலவே சுட்டிக்காட்டியது போல அத்தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களே அதிகளவில் சஜித்துக்கு வாக்களித்திருந்ததன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதிகளைச் சேர்ந்த பிரதேசக் கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்கள் அதிகம் கிடைக்காமல் போனமையாகும்.இதேபோன்ற ஒரு காட்சி  இம்முறையும் தோன்றினால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் உறுதியான பலம் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனினும் இந்த வாய்ப்பானது எதிரணிகளின் வியூகங்களால் மட்டுப்படுத்தப்படுவதற்கான நிலைமைகளும் உண்டு.

அவ்வியூகங்களில் முக்கியமானதொன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பாகும். உண்மையில் இவ்விரு கட்சிகளும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றதுதான். இவ்விரண்டும் சேர்ந்து மோதகமாகவோ அல்லது கொழுக்கட்டையாகவோ அல்லது இன்னொரு பெயரிலோ ஒன்றிணைவதற்கான சாத்தியம் அதிகமுண்டு.  ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே எலும்புக்கூடாகிவிட்டது. ரணிலின் ஆட்சியைத் தக்கவைத்தவர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள். அவர்களில் கணிசமானவர்களும் முக்கிய புள்ளிகளும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் பின்னால் நின்றவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்று கூறுவது கடினம். பலர் மீண்டும் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு திரும்பக்கூடும். எனினும் அக்கட்சியின் நிலை இறங்குமுகமாக இருப்பதால் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும்போது அவர்களில் கணிசமானவர்களும் அதில் இணையக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு கட்சி, கொள்கை என்பவற்றைவிட பதவி முக்கியம். இவ்வாறான ஒரு இணைவு ஏற்பட்டாலும்  அல்லது கணிசமானவர்கள் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் அது நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் அனுர பெற்றது 42%, சஜித் பெற்றது 32%, ரணில் பெற்றது 17%. சஜித்தும் ரணில் தரப்பும் இணையும்போது அது 49% ஆக மாறும். இது அனுரவைவிட 7% அதிமானது. அதனால் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பு தேசிய மக்கள் சக்தியைவிட அதிகஆசனங்களைக் கைப்பற்றும் என வாதிடமுடியும். ஆனால் புள்ளிவிபரங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மைநிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியுடனான ஏனைய கட்சிகளின் கூட்டு அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனான கூட்டு அப்படியே தொடர்வது நிச்சயம் தேசிய மக்கள்

சக்தியின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோலவே ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை, எதிர்காலத்தில் கூட்டுக்களில் மாற்றம் அல்லது புதிய கூட்டுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எதுவாயினும் தேசிய மக்கள் சக்தியுடன் பலமுள்ள வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் எதிர்த்தரப்புகளின் திரட்சி அக்கட்சிக்கு சவாலாக அமையலாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியுள்ள இன்னொரு சவால், வேட்பாளர்கள் தொடர்பானது. எதிர்த்தரப்புகளால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது அவர்களைப் போன்ற பிரபலமானவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் புதியவர்களாக அல்லது ஒப்பீட்டு ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலம் குறைந்தவர்களாகவே இருக்கப்போகிறார்கள். இவ்வேட்பாளர்கள் படித்தவர்களாக, நேர்மையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் வெல்வதற்கு அத்தகைமைகள் மட்டும் போதுமானவையல்ல.

ஏலவே சுட்டிக்காட்டியது போல இதில் தனிமனிதக் காரணிகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தக்கூடியன. ஒரு தொகுதியில் ஏலவே அரசியலில் பதவிகளை வகித்து கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒருவரை அவர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எதிர்த்து கூடிய வாக்குகளை புதிய ஒருவர் பெறுவது இலகுவான ஒன்றல்ல. மாற்றத்துக்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்ததுபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது.

இவற்றுக்கு மேலாக அனுரவின் வெற்றியை விரும்பாத பலதரப்புகள் இச்சந்தர்ப்பத்தில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றன என்பதையும் நிராகரிக்க முடியாது. உள்நாட்டைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அரசியல் அதிகாரத்தையும் அதனுடன் இணைந்து அளவுக்கதிகமான வசதி வாய்ப்புகளையும் அனுபவித்த மேற்றட்டு அரசியல்வாதிகள், இவர்களுடன் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்ட முதலாளிகளும் நிறுவனங்களும், எல்லை கடந்து அனுரவின் கையில் அதிகாரம் செல்வதை விரும்பியிருக்காத இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றன நாடாளுமன்றத்தினூடாக அனுரவுக்கு குடைச்சல் கொடுத்து தமக்கு வசதியாக மீண்டும் பழைய நிலைக்கு நாட்டை கொண்டுவர முயற்சிப்பர் என்பதையும் நிராகரிக்க முடியாது.

இது போன்ற பல தடைகளையும் திரைமறைவு முயற்சிகளையும் எதிர்கொண்டே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால் நாடாளுமன்றத் தேர்தலில் எழக்கூடிய புதிய சவால்களையும் அது வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியும். இலங்கை என்ற வண்டிலின் எருதுகளை அனுரவிடம் கொடுத்த மக்கள் அவற்றின் நாணயக் கயிற்றையும் அவரிடம் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என நம்பலாம். பாதியைத் தாண்டிய அனுர மீதியையும் தாண்டுவதற்கான வாய்ப்புகளே அதிகமுண்டு. இல்லையெனில் அதன்விளைவுகளை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிடும்.

https://thinakkural.lk/article/310088

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.