Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இலங்கை, ராஜபக்ஸ குடும்பம்

பட மூலாதாரம்,SLPP MEDIA

படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மகிந்த ராஜபக்ஸ கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் குடும்பமாக திகழ்ந்த ராஜபக்ஸ குடும்பம், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மண்ணில் போட்டியிடாமல் பின்வாங்கியுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தின் சுமார் 87 வருட கால அரசியல் வாழ்க்கையில், சொந்த மண்ணில் அவர்கள் தேர்தலை சந்திக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கையில் 3 தசாப்தங்கள் நீடித்த உள்நாட்டு போர், 2009-ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

அன்று முதல் இலங்கையின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களாக ராஜபக்ஸவின் குடும்பத்தினர் விளங்கிய போதிலும், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ மக்களால் தோற்கடிக்கப்பட்டார்.

 

எனினும், 2019-ஆம் ஆண்டு மீண்டும் ராஜபக்ஸ குடும்பம் ஆட்சி அமைத்த நிலையில், அப்போது தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், ராஜபக்ஸ குடும்பத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் முழுமையாக இழந்தனர்.

இதையடுத்து, 2022ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய போராட்டத்திற்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகினார். ராஜபக்ஸ குடும்பத்தின் பிடியில் இருந்து ஆட்சி, அதிகாரம் மீண்டும் நழுவியது.

அதன் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் போட்டியில் வெற்றியடையவில்லை.

இந்த நிலையில், தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அவர்களது சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவில்லை.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பம் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது காணப்படுகின்றது.

எனினும், ராஜபக்ஸ குடும்பத்திலுள்ள ஷஷிந்திர ராஜபக்ஸ மாத்திரம் இம்முறை தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

 
இலங்கை, ராஜபக்ஸ குடும்பம்

பட மூலாதாரம்,SLPP MEDIA

படக்குறிப்பு, 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வி அடைந்தார். அத்தோல்வி ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வீழ்ச்சியின் முதல்படியாக காணப்பட்டது.

ராஜபக்ஸ குடும்ப அரசியலின் ஆரம்பம்

இலங்கையில் நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இலங்கை அரசாங்க சபை (இலங்கை அரசு சபை) செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில், 1931-ஆம் ஆண்டு இந்த அரசாங்க சபை உருவாக்கப்பட்டது. இந்த சபையில் இருந்தே, ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.

61 உறுப்பினர்களை கொண்ட அரசாங்க சபையின் உறுப்பினராக, ராஜபக்ஸ குடும்பத்தின் முதலாவது அரசியல்வாதியாக கருதப்படும் டி.எம்.ராஜபக்ஸ அங்கம் வகித்தார். அன்று முதல் ராஜபக்ஸவின் குடும்பம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய அரசியலில் முக்கிய இடம் வகித்து வந்துள்ளது.

டொன் மெத்திவ்ஸ் ராஜபக்ஸ என அழைக்கப்பட்ட டி.எம்.ராஜபக்ஸவின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாக செயற்பட்ட டி.ஏ.ராஜபக்ஸ, டி.எம்.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர் தனது செயற்பாடுகளை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்திருந்தார்.

டி.ஏ.ராஜபக்ஸ அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அரசாங்க சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். 1947-ஆம் ஆண்டு நாடாளுமன்ற முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து. ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து 1951-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தன்னை இணைந்துக் கொண்டு, அரசியலை தொடர டி.ஏ.ராஜபக்ஸ தீர்மானித்தார்.

அவ்வாறு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் தொடர ஆரம்பித்தது. சமல் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோர் டி.ஏ.ராஜபக்ஸவின் மகன்கள்.

1967-ஆம் ஆண்டு டி.ஏ.ராஜபக்ஸவின் மறைவுக்கு பின்னர், அவரது புதல்வரான மஹிந்த ராஜபக்ஸ 1970-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நேரடி அரசியலில் நுழைந்தார்.

அன்று முதல் மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். அவரை தொடர்ந்து, சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அரசியலுக்குள் பிரவேசித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ, உள்நாட்டு போரிலும் வெற்றி கண்டார். அதன் பின்னர், மஹிந்த, கோட்டாபயவை உள்ளடக்கிய ராஜபக்ஸ குடும்பம் அசைக்க முடியாத ஒரு அரசியல் குடும்பம் என்ற நிலையை எட்டியது. அந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ தோல்வி அடைந்தார்.

அந்த தோல்வி ராஜபக்ஸ குடும்பத்தின் வீழ்ச்சியின் முதல்படியாக கருதப்பட்டது. பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து ராஜபக்ஸ குடும்பம் வெளியேறியது.

 
இலங்கை, ராஜபக்ஸ குடும்பம்

பட மூலாதாரம்,SLPP MEDIA

படக்குறிப்பு, சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியில் தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ராஜபக்ஸ குடும்பம், பின்னர் சுதந்திர கட்சியுடன் பல தசாப்தங்கள் தொடர்ந்தது. 2015 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவை முடிவுக்கு கொண்டு வந்தது ராஜபக்ஸ குடும்பம்.

2016-ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேறிய ராஜபக்ஸ குடும்பம், இதர உறுப்பினர்களின் அங்கத்துவத்துடன் இந்த கட்சியை ஆரம்பித்தது.

தாமரை மொட்டு சின்னத்தை தேர்வு செய்த இந்த கட்சி, ஓரிரு வருடங்களிலேயே பாரிய வளர்ச்சியை எட்டியது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் தடவையாக போட்டியிட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட்டு, மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். அத்துடன், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றது.

இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸ குடும்பமே காரணம் என தெரிவித்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடாத்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிய நிலையில், நாட்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டு, பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், ராஜபக்ஸ குடும்பத்தின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை மக்கள் முன்வைத்திருந்தனர்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு, இதுவரை ஆட்சி பீடத்தை கைப்பற்றாத மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை மக்கள் தேர்வு செய்தனர். இந்த நிலையிலேயே, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
இலங்கை, ராஜபக்ஸ குடும்பம்

பட மூலாதாரம்,SLPP MEDIA

படக்குறிப்பு, இலங்கையில் ஆட்சியை ஒரு குடும்பம் வசப்படுத்திய பின்னணியில், இலங்கை மாபெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத ராஜபக்ஸ குடும்பம்

நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ஸவின் புதல்வரான ஷஷிந்திர ராஜபக்ஸவை தவிர வேறு எந்தவொரு ராஜபக்ஸ குடும்ப அங்கத்தவர்களும் போட்டியிடவில்லை.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ஸ குடும்பத்திலிருந்து எந்தவொரு வேட்பாளரும் களமிறக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஸ, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் இம்முறை நாடாளுமன்ற பிரவேசத்தை தவிர்க்க முடிவெடுத்துள்ளதுடன், நாமல் ராஜபக்ஸவின் பெயர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

நாமல் ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடாத தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க முயற்சித்து வருகின்றார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பம் போட்டியிட்டால் பாரிய தோல்வியை சந்திக்கும் என்ற அச்சமே போட்டியிடாததற்கு காரணம் என்று இலங்கை அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபிசி தமிழ், நாமல் ராஜபக்ஸவிடம் வினவினோம்.

தமது குடும்பத்திலுள்ள மூத்த பரம்பரையினர் தற்போது அரசியலில் இருந்து சற்று ஓய்வு பெற எண்ணியுள்ளமையினாலேயே இம்முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்ததாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் நோக்கிலேயே தாம் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு கட்சி தலைமை தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுகின்றார்.

''எனது முந்தைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். ஒருவர் தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்கும் போது, ஏனையோர் பிரதேச அரசியலை முன்னெடுத்து வந்தார்கள். எமது பரம்பரையில் நான் மாத்திரமே அரசியலில் ஈடுபடுகின்றேன். இந்த கேள்வியை மறுபுறத்தில் கேட்க முடியும். அதாவது, எனது தந்தை, பெரியப்பா போன்றோர் இம்முறை தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஏன் வயதாகியும் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என கேள்வி எழுப்புவார்கள். எனினும், யதார்த்தமான ஒரு விடயம் காணப்படுகின்றது. மூத்தவர்கள் வயதிற்கு செல்கின்றார்கள். இளைய சமூகம் அரசியலில் முன்னோக்கி வருகைத் தர வேண்டும். என்னை எடுத்துக்கொண்டால், தேசிய அரசியலை முன்னோக்கி நகர்த்துவதற்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தமது இறுதித் தேர்தல் என்பதை சமல் ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் கடந்த தேர்தலிலேயே அறிவித்து விட்டார்கள்." என நாமல் ராஜபக்ஸ கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.