Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாய் கடியினால் உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 24 அக்டோபர் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லாததால் அது வராமல் தடுக்க நாய் கடித்த உடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே உயிரிழப்புகளை தவிர்க்கும் வழி என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி 57 வயது ஆண் ஒருவர், நாய் கடித்து இறந்துவிட்டார். ‘‘அவருக்கு தெரு நாய் கடித்ததா, வீட்டு நாய் கடித்ததா என்று தெரியாது; ஆனால் தாமதமாக வந்ததால், அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் அவரைக் காப்பாற்ற இயலாமல் போய்விட்டது’’ என்று பிபிசி தமிழிடம் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

 

அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, அக்டோபர் 9-ஆம் தேதி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், ரேபிஸ் நோய் ஏற்பட்டு இறந்திருக்கிறார்.

அந்தப் பெண்ணின் வீட்டில் மொத்தம் நான்கு நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு நாய் ஜூலை மாதத்தில் அவரைக் கடித்துள்ளது. அவர் அப்போது தனியார் கிளினிக்கிற்குச் சென்று டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, ரேபிஸ் நோய் ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் பூபதி.

இவற்றைத் தவிர்த்து, பீளமேடு கிரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், ரோட்டில் பைக்கில் செல்லும்போது, அவரை ‘ராட்வீலர்’ நாய் துரத்திக் கடித்துள்ளது. அருண்குமாரின் மனைவி துர்கா அளித்த புகாரை ஏற்று, தடை செய்யப்பட்ட ‘ராட்வீலர்’ நாயை வளர்த்து வந்த மனோஜ் மற்றும் அவரின் மனைவி இருவர் மீதும், பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவதற்கான முகாம்களை, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தீவிரப்படுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

அத்துடன், நாய்க்கடி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் பலரும் வலியுறுத்துகின்றனர்.

 
கோவையில் நாய் கடித்து ஒரே வாரத்தில் இருவர் உயிரிழப்பு
படக்குறிப்பு, கோப்புக்காட்சி

ஆய்வு சொல்வது என்ன?

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஜனவரி 2022 முதல் டிசம்பர் 2023 வரை தமிழ்நாட்டில் 8,06,239 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2022-ஆம் ஆண்டில், 3,65,318 என்றிருந்த நாய்க்கடிகளின் எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டில் 4,40,921 ஆக உயர்ந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் பதிவான நாய்க்கடிக்கு பாதிக்கப்பட்டவர்களில் 60.2 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர்.

2022 - 2023 ஆண்டுகளில் 41–50 வயதுக்கு உட்பட்டோர் 16.33 சதவீதமும், 31-40 வயதுக்கு உட்பட்டோர் 16.19 சதவீதமும், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15.42 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

 

2023-ஆம் ஆண்டில், மாநிலத்தில் ரேபிஸ் பாதிப்பால் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் நாய்க்கடி மற்றும் வெறிநாய்க்கடி மரணம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதை நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார் தமிழக அரசின் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம்.

‘‘நாய் கடித்தால் அச்சப்பட தேவையில்லை. அதே நேரத்தில் அஜாக்கிரதையாகவும் இருந்துவிடக்கூடாது. சரவணம்பட்டியில் வீட்டு நாய்தானே கடித்தது என்று அந்தப் பெண் பொருட்படுத்தவில்லை, அதுதான் அவரின் மரணத்துக்குக் காரணம். நாய்க்கடியைப் பொறுத்தவரை, நாமாகவே எதையும் முடிவு செய்யக்கூடாது.’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தனியார் கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி.

"நாய்க்குட்டி பிறந்ததும் முதலில் ஒரு தடுப்பூசியும், அடுத்து 21 நாட்களில் மற்றொரு தடுப்பூசியும் போட வேண்டும். தடுப்பூசியின் வீரியம் குறைந்து கொண்டிருக்கும் என்பதால், ஆண்டுதோறும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.

நாயால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோயைப் பரப்ப முடியும். கடிக்கும் இடத்தைப் பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். உதாரணமாக முகத்தில் கடித்தால், உடனே மூளைக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே, கடித்த 24 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போடுவது அவசியம்’’ என்றார் மருத்துவர் சக்கரவர்த்தி.

நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய கால்நடைத்துறை இணை இயக்குநர் திருமுருகன், ‘‘நாய் கடித்துவிட்டால், உடனே அந்த இடத்தை ஓடும் தண்ணீரில் நன்கு சோப்புப் போட்டு 10-15 நிமிடங்கள் வரை கழுவுவதுதான் முதலில் செய்ய வேண்டிய காரியம். வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், நாய் கடித்த நபருக்கும் ARV எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற நாட்களில் சரியாகப் செலுத்திக்கொள்வது அவசியம்’’ என்றார்.

நாய் கடியினால் உயிரிழப்பு

பட மூலாதாரம்,DR.CHAKKARAVARTHY

படக்குறிப்பு, தனியார் கால்நடை மருத்துவர் சக்கரவர்த்தி.  

தெருநாய்களை வளர்ப்போர் கவனத்திற்கு!

‘‘தெருநாய்க்குட்டிகளை சிலர் கொண்டு போய் வளர்ப்பார்கள். ஆனால் அதற்கு எந்தத் தடுப்பூசியும் போட மாட்டார்கள். அதன் தாய்க்கு ரேபிஸ் இருந்திருந்தால், அதன் பாலைக்குடித்த அந்தக் குட்டிக்கும் அதன் தாக்கம் இருக்கும். நாய் வளர்ப்பில் பராமரிப்புதான் முக்கியம். அதற்கு மாதந்தோறும் குடற்புழு நீக்கம் (deworming) செய்ய வேண்டும்; தடுப்பூசிகள் சரியாகப் போட வேண்டும். முக்கியமாக வீட்டு நாய்களை தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.’’ என்று எச்சரிக்கிறார் பொள்ளாச்சி கால்நடை உதவி மருத்துவர் அசோகன்.

தொடர்ந்து பேசிய அவர், ‘‘வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், அது கடித்தாலும், பிராண்டினாலும் கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள், வன விலங்குகள் கடித்தாலும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். நாயின் உமிழ்நீரில்தான் ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு. நாய்களுக்கு முத்தம் கொடுப்பது, வாயில் நக்க விடுவது கண்டிப்பாகக் கூடாது.’’ என்றார்.

 

வெயில் காலத்தில் அதிகம் தாக்கும் ரேபிஸ்

நாய் கடியினால் உயிரிழப்பு

பட மூலாதாரம்,மருத்துவர் அசோகன்

படக்குறிப்பு, பொள்ளாச்சி கால்நடை உதவி மருத்துவர் அசோகன்

தெருநாய்கள் வெயில் காலத்தில்தான் அதிகளவில் ரேபிஸ் தாக்கத்துக்கு உள்ளாவதாகக் கூறும் கால்நடை மருத்துவர் அசோகன், ‘‘கோடைக் காலத்தில் தெருநாய்கள் மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் . நிற்க இடமிருக்காது. உணவு, தண்ணீர் கிடைக்காது. அப்போதுதான் ரேபிஸ் வைரஸ் பெருக்கம் அதிகமாக இருக்கும்.

ரேபிஸ் தாக்கிய நாய், அதிகபட்சமாக 10 நாட்கள் உயிரோடு இருக்கவே வாய்ப்புண்டு. அதனால் சாப்பிட முடியாது, தண்ணீரைக் கண்டால் பயம் வரும். நாக்கு சுழன்று விடும், குரைக்க முடியாது, ஓடிக் கொண்டேயிருக்கும். அந்த நேரத்தில் நாயுடன் தொடர்பில் வருபவர்களை கடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்’’ என்றார்.

நாய் கடிக்கும் இடத்தையும், அதன் அளவையும் பொறுத்து, ரேபிஸ் தாக்கம் ஏற்படும் என்று கூறும் கோவை கேஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், ''நாய் கடித்த முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21 ஆம் நாள் அல்லது 28 ஆம் நாளில் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். காயம் பெரிதாக இருந்தால், கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் HUMAN RABIES IMMUNOGLOBULIN (HRIG) தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.’’ என்கிறார்.

நாய் கடியினால் உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரேபிஸ் நோய் பாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டியது கட்டாயம் என்று கூறுகிறார் டாக்டர் பக்தவத்சலம்

ரேபிஸ் நோய் பாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகக் கூறும் டாக்டர் பக்தவத்சலம், ‘‘நோய் பரவும் வாய்ப்பின் காலம் நாய் கடித்த நாளிலிருந்து 10 நாள் முதல் மூன்று மாதம் வரை என மாறுபடும். அதன் பின் அதற்கான அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வரும், சோர்வு ஏற்படும், தண்ணீரைக் கண்டால் பயம் வரும்.

சில நாட்களில், பெருமூளைச் செயலிழப்பு, பலவீனம், பக்கவாதம், சுவாசிப்பது மற்றும் விழுங்குவதில் சிரமம், அசாதாரண நடத்தை என நிலைமை மோசமாகிவிடும். நோய் ஏற்பட்டால், உலகிலுள்ள நோய்களில் 100 சதவீதம் காப்பாற்ற முடியாத நோய் ரேபிஸ் என்பதால், விழிப்புணர்வுடன் இருப்பது மட்டும்தான் உயிரைக் காப்பதற்கான ஒரே வழி’’ என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் தவிர எந்தெந்த விலங்குகள் கடித்தால் ரேபிஸ் வரும்? கடிபட்ட உடனே செய்ய வேண்டியது என்ன?

நாய், பூனை, எலி கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன? ரேபிஸ் பாதிப்பை தடுப்பது எப்படி?

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க. சுபகுணம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரையில் கடந்த வாரம், பூனைக் கடிக்கு ஆளான 25 வயது இளைஞர் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து உயிரிழந்தார். இதுபோல நாய் மட்டுமின்றி வேறு எந்தெந்த விலங்குகள் கடிப்பதால் ரேபிஸ் ஏற்படலாம்? ஒரு விலங்கு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ரேபிஸ் நோய் என்றால் என்ன? ரேபிஸ் நோய், ஒரு வகை வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இது நாய் கடிப்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை. பூனை, குரங்கு போன்ற பிற பாலூட்டிகள் கடித்தாலும் ஏற்படலாம்.

ரேபிஸ் நோய் மனிதர்களை எப்படி பாதிக்கிறது? “இந்த வைரஸ் எச்சில் மூலமாகப் பரவுகிறது. நாய், பூனை அல்லது குரங்கு கடித்ததும் அந்தக் காயம் வாயிலாக உடலின் நரம்பு மண்டலத்தில் கலக்கும் வைரஸ் கிருமி நேராக மூளையைச் சென்று தாக்குகிறது. சில நேரங்களில் ஏற்கெனவே உடலில் உள்ள காயங்களை பிற விலங்குகள் நக்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது” என்று இதுகுறித்து விளக்கினார் பொது சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி

ரேபிஸ் அறிகுறிகள் என்ன? எந்த விலங்கில் இருந்து ரேபிஸ் நோய் பரவினாலும் அதற்கான அறிகுறிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். காய்ச்சல், தலைவலியில் தொடங்கி தண்ணீரைக் கண்டாலே பயப்படுவது வரை அறிகுறிகள் தென்படும். இந்த வைரஸ் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடியது. நிபுணர்களின் கூற்றுப்படி, தொண்டைப் பகுதியிலுள்ள நரம்புகள் பாதிக்கப்படுவதால் உணவு, தண்ணீரை விழுங்கவே முடியாது. அதன் காரணமாக, உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும்.

ரேபிஸ் நோய், 95% வெறிநாய் கடித்து ஏற்படுவதால் அதை வெறிநாய்க்கடி நோய் எனவும் அழைக்கின்றனர். ஆனால், இந்த நோய் பிற வகைப் பாலூட்டிகள் மூலமாகவும் மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

எந்தெந்த விலங்குகள் மூலம் ரேபிஸ் நோய் பரவுகிறது? பாலூட்டிகள் மூலமாக ரேபிஸ் நோய் பரவுவதாகக் கூறுகிறார் கால்நடை மருத்துவர் நிதின் குமார். நாய்கள், பூனைகள், வௌவால்கள், குரங்குகள், கால்நடைகள், குதிரைகள்

குகைகளில் வாழும் வௌவால்களிடம் இருந்து ரேபிஸ் பரவ வாய்ப்புள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது சாகசம் என்ற பெயரில் காட்டுப்பகுதியில் உள்ள குகைகளுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்விடங்களைச் சுற்றி வாழும் வௌவால்கள் மூலம் ரேபிஸ் பரவியதாக இதுவரை எந்தப் பதிவுகளும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“ரேபிஸ் நோய் அனைத்து விதமான பாலூட்டிகள் மூலமாகவும் பரவும். குறிப்பாக, பூனை மற்றும் நாய் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், பூனை, நாய், ஓநாய், நரி, கழுதைப் புலி ஆகியவை மூலமாகப் பரவும். அதோடு, கால்நடைகளான ஆடு, மாடு, எருமை ரேபிஸால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவற்றின் எச்சில் நமது உடலிலுள்ள காயங்களில் படும்போது, அதன் வழியாக இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கக்கூடும்” என்று விளக்கினார் கால்நடை மருத்துவர் நிதின் குமார்.

விலங்கு கடித்தவுடன் செய்யக் கூடியவை: நாய், பூனை, குரங்கு போன்ற பாலூட்டிகள் கடித்த உடனே காயத்தைக் குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினியை பயன்படுத்தி தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். கடித்த இடத்தில் தையல் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.  விலங்கு கடித்தவுடன் செய்யக் கூடாதவை: காயத்தின் மீது சுண்ணாம்பு, எருக்கம்பால், எண்ணெய், காபித் தூள், மாட்டு சாணம், மண் மற்றும் இலைகளை வைப்பதோ, தடவுவதோ கூடாது.

ரேபிஸ் தடுப்பூசி குறித்துப் பேசியபோது, “சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஊசிகள் தொப்புளில் போடப்படுவதில்லை, கைகளிலேயே போட்டுக் கொள்ளலாம். ரத்தம் வெளியேறும் அளவுக்கு காயம் கடுமையாக இருந்தாலோ அல்லது மார்பு மற்றும் அதற்கு மேலே கடிபட்டாலோ, மருத்துவ ஆலோசனையின் பேரில் இம்யூனோகுளோப்ளின் ஊசியும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்கும்,” என்றார் மருத்துவர் குழந்தைசாமி.

ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை: நாயோ அல்லது வேறு ஏதேனும் விலங்கோ கடித்துவிட்டால், சிறிதும் தாமதிக்காமல் உடனே அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது 24 மணிநேரமும் கிடைக்கும். முதல் தவணை கடிபட்ட சிறிது நேரத்தில் போடப்பட வேண்டும், இரண்டாவது தவணை 3 நாட்களிலும், மூன்றாவது தவணை 7 நாட்களிலும், நான்காவது தவணை 28 நாட்களிலும் போடப்பட வேண்டும்.

வளர்ப்புப் பிராணிகளுக்கு எவ்வாறு தடுப்பூசி போட வேண்டும்? வீட்டில் நாய், பூனை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். தெருநாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் கவனித்துக் கொள்ள வேண்டும். வளர்ப்புப் பிராணி சோர்வாகவோ, சாப்பிடாமலோ இருந்தால், அனைவரையும் கடிக்க முற்பட்டால், உடனடியாக கால்நடை மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிக்கான தடுப்பூசி தவணைகளைப் பொறுத்தவரை, முதல் தவணையை குட்டி பிறந்து 3 மாதத்திலும், இரண்டாவது தவணை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும். பிறகு ஆண்டுக்கு ஒருமுறை பூஸ்டர் தடுப்பூசி அவசியம் போட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm24dkvrpvgo

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய்கடிக்கு சிகிச்சை பெற்றும் 40 நாட்களுக்கு பிறகு பலி - முறையாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது எப்படி?

ரேபிஸ் தொற்று ஏற்பட்டு முகமது நஸ்ருதீன் என்பவர் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்த பிறகு சிகிச்சை பெற்றும், 40 நாட்களுக்குப் பிறகு நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? வெறிநாய்க் கடிக்கு தடுப்பூசிகளை எப்படி முறையாகச் செலுத்துவது?

ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏ. முகமது நஸ்ருதீன். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தேதி மீர் சாகிப் பேட்டை மார்க்கெட் அருகே அவரது வலது காலில் வெறி நாய் ஒன்று கடித்திருக்கிறது.

இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதியானதை அடுத்து தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையிலும் அவர் செப்டம்பர் 14-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் தடுப்பூசிகளைப் செலுத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவர்கள் பரிந்துரைத்த இடைவெளியில் தடுப்பூசிகளைப் செலுத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

"அவருக்கு நாய் கடிபட்ட உடன் அன்று மாலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவரது உடலில் இரண்டு பல் பதிந்திருந்தது. மருத்துவமனையில் காயத்தைச் சுற்றி ஊசி போட்டார்கள். முதல் ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. அதற்குப் பிறகு அவர்கள் சொன்ன இடைவெளியில் தடுப்பூசிகளைப் போட்டுவந்தோம். நன்றாகக் குணமடைந்துதான் வந்தார்." என்று அவருடைய மருமகள் ஹர்ஷத் நிஷா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் புதன்கிழமையிலிருந்து சிக்கல்கள் ஆரம்பித்ததாகவும் அவர் விவரித்தார்.

"முதலில் முதுகில் வலி ஏற்பட்டது. அடுத்த நாள் இடுப்பு போன்ற பகுதிகளில் வலி அதிகரித்தது. அரிப்பும் ஏற்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு காய்ச்சல் வந்தது." எனக் கூறினார்.

பின் வெள்ளிக்கிழமையன்று ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது என்கிறார் அவர்.

"அவரால் தண்ணீர் குடிக்க முடியவில்லை. அன்று இரவு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சில மணி நேரங்களில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துவிட்டார்" என ஹர்ஷத் நிஷா விவரித்தார்.

முகமது நஸ்ருதீனைப் பொறுத்தவரை அவர், நாய் கடித்த பிறகு செலுத்திக்கொண்டிருக்க வேண்டிய எல்லா தடுப்பு ஊசிகளையும் முறையாகப் போட்டுக்கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதும், அவருக்கு மரணம் நிகழ்ந்திருக்கிறது. இதில் எங்கே தவறு நடந்தது?

இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து பேசுகையில், "இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தவருகிறோம். வெறிநாய்க் கடியைப் பொறுத்தவரை, அன்றைய தினமே முதல் ஊசியைப் போட வேண்டும். பிறகு நான்கு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதனைச் சரியாகச் செய்ததாகச் சொல்கிறார்கள்." என சோமசுந்தரம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு ஊசியும் எப்போது போடப்பட்டது என்பது குறித்து பரிசோதிக்க வேண்டும். ஏதாவது ஒரு நாள் தவறியிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அவருக்கு வேறு ஏதாவது உடல் நலப் பிரச்னைகள் இருந்தனவா என்பதையும் அறிய வேண்டும்." என்றார்.

"ஒருவேளை தடுப்பூசிகள் சரியாகப் போடப்பட்டிருந்தால் இப்படி நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருந்தாலும் விசாரணையின் முடிவில்தான் விவரங்கள் தெரியவரும்" என பிபிசியிடம் கூறினார்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் இந்தாண்டு இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2025-ஆம் ஆண்டில் ரேபிஸ் நோயால் ஏற்பட்டிருக்கும் 22வது மரணம் இது.

ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசிகளைப் போட்ட பிறகும் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த மரணம், இந்த தடுப்பூசிகளை எப்படிப் போட்டுக்கொள்ள வேண்டும், எந்தக் கால இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

நாய்க் கடித்த பின் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?

ஒருவரை நாய் கடித்த பிறகு, சரியான முறையில் சிகிச்சை மேற்கொண்டால் ரேபிஸ் நோய் தாக்குதலில் இருந்து முழுமையாகத் தப்பலாம். அதில் தவறுகள் நிகழும்பட்சத்தில் நோய் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படுகிறது என்கிறார் ரேபிஸ் தடுப்பு மருந்து உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் இயக்குநரான பி. சேகர்.

நாய்க் கடிகளின் வகை, சிகிச்சை முறை என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.

இது குறித்து பேசிய அவர், "பொதுவாக நாய்களின் தாக்குதலை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும். முதல் வகை வெறும் நக்குதல். நாய்களின் எச்சிலில்தான் ரேபிஸ் வைரஸ் இருக்கும் என்றாலும், உடலில் திறந்தவெளி காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், நாய்கள் நக்குவதற்கு சிகிச்சை தேவையில்லை." என்றார்.

இரண்டாவது ரத்தம் இல்லாத கீறல். இதற்கு கட்டாயம் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் எனக் கூறும் அவர், "மூன்றாவது, கடுமையான காயங்கள். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதோடு, இம்யூனோகுளோபுலின்களையும் செலுத்த வேண்டும்" என்கிறார்.

நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தல்.

மேலும் நாய் கடித்ததும் செய்யவேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கினார் பி. சேகர்.

நாய் கடித்த உடன், காயத்தை ஓடும் நீரில் கழுவிவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார் அவர்

மேலும், "ரேபிஸ் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தோலுக்கு உள்ளே போடுவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 28வது நாள் என நான்கு ஊசிகளைச் செலுத்த வேண்டும். தசைக்குள் செலுத்துவதாக இருந்தால் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாள் என ஐந்து ஊசிகளைச் செலுத்த வேண்டும்." என்றார்.

"மூன்றாவது வகை காயம் அதாவது மிகப் பெரிய காயமாக இருந்தால், கடிபட்ட இடத்தில் இம்யூனோகுளோபுலின்களைச் செலுத்த வேண்டும். இதை முதல் நாளே செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு தொடர்ச்சியாக ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகச் செய்தால்தான் வெறிநாய்க் கடியால் ஏற்படும் ரேபிஸைத் தடுக்க முடியும்" என்கிறார் பி. சேகர்.

ரேபிஸ் வைரஸைப் பொறுத்தவரை, மனித உடலில் ஒரு மணி நேரத்தில் முன்று மில்லி மீட்டர் தூரத்திற்கு நகரும் தன்மையுடையது. அந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைச் சென்றடைவதற்குள் இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சேகர். தெரிவித்தார்.

மேலும், எல்லா நாய் கடி சம்பவங்களையும் வெறி நாய் கடி சம்பவமாகவே அணுக வேண்டும் என்கிறார்.

தமிழ்நாட்டின் பொது சுகாதாரத் துறை அளிக்கும் தகவல்களின்படி, மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpvlkyzx7yno

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செல்லம்னா கடிக்காதா என்ன?

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.jpg

வீட்டுல நாய் வளர்க்கிறோம். கொஞ்சறோம். அருமையா கவனிக்கிறோம்.

இருந்தாலும், சில சமயங்களில், அந்த செல்லம் நம்மைக் கடித்து விட்டால் என்ன ஆகும்?

மருத்துவ ஏற்பாடுகள் என்னென்ன? வேறு என்ன செய்ய வேண்டும்?

உளவு ரீதியாக செல்லமும், நாமும் எப்படி புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும்?

இவற்றைத் தெரிந்துகொள்ள, இந்த நிகழ்வை கொஞ்சம் விரிவாகப் படிக்கவும். நிறைய புத்திக் கொள்முதல் ஏற்படும்.

சமீபத்தில்(ஜூன் 5) என்னுடைய மனைவியை எங்கள் செல்லம் (இறந்து போன நண்பருடைய வளர்ப்பு நாய்; அவர் குடும்பத்தினர் வேண்டிக் கொண்டதனால், நாங்கள் கொஞ்ச காலம் பராமரிக்க வேண்டி, எங்களிடம் வந்து ஒரு மாதமே ஆகி இருந்தது) பலமாகக் கடித்து விட்டது. வலது உள்ளங்கையில் ஆழமான ரத்தக் காயம். எதிர்பாராத இந்தக் கடியினால் மனைவி உளவு ரீதியாக மிகவும் பாதிக்கப் பட்டு விட்டார். அந்தச் செல்லமும் கொஞ்சம் குற்ற உணர்வுடன் தென்பட்டது.

அத்த விடுங்க! என்ன செய்தோம்னு கவனியுங்க!

கடித்தது மதியம் 1 மணி இருக்கும். உடனே, காயத்தைக் கழுவி இரத்தப் பெருக்கைக் குறைக்க பஞ்சு வைத்து நன்றாக சுத்தம் செய்து அதன் மேல் “betadine” களிம்பு தடவி முதலுதவி ஆயிற்று! சிறிய ஒரு கட்டும் கட்டி விட்டோம். எங்கள் டாக்டர் வரும்வரையில்.

டாக்டர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார் - வீட்டுப் பிராணியானாலும், தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று. ‘ரிஸ்க் எடுக்கவேண்டாம் சார்’. அவனுக்கு டிசம்பரில் தடுப்பூசி போட்டிருந்தாலும் மீண்டும் இன்று போட்டு விடுவோம்.

அனுபவ அட்வைஸ்:

அரசு மருத்துவ மனையா? பிரைவேட்டா?

நாய்க்கடிக்கு தடுப்பூசி போட சிறந்த இடம் அரசு மருத்துவ மனை அல்லது சுகாதார மையம்தான்!

மொத்தம் 4டோஸ் ஊசிகளும் முறையே,

(கடித்த நாளில் போட்ட ஊசியைச் சேர்க்காமல்)

1. முதல் டோஸ் – 3ஆம் நாள்

2. இரண்டாம் டோஸ் – 7 ஆம் நாள்

3. மூன்றாம் டோஸ் – 14 ஆம் நாள்;

4. நான்காம் டோஸ் 28ஆம் நாள்

என்பதாக அட்டவணை கொடுக்கப் படும்.

என்ன காரணம்:

1. உடனடி மருத்துவ உதவி

2. நாய்க்கடி மருத்துவத்தில் சிறந்த அனுபவம்- அனைத்து லெவல்களில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் எல்லா விஷயங்களும் மனப்பாடம்!

3. பிரைவேட்டில் இது புதிய சவாலாகக் கருதப் படுகிறது- ஆராய்ச்சி தொடங்குகிறது- நேரம் வீணாகிறது- அதிகச் செலவு செய்தும் கூட!

4. மருத்துவம் இலவசம்; மருந்து மாத்திரையும் இலவசம்

5. ஊசி செலுத்தும் அட்டவணை உடனே கொடுக்கப்பட்டு விடும்.

6. மிகவும் கண்ணியமாக, கனிவாக அவர்கள் இதைச் செய்கிறார்கள்.

7. லஞ்சம் துளிக்கூட இல்லை!

8. OP ticket எடுக்கவேண்டியது ஒன்றுதான் நம் வேலை!

கவனத்திற்கு சில பாயின்ட்டுகள்:

  • கடித்த தினம் ARV (நாய்க்கடி தடுப்பூசி) மற்றும் Anti-Tetanus(ஜன்னி வராமல் தடுக்க) ஊசிகள் உண்டு.

  • எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்து ஊசிகள் செலுத்தப் படும்.

  • கீறலாக இருந்தால் ஊசிகள் குறைவு

  • ஆழமில்லாக் காயம் என்றால் 4 டோஸ்

  • ஆழமான காயமானால் IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) என்ற ஊசி கட்டாயம்.

  • நாய்க் கடிக்கு பேண்டேஜ் கிடையாது. ஏனெனில் காயம் விரைவில் ஆற வேண்டுமே!

IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) குறித்து சிறு குறிப்பு:

1. ஆழமாகக் கடிபட்டவர் 24 மணி நேரத்திற்குள் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. இது காயத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியில் ஒரே நாளில், ஒரே சமயத்தில் 5 அல்லது 6 ஊசிகளாகச் செலுத்தப் படும். வலி பிராணனை வாங்கிவிடும்.

3. காயமடைந்தவரின் எடை, உயரம் இவற்றைப் பொறுத்து, ஊசி மருந்தின் அளவு தீர்மானிக்கப் படும்.

4. இந்த ஊசி மிகவும் விலையுயர்ந்தது.அரசு மருத்துவ மனையில் மட்டும் உடனே கிடைக்கும்.

5. காயம் உடனடியாக ஆற வழிசெய்யும் இந்த ஊசி, தடுப்பூசியின் பலனுக்கு முன்னரே வேலை செய்ய ஆரம்பிக்கும்.

என்ன சொல்ல வரீங்க? :

என் மனைவி குணமடைந்து விட்டார். எங்கள் guest செல்லமும் இன்னொரு ஊசியைப் போட்டுக் கொண்டு பழைய நிலைமைக்கு திரும்புகிறது.

முக்கியமான விஷயம்: அந்த செல்லம் காதுபட, இதுதான் அது! என்று கூறக் கூடாது. மேலும், பயத்தில் (உள்ளூர இருந்தாலும்) செல்லத்தை நிராகரிக்கக் கூடாது. வழக்கம்போல பராமரித்து வர வேண்டும் என்பது கட்டாயம். திருப்பி அனுப்புவதோ, வேறு ஒருவருக்கு இலவச இணைப்பாகக் கொடுப்பதோ கொடுமையிலும் கொடுமை- செல்லத்திற்குத்தான்!

பின் குறிப்பு: குழந்தைப் பருவம் முதல் என் மனைவியின் இல்லத்தில் நாய் வளர்ப்பு உண்டு. எங்கள் இல்லத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, செல்லங்கள் உண்டு. தற்போது guest செல்லத்தையும் சேர்த்து எங்கள் வீட்டில் 20 ஆக இருந்து வந்த செல்லங்களில் இப்போது(பன்னிரண்டு ஆண்டுகளில்) 8 ஆகக் குறைந்து தற்போது ஆனந்தமாக வலம் வருகின்றன.

மனைவிக்கு இதுதான் முதற் கடி! எங்கள் செல்லங்கள் இதுவரை யாரையும் கடித்ததாக சரித்திரம் கிடையாது! சிறப்பு என்னவென்றால், கடித்த அயல்-செல்லத்தின் ஒரிஜினல் உடைமையாளர்களில் ஒரு ஜீவன் கூட இன்றுவரை, கடிபட்ட என் மனைவியை வந்து பார்க்கவோ, கடித்த செல்லத்தின் நிலை குறித்து விசாரிக்கவோ, நேரிலோ, போனிலோ அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா!

அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும், அவர்களுடைய மாஜி-செல்லத்திற்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது போலத்தான் தோன்றுகிறது!

வாழ்க்கையில் நாம் படிக்கும் பாடங்கள் தொடர்கதைதான்: வயதோ, இனமோ பாலினமோ இதற்குத் தடையில்லை !

பாடம் 1: என்னதான் கடித்தாலும், கடிபட்டாலும், வாழ்வில், செல்லம் செல்லம்தான்!

பாடம் 2: எந்த சந்தர்ப்பத்தில் யாருக்கு எந்த உதவியாக இருந்தாலும், கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! பழமொழியை நினைவில் கொள்ளவும்!

செய்நன்றி கொல்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்!- இதுதான் நிதர்சனமான உண்மை!

https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.