Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சுமைதாங்கி"
 
பண்டைய தமிழர்கள் தம் அன்றாட தேவைக்காகவும் மற்றும் சில பண்பாட்டு தேவைக்காகவும், குறிப்பாக சில வெவ்வேறு கற்களை பாவித்தது தொல்லியலாளர்கள் மூலம் நாம் இன்று அறிகிறோம். அவை அரைவைக் கல் [அம்மி, ஆட்டுக்கல், திரிகை], கல் உரல் [மா இடிக்கும் உரல், எண்ணெய் பிழியும் செக்கு கல்], ஆவுரஞ்சிக் கல் மற்றும் சுமை தாங்கிக் கல், நடுக்கல் ஆகும். நான் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் இளம் பொறியியலாளராக இன்று கடமையாற்றிக்கொண்டு இருந்தாலும், எனக்கு வியப்பு தந்தவை, அந்த கற்களில் - ஆவுரஞ்சிக் கல் மற்றும் சுமை தாங்கிக் கல் ஆகும்.
 
ஒரு முறை நான் விடுதலையில் எனது வீட்டிற்கு அத்தியடி, யாழ்ப்பாணம் சென்றபொழுது, அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் இருக்கும் மதவில் இருந்து நண்பர்களுடன் பல விடயங்களைப் பற்றி கதைத்து பொழுது போக்கும் பொழுது, தற்செயலாக ஒரு நண்பன், வல்வெட்டித்துறையில் ஊரிக்காட்டில் காங்கேசன் துறை வீதியில் ஒரு சுமைதாங்கி உள்ளது என்றும், அது 1921- ஆம் ஆண்டில் மரணம் அடைந்த கம்பர் மலை அய்யாமுத்து பெண் பாறுபதியின் உபயம் என்றும் கூறினான்.
 
கருவுற்ற ஒரு பெண்; குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இறந்து விட்டால் அவளுக்காகப் பொது இடங்களில், சாலை ஒதுக்குப் புறங்களில் சுமைதாங்கிக் கற்கள் நடுவது வழமை என்றும், அப்படி நட்டு வைத்தால் அந்தப் பெண்ணின் ஆசைகள் நிறைவேறும்; அவளின் ஆசைச் சுமைகள் குறையும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாகவும் வழக்கமாகவும் அன்று இருந்தன என்று நான் அறிந்து இருந்தாலும், இதுவரை நான் அப்படியான சுமைதாங்கி கல்லை பார்க்கவில்லை. எனவே அங்கு போகவேண்டும் என்று முடிவு எடுத்தேன்.
 
சனிக்கிழமை காலை எனது மோட்டார் சைக்கிளில், புகைப்படக்கருவி, மற்றும் குறிப்புகள் எழுத குறிப்பு புத்தகம் மற்றும் பேனாவுடன் என் பயணம் ஆரம்பித்தது. குறுகலான மற்றும் வளைந்த சாலைகளுக்கூடாக என் பயணம் அமைந்தது. அந்த சுமைதாங்கி பாழடைந்து பாசிபிடித்து இருந்தாலும் அதில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதில் நேற்று, வெள்ளிக்கிழமை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிறு குடும்பமோ வழிபட்டு சென்ற அடையாளங்கள் இன்னும் இருந்தன. அது எனக்கு ஒரு தெம்பு தந்தது. எனவே அருகில் காணப்பட்ட தெருவோர தேநீர் கடையில் அந்த சுமைதாங்கி பற்றியும், நேற்று ஏதாவது விசேடம் [சிறப்பாக நடைபெறும் விருந்துச் சடங்கு] அங்கு நடந்ததா என்றும், தேநீர் குடித்துக்கொண்டு கேட்டேன். அய்யாமுத்து பெண் பாறுபதியின் தங்கையின் மூன்றாவது நாலாவது தலைமுறை இன்னும் கம்பர் மலை, வல்வெட்டித்துறையில் வாழ்வதாகவும், பாறுபதியின் நினைவு தினத்தை அங்கு சிறு பொங்கலுடன் வழிபட்டார்கள் என்றும் அறிந்தேன்.
 
எனவே அவர்களை சந்திக்கவேண்டும் என்று எனக்கு தோன்றியது. அப்பொழுது அந்த கடைக்கு முன்னால், ஒரு இருபத்தி ஒன்று அல்லது இரண்டு மதிக்கத்தக்க ஒரு அழகிய இளம்பெண் போவதை கண்ட தேநீர்கடை முதலாளி, 'பிள்ளை கொஞ்சம் நில்லு, இந்த ஐயா உங்க பெற்றோரை சந்திக்க வேண்டுமாம்' என்று அவளை அழைத்து என் விருப்பத்தையும் காரணத்தையும் சுருக்கமாக கூறினார். என்னைக் கூடிக்கொண்டு வீடு போக கொஞ்சம் தயங்கினாலும், நான் என் நோக்கத்தை கொஞ்சம் விரிவாக கூறியதும், அவள் சம்மதித்து என்னுடன் வந்தாள். நான் என் மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு அவளுடன் நடந்தே போனேன். கொஞ்சம் கொஞ்சமாக தன் தயக்கத்தை துறந்து கதைக்கத் தொடங்கினாள். தான் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் ஆண்டில் படிப்பதாகவும், தான் பாறுபதியின் நாலாம் தலைமுறை என்றும் கூறினாள். என் கவனம் அவள் அழகில் கொஞ்சம் நிலைத்து நின்றாலும், அதை நான் காட்டவில்லை.
 
சுருக்கங்கள் அற்ற பொலிவு நிறைந்த நியாயமான நிறம் கொண்ட தோல், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள், பெண்மையை சொல்லாமல் சொல்லும் அளவான மார்பு, அளவோடு அளந்து அளந்து பேசும் அவளின் இனிய குரல் - உண்மையில், என் மனதில் இதுவரை நான் சுமந்த வாலிப பருவத்தின் சுமைகளை அவளின் மேல் இறக்கி வைத்து ஆறுதலடைய வேண்டும் போல் இருந்தது. தங்கள் தோளில் பெரும் சுமைகளைச் சுமந்துகொண்டு சோர்வடைந்த பயணிகள் ஓய்வெடுக்க ஒரு இடம் தான் சுமைதாங்கி கல். அந்த சுமைதாங்கியாகவே என் மனதில் அவள் தோன்றினாள்.
 
"அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின் ..... "
 
சங்க இலக்கியத்தில் ஒரு பெண்ணின் அழகு தலை முதல் கால் வரை அருமையாக வர்ணிக்கப் பட்ட பொருநராற்றுப்படை தான், அவளுடன் நடந்துகொண்டு கதைக்கும் பொழுது எனக்கு ஞாபகம் வந்தது. ஆற்றின் நீரோட்டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல அவள் கூந்தல், பிறைநிலா போல் அவளது நெற்றி, வில் போல் வளைந்த புருவம், அழகிய இளமையான குளிர்ந்த கண், மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய், குற்றமற்ற நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற வெண்மையான பல், முடி வெட்டும் கத்திரியின் காது போன்றும், பொலியும் மகர நெடுங்குழை அசைவதுமான காது, நாணமிகுதியால் பிறரை நோக்காது சாய்ந்திருக்கும் கழுத்து, அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள், நெருக்கமான மயிருடைய முன்கை, நெடிய மலையின் உச்சி போன்ற,காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள் , கிளியின் வாய் போன்ற ஒளி வீசும் நகங்கள், பிறரை வருத்தும்,பசலை படர்ந்த,ஈர்க்கும் நடுவே செல்ல முடியாத நெருங்கிய, எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்கள், நீரில் தோன்றும் சுழி போன்ற சிறந்த இலக்கணமமைந்த தொப்புள், பிறர் பார்த்தால் இருக்கிறதே தெரியாத வருந்தும் இடை - அது தான் அவள்! நான் என் காதல் சுமையை இறக்கி வைக்கப்போகும் சுமைதாங்கி அவளே என ஒரு தலை பட்சமாக என் மனதில் முடிவு எடுத்தேன்.
 
ஒரு காலத்தில், பயணங்களால் சோர்வடைந்த பயணிகள், தங்கள் தோளில் பெரும் சுமைகளைச் சுமந்துகொண்டு தம் கிராமத்தை தாண்டிப் போவதைக் கண்ட ஒருவர் அல்லது சிலர், இந்த பயணிகள் ஓய்வெடுக்க ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்து, சாலையோரத்தில் ஒரு சிறப்பு மேடை அதிகமாக கற்களால் அமைத்தனர். அது சோர்வான உடல்கள் மற்றும் சோர்வான சுமைகளுக்கு இடமளிக்கும் அளவுக்கு, சுமைதாங்கி கல் ஏறக்குறைய நாலரை அடி உயரத்திலும் 2 அடி வரை தடிமன் (தடிப்பு) கொண்டதாகவும் இருந்தன. என்றாலும் இந்த வழக்கம் எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை.
 
ஆனால், அதைப் பார்த்த என் கண்கள் என் உடல், மனம் இரண்டும் தன் ஆசைகளை சுமைதாங்கியான அவளிடம் இறக்கிவைத்து ஆறுதல் அடைய முயற்சித்தலில் எந்த தவரும் இல்லை. பெற்றோர்களை சந்தித்து, அந்த சுமைதாங்கி கல்லின் வரலாற்றை கேட்க்கும் பொழுது, நான் கண்ட மற்ற சுமைதாங்கியையும் கூறவேண்டும் என்று முடிவு எடுத்தேன், என்றாலும் இறுதி முடிவு அவள் கையிலேயே இருக்கு. அதற்கு நான் பொறுமையாக அவளுடன் நட்பை இரண்டு அடி அகலத்திலும், நம்பிக்கையை நாலு அடி உயரத்திலும் வளர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன்!
அவளின் வீடு வந்ததும், அவளின் தாய் என்னுடன் கதைகத் தொடங்கினார். அவள் கொஞ்சம் தள்ளி நின்று கதையையும், அதே நேரம் என்னையும் கண் வெட்டாமல் கவனித்துக் கொண்டு இருந்தாள்.
 
"அது என்னவோ எனக்கு தெரியலை ... இதை வெறும் சுமைதாங்கிக் கல்லாக எங்க மக்களுக்குப் பார்க்கத் தெரியலை. இந்தப் பக்கமா வாறவங்க, போறவங்கனு எல்லோரும் வழிபட ஆரம்பிச்சுட்டாங்க. கருவை சுமக்கும் பெண்களுக்கு இது ரொம்ப விசேடம். இந்தக் கல்லுகிட்ட வந்து நின்று மனதால் உருகி வேண்டிக்குவாங்க. வேண்டுதல் நிறைவேறிடுச்சுன்னா, பொங்கல்வெச்சு சுமைதாங்கி கல்லை தெய்வமாக கும்பிடுவாங்க. இந்தப் பகுதியில செம்மறி ஆடு, வெள்ளாடு, பசு மாடு, எருமைனு நிறையப் பேர் வளர்க்குறாங்க. அந்த ஆடு, மாடுகளுக்கு நோய் ஏதாவது வந்தாலும் இங்கே வந்து முறையிடுவாங்க. பிறகு இங்கே வந்து தேங்காய், பழம் வைத்து வழிபட்டு செல்வார்கள், நாமும் நாலாம் தலைமுறையாக வழிபாட்டை தொடர்கிறோம் ’’ என படபடவென சுமைதாங்கிக் கல் தெய்வமான கதையை விவரித்தார். நான் கதைகளின் இடை இடையே அவளை, அவள் ஒய்யாரமாக சுவரில் சாய்ந்து நிற்கும் அழகையும் ரசித்தபடி இருந்தேன். இனி நான் சாய்ந்து ஓய்வு எடுக்கும் கல் அவள்தானே!!.
 
"சுமைதாங்கி கல்லே என்னவளே என்
சுமைகளை இனி நீ சுமப்பியா?
இமைமூடாது உன்னை நான் காப்பேன்
இன்பத்தில் என்னை நீ மூழ்கடிக்காயோ?"
 
"இதயத்தின் பாரம் உன்னிடம் சொல்கிறேன்
வருந்தி வாழ்ந்தது இனி போதுமே?
அருகினில் நீ என்னுடன் இருந்தால்
ஆலய வாசல் எனக்கு எதுக்கு ?" 
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
370677453_10223819505178346_4397487652034678126_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=-DCykGJTfXcQ7kNvgEBy6HV&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=Ak1OFybUScGZNFm5dyTeodb&oh=00_AYA6sYmGwBrvQkbI_-05qNmZrC38C4ranzR0dGatQuHPCQ&oe=6720FFCE 370686485_10223819504418327_2248162122903600412_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Bk4KSeshZcQQ7kNvgEfK19U&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Ak1OFybUScGZNFm5dyTeodb&oh=00_AYASDA3CLv9IPjBzNLIlo2bqBZWezTYe3jnMqJOCK2wDJA&oe=67211194370790077_10223819505018342_5528927951194925483_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=cVEhvmZyb-0Q7kNvgHMq_4S&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Ak1OFybUScGZNFm5dyTeodb&oh=00_AYAbTtDNEI2ijY5u0fw9t1zmB3yd7No7_zqWoGbYjvEX3w&oe=672126F6
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.