Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"என் மூச்சு நீயடி" 

இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு சிவகுமார் யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். கதிரவன் மறைந்து கொண்டிருந்தது, அப்பொழுது தண்ணீரின் மேல் ஒரு சூடான தங்க நிறத்தை வீசியது, ஆனால் காட்சியின் அழகு அவனைக் கவரவில்லை. அவன் சுவாசித்த காற்றாக மாறிய மீராவின் நினைவுகளால் அவன் மனம் மூழ்கி இருந்தது. அவன் வாய் "என் மூச்சு நீயடி" என முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. 

யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த சிவகுமார் அமைதியான அதே நேரம் மதிப்பீட்டுத் திறனையும் மற்றும் சுயபரிசோதனை அல்லது அகநோக்குப் பார்வை அல்லது சிந்தனை கொண்ட இளைஞன் ஆவான். அவனது பெற்றோர் எப்போதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர், அதை, அவர்களின் வார்த்தைகளை இதயத்தில் அவன் எடுத்துக் கொண்டான். கண்டியின் செழிப்பான மலைப்பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில், அவனது கல்வித் திறமை, அவனிற்கு ஒரு விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுத் தந்தது. 

பேராதனைப் பல்கலைக் கழகம் இலங்கையின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் இலங்கையின் கடைசி இராசதானியின் தலைநகராக விளங்கிய கண்டி நகருக்கு அண்மையிலும் இருந்தது. இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ள பேராதனை இயற்கை அழகு நிறைந்த ஒரு பகுதியாக இலங்கையின் சுற்றுலா முக்கியத்துவம் உடையதாக விளங்கும் பேராதனை தாவரவியற் பூங்காவுக்கு மிக அருகாமையிலும் ஹந்தானை மலையை அண்டிய தாழ்வான பகுதியில் அவ்வியற்கைச் சூழலுடன் இணைந்தவாறு காட்சி அளித்தது. மகாவலி ஆறு பல்கலைக்கழக வளாகத்துக் கூடாகவே ஓடுவது மேலும் அழகு சேர்த்தது. அங்கு தான் அவன் முதல் முதல் மீராவைப் பார்த்தான். 

 சிவகுமார் யாழ்ப்பாணத்தில் தனது அமைதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கட்டிட பொறியியல் [சிவில் இன்ஜினியரிங்] படிப்பதற்காக, போரினால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு நாள் அது உதவும் என்ற நம்பிக்கையில் அந்த துறையை தேர்ந்தெடுத்தான். அதேவேளை கண்டியில் நன்கு அறியப்பட்ட தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மீரா, எழுத்தாளராக வேண்டும் என்ற இலட்சியத்துடன் இலக்கியத்தைத் தனது முதன்மைத்  துறையாகத் தேர்ந்தெடுத்தாள். அவள் எப்பொழுதும் வெளிப்படையாகச், சிரித்த முகத்துடன் பேசுவாள், அவளுடைய குரல் இனிமையும் உணர்ச்சியும் கூடியது.

ஒவ்வொரு ஆண்டும் பேராதனைத் தமிழ் மன்றம் நடத்தும் விவாதப் போட்டியில், முதலாமாண்டு மாணவியான மீரா, தன் வாதத்தை உக்கிரமாக, பல சங்க இலக்கிய உதாரணங்களுடன் விவாதித்தது பார்வையாளர்களை மட்டுமல்ல, அங்கு நிகழ்வுகளை ஒழுங்கு படுத்திகொண்டு இருந்த இரண்டாம் ஆண்டு மாணவனான சிவகுமாரையும் கவர்ந்தது. 

“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்" 

அவன் ‘இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான மீராவின் அழகில் அப்படியே தன்னைப் பறிகொடுத்துவிட்டான். அவளைப் போன்ற ஒருவளை அவன் இதுவரை சந்தித்ததில்லை. அவன் அவளைத் தனியே  சந்திக்க விரும்பினான். ஆனால் என்ன ஆச்சரியம், அவன் மேடையில் பின் நின்று அடுத்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கும் போது, மீரா, எவளை தான் சந்திக்கவேண்டும் என்று நினைத்தானோ, அவளே, அவன் அருகில் வந்து வணக்கம் என்றாள். ' உங்களின் ஒழுங்கமைப்பிற்கும்  எனக்குத் தந்த வாய்ப்பிற்கும் நன்றி' என்று புன்முறுவலுடன் கூறினாள். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் சிறு அறிமுகம் செய்தனர். 

“நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்"

இருவர் கண்களும் சில கணம் இமைக்க மறந்தேவிட்டன, ஆனால் அவர்களின் நெஞ்சம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தன. காலப்போக்கில், அவர்களின் தொடர்புகள் அடிக்கடி நிகழ்ந்தன, பல்கலைக்கழக நூலகத்தில் நீண்ட படிப்பு அமர்வுகளாகவும், காபியுடன் சாதாரண உரையாடல்களாகவும், இறுதியில், பேராதனையின் பசுமையான, பரந்து விரிந்த பூந் தோட்டங்களில் மற்றும் மகாவலி ஆற்றங்கரை ஓரமாக பொழுதுபோக்கு நடையாகவும் மாறியது.

விருப்பங்களின் விளை நிலத்தில் களைகளா, பயிர்களா என்று கணிக்க முடியாமல் தினம் தினம் முளைத்து வளரும் தாவரங்களின் தன்மைகளை கவனித்துக் கொண்டிருப்பதில் - காதலுக்கு இருக்கும் சிலிர்ப்பும், வலியும் கணக்கிட முடியாதவை. வாய்க்கால்களில் வழிவது காதல்ப் பயிரை வளர்க்கிறதா அல்லது களைகளின் கால்களை நனைக்கிறதா என்பதைக் கண்டு கொள்ளும் வரை காதலுக்கு இருக்கும் காத்திருப்பு அவஸ்தைகள் வார்த்தைகளில் நெய்து விட இயலாதவை. அப்படித்தான் அவன் இருந்தான்.  

காதல் ஒரு புதுவிதமான உணர்வோ, என் மொத்த செல்களையும் புலன்களாக்கும் ஒர் புல்லாங்குழலிசையோ, என்னவாயிற்று எனக்கு ? தன்னையே அவன் கேட்டுக் கொண்டேன். "என் மூச்சு நீயடி", என் பார்வையின் பரவசம் நீயே. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு துளிக் காதல் விழுந்த போது எப்படி எனக்குள் ஒரு கோடிப் பூக்கள் சிரிக்கின்றன? ஒரு மூச்சுக் காற்று பட்டதும் ஆயிரம் சிட்டுக்கள் எப்படி சுவாசம் பெற்றன? அவள் தன்னை விரும்புகிறாளா என்பது இன்னும் சரியாகப் புரியவில்லை. அவள் கதைக்கிறாள், ஒன்றாக நடக்கிறாள், ஆனால் தானும் காதல் கொண்டுள்ளேன் என்பதை எந்த விதத்திலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. அது தான் அவனை வாட்டிக்கொண்டே இருந்தது.  

ஒரு மாலைப் பொழுது மீண்டும் நூலகத்தில் இருவரும் ஒரே இலக்கியப் புத்தகத்தை எடுக்க விரும்பிய போது தற்செயலாகச் சந்தித்தனர். அதே இலக்கியப் புத்தகத்தை இருவரும் அடைய முயற்சித்த போது, அவர்களின் கைகள் இலேசாக உராய்ந்தன.  "உங்களுக்குப் பிறகு நான் வாசிக்கிறேன் " அவள் புன்முறுவலுடன் விட்டுக்கொடுத்தாள், "இல்லை, தயவுசெய்து, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்," என்று அவன் அவளிடம் அந்தப் புத்தகத்தை கட்டாயப்படுத்தி கொடுத்தான், ஆனால் அவள், அப்படி என்றாள் நாம் இருவரும் ஒன்றாய் வாசித்து இரசிக்கலாம் என்று, அவன் கையைப் பிடித்து, ஒரு ஒதுக்குப்புறமாக பக்கத்தில் பக்கத்தில் கொஞ்சம் நெருக்கமாக இருந்தாள். அவனது இதயம் துடித்தது. அந்த நெருக்கமான தொடர்பு, புத்தகத்தை மறந்து,  நீண்ட உரையாடல்களிற்கு வழிவகுத்தது - முதலில் கல்வியாளர்களைப் பற்றி, பின்னர் வாழ்க்கை, கனவுகள் மற்றும் இடையில் உள்ள அனைத்தையும் பற்றி நீண்டு கொண்டு போனது, நூலகத்தின் சாளரம் ஊடாக குளிர் காற்றும் அவர்களைத் தழுவியது. அவள் திரும்பிப் பார்த்தால், அங்கு யாரும் கண்ணிற்குத் தெரியவில்லை. அவள் உடனடியாக ' நான் உன்னை விரும்புகிறேன்' என்று தன் மென்மையான இனிய குரலில் தயக்கத்துடன் கூறி, அவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்தாள். அவனும் "என் மூச்சு நீயடி" என்று அவள் காதில் கூறி, அவள் கன்னத்தில் தன் செவ்விதழைப் பதித்தான். அவள் தன் இரு கண்களையும் மூடி, "என் உயிரும் நீயடா" என்று சட்டென அவனை  ஒரு கணம் கட்டிப்பிடித்தாள்.  

அதன் பிறகு அவர்கள் அதிக நேரம் ஒன்றாகச் செலவிடத் தொடங்கினர். மீராவின் அழகும் அவளது புன்னகையும், அவளது அன்பும் சிவகுமாரின் உள்ளத்தில்  புத்துயிர் பெற்றது. அவள் இதயங்களைத் தொடும் வீரம், காதல் நாவல்களை எழுதுவதைப் பற்றி பேசினாள், அதே நேரத்தில், அவன் சமூகங்களை மேம்படுத்தும் பொறியாளர் தீர்வுகளுக்கான தனது லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டான்.

அவர்களது காதல் இன்னும் நெருக்கமானதாக மாறியது. ஒரு நிலவொளி இரவில், மகாவலி ஆற்றின் அமைதியான ஒட்டத்தை பார்த்தபடி,  சிவகுமார் தனது காதலை மீண்டும் தெரியப் படுத்தினான். மீரா, என் காதலியே, நான் சுவாசிக்கும் மூச்சுக்காற்றும் நீ தானே," என்று அவன் கிசுகிசுத்தான். அவள் அவனைப் பார்த்தாள், அவள் கண்கள் கொட்டாத கண்ணீரால் மின்னியது. "நீ என்றும் என்னுடையவன்," அவள் மெதுவாகப் பதிலளித்தாள். அந்த இரவில் அவள் அவனைப் பார்த்த விதம் சிவகுமாருக்கு இன்னும் நினைவில் இருந்தது, அவர்களுக்கிடையில் பேசப்படாத வார்த்தைகளில் உலகமே ஓய்வெடுத்தது போல் அவள் கண்கள் அவனுக்கு மின்னியது. 

அந்த நிமிடம் முதல் மீரா அவனது ஆணிவேராக மாறினாள். தேர்வுகளின் மன அழுத்தம், அவர்களின் எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு அவர்களைப் பிரிக்கும் யாழ்ப்பாணம் - கண்டிக்கான தூரம் ஒன்றும் தங்கள் காதலுக்கு தீங்கு வராது என்று அவன் நம்பினான். மீரா அவனது நம்பிக்கை, இருண்ட காலங்களில் அவனை அழைத்துச் சென்ற ஒளி. சந்தேகங்கள் எழும்பும் போதெல்லாம், அவளுடைய வார்த்தைகள், அவள் அவனைப் பார்த்த விதம், அவள் கொடுத்த வாக்குறுதிகள் அவனுக்கு திடம் ஒன்றை கொடுத்தது. 

பட்டப்படிப்பு முடிந்ததும், அவர்களின் கனவுகளில் யதார்த்தம் ஊடுருவத் தொடங்கியது. மீரா கண்டியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினாள், சிவகுமார் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றான். தங்கள் காதல் எந்த சவாலையும் தாங்கும் என்று நம்பி, தொடர்ந்து இணைந்திருப்பதாக ஒருவருக்கொருவர் உறுதியளித்தனர். ஆனால் தொலைபேசியில் அவளது குரலின் அரவணைப்பு குறைந்து கொண்டே போனது. அவர்களின் உரையாடலும்  நிச்சயமற்ற பதட்டத்தால் நிறைந்து இருந்தது.

ஒரு நாள் மதியம் சிவகுமாருக்கு மீராவிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் குரல் தழுதழுத்தது. “ எனக்குத் திருமணம் செய்து வைக்க என் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்” என்றாள் அவள். "எல்லாம் மிக வேகமாக வீட்டில் நடக்கிறது, அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள், நான் என்ன செய்வது? " அவன் உள்ளம் கனத்தது. "நீ எம் காதலை சொல்லவில்லையா?" அவன் குரலில் விரக்தி காணப்பட்டது. "முயற்சித்தேன் சிவா. உன்னைப் பற்றி அவர்களிடம் சொல்ல முயற்சித்தேன், ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள், குடும்ப பாரம்பரியம், மரியாதை முதலில் வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்," அவள் வேதனையுடன் விளக்கினாள்.

இப்போது அந்த வெளிச்சம் மங்கிவிட்டது. அவனுக்கு நம்பிக்கை கொடுத்த பெண், அவனிடம் இருந்து  விலகிவிட்டாள். சிவகுமாரின் இதயம் படபடத்தது, அவநம்பிக்கை அவனுள் பரவியது. அவன் மீராவிடம் கொஞ்சம் கோபமாக,  "என்ன பேசுகிறாய் மீரா? நீ எனக்கு ... எங்களுக்கு வாக்குறுதி ஏன் கொடுத்தாய்." அவன் அழாக்குறையாகக் கேட்டான்.

ஆனால் மீரா  "நான் பெற்றோரின் வார்த்தைகளை மீரா முடியாது, அது அவ்வளவு சுலபம் இல்லை சிவா. என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே. அவர்கள் உன்னை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, நானும்  அவர்களுக்கு எதிராக என்னால் செல்ல முடியாது. ஒன்று மட்டும் எனக்கு ஞாபகம் வருகிறது, 'பள்ளிக் காதல் படலை வரை', மன்னிக்கவும் " என்றாள்.

பின் வந்த நாட்கள் மங்கலானவையாக அவனுக்கு இருந்தது. சிவகுமார் தனக்கு அடியில் இருந்து நிலம் உடைந்து சிதறுவது போல் உணர்ந்தான். அவனால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. அவன் கற்பனை செய்த எதிர்காலம் சிதைந்து கொண்டிருந்தது, அதைத் தடுக்க அவன் சக்தியற்றவனாக இருந்தான். அவனது பெற்றோர்கள் அவனது  உடல், மனம் சரிவதைக் கவனித்தனர் 

மீராவின் நிச்சயதார்த்தம் பற்றிய செய்தி பரஸ்பர நண்பர்கள் மூலம் வேகமாக அவனுக்கும் பரவியது. கண்டியில் உள்ள செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை அவள் திருமணம் செய்கிறாள் என்பதை அவன் அறிந்தான். சிவக்குமாருக்கும் தபால் மூலம் அழைப்பு அட்டை கிடைத்தது, சிவகுமார் தன் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து, தன் கையில் இருந்த அழைப்பிதழை வெறித்துப் பார்த்தான். அலங்கரிக்கப்பட்ட அட்டையின் விளிம்புகள் தங்க நிறத்தில் மின்னியது, ஒரு காலத்தில் அவனுக்கு சொந்தமான இதயம் இப்போது பிரிந்து அந்நியன் ஆகியது. அது ஒரு கூர்மையான கத்தியைப் போல அவனைத் துளைத்தது,

அவனது மனம் பாதிக்கப்பட்டது, அவனுடைய நம்பிக்கைக்குரிய அவனது வாழ்க்கை, இன்று அர்த்தமற்றதாகத் தோன்றியது. அந்தவேளையில் தான், அவன் ஒரு நாள் மாலை, இந்தியப் பெருங்கடலின் எல்லையற்ற விரிவை உற்றுப் பார்த்துக் கொண்டு யாழ்ப்பாணக் கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். அவனது வாய் மீண்டும் மீண்டும் "என் மூச்சு நீயடி" என்று முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. 

அவன் நிச்சயதார்த்த அட்டையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் அமர்ந்தான். அவன் இதயம் துரோகத்தின் கனத்தால் கனத்தது. ஒரு காலத்தில் அவளைப் பற்றிய எண்ணங்களால் மிகவும் நிரம்பிய, உயிருடன் இருந்த அவனது மூச்சு இப்போது ஆழமற்றதாகவும் அர்த்தமற்றதாகவும் அவன் உணர்ந்தான். அவனது சிறிய வீட்டின் ஒவ்வொரு மூளையும் அவளை நினைவூட்டியது - இரவு நேர தொலைபேசி அழைப்புகள், அவர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள், பல்கலைக்கழக இடைவேளையின் போதும் அவள் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோதும் எடுத்த புகைப்படங்கள் இன்னும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. 

மன அலைகள் மட்டும் அல்ல, கடல் அலைகளும் பாறைகளுக்கு எதிராக பெரிய சத்தத்துடன் மோதின, ஆனால் இன்றிரவு, அவை அவனுக்கு அமைதியைத் தரவில்லை. அவன் கண்களை மூடிக்கொண்டான், அவன் தலைமுடியில் உப்பு நிறைந்த காற்றினை உணர்ந்தான். "என் மூச்சு அவளது" என்று அவன் மீண்டும்  கிசுகிசுத்தான், கடலின் இரைச்சலில் அவனது குரல் தன் வலுவை இழந்தது. "அவள் இல்லாமல் நான் ஒன்றுமில்லை." அவன் அலறினான். 

என்றாலும் அவன் மீண்டும் மீண்டும் "என் மூச்சு நீயடி" என்ற  வார்த்தைகளைப் மனதில் பேசும் பொழுது, அவன் மனதில் ஒரு மெல்லிய எண்ணமும்  மின்னியது. மீரா உண்மையில் அவனுடைய முழு உலகமா, அல்லது அவள் அவனை அப்படி ஆக்கினாளா ? சிவக்குமார் கடற்கரையின் ஈர மணலில் அமர்ந்து, அடிவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். 

ஆனால் அவன் நெஞ்சு அவன் எண்ணத்துக்கு பதில் சொல்லாமல் "என் மூச்சு நீயடி" என்றே சொல்லிக் கொண்டு இருந்தது!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

464788744_10226849314201678_3230851732204241892_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=1_biXwQV-28Q7kNvgFUwUvu&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AbV5luVwjuXEmefRZKGx7T3&oh=00_AYD4T1EeBbCMy3hAERwyBoZs7q6PFfF1nrYSTjAK0Tm7lA&oe=672A554E 464591409_10226849313601663_28273987409294823_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=i7cyd3k7PloQ7kNvgF_mCpx&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AbV5luVwjuXEmefRZKGx7T3&oh=00_AYA2q4NBMhkE4dJyR12ISAz5McZIoo4EDOLuETsAs4cKiw&oe=672A7AC3

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.