Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை 
 

ஆட்சிசெய்யும் ஆற்றலை நிரூபிக்க அநுராவுக்கு அவகாசம் தேவை 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

தங்களது தவறான ஆட்சிமுறையினதும் பொருளாதார முகாமைத்துவத்தினதும்  விளைவாக தோன்றிய முன்னென்றுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் ராஜபக்சாக்கள் இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் தன்னந்தனியான உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்  விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பைக் கையளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது  வழமையான அரசியல் போக்கில் இருந்து ஒரு விலகலாகும்.  அவ்வாறு அடிக்கடி  நடைபெறும்  என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இலங்கையின் பொருளாதார நெருக்கடி அண்மைய எதிர்காலத்தில் முடிவுக்கு வரப்போவதில்லை என்று நம்பும் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் கூட நாட்டை ஆட்சி செய்ய முடியாமல்போகும் பட்சத்தில் தன்னை மீண்டும் ஆட்சியை பொறுப்பேற்குமாறு கேட்கக்கூடும் என்ற ஒரு மாயையில் இருக்கிறார் போன்று தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு பதவியில் இருந்து இறங்கிய விக்கிரமசிங்க, புதிய ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது, “நாமிருவரும் அன்பாக நேசிக்கின்ற இலங்கை என்ற குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். கடந்த இரு வருடங்களாக  ஆபத்தான கயிற்றுப் பாலத்தின் மேலாக நீண்ட தூரம் இந்த குழந்தையை பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு வந்து வந்திருக்கிறேன். என்னையும் விட கூடுதலானளவு பாதுகாப்பாக குழந்தையை பாலத்தின் ஊடாக சுமந்து அடுத்த கரைக்கு கொண்டு போய்ச் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவினால் அந்த குழந்தையை அடுத்த கரைக்கு பாதூகாப்பாக தூக்கிக் கொண்டு செல்ல முடியாமல் போகலாம் என்று ஒரு மாதத்துக்குள்ளாகவே  முன்னாள் ஜனாதிபதி முடிவுக்கு வந்துவிட்டார் போன்று தெரிகிறது.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் விக்கிரமசிங்க தன்னை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அமைத்த புதிய ஜனநாயக முன்னணிக்காக  தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். தேர்தல் தோல்விகளினால் துவண்டுபோகாதவர் என்று பெயர் எடுத்த அவர் தனது நிருவாகத்தில் முக்கியமான பதவிகளை வகித்தவர்கள் பொருளாதார விவகாரங்களை கையாளுவதற்கு அடுத்த பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறிவருகிறார். 

அது மாத்திரமல்ல, நான்கு வருடங்களுக்கு பிறகு வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கும்போது அரச வருவாயை அதிகரிப்பதில் சமாளிக்க முடியாத சவாலை ஜனாதிபதி திசாநாயக்க எதிநோக்கப்போகிறார் என்று அபாய அறிவிப்பு செய்யும் முன்னாள் ஜனாதிபதி புதிய ஜனாதிபதி தனது முழு பதவிக்காலத்துக்கும் பதவியில் இருக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார். திசாநாயக்க தனது பதவியில் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கமாட்டார் என்ற எண்ணம்  விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டிருப்பதனால்தான் அவ்வாறு கூறுகிறார் என்று தோன்றுகிறது.

ஆட்சிமுறை அனுபவம் இல்லாத  தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வேண்டுமானால் அரசாங்க நிருவாகம் மற்றும் பொருளாதார விவகாரஙகளில் தன்னிடம்  ஆலோசனைகளைப் பெறலாம் என்ற தோரணையில் விக்கிரமசிங்க அடிக்கடி கருத்துக்களை வெளியிடுகிறார். 

அரசாங்க ஊழியர்களுக்கு  சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு தனது அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கிய போது உகந்த  நடைமுறைகள் கடைப் பிடிக்கப்படவில்லை என்று புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த விக்கிரமசிங்க வேண்டுமானால் அவருக்கு அரசியலமைப்பை கற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், 17 தடவைகள் மக்களினால் நிராகரிக்கப்படட அவரிடமிருந்து ஒருபோதும் ஆலோசைகைளைப் பெறப்போவதில்லை என்று பிரதமர் அவமதிப்பாக பதிலளித்திருக்கிறார்.

அதேவேளை, தன்னால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாமல்போகும் என்று நினைத்தால் இரு வருடங்களில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிவிடப்போவதாக திசாநாயக்க எங்கோ கூறியதாக வெளியான செய்திகளை சுட்டிக்காட்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள், தேவை ஏற்படுமானால் அரசாங்கத்தை பொறுப்பேற்பதற்கு பாராளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருப்பது அவசியம் என்று கூறி  தங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கிறார்கள். தற்போதைய அரசாங்கம் பயணிக்கும் பாதையை நோக்கும்போது எதிர்க்கட்சியில் இருந்து நாளடைவில் அதிகாரத்தைக்  கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்று விக்கிரமசிங்கவும் கடந்த வாரம் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில்  கூறினார். 

தங்களுக்கு அமோகமாக வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆணையைத் தருமாறுதான்  எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் மக்களை கேட்பது உலக வழமை. ஆனால் இலங்கையின் தற்போதைய எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தங்களை தெரிவு செய்யுமாறு கேட்கும் ஒரு விசித்திரமான போக்கை  காண்கிறோம். 

விக்கிரமசிங்கவை மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வருவது குறித்து எந்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியை நடத்தமுடியாமல்போகும் பட்சத்தில் விக்கிரமசிங்கவின் சேவையை மக்கள் விரும்பக்கூடும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான ருவான் விஜேவர்தன கடந்த வாரம் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். 

பொருளாதார முனையில் பெரும் நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்நோக்குகிறது என்று குறிப்பிட்ட விஜேவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்குமாறு விக்கிரமசிங்கவை  மக்கள் கேட்கக்கூடும் என்றும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவும் பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதால் மக்கள் விக்கிரமசிங்கவை நோக்கி திரும்பக்கூடும் என்று கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர்கள் மக்நாட்டில் கூறினார். புதிய ஜனநாயக முன்னணி கண்டியில் நடத்திய மக்கள் சந்திப்பு ஒன்றில் “எழுதிவைத்துக் கொள்ளுங்கள் இன்னூம் ஆறு மாதங்களில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவார்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரான  அநுராத ஜெயரத்ன கூறினார்.

பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது எந்த அரசாங்கமும் பதவி விலகி ஆட்சிப் பொறுப்பை உடடினயாகவே  ஒப்படைக்கக்கூடிய ஒருவராக  இவர்கள் எல்லோரும் விக்கிரமசிங்கவை காட்சிப்படுத்தி தங்களுக்கு வாக்கு கேட்கும் புதுமையான ஒரு நிலைவரத்தை காண்கிறோம்.

புதிய பாராளுமன்றத்தில் “விளையாட்டைக் காட்டுவதற்கு” தங்களுக்கு நாற்பது  ஆசனங்கள்  மாத்திரமே தேவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக் கொண்டு தேவை ஏற்படுமேயானால் அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதே தங்களது நோக்கம் என்றும் புதிய ஜனநாயக முன்னணியின்  சில அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ராஜபக்சாக்கள் விக்கிரமசிங்கவிடம் ஆட்சிப்பொறுப்பை கையளித்த ஒரு அரிதான  அரசியல் நிகழ்வை வைத்துக்கொண்டு மீண்டும் அவ்வாறு இடம்பெற முடியும் என்ற கற்பனையில் தங்களது அரசியல் வியூகங்களை இந்த அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக வகுக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியினால் ஐந்து வருடங்களுக்கு முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்ற தங்களது மனதுக்கு பிடித்த விருப்பத்தின் அடிப்படையில் மாத்திரம் இவர்கள் சிந்தனையை பறக்கவிட்டிருக்கிறார்கள். 

 பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியலுக்கு புதியவர்கள் என்பதால் நாடு எதிர்நோக்கும் பாரதூரமான  பொருளாதாரப் பிரச்சினையை கையாளுவதற்கு அனுபவமுடையவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு மக்களை கேட்கும் இந்த எதிரணி அரசியல்வாதிகள்  கடந்த காலத்தில் தவறான முறையில் ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு உறுதுணையாகச் செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டாம் என்று மக்களை கேட்கின்ற அதேவேளை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் பாராளுமன்றத்தை தங்களது கட்சியின் பிரதிநிதிகளினால் நிரப்புமாறு அறைகூவல் விடுக்கிறார்கள். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியே தேவையில்லை என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு தினமான நவம்பர் 14 ஆம் திகதியை புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் சிரமதான தினம் என்று ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி  கூறுகிறார். எதிர்க்கட்சியே தேவையில்லை என்ற அவரின் கருத்து உண்மையில் ஜனநாயக விரோதமானது. 

ஆனால் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை பெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் திசாநாயக்கவின் ஒரு மாத கால நிருவாகத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அடுத்த பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையைக் கொண்டுவரப்போவதாககூட உதய கம்மன்பில் கூறுகிறார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு கொடுப்பது ஆபத்தானது என்று மக்களை அவர்கள் எச்சரிக்கிறார்கள். 

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் எவ்வாறு அமையலாம் என்று மதிப்பிடு செய்யும் எதிரணி  அரசியல்வாதிகள் தேசிய மக்கள் சக்தி அறுதிப் பெரும்பான்மை  ஆசனங்களை கைப்பற்றுவது சாத்தியமில்லை என்றும் ஒரு ‘ தொங்கு ‘ பாராளுமன்றமே தெரிவாகும் என்றும்  கூறுகிறார்கள். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கும் ஏனைய கட்சிகள் சகலதிற்கும் தலா 15 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றதை தங்களது வாதத்திற்கு சான்றாக அவர்கள் முன்வைக்கிறார்கள். 

ஜனாதிபதி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு  பலம்பொருந்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஆணை தருமாறு ஜனாதிபதி திசாநாயக்க மக்களை கேட்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பெருமளவில் ஆதரவை வழங்குவதே இதுகாலவரையான அரசியல் போக்காக இருந்து வந்திருக்கிறது. 

இந்த தடவையும்  அதுவும் குறிப்பாக பழைய பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்து திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் அந்த போக்கில் இருந்து மாறுபடுவதற்கு வாய்ப்பில்லை. என்றே தோன்றுகிறது. புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி ஆட்சியை தொடருவதற்கு மக்கள் வாய்ப்பைக் கொடுப்பார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ஆனால் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் திசாநாயக்கவின் அரசாங்கம் நின்று பிடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று அபாயச்சங்கு ஊதிக் கொண்டிருக்கிறாகள். அவர் தற்போது அமைத்திருப்பது மூன்று அமைச்சர்களைக்  கொண்ட ஒரு இடைக்கால அல்லது காபந்து அரசாங்கமேயாகும். அதுவே உலகில் மிகவும் சிறிய அமைச்சரவையாகும். அவரைப் போன்று பதவிக்கு வந்த ஒரு மாதகாலத்திற்குள் பெருமளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களுக்கும் அரசியல் நெருக்குதல்களுக்கும்  முகங்கொடுத்த அனுபவம் வேறு எந்த முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏற்பட்டதில்லை.

பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்டவரிசைகளில் காத்துநிற்கும் யுகம் மீண்டும் விரைவில் தோன்றப் போகிறது என்றும் இஸ்ரேலியர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்கு தீட்டப்பட்டதாக கூறப்படும் திட்டம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படப்போகிறது என்றும் பூச்சாண்டி காட்டும் வேலைகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருக்கின்றன.

தனது அரசாங்கம் பலவீனமானதாக இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தேர்தல் பிரசாரங்களில் பதிலளிக்கும் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு சில நிறுவனங்களில் மாத்திரமே தாங்கள் இதுவரையில் அதிகாரத்தை உறுதிப் படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்.

” ஜனாதிபதி பதவி, அமைச்சரவை, பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள்  போன்ற பல்வேறு நிறுவனங்களில் உறுதியான அதிகாரம் உறுதிப்படுத்தப்படும் போதுதான் அரசியல் அதிகாரம் நிலை நிறுத்தப்படும். தற்போது ஜனாதிபதியுடன் மிகவும் சிறிய அமைச்சரவையே இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கிறது. மாகாணசபைகள் பல வருடங்களாக இயங்கவில்லை. நாம் பதவிக்கு வந்து ஒரு மாதத்துக்கும் சற்று கூடுதலான காலமே கடந்திருக்கிறது. சில ஊடக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் எம்மிடம் பலம்பொருந்திய அரசியல் அதிகாரம் இல்லாத நிலையில் நாட்டில் உறுதிப்பாடின்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார்கள் ”  என்று அவர் குற்றஞ் சாட்டியிருக்கிறார்.

  ஜனாதிபதியையும் தேசிய மக்கள் சக்தியையும் தாக்குவதற்கு பொருளாதாரப் நெருக்கடி, விலைவாசி உயர்வு, அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,  ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல்  போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆனால்,  இந்த பிரச்சினைகள் உருவாகுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அல்ல ஜனாதிபதியை குற்றஞ் சாட்டுகிறவர்களே பெருமளவுக்கு பொறுப்பாக  இருந்திருக்கிறார்கள்.

புதிய ஜனாதிபதி தனது நிலையை வலுப்படுத்தி அதிகாரத்தில் ஒழுங்காக அமருவதற்கு முன்னதாகவே அவருக்கு எதிராக தீவிரப்படுத்தப்படும் பிரசாரங்கள் சாமானியன் ஒருவன் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பதை பழைய அரசியல் அதிகார வர்க்கத்தினால்  ஜீரணிக்க முடியவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. ஆட்சிமுறை அனுபவக் குறைவு பற்றிய விமர்சனங்கள் எல்லாம் இதன் பிரதிபலிப்பேயாகும்.

தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப்பரவலாக்கம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அந்த கட்சி உறுதியான ஒரு அரசாங்கத்தை அமைக்க அனுமதித்து திசாநாயக்கவின் தலைமையில் அது நாட்டை நிருவகிப்பதற்கு ஒரு கணிசமான கால அவகாசத்தை  வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பிறகு  அவர்களது ஆட்சி பற்றிய விமர்சனங்களை  செய்வதே முறையானதாகும்.  

பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்துக்கு சேவை செய்த  பழைய அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு முறைமை மாற்றத்தை அல்லது ஊழலற்ற நிருவாகத்தை நடத்துவதில் உள்ள அடிப்படைச் சிக்கல்களை குறுகிய காலத்திற்குள் ஜனாதிபதி திசாநாயக்க நன்றாக விளங்கிக் கொண்டிருப்பார். எது எவ்வாறிருந்தாலும்,  நடைமுறைச் சாத்தியமற்ற பெருவாரியான  வாக்குறுதிகளை வழங்கிய அவர் அதன் விளைவான நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கவேண்டியே இருக்கும் என்பது நிச்சயம். பாராளுமன்றத்தில் ஒரு கணிசமான ஆசனங்களைப் பெற்று அவருக்கு நெருக்குதல்களை கொடுத்து ஆட்சி செய்யவிடாமல் குழப்பியடிப்பதற்கே எதிர்க்கட்சிகள் நோக்கம் கொண்டிருக்கின்றன எனபதை அவற்றின்  தற்போதைய அணுகுமுறைகள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன.

(ஈழநாடு )
 

 

https://arangamnews.com/?p=11405

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.