Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிகாசோவின் சினிமா

Featured Replies

pg8.jpg

நவீன ஓவியங்களைப் போலவே ஓவியர்களின் வாழ்க்கையும் புதிரும் வசீகரமும் நிரம்பியது. நீண்ட பாரம்பரியமும் மரபும் கொண்ட ஓவிய உலகில் பல நூற்றாண்டுகளாகவே ஓவியர்கள் தனித்துவமானவர்களாகவும் தங்களுக்கென தனியானதொரு அகவுலகையும் உணர்ச்சி நிலைகளையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

டாவின்சி ஓவியராக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு சான்றாக அவரது நோட்புக்ஸை வாசிக்கும் போது அறிய முடிகிறது. அது போல கவிஞர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், தத்துவ சார்பு கொண்டவர்களாகவும் பல முன்னணி ஓவியர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன.

புகழ்பெற்ற ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசிக்கையில் அனைவரது வாழ்விலும் மிகுந்த வறுமையும் சொல்ல முடியாத அவமானமும் தனிமையும் அங்கீகாரமற்ற நிராகரிப்பையுமே காணமுடிகிறது. எந்த ஓவியனும் தனது முதல் ஓவியத்திலே உலகின் கவனத்தைப் பெற்றவன் இல்லை. மாறாக தொடர்ந்த செயல்பாடும் படைப்புத் திறனும் கற்பனையும் உழைப்புமே ஓவியர்களின் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. பெரிய அங்கீகாரமும் பணமும் புகழும் ஓவியர்களின் தன்னியல்பை பெரிதாக மாற்றிவிடவில்லை. அவர்கள் அதை அனுபவித்தபடியே தீராத தங்களின் அகத்தனிமையில் வாடியிருக்கிறார்கள்.

நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஓவியங்கள் வரைவது கமிஷன் அடிப்படையில் ஏதோவொரு பிரபுவின் விருப்பத்திற்கு உட்பட்ட காரியமாக இருந்ததால் ஓவியர்கள் பிரபுக்களின் நட்பையும் நன்மதிப்பையும் பெற்றாக வேண்டிய கட்டாயமிருந்தது. அதை சகித்து கொண்டு அதே நேரம் தங்களது சுயதன்மையை இழக்காமல் செய்த ஓவியங்கள்தான் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன.

ஓவியம் தீட்டுவதற்கான நிறங்கள் வாங்குவதற்குக் கூட காசில்லாமலும் பனியிலும் குளிரிலும் நடுங்கியபடியே காய்ந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டபடியே வரைந்த ஓவியங்கள்தான் இன்று பலகோடி ரூபாய் மதிப்பில் ஏதோவொரு காட்சியகத்தால் வாங்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. ஓவியர்கள் வாழ்ந்த காலங்களில் இது போன்ற கௌரவமும் பணமும் புகழும் அடைந்தவர்கள் ஒன்றிரண்டு பெயர்கள் மட்டுமே. பெரும்பான்மையினர் தங்களது சுய கவலைகளை மறைத்துக் கொண்டு ஓவியம் வரைவது மட்டுமே தங்களது முழுமையான செயல்பாடு என்று தங்களை கரைத்துக் கொண்டவர்கள்.

ஓவியர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வாசிக்கப்படும்போது அது மிகுந்த கற்பனையோடு எழுதப்பட்ட நாவல்களை விடவும் அதிக திருப்பங்களும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்டதாகவே இருக்கின்றன. அதிலும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய ஓவியர்களான வான்கோ, பால்காகின், பிகாசோ போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் மிக சுவாரஸ்யமானவை.

ஓவியங்கள்தான் சினிமாவின் ஆதாரமாகயிருந்திருக்கின்றன. இன்றுவரை முக்கிய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பலரும் தங்களது திரைப்படங்களுக்கு பின்னால் முக்கிய ஓவியர்களின் பாதிப்பு இருப்பதை நேரிடையாகவே ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு நேர்காணலில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான விட்டோரியா ஸ்டோரரோ ஒரு திரைப்படத்திற்கு எது போன்ற ஒளியமைப்பு செய்வது என்பதை ஓவியங்களின் வழியே தான் முடிவு செய்வதாகத் தெரிவிக்கிறார்.

ஒரு பக்கம் தொழில்நுட்ப ரீதியாக சினிமாவிற்கு ஓவியங்கள் முன்னோடியாக இருப்பது போல இன்னொரு பக்கம் எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்களின் வாழ்வைப் போலவே ஓவியர்களின் வாழ்க்கையும் சினிமாவிற்கு ஆதாரமான கதைகளாக இருந்திருக்கின்றன.

இதற்கான காரணம், கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்வு எதிர்பாராத சந்தோஷமும் வேதனைகளும் நிரம்பியது. மற்றவர்கள் கடக்க பயந்த பாதைகளில் நடந்து திரிந்த நிகழ்வுகள் கொண்டது. மிக நுட்பமான மனநிலையும் கவித்துவமான வெளிப்பாடும் கொண்டது. அதே நேரம் முரண்பாடுகள் நிரம்பியது. விரும்பி தோல்வியை சந்தித்தவர்களைப் பற்றியது. தவறு என்று தெரிந்தும் விலக்கமுடியாபமல் அதனுள் சிக்கிக் கொண்டவர்களின் கனவுகளைப் பற்றியது. யாவையும் விட கற்பனையை தன் வாழ்வின் ஆதாரமாக கொண்டவர்களின் கதையைக் கூறுகிறது என்பதால் அவர்களின் வாழ்வில் அன்றாட சம்பவங்கள் கூட மிக சுவாரஸ்யமானவை.

நவீன ஓவியம் அறிமுகமான யாவரும் அறிந்த ஓவியர் பாப்லோ பிகாசோ, அதிகம் காட்சிக்கு வைக்கப்பட்டவரும் கொண்டாடப்பட்டவரும் மிகுந்த புகழும் அங்கீகாரமும் பெற்ற நவீன ஓவியர் என்றும் அவரைச் சொல்லலாம். பிகாசோ நவீன ஓவியத்தின் அடையாளம். உலகமெங்கும் இன்றும் அவரது ஓவியங்களை காண்பதற்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். மியூசியங்கள் பலகோடி கொடுத்து அவரது ஓவியங்களை வாங்கி பாதுகாப்பதில் பெரும் கவனம் எடுக்கின்றன. பிகாசோ நவீன ஓவியர்களுக்கு ஒரு தனித்த அடையாளம். கியூபிசம் என்ற நவீன ஓவிய வகையை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்.

பிகாசோவின் வாழ்வும் படைப்புகளும் குறித்து நான்கைந்து முக்கிய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் மிக முக்கியமானது 1955ஆம் ஆண்டு HenriGeorge Clouzot பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதை அப்படியே படமாக்கிய The Mystery of Picasso. இதில் பிகாசோவின் தூரிகையிலிருந்து மாயம் போல எப்படி ஓவியங்கள் உருப்பெறுகின்றன என்ற விந்தையை நாம் நேரில் காணமுடிகிறது. ஓவியங்களை திரைப்படமாக்குவது என்ற முறையிலும் இந்த ஆவணப்படம் மிக முக்கிய திரைப்படமாகும்.

இது போலவே 1996 ஆம் ஆண்டு வெளியான Surviving Picasso ஜேம்ஸ் ஜவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சண்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆன்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்திருந்தார். இன்னொன்று Picasso: The Man and His WorkEdward Quinn என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கின்றது. இது ஆவணப்படம் போலவும் கதைப்படம் போலவும் கலந்து உருவாக்கப்பட்டது.

அதை தவிர Days in The Life of Picasso மற்றும் Walder Januszczak இலக்கிய ‘Picasso, the Man and His Work’ Dider Baussy Oulianoff இயக்கிய ‘‘Picasso,’’மற்றும் Tage Danielsson இலக்கிய The Adventures of Picasso இயக்கிய The Adventures of Picasso இதே நேரம் பிகாசோவிற்கு கிடைத்துள்ள புகழை கேலி செய்யும் விதமாகவும் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் பிகாசோவின் காதல் மற்றும் அவரது நவீன ஓவியங்கள் பகடிக்குள் உள்ளாக்கப்பட்டன. அவ்வகையில் Tage Danielsson இயக்கிய The Adventures of Picasso விமர்சனப்பூர்வமான படமாகும்.

இந்தப் படங்களில் The Mystery of Picasso மிக விரிவாகப் பேசப்பட வேண்டிய திரைப்படமாகும். நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் மூலப்பிரதி கண்டுபிடிக்கப்பட்டு நவீனமுறையில் மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. இத்திரைப்படத்தை பிரெஞ்சு அரசாங்கம் தேசியமயமாக்கியுள்ளது. அத்தோடு பல்வேறு ஓவியக் கல்லூரிகள் இதைப் பாடமாக வைத்திருக்கின்றன.

HenriGeorge Clouzot பிரான்சின் முக்கிய திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். இவரது Wages of Fear திரைப்படம் மிகப் பிரபலமானது. அவர் பிகாசோவின் ஓவியங்களில் மனதைப் பறிகொடுத்தவர். பிகாசோ ஓவியம் வரைவதை அப்படியே படமாக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தவுடன் பிகாசோ அதில் விருப்பம் கொண்டு இவருக்காக தனது புகழ்பெற்ற ஓவியங்களைத் திரையில் வரைந்து காட்டுவதற்கு ஒத்துக் கொண்டார். கேமிராவின் முன்னால் மெல்லிய கேன்வாஸ் ஒன்றைப் பொருத்தி அதன் மறுபக்கம் பிகாசோ நின்றபடியே நேரடியாக கேமிராவில் படம் வரைவது போன்று தனது புகழ்பெற்ற ஓவியங்களை மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்.

மூன்று மாத காலங்கள் இந்தப் படப்பிடிப்பிற்கு செலவானது. காட்சிகளை இரண்டு கேமிராக்களின் மூலம் கிளாத் படமாக்கியதால் பிகாசோ ஓவியம் வரையும் போதே அவரது அறையும் அதன் பின்புலமும் இன்னொரு கேமிராவால் படமாக்கப்பட்டது. இதனால் நம் கண் முன்னே பிகாசோ அமர்ந்து ஓவியம் வரைவது போன்ற நெருக்கம் சாத்தியமாகி உள்ளது. இந்தப் படத்தற்கான ஓளிப்பதிவாளர் கிளாடே ரெனார். இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு திரைப்பட இயக்குனரான ழான் ரெனாரின் உறவினர் மற்றும் ஓவியரான PierreAuguste Renoir ன் பேரன். படத்தினை தொகுப்பு செய்தது Henri Colpi.

இந்தத் திரைப்படத்தின் துவக்கத்தில் பிகாசோவின் அறை காட்டப்படுகிறது. புகைபிடித்தபடியே இருக்கிறார். எதிரில் ஒரு கேன்வாஸ் காலியாக உள்ளது. பிகாசோ படம் வரைவதற்காக ஆயத்தமாகிறார். பிகாசோவின் தோற்றம் மிக வசீகரமாகயிருக்கிறது. அவரது முகத்தில் எவ்விதமான யோசனையுமில்லை. ஐம்பது வயதைக் கடந்த தோற்றம். ஆனாலும் நல்ல உடற்பயிற்சி செய்து உருவாக்கியது போன்ற உடல். சிற்பங்களைப் போன்ற நேர்த்தியான முகப்பாங்கு. தூரிகையை அவர் கையாளும் விதம் சாமுராய் ஒருவன் வாள்வீசுவது போன்ற நேர்த்தியும் துல்லியமும் கொண்டிருக்கிறது. பிகாசோ படம் வரையத் துவங்குகிறார். திரையில் கோடுகள் உருவாகின்றன. கோடுகள் அங்கும் இங்கும் நகர்ந்து செல்கின்றன. ஒன்றின் மீது ஒன்று சேர்கின்றன. சில நிமிஷங்களில் ஒரு தோற்றம் வெளிப்படத் துவங்குகிறது. கறுப்பும் வெள்ளையும் முயங்குகின்றன.

அந்தத் தோற்றத்தின் மீது அவரது தூரிகை மேலும் கீழுமாகச் செல்கிறது. பின்புலம், உணர்ச்சி பாவம் என்று ஒவ்வொன்றாக உருவாகின்றன. காகிதங்களில் கப்பல் செய்வது எவ்வளவு எளிதானதோ அவ்வளவு எளிதானது தனக்கு ஓவியம் தீட்டுவது என்பது போல பிகாசோ ஓவியங்களை வரைந்து முடிக்கிறார். திரையில் காளையன்று கொம்புகளை உயர்த்தியபடியே கம்பீரத்தோடு நிற்கிறது. காளையின் காலடியில் உள்ள புற்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. பிகாசோவின் முகத்தில் இப்போதும் சலனமில்லை. இப்படியாக பிகாசோவின் கோட்டோவியம்.. ஓவியம் உள்ளிட்ட இருபது முக்கிய ஓவியங்கள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெறுகின்றன. இந்த ஓவியங்களை இப்படிக் காண்பதற்கு நாம் பரிச்சயம் கொண்டால் பின்பு நவீன ஓவியங்கள் புரிவதில்லை என்ற குற்றசாட்டு தானே விலகிப் போய்விடும்.

எல்லா நவீன ஓவியர்களிடமும் கேட்பது போல பிகாசோவிடமும் ஒரு பார்வையாளர் ‘உங்கள் ஓவியங்கள் புரிவதில்லையே அது ஏன்’ என்று கேட்டார். அதற்கு ‘‘பிகாசோ உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரத்திலிருந்து குக்கூ கூவுகிறதே, அதற்கு என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வீட்டின் கண்ணாடியில் படிகிறதே பனித்துளி, அதை எந்த பொருளில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் மேகம் புதுப்புது வடிவம் கொள்கிறதே, அதற்கு என்ன அர்த்தம். வெயிலை, இரவை, மழையை எப்படி புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

எல்லாவற்றிலும் உங்களை கரைத்துக் கொள்ளத் துவங்குங்கள். எல்லாவற்றின் ஊடாகவும் நீங்கள் இருப்பதை உணரத் துவங்குங்கள் _ உலகின் காட்சியும் அதன் வனப்பும் உங்களுக்குப் புரியத் துவங்கினால் நவீன ஓவியங்கள் தானே புரியத் துவங்கிடும்’’ என்றார். அது தான் இன்றைக்கும் ஓவியங்களைப் புரிந்துகொள்வதற்கான எளிய வழி.

பிகாசோ பற்றிய இந்த ஆவணப்படம் போலவே அவரது வாழ்க்கை வரலாற்றையும் கோர்னிகா போன்ற ஓவியங்கள் குறித்தும் பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. எதற்காக பிகாசோ இத்தனை முறை படமாக்கப்பட்டிருக்கிறார். அப்படி அவர் வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பு தான்.

பாப்லோ பிகாசோவின் வாழ்வு மிக தனித்துவமானது. அவர் ஸ்பெயினில் உள்ள மலாகாவில் 1883 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அப்பா ஜோஸ் ஓவியர். அத்தோடு ஓவியங்களை கற்பிக்கும் ஆசிரியராகவும் வேலை செய்து வந்தார். அம்மா மரியா பிகாசோ, பிகாசோவிற்கு விட்டோர் வைத்த பெயர் Pablo Diego Jose Francisco de Paula Juan Nepomuceno Maria de los Remedios Cipriano de la Santisima Trinidad Martyr Patricio Clini Ruiz y Picasso. (இந்தப் பெயரை ஒரு முறை சொல்வதற்குள் ஒரு நாள் ஆகிவிடுமில்லையா?)

பிகாசோ பேசிய முதல்வார்த்தை Piz. ஸ்பானிய மொழியில் பென்சில் என்று அர்த்தம். ஓவியரின் பிள்ளையல்லவா? சிறுவனாக இருந்தபோதே ஓவியங்கள் தீட்டப் பழகிய பிகாசோவிற்கு அப்பா அடிப்படைகளை கற்பித்ததோடு தனது வகுப்பறைகளைப் பார்வையிடவும் அனுமதித்திருந்தார். அதைப்பற்றி பிகாசோ குறிப்பிடும் போது ‘‘சிறுவயதில் எல்லோருமே சிறப்பான ஓவியர்கள் தான் ஆனால் அதை வளர்ந்த பிறகு காப்பாற்றி கொள்வது தான் சிரமம்’’ என்று கேலி செய்துள்ளார்.

பிகாசோவின் திறமை அவரை நேரடியாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து கொள்ள வழிவகுத்தது. தைலவண்ண ஓவியங்கள் வரைவதில் ஈடுபாடு காட்டினார். பின்னர் அவர் ஸ்பெயினில் இருந்து பாரீஸிற்கு இடம் பெயர்ந்தார். நண்பரின் அறையைப் பகிர்ந்து கொண்டு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை நீல வண்ண ஓவியங்கள் ((Blue Period)) என்று வகைப்படுத்துகிறார்கள். அதாவது ஓவியத்தின் பிரதான நிறமாக நீலநிறம் அமைந்திருந்தது. உள்ளார்ந்த தனிமையும் துக்கமுமே இந்த வண்ணத்தை தேர்வு செய்ததற்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கலைவிமர்சகர்கள் கருதுகிறார்கள். அவரது ஓவியவாழ்க்கை ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு புதுப்பொலிவு அடைந்தது.

பாரீசில் பெர்னாட்டோ ஆவார் என்ற பெண்ணின் நட்பு கிடைத்தது. பிகாசோவின் ஆரம்ப கால ஓவியங்களுக்கு மாடலாகவும் அவரது நெருக்கமான பெண்தோழியுமாக பெர்னாட்டோ இருந்தார். குடியும் காதல் மயக்கமும் பிகாசோவின் படைப்புத் திறமை வனப்படுத்தியது. ஒன்பது ஆண்டுகாலம் பெர்னாட்டோ ஆவரோடு ஒன்றாக அலைந்து திரிந்தார். அதன் பிறகு அவருக்கு சில காலம் ஈவா கோவல் என்ற பெண்ணோடு நட்பு உருவானது. அதன்பின்னால் ஒல்கா கோக்கலவோ என்ற ருஷ்ய பாலே டான்சரோடு பழக்கம் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பாப்லோ என்ற மகன் பிறந்தான்.

தீராத காதலும் எந்தப் பெண்ணையும் வசியப்படுத்திவிடும் தோற்றமும் கொண்டிருந்த பிகாசோவிற்கு ஒல்கா அலுத்துப் போக துவங்கினார். அதனால் மரியா தெரசா வால்டேர் என்ற பெண்ணோடு காதல் பிறந்தது. அவள் வழியாக மாயா என்ற பெண் குழந்தைக்கு தந்தையானார். அதன் பிறகு டோரா மார் என்ற புகைப்படக் கலைஞரான இளம்பெண்ணோடு நட்பு உருவானது. இருவரும் ஒன்றாக சுற்றியலைந்தார்கள். அதன் பின்னால், பிரான்ஸ்சுவா ஜிலாத் என்ற பெண்ணும், ஜாகுலனங் ரிவோக் என்ற பெண்ணும் அவர் வாழ்க்கையில் இடம் பெற்றார்கள்.

பிகாசோவிற்கும் பெண்களுக்குமான உறவு மிக விசித்திரமானது. ஆறு பெண்களோடு தன் வாழ்வை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நான்கு குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஒரு மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றாள். மற்றொருத்தி காசநோயால் இறந்து போனாள். மற்றொரு பெண் காது நரம்பு தளர்ச்சி நோய்க்கு உள்ளானாள்.

பிகாசோ எவ்வளவு தூரம் அவர்கள் மீது நெருக்கம் கொண்டிருந்தாரோ அதே அளவு அவர்களைத் தன் கட்டுபாட்டிற்குள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவராகவும் இருந்திருக்கிறார். இந்தப் பெண்களின் புகைப்படங்களைக் காணும் போது அவர்களின் பிரதிபலிப்பு பிகாசோவின் ஓவியங்களில் படிந்திருப்பதைக் காண முடிகிறது. இந்தப் பெண்களில் ஒருத்தியான Francoise Gilot யின் பார்வையில் பிகாசோவின் வாழ்வை சித்திரிப்பதாக அமைந்துள்ளது மெர்சண்ட் ஜவாரி உருவாக்கிய Surviving Picasso. இந்தப் படம் வெளியானதில் பிகாசோ குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்த போது படம் சிறப்பாக வெளியாகி பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.

பிகாசோவிற்கு சினிமாவின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. அவர் தன் நண்பரும் கவிஞருமான ழான் காக்தூவின் Testament of Orpheus படத்தில் முகம் காட்டாமல் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார். அவரது ஓவியங்கள் குறித்த ஆழ்ந்த விமர்சனங்களையும் பார்வைகளையும் கொண்ட படமாக Edward Quinn இயக்கிய Picasso: The Man and His Work படத்தைக் குறிப்பிடலாம். நவீன ஓவியர். க்யூபிசம் என்ற ஓவியவகையை உருவாக்கியவர். கம்யூனிஸ்ட், காசினோவா காதலர் என்று பிகாசோவின் வாழ்வு பல்வேறு தளங்கள் கொண்டது. அதன் ஒரு பக்கம் மட்டுமே இதுவரை திரை வடிவம் பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்படாத தகவல்களும் நிகழ்வுகளும் ஒவியங்களின் பின்னணிக் கதைகளும் ஒவ்வொரு நாளும் வெளிவந்தபடியே உள்ளன.

தனது 93 வயதில் பிகாசோ இறந்து போனார். ஆனால் கிளாட்டின் படத்தில் நாம் காணும் பிகாசோ ஒரு ராஜகுமாரனின் மிடுக்கிலே காணப்படுகிறார். இன்றைக்கும் அந்தக் காட்சிகள் பிகாசோ என்ற கலைஞனின் மிடுக்கை., ஓவியம் வரையும் மாயநிமிஷத்தை பதிவு செய்து வைத்திருக்கிறது. இப்படி ஒரு கலைஞனை என்றும் நித்யமானவாக்கிக் கொண்டது தான் சினிமாவின் பலம் இல்லையா?

- தீராநதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.