Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு

sudumanalNovember 13, 2023
political-culture.jpg?w=500

கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் என நான்கு தேசிய இனங்கள் இருப்பதாக தற்போது பல அரசியலாளரும் வரைபு செய்கிறார்கள். இந்த தேசிய இனங்கள் தங்கள் மொழி, பண்பாடு, நிலப்பரப்பு சார்ந்த தனித்துவங்களை பேணும் ஓர் அரசியல் கட்டமைப்பு அரசு (state) வடிவத்துள் பேணப்படுகிறபோது, அமைதியான வாழ்வை தரிசிக்க முடியும். அப்போதான் சகலரும் இத் தனித்துவங்களோடான பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கையராக தம்மை முழுமையாக உணர முடியும். ஜனநாயக சோசலிச குடியரசு என பெயர்ப்பலகை தொங்கவிட்ட நாடான இலங்கை இந்த திசையில் கடந்த 70 வருடமும் பயணிக்கவில்லை. வெள்ளையர்கள் வெளியேறியபின் அது பெருந்தேசிய, பௌத்த மேலாதிக்க அரசுக் கட்டமைப்புடன் உருப்பெற்று, அதன்வழி பயணித்ததால் இன்று நாம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறோம்.

போரும், போராட்டத்தின் தோல்வியும், தமிழ் விடுதலை இயக்கங்களினது பிழையான அரசியல் போக்குகளும் தீர்மானங்களும் கூடவே கொலைக் கலாச்சாரமும் எல்லாம் சேர்ந்து தமிழ் மக்களை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்குள் தள்ளி 15 வருடங்களுக்கு மேலாகிறது. அரசுக் கட்டமைப்பானது இன்னும் இறுக்கமடைந்து விட்டது. அதை நிகழ்த்திய அரசாங்கங்களின் யுத்தச் செயற்பாடுகள் அவர்களது ஊழல் மோசடிகளுக்கான கதவுகளை மேலும் அகலத் திறந்து, எல்லா இன மக்களையும் பின்கதவால் பிச்சைப் பாத்திரத்துடன் துரத்தியது. இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்து, அதன் எதிர்ப்புப் போராட்ட வடிவமாக 2022 இல் அரகலய எழுச்சி தோன்றியது. அது ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்தது எமக்கு கிடைத்த ஓர் அரசியல் படிநிலை வெற்றியாகும்.

அது அரசாங்கத்துக்கு எதிராக “மாற்றம்” (அதை அரசியல் பண்பாட்டு மாற்றம் எனலாம்) என்ற கோசத்தை மட்டுமல்ல, நிலவுகிற அரசுக் கட்டமைப்புக்கும் (state structure) எதிராக “முறைமை மாற்றம்” என்ற மிக காத்திரமான முழக்கத்தையும் முன்வைத்துப் போராடியது. இதற்குக் காரணம் அரகலயவை நடத்திய இளஞ் சத்ததி பேரினவாத கட்சிகளுக்கு வெளியில் இருந்தவர்களாக மட்டுமல்ல, சோசலிசம் சமத்துவம் போன்ற சிந்தனைப் போக்கை கொண்டவர்களாகவும், இனவாதத்துக்கும் போருக்கும் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாகவும் இருந்தது முக்கிய காரணம். அத்தோடு 30 வருட போரின் தாக்கத்தை -வெவ்வேறு அளவுகளில்- எல்லா இன மக்களும் அனுபவித்ததும் களைப்படைந்ததும் இன்னொரு காரணம்.

அரகலயவை முன்னின்று நடத்திய “முன்னிலை சோசலிசக் கட்சி” ஆனது ஜேவிபியின் இனவாதப் போக்கு, போர் ஆதரவு நிலைப்பாடு, அதிகாரப் பகிர்வின் மீதான ஒவ்வாமை என்பவற்றுக்கு எதிராகவும், அதன் சோசலிச நழுவல் போக்குக்கு எதிராகவும் அதிலிருந்து வெளியேறியவர்களால் 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னணியாகும். இவர்களோடு சேர்ந்து பல முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்களும், உதிரிப் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரகலவை முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டத்தில் இடையில் வந்து சேர்ந்த ஜேவிபியானது அரகலய இடைக்காலத்தில் பலவீனப்பட்டிருந்தபோது அதிலிருந்து விலகிக் கொண்டது. பின் மீண்டுமான அரகலய புத்தெழுச்சியின் பின் திரும்பவும் அதற்குள் வந்து இணைந்து கொண்டது.

நாடு முழுவதும் அரகலய ஏற்படுத்திய சிந்தனைத் தூண்டலானது அரசியல் பண்பாட்டில் ஒரு பண்பு மாற்றத்தைக் கோரியது. அந்தக் கோரலை அல்லது முழக்கத்தை ஏற்கனவே பெரும் அமைப்புக் கட்டுமானமாக இருந்த ஜேவிபி தன்வசமாக்கியது. 2019 இல் 3 வீத வாக்குகளைப பெற்ற ஜேவிபி 2024 இல் 42 வீத வாக்குகளைப் பெறுமளவுக்கு வளர்ச்சியுற -கட்சி என்ற அடிப்படையில்- எந்த புரட்டிப் போடலையும் செய்ததில்லை. எதுவும் வெளித் தெரியவுமில்லை. அநுரகூட தனது வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வளர்ச்சியின் இயங்கியலை எப்படி விளக்க முடியும். ஆக, அரகலய மக்கள் போராட்டத்தின் விளைவு இது. எனவே இன்று அரகலய அவர்களை நிறுத்தியிருக்கிற இடத்திலிருந்து அவர்கள் முன் செல்ல விழைவதே அவர்களது இருத்தலுக்கான ஒரே வழி. அதுவே அவர்கள் அரகலயவிடமிருந்து தமதாக்கிய முழக்கமான “மாற்றம்” என்பதும் “முறைமை மாற்றம்” என்பதுமாகும். எது எப்படியோ இது ஒரு நல்ல மாற்றம். மிக ஆரோக்கியமான மாற்றம். அது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (சந்ததி அரசியலின் வேரை புரட்டிய ஒரு மூன்றாவது சக்தி என்றளவிலும், ஒரு கிராமியப் பின்னணியிலிருந்து, ஓர் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வெளித்தோன்றிய தலைமை என்றளவிலும் இந்த மாற்றம் மிகக் காத்திரமானது).

அரகலய போராட்டம் சம்பந்தப்பட்ட மேற்கூறிய உண்மையை என்பிபி யோ அனுரவோ எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. பழைய அரசியல் பண்பாட்டிலிருந்து புதிய அரசியற் பண்பாட்டுக்குள் மாற்றத்தை நிகழ்த்துவோம் என சொல்லும் அவர்கள் பழைய அரசியற் பண்பாட்டில் தாம் -புரிந்தோ புரியாமலோ- அரசாங்க பங்காளிகளாக இருந்ததை சுயவிமர்சனம் செய்து, இந்த புதிய காலடியை வைக்கவுமில்லை. போரின் விளையை பரிவுபட பேசும் அநுர அந்தப் போருக்கு தமது கட்சி ஆதவளித்ததை சொல்ல முன்வருவதாயில்லை. 2004 இல் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்து போரை நடத்த பங்களித்தவர்கள். ஓர் இனப்படுகொலையை நாட்டின் இராணுவ வெற்றியாகக் கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். 2015 இல் மைத்திரி ஆட்சியின் புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளை எதிர்த்தவர்கள் அவர்கள். அதற்கான சுயவிமர்சனமும் இல்லை. வடக்கு கிழக்கு பிரிப்பை அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேர்வு மூலம் தீர்மானிப்பதைக் கோருவதற்குப் பதிலாக நீதிமன்றத்தை நாடியவர்கள்.

மாகாண சபை (காணி,பொலிஸ்) அதிகாரங்களை எதிர்த்து அதிகாரப் பரவலாக்கலை உப்புச்சப்பற்றதாக ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது. மாகாணசபை தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலாக்கலை அடுத்து நிகழ்த்தப் போகிறோம் என இப்போது சொல்லும்போது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. (மிகச் சிறந்த அதிகாரப் பரவலாக்கல் முறைமையைக் கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் கன்ரோன் முறைமையில் இந்தவகை -காணி, பொலிஸ்- அதிகாரங்கள் பகிரப்பட்டு செழுமையாகச் செயற்படுகின்றன. மத்தியில் நாட்டின் அரசியல் அதிகாரம் 7 பேர் கொண்ட சபையாக பகிரப்பட்டு உள்ளது).

இவையெல்லாம் குற்றப் பத்திரிகை அல்ல. விமர்சனங்கள். நிகழக்கூடிய அரசியல் தவறுகள் என்றளவில் அதை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனத்துடன் அதை தாண்டிவந்து தெளிவாகப் பேச வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தவறிழைப்பதல்ல பிரச்சினை. அது தவறு என்று காலம் உணர்த்துகிறபோதாவது அதை ஏற்றுக்கொண்டு தம்மை புதுப்பித்து வெளிவருவது நல்ல தொடக்கமாக இருக்கும். இது அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்குமேயொழிய எதிராக அமையாது. பேசாமைதான் சந்தேகத்தை தேக்கி வைத்திருக்கும்.

அதுவே சிறுபான்மை இன மக்களிடம் புகாராக படிந்திருக்கிறது. அதனாலேயே சிறுபான்மை தேசிய இனங்கள் தமது பிரதிநித்துவத்தை தனித்துவமாக பேணும் நியாயமான முயற்சியை தவிர்க்க முடியாமல் பழைய அரசியற் பண்பாட்டில் பழசாகிப்போன கட்சிகளினூடாகவோ சுயேச்சைக் குழுக்களினூடாகவோ பேண வழிவகை தேடுகிறார்கள். தமது உரிமைகளை நிலைநாட்டுதல் என்பதற்குப் பதிலாக, அது கேட்டுப் பெறப்பட வேண்டிய ஒரு பேரம் பேசும் (deal) அரசியலாக கொண்டுள்ள அவலம் சிறுபான்மையினர் தரப்பில் தொடர்கிறது.

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ் மக்களின் இந்த கையறுநிலையை தீர்க்கும் வகையிலான எந்த முன்மொழிவும் வைக்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே அநுரவின் பேச்சு இருந்தது. இன மத மொழி கடந்த இலங்கையர் என மொத்தத்துவப் படுத்துவதையும் அப் பேச்சு குறிவைத்திருந்தது. “நாங்கள் இலங்கையர்… ஒற்றுமையாக வாழவேண்டாம்.. இல்லை வாழவேண்ண்டும்..டும்” என மகிந்தவும்தான் அழுத்தி திருத்தி செல்லத் தமிழில் பேசியது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.

முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மையின பிரச்சினைக்கு தீர்வாக சுயாட்சியை வெளிப்படையாக முன்வைப்பதைப் போலவோ, அன்றி வேறேதும் வழிமுறையையோ அநுர முன்வைக்கவில்லை. அதை புகார் படிந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார். அவரது பேச்சு இதில் வெளிச்சம் எதையும் பாய்ச்சவில்லை. எதிர்காலத்தில் என்பிபி அரசாங்கத்தினதும் அரசினதும் புத்துணர்ச்சியான மாற்றம் கொண்ட செயற்பாட்டினூடு இதை சாதிக்க கால அவகாசம் தேவை என்பது உண்மை. ஆனால் அதுவே அதை இப்போ ஒரு வகைமாதிரியாகக் கூட முன்மொழியாமல் தவிர்ப்பதற்கான நியாயமாகக் கொள்ள முடியாது. 

பாரம்பரிய தேசியக் கட்சிகளின் வாக்குறுதிகளை 70 வருடமாக நம்பி ஏமாந்த சிறுபான்மை இனங்களை முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் -முதன்முதலான- வாக்குறுதிகளை நம்புங்கோ..வாங்கோ என அழைப்பது “இயேசு வருகிறார்… எமது மீட்பர் வருகிறார்” என ஜெபிப்பதற்குச் சமம். அதற்குள்ளால் ஓடும் மான் மாய மானா அல்லது நிஜ மானா என்பதை புதிய அரசாங்கம் செயலின் மூலம்தான் காட்ட வேண்டும்.
(குறிப்பு: இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது சிறுபான்மை இனங்களை உட்படுத்திய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க என்பிபி தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்ததாக செய்தி வந்திருக்கிறது. உண்மையெனில் நல்ல ஆரம்பம் இது)

இதே ஜேவிபி யினூடாகத்தான் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். இப்போ அதன் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா தடாலடியாக தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என அண்மையில் ஒரு போடு போட்டார். இவர்களைப் போன்றவர்கள் உருவாவதற்கான சூழலைக் கொண்ட கட்சியாக ஜேவிபி இருக்கிறதா என்று ஒருவர் எண்ணத் தலைப்படுவதில் தவறு இல்லை. ஆட்சியதிகாரத்துக்கு வரமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக பேசிய என்பிபி இப்போ பயங்கரவாதத் தடைச்சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதுதான் தவறு என்கிறார்கள். வேட்டையனில் ரஜனி என்கவுண்டருக்கு கொடுத்தது போன்ற விளக்கம் இது.

எனவே பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளான பாரம்பரிய கட்சிகளை அகற்றி புதிய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளை அரசாங்கத் தரப்பு மட்டுமல்ல, வலுவான எதிர்க் கட்சியும் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. இது சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட நோக்குநிலை மட்டுமல்ல, மாற்றத்துக்கு வித்திட்ட -மக்கள்நலன்சார் அரசியலை உயர்த்திப் பிடித்து போராடிய- அரகலய சக்திகளும் சமூகப் புத்திஜீவிகளும் சம்பந்தப்பட்ட நோக்குநிலையும் கூட. இவற்றினூடுதான் பழைய அரசியற் பண்பாட்டு நீக்கத்தை பாராளுமன்றத்துள் முயற்சிக்க முடியும். எனவே தேர்தலில் வாக்களிப்பதன் மூலமான மக்களின் பங்கு புதிய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல புதிய பலமான எதிர்க்கட்சி அதிகாரத்துக்குமானதாக இருக்க வேண்டும். இதில் ஏற்படக்கூடிய தோல்வியானது சஜித் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு கதிரையை இழுத்துப் போடுவதாக அமையும். அதாவது பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநித்துவத்துக்கான இடத்தை முன்னரைப்போலவே அங்கீகரித்ததாகப் போய்விடும். (எனது கணிப்பில் அதுவே நடக்கும் வாய்ப்பு உள்ளது). இது பற்றி சிந்திக்காமல் என்பிபியை மட்டுமே தேருங்கள் என கோருவதைத்தான் அலையில் மூழ்குதல் என்பது.

அதிகமான சுயேச்சைக் குழுக்கள் வடகிழக்கு மலையகப் பகுதிகளில் இத் தேர்தலில் நிற்பது என்பது வாக்குகளை பிரிக்கும் என்ற கணிப்பில் ஓரளவு உண்மை இருக்கிறபோதும் அதன் பாதிப்பு சிறுபான்மையின பாரம்பரிய கட்சிகளுக்குத்தான் இருக்குமேயொழிய என்பிபி க்கு அல்ல. என்றபோதும் அத்தோடு இவளவு சுயேச்சைக் குழுக்கள் தோன்றியிருக்கிறது என்பது ஒருவகையில் அரசியலானது மக்கள்மயமாவதின் அறிகுறி எனவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாற்றம் ஏற்கனவே இருந்த பழைய அரசியல் பண்பாட்டின் சிதைவை கோரிய அரகலயவுக்கும், அதைத் தோற்றுவித்த அனுரவுக்குமான வெற்றி என எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான சிதைவுகளின் போது அரசியல் தளத்தில் இவ்வாறான குழுக்கள் தோன்றுவதும் மறைவதும் தவிர்க்க முடியாதது. அதுவும்கூட புதிய அரசியல் பண்பாட்டிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு, இலங்கை பூராகவும் ஆணாதிக்க நிலையில் அரசியல் சீவியம் நடத்திக் கொண்டிருந்த கட்சிகளிலும், அதைத் தாண்டி சுயேட்சை குழுக்களிலும் பெண்கள் அரசியல் களத்துள் பிரவேசிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இது இன்னொரு சாதகமான மாற்றம் ஆகும். எனவே சிறுபான்மையினங்களின் பழைய அரசியற் பண்பாட்டுக் கட்சிகளினுள் புதிய அரசியற் பண்பாட்டு மாற்றம் நிகழாவிடின், அவர்களது பிரதிநித்துவம் குறைய நேரும். சுயேச்சைக் குழுக்கள் புதிய வீரியமான அரசியலாளர்களை அடையாளம் காட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளது.

அநுர நல்லவராக இருக்கலாம். அடுத்து வரப்போகிறவரும்கூட நல்லவராக இருக்கலாம். அதிகாரமற்றவர்களாக இருக்கும்போது நல்லவர்களாக இருப்பவர்கள் அதிகாரம் கிடைக்கிறபோது ‘நல்லவர்களாக’ தொடர்வார்கள் என்பது அரசியல் தர்க்கமற்றது. சிக்கலான அகமுரண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிற மனிதஜீவியை நல்வர் கெட்டவர் என இருமையாக மட்டும் புரிந்துகொள்வது முழுமையற்றது. மனிதஜீவி ஓர் அரசியல் மிருகம் என்பது முக்கியமானது. இதனடிப்படையில் அதிகாரம் அவர்களை மாற்றியமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மிகக் குறைந்த முன்னுதாரணங்களே உலக வரலாற்றில் காட்டப்படக் கூடியதாக உள்ளன.

அரசு (state) கட்டுமானத்தின் இனவாத, பெரும்பான்மைவாத, பௌத்த மேலாதிக்க கருத்தியலை மாற்றியமைப்பதில் எதிர்நோக்க முடியாத இறுக்கமான நிலை ஏற்படும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் பண்பு மாற்றங்கள் நிகழும். அத்தோடு பூகோள அரசியல் சதிகளும் நலன்களும், (கடன் மூலமான) பொருளாதார தங்குநிலைகளும் அவர்களின் நிபந்தனைகளும் நெருக்கடிகளும், இடதுசாரியத்துக்கு எதிரான மேற்குலகின் வன்மங்களும் நெருக்குதல்களும் என பல சவால்களை ஒரு சிறிய நாடு எதிர்நோக்க வேண்டி வரும். இவற்றை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பணி கட்டாயமானது. இப் புறக் காரணிகள் தவிர்க்க முடியாதபடி அரசாங்கத்தை பண்புரீதியில் மாற்றியமைக்கலாம். (சோவியத் இல் மட்டுமல்ல, எமது விடுதலை இயக்கங்களிலும் இவ்வாறான அதிகாரத்துவ பண்பு மாற்றம் நடந்து நாசமாய்ப் போனது ஞாபகமிருக்கும்). இவை நிகழாதபடி அரசாங்கத்துக்கு பக்கத் துணையாக நின்று பாராளுமன்றத்தினுள் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பலமான மாற்று எதிர்க்கட்சி தேவை. அப்போதான் புதிய அரசியல் பண்பாடு அரசியல் தளத்தில் உதயமாகும். இதை சமூகத் தளத்தில் நிறுவி முன்னேறிச் செல்ல பலமான அறிவுசார் சிவில் சமூக நிறுவனங்கள் தேவை. இது மக்கள் சார்பான பொறுப்பு.

மாற்றத்துக்கான முயற்சியின் நிலையை தக்கவைக்க என்பிபி க்கு பெரும்பான்மைப் பலம் (113 ஆசனங்களுக்கு மேல்) தனிப்பட கிடைக்க வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சிறுபான்மையின பிரதிநித்துவங்களின் தேவையும், -அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களின் கூட்டணியாக தேர்தலில் நிற்கும்- “மக்கள் போராட்ட முன்னணி” இன் பிரதிநித்துவத் தேவையும் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிய வேண்டியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்தை எதிர்ப்பது அல்லது அவர்களின் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்ப்பது என்ற பொருளில் அல்ல!
 

https://sudumanal.com/2024/11/12/எதிர்க்கட்சி-அரசியல்-பண்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.