Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"விழிகளின் வித்தை"

 

"கீழ் உதடை மெல்லக் கடித்து
குறும் சிரிப்பை அள்ளி வீசினாளே!   
கண் இரண்டும் கொஞ்சம் கூராக்கி 
காமம் பூசிய அம்பு எய்தினாளே!"  


"வில் வித்தை தெரிந்து இருந்தும் 
'விழிகளின் வித்தை'யில் நான் விழுந்தேனே!   
கள்ளியை நம்பி உதவிகள் செய்து   
அள்ளி வீசினேன் காதல் மட்டுமே!"  


இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள் தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமுமான கொழும்பின் பரபரப்பான இதயத்தில், கரையோரக் காற்று இடைவிடாது முட்டி மோதும் கோல் பேஸ் (Galle face) என்று அழைக்கும் காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைந்து உள்ள கொள்ளுப்பிட்டி என்ற வசதியான இடத்தில் அருணி என்ற ஒரு இளம் பெண், ஆடம்பர பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் வசித்துவந்தாள். அவள் புகழ்பெற்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாகும்.

காலிமுகத்திடலில் இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காகவும் மற்றும் கற்று   வாங்கவும் பின்னேரம் பலர் அங்கு கூடுவது வழமை. உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அதுவாகும். பக்கத்தில் மிக ஆடம்பரமான கோல் பேஸ் ஹோட்டலும் உண்டு. அப்படியான எல்லா வசதிகளும் படைத்த அந்த சூழலில் தான் அவள் தங்கி தன் படிப்பை தொடர்ந்தாள்.   
  


அருணி, எல்லோராலும் விரும்பத்தக்க உடுக்கை இடையோடு மணல்கடிகாரம் (ஹவர் கிளாஸ்) போல அழகான வடிவம் கொண்டிருந்ததுடன், அவளது தோள்களில் பட்டும் படாமலும் சுருண்டு விழும் கருங்கல் முடியும் மற்றும் கடலின் ஆழம் போல மின்னும் கண்களும், அவள் பாதையைக் கடக்கும் எவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது. 

எல்லோருக்கும் பெரிதாக தெரியாத விடயம் காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியின் பொழுது மயானமாகப் பயன்படுத்தத்தியது என்பது, அது பின் 1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. இங்கு தான் அருணி பெரும்பாலும் தன் தோற்றத்தையும் கவர்ச்சியையும் 'விழிகளின் வித்தை' யையும் பயன்படுத்தி அவளது சக்திக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ, சிலரை வீழ்த்தி அங்கே புதைத்தாள், சிலரை பயன்படுத்தி செல்வக் குதிரையில் பயணித்தாள். 

"விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி
வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை – என்று பேசும்
விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு – உழன்று வாடும்" 
[திருப்புகழ் 1015]

நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற விழிகளின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத் தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய காதலுடன் பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால், அவளிடம் தம்மை இழந்தவர்களோ பலர். 

அருணியின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க .. பாலில் விழுந்த வண்டு போல கண்கள் துள்ள ..  கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க...   புருவம் வில்லைப் போல் வளைந்திருக்க ... அந்த அருணியின் கவர்ச்சிக்கு பின்னால் ஒரு கத்தி போன்ற கூர்மையான ஒரு மனம் இருந்தது பலருக்குத் தெரியாது. அது தான் அவளின் அனுகூலமாக இருந்தது.  

"புடைகொண்டு எழு கொங்கையும்
அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம்; அல்லது
எல்லா உருவும் தெரிந்தாம்;
விடம் நுங்கிய கண் உடையார்
இவர் மெல்ல மெல்ல
மடம் மங்கையராய் என்
மனத்தவர் ஆயினாரே."
[சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராவணன் கூறுதல் / 3307]

பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும் அல்குலையும்,  இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை;  நஞ்சை அருந்திய கண்களையுடைய இவள் மெதுவாக ஒரு அழகிய இளம் பெண்ணாய் இவள் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டாள் என்று சொல்லாத ஆண்களும் இல்லை. 

கல்விக் கட்டணம் மற்றும் பகுதி நேர வேலைகளுக்குப் போராடும் தனது சக மாணவர்களைப் போலல்லாமல், அருணி டிசைனர் உடைகளில் வாழ்க்கையை நகர்த்தினாள், மிகவும் விலையுயர்ந்த உணவகங்களுக்கு அடிக்கடி சென்றாள், மேலும் அவளது வயதிற்கு எட்டாதது போல் தோன்றிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கினாள். அவளுடைய ரகசியம்? அருணி ஒரு தலைசிறந்த சூழ்ச்சியாளள் என்பதே, செல்வந்தர்களை, சந்தேகத்திற்கு இடமில்லாத இளைஞர்களை நேரடி சந்திப்புகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வேட்டையாடினாள்.
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்."
[சிலப்பதிகாரம்]  

உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார், இப்படித்தான் யாரோ ஒருவன் அவள் பிடியில் அகப்பட்டு தன்னை  இழந்து அவள் இடையை வருடி புலம்பியிருப்பான். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு பழகிய வார்த்தைகளே! 

இன்ஸ்டாகிராம் [படவரி / Instagram] மற்றும் ஃபேஸ்புக் [முகநூல் / Facebook] மூலம், தனது கனவு வாழ்க்கையை தொடர்ந்து வாழ, தன்னைப் பற்றி ஒரு மாயையான வெளிப்பாடை படங்களுடன் சித்தரித்தாள். அவள் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சரியாக அமையும் பொழுது, நிதி நெருக்கடிகள், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் குடும்ப துயரங்கள் பற்றிய கதைகளை திறமையாக வடிவமைத்து, இதன் மூலம் அனுதாபத்தையும், அதை விட முக்கியமாக பணத்தையும் கைக்கொள்ளுவதில் திறமையாக இருந்தாள். அவளுடைய அழகு மற்றும் வசீகரத்தால் கவரப்பட்ட இளைஞர்களிடம் இருந்து பணம், நகைகள், சமீபத்திய கேஜெட்டுகள் [gadgets] என பரிசுகளை பெற்றாள். 

அருணியின் உத்தி மிக எளிமையானது. ஒரு காதல் தொடர்பை உருவாக்கி, அதன் மூலம் அவனை தன் வலையில் முழுதாக வீழ்த்தி, கறக்கக் கூடியதை கறந்து பின் மெல்ல எதாவது காரணம் ஏற்படுத்தி, சந்தேகம் வராமல் விலகிவிடுவாள். அவசர கொழும்பு நகரில் அருணியின் சுரண்டல்கள் கவனிக்கப்படாமல் போயின. அது அவளுக்கு உறுதுணையாக இருந்து ஆடம்பரமாக வாழ தடை ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்போதும் தனது மர்மமான வாழ்வை  பராமரிக்க கவனமாக இருந்தாள்.

ஒரு நாள், அருணி தனது முழு நீள கண்ணாடியின் முன் நின்று, தனது ஒப்பனைக்கு இறுதித் தொடுதல்களை கவனமாகப் பயன்படுத்தினாள். அவளது பிரதிபலிப்பு அவளைப் பார்த்து புன்னகைத்தது, பரிபூரணத்தின் பார்வை. தன் அழகால் எந்த மனிதனையும் தன் காலில் விழ வைக்க முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். ஆனால் அருணியிடம் வெறும் தோற்றம் மட்டும் இல்லை—அவளுக்கு மக்களைப் படிக்கும் திறன், அவர்கள் விரும்புவதைப் புரிந்துகொள்வது மற்றும் அதைவிட முக்கியமாக, அவர்களை எதாவது பரிசுகள்  அவளுக்குக் அடிக்கடி கொடுக்க செய்யும் திறன் எல்லாவற்றையும் தாராளமாக கொண்டிருந்தாள்.

மதிப்புமிக்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாக இருந்தது, அவளது இந்த வாழ்க்கையை மறைக்க எதுவாகவும் இருந்தது. அவளை பார்ப்பவர்கள், அவளை ஒரு புத்திசாலி, நம்பிக்கைக்குரிய எதிர்காலத்துடன் உந்தப்பட்ட இளம் பெண் இப்படித்தான் எடை போட்டார்கள், ஆனால் திரைக்குப் பின்னால், அருணி ஒரு வித்தியாசமான சாம்ராஜ்யத்தை - ஏமாற்றும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினாள். அவளுடைய உண்மையான செல்வம் கடின உழைப்பு அல்லது குடும்ப அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல, ஆனால் அவள் திறமையாக கவர்ந்திழுத்த மற்றும் கையாளப்பட்ட இளைஞர்களின் பைகளில் இருந்து வந்தது தான்! 

அருணியின் இந்த ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே, பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தொடங்கியது. செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பணக்கார சட்டக்கல்லூரி மாணவன், லலித் உடன் அவளின் முதல் தொடர்பு ஏற்பட்டது. அவள் அவனை ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் சந்தித்தாள், லலித்தின் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பர கார், அருணியை அவனை தேர்ந்தெடுத்து அணுக்கவைத்தது. அங்கு அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் ரசித்தன. அதை கச்சிதமாக சரியாக கையாண்டாள்.  

அவர்களின் "உறவு" தொடங்கிய சில வாரங்களில், அருணி தனது நிதி நெருக்கடிகளை பட்டும் படாமலும் குறிப்பிட்டாள். தெற்கில் ஒரு கிராமத்தில் உள்ள தனது குடும்பம் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது தவிக்கிறது என்றும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் லலித் இடம் கூறினாள். தனது காதலை நிரூபிக்க ஆசைப்பட்ட லலித், உடனடியாக உதவ முன்வந்தான். முதலில், இது சிறிய தொகையாக இருந்தது - கல்வியை ஈடுகட்ட போதுமானது. ஆனால் விரைவில், அருணி மேலும் பலவற்றைக் கேட்கத் தொடங்கினாள். புதிய புத்தகங்கள், ஒரு மடிக்கணினி மற்றும் இறுதியில், "தனது குடும்ப வீட்டை கடனில் இருந்து காப்பாற்றவென ஒரு பெரிய தொகையையும் பெற்றாள்.  காதலால் கட்டுண்ட லலித், அவள் கேட்டதை எல்லாம் கொடுத்தான். அவள் அவனை பொருளாதார ரீதியாக வடிகட்டியதும், அருணி மெதுவாக தன்னை, சில காரணங்களை கவலையாக கண்ணீருடன் கூறி அவனிடம் இருந்து விலக்கிக்கொண்டாள். என்ன நடந்தது என்பதை லலித் உணர்ந்து கொள்வதற்குள், அருணி தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தாள்.

அவளுடைய அடுத்த பலி இன்னும் எளிதாக இருந்தது. சஞ்சய், ஒரு தொழில்நுட்ப தொழிலதிபர். சமூக ஊடகங்கள் மூலம் அவளை ஆன்லைனில் கண்டுபிடித்தான். அருணி தனது இன்ஸ்டாகிராமைக் கச்சிதமாகத் தொகுக்கக் கற்றுக்கொண்டாள் —  உயர்தர சிற்றுண்டிச்சாலைகளில், மடிக்கணினியைத் திறந்து வைத்துக் கொண்டு படிப்பது, சூரிய அஸ்தமனத்தில் கடற்கரையோரம் நடப்பது போன்ற தனது படங்களை  கச்சிதமாக பதித்து, தனது உண்மையான கஷ்டமான வாழ்வை மறைத்து, ஆடம்பரமான நேர்த்தியான ஒரு பொய்யான வாழ்க்கையை அவள் சித்தரித்தாள், அதன் மூலம் சஞ்சய் போன்ற ஆண்களை அவள் கவர்ந்தாள். 

அவர்களின் ஆன்லைன் உரையாடல்கள் விரைவாக உல்லாசமாக மாறியது, அருணி அவனது புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் பாராட்டினாள். சஞ்சய், தனது மேல் உள்ள அவளது கவனத்தால் மகிழ்ச்சியடைந்து, அவளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினான். விலையுயர்ந்த நகைகள், வடிவமைப்பாளர் கைப்பைகள் மற்றும் ஒரு ஆடம்பர கைக்கடிகாரம் என அவை தொடர்ந்தன. ஒரு நாள், அவள் தன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும், அவளுடைய கல்விக்கு பணம் செலுத்துவதற்கும் எப்படி கடினமாக உழைக்கிறாள் என்பது பற்றி சில பொய்க் கதைகளை அவனின் மார்பில் சாய்ந்து, அவனின் இருகைகளையும் பிடித்தபடி சொன்னாள். சஞ்சய், அவளின்  பளபளக்கும் உடலின் கவர்ச்சியில் தன்னை முழுமையாக இழந்தவன், அவள் தான் தனது வருங்கால துணைவி என்ற நம்பிக்கையில், சிறிதும் யோசிக்காமல் அவளுடைய கணக்கில் பணத்தை மாற்றினான். இப்படி மெல்ல மெல்ல ஒரு நம்பிக்கையில் மூன்று மில்லியன் ரூபாய் கொடுத்துவிட்டான். ஆனால் ஏதோ தவறு நடப்பதாக சஞ்சய் உணர்ந்ததற்குள், அவள்  தனது அடுத்த இரையான வேறொருவனை தேர்ந்தெடுத்து அவனை கைவிட்டுவிட்டாள். 


ஒரு நாள், அருணி கணினித் திரையில், தனது இன்ஸ்டாகிராம் செய்திகளின் வேறு பகுதிகளைக் காண நகர்த்தல் [ஸ்க்ரோல் / scroll] செய்து கொண்டிருந்த போது, சமீபத்தில் கொழும்புக்கு குடிபெயர்ந்த யாழ்ப்பாண தமிழ் மருத்துவர் டாக்டர் சுரேன் என்பவரிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. சுரேன் சாதாரண இளைஞன் அல்ல. ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ வாழ்க்கை மற்றும் ஆழ்ந்த ஒழுக்க உணர்வுடன், அவன் யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரின் கஷ்டங்களிலிருந்து தனது நிலையை கல்வியினால் உயர்த்திய ஒருவன். அவள் முன்பு சந்தித்த, லலித் மற்றும்  சஞ்சய் போன்ற ஆண்களைப் போலல்லாமல், சுரேன் மேலோட்டமானவற்றால் ஈர்க்கப்படவில்லை. அவன்  சிந்தனையுடனும், ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனுடனும், எச்சரிக்கையுடனும் இருந்தான், ஆனால் அருணி எப்படியும் அவனை வெல்ல வேண்டும், கவரவேண்டும் என் உறுதியாக இருந்தாள். 

சுரேன் போன்ற ஒரு மனிதனை அவளால் வெல்ல முடிந்தால், அவளுடைய வெற்றிகள் முழுமையடையும் என திட்டம் போட்டாள். சமூக ஊடகமூடான ஆரம்ப அரட்டைகள் சாதாரணமாக இருந்தன. சுரேன் தனது பணியைப் பற்றியும், சுகாதாரத் துறையில் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற தன் நம்பிக்கையையும் பகிர்ந்தான். அதே நேரத்தில் அருணி சமூக நீதியில் ஆர்வமுள்ள இரக்கமுள்ள, பண்பட்ட இளம் பெண்ணாக நடித்தாள். அவனின் கவனத்தை தன்பால் இழுக்க, தான் தெற்கில் பிறந்தாலும், யாழ் நூலக எரிப்பு, கருத்த ஜூலை, முப்பது ஆண்டு போராட்டம், 2009 இறுதிப்போர் அழிவுகள் என்பதில் தானும் கவலைப்படுவதாக, நீதியை வெளிப்படையாக அறிய ஆவலாக இருப்பதாக பதில் அளித்தாள். 


அருணி, யாருக்கும் பொய் சொல்லி ஏதாவது செய்ய அல்லது நம்பும்படி வற்புறுத்தும் கலையில் [Art of Con] நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் டாக்டர் சுரேனைச் சந்திக்கும் இந்த தருணத்தில், அவள் சொகுசாக வாழ்ந்ததுடன் தனக்குத் தேவையான பணமும் பொருளும் தன் "விழிகளின் வித்தை" மூலம் ஏற்கனவே ஓரளவு சேர்த்துவிட்டாள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்திருந்த இளம் வைத்தியரான சுரேன், அருணியின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு தொண்டு நிகழ்வில் அவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்தனர். எப்போதும் மக்களைப் படிக்கும் அருணி, சுரேனின் கருணையையும் அவனது சமூகப் பொறுப்புணர்வையும் விரைவாக உணர்ந்தாள். அவளுடைய அடுத்த திட்டத்திற்கு அவன் சரியானவன் என்று உணர்ந்து தனது சீட்டாட்டத்தை கவனமாக விளையாடத் தொடங்கினாள். இந்த முறை தன்னை ஒரு கடின உழைப்பாளியாக சித்தரித்து, ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்ணாக தன்னைக் காட்டினாள். ஆனால் நிதிச் சுமைகளால் அதைத் தொடருவது தடையாக உள்ளதாக எடுத்துக் கூறினாள்.

அவளின் கண் பார்வையிலும், அழகிலும் நடத்தையிலும் கவரப்பட்ட சுரேன் அவளிடம் தன்னை அறியாமலே ஈர்க்கப்பட்டான். அவனுக்கு அவள் அந்தக்கணம் உண்மையானவளாகத் தோன்றினாள், அவர்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர், காபி மற்றும் இரவு உணவுக்காக மேசையில் மற்றவர்களுடன் சேர்ந்து கூடினர். இருவரும் அருகில் அருகில் அமர்ந்தனர். அருணி முதலில் எதையும் கேட்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள், சுரேனை தன்னில் ஆழமாக நேசிக்கக் கூடியவாறு பேச்சிலும் செயலிலும் நடந்துகொண்டாள். அவள் தனது போலியான கஷ்டங்களை நுட்பமாக அவன் மனதில் விதைக்கும் போது அன்பான, ஆதரவான காதலியாக மிக நெருக்கமாக நடித்தாள். சுரேனும் அத்தனையும் உண்மையென நம்பினான்.

அவள் கூட இம்முறை, அவனின் கல்வித் திறனையும், மதிப்பையும் பெருமையையும் மற்றும் செல்வச்செழிப்பையும் அறிந்து, மற்றும் ஏமாற்றும் வித்தையை தொடர்ந்து செய்வதில் ஏற்படும் தடைகளை  உணர்ந்து, தனது இறுதி "விழிகளின் வித்தை" யாக்கி அவனைத் நிரந்தரமாக திருமணம் செய்யும் எண்ணமும் அவளுக்கு ஒரு மூலையில் இருந்தது. காலப்போக்கில், அவள் கவனமாக நம்பிக்கையின் விதைகளை சுரேனிடம் விதைத்தாள், 

என்றாலும், அவளின் முன்னைய பழக்கத்தை முற்றாக துறந்துவிடவில்லை. ஒரு மாலை, காலி முக ஹோட்டலில் இரவு உணவிற்குப் பிறகு, நிலா ஒளியில், மங்கலான இருட்டில் கடற்கரையில் இருவரும் கையை பற்றிக்கொண்டு உலாவும் பொழுது, அருணி தயக்கத்துடன் தன் குடும்ப விடயத்தை எடுத்துரைத்தாள். தன் பெற்றோர் எவ்வாறு கடனில் உள்ளனர் என்பதையும், தன் தாய் நோயுற்று இருப்பதையும், கல்விக் கட்டணம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவள் எப்படிப் போராடுகிறாள் என்பதையும் அவள் சுரேனிடம் கூறினாள். அவள் மேல் உள்ள காதலாலும், அழகு கவர்ச்சியாலும் நம்பிக்கையாலும் உடனடியாக உதவ முன்வந்தான்.  சிறிது நேரம், அருணி மீண்டும் ஒருமுறை வெற்றியடைந்துவிட்டதாக எண்ணினாள். என்றாலும் அவன் மனதில் ஒரு ஐயப்பாடும் மின்னலெனத் தோன்றியது. அது எப்படி இவள் ஆடம்பர விலை உயர்ந்த டிசைன் அலங்காரங்களும் உடைகளும் அணிவதுடன், ஆடம்பர ஹோட்டலிலும் இருக்கிறாள் என்பதில் அவனுக்கு ஒரு கேள்வி மனதில் பிறந்தது. எனவே அவன் அவளை முதலில் சோதிக்க விரும்பினான். 

ஒரு டாக்டராக அவன் இருந்ததால், அவன் அவளது நோயுற்ற தாயை நேரடியாக பார்க்கவும், மற்றும் அவளின் குடும்ப நிலையை மறைமுகமாக சரிபார்க்கவும் அவன் நினைத்தான். அருணி உடனடியாக எதோ சாக்குப்போக்குகளை சொல்லி கடத்தினாள். அது சுரேனின் சந்தேகத்தை மேலும் கூட்டியது. ஆனால் அதை அவன் வெளியே காட்டவில்லை. ஆனால் விரைவில், சுரேன் அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

அருணி தனது திட்டங்கள் இம்முறை இழுபட்டுக்கொண்டு போவதையிட்டு தனக்குள் ஒரு பயமும் கவலையும் அடைந்தாள். சுரேனை தனது வலையில் இறுதி சுறாவாக நினைத்ததில் ஒரு தடுமாற்றம் கண்டாள். அவன் முன்போல் இல்லாமல் கொஞ்சம் தள்ளி பழகுவதும், இதுவரை அவள் வைத்த கோரிக்கைகள் அப்படியே கிடங்கில் இருப்பதும் அவளுக்கு ஒரு தெளிவில்லாமல் இருந்தது. அதனால் அவள் மீண்டும் தன் வலைக்கு இறை தேட ஆரம்பித்தாள், அதனால் அவள் அடிக்கடி சுரேனை சந்திப்பது குறையத் தொடங்கியது. அவளின் சந்திப்புகள் குறைந்து போவதைக் கண்ட சுரேன், அவளிடம் ஏன் சந்திக்கவில்லை, எங்கே இருந்தாள் என்று கேட்டபோது, அவளுடைய பதில்களில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது. அவன் ஒரு மருத்துவ நிபுணன் ஆச்சுதே, அவனுக்கு எதோ ஒரு பித்தலாட்டம் நடைபெறுகிறது என்று புரிந்துவிட்டது. அவன் தனது நண்பர்கள் சிலருடன் பேசத் தொடங்கினான், அவர்களில் ஒருவன் தான்  கொழும்பில் ஒரு பெண் பணக்கார இளைஞர்களை ஏமாற்றுவதாக ஒரு வதந்தியைக் கேட்டதாக கூறினான். என்றாலும் சுரேன் முதலில் அதை தான் காதலித்த அருணியாக இருக்கும் என்று நம்பவில்லை.   

ஒரு நாள், அருணி  சுரேனை சந்தித்த பொழுது, அவள் தனது  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாததால், தான் பகுதி நேர வேலைக்குப் போவதாகவும், அதுதான் சந்திக்க முடியவில்லை என அழாக்குறையாக கூறி, திருப்பவும் உதவி கேட்டாள். ஆனால் அவனோ அவளுக்குப் பணத்தைக் மீண்டும் கொடுக்கவில்லை, ஆனால் தானே நேரடியாகச்  பல்கலைக்கழகத்திற்கு செலுத்த முன்வந்தான். அருணிக்கு என்ன செய்வதென்றே தடுமாறினாள். அப்போதுதான் சுரேனின் சந்தேகம் உறுதியானது.

அவன் மீண்டும் தனது கடந்தகால அறிமுகமானவர்களில் சிலரை அணுகி அவளைப்பற்றி விசாரித்தான். அருணி தனக்கு முன் பல ஆண்களை இதேபோன்ற கஷ்டங்கள் மற்றும் நிதித் தேவைகளுடன் அணுகியுள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு முறையும், அவள் அவர்களை "விழிகளின் வித்தை" மூலம் காதல் அடிமையாக்கி, பணம் கறப்பதை அறிந்தான். 

ஒரு நாள் மாலை, சுரேன் அருணியை ஒரு தனியார் உணவகத்தில் இரவு உணவிற்கு அழைத்தான், அங்கு அவன் அவளிடம் பேசுவதற்கு முக்கியமான விடயம் இருப்பதாக கூறினான். அருணி, தான் அவனைத் தன் விரலில் மாட்டிக் கொண்டதாக நம்பி, ஒருவேளை விலையுயர்ந்த பரிசைக் கூட எதிர்பார்த்து அவள் வந்தாள். ஆனால் அதற்குப் பதிலாக, சுரேன் அவளுக்கு ஆதாரங்கள் நிறைந்த வங்கி பரிமாற்றங்கள், பிற ஆண்களிடமிருந்து வந்த செய்திகள் மற்றும் அவர்களுடன் அவள் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்கள் [திரைப்பிடிப்பு / Screenshot] அடங்கிய அத்தாட்சிகளை வழங்கினான். 

"என்னை நன்றாக விளையாடினாய், அருணி," என்று சுரேன் சொன்னான், அவன் குரல் அமைதியாக இருந்தாலும் ஏமாற்றம் நிறைந்தது. "ஆனால் நல்ல காலம் நான் கவனமாக இருந்துவிட்டேன்" 

அவள் தடுமாற்றத்துடன், "எனக்கு வேறு வழியில்லாததால் இதைச் செய்தேன். என் குடும்பம் ..." என்று இழுத்தாள். 

"நிறுத்து," சுரேன் குறுக்கிட்டு, அவனது குரல் கடுமையாக இருந்தது. "என்னுடன் நேர்மையாக இருக்க நான் உனக்கு பல வாய்ப்பைக் கொடுத்தேன், நான் உன்னை நம்ப விரும்பினேன், ஆனால் இப்போது நான் பார்ப்பது என் கருணையைப் பயன்படுத்திக் கொண்ட ஒருவரைத் தான்." அவன் கடுமையாக சொன்னான். 

முதல்முறையாக அருணிக்கு என்ன பேசுவதுவென வார்த்தைகள் புரியாமல் தவித்தாள். கவனமாகக் கட்டமைக்கப்பட்ட அவளது வஞ்சக வாழ்க்கை அவள் முன் நொறுங்கியது. "விழிகளின் வித்தை" க்கு இனி அங்கு இடம் இல்லை. அருணியை, தன் செயலின் விளைவுகளைத் தனியே எதிர்கொள்ள விட்டுவிட்டு, நடந்தான்.

"வாழ்க்கை என்பதே ஒரு வித்தை தான்
அதிலும் "விழிகளின் வித்தை" இன்னும் ஒரு ரகம்!  
அதில் சிக்குவது என்பதும் சிறையாவது என்பதும் 
உன் புத்தியிலும் நடத்தையிலும் தான் உள்ளது!!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

466737581_10227139949707384_8397398752777636441_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=eatZ9Xpn6HkQ7kNvgHuTVti&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AkD1gAdfKyOGaizPkrrjqNJ&oh=00_AYAxZ_OLlFuSR1Pey9PaCIsq-tb6dyavbFJ_8adU00bdAw&oe=673BA288  467306708_10227139949107369_4996210315050741889_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=rvNEpvR1IisQ7kNvgFOAAB1&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AkD1gAdfKyOGaizPkrrjqNJ&oh=00_AYAOjIHGZh9b_6UsgnBt4geYcxcgephs7YezIIuFXyDexA&oe=673BA4BA

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.