Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"நல்லிணக்கக் தணல்"
 
 
இலங்கை யாழ் நகரில், புகையிரத நிலையத்துக்கும் நாவலர் மணடபத்துக்கும் அருகில் உள்ள அத்தியடி என்ற ஒரு இடத்தில் தில்லை என்ற ஒரு நபரும் அவரது மனைவி ஜெயாவும் வாழ்ந்து வந்தார்கள். ஜெயா ஒரு பாரம்பரிய மனிதராக இருந்ததுடன் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளில் ஆழமாகவும் வேரூன்றி இருந்தார், அதே நேரத்தில் தில்லையோ மிகவும் நவீனமாகவும் திறந்த மனதுடனும், மாற்றங்களை தேடுபவனாகவும், மூட நம்பிக்கைகள் மற்றும் சமயங்கள் வியாபாரமாக செய்யும் செயல்களை எதிர்ப்பவனாகவும் இருந்தார். இருவருக்கும் இடையில் சில பல கருத்து வேறுபாடுகள் இருந்ததால், ஒருவரையொருவர் நேசிப்பது, அல்லது நல்லிணக்கம் ஒரு தீப்பிழம்பு போல இருந்தது. அது எரிந்து ஒளி கொடுக்கவும் இல்லை, அணைந்து இருள் கொடுக்கவும் இல்லை. அது தணலாக முடங்கி கிடந்தது.
 
ஜெயா அத்தியடி பிள்ளையார் கோவிலின் தீவிர பக்தராக இருந்தார், அங்கு அவர் பெரும்பாலான ஓய்வு கிடைக்கும் வேளையில் பிரார்த்தனை செய்வதிலும், தெய்வங்களின் வழிகாட்டுதலைப் பெறுவதிலும் செலவிட்டார். அவர் பாரம்பரியத்தின் சக்தியை நம்பினார் மற்றும் புராணங்கள் அவதாரங்கள் போன்றவற்றில் கூறியவற்றை அப்படியே எந்த கேள்வியும் இன்றி ஏற்று அதில் எப்போதும் திருப்தி அடைந்தார். மறுபுறம், தில்லை ஒரு இலட்சியம் கொண்ட குடும்பத் தலைவனாக, கணவனாக இருந்தார். அறிவையும் உண்மையையும் தேடி என்றும் வாசிப்பதிலும், மற்றவர்களுடன் அலசுவதிலும் ஓய்வு நேரத்தை செலவழித்தார்.
 
ஒரு மாலை நேரத்தில், சூரியன் அடிவானத்திற்குப் பின்னால் சாய்ந்தபோது, தில்லை மற்றும் ஜெயா இருவரும் அவர்களின் சாதாரண சுண்ணாம்புக் கல் வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்தனர். மெல்லிய தென்றல் காற்று பிள்ளையார் கோவிலின் தூபத்தின் நறுமணத்தை எடுத்து வந்து அங்கு வீசியது. "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்ற பாடல் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தது. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களின் "நிழல் படம்" [நிழல்வடிவம்], சூரியன் மேற்கு திசையில் மறைவதை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. இத்தனை அழகு சூழலில் காதலர்கள் , இளம் தம்பதிகள் மனம் என்ன பாடுபடும் என்று தெரியாவார்கள் உலகில் இருக்க மாட்டார்கள்? ஆனால் ஜெயா அப்படி இல்லை. அவளுக்கு கோவிலின் தூபத்தின் நறுமணம், கணவனை தனிய விட்டுவிட்டு, எந்த வருத்தமும் தெரிவிக்காமல், பூசைக்கு போய்விட்டாள். கணவனும், மனைவியும் எவ்வாறு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை அவள் பொருட்படுத்தவில்லை.
 
"சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி. "
 
பாலை நிலத்தில் காதல் மிகுந்த ஆண் மானும், பெண்மானும் ஓடிக்களைத்து தாகம் தீர்க்க நீர்வேண்டி, அங்குமிங்கும் அலைகின்றன. ஒரு சுனையில் ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே சிறிதளவு நீர் உள்ளது. இந்நிலையில், பெண்மான் நீர் அருந்தட்டும் என்ற உயரிய நோக்கோடு ஆண்மான், தான் நீரைப்பருகுவது போல் பாவனை செய்தது. அதே போல் பெண்மானும் நீரைப் பருகாமல் ஆண் மான் அருந்தட்டும் என்று நீர் அருந்துவது போல் பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. ஆனால், அவள் தன் நம்பிக்கை, தன் வழக்கமான செயல்களில் தான் முக்கிய கவனம் செலுத்தினாள். நல்லவேளை நல்லிணக்கம், தில்லையின் விட்டுக்கொடுப்புகளால் இன்னும் அணையாமல் தணலாகவே இருந்துவிட்டது.
 
அவள் தன் பூசைகளை முடித்துவிட்டு, ஒருவேளை தன் பிழைகளை உணர்ந்தாலோ இல்லை சமாளிக்கவோ, தில்லையின் அருகில் வந்து
"என் அன்பே, எங்கள் முன்னோர்கள் இந்த ஊரிலும் கோயிலிலும் திருப்தி அடைந்தார்கள், நானும் அப்படித்தான்," ஜெயா புன்னகையுடன் கூறிக்கொண்டு "தெய்வங்கள் இந்த அமைதியான வாழ்க்கையை நமக்கு ஆசீர்வதித்துள்ளன, நாங்கள் ஏன் இன்னும் அதிகமாக விரும்புகிறோம்?" என்று மீண்டும் அருகில் இருந்தாள்.
 
தில்லை ஒரு விரக்தியை உணர்ந்து பெருமூச்சு விட்டான். அவன் ஜெயாவின் பக்தியை ரசித்தான். என்றாலும் அவளுக்கு கொஞ்சம் பொதுப்படையான விடயங்கள், நாட்டின் நடப்புகள் பற்றி அறியக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தப் படவேண்டும் என்று ஜோசித்தான். அதற்கு அவள் ஏதாவது உயர் கல்வி பெற்று, பலர் வேலை செய்யும் ஒரு இடத்தில் வேலை செய்வது நன்று என்று எண்ணினான். அப்பத்தான் நல்லிணக்கக் தணல் அணையாமல் நிரந்தரமாக எரிந்து ஒளி விடும்.
 
“அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்த்து இலக்கு வை எயிற்றுச் சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம இவ் ஊரே மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப்
பல்லோர் கூற, யா அம் நாணுகம் சிறிதே”
 
நன்றாக சிவந்துபோன நாக்கு, அணிசேர்ந்ததுபோல அழகான சிறிய பற்கள், குறைவான பேச்சு உள்ள இந்தப் பெண்ணை, ஜெயாவை அடைந்தபோது, அந்த ஊரே இந்த “நல்லவன்தான்” தில்லை, இவளின் கணவன் என்று சொல்லும்போது கொஞ்சம் வெட்கப்பட்டேன். ஆனால் இப்ப என் நிலையைப் பார்த்து முழுதாக வெட்கி தலை குனிகிறேன் என்று தனக்குள் முணுமுணுத்தவாறு அங்கிருந்து எழும்பி, அவளுக்கு பொருத்தமான உயர் கல்வி எது, அது அருகில் இருக்கிறதா என்பதைப்பற்றி இணையத்தில் தேட முற்பட்டான்.
 
நாட்கள் வாரங்களாக மாதங்களாக மாற, ஜெயா உயர்கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்று, ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளராக பணி புரியத் தொடங்கினாள். அதே சமயம் தில்லை அமைதியாக தனது கனவுகளை இதயத்தில் வளர்த்துக் கொண்டார். ஒருமுறை அந்த நிறுவனத்துக்கு வந்த ஒரு பெரியாரை சந்தித்தார். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர், "வாழ்வின் அதிசயங்களைத் , நல்லிணக்கத்தைக் திறக்கும் திறவுகோல் உங்கள் இதயத்தில் உள்ளது. உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள், நீங்கள் அவற்றைக் கண்டுபிடிப்பீர்கள்" என்று பதிலளித்தார். ஜெயாவால் அந்த வார்த்தைகளை மறக்க முடியவில்லை, ஒவ்வொரு நாளும் செல்ல, உலகத்தை, தன்னை ஆராயும் ஆசை வலுப்பெற்றது. கடைசியாக தன் அபிலாஷைகளை தன் கணவன் தில்லையிடம் தைரியமாக பகிர்ந்து, தன் முன்னைய தவறான புரிந்துணர்வு அற்ற செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாள்.
 
"தில்லை, என் அன்பே, நான் இப்ப உலகை, என்னை அறிகிறேன். எங்கள் ஊரை, கோயிலை தாண்டி உலகத்தை, குடும்பத்தை அனுபவிக்க விரும்புகிறேன். நான் உன்னை புரிந்து, உன்னுடன் நல்லிணக்கமாக வாழ, காதலிக்க விரும்புகிறேன். அதேநேரம் எங்கள் பாரம்பரியங்களை நிராகரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. நான் கற்றுக்கொண்டு வளர விரும்புகிறேன்," ஜெயா தீவிரமாக விளக்கினார்.
 
தில்லை முதலில் அதை நம்பவில்லை, ஆனால் ஜெயாவின் கண்களில் உறுதியைப் பார்த்தான். கண்கள் மட்டுமே இப்ப பேசின. "எங்கள் பாதைகள் வேறுபட்டாலும், விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு மூலம் ஒரு நல்லிணக்கம் வளர்த்து, நாங்கள் எப்போதும் இணைந்திருப்போம். நல்லிணக்கக் தணல் முழுமையாக எரிந்து தன் ஒளியை வீசட்டும்" என்று தில்லை ஜெயாவை அணைத்துக்கொண்டான்.
 
மெதுவாக, அவர்களின் மாறுபட்ட முன்னைய நம்பிக்கைகள் ஒன்றிணையத் தொடங்கின, மேலும் ஒருவருக்கொருவர் தனித்துவத்தைப் பற்றிய பகிரப்பட்ட புரிதலுடன் அவர்களின் காதல் ஆழமாக வளர்ந்தது. அவர்கள் ஒன்றாக உலக அதிசயங்களை அனுபவித்தனர். மாறுபட்ட மனப்பான்மை மற்றும் நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை அன்பினால் குறைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டி, அவர்களது நல்லிணக்கத்தின் தீக்குச்சிகள் பிரகாசமாக எரிந்தது. இறுதியில், கணவன் - மனைவி பாரம்பரியத்தால் மட்டுமல்ல, அவர்களின் பாதைகள் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் மரியாதையின் வலிமையால் பிணைக்கப்படலாம் என்பதை அவர்கள் இருவரும் நிரூபித்து வாழ்ந்தார்கள்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
369794404_10223863768844910_7672056650082112957_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=CuNVBBgEKgkQ7kNvgEeR4QS&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AkKhArWzUUkRQZdEpa4yp_6&oh=00_AYAsa1nFn3APRX9BC0vb4PXpD7UJVxd3CCYPPP8ux7FbAw&oe=6744CEBF  374178334_10223863768884911_1987740106196777822_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=64rbr9zQ7OwQ7kNvgFoDOfO&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AkKhArWzUUkRQZdEpa4yp_6&oh=00_AYCx1KPjCVM43OapdAm3i6tzL4GEdwTc0XxmRSPK1eBGPw&oe=6744D247
 


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.