Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

படக்குறிப்பு, ராஜநாகம் குறித்த புதிய கண்டுபிடிப்பை ஊர்வன ஆய்வாளர் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

ராஜநாகம்...

பெயருக்கு ஏற்ப பிரமிக்க வைக்கும் நீளமான உருவமும், மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை படமெடுத்து நிற்கும் அதன் தோற்றமும் பார்ப்பவரை கதிகலங்கச் செய்துவிடும்.

அடிப்படையில் மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் என்றாலும், ஆய்வுகளின் போது அல்லது மீட்பு முயற்சியில் அதைக் கையாளும் போது அரிதான சூழ்நிலைகளில் ராஜநாகம் மனிதர்களைத் தாக்கும் அபாயமும் இருக்கிறது.

அத்தகைய ஒரு சூழ்நிலையின் போது, ஊர்வன ஆராய்ச்சியாளர் முனைவர் கௌரி ஷங்கரை 2005இல் ராஜநாகம் கடித்தது. ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள இந்தப் பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பிய அவர், அதன் பிறகு அதுகுறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.

அதன் விளைவாகத் தற்போது, கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவராமல் இருந்த ஓர் அறிவியல் ரகசியத்தை அவரது ஆய்வுக்குழு சமீபத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளது.

முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரின் இந்தப் புதிய கண்டுபிடிப்பு வெளிக்கொண்டு வந்துள்ள உண்மை என்ன? ராஜநாகம் பற்றிய நமது புரிதலை இது எப்படி மாற்றுகிறது?

உயிர் பிழைக்க நடந்த போராட்டம்

இந்தியாவில் மனிதர்கள் மத்தியில், பாம்புக்கடி மரணங்கள் அதிகம் ஏற்படக் காரணமாக இருப்பவை நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே.

நாகம், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய இந்த நான்கு வகைப் பாம்புகளால்தான் அதிக உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்வதாகக் கூறுகிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நஞ்சுமுறி மருந்து குறித்த ஆய்வுத் திட்ட விஞ்ஞானியும் யுனிவெர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனருமான முனைவர் என்.எஸ்.மனோஜ்.

இந்தியாவில் இந்த நான்கு பாம்புகளின் நஞ்சுக்கு மட்டுமே மருந்து உள்ளது. அதுவும், அனைத்துக்குமே கூட்டுமுறையில் (Polyvalent) பயன்படுத்தக் கூடிய நஞ்சுமுறி மருந்தே உள்ளது,” என்று கூறுகிறார் மனோஜ்.

இதுதவிர, இந்தியாவில் குறிப்பாக ராஜநாகக் கடிக்கென தனியாக நஞ்சுமுறி மருந்து இல்லை. அதற்கான மருந்து தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்படுகிறது. இருப்பினும், முனைவர் கௌரி ஷங்கர் கடிபட்ட போது அவரது உடல் தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நஞ்சுமுறி மருந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல், இந்தியாவில் கிடைக்கும் கூட்டுமுறை நஞ்சுமுறி மருந்தும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது.

 
ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நல்வாய்ப்பாக, “என்னைக் கடித்த பாம்பு முழு வீரியத்துடன் கடிக்கவில்லை. அதனால், நஞ்சின் அளவு குறைவாகவே என் உடலில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ராஜநாகத்தின் நஞ்சால் ஏற்படக்கூடிய நரம்பியல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகத் தீவிரமாகவே இருந்தன.” என்று கௌரி ஷங்கர் கூறினார்.

நஞ்சுமுறி மருந்துகள் சரிவர வேலை செய்யாத நிலையில், பாம்புக் கடியால் ஏற்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சைகள் தோராயமாக வழங்கப்பட்டதாக கௌரி ஷங்கர் கூறுகிறார்.

அதுகுறித்துப் பேசிய அவர், கோவிட் பேரிடரின் ஆரம்பக் காலத்தில் உரிய மருந்து இல்லாத காரணத்தால், அறிகுறிகளின் அடிப்படையில் எப்படி சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அதேபோல ராஜநாகக் கடியால் தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளைப் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பல இன்னல்களை எதிர்கொண்டு இறுதியாக உயிர் பிழைத்தார் கௌரி ஷங்கர். மற்ற நான்கு வகை நச்சுப் பாம்புகளுடன் ஒப்பிடுகையில், ராஜநாகத்தின் கடிக்கு மக்கள் ஆளாவதற்கான ஆபத்து குறைவுதான் என்றாலும், அதன்மீது மக்கள் மத்தியில் இருக்கும் அச்சத்தைப் போக்க அதன் குறிப்பிட்ட நஞ்சுக்கான நஞ்சுமுறி மருந்து (monovalent) அவசியம் என்று வலியுறுத்துகிறார்.

 

180 ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த ‘ரகசியம்’

ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

முதன்முதலாக 1836ஆம் ஆண்டு டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர் தியோடோர் எட்வர்ட் கேன்டோர், ராஜநாகத்தை விவரித்து முதன் முறையாக அறிவியல் ரீதியாகப் பதிவு செய்தார்.

இதர பல வகைப் பாம்புகளில் ஆய்வுகள் நடந்த அளவுக்கு ஆழமாக ராஜநாகத்தில் ஆய்வுகள் நடக்காமல் இருந்ததாகக் கூறும் முனைவர் எஸ்.ஆர் கணேஷ், கடந்த 15 ஆண்டுகளில்தான் அத்தகைய ஆய்வுகள் நடக்கத் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

முனைவர் கணேஷ், கௌரி ஷங்கருடன் இணைந்து சமீபத்திய கண்டுபிடிப்புக்குக் காரணமான ஆய்வில் பங்கெடுத்தவர். அவரது கூற்றுப்படி, பல்லாண்டு காலமாக நடந்த ஆய்வுகள் அனைத்துமே காப்பிடங்களில் இருக்கும் ராஜநாகங்கள் மீது நடத்தப்பட்டவைதான்.

"ராஜநாகங்களை அவற்றின் இயல்பான வாழ்விடங்களில் அவதானித்து, ஆழமான ஆய்வுகள் பெரியளவில் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தது. அதுவே, இத்தனை ஆண்டுகளாக அதுகுறித்த அறிவியல்பூர்வ உண்மை வெளிவராமல் இருந்ததற்குக் காரணம்" என்கிறார் அவர்.

ராஜநாகம்

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் ஹன்னா, கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக்கூடிய ராஜநாகம்

கௌரி ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகள், "உலகில் மொத்தம் நான்கு வகை ராஜநாகங்கள் உள்ளதை உறுதி செய்தன. அதிலும் குறிப்பாக, "இரண்டு வகை ராஜநாகங்களைப் புதிதாக வகைப்படுத்தி பெயரிட்டோம்,” என்று விளக்கினார் கௌரி ஷங்கர்.

இந்த ஆய்வுக்காகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ராஜநாகங்களின் மரபணுக்களை ஆய்வு செய்ததாகவும், அதில் இருந்த மாறுபாடுகளை வைத்து ஆதாரப்பூர்வமாக, ராஜநாகத்தில் மொத்தம் நான்கு வகைகள் இருப்பதை உறுதி செய்ததாகவும் கூறுகிறார் கணேஷ்.

மேலும், "கடந்த 1961ஆம் ஆண்டு வரை ராஜநாகங்களை வகைப் பிரிக்கும், பெயரிடும் முயற்சிகள் தொடர்ந்தன என்றாலும் அவற்றில் திருப்தி அளிக்கக் கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. இந்த முறைதான் முழு தரவுகளுடன் ஆதாரப்பூர்வமாக இதை உறுதி செய்ய முடிந்தது" என்றார்.

இந்த வெவ்வேறு வகை ராஜநாகங்கள், ஒன்றுக்கொன்று இனப்பெருக்கம் செய்துகொள்வதில்லை. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட ஒரு நிலவியல் அமைப்பில் ஒரேயொரு வகை ராஜநாகம் மட்டுமே வாழும் என்கிறார் கணேஷ். அதாவது, மேற்கு தொடர்ச்சி மலையில் இருவேறு வகைகளைச் சேர்ந்த ராஜநாகங்கள் வாழாது. ஒரே வகை ராஜநாகம்தான் இருக்கும்.

 

மேற்குத்தொடர்ச்சி மலையில் தனித்துவமான ராஜநாகம்

ராஜநாகம்

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் காளிங்கா, மேற்குத்தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் ராஜநாக வகை

இத்தனை ஆண்டுகளாக ஓபியோஃபேகஸ் ஹன்னா என்ற அறிவியல் பெயரைக் கொண்ட ஒரேயொரு வகை ராஜநாகமே இந்தியா முழுக்க வாழ்வதாகக் கருதப்பட்டது.

ஆனால், தற்போது தனது பத்தாண்டு கால ஆய்வின் மூலம், அந்தக் குறிப்பிட்ட அறிவியல் பெயருக்குச் சொந்தமான ராஜநாக இனம், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்வதையும், அந்த ராஜநாகமும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வாழும் ராஜநாகமும் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்தவை என்பதையும் முனைவர் கௌரி ஷங்கர் மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் வாழ்வது ஒரு தனி வகை என்பதும், இது உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத ஓரிடவாழ் உயிரினம் என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான ராஜநாகத்திற்கு ஓபியோஃபேகஸ் காளிங்கா என்றும் ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

காளிங்கா என்பது கர்நாடகாவில் உள்ள பூர்வகுடி மக்கள் ராஜநாகத்திற்குக் குறிப்பிடும் ஒரு பெயர். அவர்களது மரபார்ந்த பெயரிலேயே அதன் அறிவியல் பெயரும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைச் சூட்டினோம். இனி உலகம் முழுக்க அனைவரும் அந்த மக்கள் அழைக்கும் பெயரிலேயே ராஜநாகத்தை அழைப்பார்கள்,” என்கிறார் முனைவர் கௌரி ஷங்கர்.

ராஜநாகம்

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் பங்காரஸ், இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடிய ராஜநாகம்

உத்தர கன்னடா போன்ற பகுதிகளைச் சுற்றி வாழக்கூடிய பூர்வகுடிச் சமூகங்கள் ராஜநாகங்களை அச்சமூட்டக் கூடிய உயிரினமாகப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவை மிகவும் அவசியமான, விரும்பத்தக்க உயிரினம்.”

ராஜநாகம் தங்கள் பகுதிகளில் இருப்பதை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். நாகம், சாரை, வரையன், நீர்க்கோலி என இதர வகைப் பாம்புகளை அவை சாப்பிடுவதும் இதற்கொரு முக்கியக் காரணம். அதன்மூலம், மற்ற நச்சுப் பாம்புகளால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். ஆகையால், ராஜநாகத்தின் இருப்பை அவர்கள் அவசியமானதாகக் கருதுகின்றனர்,” என்கிறார் கௌரி ஷங்கர்.

இந்த மரபார்ந்த சிந்தனை அனைவருக்கும் பரவலாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே பிராந்திய பெயரைச் சூட்டியதாகவும், பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லூஸான் தீவுக்கூட்டத்தில் உள்ள ராஜநாக வகைக்கும் அதேபோல், பிராந்திய மக்கள் குறிப்பிடும் பெயரான சால்வட்டானா என்பதையே சூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

 

நான்கு வகை ராஜநாகங்கள்

ராஜநாகம்

பட மூலாதாரம்,P. GOWRI SHANKAR

படக்குறிப்பு, ஓபியோஃபேகஸ் சால்வட்டானா, பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடிய ராஜநாக வகை

இந்த ஆய்வின்படி,

  • மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே வாழும் வகை - ஓபியோஃபேகஸ் காளிங்கா (Ophiophagus kaalinga)
  • கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு, கிழக்கு இந்தியாவில் வாழக் கூடியவை – ஓபியோஃபேகஸ் ஹன்னா (Ophiophagus hannah)
  • இந்தோ-சீன பகுதிகளில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் பங்காரஸ் (Ophiophagus bangarus)
  • இந்தோ-மலேசிய பகுதிகளில் வாழக்கூடியவை மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள லூஸான் தீவுக் கூட்டத்தில் வாழக்கூடியவை – ஓபியோஃபேகஸ் சால்வட்டானா (Ophiophagus salvatana)

இவற்றுக்கு இடையே உடல் தோற்றத்தில் சில வேறுபாடுகள் உள்ளதாகவும், குறிப்பாக அவற்றின் உடலில் இருக்கும் வெள்ளை நிறப் பட்டைகளை வைத்து ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி தனியாக அடையாளம் காண முடியும் என்றும் விளக்குகிறார் கௌரி ஷங்கர்.

உதாரணமாக, "காளிங்காவின் உடலில் வெள்ளை நிற பட்டைகள் அதிகபட்சமாக சுமார் 40 வரை இருக்கும். அதுவே ஹன்னாவில் 70 வரை இருக்கும். பங்காரஸில் இந்த எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவும், சால்வட்டானா கிட்டத்தட்ட பட்டைகளே இல்லாத நிலையிலும் காணப்படுவதாக" விளக்கினார் அவர்.

 

ராஜநாகம் – நாகம் என்ன வேறுபாடு?

ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெயரளவில் ராஜநாகம் என்று அழைக்கப்பட்டாலும், அவை அறிவியல் ரீதியாக நாகப் பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தவை இல்லை என்கிறார் ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஷ்வரன்.

இரண்டுக்குமான வாழ்விடம், வாழ்வுமுறை, நடத்தை ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

  • நாகப் பாம்புகள் நாஜா (Naja) என்ற பேரினத்தின்கீழ் வருகின்றன. ஆனால், ராஜநாகம் ஓபியோஃபேகஸ் (Opiophagus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உடல் அளவிலேயே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு உள்ளதாகக் கூறும் ரமேஷ்வரன், “நாகப்பாம்பு 6 முதல் 10 அடி வரை வளரும். ஆனால், ராஜநாகம் 18 அடி வரை வளரக்கூடியது” என்றார்.
  • “நாகப் பாம்பின் உடல் முழுக்க ஒரே நிறத்தில் இருக்கும். ஆனால், ராஜநாகத்தின் உடலில் சீரான இடைவெளியில் வெள்ளை நிறப் பட்டைகள் இருக்கும். அந்தப் பட்டைகளின் தன்மை ராஜநாக வகைகளுக்கு இடையே வேறுபட்டாலும் அவை இருக்கும்.”
  • “நாகம் மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் தென்படும். ஆனால், ராஜநாகம் பெரும்பாலும் அடர்ந்த, உயரமான காடுகளில் வாழக் கூடியவை. இருப்பினும், அவை சில தருணங்களில் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களிலும் அவ்வப்போது தென்படுகின்றன.”
  • "நாகப் பாம்புகள் பல தருணங்களில் கூட்டமாகவும் தென்பட்டுள்ளன. ஆனால், ராஜநாகம் வாழ்விட எல்லைகளை வகுத்துத் தனிமையில் வாழக்கூடியது."
 
ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இவைபோக, இரண்டின் இனப்பெருக்கம், உணவுமுறை ஆகியவற்றிலும் வேறுபாடுகள் உள்ளதாகக் கூறுகிறார் ரமேஷ்வரன்.

அவரது கூற்றுப்படி, ராஜநாகம் தனது உடலால் சருகுகளைக் குவித்து, கூடு அமைத்து, அதில் முட்டையிடக்கூடிய பழக்கம் கொண்டவை. குட்டிகள் பிறக்கும்வரை, கூட்டில் இருந்து முட்டைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை என்றும் அவர் விளக்கினார்.

நாகப் பாம்புகளும் முட்டைகளைப் பாதுகாப்பதை அவதானித்து இருந்தாலும், கூடு அமைக்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை என்கிறார் ரமேஷ்வரன்.

இவை போக, உணவுமுறையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இரண்டுக்கும் உள்ளது. எலி, பெருச்சாளி போன்றவற்றையும் பறவைகள், நீர்நில வாழ்விகளான தவளை, தேரை ஆகியவற்றையும் நாகப் பாம்புகள் உணவாக கொள்கின்றன.

ஆனால், ராஜநாகம் மற்ற பாம்புகளையே தனது உணவுப் பட்டியலில் முதன்மையாக வைத்துள்ளது. சிறிய அளவு மலைப்பாம்பு, நாகம், பச்சைப் பாம்பு, சாரை, நீர்க்கோலி, விரியன் போன்ற பல வகைப் பாம்புகளை அவை அதிகம் உண்ணுகின்றன.

 

ராஜநாக நஞ்சுக்கான மருந்து தயாரிப்பில் இதன் முக்கியத்துவம் என்ன?

ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நஞ்சுமுறி மருந்து தயாரிக்கும் செயல்முறை மிகச் சிக்கலானதாகவும் செலவு மிக்கதாகவும் இருப்பதால், மிகவும் அவசியமான, அதிகம் தேவைப்படக் கூடிய மருந்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்குமாறு உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் நஞ்சுமுறி மருந்து குறித்து ஆய்வு செய்துவரும் விஞ்ஞானியான முனைவர் மனோஜ்.

ராஜநாகத்தின் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பதும் இந்தியாவில் அதற்கான நஞ்சுமுறி மருந்துகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்படாதமைக்குக் காரணம் என்கிறார் அவர்.

அதேவேளையில், எதுவுமே இல்லாமல் இருப்பதற்குப் பதிலாக 80% தீர்வு தரக்கூடிய நஞ்சுமுறி மருந்து தாய்லாந்தில் இருந்து கிடைத்து வருவதை, இப்போதைக்கு நிலவும் நல்ல விஷயமாகப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தும் மனோஜ், குறிப்பிட்ட பாம்புகளின் நஞ்சுகளுக்குத் தனித்துவமான நஞ்சுமுறி மருந்துகளைத் (monovalent) தயாரிக்க, அதன் தயாரிப்பு முறை எளிதாக வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

ராஜ நாகம்: 180 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த புதிய ஆய்வு – மர்மம் விலகியது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் ராஜநாகத்தின் கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், அவை சமீப காலமாக கிராமப் பகுதிகளிலும் அதிகம் தென்படுவதைக் கருத்தில் கொண்டு, நஞ்சுமுறி மருந்து தயாரித்துக் கொள்வது அவசியம் என்கிறார் கௌரி ஷங்கர்.

அதற்கு இந்த ஆய்வு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் கருதுகிறார். காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு, தாய்லாந்து நஞ்சுமுறி மருந்தோ, நம்மிடம் இருக்கும் கூட்டுமுறை மருந்தோ நூறு சதவீதம் தீர்வு கொடுப்பதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

அப்படியிருக்கும் நிலையில், "காளிங்கா ராஜநாகத்தின் நஞ்சுக்கு நஞ்சுமுறி மருந்து தயாரித்து வைத்துக்கொள்வது அவசியம்."

மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த மிகத் தீவிரமான பயம் நிலவுகிறது. அதுவே அவற்றை அடித்துக் கொல்லக் காரணமாக இருக்கிறது. ராஜநாகத்தைப் பொருத்தவரை, அவற்றின் நஞ்சை முற்றிலுமாக முறிக்கக்கூடிய மருந்து நம்மிடம் இருந்தால், அதுவே மக்களுக்கு தைரியத்தைக் கொடுக்கும். அதன்மூலம், பயத்தால் அவற்றைக் கொல்வதைத் தடுத்து, பாதுகாப்பில் கவனம் செலுத்த வைக்க முடியும்,” என்று நம்புகிறார் முனைவர் கௌரி ஷங்கர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாகங்களைப் பற்றியும் அவற்றின் நாஞ்சுகளின் வீரியங்கள் பற்றியும் நல்ல நஞ்சற்ற தகவல்கள் . .......!  👍

ஏனைய உயிரினங்களுக்கு உடம்புக்கு பின் வால் இருக்கும், ஆனால் உடம்பே வாலாகவும் வாலே உடலாகவும் கொண்ட உயிரினம் பாம்புகள்தான் ........!  

நன்றி ஏராளன் ........!  

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.