Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"கணவனை இன்னும் தேடுகிறாள்"
 
 
இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது.
பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை, 30 ஆகஸ்ட் 2020, அனிதா என்ற பெண்மணி வவுனியாவில் இதற்கு தலைமை தாங்கினார்.
 
 
இலங்கையின், வவுனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அனிதா வாழ்ந்து வந்தார். அவளும் அவளது கணவன் அர்ஜுனும் அமைதியான வாழ்க்கையை அங்கு நடத்தி வந்தனர், அவர்கள் தங்களை சூழ்ந்து உள்ள சமூகத்தின் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததுடன் நேரடியாக பங்கும் பற்றினார்கள். அர்ஜுன் ஒரு ஆசிரியராக இருந்தார், மேலும் அனிதா உள்ளூர் பெண்கள் குழுவின் முன்னேற்றத்திற்கும், அரச இயந்திரங்களாலும் இராணுவத்தாலும் அடிக்கடி எதிர்நோக்கும் இனவாத அடக்குமுறை செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மற்ற பெண்களுடன் முன் நின்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். மேலும் பெண்களின் கல்வி மற்றும் அவர்களுக்கான தேவையான அதிகாரம் ஆகியவற்றிற்காக தன்னுடைய வாதத் திறமையை அங்கு வெளிக்காட்டினார்.
 
 
வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும். சரி ... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள் ... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள். அதை அனிதா பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பார்த்தவள். ஆனால் அது தனக்கும் வரும் என்று என்றுமே சிந்திக்கவில்லை.
 
 
பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கண்டவள் தான் அனிதா. அவளின் முதல் சந்திப்பே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். அர்ஜுன் படிப்பித்தல் முடிந்து தன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். திடீரென கடும் மழை வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாதவன், அங்கே பக்கத்தில் இருந்த, குண்டுகளால் சேதமாக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்தான். என்ன ஆச்சரியம் அழகே உருவான ஒரு இளம் பெண் அங்கே பதுங்கி இருப்பதைக் கண்டான். அவளின் கண்கள் பயத்தைக் காட்டின, அவன் என்ன எது என்று விசாரிக்க அருகில் சென்றான்.
 
 
"எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!"
 
 
அர்ஜுனும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவள் தான் அனிதா. திடீரென இராணுவம் அங்கு சுற்றிவளைப்பதை அறிந்த அவள், அதில் இருந்து தப்ப அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அர்ஜுன் அவளுக்கு ஆறுதல் கூறி, இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அறிமுகம் செய்தனர். ஒருவரை ஒருவர் அறிய அறிய, ஒன்றாகிவிட்ட அவர்களின் உணர்வுகளுக்கு வெட்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களை அறியாமலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சிறிது நேரம் கண்களையும் மூடிவிட்டார்கள்.
 
 
"தாழ் இருள் துமிய, மின்னித் தண் என
வீழ் உறை இனிய சிதறி ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே,
செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5
இவளின் மேவினம் ஆகிக் குவளைக்
குறுந்தாள் நாள் மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே."
 
 
தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து இடித்து, அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக, பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் [ஆசிரியப்] பணியை முடித்து நிறைவுடன், இவளுடன் இருப்பதற்கு [இப்ப] விரும்பி வந்துவிட்ட நான், சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துக் கொண்டுஇருக்கிறேன் என்று மேகத்திடம் சொல்வதுபோல தனக்குள் முணுமுணுத்தான். இது தான் அனிதாவின் முதல் சந்திப்பு. அவர்கள் இருவரும் இணைபிரியா காதலர்களாக, கணவன் மனைவியாக அன்றில் இருந்து இன்றுவரைக் காணப்பட்டனர்.
 
 
ஒரு நாள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை நடத்துவதாகக் கூறி, அவர்களது கிராமத்தில் அரசுப் படைகள் இறங்கியபோது, அவர்களது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன், விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்று கிராமத்துப் பெண்கள் பதற்றமும் பயமும் கொண்டு பின் தொடர முற்பட்டார்கள். என்றாலும் அரசு தற்காலிக ஊரடங்கு சட்டம் போட்டு அதை நிறுத்திவிட்டனர்.
 
 
நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியது, ஆனால் பிடித்துக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவதற்கான அறிகுறி இன்னும் காணப்பட வில்லை. அனிதா, அர்ஜுன் மீதான அன்பாலும், நீதியின் ஆழமான உணர்வாலும் தூண்டப்பட்டு, கண்ணகி போல நீதிக்கு குரல்கொடுக்க, குரலற்றவர்களின் குரலாக மாறினாள். அவள் மற்றும் சிலரின் துணைகளுடனும் ஆதரவுடனும் அயராது பிடித்துக்கொண்டு போனவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தேடி, அவர்களின் விடுதலைக்காக வாதிட்டார்.
 
 
வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் இன்னும் தேடிவருகின்றனர். அவர்களுடன் அனிதா போராட்டங்களில் கலந்து கொள்ளவும், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் நாளாந்த வாழ்வில் தனது சமூகம் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக பேசவும் தொடங்கினார். அது மட்டும் அல்ல, அப்படியான மற்ற குடும்பங்களுக்கு வலிமை மற்றும் துன்பங்களைத் தாங்கும் திறன் மற்றும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மீள்வது போன்றவற்றுக்கு அவள் ஒரு அடையாளமாக மாறினாள். மேலும் மற்றவர்களுடன் ஒன்றாக, அவர்கள் ஒரு ஆதரவு வலைப்பின்னலை [நெட்வொர்க்கை] உருவாக்கி, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் கூட்டுக் குரலாக அதை பெருக்கினர் அல்லது மாற்றினார்.
 
 
காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து, உண்மை கண்டுபிடிக்கப் பட்டு, நீதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் அனிதா முதன்மை படுத்தி தன்னை அதில் இணைத்துக் கொண்டாள்.
எவ்வாறாயினும், அரசாங்கம் இவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூற்றுக்களை நிராகரித்தது. என்றாலும் அனிதா, மனம் தளராமல், நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தாள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்களைச் சந்தித்தாள், மேலும் சர்வதேச அமைப்புகளை அணுகினாள். ஆரம்பத்தில் ஆதரவளித்த சமூகம், அதிகாரிகளின் அழுத்தத்தை உணரத் தொடங்கியது. சில கிராம மக்கள், பின்விளைவுகளுக்கு பயந்து, அனிதாவிடமிருந்தும் போராட்டத்தில் பங்கு பற்றுவதில் இருந்தும் தங்களைத் தூர விலக்கினர். இதனால் அனிதா தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டாள். ஆனாலும், அவள் விடா முயற்சியுடன், தன் கணவன் மீதான அன்பாலும், உண்மை வெல்ல வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாலும் தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தாள்.
 
 
வருடங்கள் செல்ல செல்ல அனிதாவின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் நீதிக்கான அழைப்பில் இணைந்தனர். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது, எனவே இதை எப்படியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என இறுதியாக அரசும் தீர்மானத்தித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அரசு தலைவர்கள் மாறினார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. என்றாலும் அனிதாவின் பயணம் அநீதியை எதிர்கொள்வதில் ஒரு தனி நபரின் தைரியத்தின் சக்திக்கு சான்றாக அமைந்தது, மற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்கவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடவும் அது தூண்டியது. ஆனால் அனிதா ? அவளுக்கு என்ன நடந்தது? ஒரு மர்மமாக தொடர்கிறது.
அனிதா இப்ப தன் சுய நினைவை இழந்துவிட்டாள் அல்லது இழக்கச் செய்யப்பட்டு விட்டாள்? அவள் அர்ஜுனை முதல் முதல் சந்தித்த அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் பைத்தியக்கார பெண்ணாக வாழத் தொடங்கிவிட்டாள்.
 
 
"கனவு எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன
நாள் ஒன்றில் தெருவில் தனித்து நின்றாள்
சிரித்துக் கொண்டு அர்ஜுன் அர்ஜுன் என்றாள்!
கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள்
தூரத்தில் போய்நின்று வேடிக்கை பார்த்தார்கள்
கூட்டமாய் நின்று அவள் வரலாறு கூறினர்
ஏளனமாய் பார்த்து மௌனமாகவும் போனார்கள்!
விதி சதி செய்து வீதிக்கு வந்தாள்
கதி இதுவே என வாழ்வு அழைக்க
பாழடைந்த கட்டிடத்துக்கு உள்ளே புகுந்தாள்
அன்பே அன்பே என்று எங்கும் தேடினாள்"
 
 
அனிதா அர்ஜுனை தேடி பேதுற்றுப் புலம்பிக் அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் அங்கும் இங்கும் ஓடினாள். தன் காதல் கணவனை கண்டீரோ என்று சத்தம் போட்டு கேட்டுக் கொண்டு அலைந்தாள். இராணுவத்தின் பிடியில் வலாற்காரமாக இழுத்து செல்லப்பட்ட , “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள்.
 
 
"கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன்
வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல்
சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என"
 
 
ஒரு சங்கப் பாடலை முழங்கினாள். உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவர்களாகவே இருக்கிறோம். இவளோ
கணவனை அடைய, மீட்டு எடுக்கும் முயற்சியில் , சிலரின் வஞ்சகத்தால், பாவம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு, என்ன செய்கிறோம் என்று அறியாமல், கணவனை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாள்.
 
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
  468007552_10227480119091406_3240021608473317610_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=kxn03xgAFKUQ7kNvgE5v-Vw&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ALwaWmt4KdSoNEEssOpMEjg&oh=00_AYDkO2R7TUay-RTmf0-YQ27W6JnZIiVwJsfpcN08wueO-A&oe=6748D53D  468002552_10227480105091056_111110324649526698_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=HAZK5LTqDmUQ7kNvgG5NDUf&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ALwaWmt4KdSoNEEssOpMEjg&oh=00_AYAz5UAXENFpWf65QSJ9guE7yhcriw8CRLLaELk6jKOIzA&oe=6748E516


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.