Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"சிறு துளிகள்"

 

ஒரு காலத்தில், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏங்கும் பச்சைபசேலென இயற்கை அன்னையின் கொடையை அதிகமாகவே பெற்றும், சலசலுக்கும் அருவியின் ஓசையும், ஓயாமல் கூவிக்கொண்டு இருக்கும் குயிலின் ஓசையும் அபூர்வமான தூய காற்றையும் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும் நெற்கதிரையும் பெற்று, காண காண திகட்டாத மண்ணுலக சொர்க்கமாக திகழ்ந்த அவளின் கிராமத்தின் அழகை காணும் போதெல்லாம் அன்று தன் இதயத்தில் தோன்றும் வலியை மறந்துவிடும் அருள்விழி, தன் குடும்பத்தின் நெற்பயிர்களுக்கு அன்று உயிர் கொடுத்த அந்த மண், இன்று விரிசல் அடைந்தும் காய்ந்தும் கிடப்பதை தனது வயலின் ஓரத்தில் நின்று பார்த்தாள். ஆனால் இன்று, அந்த முன்னைய பசுமையான நிலப்பரப்பு, இராணுவத்தால் தடை செய்யப்பட்ட பாதுகாப்பு வலயமாக வலுக்கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. அவளுடைய கண்கள், சோகம் மற்றும் கருணையின் ஆழமான கிணறுகளாக,  சொல்லொணா இழப்பின் கனத்தை சுமந்தன. இலங்கையின் வடக்கு மாகாணத்தை சீரழித்த போரில் அவளது கணவரும் அவளது இரண்டு குழந்தைகளும் பலியாகினர். குண்டுவெடிப்புகள் உயிர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் அவர்களின் வீட்டையும் அழித்துவிட்டன, அருள்விழி தனது இரண்டு இளம் குழந்தைகளான [டீன் ஏஜ்] கனிமொழியன் மற்றும் ஒயிலழகியுடன் உயிர்வாழப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் அத்தனையும் இழந்த போதிலும், அருள்விழி தன்னிடம் இருந்து எந்த போரும் எடுக்க முடியாத ஒரு விடயத்தை வைத்திருந்தாள், அது தான் அவளின் உறுதியான நம்பிக்கை!. அருள்விழி ஒவ்வொரு சிறு துளிகளையும் ஒவ்வொரு சிறு செயல்களின் சக்தியையும் நம்பினாள், "சிறிய துளிகள்" இறுதியில் ஒரு பெரிய கடலாக மாறும் என்பதில் அவளுக்கு ஐயம் இருக்கவில்லை. மாற்றத்தின் வெள்ளம் அவர்களின் வாழ்க்கையைத் தழுவும் வரை, ஒவ்வொரு சிறிய அடியும், தரிசு மண்ணில் பெய்யும் மழையைப் போல, மெல்ல மெல்ல வலுசேர்க்கும் என்பதால், தன் குழந்தைகளுக்கும் தனக்கும் எதிர்காலத்தை மீட்டெடுப்பதில் உறுதியாக, ஒரு நேரத்தில் ஒரு சிறிய படியாக, ஒரு சிறு துளியாக, திட்டங்களைச் செய்யத் தொடங்கினாள்.

"சிறுசிறு துளியாய் மழைத் துளி 
சிறு தரையில் விழுந்து சிதறியதே! 
சிறு துளிகள் ஒன்றாய்க் கூடிக்கூடி   
சிறுதூறல் மழை ஒன்று சாரலானதே!" 

"அடைமழை ஆகி அழகாய் விழ 
அனைவரின் தேகமும் மகிழ்வில் நனைந்ததே! 
அன்றைய எம்பூமியும் துளிர்கள் விட   
அழகிய சிறுதுளி பெருவெள்ளம் ஆகியதே! 

ஒரு காலத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தத்தாலும், அன்றாட வாழ்க்கையின் ஓசையாலும் துடிப்பான கிராமமான அது இன்று மிகவும் அழகிழந்து அமைதி சிதைந்து நலிந்து காணப்படுகிறது. ஒரு காலத்தில் விவசாயிகள் விடியற்காலையில் இருந்து மாலை வரை உழைத்த சலசலப்பான நெற்பயிர்கள், இப்போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு, அருள்விழியின் குடும்பத்தையும் அவளைப் போன்ற மற்றவர்களையும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அவர்களை ஒரு விளிம்பிற்குத் தள்ளி உள்ளது.

நினைவுகளால் அவளின் இதயம் கனத்தது அருள்விழி பெருமூச்சு விட்டாள். "இது என்ன வாழ்கை?" என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். பல வருட கடின உழைப்பால் கரடுமுரடான அவளது கைகளால், அவள் அணிந்திருந்த புடவையின் விளிம்பை சற்று சுற்றி இறுக்கி, அவள் எதிர்காலத்தை நினைத்தாள்.

அருள்விழியின் மகன் கனிமொழியன் அவள் அருகில் நின்றான், அவன் கண்கள் அதே தரிசு வயல்களை மேய்ந்துகொண்டு இருந்தது. பதினெட்டு வயதில், அவன் வீட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டான், என்றாலும் அவனது இளம் வாழ்க்கையின் மீது போர் நிழல் படர்ந்தது இருந்ததால், ஒரு காலத்தில் அவனது  கவலையற்ற விளையாட்டுத்தனமும் கம்பீரம் நிரம்பிய பள்ளிப்பருவமும் அன்பான பேச்சும் இன்று கோபத்துடனும் விரக்தியுடனும் கூர்மையாக வளர்ந்து இருந்தது, இல்லை ஆக்கப்பட்டு விட்டது.
 


"அம்மா, இங்க இருந்து நமக்கு இனி எதுவும் கிடைக்காது", என்று உறுதியுடன் குரல் கொடுத்து, "எனக்கு நகரத்தில், அதிகமாக கொழும்பில் வேலை கிடைக்க வேண்டும், அப்படி என்றால் என்னால் சம்பாதிக்க முடியும் அம்மா, நாங்கள் கட்டாயம் பிழைப்போம்." என்று தாயின் கையை இறுகப் பிடித்தான். 

அருள்விழி மகனை திரும்பி உற்றுப்பார்த்தாள், தன் மகனைப் பார்த்ததும் அவளுக்கு கவலையுடன் இதயமும் வலித்தது. அத்தகைய சுமையைச் சுமக்க மிகவும் இளையவனாக இருந்தாலும், குழந்தைப் பருவம் இன்னும் முழுமையாக மாறாத இந்த நிலையிலும் அவனின் உறுதி, நம்பிக்கை அவளுக்கு ஒரு தெம்பு கொடுத்தது.

"ஆனா ஒயிலழகி என்னாச்சு? அவளை என்னுடன் இங்க விட்டுட்டு போறீங்களா? இந்த இடத்துல தனிய வாழும் பெண்களிடம் உலகம் கருணை காட்டாது தெரியுமா" என்று கூறிக்கொண்டு அருள்விழி, குரல் நடுங்க தன் மகளைக் இருகக் கட்டிப்பிடித்தாள். 

ஒயிலழகி, அவள் கொஞ்சம் நெட்டையாக இருந்தாள். முழங்காலுக்கு கீழ் நீளமான மஞ்சள் பாவாடை அணிந்திருந்தாள். நல்ல நிறம். அழகான வட்ட வடிவிலான சாந்தமான முகம். பதினாறும் நிறையாத பருவ மங்கையாகத் தோன்றினாள். சிதைந்த வீட்டின் எஞ்சிய பகுதி ஒன்றுக்கு அருகில் அமர்ந்து, தரையை வெறித்துப் பார்த்தாள். அவள் எப்போதும் தனது கருணை மற்றும் அமைதியான வலிமைக்காக அறியப்பட்டவள், கிராம மக்களிடமிருந்து அவளுக்கு "ஸ்டைல் பியூட்டி" என்ற புனைப்பெயர் கூட உண்டு. ஆனால் அவள் தனது வெளித்தோற்றத்துக்கு அப்பால், உண்மையில் அவளும் தங்கள்      துயரத்தின் பங்கைச் சுமந்தாள்.

“அண்ணா [கனிமொழியன்] சொல்வது சரிதான் அம்மா” என்று ஒயிலழகி மெதுவாகச் சொல்லிவிட்டு அவர்களை நோக்கி நடந்தாள். "வீடு இல்லாமல், நிலம் இல்லாமல் நாங்கள் இப்படி தொடர்ந்து வாழ முடியாது. நாங்கள் எங்கள் எண்ணத்தை, நடவடிக்கைகளை முன்னோக்கி நகர்த்தவேண்டும்." என்று கூறி, பின் கொஞ்சம் இடைநிறுத்தி, "நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன், அண்ணாவுடன் நானும் சென்றால், அங்கே  நான் உயர்வகுப்பு படிக்க முடியும்." என்று, பதினாறும் நிறையாத பருவ மங்கை, அன்பு  பசி ஊட்டி வசமாக்கும் கனிமொழியன் தங்கை, குதித்தாடி மருந்தோடும் கலை மானே, இளம் குமரிகளும் மயங்கும் சிலை தானோ என்று இருந்தவள், தாயின் முந்தானையை விரலால் சுருட்டிக்கொண்டு, மேகத்தில் மறைந்த நிலா போல், தாயின் சேலையால் முகத்தை மூடி நின்றாள். 

அருள்விழியின் இதயம் துடித்தது. அவள் எப்படி இருவரையும் வெளியூர் அனுப்புவாள் ? ஒரு காலத்தில் அவர்களின் வாழ்க்கையாக இருந்த இந்த சிறிய கிராமத்துடன் ஒப்பிடும்போது நகரம் ஒரு வித்தியாசமான பெரிய, அறிமுகம் இல்லாத பலர் வாழும் அவசர உலகமாக இருக்கும், அதுமட்டும் அல்ல, அது அன்னியமானதும் கூட. ஆனால் அவளால் அவர்களை என்றென்றும் தன்னுடன் வைத்திருக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். போர் ஏற்கனவே நிறைய அவர்களிடம் இருந்து திருடிவிட்டது. அப்படி என்றால் மேலும் பிள்ளைகளின் எதிர்காலத்தை திருட அவள் யார்? அவள் மௌனமாக சிந்தித்தாள்.

என்றாலும் அருள்விழி பிள்ளைகளை நோக்கி, "இங்கே உயிர் இல்லை, வாழ்வு இல்லை என்பது போல் நீங்கள் இருவரும் பேசுகிறீர்கள்," அவள் மெதுவாக சொன்னாள். "ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய காரியமும் முக்கியமானது. 'சிறு துளி பெரு வெள்ளம்' அது தான் ஒரு பெரிய கடலையே  உருவாக்கிறது  என்பதை மறக்கவேண்டாம். நம் நிலத்தை, நம் மக்களை எங்களால் என்றும் கைவிட முடியாது. நாம் அனைவரும் வெளியேறினால் என்ன நடக்கும்? கொஞ்சம் சிந்தியுங்கள் பிள்ளைகளே?" என்று இருவரையும் கட்டிப் பிடித்தாள். 

கனிமொழியன் முகம் சுளித்தான், அவனுடைய இளமை அமைதியற்று இருந்தது. "அம்மா, சில சமயங்களில் சிறு துளிகளை கடல் விழுங்குகிறது, அவை அங்கே அவை தம்மை இழந்து மறைந்துவிடுகின்றன. அது தான், இந்த, இன்றைய சூழலில், இந்த இடத்தை விட பெரிதாக நினைத்தேன். நம்பிக்கையில் மட்டும் நாம் தொடர்ந்து இப்படியே வாழ முடியாது." என்றான். 

வெறுமையான வயலை பார்த்தபடி தாயும் பிள்ளைகளும் அங்கு கதைத்துக் கொண்டு நின்ற போது, அவர்களுக்கிடையில் ஒரு கணம் அமைதி நிலவியது. அப்போது, அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் அவர்களின் அமைதியைக் குலைத்தது.

அது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த தூயவன் என்ற இளைஞன். அவனது குடும்பமும் போரினால் எல்லாம் இழந்தது, ஆனால் தூயவன் பல்கலைக்கழகத்தில் படித்து தற்சமயம் கொழும்பு நகரத்தில் வேலை செய்கிறான். அவன் உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்தான். அவன் அதிகமாக ஒவ்வொரு மாதமும் கிராமத்திற்குத் திரும்பி வருவான், வரும் பொழுது தன்னால் இயன்ற உதவிகளை கிராம மக்களுக்கு உதவுவான். சில குடும்பங்களுக்கு  தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவினான்.

"அருள்விழி மாமி " என்று வாழ்த்தி, அவன் கண்கள் ஒயிலழகியின் மீதும் ஒரு கணம் நீடித்தது. "உன் நிலையைப் பற்றிக் இப்ப சற்றுமுன் காதில் விழுந்தது. கனிமொழியன் போனால், வீட்டைப் பழுதுபார்ப்பதில் நீ அம்மாவுடன் இங்கேயே இருந்து ஏதாவது உதவி செய்யலாமே. அத்துடன் இங்கு உயர் கல்வி படிப்பதற்கு ஏற்ற ஒழுங்கை நான் கட்டாயம் செய்து தருவேன், மற்றும் உங்க அம்மாவை தனிய விட்டு எங்கும் போகக் கூடாது" என்று கூறி மீண்டும் ஒயிலழகியைப் பார்த்தான். 

ஆனால் ஒயிலழகி தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள், ஆனால் அவளுடைய இதயம் நிச்சயமற்று இருந்தது. என்றாலும் நாட்கள் போக, 
ஒரு சொல்லப்படாத தொடர்பை உணர்ந்த அருள்விழி, ஒரு நாள் தூயவனை கண்டு மெலிதாக சிரித்தாள். "தூயவன், உங்கள் உதவி ஒரு வரமாக இருக்கும். என்றாலும் எங்கள் அண்ணா கட்டாயம் எங்களை கைவிடமாட்டார் " என்றாள். தூயவனின் கண்களை முதன்முதலாக நேருக்கு நேர் அன்றுதான் சந்தித்தாள், அவள் முடிவில், தாங்களாக தங்கள் காலில் எழுந்து நிற்க வேண்டும் என்ற அவளின் முடிவு தெளிவாகத் தெரிந்தது. தூயவனின் முகத்தில் ஒரு வித ஏமாற்றம் மிளிர்ந்தாலும், தலையசைத்தான். 

இதற்கிடையில் அருள்விழி தன் நிலத்தை எப்படியும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். இராணுவம் அதன் பெரும் பகுதியைக் கைப்பற்றியிருந்தாலும், அவளும் மற்ற இடம் பெயர்ந்த கிராம மக்களும் உள்ளூர் அதிகாரிகளிடமும் மனிதாபிமான அமைப்புகளிடமும் நிலத்தின் முழுவதையும் அல்லது முதற் கட்டமாக சில பகுதிகளையாவது பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திருப்பி கொடுக்க அரசை, ராணுவத்தை கட்டளையிட்டு வற்புறுத்த வேண்டும் என்று கோரினர். இது ஒரு மெதுவான, அதிகாரத்துவ செயல்முறை, எனவே விடாமுயற்சி முக்கியம் என்பதை அருள்விழி அறிந்திருந்தாள். இந்த விடா முயற்சியுடன், அவள் அருகிலுள்ள நகரங்களில் ஏதாவது கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினாள், வீடுகளைச் சுத்தம் செய்தல் மற்றும் தினசரி பிழைப்புக்காக பணம் சம்பாதிக்க கூடைகளை நெசவு செய்வது இப்படி தனக்குத் தெரிந்த வேலைகளை தொடர்ந்து செய்தாள். என்றாலும் அதனால் அவளுக்கு அதிகம் பணம் மிகுதியாக சேமிக்க கிடைக்கா விட்டாலும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு சிறு துளியும் எண்ணப்படும் என்பது அவளுக்குத் தெரியும். அவள் வாய் அவளை அறியாமலே "கடல் கொண்ட நீரை கவர வந்த கள்வன் கரு கொண்ட மேகம், பெரு மேகம் தங்கள் பேதைமை மறந்து இணைந்து பெய்வது தான் பெரு மழை, மேகத்துடன் மேகம் இணைந்து மேலான ஒற்றுமை கொண்டதால் மேதினி பெறுவது தான் மழை, சிறு சிறு துளிகள் எல்லாம் சிதறாமல் சேர்வது தான் சினம் கொண்ட பெரு வெள்ளம்" முணுமுணுத்துக்கொண்டு இருந்தது. அப்படி சிதறாமல் ஒவ்வொரு குடிமகனும் ஒன்று சேர்ந்தால், சினம் கொண்டு பெருவெள்ளமாக திரண்டால், .... கட்டாயம் விரைவில் திரும்பி பெறலாம், ஆனால்..? அவள் அதற்கு மேல் சிந்திக்க விரும்பவில்லை?   

அவளது பிள்ளைகளான  கனிமொழியன், ஒயிலழகி இருவரும் தாயுடன் இணைந்து  தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாங்களாகவே சிறு அடி எடுத்து வைத்தனர். தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கனிமொழியன், தூயவன் உதவியும் தொடக்கத்தில் கிடைக்க வேலை தேடி கொழும்பு சென்றான். அவனுக்கு ஒரு சிறிய நிறுவனத்தில் விநியோக பையன் [டெலிவரி பாய்] வேலை கிடைத்தது, அவன் விரைவில் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டான் மற்றும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய சிறு துளியாக இருந்தாலும் சேமித்துக் கொண்டான். ஒயிலழகி, ஆரம்பத்தில் கொழும்பில் உயர் கல்வி கற்க விரும்பினாலும், பின், தங்கள் கிராமத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் தற்காலிகப் பள்ளியில் சேர்ந்து, தனது உயர் கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். 

“மீண்டும் நாம் கட்டி எழும்புவோம் அம்மா” என்று கொழும்பில் இருந்து  தனது முதல் தொலைபேசி அழைப்பில் உறுதியளித்தான்.  "இது ஆரம்பம் தான்." என்று கூறி முடித்தான் “ஆமாம் மகனே” என்று அருள்விழியும் பதிலளித்தாள். "நினைவில் கொள்ளுங்கள், ஒவ்வொரு சிறிய துளியும் கணக்கிடப்படுகிறது." என்றாள்.

வாரங்கள் மாதங்களாக மாற, அருள்விழியின் முயற்சியின் சிறு துளிகள் ஒன்றின் மேல் ஒன்றாக குவியத் தொடங்கின. போரிலிருந்து தப்பியவர்களுக்காக வாதிடும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் [NGOs] ஆதரவும் அவளுக்கு கிடைத்தது. நில உரிமைக்கான அருள்விழியின் மனு, அதிகாரத்தால் மூடிய பெட்டியில் இருந்து தூசு தட்டி இழுத்து எடுக்கப்பட்டது. மெதுவாக, அவர்களது சொந்த நெல் வயலின் ஒரு சிறிய பகுதி உட்பட, நிலத்தின் சில சில பகுதிகள் கிராம மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டன. கண்ணி வெடிகள் மற்றும் இராணுவப் பிரசன்னம் காரணமாக பெரிய அளவிலான விவசாயத்திற்கு இன்னும் அந்த நிலம் ஒரு ஆபத்தானது என்றாலும், இது ஒரு சிறிய வெற்றியாகும் - அவர்களின் முயற்சிகள் பலனளித்ததற்கான முதல் அறிகுறி, இந்த முதல் "சிறு துளிகளே"!

கூரையை விட்டு அழகாய் அத்துமீறும் ஆர்பரிக்கும் மழைச்சாரல் வடிந்து ஓடும் பொழுது சிதறிய துளிகளில் உடல் எங்கும் கூசும். அதில் ஒரு இன்ப உணர்வு பூரித்து அந்த துளிகளை உற்று நோக்கும். அப்படித்தான் நிதானம் கொண்டு, விடுபட்ட வயல் காணியை இமைக்காது பார்த்தாள்.

இதற்கிடையில் கனிமொழியன் கொழும்பில் திறமையான, நேரம் தவறாத, டெலிவரி பாய் ஆகிவிட்டார். பல மாதங்கள் அர்ப்பணிப்புக்குப் பிறகு, அவன் ஒரு சிறிய குழுவை நிர்வகிக்கும் பதவி உயர்வும் பெற்றான். அவனது இயல்பான தலைமைத்துவமும், அன்பான பேச்சு முறையும், அவனது பெயருக்கு ஒரு உண்மையான புகழையும், நகரத்தில் அதனால் முக்கியமான தொடர்புகளை உருவாக்கவும் உதவியது. இந்த இணைப்புகள் இறுதியில் அவன் தனது சொந்த சிறிய விநியோக சேவையைத் தொடங்க வழிவகுத்தது, அது செழிக்கத் தொடங்கியது. இதன்பின் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அவன் வீட்டிற்கு பணத்தை கூடுதலாக அனுப்பினான், அதுமட்டும் அல்ல, அவன் அருள்விழியையும் ஒயிலழகியையும் வீட்டை மீண்டும் கட்டியெழுப்ப  அனுமதித்தான். அதற்கு தூயவன் கூட உடல் உதவி செய்ய முன்வந்தான்.  

கிராமத்தில் தாயுடன் தங்கி இருந்த ஒயிலழகி தனது படிப்பைத் திறமையாகத் தொடர்ந்தாள், கஷ்டங்களையும் மீறி தனது வகுப்பில் சிறந்து விளங்கினாள். தன்னைப் போலவே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு உதவ அவள் ஒரு ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டாள். அவளது கல்வி வெற்றியடையும் அதே தருணத்தில், அவளது வாழ்க்கையின் தனிப்பட்ட மற்றொரு அம்சமும் அமைதியாக மலர்ந்தது - அது தூயவன் என்ற இளைஞனுடன் அவளது உறவு நெருக்கமாகியது. 

"நீங்கள் அற்புதமான, சொற்களால் வர்ணிக்க முடியாத அழகையும் நல்ல விடயங்களையும் கையாளுகிறார்கள், ஒயில்," என்று அவளின் கையைக் தன் கையுடன் கோர்த்துக் கொண்டு தூயவனும் ஒயிலழகியும் ஆற்றங்கரையில் அமர்ந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்ததனர்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான். காதல் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றால் அது தவறு. அது கருங்கல்லுக்கும் உண்டு, செம்மனிற்கும் உண்டு, நீல வானத்திற்கும் உண்டு, அதில் நீந்துகின்ற விண்மீனுக்கும் உண்டு, அதை பிரதிபலிக்கும் நீலக்கடலில் நீந்துகின்ற நீலத்திமிங்கிலத்திற்கும் உண்டு, வாசமில்லா மலருக்கும் உண்டு, அதில் தேனை தேடும் வண்டுக்கும் உண்டு, ஏழு வண்ண வானவில்லுக்கும் உண்டு, நொடிக்கு நொடி நிறம் மாறும் அழகான (ரீங்காரம் செய்யும்] ஹம்மிங் பட்சிக்கும் உண்டு, அதில்  ஒயிலழகியும் தூயவனும் விதிவிலக்கல்ல!

அவனது வார்த்தைகளின் அரவணைப்பையும், அவை தனக்குள் துளிர்விட்ட நம்பிக்கையையும் உணர்ந்த ஒயிலழகி, அவனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகை செய்தாள். அவள் தன் கல்வியில் கூடிய கவனம் செலுத்தி, திறமையாக தன் பட்டப் படிப்பை முடித்தாள். தங்கள் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்ப அது கட்டாயம் உதவும் என்று நம்பினாள். மிகவும் கடினமான, போருக்கு பின்னான காலங்களில் கூட, கடினமான நிலத்தில் விரிசல்களின் வழியே அன்பும் ஆதரவும் காட்டுப் பூக்கள் போல அவர்களிடம் வளர்ந்தன. என்றாலும் "ஒரு நாள், நான் விரும்பியதை அடைந்துவிட்டால், ஒருவேளை நம் எதிர்காலத்தைப் பற்றி அந்த நேரம் பேசலாம்," என்று நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது.  

தூயவன் அவள் உறுதியை மதித்து தலையசைத்தான். ஒயிலழகி தனது சொந்த பாதையில் செல்ல நேரம் தேவை என்பதை அவன் அறிந்திருந்தான், மேலும் அவன் அவளை மிகவும் ஆழமாக காதலிப்பதற்கும் ரசிப்பதற்கும் காரணங்களில் அதுவும் ஒன்று.

எதுஎன்ன என்றாலும், தன்னை சுற்றிய சூழல் மறந்து இரண்டு விழிகளுக்கும் ஒற்றைத் தேடல் ஏற்பட்டது. இத்தனை பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள். எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. எப்பொழுதாவது திரும்புகிறது அவள் பார்வை அதற்காகவே தவமிருக்கிறது விழிகள். அவள் என்னை தாண்டும் சமயம் இதயம் எகிறி குதித்தோடும் அவள் பின்னால். பெறுபவர் இல்லாது வீசி எறிந்த கடிதங்கள் ஆயிரம். ஒற்றை எழுத்தோடு தவம் இருந்த கடிதங்கள் எத்தனை? நிலை கொண்ட பயத்தால் ஒரு பக்க கதையானது காதல். அவள் வீட்டு சாலைகளுக்கு தெரியும் எனது கால்களின் இடைவிடாது உழைப்பு. காதல் கண் சிமிட்ட காத்திருக்கும் இமைப்பறவை. ஆண்டுகள் கடந்தும் ஆர்பாரிக்கும் பேரலை அவள். நான் எழுதி கொண்டு இருக்கும் வரையில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள் என்னவள். ஒரிரு வார்த்தைகள் தான் பேசி இருப்பாள் அத்தனை வருடத்தில் அதையே இன்று வரை அடைகாக்கிறேன். கட்டாயம் அவளின் உறுதி அன்பு இரண்டும் அதை பெரு மழையாக்கி காதல் மழையில் என்னை  நனைக்கும் என்று தனக்குள் தானே பேசி பேசி தூயவன் காத்திருந்தான்.      

மேலும் சில வருடங்கள் கடக்க, அருள்விழியும் அவளது மகனும்  கஷ்டப்பட்டு சேகரித்த "சிறு துளிகள்" ஏதோ பெரியதாக, பெரும் வெள்ளமாக, கடலாக  ஒன்று சேர ஆரம்பித்தன. கனிமொழியனின்  வணிகம் விரிவடைந்து, நாடு முழுவதும் விநியோக சேவை செய்யும் ஒரு வெற்றிகரமான நிறுவனமாக மாறியது. அவன் தனது சேமிப்பைக் கொண்டு, அவர்களது கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய நிலத்தை வாங்கினான், அங்கு அவன் விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் மூலம் பொருளாதார சுதந்திரத்தை மீட்டெடுக்க, போரினால் பாதிக்கப்பட்ட மற்ற குடும்பங்களுக்கு உதவ ஒரு கூட்டுறவு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டான்.

இதற்கிடையில் ஒயிலழகியும் தனது கல்வியை முடித்துவிட்டு ஆசிரியையானாள். அவள் தன் கிராமத்தில் குழந்தைகளுக்காக ஒரு மாலை நேர பள்ளியை நிறுவினாள், பாரம்பரிய பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களில் மட்டும் மேலதிக உதவியும் கவனமும் செலுத்தாமல், கடினமான அல்லது மோசமான போர் காலத்தின் பின், அதனால் பாதிக்கப்பட்ட இளம் பிள்ளைகளுக்கு அதில் இருந்து  மீண்டும் மகிழ்ச்சியாக, வெற்றிகரமாக மீண்டெடுக்க அவர்களுக்கு  மீள்திறனை வழங்கும் கட்டமைப்பிலும் கவனம் செலுத்தினாள். அடுத்த தலைமுறையினரை, போரினால் சிதைந்த சமூகங்களை, மீண்டும் கட்டியெழுப்புவதே அவளின் முதல் நோக்கமாக இருந்தது. 

அருள்விழியைப் பொறுத்தவரை, அவர்களின் நிலத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் வீட்டை மீட்டெடுக்கவும் அவள் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. நிலம், துண்டு துண்டாகத் திரும்பப் பெற்று, கனிமொழியனின் கூட்டுறவின் உதவியுடன், மீண்டும் நெல் பயிரிட முடிந்தது. கிராமமும் மெல்ல மெல்ல உயிர்பெற்றுக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு போர் மண்டலத்தின் பேய் எச்சமாக இருந்த அது, அதன் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், ஒரு செழிப்பான சமூகமாக மாறியது.

எப்போதும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருந்த தூயவன், ஒயிலழகி தனது இலக்குகளை அடைந்த பிறகு அவளிடம் தன் திருமண ஆசையை முன்மொழிந்தான். அவளும் மகிழ்வுடன்  ஏற்றுக் கொண்டாள், இப்போது, தனது சொந்த கனவுகள் நிறைவேறிய நிலையில், அவள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தழுவத் தயாராக இருப்பதாக உணர்ந்தாள். ஒன்றாக, அவர்கள் ஒரு குடும்பத்தையும் எதிர்காலத்தையும் உருவாக்கினர், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையில் அடித்தளமாக இருந்தனர், என்றாலும் தமது  போராட்டம் மற்றும் தமது கிராமத்தின் மீளெடுப்பு போன்றவற்றில் இருந்து என்றும் விலகவில்லை. 

ஒரு மாலையில், அருள்விழி புதிதாகக் கட்டப்பட்ட தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, தன் பேரக்குழந்தைகள் வயல்வெளியில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர்களை இங்கு அழைத்து வந்த நீண்ட பயணத்தை நினைத்துப் பார்த்தாள். சிரிப்பின் சத்தம் காற்றை நிரப்பியது - போரின் அமைதியிலிருந்து அது வேறுபட்டது. கருணையும் வலிமையும் நிரம்பிய அவள் கண்கள் நன்றியுணர்வுடன் நிரம்பி வழிந்தன.

இப்போது ஒரு வெற்றிகரமான தொழிலதிபரான கனிமொழியனும் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தான். "நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம், அம்மா," அவன் மெதுவாக அம்மாவின் காதில் கூறினான்.

"ஆமாம்," அருள்விழி பதிலளித்தாள், அவளுடைய குரல் உறுதியாக ஒரே நிலையில் தழும்பாமல், ஆனால் உணர்ச்சியால் நிறைந்தது. "சிறு துளிகள்" ஒவ்வொன்றாக இந்தக் கடலை உருவாக்கின என்றாள். 

அருள்விழியும் அவனது குடும்பத்தினரும் எடுத்துக் கொண்ட சிறிய படிகள், "சிறு துளிகள்",  தங்கள் நிலத்தைப் பாதுகாத்தல், கல்வியைத் தொடர்தல், ஒரு தொழிலைத் தொடங்குதல், உறவுகளை உருவாக்குதல் ஆகியன எல்லா மிகப் பெரிய விடயத்திற்கும் அடித்தளமாக அமைந்தது. உரிமையுடன் அதிகாரத்துடன் உயிர்வாழ என அருள்விழி குடும்பம் ஆரம்பித்தது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வெற்றியாக மாறியது. ஒவ்வொரு "சிறு துளி" முயற்சியும் கனிமொழியன் உழைத்த நீண்ட மணிநேரமும், ஒயிலழகி தன் மாணவர்களிடம் காட்டிய அர்ப்பணிப்பும், அருள்விழி எடுத்த கோரிக்கைகள் மற்றும் வேலைகளும், ஒவ்வொரு சிறு துளிகளும் பெரும் மாற்றத்தின் பெருங்கடலை உருவாக்கியது.

ஒரு காலத்தில் போரினால் சிதைந்து போன அவர்களின் வாழ்க்கை, இப்போது நெகிழ்ச்சி, அன்பு மற்றும் இழந்ததை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பெருமை பெற்றது. இறுதியில், அவர்கள் செய்த சிறிய, வெளித்தோற்றத்தில் அற்பமான செயல்கள், "சிறு துளிகள்", அவர்கள் ஒருமுறை மட்டுமே கனவு கண்ட எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லும் வலிமையான பெரும் கடலாக மாறியது!

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468704222_10227520707626094_4878929243991327445_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=DQZb0msRdNkQ7kNvgGQMBsa&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYAKIMansTPsLMX1Rn3D1BuOFgRXo37CkkKWbr_GSH4_tw&oe=6752237F 468761238_10227520707666095_8164732013069783255_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1LDwZ3TNUwIQ7kNvgGvWsUD&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYAw1z577YEPTtcFlNfsTEc0oIg6U7xN1JrmlR94lDgpoA&oe=675227E8 468756258_10227520708226109_2967643239467301636_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=lQdKhibn2EwQ7kNvgGXuGrK&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AHoBLVC5mvcXIVvyIFJUoG8&oh=00_AYBPuLc6pIfOFS9aXepVnYpkRhp49255z_EApB5DATbLDA&oe=67522E38


 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.