Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் . போதனா மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

adminDecember 11, 2024
3-3-1170x878.jpg

 

 

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக சமூக நல அமைப்பு ,யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களை  கடந்த திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இதன் போது இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்

கையளிக்கப்பட் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த 14 வருடங்களாக உரிய வசதிகளைக் கொண்ட மகப்பேற்று விடுதி இல்லாத நிலை காணப்படுகிறது.

2012ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பழைய மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் மேற்தளக் கொங்கிறீற் கூரையின் சிறு பகுதி உடைந்து ஒரு கட்டிலின் மீது விழுந்தது. அவ்வேளை அக்கட்டிலில் இருந்த தாய் வெளியே சென்றமையால் எந்த வித ஆபத்தும் நிகழவில்லை. இவ்விடயம் அன்றைய மருத்துவமனை நிருவாகத்தால் உடனடியாக சுகாதார
அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்டடம் ஆபத்தானதென்று அரச பொறியியலாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மகப்பேற்று விடுதி இடித்து அகற்றப்பட்டது.

அன்று முதல் மகப்பேற்றுக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார் சாதாரண மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண விடுதி மகப்பேற்றுக்குரிய முறையில் மாற்றப்பட்டு மகப்பேற்று விடுதிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன.

தற்போது 5 அலகுகளைக் கொண்ட பெண்ணோயியல் மற்றும் மகப்பேற்று விடுதிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் மிகவும் நெருக்கடியான சூழலில் இயங்குகின்றன. இதனால் கடந்த 12 வருடங்களாக பல்வேறு அசௌகரியங்களைக் கர்ப்பிணித் தாய்மார் எதிர்நோக்குகின்றனர்.

தற்போது மகப்பேற்றுக்கு வரும் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்குப் போதிய இடவசதி இன்மை காணப்படுகிறது.  அத்துடன் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவதால்,
ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசியமாகியுள்ளது.

தற்போதைய தற்காலிக மகப்பேற்று விடுதிகளில் உள்ள பிரச்சினைகள்:

1. இடவசதியின்மை:

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் கட்டில்கள் இல்லாததால், பலர் தரையில் தங்க வேண்டிய நிலைமை. சில சந்தர்ப்பங்களில் நிலத்திலும் இடம் இல்லாத நிலை காணப்படுகிறது.

கட்டில்களைச் சுற்றியுள்ள இடம் குறைவாக இருப்பதால், மருத்துவக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குத் தனியுரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குத் தனியான தொட்டில் (Baby Cot) இல்லாமல் தாயுடன் கட்டிலில் உறங்க வைக்க வேண்டி உள்ளது.

மகப்பேற்றுக்கு பின்னரான மனநோய்கள் தற்போது அதிகம் என்பதால் அவர்களைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி இல்லாமை.

முதல் பிரசவத்துக்கு வரும் தாய்மார் பலர் மருத்துவமனையின் இந்த நெருக்கடியான சூழலைப் பார்த்து இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர். இது எமது சமூகத்துக்கு நாம் செய்யும் பெரும் அநீதியாகும்.

2. அவசர சிகிச்சைப் பிரிவு எதிர்நோக்கும் பிரச்சினைகள்:
மகப்பேற்று விடுதிகளுக்காக தனிப்பட்ட அறுவைச் சிகிச்சைக்கான அறை இல்லாததால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அறுவைச் சிகிச்சை அறைகள் தொலைவில் இருப்பதால், அவசர சிசேரியன் அறுவைச் சிகிச்சை தாமதமாகிறது.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் போதுமான கட்டில்கள் இல்லாமை.
புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பதற்கான பரிந்துரைகள்:

1. விடுதிகள் மற்றும் இடவசதி:

போதிய இடவசதியுடன் கட்டில்கள் அமைத்து, அனைத்து நோயாளிகளுக்கும் கட்டில் வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான தனித் தொட்டில் (baby cot) ஒவ்வொரு கட்டிலுக்கும் இணைக்க வேண்டும்.

மகப்பேற்றுக்குப் பின்னான விடுதிப் பகுதியில் மகப்பேற்றுக்கு பின்னான மன நோய் உள்ள நோயாளிகளைப் பராமரிப்பதற்கான தனிப்பகுதி அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதிக்கும் தனியான உயர்சார்பு அலகு மற்றும் தனிமைப்படுத்தல் அலகு அமைக்கப்பட வேண்டும்.

கருப்பையகப் புற்றுநோய்ப் பிரிவுக்கு மற்றும் கருவுறாமைப் பிரிவுக்கு தனி விடுதிகள் அமைத்தல் வேண்டும்.

அவசர சிகிச்சைப் பிரிவின் வசதிகள்:

மகப்பேற்று விடுதிகளுக்காகத் தனிப்பட்ட அறுவைச் சிகிச்சை அறைகள். அவசரச் சூழல்களில் நுணுக்கமாகச் செயல்படக்கூடியதான மருத்துவ மையக்கட்டமைப்பு.
போதுமான கட்டில் வசதிகள் கொண்ட அதி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU)

3. புதிய வளாகத்தின் பயன்கள்

நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான உயர்தர சிகிச்சை வசதிகள்.
தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் மேம்பட்ட இடவசதி.
உடனடி அவசர சிகிச்சை வசதிகளால் விரைவான உயிர் காக்கும் முயற்சி.
மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறந்த கற்றல் மற்றும் வேலைச் சூழல் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சேவையளிக்கக்கூடிய திறன்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு புதிய மகப்பேற்று வளாகம் அமைப்பது அவசர தேவையாகும். இது வட மாகாண மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அடுத்த தலை முறைகளின் நலனை உறுதிப்படுத்தும்
யாழ். போதனா மருத்துவமனை முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (Neonatal Intensive Care Unit) மகப்பேற்று விடுதிக்கு அருகில் தற்காலிக விடுதி வழங்குதலும் அனைத்து வசதிகளும் கொண்ட மகப்பேற்று விடுதித் தொகுதி
அமைத்தலும்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தின் போது
(2024 நவம்பர்) ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மருத்துவமனையின் முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவினுள் வெள்ளம்
சென்றமையால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் தாய்மார் பாலூட்டுவதற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலையில் மிகுந்த அசௌகரியத்துக்கு உள்ளாகினர். குழந்தைகளுக்கு ஏற்படும் அவசர நிலையில் மருத்துவர்களால், ஏனைய சுகாதாரப் பணியாளர்களால் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது உள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆனது உடைத்து அகற்றப்பட்ட மகப்பேற்றுக் கட்டடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

அண்மைய வெள்ளத்தால் சுவர்களில் ஈரக் கசிவு ஏற்பட்டு மின் ஒழுக்கு ஏற்பட்டது.
சிகிச்சை பெறும் சிசுக்களும் சுகாதார அபாயகரமான பணியாளர்களும் உயிர் ஆபத்தான நிலையை எதிர்நோக்கினர்.
இவ்வருடம் மேலும் இரு புயல்கள் வட பகுதியைத் தாக்கும் என்றும் வானிலை எதிர்வு கூறல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தற்போதுள்ள முதிராக் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவை மகப்பேற்று விடுதிகள் 20, 21, 22 அமைந்துள்ள மருத்துவ விடுதியின் அதே தளத்தில் தற்காலிகமாக இயக்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ள தங்களது ஆலோசனையையும் உதவியையும் எதிர்பார்க்கின்றோம் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3-1-2.jpg3-2-2-800x600.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கிய செய்தி . கடைசி வரை வாசியுங்கள்!

அண்மையில் ஒரு நாள் நான் இங்கிலாந்தில் கடமையில் இருந்த போது விடுதி கடும் பிஸி ஆனது.

விடுதியில் இருந்த பொறுப்பு மிட் வைfப் சமாளிக்க முடியாமல் மேலதிக சீனியர் மிட் வைfப் யைக் கூப்பிடுமளவு பிஸியானது.

என்னிடம் பலமுறை வந்து டிஸ்கஸ் பண்ணி கொண்டே இருந்தார்கள். 

அப்படி என்ன பிஸி?

எனது விடுதியில் ஐந்து தனியறைகள் மகப்பேற்றுக்காக இருக்கும்.

பிரசவ வலியில் இருக்கும் தாய்மார்கள், உறவினரோடு அந்த அறையிலேயே குழந்தை பிறக்கும் வரை தங்கியிருந்து  குழந்தை பெறுவார்கள்.

பிரசவ வலி இல்லாத தாய்மார்கள் மற்றும் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்கியிருக்க வேறு விடுதிகள் உள்ளன.

அன்று பிரசவ அறைகள் நான்கில்  தாய்மார்கள் பிரசவ வலியில் இருந்தனர். மிஞ்சிய ஒரு அறையில் மிக அவசியமான, அவசர நிலமை தாயை மட்டும் அனுமதிப்பதென அந்த அறை வெறுமையாக இருந்தது. 

இப்போது பொறுப்பு மிட் வைfப் பிஸி ஆனதுக்கான காரணம், அவசரமில்லாத கர்ப்பிணிகளின் பிரசவத்தை ஆரம்பிப்பபதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்? 
விடுதி நிரம்பியதால் அவசரமில்லாத கர்ப்பிணிகளை வேறு வைத்தியசாலைக்கு அனுப்புவதா என்று முடிவெடுக்க வேண்டும்.

சில கர்பிணிகளை வீட்டுக்கு திரும்ப அனுப்பலாமா என்று முடிவெடுக்க வேண்டும்.

அனைத்து முடிவுகளையும் துல்லியமாக எடுக்க வேண்டும். பிழையாக முடிவெடுத்து குழந்தை  பிறப்பைப் பின் போட்டு குழந்தைக்கோ தாய்க்கோ ஏதும் பிரச்சனை வந்தால் அது வைத்தியசாலைக்கு சிக்கலாகி விடும். அதற்காக ஒவ்வொரு முடிவெடுத்தலுக்காகவும் சீனியர் மருத்துவ மாது என்னை ஆலோசித்துக்கொண்டே இருந்தார். அதுதான் பிஸி ஆனதுக்கான காரணம். 

இது ஏன் நடந்தது?

ஒரு பெண் பிரசவத்தின் போது தனி அறையில் கணவன், அம்மா, தங்கை, மாமி என உறவினர்களோடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக.

சரி இதை ஏன் இப்போது சொல்கிறேன்?

நான் 2013 யாழ்ப்பாணத்தில் வேலை செய்யும்போது விடுதியில் ஒரே ஒரு அறை இருந்தது. அதற்குள் நெருக்கமாக ஐந்து கட்டில்கள். அந்த ஐந்து கட்டிலில் தான் பிரசவம் நடக்கும். உறவினர்கள் யாரும் வர முடியாது. மற்ற பெண்கள் முன்னால் எல்லா கர்ப்பிணிகளும் நிர்வாணத்துடன் இருக்க வேண்டும்.

மறுபுறம், பிரசவத்திற்காகக் காத்திருக்கும் தாய்மார்கள் ஜெயில் போல  இன்னொரு அறையில் பாயில் படுப்பார்கள்.
குழந்தை பிறந்தபின் மட்டும் கட்டில் கிடைக்கும். சிலவேளை மூன்று அம்மாக்களுக்கு ஒரு கட்டில் கிடைக்கும். மூன்று பேரும்  பிள்ளைகளை கட்டிலில் வளர்த்தி விட்டு அருகே தம்ரோ கதிரையில் இரவு முழுக்க இருப்பார்கள்.

குழந்தை பிறந்த முதல்நாளே இரவு முழுக்க தம்ரோ கதிரையில் இருக்கும் நிலமையை யோசித்து பாருங்கள். 

பத்து வருடம் தாண்டியும் இந்த நிலமை பெரிதாக மாறவில்லை என ஒரு வைத்திய நண்பன் அழைப்பெடுத்து எழுதச் சொல்லி கேட்டான்.

இப்படித்தான் எம் தாய்மார்களை நடத்தினோம். அவர்களை நெருக்கமான அறைகளில் அடைத்து, ஒரு பெண்ணின் நிர்வாணத்தை சம்பந்தமில்லாத  மற்ற நபர்களுக்கும் காட்டித்தான் இனியும் பிள்ளை பெற வேண்டுமா?

இன்னொரு புறம், பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் அதி தீவிரப் பிரிவு அடிக்கடி இடமாற வேண்டிய தேவை. அது  அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்குவதால் தடுக்கக்கூடிய  கிருமித்தொற்றுக்கள் போன்றவற்றால்கூட பல  குழந்தைகள் இறக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக தனி மகப்பேற்று , பெண்ணோயியல், குழந்தை பராமரிப்பு விடுதியை அமைக்க நிலம் உள்ளதாக அறிய முடிகின்றது. ஆனால் அதற்கான கட்டடத்தை அமைக்க 3000 மில்லியன் ரூபாய்க்கு மேல் தேவைப்படலாம்.

பெரிய தொகைதான். ஆனால் மக்கள் மனது வைத்தால் தமிழருக்கு இது பெரிய தொகை இல்லை. இப்போதைய நிலையில் அரசாங்கத்தை மட்டும் நம்பி இதை செய்ய முடியாது.
தனி அமைப்பு , மனிதானால்கூட இது முடியாது.

சாதி, மத , ஊர் பேதங்களை மறந்து எல்லோரும் இணைந்தால் இது இலகுவாக செய்யப்படலாம்.

என்ன செய்யலாம்?

1. தற்போதைய அரசியல் வாதிகள் இதற்கான முனைப்பை அரசாங்கத்துடன் பேச வேண்டும். அரசிடமிருந்து பெறக்கூடிய உதவியைப் பெற முயற்சிக்க வேண்டும்.

2. இதற்கான சரியான திட்டமிடலை எழுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும்.

3. இறுதியாக பொதுமக்கள் நிதி சேகரிப்பு.

யாழ் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு தலைமையில் ஒரு வெளிப்படையான நிதி சேகரிப்பைச் செய்யலாம்.

லைக்கா, IBC  போன்ற பெரிய புலம்பெயர் வியாபார நிறுவனங்களை நேரடியாக அனுகி உதவி கேட்க வேண்டும்.

இடைத்தரகர்கள் இல்லாமல் அரச அங்கிகாரத்துடன் நேரடியாக பொதுக் கணக்கு ஒன்றில் வெளிப்படையான  நிதிச் சேகரிப்பு செய்தால்  நமது மக்கள் கொட்டிக் கொடுப்பார்கள்.  தனி மனிதனாக நான் 2500$ சிலநாட்களில் சேகரிக்க முடிந்தது. எல்லோரும் சேர்ந்தால் 3000 மில்லியன் சின்ன காசு.

இதற்காக அனைத்து சமூக அமைப்புக்களும் சுயநலம் பார்க்காமல் ஒன்றிணைந்து இதை விளம்பரப்படுத்த வேண்டும்.

எல்லோரும் சுயநலம் மறந்து மனசு வைத்தால் சில வருடங்களில் நமது தாய்மார்களும் கெளரவமான பிரசவத்தை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை கிடைக்கும்.

இந்தப் பதிவை  எந்த தனிநபர்களும் , ஊடகங்களும் எனது பெயர், அனுமதி இல்லாமல் அப்படியே எடுத்து பயன்படுத்தலாம்.

வைத்தியசாலை நிர்வாகம் , பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி , யாழ் மகப்பேற்று நிபுணர்கள் இது பற்றி அவர்களது திட்டங்களை வெளிப்படுத்தி இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க உங்களின் ஆதரவு உதவும்.

இந்த செய்தியை #Respectfulmaternitycare என்ற ஹஷ் tag உடன் பகிருங்கள்.

இந்த ஹஷ் tag 1000  என்ற அளவை தாண்டும் போது இது சர்வதேச அளவில் வைரலாகி உலகமெல்லாம் பரவி இருக்கும் நம் உறவுகள் அனைவரையும் போய்ச் சேரும். சிலவேளை இது சர்வதேச அளவில் ட்ரென்ட் ஆகும்போது வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியும் கிடைக்கும்.

சமூக வலைத்தள பிரபலங்களும் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பகிருங்கள்.
பகிருங்கள்.

எல்லோரும் சேர்ந்து தட்டினால் நிறைய கதவுகள் திறக்கும்.

#Respectfulmaternitycare

https://www.facebook.com/story.php?story_fbid=10237366930094514&id=1286697015&rdid=ew4TXgeiyWJmNwnH

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.