Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகாரப் பரவலாக்கத்தில் அதன் நிலைப்பாடும்

on December 9, 2024

Dissanayake.jpg?resize=1200%2C550&ssl=1

Photo, SOUTH ASIAN VOICES

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாளடைவில் வரக்கூடிய சவால்கள் பிரதானமாக இனவாத அரசியல் சக்திகளிடமிருந்தே வரக்கூடும் என்று அதன் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை நவம்பர் 21 சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று சூளுரைத்தார்.

தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காக நாடு நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகவும் உறுதியான சந்தர்ப்பம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாடாளுமன்ற தேர்தல் வெளிக்காட்டியிருக்கிறது என்றும் எங்களுக்கு இடையில் வேறுபட்ட அரசியல் கோட்பாடுகள் இருந்தாலும், இனவாத அரசியலுக்கு மீண்டும் இடம்கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதை தொடர்ந்து கடந்தவாரம் ஜனாதிபதியின் உரை மீதான நாடாளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இன, மத வேறுபாடுகளைக் கடந்து முன்னேறுவதற்கு மக்களுக்கு முன்னாலுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை பாழ்படுத்தக்கூடியதாக தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் அரசியல் அனுகூலத்துக்காக இனவாதத்தையும் பிளவுகளையும் தூண்டுவதற்கு மேற்கொள்ளக்கூடிய எந்த முயற்சியையும் ஒடுக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்று எச்சரிக்கை செய்தார்.

அதே போன்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உட்பட பல அமைச்சர்களும் தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளும் இனவாத அரசியலுக்கு இனிமேல் நாட்டில் இடமில்லை என்று கூறினர். அவர்களைப் பொறுத்தவரை, “இன, மத வேறுபாடுகளின்றி மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இனவாதமும் மதத்தீவிரவாதமும் பயன்டுத்தப்படுவதைத் தடுக்கவேண்டியது  அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு”

இலங்கைக்கு சாபக்கேடாக இருந்துவரும் இனவாதத்துக்கும் மதத் தீவிரவாதத்துக்கும் எதிரான ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் இந்த உறுதியான நிலைப்பாடு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. வடக்கு, கிழக்கில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டும் நோக்குடன் சமூக ஊடகங்களில் பதிவுகளைச் செய்தவர்களுக்கு எதிராக உடனடியாகவே சட்ட நடவடிக்கை எடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

முன்னைய தேர்தல்களைப் போலன்றி இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் இனவாத அரசியல் முனைப்புப் பெறவில்லை. அதே சூழ்நிலையை தொடர்ந்தும் உறுதி செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு உட்பட நாடு பூராவும் தங்களுக்கு மக்கள் அளித்த மாபெரும் ஆதரவை தேசிய ஐக்கியத்துக்காக தரப்பட்ட ஒரு ஆணையாக தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நோக்குகிறார்கள்.

இனவாதம் தோற்றுவித்த பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமானதும் உருப்படியானதுமான  தீர்வுகளைக் காண்பதில் அரசாங்கத் தலைவர்கள் எந்தளவுக்கு அக்கறை காட்டுவார்கள் என்பதிலும் அந்த நோக்கத்துக்காக அவர்களால் பெரும்பான்மையின சிங்கள மக்களின் நம்பிக்கையை எந்தளவுக்கு வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதிலேயே இனவாதத்துக்கு எதிராக அரசாங்கம் “பிரகடனம் செய்திருக்கும் போரின்” வெற்றி தங்கியிருக்கிறது.

அதேவேளை, தாங்கள் மீண்டும் தலையெடுப்பதற்கு வாய்ப்பான சந்தர்ப்பங்களுக்காக இனவாத சக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மகத்தான தேர்தல் வெற்றியையும் குறிப்பிட்ட சில கடும்போக்கு தேசியவாத அரசியல்வாதிகளுக்கு கிடைத்த தோல்வியையும் இனவாதத்தின் தோல்வியாகக் கருதவும் முடியாது. இலங்கையின் இனவாத அரசியலின் தன்மையையும் அதன் வரலாற்றையும் நன்கு விளங்கிக் கொண்டவர்களுக்கு இது விடயத்தில் எந்த குழப்பமும் இருக்காது.

மாவீரர் தினத்தில் நினைவேந்தல்களைச் செய்வதற்கு அரசாங்கம் தமிழ் மக்களை அனுமதித்தைக் கூட சகித்துக்கொள்ள முடியாமல் தென்னிலங்கை சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் கண்டனம் செய்தார்கள். அதற்கு முதல் யாழ்ப்பாணத்தில் சில இராணுவ முகாம்களை அகற்றி அந்த நிலங்களை அவற்றின் உரிமையாளர்களான குடிமக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோது தேசிய பாதுகாப்பில் தாங்கள் மாத்திரமே அங்கறை கொண்டவர்கள் என்ற நினைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ போன்றவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

ஆனால், முன்னைய ஆட்சியாளர்களைப் போலன்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் குறிப்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால போன்றவர்கள் போரில் இறந்த தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று கூறி அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்கள்.

இவ்வாறாக அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மனநிலை மாற்றம் படிப்படியாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்றைக் காண்பதற்கான முயற்சிகள் தொடர்பான அணுகுமுறைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் பொன்னான சந்தர்ப்பம் என்று அரசாங்கத் தலைவர்கள் வர்ணிக்கின்ற தற்போதைய சூழ்நிலையை சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிராக தென்னிலங்கையில் நிலவும் ஆழமான எதிர்ப்புணர்வுகளை படிப்படியாக அகற்றுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் 37 வருடகாலமாக நாட்டின் அரசியலமைப்பில் இருந்துவருகின்ற போதிலும், அதை நடைமுறைப்படுத்துவதில் மாத்திரமல்ல, சிங்கள மக்கள் மத்தியில் பேசுவதற்கே தென்னிலங்கையின் பிரதான அரசியல் சக்திகளிடம் ஒரு மனத்தடை இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தொடக்கத்தில் இருந்தே 13ஆவது திருத்தத்தை எதிர்த்துவந்த போதிலும் காலப்போக்கில் மாகாண சபைகளில் அங்கம் வகித்தது. மாகாண சபைகள் முறைமை இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்பது  தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடாக  இருக்கின்ற போதிலும், அதை அரைகுறையாகவேனும் நடைமுறைப்படுத்துவதை அரசாங்கங்களினால் தவிர்க்க முடியவில்லை.

இந்தியாவுடனான உடன்படிக்கை ஒன்றின் விளைவாக மாகாண சபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் இலங்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு  உருப்படியான  அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாட்டை எம்மால் காணக்கூடியதாக இருந்திருக்குமா? தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் கடந்த காலத்தில் அரசாங்கங்களுடன் தமிழ்த் தலைவர்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகள் எல்லாமே தென்னிலங்கை இனவாத சக்திகளின் எதிர்ப்பின் காரணமாகவே கிழித்தெறியப்பட்டன. இந்தியாவின் தலையீட்டின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே காரணத்தினால் மாத்திரமே மாகாண சபைகள் முறை இன்று வரை விட்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதுதானே உண்மை.

தங்களது பிரச்சினைகளுக்கு மாகாண சபைகள் முறையை ஒரு தீர்வாக தமிழ் மக்கள் விரும்புவார்களாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஜனாதிபதியாக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூறியதை அநுர குமார திசாநாயக்க  மறந்திருக்கமாட்டார். உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களை நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான பாதையில் வழிநடத்தத் தவறிய தமிழ் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அரசாங்கம் இனிமேலும் கருத்தில் எடுக்கத் தேவையில்லை.

இந்தத் தமிழ்க் கட்சிகள் இதுகாலவரையான தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால் தமிழ் மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படும் ஆபத்தே அவர்களைக் காத்திருக்கிறது.

நீண்டகால அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வொன்றை நோக்கிய பயணத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக மாகாண சபை தேர்தல்களை நடத்தி 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கொழும்பில் அரசாங்கத் தலைவர்களுடனும் இந்திய இராஜதந்திரிகளுடனும் பேசும்போது கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அந்த விடயத்தில் அதற்கு அப்பால் எதுவும் செய்வதில்லை.

தமிழ் மக்களிடம் ஒரு கற்பனாவாத தமிழ்த் தேசியவாதம் பற்றியே அவர்கள் பேசுவார்கள். இந்த தடவை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மூலமாக அவர்கள் எந்த படிப்பினையையாவது பெற்றிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் ஊடக நேர்காணல்களில் தெரிவித்த கருத்துக்களை அடுத்து தோன்றிய சர்ச்சைக்குப் பிறகு அது தொடர்பில் விளக்கம் அளித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் தற்போதுள்ளதைப் போன்று அப்படியே இருக்கும் என்று கூறினார்கள்.

ஆனால், கடந்த ஆறு வருடங்களாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்படாமல் அவை ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழேயே இருந்துவருகின்றன. அடுத்தவருட இறுதியில் மாகாண சபை தேர்தல்களை நடத்தப் போவதாக கடந்த வாரம் தன்னைச் சந்தித்த இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி திசாநாயக்க கூறியதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதாகத் தெரியவரவில்லை. சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்திய அவர்களிடம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் தொடங்கும்போது அதைப் பற்றி பரிசீலிக்கலாம் என்று  ஜனாதிபதி மேலோட்டமாக  கூறியிருக்கிறார்.

ஆனால், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு மூன்று வருடங்கள் எடுக்கும் என்றும் அப்போது மாகாண சபைகள் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் உட்பட முக்கியமான விவகாரங்கள் குறித்து பொதுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கும் என்றும்  அமைச்சரவைப் பேச்சாளரான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். மாகாண சபைகள் தொடர்பில் உறுதியான தீர்மானம் எதையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று வருடங்கள் என்பது அரசியலைப் பொறுத்தவரை ஒரு நீண்டகாலமாகும். அந்த இடைப்பட்ட காலத்திற்குள் அரசியல் நிலைவரங்களில் மாற்றங்கள் கூட ஏற்பட்டு விடலாம். இலங்கையில் புதிய அரசியலமைப்பை கொண்டுவந்த எந்த அரசாங்கமும் இவ்வளவு நீண்டகாலம் தாமதித்ததில்லை.

முதலாவது குடியரசு அரசியலமைப்பை 1972 மே மாதம் கொண்டுவந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி இல்லாவிட்டால் முன்கூட்டியே அந்த அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியிருக்கும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன  தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த ஒரு வருடத்துக்கும் சற்று அதிகமான காலத்திற்குள் இரண்டாவது அரசியலமைப்பை கொண்டுவந்தது.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான ‘நல்லாட்சி’ அரசாங்கம் முன்னெடுத்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை நான்கு வருடங்கள் (2015 – 19) நீடித்து இடைக்கால அறிக்கையுடன் முடிவுக்கு வந்தது. அந்த செயன்முறையை நிறைவுசெய்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தார். தனது போட்டி வேட்பாளர்களான  ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தங்களது விஞ்ஞாபனங்களில் உறுதியளித்ததை போலன்றி திசாநாயக்க 13ஆவது திருத்தத்தை பற்றி குறிப்பிடுவதை திட்டமிட்டே தவிர்த்துக்கொண்டார்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் தேசிய ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் திட்டத்தை பொறுத்தவரை, ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய திசாநாயக்கவும் அந்த பதவியில் மூன்று வருடங்கள் நீடிக்கப் போகிறார் என்பதாகும்.

புதிய அரசியலமைப்பில் புதிய தீர்வுத் திட்டத்தை முனவைக்கப்போவதாகக் கூறும் அரசாங்கம் அந்த இடைப்பட்ட மூன்று வருட காலத்திற்குள் தற்போதுள்ள அதிகாரங்களுடனாவது மாகாண சபைகளை இயங்கவைக்குமா? அடுத்த வருட இறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழரசு கட்சி நாடாளுமன்ற குழுவிடம் ஜனாதிபதி கூறியிருக்கிறார். உண்மையிலேயே உள்ளூராட்சி தேர்தல்களையும் விட முன்கூட்டியே நடத்தப்பட வேண்டியவை மாகாண சபை தேர்தல்களே. ஆறு வருடங்களாக அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரமே சாத்தியமானளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரியில் அல்லது பெப்ரவரியில் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது. மாகாண சபை தேர்தல்கள் தாமதிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் கூட நீதிமன்றத்தை நாடுவதில் அக்கறை காட்டவில்லை.

உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு அடுத்த வருட இறுதிவரை காத்திருக்காமல் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும். அரசியலமைப்பில் புதிய தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்னதாக தற்போது கைவசம் இருக்கும் மாகாண சபைகளை முழுமையான அதிகாரங்களுடன் இயங்க வைப்பதே முக்கியமானதாகும். ஏனென்றால், 13ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களையே 37 வருடங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில் அதில் உள்ளதையும் விட கூடுதலான அதிகாரங்கள் கொண்ட ஏற்பாட்டை எவ்வாறு புதிய அரசியலமைப்பில் எதிர்பார்க்கமுடியும்?

13ஆவது திருத்தத்தில் இருக்கின்ற அதிகாரங்களாவது முழுமையாக புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படுமா என்று கிளம்புகின்ற சந்தேகத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அடுத்த வாரம் ஜனாதிபதி திசாநாயக்க புதுடில்லியில் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகள் விவகாரத்தை இந்தியத் தலைவர்கள் அவரின் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று புதுடில்லியில் ஒன்றையும் கொழும்பில் வேறு ஒன்றையும் கூறாமல் திசாநாயக்க வித்தியாசமாக நடந்துகொள்வார் என்று நம்புவோமாக.

சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கும் அதிகாரப்பரவலாக்கலுக்கும் எதிராக தென்னிலங்கை அரசியல் சமுதாயத்திடமும் மக்களிடமும் இருக்கின்ற ஆழமான வெறுப்புணர்வை அகற்றுவதற்கு தனக்கும் அரசாங்கத்துக்கும் தற்போது இருக்கும் பேராதரவைப் பயன்படுத்தி ஜனாதிபதி திசாநாயக்க  துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்காமல் இனவாதத்துக்கு எதிராக பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் தேசிய மக்கள் சக்தி தன்னிடம் இருக்கும் மனத்தடையை முழுமையாக அகற்ற வேண்டும்.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

https://maatram.org/articles/11888



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.