Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும்

கலாநிதி.க.சர்வேஸ்வரன்

tamil.jpg

தமிழ்த் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்; ஒன்றுபட்டு வந்தால் வாக்களிப்போம் என மக்கள் கூறுகின்றனர்.ஒற்றுமை ஏன் தேவை என்றால், வேகமாக தமிழர் தாயகத்திலேயே அவர்களது அடையாளங்களும் இருப்பும் பறிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

1. இப்போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

2. நிரந்தர தீர்வு நோக்கி ஆக்கபூர்வமான வேலைத்  திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

இவ்விடயங்களை ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓர் அணியாக செயல்படுவதன் மூலமே சாத்தியமாகும்.பலவாறாக பிரிந்து நின்று தீர்வு தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ் கட்சிகள் வெளிப்படுத்துவதானது

1.சிங்கள ஆட்சியாளர் காலம் கடத்த உதவுகிறது.

2. சர்வதேச சக்திகள் ஒன்றுபட்டு இலங்கை ஆட்சியாளர் மீது தீர்வு தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகளை சீரழிக்கிறது.இதனாலேயே இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதர்கள் தமிழ் தலைமைகளின் ஒற்றுமையை வலியுறுத்துகின்றனர். யாரும் சொல்லாமலே தமிழ் தலைமைகளுக்கு இப்புரிதல் இருந்திருக்க வேண்டும். ஏற்கனவே இருந்த பலமான ஒன்றுபட்ட அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவானது என்ன அடிப்படையில்? அது படிப்படியாக உடைந்ததற்கான காரணங்கள் எவை? ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஐந்து கட்சிக் கூட்டணியின் ஒற்றுமைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை? இவற்றுக்கு மனம் திறந்த விமர்சனம், சுய விமர்சனம் ஊடாக பதில் தேடாமல் உறுதியான ஒற்றுமை சாத்தியமில்லை என்பதை தமிழ் கட்சி தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன மோதல் தீர்வு நோக்கிய கொள்கைகள், செயல்பாடுகள் வலுவாக முன்னெடுப்பதற்கு ஒற்றுமை அவசியம். எனவே தீர்வு நோக்கிய கொள்கைகளை வகுப்பதற்கான அடிப்படை புரிதல் எதுவாக இருக்க வேண்டும்?

1. வடக்கு – கிழக்கு நிரந்தர இணைப்பு தொடர்பில் இக்கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாடும் அதனை அடைவதற்கான வேலைத் திட்டங்களும்.

2. வேகமாக பறிக்கப்படும் தமிழர் பிரதேசத்தில் சிங்கள- பௌத்த ஆக்கிரமிப்பை  தடுத்து நிறுத்தி தமிழரின் இருப்பையும் தமிழர் தாயகத்தின் இருப்பையும் உறுதி செய்தல் விடயத்தில் ஒன்றுபட்ட நிலைப்பாட்டுக்கு வரல்.அதனை செயல்படுத்தல்

3. நிரந்தர தீர்வுக்கான தமிழ்த் தலைமை அனைவரும் ஏற்றுக்கொண்ட தீர்வுத்திட்டமும் அதனை அடைய உரிய சர்வதேச ஆதரவை திரட்டலும் செயல்படுத்துதலும் என்பதில் ஒன்றுபட்ட கருத்துக்கு வரல்.

கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒற்றுமை என்பதே வலுவானதாகவும் செயற்திறன் மிக்கதாகவும் அர்த்தமுள்ள ஒற்றுமையாகவும் அமையும். இவ்வகையில் அமைந்த ஒற்றுமை என்பது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போன்ற ஓர் பொதுவான கட்சியாகவோ அல்லது ஏற்றுக்கொண்ட கொள்கைகளை ஓர் அணியாக சேர்ந்து செயல்படுத்தும் வகையிலானதாகவோ இருக்கலாம். குறுகிய கட்சி நலன்  மற்றும் கட்சிகளில் சிலரின் பதவி நலன் போன்றவற்றிலிருந்து மக்கள் நலனை முன்நிலைப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே இத்தகைய கொள்கை அடிப்படையிலான வலுவான ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும். மாறாக குறுகிய நலன்கள் அடிப்படையிலான இரகசிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த, கொள்கைகளை திரித்து அல்லது மறுத்து பேசுபவர்களால் வலுவான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. மேற்கண்ட புரிதலின் அடிப்படையில் தற்போதைய இரண்டு ஒற்றுமை முயற்சிகள் பற்றியும் அவற்றின் சாத்தியம், அசாத்தியம் பற்றியும் உண்மையான வலுவான ஒற்றுமைக்கான வழிமுறை பற்றியும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒன்று, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்துவரும் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய சமஷ்டித் தீர்வு திட்ட அடிப்படையிலான ஒற்றுமை முயற்சி. இது அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றாண்டுகளில் முன்வைக்க இருப்பதாக கூறும் புதிய அரசியல் யாப்பில் இத்தீர்வு திட்டத்தை உள்ளடக்குவதற்கான கொள்கை ரீதியான உடன்பாட்டை ஏனைய கட்சிகளிடம் பெறல் என்பதாகவே தெரிகிறது.

இவ்வகையில் அவர் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுடனும் டெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கல நாதனையும் சந்தித்துள்ளார். எனினும் இவர்களுடைய பதில் தொடர்பில் எந்த தெளிவான விடயங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இங்கு கவனிக்கப்பட வேண்டிய இரண்டு விடயங்கள்;

1, மூன்றாண்டுகள் கழித்து வரும் என எதிர்பார்க்கப்படும் புதிய யாப்பில் இன மோதல் தீர்வுக்கு ஒன்றுபட்டு செயல்படல் அல்லது ஒரே குரலில் செயல்படல் என்ற விடயத்தை மட்டுமே இது நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய யாப்பு வருமா? வராதா? என்பதை கணிக்க இந்த ஆட்சியின் இன்றைய அவகாசம் போதாது. ஏனெனில் ஊழல் ஒழிப்பு, பொருளாதாரத்தை உயர்த்தல் போன்ற வேலை திட்டங்களே

முன்னுரிமை பெறுகின்றன. இதற்குள் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்புகள், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருதல், ஏற்றுமதியை அதிகரித்தல், உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்தல் என நீண்ட பட்டியல் கொண்ட பொருளாதாரம்  சார்ந்த வேலை திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றின் சாத்தியப்பாட்டை பொறுத்தே இவ் ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் தீர்மானிக்கப்படும். ஆனால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால நிதி அறிக்கையில்  பௌத்தத்திற்கு 700 மில்லியன்களும் தொல்லியல் துறைக்கு பெருமளவு நிதியும் ஒதுக்கப்பட்டமை இவர்களது பௌத்த- சிங்கள ஆக்கிரமிப்பு செயல்திட்டம் வடக்கு – கிழக்கில் தடையின்றி தொடரும் என்பதற்கான சமிக்கையாகவே பார்க்க முடியும்.

எனவே புதிய யாப்பின் வருகை அதனூடான நிரந்தர தீர்வு என்ற கேள்விக்குறியான நீண்ட கால திட்டத்தை அடைவதற்கு முன்னரே வடக்கு – கிழக்கு சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பின் கீழ் பெருமளவுக்கு கொண்டுவரப்படும் ஆபத்தும் தாயக கோட்பாடு என்ற கோரிக்கையை வலுவிழக்கச் செய்து தீர்வு கோரிக்கைகளை அர்த்தமிழக்க  செய்யும் அபாயமும் உடனடியாக கணக்கில் எடுக்கப்பட வேண்டும். இவ்வகையில் மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தலை விரைந்து உத்தரவாதப்படுத்துவது அவசியம் ஆகிறது. மாகாண சபை அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதுவே தீர்வாகிவிடும். சமஸ்டி பற்றிய கோரிக்கை வலுவிழந்து விடும் என்ற வாதம் இரண்டு அடிப்படைகளில் தவறானது.

1.மேற்கூறியது போல் சமஷ்டிக்கான அரசியல் சூழலை ஏற்படுத்து முன்னரே எமது மக்களினதும் மண்ணினதும் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும்.

2.இன்று 13வது திருத்தத்தில் என்னென்ன குறைபாடுகள், பலவீனங்கள் உண்டோ, நடைமுறைப்படுத்தப்படும் போதும் அவை இருக்கும். மேலும் அவற்றை நடைமுறையில் எடுத்துக்காட்டி சமஷ்டியின் அவசியத்தை சமூகத்திற்கு புரிய வைத்து ஆதரவை திரட்டுவதற்கும் ஏதுவாகும். எனவே கஜேந்திரகுமாரின் ஒற்றுமை முயற்சியில் நிரப்பப்பட வேண்டிய இடைவெளிகள் பலமாக உண்டு. இதற்கான கரிசனையின்றி உறுதியான ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதன் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைமை குழு அண்மையில் தமிழரசு கட்சியுடன் இணைந்து செயல்படுவது பற்றி தமிழரசு கட்சியுடன் பேசுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பில் ஏனைய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு எடுக்குமா? அல்லது தனியாகவே பேசி முடிவெடுக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம் விடுதலைப்புலிகளே தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். கூட்டமைப்பு அப்பேச்சுவார்த்தைகளுக்கு பின்பலமாக செயற்படும் என்ற விடயம் தவிர, கூட்டமைப்பு ஓர் யாப்பின் அடிப்படையில் ஜனநாயக ரீதியாக செயல்படுவதற்கான அம்சங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதே சட்டப்படி பதிவு செய்யப்பட்ட பெயர் அல்ல. தமிழர் விடுதலைக் கூட்டணியே  சட்டப்படியான பெயராகவும் உதயசூரியனே சின்னமாகவும் இருந்தது. இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் உட்கட்சி பிரச்சனையால் கூட்டணியின் பெயர், சின்னம் ஆகியன  நீதிமன்றத்தின் ஊடாக ஆனந்த சங்கரியின் வசமாகியது. இவ்விடயத்தில் தமிழரசு கட்சி போதிய அக்கறை காட்டாமையே ஆனந்த சங்கரி சார்பில் தீர்ப்பு வர காரணம் ஆகியது என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆனந்த சங்கரி கொண்டு சென்றது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பதிவு செய்யப்பட்டல் நீதிமன்றத்தின் ஊடாக பங்காளிக்  கட்சிகள் ஏதேனும் கொண்டு சென்று விடும் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய தமிழரசு கட்சி நிராகரித்தது. புலிகள் இருந்தபோது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அவர்களது மறைவுக்குப் பின் வலுவற்றதாகிறது. மேலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதிலாக தமிழரசு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு கூட்டமைப்பின் சட்டப்படியான கட்சிப் பெயர், சின்னம் பயன்படுத்தப்பட்டது. இங்கு தீர்வு தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் பற்றியோ கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாக வலுவாக செயல்படுவதற்கான கட்டமைப்புகள், சட்டதிட்டங்கள் எதுவுமே இன்றி வெறும் தேர்தல் கூட்டணியாகவே செயல்பட்டது. பேச்சுவார்த்தைகளில் அனைத்து தலைவர்களும் இணைந்து பங்குபற்றினாலும் அதற்கு முன்னராக என்ன பேசுவது என்பது பற்றியோ அல்லது பேச்சுவார்த்தை வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், உபாயங்கள் பற்றியோ அங்கத்துவ கட்சித் தலைவர்களை அழைத்து பேசும் பழக்கம் கடைசி வரை கூட்டமைப்பில் இருந்ததில்லை.

தனியாக செயல்படும் தமிழரசு கட்சிக்குள்ளேயே அத்தகைய நடைமுறை இல்லை. மேலும் தமிழரசு கட்சி பல வழக்குகளில் சிக்குண்டு, பல குழுக்களாக – குழுவாக செயற்பட்டு வரும் நிலையிலேயே உள்ளது. எனவே பழைய கூட்டமைப்பை மீள உருவாக்குவேன் என ஸ்ரீதரன் கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில் கட்சிக்குள் அவர் முடிவெடுக்கும் எந்த பதவியிலும் இல்லை. கட்சி முடிவை தீர்மானிப்பதில் சுமந்திரனின் ஆதிக்கமே இன்றும் நிலவுகிறது .மேலும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் கருத்தானது, தமிழரசு அதிக எண்ணிக்கையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால் மற்றவர்கள் விரும்பினால் தம்முடன் இணையலாம். அதனை கட்சியின் மத்திய குழுவே முடிவெடுக்கும் என்பதாகும். ஆக உள்ளார ஜனநாயகப் பண்புகள், நடைமுறைகள் அற்ற சுமந்திரனின் தனியார் கம்பெனி போல் செயல்பட்டு வரும் தமிழரசு கட்சியுடன் செயல்படுதல் என்பதில் ஏராளமான தடைகள் உள்ளன.

ஆனால்,மக்கள் நலன் சார்ந்து தீர்வு தொடர்பான பொது நிலைப்பாட்டுக்கு வருதல் என்பது பற்றி பேசலாம்.அவற்றின் அடிப்படையில் தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்படலாம். சிங்கள கட்சிகள் குறிப்பாக ஆளும் தேசிய மக்கள் சக்தியின் அதிகார பகிர்வில்லை, ஆனால் இன- மத சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம் என்கிற அபாயகரமான வெற்றுக் கோஷத்தின் பின் தமிழ் மக்கள் சென்று தமது தலையில் தாமே  மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளாமல் பாதுகாக்க தேர்தல் கூட்டுகள் பற்றி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக ஏனைய கட்சியுடன் பேசுவது பற்றியும் சிந்திக்கலாம்.

மக்கள் நலன் சார்ந்து தீர்வு தொடர்பான கொள்கையில் ஒன்றுபட்டு செயல்பட்டாலே மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தலைமையின் பின் அணி திரள்வார்கள். அதை விடுத்து குறுகிய தேர்தல் வெற்றி நலன் அடிப்படையில் மட்டுமோ  அல்லது தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்க தவறி, இருப்பதை இழந்து பறப்பதற்கு பின்னால் ஓடும் வகையான ஒற்றுமை குரலோ நிலைக்கவும் மாட்டாது, மக்களுக்கு பயனுள்ளதாக அமையவும் மாட்டாது. உண்மையான ஒற்றுமையை அல்லது ஒன்றுபட்ட செயற்பாட்டை உறுதிப்படுத்த தமிழ் தேசியப் பரப்பில் செயற்படும் அனைத்துக் கட்சிகளும் தீர்வு தொடர்பான கொள்கை முடிவுகளையும் அவற்றை செயல்படுத்தும் வழி வகைகளையும் உருவாக்கும் வெளிப்படையான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே. இதனை எந்த கட்சி முன்னெடுத்தாலும் வரவேற்கப்பட வேண்டியது.

 

https://thinakkural.lk/article/313943

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.