Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 01: முகவுரை

"நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், 
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர் 
அஞ்சாத பொருளில்லை அவனியிலே; 
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த 
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்; 
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத் 
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார்."
[மகாகவி பாரதியார்-]

ஒரு மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ,ஒவ்வொரு நாள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ,முடிவற்ற பல நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டு அதனால் ஆளப்படுகிறான்.

நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.அது அறிவியலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையாக இல்லாத இடத்து மூடநம்பிக்கை(Superstition)யாகிறது.

"யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"

என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தானே இயங்குகிறது? நம்பிக்கைகள் தாமே மனிதனை இயக்குகின்றன? இதை எவராலும் மறுக்க முடியாது?இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத நிலையிலும்,திடீர் நிகழ்வுகளுக்குச் காரணம் அறியாத நிலையிலும், மனிதமனம் தன்போக்கில் பதிவுசெய்து கொண்ட காரண காரியங்களே நம்பிக்கைகள்’ ஆகும்.

நம்பிக்கைகளின் நம்பகத் தன்மை, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் நம்பிக்கைகளை நம்பிக்கை(Belief) , திட நம்பிக்கை (Faith), மூட நம்பிக்கை(Superstition) என்று வகைப்படுத்தலாம் 

காரண காரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிவதை நம்பிக்கை (Belief) என்றும், நிச்சயம் பலன் உண்டு என்ற உறுதியான நம்பகத் தன்மையைக் கொடுப்பதைத் திட நம்பிக்கை (Faith) என்றும் (நான் நன்றாகத் தேர்வு எழுதியுள்ளேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவது), காரண காரியம் அறியப் படாத நிலையில் உள்ளதை மூட நம்பிக்கை (Superstition) என்றும் குறிப்பிடுவதுண்டு.

பெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.

வெவ்வேறு கலாச்சாரம்[பண்பாடு ] வழிவழி வந்த மாறுபட்ட மூட நம்பிக்கைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக, ரோம,கிரேக்க நாகரீக மக்கள்,இயற்கை நிகழ்வுகள் கடவுளின் செயலே என  நம்பினர்.அதனால் ஏற்பட்ட கடவுள் மேல் உள்ள பயமே[deisidaimonia:in a good sense reverencing god or the gods, pious, religious in a bad sense superstitious religious or The fear of supernatural powers ] ,ரோமர்கள்  மூட நம்பிக்கை என கருதியது.

மேற்குலக சில நம்பிக்கைகள் உண்மையிலே பெரும் அழிவை  ஏற்படுத்தயுள்ளது.இங்கிலாந்தில் பூனை ஒரு சூனியகாரியாக கருதியது[cats were witches] ,அதனால் பூனைகளை சாக்கொண்டது /அழித்தது ,எலி தனது தொகையை பெரும் அளவு அபிவிருத்தி செய்ய  உதவியது.இதனால் 1665-1666இல் கொள்ளை நோய்[Plague/பிளேக்நோய்.] வந்து 100,000 மக்களை பலி கொண்டது எல்லோருக்கும் இன்னும் நினவு இருக்கலாம்?மேலும்  மேற்குலகில் முதலிடம் வகுப்பது இலக்கம் 13 ஆகும்,அதனுடன் வெள்ளி  கிழமை சேர்ந்தால் அது மேலும் மோசமாகிறது.அப்படியே விரலை குறுக்கே வைப்பதும்["crossing fingers"], சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பதும் ஆகும். 

பொதுவாக பல மூட நம்பிக்கைகள் சமயத்துடன் தொடர்புடையவை .உதாரணமாக தாயத்து[Talisman/மந்திரக்காப்பு] கட்டுதல் போன்றவையாகும் .இந்தியாவிலும் மற்றும் தமிழர்களுக்கிடையில் நிலவும் பொதுவான மூட நம்பிக்கைகளை நாம் சங்க பாடல்களில் காணக்கூடியதாகவும் உள்ளது.  

ஒரு மனிதனுக்கு நீரழிவு நோய் இருப்பதை அறிய[screening diabetes] எப்படி இரத்த பரிசோதனை செய்கிறோமோ அப்படியே ஒரு தமிழ் குடும்பத்தில்,கல்யாண பொருத்தம்,இருவரினதும்  சாதகம் பரிசோதனை[horoscope matching] மூலம் அறியப்படுகிறது. இந்த சோதிடம்[astrology] பிள்ளைக்கு பெயர் வைப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படுகிறது. 

முன்னோர்கள் காலத்தின் தேவை கருதி சில பழக்க வழக்கங்களை கடைப்பிடித்திருக்கிறார்கள். உதாரணமாக இரவில் வீட்டை கூட்டுதல் நல்லதல்ல என்பதால். காரணம் வெளிச்சம் குறைவான படியால் பெறுமதியான சிறிய பொருட்களையும் தெரியாமல் எறிந்து விட சந்தர்ப்பம் அதிகம் என்பதால்.அது போல, இரவில் நகம் வெட்டக் கூடாதும் ஆகும்.  

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்.தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும்? . இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!எப்படியாயினும் சங்க காலத்திலேயே தமிழன் இதை,இப்படியான மூட நம்பிக்கைகளை  நம்ப தொடங்கி விட்டான்.

ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந்தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது.இடைக்காட்டுச்சித்தர் தன் ஆடுகளுக்கு எக்காலத்திலும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை  தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர், "6௦" ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.பெண்பால் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்று சங்க பாடல் கூறுகிறது .மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் நம்பினர் .

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"-- பட்டினப்பாலை.

இப்படியாக இன்னும் கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டுநம்பிக்கைகளுடனும் மனிதன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 02 தொடரும்  [முகவுரை தொடர்கிறது]

images?q=tbn:ANd9GcTNUrvsZF_eStE7OZrf7H6fnGzTuJAInobewBETtDzqyAGQSnO8Ww 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 02: முகவுரையின் இரண்டாவது பகுதி தொடர்கிறது 
 
ஊருக்கே குறி சொல்கிறது பல்லி, என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்.மேலும் “பூனை குறுக்கால போனால் போகிற காரியம் சரிவராது” என்று  சொல்லுவாங்க.அது பூனை பயத்தில் அல்லது ஏதாவது ஒன்றை பிடிக்க  ஓடுது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தானே  கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறானே.வேடிக்கையாக இல்லையா?  
 
இப்ப இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "தும்மலை"[sneeze]ப்பற்றி வள்ளுவர் கூறுவதை கேளுங்கள் : 
 
"நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்"- குறள் 1203
 
தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?. விக்கலும்[hiccough] அப்படியே. அவரைப்பற்றி யாரோ கதைக்கிறார்கள் அல்லது நினைக்கிறார்கள் என்பார்கள்.இப்படி சொல்வதன் மூலம் தூர வசிப்பவர் ஒருவரின் அல்லது தூர பயணம் செய்துகொண்டு இருப்பவர் ஒருவரின் ஞாபகத்தை வைத்திருப்பதற்கு உதவும் என்பதாலே.ஆனால் நாளடைவில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது.
 
"சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்டநிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது"ம் அப்படியே .அதாவது ஏணியின் கீழாக நடக்கும் போது தவறுதலாக ஏணியை தட்டிவிட்டால் மேல் இருப்பவர் அல்லது அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் கை நழுவி,கீழால் நடப்பவரின் மேல் விழலாம் என்பதால் ஆகும்.இது ஒரு பகுத்தறிவு சிந்தனையே.ஆனால் நாளடைவில் அதுவும் மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. அவ்வளவுதான்! 
 
"மரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும்நம்பிக்கையாக இருந்திருக்கிறது." 
 
பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன.சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால்,அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். கலிங்கத்துப்பரணி முதலிய பரணி வகை
இலக்கியங்களில் இவை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. சங்ககால நூல்களில் புறம் 356, 363 குறுந்தொகை 231 முதலிய பாடல்கள் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை
நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களை அரிசில் கிழாரும் (புறம் 281), வெள்ளி மாறனாரும் (புறம் 296) தருகின்றனர்
 
"வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க - உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே - நீ
வெம்பி விடாதே"
 
[பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
படம்: அரசிளங்குமரி, 1957] 
 
இவை எல்லாத்தையும் விட ,"பன்றியே" சகுனம் பார்த்ததாக ஒரு போடு போட்டுவிட்டார் பாண்டிய மன்னர் ஒருவர் .எப்படி இருக்குது மூட நம்பிக்கை.இதோ அந்த சங்க கால பாடல்:
 
[புலவர் -உக்கிரப் பெருவழுதி]/( நற்றிணை - 98. (குறிஞ்சி)]:
"எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ம்மம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன் ......"
 
[பொறி அமைக்கப்பட்ட புனத்தில் மேய்வதற்காகச் சிறிய கண்களைக் கொண்ட பன்றி ஒன்று வருகிறது. அது முள் போன்ற பிடரி மயிரைக் கொண்டிருந்தது. அது நுழையும் போது ஒரு குறித்த திசையிலிருந்து பல்லி கத்தியது. உடனே பன்றி நின்றது. ஏதோ ஒரு நுண் உணர்வு. அது திரும்பாமலேயே அப்படியே பின்னோக்கி மெதுவாக நகர்ந்து சென்று அதன் பின்னர் தப்பிச்சென்று விட்டது.]
 
நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர் .உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:
"மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!"
இதற்கு மாமி  கூறுகிறாள்:
"அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு[பெண்மை]அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!"
 
இறுதியாக சங்க கால உரையாடல் ஒன்று :
 
தோழி[தலைவியை.பார்த்து ]:
"அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றானே. அப்படியிருக்கும்போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? "
 
தலைமகள் [தோழியிடம்]:
"தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக்கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து/ சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்".
 
"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"-குறுந்தொகை 30
 
நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!. 
 
அடுத்த அடுத்த இதழ்களில் பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகளை ஒவ்வொன்றாக விபரமாக ,கூடிய வரை " பழ மொழிகள் :,+  சங்க இலக்கியம்" துணையுடன் பார்ப்போம்.
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி 03: "ஆடி மாதம்" தொடரும் 
 
mail?url=https%3A%2F%2Fencrypted-tbn1.gstatic.com%2Fimages%3Fq%3Dtbn%3AANd9GcQydDWJUtpAEAoc3pahf00deqa9feD72qvXkHyfqq1LJ2bY7JdO&t=1735974797&ymreqid=fbf0e7ed-329f-5474-1cfc-3901cc012900&sig=FC9nYJ4kDrp6wU2eZEAUog--~D  Image result for பூனை
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 03


 "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!"
 
[நவாலியூர் சோமசுந்தரப்புலவர்]


தை மாதம்  அறுவடைக்குப்  பின்பான காலம். இம் மாதம் கல்யாண மாதம் எனவும் கருதப்படுகிறது. கல்யாணம் செய்ய ஏங்கும் மணமாகா ஆடவர் , விடலை இருவரும் திருப்ப திருப்ப சொல்லும் கூற்று 

"தை  பிறந்தால் வழி  பிறக்கும்" 

ஆகும். அதேவேளை ஆடி மாதம் கல்யாணம் தடை செயப்பட்ட மாதமாக கருதப்படுகிறது.  


தமிழ் இந்துக்களால் ஆடி மாதம் அமங்கலமான [an inauspicious month]  மாதமாக கொள்ளப்படுகிறது. ஆனால் சக்தி வழிபாட்டிற்கு இது மங்கலமான ஒன்றும் ஆகும். ஆடி  பிறப்பு என்பது ஆடி மாத பிறப்பை குறிக்கும் ஒரு பண்டிகை. சுற்றத்தாருடனும் நண்பர்களுடனும் கொழுக்கட்டையும், ஆடிக் கூழும் பகிர்ந்து கொண்டாடப்படுகிறது. மணமாகா இளம் பெண்கள், குறிப்பாக ஆடி செவ்வாய் தோறும் அம்மனை / சக்தியை விரதம் இருந்து வழிபட்டு தமக்கு நல்ல கணவர் / வாழ்க்கைத் துணைவர் அமைய அம்மனின் திருவருள் / பாக்கியம் வேண்டுகிறார்கள். 


'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', 

என 'கூடாது' களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 


'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்.' 

என்ற நம்பிக்கை!


'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைக்கும்' என்றும், 
 'ஆடியில பிறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது' என்றும் வேறு பழ மொழிகள் கூட சொல்லி வைத்துள்ளார்கள்.


ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். அது வீட்டுக்கு ஆகாது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. அதேபோல ஆடியில் எதைச் செய்தாலும் அது ஆடிப் போகும் என்பதும் இன்னொரு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆடியில் குடி போக மாட்டார்கள், எந்த நல்ல காரியத்தையும் நம் மக்கள் செய்ய மாட்டார்கள்.


ஆகவே தான் இந்த மாதத்தில் சமயம் சம்பந்தமான பல பல விழாக்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றன [ஆடி  பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், .. என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். ]. 


மற்றும் ஆடி மாதம்  குறிப்பாக விவசாயிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாதத்தில்தான் விதை விதைப்பார்கள். அதாவது "ஆடிப் பட்டம் தேடி விதை" என்று முன்னோர்கள் கூறியதற்கேற்ப கிராமப்புறங்களில் பயிரிடும் வேலைகள் படு மும்முரமாக நடைபெறும். இதனால்த்தான் மறைமுகமாக கல்யாணம் போன்ற விழாக்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது [ஆன்மிகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டி இருப்பதால் அதற்கு இடையூறாக மற்ற சுபவிசேஷங்கள் இருந்துவிடக் கூடாது. அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்!] . 


இதன் மூலம் அதி உச்சி கோடை  மாதங்களான சித்திரை, வைகாசி ஆனி மாதங்களில் பிள்ளை பிறப்புகளை நிறுத்துகிறது / குறைக்கிறது . இது ஏன் என்றால்  ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். கடும் வெயில் காலத்தில் பிள்ளை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் பல சுகவீனங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கைதான் காரணம். அதோடு அம்மை போன்ற நோய்கள் பரவும் காலமும் கூட. கோடை வெயிலை சமாளிப்பது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கும் போது பச்சிளம் குழந்தை தாங்குமா? 


அதனால்தான் அக்காலத்தில் ஆடிமாதத்தை தவிர்க்க சொன்னனார்கள் போலும் . மற்றும்படி ஒன்றும் இல்லை. மற்றும்படி சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் பிரச்சினை குடும்பத்துக்கு ஆகாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை தான். நல்லதை சொன்னால் நாம கேட்க மாட்டோமே.  அதனால்த்தான் குடும்பத்துக்கு ஆகாது அப்படி இப்படின்னு சொல்லி வச்சாங்க போலும்! . அது மட்டும் அல்ல நம் கலாச்சாரத்தின் அடிப்படையே நல்ல கருத்துக்களைச்  சொன்னால் புரிந்து கொள்ளமாட்டான். அதையே தெய்வ நம்பிக்கையுடன் சேர்த்துக் கூறினால் தவறாது கடைபிடிப்பான் என்பது தான் இதற்கு காரணம்.  


இது பொதுவான மத நம்பிக்கை. மற்றபடி ஆடியில் கர்ப்பம் தரித்தால், சித்திரையில் பிள்ளை பிறக்கும், அதனால் கெட்டது நடக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. இதற்கும், அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. வெயில் காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அசவுகரியமாக இருக்கும் என்பதால் இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் மிக மிக குறைவு என்பதையும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டிகள் போன்ற வசதிகள் இல்லை என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். 


ஆடி மாதம் என்பது ஒரு இரண்டும் கெட்டான் மாதம். வெயில், காற்று இரண்டுமே அதிகம் இருக்கும். மழையும் நினைத்த நேரங்களில் எல்லாம் பெய்யும். சீதோஷ்ண நிலை மாறி மாறி வருவதால் பரவும் நோய்களுக்கும் குறைவே இல்லை. மேலும் யாருக்கும் வியாதிகள் பரவக் கூடாது என்பதற்காகத் தான் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவார்கள். கூழ் உடம்பிற்கு குளிர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக் காலங்களில் உடல்நலம் கருதி பல்வேறு பிரிவு மக்களும் இவ்வுணவை உண்ணத் துவங்கியுள்ளனர். யாழ்ப்பாணம், இலங்கையில் கூழ் தயாரிப்பிற்கு பெயர் போன இடமாகும்.


இந்த மாதத்தினோடு தொடர்புள்ள பழமொழிகள்:


ஆடிப்பட்டம் தேடிவிதை 

[உழவர்கள் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கலாம்.. காலம் அறிந்து பயிர்செய்ய. இப்பொழுது வைத்தால் தானே தை மாதம் அறுவடை செய்ய முடியும்!]


ஆடிக்காற்றில் அம்மி(மை)யும் பறக்கும்

பொருள்:

வழக்கத்தில் உள்ளது - ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும்.


உண்மையான விளக்கம் - சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மை பறந்து போய்விடும் என்று கூறி, நாளடைவில் திரிந்து இருக்கலாம்?


அந்த காலத்தில், ஆடி மாதத்தில் திருமணம் செய்தால் , குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்றும், சித்திரை கோடை காலம் என்பதாலும், குழந்தைக்கு பல தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பெரியவர்கள் சொன்னார்கள். அது அன்று ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். 


ஆனால் இந்த காலத்தில் அப்படி இல்லை . நம்மை எந்த அளவு வெப்ப நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும் , அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகளும் இன்று உள்ளது. ஆனால் இன்றும் இதைக் காரணமாக கூறிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே படுகிறது.


திருமணம் பற்றிய கருத்து இப்படி என்றால், இன்னும் ஒரு படி நம்முடைய ஆள்கள் அதிகமாக சென்று நல்ல காரியம் எதுவும் செய்வதில்லை. ஆடி மாதத்தில். உதாரணமாக , புது வீடு செல்லக் கூடாது. பழைய வீட்டிலிருந்து காலி பண்ணக் கூடாது போன்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்னும் நடை முறை படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வீட்டிற்கு குடி புகுவதற்கும், ஆடிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று தெரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். அறியாமை என்ற ஒரு வார்த்தையை நம்முடைய அகராதியிலிருந்து அகற்று முடியாது என்பது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயத்தில் அந்த நம்பிக்கைகள் எதனால் கடைபிடிக்க பட்டன என்பதன் ஆணி வேரை புரிந்து கொள்ளவும் வேண்டும்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி / Part - 04:"தும்மல் / விக்கல் / கண் வெட்டசைவு / உள்ளங்கை அரித்தல் " தொடரும்

472917091_10227735262069821_3627209625260583786_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=VIauhLNb25QQ7kNvgEZeB5v&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AFQoys7AxUr5hGa07b0OFCd&oh=00_AYBuXhWWwmZESol4clMWjQXo7VgqDONY9OrhUmbSr23fKg&oe=6784BD41  472762750_10227735262029820_71066264274428033_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=p70ro_1REGUQ7kNvgGOeW7B&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AFQoys7AxUr5hGa07b0OFCd&oh=00_AYDayhGPqTy0Ig7TS2LcyQwfz9hy4D46ikZv3iVNAxZwyQ&oe=6784B419


 

  • நியானி changed the title to பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஆடியில் கர்ப்பமானால் சித்திரையில் பிள்ளை பிறக்கும்.

சித்திரை பத்தில் புத்திரன் பிறந்தால் அக்குடி நாசம் என்பார்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 04

ஒரு மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன என முகவுரையில் பார்த்தோம். அது மட்டும் அல்ல இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவதால் தங்கள் வாழ்வு வளமும், நலமும் பெறும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கைகள் பொதுவாக அனைத்து மக்களிடையும் எல்லா வாழ்க்கை நிலைகளிலும் இருந்து வருகின்றன. நம்பு என்பதற்கு ‘விருப்பம், ஆவல், ஆசை’ என்று அகராதிகள் பொருள் தருகின்றன. மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்டும் அல்லது அதில் ஏற்படும் நோய் குணங்களைக் கொண்டும்  சில நம்பிக்கைகள் அக்கால மக்களிடையே இருந்து வந்துள்ளன. அவைகளில் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம்.

தும்மல்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளுவர் காலத்திலேயே, " எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்" என நம்பினார்கள். இப்படி தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும்  இருந்து வருகிறது. யாராவது வீட்டில் தும்மினால் "ஆயுள் நூறு" என்று வீட்டில் சொல்வார்கள். அன்றைய நாளில் தும்முபவர்களை வாழ்த்துவது போலவே, இன்றும் மேலை நாடுகளில் எவராவது தும்மினால் அருகிலிருப்பவர் "bless you" என்று சொல்லும் வழக்கம் இருந்து வருகிறது. தும்மலின் போது "ஆயிசு நூறு" / "தீர்க்க ஆயிசு" எனக் கூறுவது ஏனெனில் நம் இதயமானது ஒரு மில்லி செகன்ட் நின்று துடிக்கிறதாம்.

[1] "தும்முகையில் வாழ்த்துதல்", 
[2] "தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல்" 

என்ற இரு செய்திகளையும் சில குறள் தெளிவாகத் தெரிவிக்கிறது:  

1312 - "ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து."

நான் அவரோடு  ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்தி  நான் அவரோடு பேசுவேன் என்று நினைத்து.

1317 - "வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று."

நான் தும்மினேன்; அவள்  வழக்கப்படி என்னை வாழ்த்தினாள். ஆனால்  உடனே என்ன சந்தேகம் வந்ததோ அவளுக்கு, எவள் உம்மை நினத்தமையால் இப்ப தும்மினீர் எனக் கேட்டு அழத் தொடங்கிவிட்டாள்.
  
தும்மல் என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும். ஒவ்வாமை [Allergy / அலர்ஜி] காரணமாகவும், தீநுண்மி அல்லது நுண்நஞ்சு அல்லது வைரஸ் (virus) போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும், சைனஸ் [சைனஸ் என்பது நோயின் பெயர் அல்ல, அது முகத்தின் மேல்பகுதியில் நான்கு ஜோடி காற்று பைகள் இருக்கும். அதாவது மூக்கின் 2 பக்கவாட்டிலும், கண்களுக்கு மேலே 2 ஜோடியாகவும், ஆக மொத்தம் 4 ஜோடி காற்று பைகள் காணப்படும். அந்த பைகளின் பெயர் சைனஸ் (Sinu) என்று அழைக்கப்படுகின்றது. நம் எல்லாருக்கும் இந்த சைனஸ் என்ற காற்று பைகள் கட்டாயம் இருக்கும். சைனஸ் என்ற பகுதி இல்லை என்றால், கழுத்து வலி அதிகமாகிவிடும். ஏனெனில் கழுத்தின் பின்புறம் மெல்லிய எலும்பு, தலையின் முழு எடையையும், தாங்குவதால் கழுத்து வலி வராமல் தடுக்க, முகத்தில் உள்ள 4 காற்று பைகள் மிக முக்கிய காரணமாயிருக்கின்றது.] பிரச்சினையாலும் தும்மல் வரும். அவ்வளவுதான். தும்மல் போடும் போது நமது உடற்செயல்கள் அனைத்தும் நின்று விடுகின்றன. இதயம் கூட அந்த கணப்பொழுதில் நின்று விடுகிறதாம்.
 
அதனால் தான்  "வாழ்க பல்லாண்டு!' அல்லது "நூறு வயது வாழ்க"' என்று கூறுவர் போலும். இப்படியான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உண்டு.

விக்கல் :

விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்? என்பார்கள்.

தும்மலை பற்றிய நம்பிக்கைகளை  கூறிய திருக்குறள், விக்கலை பற்றிய எந்த நம்பிக்கைகளையும் கூறவில்லை. அதே போல  கலித்தொகை சங்க பாடலிலும் அப்படி ஒன்றையும் கூறவில்லை. இரண்டிலும் விக்கலை அறிவு பூர்வமாக எடுத்து கூறியுள்ளார்கள்.     

"நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்" (குறள் 335)

உயர்  பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.

கலித்தொகை - குறிஞ்சிக் கலி 51

".. மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே,
உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு, அன்னை
‘அடர் பொற் சிரகத்தாவாக்கி, சுடர் இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள், என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு
‘அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண்!’ என்றேனோ
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
உண்ணு நீர் விக்கினான் என்றேனோ, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்."

ஒருநாள் நானும் அம்மாவும் தனியாக இருக்கும்போது "தாகமாக இருக்கிறது.. .தாகம் தணிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்றான்.
அம்மா ‘அழகான அணிகலன்களை அணிந்தவளே, தங்கத்தால் ஆன பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துப்போய்க் கொடு’ என்றாள். விவரம் புரியாமல் நானும் போனேன்.

அந்தப் பயல்  தண்ணீரைப் பெறுவது போல சட்டென்று வளையல் அணிந்த என் முன் கையைப் பிடித்து இழுத்தான். அதிர்ச்சியடைந்த நான்  "அம்மா! இங்க வந்து பாரும்மா.. இவன் செயலை" என்று அலறினேன்.

அம்மாவும் பதறிப்போய் ஓடி வந்தாள்.  "தண்ணீர் குடிக்கும்போது இவனுக்கு விக்கல் வந்துருச்சும்மா, அதான் உங்களைக் கூப்பிட்டேன்" என்று  பொய் சொன்னேன்.

அம்மா நம்பிவிட்டாள். இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா? என்று கேட்டுக்கொண்டே விக்கல நீக்க, அவனின்  தலையையும் முதுகையும் தடவி தட்டிக்கொடுத்தாள். அப்போது அந்தத் திருட்டுப்பயல் கடைக்கண்ணால் என்னைக் கொல்வதுபோல் பார்த்துப்  ஒரு புன்னகை செய்தான்! அது  என் மனதைக் கொள்ளையடித்தன.!!

விக்கல், யாரோ தம்மை நினைப்பதால் வருகிறது என்று முதலில் நம் முன்னோர்கள் கூறியதை, இன்றும் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் விக்கலானது (hiccup அல்லது hiccough), ஓர் அனிச்சை செயல் [reflex action] ஆகும். இது ஒரு நிமிடத்தில் உதரவிதானம் (diaphragm / வயிற்றுக்கும் மார்புக்கும் இடையே உள்ள குறுக்குச் சவ்வு; நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாய் அமைந்து, மூச்சு இழுத்துவிட உதவும் தசை) பலமுறை சுருங்குவதால் உண்டாகிறது. மனிதர்களில் திடீரென நுரையீரலுக்குள் காற்று புகும் போது குரல் வளை மூடி (எபிகுளோடிஸ் / Epiglottis) மூடிக் கொள்வதால் “ஹக்“ என்ற சத்தம் உண்டாகிறது. இந்த ஒருவித விநோத ஒலி  தான் விக்கல். இந்த விக்கல் வருவது இயல்பு. அவ்வளவுதான்!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 05 "கண் வெட்டசைவு & உள்ளங்கை அரித்தல்"  தொடரும்

velli-2.jpg vikkal.jpg aval.jpg

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 05


கண் வெட்டசைவு:

மனித உடலுறுப்புகளின் அசைவினைக் கொண்ட நம்பிக்கைகலில் குறிப்பாக பெண்களின் இடது கண் துடிப்பது முக்கியமானது.


பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் துர்நிமித்தம் [அபசகுனம்] என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.


  "நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும் 
   மயிர்வார் முன்கை வளையுஞ் 1செறூஉம் 
   களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி 
   எழுதரு மழையிற் குழுமும் 
   பெருங்க னாடன் வருங்கொ லன்னாய்"
   [ஐங்குறுநூறு218.]


நுண்ணிய அழகிய புருவத்தை யுடைய இடக்கண்ணை துடிக்கும் பெண்டிர்க்கு, இடக்கண் துடித்தல் நன்னிமித்தம் [Omens – நிமித்தங்கள்] என இங்கு கூறப்படுகிறது 


பெண்களின்  வலது கண் துடிப்பதால் தீமை விளையும் என்பதனையும் இடது கண் துடிப்பதால் நன்மை விளையும் என்பதனையும்  இளங்கோவடிகள் இந்திர விழாவின் போது கடலாடச் செல்லும் கோவலன், மாதவி இருவரும் பிரியப் போவதையும் கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான் என்பதையும் மிக அழகான ஒரு முன் காட்சியால் உணர்த்துகின்றார்.


"கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"
(சிலம்பு.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, 238-240)


என்ற வரிகளில் பிரிந்திருந்த கண்ணகியின் கண்களும் கூடியிருந்த மாதவியின் கண்களும் கண்ணீர் சிந்தின. ஆனால் துடிக்கும் போது கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன என்று கூறுகின்றார். இக்கண் துடிப்புகள் முறையே நன்மை, தீமை நேரப் போகின்றன எனக் குறிக்கும் சகுனங்கள் என்பது நம்பிக்கை. கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதை, இவ்வாறு கூற வந்த கருத்தைக் குறிப்பினால் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள்.


கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர். 


இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு இலக்கியத்திலும் ஆதாரங்கள் காணப்படுகின்றன.


அசோகவனத்தில் சிறையிருந்த சீதை, தன்னிடம் அன்பு செலுத்தும் திரிசடையிடம், எனக்குக் கண்புருவம் முதலியன இடப்பக்கம் துடிக்கின்றன. இத்துடிப்பால் வருவது நன்மையா? தீமையா? எனக் கேட்டதாகக் குறிப்பிடுகின்றனர். இதனை,


”பொலந்துடி மருங்குலாய் புருவம் கண்முதல்
வலந்துடிக் கின்றில வருவது ஓர்கிலேன்”
என்ற பாடல் மூலம் அறியலாம்.


போர்க்களத்தில் தன் மகன் அபிமன்யூ இறந்த போது அருச்சுனன் கண்ணும் தோளும் இடப்பக்கம் துடித்தன. அதனால் அவன் அச்சமுற்றுக் கண்ணனைப் பார்த்தான். அவன் கண்களும் கலங்கியிருந்தன. இன்றைய போர்க்களத்தில் தன் தமையனோ, மகனோ இறந்திருக்கக் கூடும் என்பதை இடப்புறம் துடித்ததால் உணர்ந்து கொண்டவன் கண்ணனிடம் யார் இறந்திருப்பார்? எனக் கதறிக் கேட்கின்றான் என்பதை,


”என்கண்ணும் தோளும் மார்பும்
இடனுறத் துடிக்கை மாறா
நின்கணும் அருவி சோர நின்றனை
இன்று போரில்
புன்கண் உற்றவர்கள் மற்றென் துணைவரோ
புதல்வர் தாமோ”
இப்பாடலால் உணர முடிகிறது

உள்ளங்கை அரிப்பு:

சாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதே போல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள்.


உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று ஊரில் சொல்வார்கள். வலது கை அரித்தால் பணம் வரும் - இடது அரித்தால் செலவாகும். பெண்கள் விடயத்துல இதை தலைகீழாகும். ஒன்று மட்டும் உண்மை. உள்ளங்கை அரித்தால் கண்டிப்பாய் பணம் வரும் தோல் நிபுணருக்கு [ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்[skin specialist] டாக்டருக்கு]!"


ஆனால் தமிழ் இலக்கியங்களில் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இது "சாக்சன்கள்"   ["Saxons"] அரிப்புக்கு உட்பட்ட  தோலை  வெள்ளியால் ["silver"] தேய்க்கும் போது குணமாகும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்ததாக இருக்கலாம்?  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]   


பகுதி 06: "கிரகணம் [வானகோளங்களின் ஒளிமறைப்பு]  & வீடும் சமையல் அறையும் தொடரும்  

473684548_10227763340771771_5161728628454881898_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=B2xm6O98A7YQ7kNvgF7mP43&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A3hcPKBVkd9zUDVhu3gpnLw&oh=00_AYBdH_BKrjF7cZeDwDZB22vMBM2bzLGHY_BEmd603zfwig&oe=678AFD48   473157915_10227763340691769_8031630254496373670_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Uk49_wIhNJgQ7kNvgGlHqmX&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A3hcPKBVkd9zUDVhu3gpnLw&oh=00_AYD63suv_s_-S5_Yno_ZVFjUIO051JcKsu53lmF5S_OnSA&oe=678B04F1

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 06 

கிரகணம்:


கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு என்பது பொருளாகும், எக்லிப்ஸ் (Eclipse) என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள், வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!. தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதை கூறும்! கிரகணம் என்பது  சந்திரன், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படுவது. ஆனால் பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். அதுமட்டும் அல்ல சூரியனை ராகு, கேது, பாம்புகள் விழுங்குவதால் உண்டாவதாகவும் கருதினர். இந்த கருத்தை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

 
புகார்க் காண்டம் 5. இந்திரவிழவு  ஊர் எடுத்த காதை

“வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்”
  

கரு முகில் சுமந்து, குறு முயல் ஒழித்து-ஆங்கு,
இரு கருங் கயலொடு இடைக் குமிழ் எழுதி,
அம் கண் வானத்து அரவுப் பகை அஞ்சி,
திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல்!


கருங்கூந்தல் என்னும் மேகத்தைச் சுமந்துகொண்டு 
நிலாவில் இருக்கும் குட்டி முயல் நிழலை நீக்கிவிட்டு 
மூக்கு என்னும் குமிழம்பூவை எழுதிக்கொண்டு 
வானத்தில் இருந்தால் ராகு-கேது நிழல் பாம்புகள் 
விழுங்கும் என்று ஆஞ்சி 
மண்ணுக்கு வந்து திங்கள் இங்குத் திரிகின்றதோ? 
என்று இந்த பாடல் கூறுகிறது.

அதாவது, ஒரு பெரிய முகிலைத் / மேகத்தைச் [கூந்தலை] தன்னுச்சியிலே சுமந்து சிறிய முயலை [குறிய களங்கத்தை / கறையை] யொழித்து. அவ்விடத்தே இருமருங்கினும் இரண்டு கயல் மீனையும் [கண்ணையும்] அவற்றிடையே ஒரு குமிழ மலரையும் [மூக்கையும்] எழுதி, இவ்வாறு தன்னைப் பிறர் அறியா வண்ணம் உள்வரிக் கோலம் கொண்டு; இந் நகரமறுகிலே, அகன்ற அழகிய வானில், இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி,  திங்கள் [அந்த சந்திரனே] தானும் வந்து திரிகின்றதோ என வர்ணிக்கிறது.  

நற்றிணை 377, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சி திணை- தலைவன் சொன்னது


"அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல"


அகன்ற கரிய ஆகாயத்தின்கண்ணே அரவினாற் [பாம்பினால்] சிறிது விழுங்கிக் குறை படுத்தப்பட்ட பசிய [பசுமை] கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என இங்கு கூறப்படுகிறது. அதாவது இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் சூரிய கிரகணம் தோன்றுவது நாட்டில் போரும், மோசமான சம்பவங்கள் ஏற்படுவதற்கான அறிவிப்பாக கருதப்பட்டது. சூரிய கிரகணம் ஏற்பட்டால் சமைத்த உணவுகளை சாப்பிட மாட்டார்கள். காரணம் சூரிய கிரகணத்தால் உணவுப் பொருட்கள் கெட்டு விடும் என்ற நம்பிக்கையும் நமது நாட்டு மக்களிடம் இருந்தது. சூரிய கிரகண நம்பிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் தான். அதாவது சூரிய கிரகணத்தின் போது கர்பிணிப் பொண்கள் வெளியே சென்றால் பிறக்கப் போகும் குழந்தை குருடாக பிறக்கும் அல்லது கிழிந்த உதடுடன் பிறக்கும் என நம்பப்பட்டது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தின் போது எந்தவித உணவையும் உட்க்கொள்ள மாட்டார்கள். சூரிய கிரகணத்தின் போது ஏற்படும் வேதியல் மற்றும் ரசாயன மாற்றத்தால், உண்ணும் உணவு மெல்லிய விஷமாகி தாயின் வயிற்றில் இருக்கும் கருவை பாதித்து விடும் அபாயம் உள்ளது என கருதியதால் ஆகும். சூரிய கிரகணம் பற்றிய மூட நம்பிக்கை நமது நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பல நாடுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சூரிய கதிர்கள் சந்திரனால் மறைக்கப்படும் போது வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதாக நம்புகிறார்கள். இதனால் ஒரு முழு காலை நேரமும், அதாவது 12 மணித்தியாலம் அளவிற்கு, எந்த வித உணவையும் இந்த மாசுபட்ட சூழலில் சாப்பிடாமல் மக்கள் விரதம் கடைபிடிக்கிறார்கள். தம்மை எந்த வித தீய செயலிலும் ஈடுபடாமல் தடுப்பதற்காக வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்கள். சந்திர கிரகணம் போதும் அப்படியே செய்கிறார்கள், ஆனால் விரதம் இருக்கும் நேரம் 9 மணித்தியாலம் ஆகும். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 07 "வீடும் சமையல் அறையும்" தொடரும். 

473670314_10227778122781312_11741448964561141_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=v8eFnT6iCIMQ7kNvgEGnzjw&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=ApMgm3uDedkHdeYE484k30j&oh=00_AYD04Nwl9HYVcGnp8hhOg3-xQiICtawMELHhUIfbdXmWVg&oe=678D89A6  473661349_10227778122741311_2987483756056499547_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=wHyKaS-HdhgQ7kNvgHRVsLu&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ApMgm3uDedkHdeYE484k30j&oh=00_AYB5ZULX1CTehtAIkeuJoV4liYPR9ooek2rK9WXBVFKwjw&oe=678DAD27

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 07 

 

வீடும் சமையல் அறையும்: 

 
பல நூறு ஆண்டுகளாக பழங்கதைகளும் மூட நம்பிக்கைகளும் சமையல் அறை பற்றி மலர்ச்சியுற்று இன்னும் மக்கள் இடையில் இன்று வரை தங்கியிருகிறது. சமையல் அறை பண்டைய தமிழர்கள் மத்தியில் ஆலயம் மாதிரி கருதப்பட்டதுடன், அங்கு அதி கூடிய சுகாதாரமும் பேணப்பட்டது. அவர்கள் காலணியுடன் [சப்பாத்து, மிதியடி] அங்கு நுழைய மாட்டார்கள். அப்படி சென்றால் கடவுளின் சீற்றத்துக்கு உள்ளாவார்கள் என நம்பினர். மாதவிடாய் கொண்ட பெண்கள், அந்த காலங்களில் தம்மை துப்புரவுக்கேடான தோற்றம் என கருதி, சமையல் அறைப் பக்கம் போக மாட்டார்கள். இப்படியான நம்பிக்கைகள் மண் அடுப்பு ஒரு மூலையில் அமைந்த பாரம்பரிய சமையல் அறை இருந்த பொழுது உண்டாகின. தரையில்  வைக்கப்பட்ட இலையிலோ அல்லது தட்டிலோ குடும்பம் இருந்து சாப்பிடுவது அப்ப வழக்கமாக இருந்தது. ஆகவே இது சமையல் அறை மிக துப்பரவாக இருக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது.  

இன்னும் ஒரு பழக்கமும் அப்போது இருந்தது. அதாவது சாப்பிட ஆரம்பிக்கும் முன், தமது முன்னோரை  நினைவு கூர்ந்து தண்ணீரை தமது தட்டையோ இலையையோ சுற்றி தெளிப்பது. உண்மையில் அப்படி தெளிப்பது,  தடுப்பு அரணாக தரையில்  ஊரும் எறும்பு மற்றும் பூச்சிகள் சாப்பாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்க்கே.  
 


மேலும், ஒரு பயணத்தின் போது,  பூனை குறுக்கே போவது அன்று விரும்பப்படவில்லை. ஒரு பூனை ஒருவரின் வீட்டிற்கு பக்கத்து பாதையின் குறுக்கே கடந்து போகுது என்றால், அவர் தனது சமையல் அறையை கட்டாயம்  சரிபார்க்க வேண்டும். மாறாக வீடிற்கு திரும்பி மீண்டு சற்று நேரத்தின் பின் பயணம் தொடர்பது அல்ல.

மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் தோன்றிய காலத்தில்  நகராண்மைக் கழகமோ அல்லது அது  போன்ற நிர்வாகமோ கட்டிட அமைப்பை மேற்பார்வை பார்க்க  இருக்கவில்லை. மற்றும்  புறம்போக்கி அமைப்புகளோ [exhaust fans] இருக்கவில்லை. வாஸ்து என்ன கூறுகிறது என்றால் சமையல் அறை ஒரு வீட்டின் காற்றுச் செல் திசைப் பக்கம் [leeward direction] இருக்க வேண்டும் என்கிறது. அப்பத்தான் புகை வீட்டிற்குள் பரவாமல், காற்று அதை எடுத்து செல்லும் என்பதால் ஆகும். மேலும் தெற்கு பக்கம் ஒரு குடித்தனத்திற்கு [establishment] வாசல் அமையின் அது தீயசகுனம் உடையது என்றும்  அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறது. அமெரிக்காவின்  வெள்ளை மாளிகை [The White House in Washington DC ] தெற்கு வாசலையே அதுவும் சுவரின் நடுப்பகுதியிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆகவே மாறிய இன்றைய கால கட்டத்தில் பொருத்தமானதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். அன்றைய கால கட்டத்தில் கதவுகளும் யன்னல்களும் ஒரு நேர் கோட்டில்  குறுக்கு காற்றோட்டத்திற்கு [cross ventilation] உதவின. மேலும் நேர் வடிவமைப்பு, அந்த காலத்தில்   நாணமுடன் உள் வசித்த பெண்கள் தூர இருந்து கதைப்பதற்கு உதவியது. நிழல் மரங்கள் மேற்கில் இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது. இதன் காரணம் சூரியனில் இருந்து ஒரு மறைவைத் தேடுவதே.  

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம்,மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். இது அந்த காலத்தில் தேவைபட்ட ஒன்றாகும்.   

திருமணமான பெண் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் புகுந்த வீட்டில் இருந்து பிறந்த வீட்டிற்கோ, பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கோ, செல்லக்கூடாது என்றும் நம்புகின்றனர். வீட்டு வாசலில் கோலமிட்டால் அவ்வீட்டில் வளம் சேரும் என்றும், நீர்க்கோலம் [மகளிர் நீர்விளையாட்டிற் கொள்ளும் கோல வகை / தண்ணீரால் இடப் படும் அசுபக்குறியான கோலம் / அசுபம் =  அமங்கலம் / inauspiciousness]  அழிவைத் தரும் என்றும் நம்புகின்றனர். வீட்டு வாயிற்படியில் எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது. அவ்வாறு உட்கார்ந்தால் லட்சுமி அவ்வீட்டை விட்டு வெளியே போய் விடுவாள் என்று கூறுகின்றனர். வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி திடீரென விழுந்து உடைந்தால் அவ்வீட்டில் ஏதாவது துக்க நிகழ்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. கடுகை வீட்டிற்குள் தூவக்கூடாது. அவ்வாறு தூவினால் அக் கடுகு வெடிப்பதைப் போன்று அவ்வீட்டில் பலத்த சண்டை நிகழும் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும் விருந்தினர்கள் சென்றதும் வீட்டைப் பெருக்கக் கூடாது என்றும் நம்புகின்றனர். அத்துடன் வீட்டு வாசலுக்கு எதிரே சுவர் இருந்தால் பாதிப்பு என்றும் நம்புகிறார்கள்.

மக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும், பழமை வாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். உதாரணமாக சிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டு, இப்படி எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்காட்டி, பணம் கறக்கும் மனிதர்களால், இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன. தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூட நம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்

பகுதி 08:" கண்ணேறு [திருஷ்டி], வேலன் வெறியாட்டம் & தாயத்து தொடரும்

473728636_10227803961747270_2757889406313211673_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Li4nyFJp8NYQ7kNvgGtM5xN&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AETlc28xtnYueb9AtzwnjgO&oh=00_AYBwbTUySCQHVAklJkPXsD9FMa6Z9-gxUvLbUujfZhK9xA&oe=67927C08

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 08


கண்ணேறு [திருஷ்டி]:
 

தீய கண்பார்வை, பிறர் பொறாமை, வயிற்றெரிச்சல், முதலியன கொண்டு பார்க்கும் கண்பார்வையால், ஒருவருக்கு ஏற்படுவதாக நம்பப்படும் தீங்கை 'கண்ணேறு' என்று கூறுவர்.  


”கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” 

‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது’

“ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”


என்று முன்னோர்கள்  பழமொழிகள் கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது. ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ கணித்துக் கூற முடியாது என்பார்கள். மேலும் ‘கண்ணேறுபடுதல்’ என்ற செய்தியை நாட்டுப்புறப்பாடல் ஒன்றும் பதிவு செய்துள்ளது.


"சீலம் பலகையிலே
செவ்வந்திப் பூ மெத்தையிலே
சீமானும் செல்வியும்
சேர்ந்து விளையாடையிலே
எந்த சண்டாளி பார்த்தாளோ. . .
எப்படித்தான் கண்ணூறு போட்டாளோ. . .


சீலம் பலகைவிட்டு
செவ்வந்திப் பூ மெத்தைவிடர்
சீமானையும் தப்பவிட்டு - இப்போ
செல்வியவள் வாடுறாளே. . .!"


என்பதுதான் அப்பாடலாகும்.


பெரியவர்களை விட குழந்தைகளைத் கண்ணூறு [திருஷ்டி / evil eye] குற்றம் [தோஷங்கள் / blemish] நிறையவே பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன என நம்பப்படுகிறது. 


நமக்கு அறிமுகமில்லாத பிறர் அடிக்கடி குழந்தையை பார்க்க அல்லது  தொட்டு தூக்க, திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் மனதளவில் மாசும், பொறாமை உணர்வும் கொண்டவர்கள் சிசுக்களைப் பார்க்கும் போது கண் திருஷ்டி தோஷம் ஏறபட வழிகளுண்டு எனவும் நம்மவர்கள் எனோ நம்பத் தொடங்கி விட்டார்கள் . அது தான் எமக்குள்ள பிரச்சனை. மற்றும் படி மற்றவர்களின் பார்வையல்ல.


உண்மையில் திருஷ்டி என்பது என்ன? த்ருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள். எல்லாருடைய பார்வையும் நல்லவையாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் எண்ணம் தீயதாக கூட இருக்கலாம் அல்லவா? அந்த தீயதை போக்கும் விதமாக பல்வேறு திருஷ்டி கழிக்கும் பழக்கங்கள், ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றிவிட்டது. 

நான்கு காய்ந்த மிளகாய், அத்துடன் கல்லுப்பு சேர்த்து வலது கையில் எடுத்துக் கொண்டு தாய்க்கும் குழந்தைக்கும் தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் முன்னும் பின்னும் தடவிய பின், முதலில் வலது பின் இடது பக்கமாக தலையை மூன்று சுற்று சுற்றி, மிளகாய் + உப்பு இரண்டையும் அடுப்பில் போட வேண்டும் அல்லது வீட்டுத் தோட்டத்திலே ஏதாவது ஒரு மூலையில் தீ இட்டு அதில் போடவேண்டும். அது தான் அந்த முட்டாள் தனமான செய்கை. 

மேலும் குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண் திருஷ்டியும் அண்டாது எனவும் நம்புகிறார்கள். இப்படி பல முறைகளை கண் மூடித் தனமாக பின்பற்றுகிறார்கள் நம்மவர்கள்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச் செல்லும் போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி பொட்டு வைத்திருக்க வேண்டும். கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால், குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும் என்று நம்புகிறார்கள். 

கண்ணேறு பொம்மை என்பது சில தமிழர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொங்கவிடப்படும் ஒரு வகைப் பொம்மை அல்லது பொம்மைத் தலை ஆகும். பார்ப்பதற்கு அசுரர்கள் போல் இருக்கும். இவை அந்த இடங்களை கண்ணூறில் இருந்து அல்லது தீய சக்திகளில் இருந்து பாதுகாக்கும் என்று சிலரால் நம்பப்படுகிறது. பிற இனத்தவர்கள் மத்தியிலும் இவ்வாறான பொம்மைகள் தொங்கவிடப்படும் வழக்கம் உள்ளது.

‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவிலேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.'

[திருவருட்பா / வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) பாடிய பாடல் இது.]

இசையமைந்த சொன்மாலை மொழியும் அடியார்கள் [புலவர்கள், ஞானிகள்] நாளும் தொழுது வாழ்த்தும் நின் திருவடி யழகைப் பாவியாகிய யான் பார்ப்பேனாயின் கண்ணேறு படுமென நினைத்துக் கனவிலேனும் காட்டுக என்று வேண்டினாலும் காட்டாதொழிகின்றாய்; இது தான் நின் கருணையோ, கூறுக என வள்ளலார் பாடுகிறார்.
 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 09 "வேலன் வெறியாட்டம் & தாயத்து" தொடரும் 

474497261_10227817451724511_7054198277252567564_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=euroYfFK01oQ7kNvgEOzlh7&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ADpBEJaCr3HcGNQ0l47_3Lx&oh=00_AYB7CNPvYKkn1X6m1a0Y4TvuAs8WxPCl9rjt61fOtScXyw&oe=679566B0  474483743_10227817451044494_1318349732033530616_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=w4O_wOyE-iwQ7kNvgHHU7yE&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ADpBEJaCr3HcGNQ0l47_3Lx&oh=00_AYB-Qh-fWBBpf7Rdyg8ODvxrBpM8VQxBhMrvZeFWCsxDAA&oe=67953900 473728277_10227817451004493_651309845257

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 09 


வேலன் வெறியாட்டம் & தாயத்து


இன்னும் ஒரு  திருவருட்பாவில் கண்ணூறு பற்றி இப்படியும்  கூறப்படுகின்றது.
 
"திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
 சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே."

[திருவருட்பா]

திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால், அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்; பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்; கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா.


ஐங்குறுநூறு 247 – கபிலர், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது 


"அன்னை தந்தது ஆகுவது அறிவென்
பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
அரு வரை நாடன் பெயர்கொலோ அதுவே".


உன்னுடைய அழகிய இல்லத்தில் புது மணல் பரப்பி, உன் கையில் தாயத்தைக்கட்டி, முருகனின் கோபத்தை தணிப் பதற்கான சடங்குகளைச் செய்ய, உன் தாய் ஏன் வேலனை அழைத்தாள் என்று புரிகின்றது உன்னுடைய மலை நாட்டுக் காதலனின் பெயர் முருகனோ?


இப்படி "தாயத்து" பற்றிய செய்தியையும் சங்க பாடல் ஒன்றில் காணக்கூடியதாக உள்ளது. 


வேலனின் வெறியாடல் பற்றிப் பல சங்க இலக்கியப் பாடல்கள்  பேசுகின்றன. தலைவியின் காதல் அறியாத் தாயும் செவிலியும் [foster-mother, வளர்த்த தாய்] தலைவியை வாட்டுவது எதுவென்றறிய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுள் ஒன்றே வெறியாடல். இந்த வெறியாடலை வேலன் செய்ததாகவே இலக்கியங்கள் பேசுகின்றன. அங்கே தலைவியின் நோய்க்குக் காரணம் அறிய வெறியாட்டு நிகழ்ந்தது. நடத்தியவள் தாய்.


முன்னர் பௌர்ணமி நாளன்று நடு இரவில் வெறியாட்டு நிகழும். முருகாற்றுப்படுத்த வேண்டி  நடு நாள் களத்தில் நின்று வேலன், முருகனை தன் மீது வரும்படி அழைப்பான். இவ்வாறு வேலன் அழைக்கையில் அச்சம் தருகின்ற முறையில் முருகன் அவன்மீது வந்திறங்குவான். அவ்வாற்றலால் வேலன் வருங்காலம் உணர்த்துவான் என்று சங்க பாடல்கள் கூறுகின்றன. 


ஐங்குறுநூறு 241 – கபிலர், குறிஞ்சி திணை -  தோழி தலைவியிடம் சொன்னது 


"நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன்  தந்தாள் ஆயின் அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே."


நான் படும்  துயரத்தை நோக்கி என் தாய், வேலனை அழைத்தாள், ஆனால் அந்த வேலன் மிகுந்த நறுமணம் கமழும் நாடனுடைய, நட்பு அறிவானா இல்லையா?  திருத்தமான பற்கள் உடையோளே! என்று இப்பாடல் கூறுகிறது. இப்படி பல பாடல்களை சங்க இலக்கியத்தில் காணலாம்.


பழைய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதாவது ஒன்றை  நாம்  செய்யவில்லை எனில் துன்பம் வந்து விடுமோ என்ற பயத்தில், அது அவசியமா இல்லையா என்று யோசிக்காமாலேயே பழைய சடங்குகள் சம்பிரதாயங்களை, நம்பிக்கைகளை  கைவிடாமல் இருக்கின்றோம். அவை தேவையற்றது / பிழையானது என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஏதும் சொல்வார்களோ என்று சமூகத்திற்குப் பயந்து சடங்கு சம்பிரதாயங்களை இன்னும் நாம் கடைபிடிக்கின்றோம்.


எனவே, நாங்கள் செய்வது சரியானதா / தேவையானதா என்பதைச் சிந்தித்துச் செயற்பட்டால் மட்டுமே, இன்றைய நிலையில், தேவையற்ற  சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூடநம்பிக்கைகளும் காணாமல் போகும். அப்படி என்றால் தான் காலத்தின் தேவைக்கு ஏற்றவை மட்டுமே தொடர்ந்தும் இருக்கும். மற்றவை கைவிடப்படும்.  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 10: "பயணமும் நல்ல நாளும்" தொடரும்  

473728930_10227838118801175_6368832808332475613_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=7kO2QQEhOsAQ7kNvgEtEF3C&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A7uZ7Zrsb0W0GX8Rtip5eNX&oh=00_AYDYVhsBZvL7H53YXXB6bLAcgRT2zF7DBwdVW7_aizpP4A&oe=67994A68  473741011_10227838118761174_2671821383702789698_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=vrch0fgfHYAQ7kNvgFqVdgl&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A7uZ7Zrsb0W0GX8Rtip5eNX&oh=00_AYAOo6cuaCF2-mWXRRKzgZDjdHidSH3ClbTCWC-KErygOQ&oe=679957CC

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 10

பயணம்: 


அன்றைய அறியாமைக் கால மக்கள் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது பறவைகளை பறக்கச் செய்து அது பறக்கும் திசைக் கேற்ப அப்பிரயாணத்தின் முடிவைத் தீர்மானிப்பார்கள். அதாவது அப்பறவை வலப்புரம் பறந்தால் அதனை நற்சகுனமாகக் கருதி பிரயாணத்தைத் தொடர்பவர்களாகவும், அது இடப்புறம் பறந்தால் அது துர்ச்சகுனம் என்று ஆரம்பித்த பிரயாணத்தை நிறுத்தக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

இது அக்காலத்தில் வழக்கிலிருந்த சகுனமாகும். இன்று நமது நாட்டு மக்களைப் பொறுத்த வரை பல முறைகளில் சகுனம் பார்க்கிறார்கள். உதாரணமாக:பூக்களை, சுமங்கலியை அல்லது நீர் நிறைந்த குடத்தை  பார்ப்பது ஒரு பயணத்தின் போது நல்ல குறி  / நற்சகுனம் என நம்புகிறார்கள். ஒரு கலாச்சார, சமூக நிகழ்வுகளின் போதும், சிறப்பு [விசேஷ] பண்டிகை கொண்டாட்டங்களின் போதும், சுபமங்கள சடங்குகள் நடைபெறும் போதும் நிறை குடம் வைப்பதை பார்த்திருப்பிர்கள். 

ஆனால் ஒரு பூனை, ஒரு துறவி, ஒரு தனி பிரமணன், ஒரு  அம்பட்டன் [முடி வெட்டுனர்], ஒரு விதவை [கைம்பெண்] அல்லது ஒரு குழவி ஈனாத பெண் [மலடி] குறுக்கே போனால், பயணம் வெற்றி தராது. ஆகவே வீடு திரும்பி, நீர் பருகி விட்டு, சிறிது நேரத்தின் பின் மீண்டும் பயணத்தை தொடரலாம். இப்படி பல நம்பிக்கைகள் உண்டு.      

அது மட்டும் அல்ல ராகு காலத்தில் நீண்ட பயணம் செய்ய மாட்டார்கள் . அது போல நீண்ட பயணம் போய் சில காலத்தின் பின்பே  திரும்ப உள்ளவர்கள், வெள்ளி கிழமை தமது பயணத்தை ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படி போனால் எப்பவும் திரும்பாமல்  விட சந்தர்ப்பம் கூடவாம். அதனால் தான், புதிதாக கல்யாணம் செய்த மண மக்கள், தமது கல்யாண விழாவிற்கு பின் முதல் முறை வெள்ளி கிழமை வீட்டை விட்டு வெளிச்செல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல இறந்த உடலை [பிணத்தை] கூட தகனம் செய்ய, வெள்ளி கிழமை வெளியே எடுக்க மாட்டார்கள்.  

நிமித்தம் [சகுனம்], செல்வவளம் [அதிருஷ்டம் ] இவைகளின் காட்சியே உள்ளங்கை / பாதம் அரித்தல்  எனவும் நம்புகிறார்கள்.  உங்கள் பாதம்  ஓயாமல் அரித்து கொண்டு இருந்தால், தோல் வறண்டு [ உலர்ந்தது] போய் இருக்கலாம் ? அது சிவப்பாய் மாறி இருக்கலாம் அல்லது சினமூட்டுவதாக [எரிச்சற்படுத்துவதாக] வும் இருக்கும். ஆகவே மருத்துவர் ஒருவரை நாடுவது நல்லது. ஆனாலும் நீங்கள் மூட நம்பிக்கையில் மூழ்கியிருந்தால்  இது, இந்த பாத அரிப்பு, நீங்கள், இன்பம் தரக்கூடிய  நீண்ட பயணம் ஒன்று போகப் போவதை குறிக்கும். இது வலது உள்ளங்காலாக இருந்தால், உங்களை வரவேற்கக் கூடிய நாடாக அது  இருக்கும் அல்லது அங்கு ஒரு முயற்சி செய்து, அதில் பெரு வெற்றி அடைய கூடியதாக இருக்கும்.  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


பகுதி/Part 11: "நல்லநாள்"  தொடரும்

475348722_10227869058974660_7428113619323542881_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BfZ3-Fzg_XMQ7kNvgHMEz42&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ACpJ2IYsrXs6JWVfiJohUeJ&oh=00_AYBT1v_lXJnQYU20HniyNj8sz6TpttTrZPvfhQZPKM5yvg&oe=679FCC54

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 11

 

நல்லநாள்:


மனிதனுக்கு தான் செய்யும் செயல்கள்  அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் செயல்கள் தோல்வியாய்  / பிழையாய் போய்விடுமோ என்ற ஐயம் அவனை பல விடயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதுவே இப்படியான நாள் நாள் / நல்ல நேரம் நம்பிக்கைகளை ; வலுபடுத்துகிறது என நினைக்கிறேன். எனவே கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது.  காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது!


அகநானூறு 86


"கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்"


திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது..


அகநானூறு 136


"புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,"


இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது.


போர் செய்யப்போகும் மன்னன்  நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள்நாள் கோள், குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார்.


நெடுநல்வாடை ,பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள [பழங்காலத்தில் நாடாண்ட மன்னர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய காலத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு சாதனமே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது.] இரு கோல்களின் நிழல்களும் ஒரே நேர் கோட்டில் விழும் நாளில் [இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் / கதிரவன் நேர்மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்] அந்த அரண்மனைக்குக் கால்கோள் [foundation  /தொடக்கம்] நடத்தினர் என்று கூறுகிறது.


”விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 – 78)” 

அதாவது,"சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை" என்கிறது நெடுநல்வாடை.

தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’ என்று நாள், கிழமை, சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச்சொல்வார். 
 

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும்  நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவற்கு  இல்லை"  
 (133  களவியல்) 


"ஓரை"யை இக்காலத்தில் "முகூர்த்தம்" என்கிறோம்.

எனது வயது போன அயலவர் ஒருவர் எமது வீட்டிற்கு ஒரு வெள்ளி கிழமை அன்று வரும் போது, நான் இரண்டு நீண்ட தடிகளை இணைத்த கொக்கத்தடி ஒன்றினால், சிலந்தி வலைகளையும் தூசுகளையும் சிலிங் அற்ற கூரையில் இருந்து அகற்றி கொண்டு இருந்தேன். இன்று வெள்ளி. துப்பரவு செய்ய கூடாது. இது துடக்கு என்று என்னை நிறுத்த சொன்னார். அது மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் பணம் கொடுப்பனவோ அல்லது சொத்துகள் விற்பனைவோ அல்லது வீட்டை காலியோ செய்ய மாட்டார்கள். அது போல வியாழக்கிழமை முதற் தரம் வரும் விருந்தாளிக்கு பொருத்தம் அற்றது என்பார்கள். அது போல செவ்வாய் கிழமையும் ஆகும்.  


பண்டைய காலத்தில் ஒரு ஆசிரமம் (ashram) இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு கொடுத்தது, குரு சீடர்களிடம் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடப்பட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா?


அங்கே தான் இருக்கு ஒரு கதையே, ஒருநாள் அந்த பூனை செத்து விட்டது, விடுவார்களா சீடர்கள், வேறு ஒரு பூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன்! 

ஏன் செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என்று கருதுகிறேன்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 12: "கனவுகள்" தொடரும் 

May be an illustration of 1 person

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 11

 

நல்லநாள்:


மனிதனுக்கு தான் செய்யும் செயல்கள்  அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் செயல்கள் தோல்வியாய்  / பிழையாய் போய்விடுமோ என்ற ஐயம் அவனை பல விடயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதுவே இப்படியான நாள் நாள் / நல்ல நேரம் நம்பிக்கைகளை ; வலுபடுத்துகிறது என நினைக்கிறேன். எனவே கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது.  காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது!


அகநானூறு 86


"கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகன் மண்டையர்"


திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது..


அகநானூறு 136


"புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்,
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,"


இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது.


போர் செய்யப்போகும் மன்னன்  நல்ல நாளில் குடையையும் வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்து வைப்பான். வாள்நாள் கோள், குடநாள் கோள் என்று தொல்காப்பியரும் இதைக் குறிப்பிடுகிறார்.


நெடுநல்வாடை ,பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூறும்போது நாழிகை வட்டிலிலுள்ள [பழங்காலத்தில் நாடாண்ட மன்னர்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய காலத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்திய ஒரு சாதனமே 'நாழிகை வட்டில்' என்றழைக்கப்பட்டது.] இரு கோல்களின் நிழல்களும் ஒரே நேர் கோட்டில் விழும் நாளில் [இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் / கதிரவன் நேர்மேலே இருக்கும் நாளில் தான் இது நிகழும்] அந்த அரண்மனைக்குக் கால்கோள் [foundation  /தொடக்கம்] நடத்தினர் என்று கூறுகிறது.


”விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோல் குறிநிலை வழுக்காது குடக்குஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமயத்து
நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி‘
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 – 78)” 

அதாவது,"சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில், கட்டடக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை" என்கிறது நெடுநல்வாடை.

தலைவியை இரவுக்குறியிலோ பகற்குறியிலோ சந்திக்கச் செல்லும் தலைவன் ‘இன்றைக்கு என்ன நாள்? இப்பொழுது என்ன ஓரை?’ என்று நாள், கிழமை, சகுனம் பார்த்துப் போவதைத் தொல்காப்பியர் அழகாகச்சொல்வார். 
 

"மறைந்த ஒழுக்கத்து ஓரையும்  நாளும்
துறந்த ஒழுக்கம் கிழவற்கு  இல்லை"  
 (133  களவியல்) 


"ஓரை"யை இக்காலத்தில் "முகூர்த்தம்" என்கிறோம்.

எனது வயது போன அயலவர் ஒருவர் எமது வீட்டிற்கு ஒரு வெள்ளி கிழமை அன்று வரும் போது, நான் இரண்டு நீண்ட தடிகளை இணைத்த கொக்கத்தடி ஒன்றினால், சிலந்தி வலைகளையும் தூசுகளையும் சிலிங் அற்ற கூரையில் இருந்து அகற்றி கொண்டு இருந்தேன். இன்று வெள்ளி. துப்பரவு செய்ய கூடாது. இது துடக்கு என்று என்னை நிறுத்த சொன்னார். அது மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் பணம் கொடுப்பனவோ அல்லது சொத்துகள் விற்பனைவோ அல்லது வீட்டை காலியோ செய்ய மாட்டார்கள். அது போல வியாழக்கிழமை முதற் தரம் வரும் விருந்தாளிக்கு பொருத்தம் அற்றது என்பார்கள். அது போல செவ்வாய் கிழமையும் ஆகும்.  


பண்டைய காலத்தில் ஒரு ஆசிரமம் (ashram) இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு கொடுத்தது, குரு சீடர்களிடம் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடப்பட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா?


அங்கே தான் இருக்கு ஒரு கதையே, ஒருநாள் அந்த பூனை செத்து விட்டது, விடுவார்களா சீடர்கள், வேறு ஒரு பூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள் என்றால் பாருங்களேன்! 

ஏன் செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும் என்று கருதுகிறேன்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 12: "கனவுகள்" தொடரும் 

May be an illustration of 1 person

நல்லதொரு பகிர்வு, நல்ல நேரம் பார்ப்பது இன்று வரை தொடர்கிறது. இந்த நம்பிக்கையினால் இதில் சில நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கு தெரிந்தவரின் மனைவி நிறை மாதமாக இருந்த போது, மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் தாயாரோ நல்ல நாளில்லை இல்லை மறுத்திருக்கிறார். பெரும் போராட்டத்துக்கு பின்னர் தான் அது நடந்தேறியுள்ளது

 

இவ்வாறான நல்ல நேர நம்பிக்கை வேறு ஏதாவது சமூகத்தில் உள்ளதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2025 at 12:39, செவ்வியன் said:

நல்லதொரு பகிர்வு, நல்ல நேரம் பார்ப்பது இன்று வரை தொடர்கிறது. இந்த நம்பிக்கையினால் இதில் சில நேரம் பாதிப்பு ஏற்படுகிறது. எனக்கு தெரிந்தவரின் மனைவி நிறை மாதமாக இருந்த போது, மருத்துவர் மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லியிருக்கிறார். ஆனால் அவரின் தாயாரோ நல்ல நாளில்லை இல்லை மறுத்திருக்கிறார். பெரும் போராட்டத்துக்கு பின்னர் தான் அது நடந்தேறியுள்ளது

 

இவ்வாறான நல்ல நேர நம்பிக்கை வேறு ஏதாவது சமூகத்தில் உள்ளதா?

பெரிய புராணத்தில் இருந்து ... 


நல்ல நாள் சோதிடம் எவ்வளவு தூரம் ஆட்சி செலுத்தியது என்பதற்கு  நல்லதொரு எடுத்துக்காட்டு ஒன்று பெரிய புராணத்தில் காணப்படுகிறது. 

உதாரணமாக, பக்தி காலம் என போற்றப்படும் நாயனார் காலத்தில், சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள்.

 அவ்வாறு ஒருநாளிகை கழித்து, அந்த நல்ல நாளில் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. 

குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என  அழைத்தார். இவரே பின்னாளில் ”கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார் என்கிறது புராணம்.

மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
செக்கர் நெடும் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய.


கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்பம் நாள் நிரம்பி,
விழைவு ஆர் மகவு பெற அடுத்த வேலை அதனில், காலம் உணர்
பழையார் 'ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும்' என்ன ஒள் இழையார்.


'பிறவாது ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும்' என, உற்ற செயல் மற்று அது முற்றி,
அறவாணர்கள் சொல்லிய காலம் அணையப் பிணிவிட்டு, அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து' என் 'கோச்செங் கண்ணனோ' என்றாள்.

 

 

எல்லோருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 12


கனவுகள்: 


கனவு என்பது நமக்கு வரும் நன்மையையும் கேட்டையும் உணர்த்த கடவுள் அனுப்பும் முன்னெச்சரிக்கை யாகவே (Prenomination) நம் மக்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் முதல் காப்பியம் படைத்த இளங்கோவடிகள் இதே நம்பிக்கையில், சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியின் கனவை [5 புகார்க்காண்டம் / 9 கனாத்திறம் உரைத்த கதை] விரிவாக தந்திருப்பதுடன், பாண்டிய அரசன் நெடுஞ் செழியனிடம் அரசி கோப்பெருந்தேவி தான் கண்ட கனவின் சகுனத்தைப் பற்றி கூறும் போது, அது உண்மை ஆவது போல அப்பொழுது அங்கு ஒரு கால் சலங்கையுடன் கண்ணகி  முறையிட வந்தாள் என்கிறார்.

நம் நாட்டில் அறிவுக்குக் கொடுக்கும் இடத்தைவிட, உணர்வுக்கே மிகுதியான இடம் தருகின்றனர்.

உதாரணமாக குடும்பத்தில் ஒரு பெண் சொல்லுகிறாள்:


"மாமி ! இரவு விடியற்காலம் எனக்குக் கனவு ஒன்று வந்தது. நம் வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது!"

இதற்கு மாமி  கூறுகிறாள்:


"அடி, விவரம் கெட்டவளே, சீக்கிரம் உன் மகள் பூப்பு [பெண்மை] அடைந்து அமர்வாள்! அதிலும் நீ விடியற்காலையில் கண்ட கனவு! இன்னும் இரண்டொரு நாளில் நடக்கும்!"


மேலும் ஒரு உதாரணமாக பேரன் தன் பாட்டனிடம் சொல்லுகிறான்:


"தாத்தா எனக்குப் புதையல் கிடைத்தது, நான் பணத்தில் புரள்வதைப் போல்க் கனவு கண்டேன்; விழித்துப் பார்த்தால் நான் பழைய கிழிந்து போன பாயில்தான் புரண்டு கொண்டிருந்தேன்."

தாத்தா சொல்லுகிறார்:


"உனக்கு நோய் வரும் என தெரிகிறது."


மேலும் சில கனவு பற்றிய நம்பிக்கையைப் பார்ப்போம்: 


"கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. "கனவு என்பது மனிதனின் தூக்கத்தில் உலாவரும் உள்மன வெளிப்பாடாகும்.


வேடிக்கை என்னவென்றால் கனவில் நல்லது நிகழ்ந்தால் வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாகத் தீயது நடக்கும் என நம்புகிறார்கள். ஆகவே  கனவில் தீயது நிகழ்ந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என நம்புகிறார்கள். இது கனவு நம்பிக்கைகளுக்கு மட்டுமே உரிய சிறப்புத் தன்மையாகும். அதாவது மரணம் வருவது போன்று கனவு கண்டால் வீட்டில் நல்லகாரியம் நடக்கும் என்றும் திருமணம் நிகழ்வது போன்று கனவு கண்டால் அவ்வீட்டில் துன்பம் ஏற்படும் என்றும் நம்புகின்றனர். அதிகாலையில் கனவு கண்டால் பலிக்குமெனவும், பகலில் கனவு கண்டால் பலிக்காது எனவும் நம்புகின்றனர். 


அகநானூறு 141, நக்கீரர், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது
 

"அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவும் கங்குல் தோறு இனிய: நனவும்
புனை வினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனி புகன்று உறையும்; எஞ்சாது"


என் தோழியே உன்னை வாழ்த்துகிறேன் ,என் இரவு இனிய கனவுகளுடன் கழிந்தது, எனது பகலும் எமது 
அலங்காரிக்கப்பட்ட  வீட்டில் நல்ல சகுனத்துடன் கழிந்தது, எனது நெஞ்சும் மிகவும் மகிழ்ச்சியுள்ளது. என் தலைவன் வருவானா? இப்படி ஒரு சங்கத் தலைவி கேட்கிறாள் .


ஆனால் உண்மையில் கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது, நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள். கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். அவை நமது மனதுக்குள் தானாக அரங்கேறும் சின்ன நாடகங்கள் தான்!


இதைத்தான் கிழே குறிப்பிட்ட சங்க கால உரையாடல் ஒன்றும் எடுத்து காட்டுகிறது.


"கேட்டிசின் வாழி தோழி யல்கற்
பொய்வ லாளன் மெய்யுற மரீஇ
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந்
தமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற வளியேன் யானே"

[குறுந்தொகை 30]


தோழி [தலைவியை பார்த்து ]:


"அவன்தான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வருகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்றானே. அப்படியிருக்கும் போது நீ பொறுமையாக இல்லாமல் துடிப்பது ஏன்? "


தலைமகள் [தோழியிடம்]:


"தோழி! இதனைக் கேள். அவன் நாள்தோறும் பொய் சொல்வதில் வல்லவன். அவன் என் கனவில் வந்தான். என்னை ஆரத் தழுவினான். மகிழ்ச்சியோடு அவனைத் தழுவினேன். விழித்துப் பார்த்தபோது நான் படுத்திருந்த மெத்தையைத் தடவிக் கொண்டிருந்தேன். வண்டு உண்டபின் குவளை மலர் உணர்ச்சி இழந்து / சாய்ந்து ஏக்கத்தோடு கிடப்பது போலத் தனித்தவளாய்க் கிடந்தேன்".


இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்! உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்.


எது எப்படியாயினும், இப்படியும் சிலர் இன்னும்  இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள். ஆனால் தங்கள் பலனை மட்டும் பார்க்க மாட்டார்கள். அப்படி பார்த்திருந்தால் இப்படி  வெற்றிலைப்பாக்குக்கும் ,பழந்துணிக்கும், கால்படி அரிசிக்கும் வாசலில் வந்து நம் தூக்கத்தை கலைக்க  மாட்டார்கள்? 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

பகுதி 13: " சோதிடம் தொடரும்  

475793363_10227892377597611_4547006761840202724_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=rgMG9IwAZ1sQ7kNvgEW7P7a&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AGi1fFnvU3nX9lB3wCcpvUO&oh=00_AYComTcX1b8AmfkKgE_ozoquTthm4eRahDcsa2hox5t86A&oe=67A513A6

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

பெரிய புராணத்தில் இருந்து ... 


நல்ல நாள் சோதிடம் எவ்வளவு தூரம் ஆட்சி செலுத்தியது என்பதற்கு  நல்லதொரு எடுத்துக்காட்டு ஒன்று பெரிய புராணத்தில் காணப்படுகிறது. 

உதாரணமாக, பக்தி காலம் என போற்றப்படும் நாயனார் காலத்தில், சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள்.

 அவ்வாறு ஒருநாளிகை கழித்து, அந்த நல்ல நாளில் பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. 

குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என  அழைத்தார். இவரே பின்னாளில் ”கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார் என்கிறது புராணம்.

மக்கள் பேறு இன்மையினால் மாதேவி வரம் வேண்டச்
செக்கர் நெடும் சடைக் கூத்தர் திரு உள்ளம் செய்தலினால்
மிக்க திருப்பணி செய்த சிலம்பிகுல வேந்து மகிழ்
அக் கமலவதி வயிற்றில் அணி மகவாய் வந்து அடைய.


கழையார் தோளி கமலவதி தன்பால் கருப்பம் நாள் நிரம்பி,
விழைவு ஆர் மகவு பெற அடுத்த வேலை அதனில், காலம் உணர்
பழையார் 'ஒரு நாழிகை கழித்துப் பிறக்கு மேல் இப் பசும் குழவி
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும்' என்ன ஒள் இழையார்.


'பிறவாது ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால்
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும்' என, உற்ற செயல் மற்று அது முற்றி,
அறவாணர்கள் சொல்லிய காலம் அணையப் பிணிவிட்டு, அருமணியை
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து' என் 'கோச்செங் கண்ணனோ' என்றாள்.

 

 

எல்லோருக்கும் நன்றிகள்

நல்ல வேளை தாயின் உயிர்க்கு பாதகம் இல்லாமல் சோழ நாயனார் பிறந்துள்ளார். அந்த இருநாட்களில் பெரும் வலி வேதனையை அடைந்திருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செவ்வியன் said:

நல்ல வேளை தாயின் உயிர்க்கு பாதகம் இல்லாமல் சோழ நாயனார் பிறந்துள்ளார். அந்த இருநாட்களில் பெரும் வலி வேதனையை அடைந்திருப்பார்

அக்காலத்தில் சோழ மன்னாகிய சுபதேவன் என்பான் தன் பட்டத்தரசி கமலவதி என்பவளுடன் திருத்தில்லை சார்ந்து கூத்தப்பெருமானை வழிபட்டிருந்தனன். நெடுங்காலமாக மக்கட் பேறில்லாத அவ்விருவரும் இறைவரை வழிபட்டுப் போற்றிய நிலையில் இறைவர் அவர்கட்கு அருள் புரிந்தார். அதன் பயனாகக் கமலவதி கருவுற்றாள். திருவானைக்காவிற் பெருமானுக்கு பந்தரிழைத்த சிலந்தி மகவாய்ச் சார்ந்தது. கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் கூறினர். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறக்கும் படி என்காலைப் பிணித்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத்துங்கள்’ என்று சொல்ல அவ்வாறே செய்தனர். குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினாள். மன்னன் தன் குழந்தையைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தனாக முடிசூட்டித் தன் தவநெறியைச் சார்ந்து சிவலோகங் சார்ந்தான்.

https://ta.wikipedia.org/wiki/கோச்_செங்கட்_சோழ_நாயனார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 13


சோதிடம்:


சோதிடம் குறித்த நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. குறி சொல்வோர், கைரேகை பார்ப்போர், ஏடு போட்டுப் பார்ப்போர், கிளி சோதிடம் கூறுவோர், சாமக் கோடாங்கிகள் ["நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது" என்ற இந்த வார்த்தைக்கு சொந்தக் காரர்கள் தான் சாமக் கோடாங்கிகள் எனப்படுவர்கள்] போன்றோர் கிராமத்துத் தெருக்களில் வலம் வருவதை இயல்பாகக் காணலாம். அதுமட்டும் அல்ல சோதிடத்தில் எடுத்துரைக்கப்படும் தீய பலன்களைப் போக்க, அதற்கான பரிகாரங்களை மேற்கொள்ளும் வழக்கமும் காணப்படுகிறது.. 

"ஆவணியில் வீடு கட்டுக !
கார்த்திகையில் குடி புகுக !
நோயறிந்து மருந்திடுக !
கோலளறிந்து வீனை செய்க !
கோள்களின் கோலாலட்டமே !
குவலயத்தின் சதுராட்டம் !
நாளிறிந்து மனைகோல்வாராக !"

அக்காலத்தில் சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய் மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப் பிறப்பதற்காக அரசியை  தலைகீழாக மேலே தூக்கி நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. குறித்த வண்ணம் ஒரு நாளிகை கழித்து ஆண்குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’ என அருமை தோன்ற அழைத்தார். இவனே கோச்செங்கோட் சோழர் ஆவார்.  

மேலும் 703 ஆண்டு பழமையான தமிழ் சோதிட நூல்  இலங்கையில் இயற்றப்பட்டது என அறிகிறோம். சரசோதி மாலை என்பது இந்த  சோதிட நூல். இதனை இயற்றியவர் இலங்கையில் வாழ்ந்த போசராசர். இவர் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் அந்தணர். இந்த நூலை இவர் சக ஆண்டு 1232 க்கு இணையான கி.பி. 1310-ல் தம்பை என்னும் ஊரில் வாழ்ந்த பராக்கிரமபாகு என்னும் அரசனின் அவையில் அரங்கேற்றினார் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது. சங்க கால ஈழத்துப்பூதந்தேவனாருக்குப் பின்னர் ஈழத்து இலக்கியம் என அறியப்பட்ட முதல் நூல் இதுவாகும். பாண்டியப் பேரரசுக்குப் பயந்து ஆட்சி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் நான்காம் பராக்கிரமபாகு சோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது. இந்நூலில் சோதிட கருமப் படலம் தொடக்கம் நட்சத்திரத் திசைப்படலம் ஈறாக 12 படலங்கள் உள்ளன. அதன் பின் யாழ்ப்பாண மன்னர்காலத்தில் எழுந்த மற்றொரு சோதிட நூல் செகராசசேகர மாலை ஆகும். 


சரசோதி மாலையில்  திருமணப் பொருத்தம் பற்றி கூறும் பாடல் கிழே தரப்பட்டுள்ளது. 


"செப்பு நாள் கணங்கள் மாகேந்திர மொடு மங்கை தீர்க்கந்
தப்பிலா யோனி ராசி ராசியின் தலை தம்மோடு
ஒப்பிலா வசியம் நன்னூல் வரைதறு வேதை ஆக
மைபுயல் அளக மாதே மருவிய பொருத்தம் பத்தே".


இதில் இருந்து நாம் அறிவது, இந்தியாவில் மட்டும் அல்ல, இலங்கையிலும் சோதிடம் மக்களின் வாழ்வில் ஒரு பிரிக்க முடியா ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்பதாகும். அது இன்னும்  இருக்கிறது. ஒரு கல்யாணத்தை ஒழுங்கு படுத்துவதில் இருந்து, கல்யாண நாள்  குறிப்பது, மணமகள் புது வீடு புகுதல், ... இப்படி எல்லாவற்றிலும் இந்த சோதிடம் ஆட்சி செலுத்துகிறது,

"ஆண்  மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம்" 


என்ற சோதிட பழ மொழியும் உண்டு.இ தனைப்போன்ற சில பழ மொழிகளைக் கிழே தருகிறேன். 


கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்

சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது

சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்.


மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச்  சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.


"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"

[பட்டினப்பாலை]    


மேலும் சோதிடர்கள் கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர் என்கிறது சங்க பாடல்.              


நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சி திணை – தோழி தலைவியிடம் சொன்னது


"கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே".


வேலன் கழங்கு போட்டு வீடு கட்டிக் காட்டி இவளுக்கு வெறி என்று தணிக்க முயன்றால் அம் முயற்சி பயன்படுமா? என்று கேட்கிறது 


சோதிடத்தில் இன்னும் ஒன்று ஒருவருடைய கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றிய  நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத் தகவல்கள் கூறுதல் . இது நாடி சோதிடம். இதன் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக பழந்தமிழ் எழுத்துக்களாக எழுதப்பட்டுள்ளவையாகும். இச்சுவடிகள் 2000 வருட பழமை வாய்ந்தவை. இவர்கள் கட்டை விரலின் கைரேகையை பெறுகின்றனர். பின் அந்த ரேகைக்கு பொறுத்தமான சுவடிக் கட்டுகளை, சில கேள்விகளைத் தொடுத்து - ஆம், இல்லை - என்ற பதில் மூலம் அவர்களுக்கான ஒலையை எடுத்து வாசிக்கிறார்கள்.

இதை பள்ளியில் பயிலும் இரு மாணவர்கள் ஒருவருக்கொருவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடிக்க விளையாடும் பொழுது இந்த கட்டத்தில் அந்த எழுத்து இருக்கின்றதா? இல்லையா? என்று வினவி அதன் மூலம் அவர் மனதில் நினைத்த எண்ணை கண்டுபிடித்து விளையாடுவதோடு ஒப்பிடலாம் .

எண் "சோதிடம்" 


தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும் போலும் . என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம் - நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது? 


நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

பகுதி 14 : "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்கள்" தொடரும் 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

476279864_10227908029068888_2621585239644440992_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=m_2noW0Aix0Q7kNvgFkmY7_&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A2K_GgPqoaPAI0Bt3_cBM0f&oh=00_AYC9D6Gn-FQBw3UhFtkSsKCUnDAnnIxNiRMWxLF6ntKQtQ&oe=67A90587

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோதிடத்தைப் பற்றிய பிரத்தியேகக் கட்டுரைகளை கீழே பார்க்கவும்


"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01
https://www.facebook.com/groups/978753388866632/posts/24366525666329408/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 02
https://www.facebook.com/groups/978753388866632/posts/24413828874932420/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 03
https://www.facebook.com/groups/978753388866632/posts/24458822917099682/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 04
https://www.facebook.com/groups/978753388866632/posts/24501440722837901/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 05
https://www.facebook.com/groups/978753388866632/posts/24547155781599728/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 06
https://www.facebook.com/groups/978753388866632/posts/24591116130537026/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 07
https://www.facebook.com/groups/978753388866632/posts/24637435149238457/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 08
https://www.facebook.com/groups/978753388866632/posts/24691687010479937/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 09
https://www.facebook.com/groups/978753388866632/posts/24736573269324644/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 10
https://www.facebook.com/groups/978753388866632/posts/24788718830776754/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 11
https://www.facebook.com/groups/978753388866632/posts/24837858872529416/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 12
https://www.facebook.com/groups/978753388866632/posts/24890323107282992/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 13
https://www.facebook.com/groups/978753388866632/posts/24943993545249281/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 14
https://www.facebook.com/groups/978753388866632/posts/24993273376987964/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 15
https://www.facebook.com/groups/978753388866632/posts/25041218948860073/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 16
https://www.facebook.com/groups/978753388866632/posts/25090145337300767/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 17
https://www.facebook.com/groups/978753388866632/posts/25141261605522473/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 18
https://www.facebook.com/groups/978753388866632/posts/25196031830045450/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 19
https://www.facebook.com/groups/978753388866632/posts/25249858347996131/?

"சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 20
https://www.facebook.com/groups/978753388866632/posts/25304672232514742/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 14 

 

"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வன உடன் தொடர்புள்ள நிமித்தங்கள்"

"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே....."

[ சங்க கால  சத்திமுற்றப் புலவர்]


பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே. நாரைக் கூட்டங்களே. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள். அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை பல்லி சகுனம் சொல்கிறதா என வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள். மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா? என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது  இந்த புலவரின் மேலே கூறிய செய்யுள். இதனால்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சங்க காலத்திலேயே, பல்லி சகுனம் எவ்வளவு பிரபலமாக இருந்தது என்பது எமக்கு இப்ப தெரிய வருகிறது. 

மேலும் சகுனம் என இக்காலத்தில் வழங்கும் பொதுச்சொல் சங்ககாலத்தில் புள், நாள், ஓரை, நிமித்தம் போன்ற சொற்களால் உணர்த்தப்பட்டது. பழங்காலத்தில் பெண்கள் வெளியே சென்ற கணவன் எப்போது வீடு திரும்புவான் என்று ஏங்கி, பல்லியின் புள் (சகுனம்) பார்த்தபடி நிற்பர். இதை மேலே உள்ள பாடல் புலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் சில இடங்களில், சிறார் பல் விழுந்தால், "பல்லி பல்லி நீ இப்பல்லை எடுத்துக் கொண்டு புதுப்பல்லை எனக்குத்தா" என்று பல்லை கூரை மேல் எறிந்திடுவர். காட்டில் வாழும் ஆண் ஓதி (ஓதி = ஓணான் வகையில் ஒன்றான பச்சோந்தி / chameleon) தன் பெண் ஓதியை அழைக்கப் போடும் சத்தத்தைக் கூட நல்ல புள் (நல்ல சகுனம்) என்று கருதினர். 


"வேதின வெரிநி னோதி முதுபோத்     
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்     
சுரனே சென்றனர்............"

[குறுந்தொகை 140. பாலை திணை ]


கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓந்தியினது சத்தத்தை, வழிச்செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுகின்றனர் அப்படிப்பட்ட  பாலைநிலத்திற் எம் காதலர் சென்றனர் என்கிறது இந்த சங்க பாடல். 

கூடுதலான நிமித்தம், சகுனம் என்பவை மிருகங்கள், பறவைகள், ஊர்வன என்பனவற்றுடன் தொடர்புடையன. மிகவும் வியப்பூட்டும் அல்லது ஆச்சரியம் தரக்கூடிய செய்தி என்னவென்றால் சில சகுனங்கள் சங்க காலத்தில் இருந்தவாறு அப்படியே மாறாமல் இப்பவும் இருப்பதே. உதாரணமாக பல்லி, காகம்  இவைகளின் சகுனத்தைக்  கூறலாம்.

ஒரு பயணத்தின் போது யானையை காண்பது மிகவும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. அது போல ஒரு வீட்டின் உச்சியின் மேல் ஒரு  ஆந்தை, கோட்டான் குந்தி இருப்பது மிக கெட்ட சகுனமாகும். இது படுவீழ்ச்சி, நாசம், அழிவு, மரணம் போன்றவற்றுக்கான ஐயுறவு இல்லாத, உறுதியான அறிகுறியாகும். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு நாய் இரவில் ஊளையிடுவது, "சா" வருவதை குறிப்பதாக நம்புகிறார்கள். 

காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் வீட்டுக்குத் தெரியாமல் சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் சங்கத் தாயைக் காட்டுகிறது கிழே தரப்பட்ட ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.

ஐங்குறுநூறு 391, ஓதலாந்தையார், பாலை திணை – தலைவியின் தாய் சொன்னது


"மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம் சின விறல் வேல் காளையொடு
அம் சில் ஓதியை வரக்கரைந் தீமே."


"அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே!  உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன் .... அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ! அதன் பிறகாவது ... என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம் குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ!" என்று லஞ்சம் கொடுப்பது போல, சாப்பாடு கொடுத்து அதைக் கூவி அழைக்கிறாள் இந்த சங்கத் தாய்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]  


பகுதி 15: "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்களின் இரண்டாம் பகுதி தொடரும்

476354332_10227913668849879_8121107927610163188_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Are13PRt4lAQ7kNvgGnk0pv&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AelCiBnRQJ5AaAz7iPstQ29&oh=00_AYB7If9CsYaEL1rXTO4DHYa48Z6rithaj84Df792E-zRyQ&oe=67AA783E

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.