Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" /  பகுதி: 01 

"நீரின்றி அமையாது உலகு " -- வள்ளுவர் வாக்கு (குறள் -20 )


முன்னைய நாகரிகங்களான டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும்  இடைப்பட்ட - மெசொப்பொத்தேமியா, நைல் நதியின் ஓரத்தில் அமைந்த - எகிப்பது, சரஸ்வதி, சிந்து நதிகளுக்கு இடைப் பட்ட - சிந்து சம வெளி, மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு  பகுதிகளில் அமைந்த - சீனா போன்றவை எல்லாம் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் [rivers/ flood plains] அமைந்து இருந்தன. மேலும் அந்த இடங்கள் எல்லாம்  நன்னீரின் தோற்று வாயாக அமைந்து இருந்தன. அது மட்டும் அல்ல,  நாம் அறிவது என்னவென்றால்,  இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரித்ததுடன் அதற்கு உச்ச முக்கியத்தையும் கொடுத்துள்ளது என்பதாகும். இது "நீரின்றி அமையாது உலகு " என்ற வள்ளுவரின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வாக்கை மேலும் உறுதிபடுத்துகிறது.


கற்காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் வண்டல் சமவெளியில் மக்கள் முதல் குடியேறிய பொழுது,  அவர்களின் உடனடியான முக்கிய அக்கறை  நம்பகமான நன்னீர் கிடைக்கும் ஒரு இடத்தை கண்டு பிடிப்பதாகும். இது பயிர்களுக்கு தண்ணீர் விடவும் மிருகங்களும் தாமும் நன்னீர் குடிப்பதற்காகவும் ஆகும். முதலாவதாக அவர்களுக்கு டைகரிஸ், யூப்ரடிஸ் ஆறுகளும் அவைகளின் கிளையாறுகளும் [Upper and Lower Zab] அவர்களின் அந்த தேவைகளை வழங்கின. இதனால் தான் முன்னைய  சுமேரியர்களினதும் அவர்களுக்கு முன் அங்கு  கி மு 5000-4000 ஆண்டளவில் வாழ்ந்த உபைடியனினதும் [Ubaidian] கிராமமும் நகரமும் ஆறுகளை அண்டியும் அல்லது அவைகளுக்கு அருகிலும் கட்டப்பட்டன. அவை உயிருக்கு அத்திய அவசியமான தண்ணீரை கொடுத்தாலும் அந்த ஆறுகள், குறிப்பாக டைகரிஸ் ஆறு, முன்னறிந்து அதன் நிலையை கூறமுடியாததாகவும் சில வேளைகளில் அழிக்கக் கூடிய கொடிய  வெள்ளத்தையும் உண்டாக்கின. ஆற்றின் வெள்ளத்தை கட்டுப்படுத்த காலம் காலமாக அங்கு அணை கரையையும் அணையும் [levees and dams] கட்ட முயற்சித் தார்கள். ஆனால் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் மிக மென்மையான மண்ணால் கட்டப்பட்ட இந்த தடைகள் இலகுவாக ஆற்று வெள்ளத்தால் அரிக்கப்பட்டு படிப்படியாக விரைவாக சிதைக்கப் பட்டன. மேலும் நாளடைவில் மக்கள் தொகை கூட  சிலர் ஆற்றங்கரையில் இருந்து கிட்ட  அல்லது  தூர இடங்களில்  குடியேற விரும்பினார்கள். அதனால் இந்து புதிய குடியிருப்புகளுக்கு நீர் வழங்க வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது.


முன்னைய மெசொப்பொத்தேமியா குடியிருப்பாளர்கள் ஆற்றில் இருந்து நேரடியாக நீர் எடுப்பதற்கு பதிலாக, வேறு நீர் வளங்களையும் விநியோகத்தையும் ஏற்படுத்தி மேற்கூறிய சாவால்களை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். அவை செயற்கை  கால் வாய்கள், கிணறுகள், வாய்க்கால்கள் போன்றவையாகும். தொல்பொருள் ஆய்வுகள் கி மு 6000 ஆண்டு களுக்கு முற்பட்ட இந்த நீர்ப்பாசனங்களுக்கான சான்றுகளை ௮டையாளம் காட்டுகின்றன. பார்லி [வாற்கோதுமை] பயிர் வளர்ச்சிக்கு போதுமான இயற்கை மழை வீழ்ச்சி அற்ற அங்கு அப் பயிர் செய்யப்பட்டு உள்ளது இதை மேலும் உறுதிபடுத்துகிறது. ஜூலை  தொடங்கி டிசம்பர் வரை உண்டாகும் வெள்ள நீரை 40 தொடக்கம் 60 நாட்களுக்கு திசை திருப்பி வயலுக்கு விடுகிறார்கள். பின் தக்க தருணத்தில் நீரை திரும்பவும் ஆற்றுக்கு வழி திருப்பி விடுகிறார்கள். 

"உன்னுடைய வாய்க் கால் குப்பை , இடிபாடுகளால் அடைபடட்டும்" 

என்ற பல முறை திருப்ப திருப்ப சபிக்கும் மெசொப்பொத்தேமியா சாபம் இதன் முக்கியத்தை காட்டுகிறது. ஆகையால் அதற்கு முதன்மை கொடுத்து மன்னர்களும் ஆட்சியாளர்களும்  வாய்க்கால்களை  தோண்டி  பராமரித்தார்கள். அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள் பொதுமக்களால் வெறுக்கப் படுவதுடன் அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது. கால்வாய்கள் அமைப்பது ஒரு பெரிய வேலை என்பதால், ஹம்முராபி போன்ற மன்னர்கள் தமது பெருவாரியான குடி மக்களை [பிரஜைகளை] அதில் ஈடுபடுத்தினார்கள். 


கால்வாய் தோண்டியதும் அந்த செயற்கை  கால்வாயிற்கூடாக  ஓடும் நீரின் அளவை கட்டுப்படுத்த ஆற்றம் கரையில்  ஒரு  மடைவாய் / மதகு கதவு [sluice gate] அங்கு கட்டப்பட்டது. தேவை கருதி அந்த கதவை திறந்தோ அல்லது மூடியோ நீர் ஓட்டத்தின் அளவை கூட்டி அல்லது குறைக்கப் பட்டது. பயிர் வளரும் காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிக்கப் பட்ட அளவு நீரே கொடுக்கப்பட்டது. ஒரு விவசாயி தனது வயலுக்கு நீர் இறைக்கும் முறை வரும் போது, மதகு அதற்கு தக்கவாறு திறந்து, மூடி சரிப்படுத்தப்பட்டு அந்த விவசாயினது வயல் பக்கமாக அமைந்த நீர்பாசன குழியில் [irrigation ditch] நீர் விடப்பட்டது. 

பபிலோனியன் மன்னன்  ஹம்முராபி தான் முதன் முதல் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஒரு நீர் சம்பந்தமான ஒழுங்குவிதிகளை ஏற்படுத்தினார். அந்த முன்னைய விதி முறைகள் பின்வருவனவற்றை அடங்கி இருந்தது. 

அ] நீர் விநியோகம் வயலின் பரப்பு அளவின் வீதப்படி வழங்குதல் 

ஆ]  வயலின் பக்கமாக அமைந்த வாய்க்காலை பராமரிப்பது அந்த வயல் உரிமையாளரை சார்ந்தது. 


இ] கால் வாயை  எல்லா பாவனையாளர்களும் அடங்கிய ஒரு கூட்டு நிர்வாகத்துக்குள் அமைத்தல் ஆகும்.


ஆற்றில் நீர் மட்டம் இயல்பாக [சாதாரணமாக] இருக்கும் போது தான் மேலே கூறிய மதகு கதவு திறமையாக இயங்குகிறது. என்றாலும் நீர் மட்டம் கதவிற்கு கீழ் வரும்போது, கால் வாயிற்கான நீர் ஓட்டம் நின்றுவிடுகிறது. அப்படியான வேளையில் இந்த  சிக்கலை தீர்க்க பெயர் தெரியாத சுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்த உபைடியனோ ஒரு கருவி / பொறிக்கான யோசனையை பெற்றிருக்க வேண்டும். இதை பின் அரேபிய மக்கள் "shaduf" / துலா என அழைத்தனர். இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இதன் ஒரு முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். அதன் மறு முனையில் பாரமான கல் அல்லது  ஒரு பாரம் கட்டப்படும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத் தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடிய வாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, 
 முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். இதன் அளவை பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டோர் இதை மேலும் கீழும் இயக்குவர். நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டு வருவர். பின் நீரை கால்வாயில் விடுவர். இந்த முறை ஆற்றில் வெள்ளம் இல்லாத நேரத்திலும் நீர்பாசனம் செய்ய உதவியது. அதுமட்டும் அல்ல உயரமான இடத்திற்கும் நீர்பாசனம் செய்யக்கூடியதாக இருந்தது. இதனால் அப்படியான உயரமான இடங்களிலும் விவசாயம் செய்யக் கூடியதாக இருந்தது. மேலும் இந்த துலாவால் ஒரு கால்வாயில் இருந்து மற்ற கால்வாயிற்கு அல்லது வாய்காலிற்கு நீரை மாற்றி விடக்கூடியதாகவும்  இருந்தது. இந்த துலா முறை கி மு 1700 ஆண்டு அளவில் பாவனையில் இருந்துள்ளது. இந்த பொறியை பபிலோனி யாவில் கி மு 500 ஆண்டளவில் கண்ட கிரேக்க வரலாற் றாசிரியரான  ஹெராடோடஸ், 


"மழை பெய்கிறது....சிறிய அளவாக" 


என குறிப்பிடுகிறார்.  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  


பகுதி: 02 தொடரும்

473727564_10227784865269870_1459342258505131078_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=AKSlBIDIKxcQ7kNvgFS0cKz&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=ANmOhOh19hN8e7LTEt8ZuKX&oh=00_AYA-G_8YQaSxVlrHPayTjpz47rQPqiaNWJukeAZXqBsY3Q&oe=678ECC5A  473222423_10227784865309871_3761439367781740401_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=z-NAriMEMmoQ7kNvgEqs_4W&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ANmOhOh19hN8e7LTEt8ZuKX&oh=00_AYBG-lNjCNRv6cMw00Melx9jONjunFceR2vgFLHceQmR0Q&oe=678ECD1B May be an image of 5 people

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 02

 

பண்டைய மெசொப்பொத்தேமியாவில் மனிதன் தோண்டிய கிணறுகள் இன்னும் ஒரு நன்னீர் வழங்கும் முக்கிய இடமாக, குறிப்பாக வட  சமவெளியில் இருந்தது. அங்கு டைக்ரிஸ் நதியை கட்டுப்படுத்துவது கடினமாகவும் மண் அடர்ந்தும் இருந்தது. தொடக்கத்தில் கிணறுகள் நிலத்தில் ஒரு செங்குத் தான குழியாக இருந்தது. இங்கு ஒருவர் கயிறு ஒன்றில் வாளியை நீருக்குள் குழியின் அடியில் இறக்குவார். பின் அது நீரை எடுத்ததும் மேலே இழுப்பார். இந்த செய்முறை கி மு 1500 ஆண்டளவில் கப்பியின் அறிமுகத்தால் எளிதாக்கப்பட்டது.

மேலும் இன்றைய பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் அமைந்த பண்டைய நாகரிகமான சிந்து சம வெளியும்,  அதிநவீன நீர்பாசனத்தையும் சேமிப்பு முறையையும் மேம்படுத்தியது. உதாரணமாக கி மு 3000 ஆண்டளவில் கிர்னாரில் நீர்த் தேக்கங்களையும் கி மு 2600 ஆண்டளவில் கால்வாய் நீர் பாசனத்தையும் கொண்டிருந்தது. பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகள் விசாலமான கால்வாய்  தொகுதிகளை இப்பொழுது கொண்டிருந்தாலும், அவை பண்டைய சிந்து சம வெளி நாகரிகத்தில் காணப்பட்ட  கால் வாய்களுடன் ஒத்து இருக்கின்றனவா என்பது எமக்குத் தெரியாது. எப்படியாயினும்  கி மு 1700 ஆண்டு அளவில் இந்தியாவிற்குள்  நுழைந்த ஆரியர்  நீர்பாசன கலையை இந்தியாவிற்குள் கொண்டுவர கட்டாயம் வாய்ப்பு இல்லை. சிந்து சம வெளியில் காணப்பட்ட  வடிகால் அமைப்பு, கழிவு நீர் அமைப்பு போன்றவற்றை முற்றிலுமாக ஆய்வுகள் செய்யப்பட்டு இருந்தாலும் நீர்பாசன அமைப்பை பற்றிய எந்த ஒரு தரவுகளும் அல்லது பண்டைய கால் வாய்களுக்கான  எந்த ஒரு தடயமும் அங்கு காணப்பட வில்லை. வறண்ட காலத்திற்கான எந்த ஒரு ஆயத்தமும்  வெளிப்படையாக செய்யாததும் மற்றும் முத்திரைகளில் காட்டு மிருகங்கள் காணப்படுவதும்  சிந்து, பஞ்சாப் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகம் என்பதை எமக்கு எடுத்து காட்டுகிறது. இந்தியாவில் இயந்திரத்தின் உதவியால் இயக்கிய முதல் சாதனம் நீராலைச் சக்கரம் ஆகும். மொகெஞ்சதாரோ. ஹரப்பா போன்ற இடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போது மண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பழமைச் சின்னங்கள் பண்டைய நீர் தூக்கும் சாதனங்களுக்கு சான்றாக உள்ளன. மொகெஞ்சதாரோ மட்பாண்டங்களை ஆய்வு செய்த சார் ஜான் மார்ஷல், நீராலைச் சக்கரத்திற்கு இவை பாவித்திருக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு கண்டு எடுக்கப்பட்டு "குழப்பம் தந்த சாடிகள்" என  அழைக்கப்பட்ட  பண்டைய சிந்து சம வெளி காலத்து சாடிகள், இன்றைய கிழக்கு அருகே அல்லது மத்திய கிழக்கு பகுதிகளில் நீரை தூக்க பாவிக்கப்படும் நீராலைச் சக்கரத்தை போன்ற ஒரு கருவியில் அன்று இணைப்பதற்காக தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என வாதிடுகிறார். அவருடைய இந்த கருத்து, எர்னெஸ்ட்  மக்கியின் குறிப்பு மூலம் மேலும் உறுதிப்படுத்தப் படுகிறது. அவரின் குறிப்பு இப்படி கூறுகிறது: "சிந்து சம வெளி மக்களுக்கு நீராலைச் சக்கரம் தெரிந்தது இருந்தது என்பதற்கான நேரடியான சான்றுகள் இல்லாவிட்டாலும், அந்த குறிப்பிட்ட சாடிகளின் வடிவமும் அதன் அமைப்பும் அது உறுதியாக அப்படி ஒரு நீராலைச் சக்கரத்தில் பாவித்திருக்கலாம் என்பதை பரிந்துரைப்பதுடன், அது மேலும் ஏன் பல எண்ணிக்கையான அவ்வகை சாடிகள் செய்யப்பட்டு பின் உடைந்து உள்ளன என்பதையும் விளக்குகிறது"  என்கிறார். இது அங்கு தொழில் நுட்பத்தில் முன்னேறிய சாதனங்கள் பாவனையில் இருந்திருக்கலாம் என்பதை தெட்ட  தெளிவாக உணர்த்துகிறது.

ஆகவே நாம் மொகெஞ்சதாரோ. ஹரப்பா மக்களுக்கு அன்றே நீராலைச் சக்கரம் தெரிந்து இருக்க வேண்டும் என்றும், அதை நீர்பாசனத்திற்கு அவர்கள் பாவித்திருக்க வேண்டும் என்றும், முடிவு எடுக்கலாம். எனினும் "Month for raising the Water Wheels" என்ற சுமேரியன் குறிப்பில் இருந்து அது ஒரு தொடக்க கால நீராலைச் சக்கரமாக இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. ஆனால் வேறு ஒரு சான்றும் இல்லை. 

மொகெஞ்சதாரோ. ஹரப்பா பகுதிகளில் அகழ்வு ஆராச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆழமான நீள் சதுர கட்டிடம் அதிகமாக இந்தியாவில்  கட்டப்பட்ட முந்தய குளமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். பிரமான வேதத்திலும் கிணறு, கால்வாய், அணை குறிக்கப்பட்டுள்ளன. ரிக் வேதம் "KULYA" என்ற சொல்லை குறிக்கிறது. இதன் நேரடி கருத்து மனிதனால் செய்யப்பட்ட ஆறு - அதாவது கால்வாய். அதேபோல "AVAR"  என்ற சொல்லையும் அடிக்கடி குறிக்கிறது. இதன் கருத்து கிணறு ஆகும். மேலும் அதே வேதத்தில்  ஒரு ஆழமான, நேர்த்தியான கிணற்றில் இருந்து ஒரு பொறி அமைவு மூலம் நீர் எடுப்பதையும் எடுத்து உரைக்கிறது. வேதங்கள் சிந்து சம வெளி மக்களை வென்ற பின் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் எமக்கு எடுத்து காட்டுவது என்னவென்றால் நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்தே நீர்பாசனம் நன்றாக அடையாளங் கண்டுகொள்ளப் பட்டுள்ளது என்பதே. இந்த  மெசொப்பொத்தேமியா [சுமேரியர்], சிந்து சம வெளி மக்கள் தமிழர்களின் மூதாதையார் எனக் கருதப்படுகிறது. கி மு 1700-1500 ஆண்டு அளவில் சிந்து சம வெளி நாகரிகம், முற்றாக நிலைகுலைந்த பின், அங்கு இருந்து தென் இந்தியா குடியேறிய பொழுது, அந்த மக்கள் தங்களுடன் நீர்பாசனம் பற்றிய அறிவையும் அதன் முக்கியத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் என நாம் கருதலாம். என்றாலும் சங்க இலக்கியம்  நீராலைச் சக்கரம் போன்ற சாதனங்களின் பாவனைகளின் ஆரம்ப  இடத்தைப் பற்றி தெளிவாக ஒன்றும் கூறவில்லை. எப்படி ஆயினும், நீரை தூக்கும் கருவிகள், அது போன்ற மற்றும் எளிமையான கருவிகளை தெளிவாக அகநானுறு, மதுரை காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் போன்றவற்றில்  குறிப்பிட்டு உள்ளது. இதைத் தவிர தமிழ் கல் வெட்டுகளிலும் துலாவை பற்றியும் பனை ஓலை கூடை / வாளி பற்றியும் குறிக்கப்பட்டு உள்ளது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


பகுதி 03 தொடரும் 

473739931_10227810667474909_6365686442176272378_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=cxnwiz4GXkIQ7kNvgE2T-Af&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ANNTHRc8lACfF68WoFLa2-5&oh=00_AYBWe0VSmTCYv0T-PtXh-J7sER8DQ_KJ1V_NWG8PNJNZww&oe=6793E768  474500787_10227810667554911_7984512546885624706_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Wwmxu2GMl2sQ7kNvgELV0ci&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=ANNTHRc8lACfF68WoFLa2-5&oh=00_AYDtKYvEucMcAsmK3hsovcyg41ySPyKQ6th9uay2rqunrA&oe=6793DB4E

 

474378894_10227810668194927_5423858998787454184_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=-ZhI0x6Gr64Q7kNvgE2plUF&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=ANNTHRc8lACfF68WoFLa2-5&oh=00_AYBcW77PRQ03i7qVhsKeeUWhhngpG9kBhM7baVJQAzticw&oe=6793ED27

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 03

 

தென் இந்தியாவின் விவசாயமும் மிகவும் சிறப்புவாய்ந்ததாக மெசொப்பொத்தேமியா, சிந்து சம வெளி போன்றவற்றுடன் ஒப்பிடும் அளவிற்கு பண்டைய இந்தியாவில் இருந்தது. அங்கு தமிழ் மக்கள் பரவலாக, பல வித பயிர்களைப் பயிரிட்டார்கள்.  உதாரணமாக, நெல் [அரிசி], கரும்பு, தினை, கருப்பு மிளகு, பலதரப்பட்ட தானியங்கள், தென்னை [தேங்காய்], பயிறு வகைகள் [அவரை], பருத்தி, வாழை, புளி, சந்தன மரம், பலா [பலாப்பழம்], பனை, கமுகு [பாக்கு] போன்றவை ஆகும். அது மட்டும் அல்ல, அங்கு ஒரு முறைப்படுத்தப் பட்ட உழவு, உரம், களை யெடுத்தல், நீர்பாசனம், பயிர் பாதுகாப்பு [ploughing, manuring, weeding, irrigation and crop protection] போன்றவை நடை முறை படுத்தி அதை ஒழுங்காக பின்பற்றினார்கள். இளங்கோவடிகள் புகார்க் காண்டத்தில் பத்தாம் [10] காதையில் காவேரியைப்  பற்றிய சிறப்புகளை விவரமாக தரும் போது, அங்கு ஒருவகை நீரிறைக்குங் கருவிவகை, நீர் இறைக்கும் கூடை [இறை கூடை], தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம் [துலா] போன்ற முறையையும் அல்லது கருவியையும் கூறுகிறார். சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். இனி அந்த குறிப்பிட்ட பாடல் வரிகளை பார்ப்போம்: 


"சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது
ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக"

[சிலப்பதிகாரம்/நாடுகாண் காதை 105-111]


அதாவது, "கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய  மேகங்களின் கூட்டம் மழை பொழிதலால், அக் குட மலையில் தோன்றிய ஆற்று வெள்ளம், கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தி யிடிக்கும் கடுகி [விரைவாக] வருதலையுடைய காவிரியின் புதுநீர் வாய்க்காலின் தலைப்பில் [தொடங்குமிடத்தில்] உள்ள கதவின் [வாய்த் தலைக்கண் கதவின்] மீதெழுந்து விழும் ஒலியல்லாது, பன்றிப்பத்தரும் [ஒருவகை நீர் இறைக்கும் கூடையும் / இறை கூடையும்]  பூட்டைப்பொறியும் [நீரிறைக்குங் கருவிவகையும்] ஒலி மிகுந்த ஏற்றமும் [கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஏற்றமரமும்] நீர்மிகும் இறை கூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;" என்கிறது. இந்த வரிகள். கட்டாயம் நீர்பாசனத்திற்கும் பயிர் செய்கைக்கும் அங்கு "ஒருவகை நீரிறைக்குங்கருவி" இருந்ததை சுட்டிக்காட்டுகிறது என எவரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம். 

மேலும் பல  பருவக்காற்று குறைபாடுகள், சரிசமமற்ற மழை வீழ்ச்சி, சிலவேளை நீரின்  பற்றாக்குறையும் சிலவேளை நீரின் மிகுதியும் போன்ற தடங்கல்கள் பண்டைய தமிழக தமிழர்களை முன்னைய மெசொப் பொத்தேமியா  குடியிருப்பாளர்கள் போலவே, செயற்கை நீர்த்தேக்கம் அல்லது கால்வாய் மூலம் நீர்பாசனம் செய்யத்  தூண்டியது. அது மட்டும் அல்ல மன்னன்  ஹம்முராபி போலவே வரலாற்று ரீதியாக, சங்க கால மன்னன் கரிகாலன் இதில் முன்னோடியாக உள்ளான். இவன்  மண்மேடு எழுப்புதல் [அணை கட்டுதல்], குளம் வெட்ட காடுகளை அகற்றுதல், கால்வாய் தோண்டுதல் போன்ற  திட்டங்களை செயலில் வகுத்தான். இரண்டாம் கரிகாலன் குறித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையில்,

"காடு கொன்று நாடாக்கி 
குளம் தொட்டு வளம் பெருக்கி"

(பட்டினப்பாலை, 283-284) 


என்கிறார்.அதாவது கரிகாலன் காட்டை அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களைப் பெருக்கினான் என்கிறார். இதில் இருந்து நாம் அறிவது, அக்கால மன்னர்கள் ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளில் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நிலைகளில் பாய்ச்சி நாட்டை வளப்படுத்தினர் என்பதாகும். 


கரிகாலனின் இந்த வழிகாட்டலின் பின், எல்லா மன்னர்களும் பின்பற்றி நீர்த்தேக்கம் மூலம் நீரை சேமித்து நீர்பாசனத்திற்கு பாவித்தார்கள். அங்கு இருக்கும் வாய்க்கால்களை புறக்கணிக்கும் மன்னர்கள் பொதுமக்களால் வெறுக்கப்படுவதுடன், அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் கொந்தளிப்புகளையும் எதிர்நோக்க நேரிட்டது. இப்படியான ஒரு நிலைப்பாட்டை சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். உதாரணமாக புறநானூறு 18 இப்படி அறைகூவுகிறது. 

"வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே அதனால்
அடு போர்ச் செழிய இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே." 

அதாவது, ‘வயவேந்தே! நீ மறுமைப் பேறாகிய சொர்க்க இன்பம் வேண்டினும், இம்மையில் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் - நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம் - வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக’ என வற்புறுத்துகிறார்.


கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்


பகுதி 04 தொடரும் 

474591252_10227823547116892_8197786428476285171_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=RHi54JMdDWoQ7kNvgHxH7dI&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AiQQkZi5XikdaARcmsln4Wj&oh=00_AYBBYHxbIVoz7HhsBCJjTsCK2SH3GwEWZXfs2xss5Ara0g&oe=6796B0D6  473573908_10227823547476901_7388688466869204134_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=YepSaMgnd_UQ7kNvgHMljAW&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AiQQkZi5XikdaARcmsln4Wj&oh=00_AYAqT1iS0d_xO4JSl93N1uhfpOpdG4SCI7-0QVE8kb4fPA&oe=67968E9A  

 

  • நியானி changed the title to "ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை"
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 04
 


“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர். மீண்டும் ஒரு சிலப்பதிகார வரிகளை பார்ப்போம்.


  
‘உழவர் ஓதை, மதகோதை,
உடைநீர் ஓதை தண்பதங் கொள்
விழவர் ஓதை, சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவிரி!

[சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம் – கானல் வரி]

அதாவது, உழவரின் ஏர் ஓட்டும் ஓசை, மதகிலே நீர் வழியும் ஓசை, வரப்புகளை உடைத்து பாயும் நீரோசை, புதுப்புனலாடி கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆராவார ஓசை … என இரு மருங்கும் ஒலிக்க .. அந்த ஓசையோடு நடக்கும் காவிரிப் பெண்ணே! நடந்தாய் வாழி காவேரி! என்கிறார். பன்னிரண்டாம் திருமுறையில் திருக்குறிப்புத்தொண்ட  நாயனார் புராணத்தில் 23 ம் பாடலும் நீரின் சிறப்பை இப்படிக் கூறுகிறது.

"அனைய வாகிய நதிபரந்
   தகன்பணை மருங்கில்
கனைநெ டும்புனல் நிறைந்துதிண்
   கரைப்பொரும் குளங்கள்
புனையி ருங்கடி மதகுவாய்
   திறந்திடப் புறம்போய்
வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர்
    வழங்குவ வியன்கால்."

அதாவது அவ்வாறாகிய பாலியாற்று நீர் பரந்து, அகன்ற வயல்களின் பக்கலில் இரைந்து பெருகவரும் திண்மையான பெரிய குளக்கரையில், அங்குள்ள சிறந்த அழகுபடுத்தப்பட்ட காவல் மதகுகள் வாய்திறந்திட, 
 வெளியே சென்று பெருகும் தன்மை கண்டு, அவ் விடமுள்ள வீரராய உழவர்கள் தம் மகிழ்வால் ஒலிசெய, பெருவாய்க் கால்கள், நீர் பெருகி வரும் என்கிறது. இறுதியாக மூத்த சங்க இலக்கியத்தில் என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்.

"வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்"

-தொல்காப்பியம், பொருள்:65.

விசையோடு வரும் நீரை ஒரு கற்சிறை (அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள். கி.மு.5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, கட்டுப் படுத்தி பாசனத்துக்குப் பயன் படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. 
 பாறைகளயும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடல்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் பல வகை நீர் நிலைகளை தமிழ் மொழியில் காண்கிறோம் அவை: "இலஞ்சி , கண்ணி, எரி, மடு, வாவி, 
 வட்டம், நளினி, குட்டம், குளம், கயம், கோட்டகம், மலங்கன், ஓடை, 
 சலந்தரம், தடாகம், பொய்கை, கிடங்கு, கற்சிறை ,கிணறு, கேணி, துரவு. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறை கிணறு, ஊருணி, ஊற்று, கட்டு கிணறு, கண்மாய் (கம்மாய்), கலிங்கு, 
 கால், கால்வாய், குட்டை, குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை, தடம், தளிக்குளம், தாங்கல், திருக்குளம், தெப்பக் குளம், தொடு கிணறு, நடை கேணி, நீராவி, பிள்ளைக்கிணறு, பொங்கு கிணறு, மடை, மதகு, மறு கால், வலயம், வாய்க்கால்" என  50 இற்கு மேற்பட்ட   சொற்களை காண்கிறோம். எந்த ஒரு மொழியில் ஆவது இத்தனை சொற்கள் நீர் நிலைக்கு உண்டா? அப்படி என்றால் தமிழில் மட்டும் எப்படி இத்தனை சொற்கள் வந்தன? இது தான் நாம் கவனிக்க வேண்டியது. அதாவது தமிழனின் வாழ்வு, நாகரிகம் ஆதியில் இருந்து இன்றுவரை  நீர் வளத்துடன் அமைந்ததே இதற்கு காரணம் என நாம் இலகுவாக கருதலாம். அதனால் தான், நீர்பாசனம் அங்கு முக்கியம் அடைகிறது. அந்த நீர்பாசன முறை பொறி முறையாக்கப்பட்டது தான் ஆதித் தமிழரின் அதி உன்னத வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை சொற்கள் போலும்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


முற்றிற்று 

474593983_10227855808283401_4365655585376757121_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OFkcYG0mS4EQ7kNvgEUc7R_&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AXGo-Lz_Wf9fchI9U-cPYCp&oh=00_AYBQjrFHkeCwz9OFK3vGl7RjbKOlvWIbMYBfa-HfOes9tA&oe=679D27DC  474520546_10227855809043420_8036212395637425598_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jdz3U7pMgdkQ7kNvgFEJIMm&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AXGo-Lz_Wf9fchI9U-cPYCp&oh=00_AYDCG2DwBWsfm5mleeD0lDlY296j1bEWRuS0Dr-UIVEFaQ&oe=679D33CE

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.