Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஏஞ்சல் பெர்முடெஸ்
  • பதவி, பிபிசி உலக சேவை

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களோடு அவர் பதவியேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, நவம்பர் 5-ஆம் தேதி அன்று, அவருடைய முதல் அதிபர் தேர்தல் பரப்புரையில் தான் பேசிய விசயங்களை அவர் நினைவு கூர்ந்தார். தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.

அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

அவர் முன்மொழிந்த திட்டங்களிலும், தேர்தல் வாக்குறுதிகளிலும், அமெரிக்கா - மெக்ஸிகோ இடையே சுவர் எழுப்பி எல்லையை மூடும் திட்டம், ஆவணமில்லாத லட்சக்கணக்கான குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் ஆகியவை அடங்கும். அமெரிக்க வரலாற்றில் இது மிகப்பெரிய 'நாடு கடத்தும் நடவடிக்கையாக' இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

அரசின் அதிகாரங்களும், வரிகளும் குறைக்கப்படும், வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு 10-20 சதவீத வரி விதிக்கப்படும், குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி வழங்கினார்.

இந்தத் வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற, தனக்குப் பின்னால் உள்ள குடியரசுக் கட்சியின் ஆதரவை டிரம்ப் எதிர்நோக்கியுள்ளார்.

பிரதிநிதிகள் அவை (கீழவை) மற்றும் செனட் (மேலவை) ஆகிய இரண்டிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. இது அமெரிக்காவில் 'ட்ரிஃபெக்டா' அல்லது ஐக்கிய அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

அதாவது, அமெரிக்காவின் அரசாங்க அமைப்பில், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் ஆளுங்கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கும் போது ஒரு 'ட்ரிஃபெக்டா' அல்லது ஐக்கிய அரசாங்கம் ஏற்படுகிறது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

"ஐக்கிய அரசாங்கம்" என்பது ஒற்றை அவை உள்ள அரசாங்கத்தைப் போல் செயல்படும் என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் பிபிசியிடம் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய பீட்டர்சன், "ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற்று அரசாங்கத்தையும் நாடாளுமன்றத்தையும் கட்டுப்படுத்தும் போது அது ஒரு ஐக்கிய அரசாங்கமாக இயங்குகிறது. இது குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவும், குறைந்தபட்ச எதிர்ப்புடன் முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கிறது" என்றும் விவரிக்கின்றார்.

பேராசிரியர் மார்க் பீட்டர்சன், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (UCLA) பொதுக் கொள்கை, அரசியல் அறிவியல் மற்றும் சட்டத் துறையில் பேராசிரியராக உள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாட்டின் மூன்றாவது சுதந்திரப் பிரிவு. அதிலும் தற்போது ஆறு பழமைவாத நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.

உச்ச நீதிமன்றத்தில் மூன்று தாராளவாத நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதனால் அரசின் முடிவுகளுக்கு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து எளிதாக ஒப்புதல் கிடைக்கும்.

அப்படியானால், தனது அரசாங்கத்தை எந்த வித சிக்கல்களும் இல்லாமல் டிரம்பால் அமெரிக்காவில் ஆட்சி நடத்த முடியுமா? எனும் கேள்வி எழுகின்றது.

ஆனால் உண்மையில் டிரம்பால் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்க முறைப்படி டிரம்ப் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதைத் தடுப்பதற்கு 6 கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் சில அமைப்புகள் உள்ளன

1. இரு அவைகளிலும் பெரும்பான்மை இருந்தாலும்…

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் அந்த கட்சியால், தான் முன்மொழிந்த அனைத்திற்கும் மிக எளிதாக அங்கீகாரம் பெற முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி 220 இடங்களைப் பெற்றது. அதேசமயம் ஜனநாயக கட்சி 215 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்தார். மேலும் இரண்டு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பிற அரசாங்கப் பதவிகளை ஏற்பதற்காக விரைவில் ராஜினாமா செய்ய உள்ளனர்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு, பிரதிநிதிகள் அவையில் பழமைவாத குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மையை விட 2 இடங்கள் மட்டுமே கூடுதலாக இருக்கும். இது அந்தக் கட்சிக்கு கடினமான சூழலாகவே இருக்கும்.

"சமீப காலத்தில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை பலவீனமாக உள்ளது. அவர்கள் மிகுந்த ஒற்றுமையோடு இருந்த போதிலும், குறைவான பெரும்பான்மை உள்ள சூழலில் பிரதிநிதிகள் அவையைக் கட்டுப்படுத்த, கடினமான சூழ்நிலைகளிலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது மிகவும் சவாலானது"என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் குறிப்பிடுகிறார்.

செனட்டில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சிக்கு 43 உறுப்பினர்களும் உள்ளனர். குடியரசுக் கட்சிக்கு கூடுதல் உறுப்பினர்கள் இருந்தாலும் கூட, மிக முக்கிய முன்மொழிவுகளை நிறைவேற்ற அந்தக் கட்சிக்கு 7 இடங்கள் குறைவாகவே உள்ளன.

குடியரசுக் கட்சியினர் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேராசிரியர் மார்க் பீட்டர்சன் விளக்குகிறார்.

ஏனென்றால், குடியரசுக் கட்சியினர் முன்மொழிந்துள்ள திட்டங்களில் எதை வேண்டுமானாலும் தடுக்கும் அதிகாரம் ஜனநாயகக் கட்சிக்கு உள்ளது.

செனட்டில் 60 வாக்குகளுக்குப் பதிலாக 51 வாக்குகள் என்ற எளிய பெரும்பான்மையுடன் வரவு-செலவுத் திட்ட விதிகளை அங்கீகரிக்க பேச்சுவார்த்தை நடத்துவது தான் வழக்கமான செயல்முறையாகும்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிளவு அதிகரித்து வருவதால் இந்த செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், எல்லா சூழ்நிலைகளிலும் இதைப் பயன்படுத்த முடியாது.

இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன் கூறும்போது , "பெரிய மாற்றங்களைச் செய்த அதிபர்கள் இரு அவைகளிலும் 60 சதவிகிதம் போன்ற பெரிய பெரும்பான்மையைப் பெற்றனர். ஆனால் இப்போது அது இல்லை. குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்து நின்றாலும், தேர்தல் வாக்குறுதிகளை டிரம்பால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான்" என்றார்.

டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் கூட இரு அவைகளிலும் வலுவான பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். ஆனால் அந்த நேரத்தில், அவர் ஒரு முக்கியமான வரி குறைப்பு சட்டத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது என்று குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள்.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

2. சுதந்திரமான நீதித்துறை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையான பழமைவாத நீதிபதிகள் இருந்தாலும், அவர்களில் மூன்று பேர் டிரம்பின் முதல் நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், டிரம்பின் அனைத்து நிர்வாக முயற்சிகளும் அங்கீகரிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

டிரம்ப் தனது 2016-ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளித்ததைப் போலவே, 1970 முதல் நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமைகளுக்கான பெடரல் பாதுகாப்புச் சட்டத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றது என்பது உண்மைதான். இந்த முடிவை புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் ஆதரித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் படி, " தனது பதவிக் காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்கிலிருந்தும் முழுமையான விலக்கு பெற உரிமை அதிபருக்கு உண்டு."

இதன் காரணமாகவே, நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டார்

இருப்பினும் அவரின் தனிப்பட்ட விஷயங்களில் இந்த விலக்கு கிடைக்காது.

இது தவிர, அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் அளித்த புகார்களையும் 2022-ஆம் ஆண்டில் நீதிமன்றம் நிராகரித்தது.

அமெரிக்காவின் டாகா திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த திட்டத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.

ஆவணங்கள் இல்லாமல் சிறு வயதில் நாட்டிற்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது டாகா திட்டம்.

ஒபாமாகேர் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்திலிருந்து சில பாதுகாப்புத் திட்டங்களை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதனுடன், பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படுவதிலிருந்து பால் புதுமையினரைப் பாதுகாக்கும் பிற விதிகளையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த இரண்டு விதிகளும் குடியரசுக் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக இருந்தன.

பியூ ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, "உச்ச நீதிமன்றத்தைத் தவிர, அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றங்களில் 60 சதவிகித நீதிபதிகள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர். அங்குள்ள நீதிபதிகளில் 40 சதவிகிதம் பேர் குடியரசுக் கட்சி அல்லது டிரம்பின் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டனர்" என அறியமுடிகின்றது.

இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன் குறிப்பிடும் போது, "அமெரிக்க அரசியல் அமைப்பின் மூன்றாவது முக்கிய தூண் நீதித்துறை. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் டிரம்ப் அல்லது குடியரசுக் கட்சியால் நியமிக்கப்படவில்லை" என்கிறார்.

உச்ச நீதிமன்றச் சட்டம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களின் படி நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று பீட்டர்சன் கூறுகிறார்.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேடிவ் நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளனர்.

3. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள அரசாங்கங்கள்

அமெரிக்கா ஒரு கூட்டாட்சி நாடு. இந்த கூட்டாட்சி அமைப்பு வெள்ளை மாளிகையில் இருந்து செயல்படுத்தப்படும் மாற்றங்களுக்கு முக்கியமான வரம்புகளை விதிக்கிறது.

அமெரிக்க அரசியலமைப்பின் 10வது திருத்தம், மாகாண அல்லது யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு பெரிய அளவிலான அதிகாரத்தை வழங்குகிறது.

பாரம்பரியமாக, பாதுகாப்பு, சுகாதாரம், சமூக நலன்கள், கல்வி, தேர்தல் செயல்முறை, குற்றவியல் சட்டம், தொழிலாளர் விதிமுறைகள் மற்றும் சொத்து தொடர்பான உரிமைகள் மாகாணங்களுக்கு உள்ளன.

இதேபோல், மாவட்ட மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு பொதுப் பாதுகாப்பு, நகர்ப்புறத் திட்டமிடல், நிலப் பயன்பாடு மற்றும் பல பொறுப்புகள் உள்ளன.

டிரம்ப் நிர்வாகத்தின் சில முயற்சிகளை எதிர்க்கும் அதிகாரம், மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரப்புற நிர்வாகங்களுக்கு உள்ளது.

மேலும் "டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக, இந்த அதிகாரங்களை ஜனநாயகக் கட்சி நிச்சயமாகப் பயன்படுத்தும்" என்றும் பீட்டர்சன் கணித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, "நான் அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் உள்ள கலிபோர்னியாவில் வசிக்கிறேன். இது முற்றிலும் ஜனநாயகமாகவோ, தாராளவாத போக்குடனோ, முற்போக்கானதாகவோ இல்லை. ஆனால் அந்த திசையை நோக்கி வலுவாக முன்னேறுகிறது " என்று பீட்டர்சன் குறிப்பிடுகிறார்.

பீட்டர்சனின் கூற்றுப்படி, " டிரம்ப் நிர்வாகத்தை பொருட்படுத்தாமல் அல்லது எதிர்க்கும் வகையில் கலிபோர்னியா செயல்படும். டெக்சாஸ் மற்றும் சில மாகாணங்கள் சமீப காலங்களில் ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகங்களைப் பற்றி கவலைப்படவில்லை."என அறியப்படுகின்றது.

தற்போது, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 23 மாகாணங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் உள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் குடியேறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு இந்த மாகாணங்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருக்கலாம்.

ஏனெனில் இத்தகைய சிக்கலான மற்றும் கடினமான பணிகளுக்கு உள்ளூர் நிர்வாக அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

பல நகரங்கள் மற்றும் மாகாணங்கள், புலம்பெயர்ந்தோருக்கு "பாதுகாப்பான" இடங்களாக தங்களது பகுதிகளை அறிவித்துள்ளன. இதன் காரணமாக புலம்பெயர்ந்தோர் பிரச்னையில் பெடரல் அரசுடன் அவர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பல நகரங்கள் மற்றும் மாகாணங்கள், புலம்பெயர்ந்தோருக்கு "பாதுகாப்பான" இடங்களாக தங்களது பகுதிகளை அறிவித்துள்ளன.

4. தொழில்முறை அதிகாரத்துவம்

டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர் தனது அரசியல் திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை என்று குடியரசுக் கட்சிக்குள் புகார்கள் எழத் தொடங்கின.

அரசு மற்றும் அதிகாரத்துவத்தின் செயல்பாடு பற்றிய புரிதல் இல்லாதது மற்றும் அதிகாரிகள் அல்லது சிவில் சேவைகளின் எதிர்ப்பு ஆகியவை இதற்குக் காரணமாக அறியப்படுகின்றது.

டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுகளை சட்டவிரோதமானதாகவோ அல்லது தவறானதாகவோ கருதி அவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தாமதம் செய்தனர்.

தனது முதல் பதவிக் காலத்தின் முடிவில், டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவிற்கு ஒப்புதல் அளித்தார். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்து, அவர்களுக்குப் பதிலாக தனது ஆதரவாளர்களை நியமிப்பதற்கானதாக அந்த உத்தரவு இருந்தது. இந்த உத்தரவை பைடன் நிர்வாகம் ரத்து செய்தது.

இருப்பினும், தனது பிரசாரத்தின் போது, அவர்களை நீக்குவதற்கான நிர்வாக ஆணையை, மீண்டும் மறுபரிசீலனை செய்ய டிரம்ப் பரிந்துரைத்தார்.

உண்மையில், டிரம்பின் அரசியல் சித்தாந்தத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிபுணர்களின் தரவுத் தளத்தை, டிரம்பிற்கு நெருக்கமான பழமைவாதக் குழு, அவரது இரண்டாவது பதவிக்காலத்துக்காகத் தயாரித்துள்ளது. அதனால் அவர்கள் அரசு அதிகாரிகளுக்குப் பதிலாக நியமிக்கப்படலாம்.

இந்த முயற்சியால் நிறுவன, சட்ட, அரசியல் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இது குறித்து பேராசிரியர் பீட்டர்சன் கூறுகிறார், "டிரம்பின் இந்த முயற்சிக்கு எதிராக நீதிமன்றங்கள் செயல்படும் என்று நான் நினைக்கிறேன். பொதுச் சேவைகள் ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டன மற்றும் சட்டத்தால் பாதுகாக்கப்படுகின்றன. புதிய அரசாங்கம் உருவாகும் வரை அரசு ஊழியர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க முடியாது" எனக் கருதப்படுகின்றது.

ஆனாலும், குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம். எடுத்துக்காட்டாக, வாஷிங்டனுக்கு வெளியே வேறு இடத்திற்கு அலுவலகத்தை மாற்ற அரசாங்கம் முடிவு செய்தால், சில அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அதாவது அந்த அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு செல்ல முடியாது என்பது அதற்கு காரணமாகச் சொல்லப்படுகின்றது.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பும் நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவின் விசாரணை நிறுவனமான எஃப்.பி.ஐ. உள்ளது

5. ஊடகம் மற்றும் சிவில் சமூகம்

டிரம்ப் முதன் முறையாக அதிபராகப் பதவியேற்ற போது, அவரது நிர்வாகத்தை ஊடகங்கள் விமர்சித்தன.

இது தவிர, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் அவரது அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கின.

ஆனால், ஊடக சூழல் சற்று மாறிவிட்டது.

எடுத்துக்காட்டாக, டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் எத்தனை முறை பொய் சொன்னார் அல்லது தவறான தகவல்களை அளித்தார் (நான்கு ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை) என்ற பதிவை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது.

இம்முறை இதற்கு மாறாக, அமெரிக்கத் தேர்தல் குறித்த தனது தினசரி தலையங்கத்தை வெளியிடுவதில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் முடிவெடுத்தது. இதற்கு முன்பு அதன் தலையங்கத்தில், தேர்தல்கள் குறித்த தனது கருத்தை வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை விளம்பரப்படுத்த, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை திட்டமிட்டிருந்தது.

லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் எனும் மற்றொரு பாரம்பரிய தாராளவாத செய்தித்தாளும் இதே அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது.

மறுபுறம், அமேசான் நிறுவனர் மற்றும் தி வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ், புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் டிரம்பைச் சந்தித்தார். ஆனால் பல ஊடக நிறுவனங்கள் டிரம்ப் அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் விமர்சன நிலைப்பாட்டை தக்கவைத்து வருகின்றன.

இது தவிர, அமெரிக்கன் சிவில் லிபெர்ட்டிஸ் யூனியன் (ஏசிஎல்யூ) போன்ற பல சிவில் சமூக அமைப்புகள் குறித்தும் இதே போன்ற கருத்தைக் கூற முடியும்.

17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, புதிய அதிபரான டிரம்ப் முன்மொழிந்துள்ள சில திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் அதன் நோக்கங்களை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்ப் முதல்முறையாக பதவியேற்றபோது, அவரது நிர்வாகத்திற்கு எதிராக 430 முறை சட்ட நடவடிக்கை எடுத்தோம். அவரை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான வியூகம் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு அறிக்கையில், "இந்த முறை அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், 2020-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகும் போது அவர் கூறிய கொள்கைகளை மீண்டும் அமல்படுத்துவார் என்றும் அர்த்தமாகும். அதாவது, அதிகமான புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்படுவார்கள். மறுபுறம் டிரம்ப் தனது அரசியல் எதிரிகளைக் குறிவைக்க அரசாங்கத்தைப் பயன்படுத்துவார்" எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்திலும் சிவில் நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

6. குடிமக்களின் முன்னுரிமைகள்

ட்ரம்ப் தனது அரசாங்கத் திட்டங்களை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியும் என்பது, அவரது திட்டங்கள் குடிமக்களின் உண்மையான சிக்கல்களோடு எவ்வளவு தூரம் பொருந்துகின்றன என்பதையும், அந்தச் சிக்கல்களை டிரம்ப் எந்தளவுக்கு புரிந்துகொள்கிறார் என்பதையும் பொறுத்தது.

இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் டிரம்ப் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும், அவர் உண்மையில் குடிமக்களிடமிருந்து பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை.

இதுகுறித்து பேராசிரியர் பீட்டர்சன், "டொனால்ட் டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இது தான் உண்மை. ஆனால் மொத்த வாக்காளர்களில் பாதி கூட இல்லாத 49.9 சதவீத பாப்புலர் வாக்குகளையே டிரம்ப் பெற்றார். கமலா ஹாரிவை விட 1.5 சதவீத வாக்குகளே கூடுதல் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் கிடைத்த மிக நெருக்கமான வெற்றிகளில் இதுவும் ஒன்று" என்று டிரம்பின் வெற்றியைக் குறிப்பிடுகிறார்.

தேர்தலில் டிரம்ப்பை ஆதரித்த வாக்காளர்கள் கூட, அவரது தீவிர யோசனைகள் அல்லது அவர் முன்மொழிந்த திட்டங்களை ஆதரிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் டிரம்பின் ஆதரவாளர்களில் பலரும், "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குதல்' (மேக் அமெரிக்கா கிரேட் அகைன்) எனும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் டிரம்ப் என்ன செய்ய விரும்பினாலும் அதை ஆதரிப்பார்கள். மற்றொரு குழுவில் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் டிரம்பை அதிகம் விரும்புவதில்லை, ஆனால் அவர் ஒரு பழமைவாதி என்பதால் அவரை ஆதரிக்கின்றனர். அவர்கள் வரி குறைப்பு மற்றும் குறைவான கட்டுப்பாடுகளில் ஆர்வமாக உள்ளனர்" என்பது நிபுணர்களின் கூற்றாகும்.

"பணவீக்கம் அதிகரித்து வருவதால் டிரம்பிற்கு வாக்களித்த ஒரு குழுவும் உள்ளது. அவர்கள் மாற்றத்தை விரும்பினர், டிரம்ப் மட்டுமே அவர்களுக்கு ஒரே வழி" என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

"அவர்களில் பலர் ஒபாமாகேரை முடிவுக்குக் கொண்டுவருவது, சிவில் சேவைகளை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது போன்ற முடிவுகளில் டிரம்பை ஆதரிக்க மாட்டார்கள்" என்று பேராசிரியர் பீட்டர்சன் விவரிக்கின்றார்.

இது, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை. இந்தச் சூழல், டிரம்பின் பிரபலத்தை மட்டும் பாதிக்காது. 2026-ஆம் ஆண்டில் நடக்கவுள்ள அடுத்த முக்கியமான தேர்தலிலும் குடியரசுக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

"டிரம்ப் தேவைகளுக்கு ஏற்ப மாறுபவர் மற்றும் தனது இலக்குகளை அடையாததற்காக மற்றவர்களைக் குறை கூறுபவர்" என பீட்டர்சன் பதிலளிக்கிறார்.

"டிரம்பின் முதல் பதவிக் காலத்தின் தொடக்கத்தில், ஒபாமாகேரின் செல்வாக்கு அதிகரித்த போது, டிரம்ப் அரசாங்கம் அதை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தது. ஆனால் இறுதியில், சில மாற்றங்களுடன் அவர்களின் முடிவில் இருந்து டிரம்ப் நிர்வாகம் பின்வாங்க வேண்டியிருந்தது" என பேராசிரியர் பீட்டர்சன் குறிப்பிடுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.