Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ், சென்னை

  • 16 பிப்ரவரி 2025

"புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிமுக, காங்கிரஸ், நாதக, தவெக உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக என்ன சொல்கிறது? கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் கூறுவது என்ன?

தர்மேந்திர பிரதான் கூறியது என்ன?

உத்தரப் பிரதேசம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சி பிப்ரவரி 15-ஆம் தேதி துவங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு வாரணாசிக்கு சென்றுள்ளது.

இந்த நிகழ்வை அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்தார். இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காதது ஏன் என்று செய்தியாளர்கள் தர்மேந்திர பிரதானிடம் கேள்வி எழுப்பினர்.

"புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்," என்றும் அவர் பதிலளித்தார்.

"பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் இதற்கு காரணம். அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட போதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது?

அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கிறதா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது?" என்றும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,@DPRADHANBJP

படக்குறிப்பு, காசி தமிழ்ச் சங்கம் 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் தமிழகத்திற்கு நிதி வழங்காதது குறித்து கருத்து தெரிவித்தார்

மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாட்டில் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "மும்மொழிக் கொள்கையை சட்டம் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது என்று கல்வி அமைச்சரால் கூற முடியுமா?" என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

மேலும், "மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது தான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மிரட்டும் தொணியை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

எங்கள் உரிமையைக் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்," என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,@MKSTALIN/X

படக்குறிப்பு,தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட கருத்து

தமிழக தலைவர்கள் கூறியது என்ன?

தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது சரியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலூரில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காதீர்கள். மக்களைப் பாருங்கள். மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடைபிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சொல்வதும், மும்மொழி கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் என்றுமே இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது" என்று திட்டவட்டமாக கூறினார்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு

மத்திய அமைச்சரின் பேச்சைக் கண்டித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருத வேண்டிய ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவது மிகப்பெரிய அநீதி. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சாவால். இதை ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியளிக்கமாட்டோம் எனக் கூறுவது கொடுங்கோண்மை, ஆணவம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டித்துள்ளார்.

"மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?" என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

"கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது"

இது தேவையற்ற கருத்து என்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. "அரசியலமைப்புக்கு விரோதமான போக்கை அவர்கள் எடுத்துள்ளனர். கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றிருக்கிறதே தவிர, ஒன்றிய பட்டியலில் கல்வி இல்லை. ஒன்றிய பட்டியலில் கல்வி இருப்பதைப் போன்று ஏகாதிகாரமாக பேசுகிறார் மத்திய அமைச்சர்.

இருமொழிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது என்பது கொள்கை ரீதியிலான முடிவு. அதற்கு விரோதமாக தங்களின் கருத்தை திணிப்பதும், தங்களின் நிதி அளிப்புக்கு ஆதாரமாக இந்த கருத்தை முன்வைத்து பேரம் பேசுவதும் ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு கொந்தளிக்கும் சூழ்நிலையை அவர்கள் மீண்டும் உருவாக்கக் கூடாது," என்றார்.

"உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது," என்று மும்மொழிக் கொள்கை தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறியதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புவதாக வீரமணி கூறினார்.

"மக்கள் வரிப்பணத்தை தான் அவர்கள் தருகிறார்களே தவிர, அது அவர்களின் சொந்தப் பணம் அல்ல. ஒரு கூட்டாட்சியில் இருக்கும் நாட்டை, மத்திய அரசின் ஏகபோக ஆட்சிக்கு ஏற்றவகையில் மாற்றுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை," என்றும் கூறினார் அவர்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,DMK

படக்குறிப்பு,உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியை திணிக்க முயன்றாலும், அதன் விளைவுகளை உங்களால் தாங்கிக் கொள்ள இயலாது என அண்ணாதுரை கூறியதை மேற்கோள்காட்டினார் வீரமணி

பாஜக கூறுவது என்ன?

"உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

"அரசியல் அமைப்பின் படி நிர்வாக வசதிகளுக்காக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதே தவிர, முதல்வர் முக ஸ்டாலின் கூறுவது போன்று மாநிலங்களால் இந்தியா உருவாக்கப்படவில்லை" என்கிறார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

"நாட்டு மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் ஒரு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டிருக்கும் பட்சத்தில், அதனை தமிழ்நாடு அரசு மட்டும் ஏற்க மறுப்பது இந்திய அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் செயல். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றும் மாநிலங்களுக்கு அதற்கான நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு அரசு பின்பற்றாத போது அதற்கான நிதியை மட்டும் தமிழ்நாடு அரசு கேட்பது எந்த வகையில் நியாயம்," என்ற கேள்வியை முன்வைக்கிறார் அவர்.

மேற்கொண்டு பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. எந்த ஒரு மாநிலத்தின் பிரதான மொழியையும் மூன்றாவது மொழியாக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துக் கொள்ளலாம். அந்த மொழியை பேசும் மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்த மொழியை இங்குள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரலாம். அதே போன்று தமிழ் மொழியையும் பிற மாநிலங்களுக்கு கொண்டு போய் சேர்க்க இயலும். ஆனால் இதனை தமிழ்நாடு அரசு செய்ய மறுக்கிறது," என்று குறிப்பிடுகிறார் அவர்.

"தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தவிர அனைத்து பள்ளிகளிலும் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும் அது எட்டாக்கனியாக உள்ளது" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு அரசு

கல்வியாளர்கள் கூறுவது என்ன?

அனைத்திந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி மாநில செயலாளர் கே. யோகராஜன் பிபிசி தமிழிடம் பேசிய போது, இதில் இருக்கும் பல சிக்கலான கூறுகளை எடுத்துரைத்தார்.

"கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை முதலில் தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சமக்ர சிக்‌ஷா அபியான் திட்ட நிதியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதை நிறுத்திவிட்டு, அடிப்படை உரிமையை செயல்படுத்த நிதி வேண்டும் என்று கேட்க வேண்டும்," என்று கூறினார்.

"1990-களுக்கு முற்பாதியில், மாநிலங்கள் வரியை வசூலிக்கும் உரிமையைப் பெற்றிருந்தன. வரியை வைத்து, கல்விக்கு தேவையான நிதியை மாநில அரசுகள் ஒதுக்கின. ஆனால் வரி வசூலிக்கும் உரிமையானது மத்திய அரசிடம் சென்ற பிறகு, கல்விக்கான நிதியை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு நிதியை மட்டுமே வழங்க முடியுமே தவிர, மாநில அரசுகள் அதனை எப்படி செலவிட வேண்டும்? எதன் அடிப்படையில் கல்வித் திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கூற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை," என்று தெரிவிக்கிறார்.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு அரசு, முக ஸ்டாலின், பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சட்டமன்றங்களற்ற யூனியன் பிரதேசங்களில் சமக்ர சிக்‌ஷா திட்டத்தை செயல்படுத்த 100% நிதியை மத்திய அரசே வழங்கும்

அரசமைப்புச் சட்டம் கூறுவது என்ன?

"இந்தியையோ அல்லது இதர மொழியையோ கற்றுக் கொள்ளுமாறு மக்களை மத்திய அரசு வற்புறுத்த இயலாது. ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார் எழுத்தாளரும், வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் சித்ரா.

இந்திய அரசியல் அமைப்பு குறித்த 'இந்திய மக்களாகிய நாம்' என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவர் பிபிசி தமிழிடம் பேசினார்.

"கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மாநில அரசு கல்வி தொடர்பாக எத்தகைய கொள்கையை கொண்டு வந்தாலும், மத்திய அரசுடன் முரண்படாத வகையில் மாநில அரசு தான் உருவாக்கிய கொள்கையை செயல்படுத்தலாம். ஆனால், மத்திய அரசு இதற்கு மாறாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தால், பொதுப் பட்டியலில் இருக்கின்ற காரணத்தால், அதிகாரம் அதிகம் கொண்ட மத்திய அரசின் கொள்கையை பின்பற்றியே ஆக வேண்டும்," என்று கூறுகிறார்.

"மத்திய அரசுடன் முரண்படுகையில், மாநில அரசு சட்டம் ஒன்றை இயற்றி அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனாலும் அரசியலமைப்பு பிரிவு 74-ன் படி, குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்று மட்டுமே செயல்பட இயலும். தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது," என்றும் தெரிவித்தார் வாஞ்சிநாதன் சித்ரா.

மும்மொழிக் கொள்கை, தமிழ்நாடு அரசு, முக ஸ்டாலின், பாஜக

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய அரசியலமைப்பு மத்திய அரசுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது என்பதால் ஒத்திசைவு பட்டியலில் இடம் பெற்றுள்ள அம்சங்களிலும் மத்திய அரசின் முடிவே அதிக வலுப்பெறும்

80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்டாய இந்தி குறித்து அவர் பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை இடப்பட்டது. இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும் பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் போராட்டங்கள் எதிரொலியாக, 1940ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.

1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த (இப்போதைய) ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் (தற்போது) தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ஆட்சி மொழியாக எதனைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. முடிவில் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், தொடர்ந்து இந்திக்கு எதிரான மன நிலை பல மாநிலங்களில் நிலவிய நிலையில், இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. "தொடரலாம்" என்று இருப்பதை "தொடரும்" என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது.

இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்தார். ஆட்சி மொழிச் சட்டம் செயல்படுத்தப்படும் நாளான 1965ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்தது.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு திருச்சியில் கூட்டப்பட்டது. எதிர்வரும் குடியரசு தினத்தைக் கொண்டாட ஏதுவாக, மொழி மாற்ற தினத்தை ஒரு வாரம் தள்ளிவைக்கும்படி அண்ணாதுரை கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆகவே ஜனவரி 25ஆம் தேதியை துக்க தினமாக அறிவித்தது தி.மு.க. அன்றைய தினம் சி.என். அண்ணாதுரையும் 3,000 தி.மு.கவினரும் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுரையில் நடந்த ஊர்வலத்தில் வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகம் அருகே மோதல் ஏற்பட்டது. முடிவில் அந்த அலுவலகப் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை முழுவதும் கலவரம் பரவியது. அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது.

ஜனவரி 28ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கலவரங்கள் பிப்ரவரி மாதமும் தொடர்ந்த நிலையில், இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசனும் இந்தி விவகாரத்தில் தங்கள் அரசின் பிடிவாதத்தை எதிர்த்து பதவி விலகல் கடிதம் அளித்தனர். முடிவில், பிப்ரவரி 11ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

'தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள்'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.