Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து!

3 Mar 2025, 11:19 PM

sivajki-home-auction.jpg

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட  நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார்.

வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க சிவாஜி பேரன் மறுத்தார்.

இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் அன்னை இல்லத்தின் மொத்தமுள்ள 53 ஆயிரம் சதுர அடியில், 13 ஆயிரம் சதுர அடியை ஜப்தி செய்து  பொது ஏலமிட்டு பணத்தை அந்நிறுவனத்துக்குக் கொடுக்க உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 3)  உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சிவாஜிக்கு நெருக்கமானவர்களோ சிவாஜி குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை இரு வருடங்களுக்கு முன்பே முதல்வர் ஸ்டாலினிடம் சென்றது. அப்போது முதல்வர் சில அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அவற்றை ஏற்று சிவாஜி குடும்பத்தினர் செயல்படுத்தவில்லை.  அதனால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது,   “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ராம்குமார், பிரபு ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள்.  மகள்கள் இருவரும் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்,  தந்தை சிவாஜி கணேசன் தன் உழைப்பில் சம்பாதித்த சொத்துக்களில் எங்களுக்கு பங்கு கொடுக்க எங்கள் சகோதரர்கள் ராம்குமார், பிரபு மறுக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

sivaji-family.jpeg

இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே…  சாந்தி தியேட்டர் பங்குகளை தங்களுக்குத் தெரியாமலேயே ராம்குமாரும், பிரபுவும் இன்னொரு பில்டருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள் என்றும் அதை ரத்து செய்ய வேண்டும்  என்றும் இன்னொரு வழக்கு போட்டனர்.

அதாவது, சாந்தி தியேட்டர் நிறுவனத்தில் சிவாஜி, கமலா ஆகியோர் பெயரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அவர்களது மறைவுக்குப் பிறகு  ராம்குமார், பிரபு உள்ளிட்டோர் எங்களுக்குத் தெரியாமல் விற்றுவிட்டனர், அங்கே கட்டுமானம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தனர்.  

இந்த  மனுக்களை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.  இந்த பரிவர்த்தனைகள் 2010 ஆம் ஆண்டிலேயே  முடிந்துவிட்டதாகவும் குடும்பப் பிரச்சினை காரணமாக இப்போது இதை எழுப்பியிருக்கிறார்கள் என்றும்   இதை வாங்கிய அக்‌ஷயா ஹோம் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாதாடியது.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அதேநேரம் சொத்துப் பிரச்சினைக்காக பிரதான வழக்கு தொடர்ந்து நடந்தது.

sivaji-home-1024x576.jpg

”சென்னை தி. நகரில் இருக்கும் சிவாஜி இல்லமான அன்னை இல்லம் சிவாஜியால் கட்டப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் ராம்குமாரும், பிரபுவும் அங்கே வசிக்கிறார்கள். அன்னை இல்லத்தில் எங்களுக்குப் பங்கு கொடுக்கப்படவில்லை.  கோபாலபுரத்தில் இருக்கும்  சிவாஜி என்கிளேவ் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் எங்களுக்குப் பங்கு வேண்டும்.

மேலும் சென்னை ராயப்பேட்டையில் சிவாஜி நான்கு வீடுகளை வாங்கினார். அதில் ஒரு வீட்டில் நாங்கள் (மகள்கள்) வசிக்கிறோம். மற்ற மூன்று வீடுகளின் வாடகையும் ராம்குமார், பிரபுவுக்குத்தான் போகிறது. அந்த வாடகையிலும் பங்கு கொடுக்கப்படவில்லை.

அசையா சொத்துகள் மட்டுமல்ல… அசையும் சொத்துகளான  சிவாஜிக்கு சொந்தமாக ஆயிரம் சவரன் தங்க நகைகளும், 500 கிலோ வெள்ளிப் பாத்திரங்களும் இருக்கின்றன. இவற்றிலும் எங்களுக்கு பங்கு வேண்டும்” என்பதுதான் சிவாஜி மகள்களின் வழக்கு.

சிவாஜி உயிரோடு இருந்தபோது, நடிகர் நடிகைகளின் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளை பேசித் தீர்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில் சிவாஜி மறைவுக்குப் பின்  அவரது குடும்பத்திலேயே சொத்துப் பிரச்சினை தலை விரித்தாடிய தகவல் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

image-682-1024x1024.png

2022 அக்டோபர்  1 ஆம் தேதி சிவாஜியின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் இருக்கும் சிவாஜி மணிமண்டபத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.  

அப்போது ராம்குமார், பிரபு உள்ளிட்டோருடன். சில நிமிடங்கள்  முதல்வர் தனியாக உரையாடினார்.  

இந்நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சாந்தி தியேட்டர் பங்கு வழக்கில்  உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்தது.  இதற்கு சில நாட்கள் கழித்து பிரபுவின் வழக்கறிஞரான எஸ்.ராமனிடம் முதல்வர் தரப்பில் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

அப்போதே முதல்வர் ஸ்டாலின் தனக்குத் தெரிந்த சில பில்டர்ஸ் நிறுவனத்தினரிடம் இதுபற்றி பேசிவிட்டு… முக்கிய ஆலோசனைகளை சிவாஜி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தனது தந்தை கலைஞரின் உற்ற நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் சிவாஜி குடும்ப பிரச்சினையைத் தீர்க்க முதல்வர் ஸ்டாலின் முயன்றார்.

image-681.png

ஆனால் சிவாஜி குடும்பத்தினரிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் முதல்வர் ஓரளவுக்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் விட்டுவிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப் படி செயல்பட்டிருந்தால் இன்று அன்னை இல்லம் ஏலத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது” என்கிறார்கள் நடந்ததை அறிந்த இரு தரப்புக்கும் வேண்டப்பட்டவர்கள்.

https://minnambalam.com/political-news/sivaji-family-property-issue-stalin/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி வீட்டை ஏன் நினைவு இல்லமாக்க வேண்டும்?

-சாவித்திரி கண்ணன்

hq720.jpg

தமிழ் சினிமாவின் மகத்தான அடையாளங்களில் ஒன்று கலைத் தாயின் தலைமகன் சிவாஜி வாழ்ந்த வீடான அன்னை இல்லம். தற்போது நீதிமன்றத்தால் ஜப்தி செய்ய சொல்லும் அளவுக்கு உள்ள அந்த இடம் சிவாஜியின் நினைவு இல்லமாக்கப்பட்டு, அவரது சாதனைகளை நினைவூட்டும் கண்காட்சி மற்றும் ஆவணங்களுடன் பராமரிக்கப்படுமா?

இதன்  கம்பீரமும், அழகும் மட்டும் இதற்கு காரணமல்ல, கலைத் தாயின் தலை மகனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்து, நடமாடிய இடம்.

அப்படிப்பட்ட அன்னை இல்லத்தை இன்று நீதி மன்றம் ஜப்தி செய்ய ஆணையிட்ட செய்தி தமிழக மக்கள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தில் அன்றைய தினம் இந்த வீட்டில் கால் பதிக்காத சினிமா கலைஞர்களும் இருக்க முடியாது, பத்திரிகையாளர்களும் இருக்க முடியாது. அந்த வகையில் பற்பல கலைஞர்களுக்கும்  அங்கு பசுமையான நினைவுகள் அதிகம் இருக்கும். இந்த அன்னை இல்லத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை;

ஒரு மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்திற்கு இலக்கணமாக சிவாஜி குடும்பம் திகழ்ந்தது! அனைத்து உறவுகளையும் விட்டுக் கொடுக்காமல் அவர் வாழ்ந்தார்! அங்கு தினசரி விருந்துக்கு தயாரிப்பது போலத் தான் விதவிதமான அசைவ உணவுகள் தயாராகும்.  சூட்டிங் ஸ்பாட்டில் அவர் வீட்டுச் சாப்பாட்டை ருசிக்காத கலைஞர்களும், இயக்குனர்களும் மிக அபூர்வமாகத் தான் இருக்க முடியும்.

சிவாஜி சம்பாதித்த பெரும் சொத்துக்கள் பலவற்றை  அவருடைய வாரிசுகள் ஒவ்வொன்றாக விற்ற வண்ணம் இருந்தனர். இது தவிர ஏகப்பட்ட கடன்கள் வேறு. தற்போது எஞ்சி இருப்பது இந்த அழகிய வீடு மட்டும் தான்!  இது ஏற்கனவே ஏலத்திற்கு போவது போன்ற ஒரு நெருக்கடி ஏற்பட்ட போது நடிகர் ரஜினிகாந்த் உதவி செய்து காப்பாற்றினார்.

இதை  சிவாஜி வாரிசுகள் காலத்துக்கும் காப்பாற்றுவார்களா? காலியாக்கிவிடுவார்களா..? என்ற சந்தேகம் உள்ளபடியே  அனைவருக்கும் இருந்தது. அந்தப்படியே தற்போது நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. அவ்வப்போது சிலர் உதவினாலும் கூட மீண்டு வர முடியாத நிலையிலேயே அவரது வாரிசுகள் உள்ளனர்!

வாரிசுகளால் காப்பாற்ற முடியாத சிவாஜி இல்லம் யாராவது ஒரு வட நாட்டு மார்வாடி கைகளுக்கோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ  போனால், அந்த வீடு இடிக்கப்பட்டு பெரும் ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஆகலாம். அல்லது பல அடுக்கு மாடிகள் கொண்ட குடிய்ருப்பாகலாம்.  தமிழ் சினிமாவின் தனிப் பெரும் அடையாளமாக வாழ்ந்த  சிவாஜி கணேசன் வாழ்ந்த  அழகிய , கம்பீரமான இல்லம்  சிவாஜியின் நினைவு இல்லமாக வேண்டும். இதற்கு  தமிழக அரசே அவரது  குடும்பத்திடம் நல்ல விலை கொடுத்து வாங்கி, சிவாஜியின் நினைவு இல்லமாக இதை பராமரிக்க வேண்டும்.

481960384_29517144971209681_164020294271

சிவாஜிக்கு எதற்காக நினைவு இல்லம் அமைக்க வேண்டும்;

உலக அளவிலான சினிமா கலைஞர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர்.

ஒப்பாரும், மிக்காருமில்லா கலை உலக பிதாமகன்!

தமிழ் மொழி உச்சரிப்பில் தலை சிறந்து விளங்கியவர். தமிழ் உச்சரிப்பை பயில அவர் படங்களே வருங்காலத்தில் பாடமாகலாம்.

உன்னத தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பகத்சிங், வாஞ்சி நாதன், திருப்பூர் குமரன் ஆகியோர் வேடங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே நாட்டுப் பற்றை விதைத்தார்.  அவருமே சிறந்த தேச பக்தராக திகழ்ந்தார்! 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்கு அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நிதி திரட்டிய போது, தனது மனைவி கமலாவின் நகைகள், தன்னுடைய நகை என 500 பவுன் நகையை தந்தார்.  பல்வேறு இயற்கை சீற்றங்கள் மக்களை பாதித்த நேரங்களில் நிதி உதவியாக பெரும்,பெரும் தொகைகளை வழங்கியவர்.  தான் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்க கல்விக் கூடங்கள் உருவாகவும், அரசு மருத்துவமனைகள் உருவாகவும்  அள்ளித் தந்துள்ளார்!

ages_1595298885351.jpg

புராண, இதிகாச கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்தவர். அப்பராக, சுந்தர மூர்த்தி நாயனாராக, திருநாவுக்கரசராக, சேக்கிழாராக, பெரியாழ்வாராக, திருமங்கை ஆழ்வாராக, வீரபாகுவாக தன் அற்புத நாடிப்பாற்றல் வழியாக அறம் சார்ந்த வாழ்க்கை விழுமியங்களை உணர்த்தியவர்.

சிவாஜியின் பெரும்பாலான படங்கள் குடும்ப பாசத்தை, சகோதர நேசத்தை, பெரியோர்களை மதிக்கும் பண்பை மக்களிடையே தோற்றுவித்தன!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாதனைகளை விஞ்ச இனி இன்னொருவர் திரை உலகில் உருவாகும் வாய்ப்பே இல்லை. அவர் திரை உலகின் பல்கலைக் கழகமாவார்!

வீர மன்னர்களை நினைவூட்டும் வீர பாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், வள்ளலுக்கு இலக்கணம் சொன்ன கர்ணன், சகோதர பாசத்திற்கு பரதன் என அவர் உயிர்பித்து உலவிய வேடங்கள் காலத்திற்கும் கலை உலக கரூவூலங்களாகத் திகழத்தக்கவையாகும்.

PORTRAIT_KARrrnan-P.jpg

ஆகவே, தமிழக அரசு தாமதிக்காமல் சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லத்தை அவரது நினைவில்லமாக்க வேண்டும்.

இங்கே,

# சிவாஜி நடித்த அனைத்து திரைப்படங்களின் புகைப்படங்கள்.

# அந்த திரைப்படங்கள் குறித்த அரிய தகவல்கள்!

# அவருக்கும், அவரது சம காலத்து இந்திய அளவிலான கலைஞர்களுக்குமான நட்பை உணர்த்தும் புகைப்படங்கள்.

# அவருக்கும் பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, இந்திரா காந்தி, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ..போன்ற அரசியல் தலைவர்களுக்குமான நட்பை உணர்த்தும் வகையிலான நல்ல புகைப்படங்கள்

ஆகியவற்றை திரட்டி நிரந்தர புகைப்பட கண்காட்சியை வைக்க வேண்டும்.

K-359.jpg

இது சினிமாவில் இருப்பவர்களுக்கும், சினிமாவிற்குள் நுழைய விரும்புவர்களுக்கும் , சிவாஜியின் ரசிகர்களுக்கும் ஒரு ஆதர்ஷ இடமாகத் திகழ வேண்டும்.

இங்கு சினிமா துறையினர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பிரிவுயூ ஷோக்களை திரையிடும் அரங்காகவும் இந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம். மற்றொரு பகுதியை கலை மற்றும் நடிப்பு பயிற்சி பட்டறை நடத்தும் இடமாக்கலாம். இவை தமிழக அரசுக்கு இந்த இடத்தை பராமரிக்கும் செலவுகளுக்கு உதவியாக இருக்கும்.

சிவாஜியின் நெருங்கிய நண்பர் கலைஞர் அவருக்கு சிலை வைத்துக் கொண்டாடினார். தற்போது ஸ்டாலின் அதைவிட ஒருபடி மேலே சென்று  பறிபோகவுள்ள சிவாஜியின் அன்னை இல்லத்தை அவரது நிரந்தர நினைவு இல்லமாக்கினால், அது தமிழக சினிமா கலைஞர்களாலும், தமிழக மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படும் கலைக் கோவிலாகவே திகழும்.

kalaignar-sivaji.jpg

கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜியை  பெரிதும் நேசிக்கும் தமிழ் மக்களின் இந்த விருப்பத்தை  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமல்ல, சினிமா துறையில் இருந்து வந்த துணை முதல்வர் உதயநிதி அவர்களுக்கும் கவனப்படுத்துகிறோம்.!

தமிழக அரசே, இதற்கு முழுப் பணத்தையும் செலவழிக்காமல் கலை உலகத்தினரிடமும், பொது மக்களிடமும் கூட பங்களிப்பை பெறலாம். தாராளமாக அள்ளித் தருவார்கள்! சிவாஜியின் பெயரால் செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்ற பெயர் பெற்ற சாலையில் சிவாஜி இருந்த வீடே தடையமில்லாமல் போய்விடலகாது. அது தமிழக அரசாலும், தமிழ் திரை உலகின் கூட்டு முயற்சியாலும் அவரது நினைவு இல்லமாக்கப்பட வேண்டும்.

வாழ்க, கலைத் தாயின் தவப் புதல்வன் சிவாஜி கணேசனின் புகழ்!

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/20935/sivaji-house-must-memorial/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.