Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும்

March 5, 2025

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்  கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு  கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான  விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின்  அரசியலையே பேசினார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம்  சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம்  பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவின்  (ஜே.வி.பி.) அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் பட்ஜெட்டை சமர்ப்பித்திருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும்  கூறினார்கள். ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தி கைவிட்டு விட்டது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி.யின் பொருளாதாரக் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விரும்புகிறார்களா அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை  அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றுவதை  வரவேற்கிறார்களா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதற்காக   தர்க்கரீதியாக பொருத்தமில்லாத வகையில் பாராளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடுவதை  காணக்கூடியதாக இருக்கிறது.

அதேவேளை, ஜனாதிபதி திசாநாயக்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தனது அரசாங்கத்துக்கு தொடர்ந்து கிடைத்து வருவது குறித்து பெருமைப்படுகிறார் என்றே தோன்றுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கப்போவதில்லை  என்ற எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை  தாங்கள் பொய்யாக்கிவிட்டதாக அவர் திருப்திப்படுகிறார் என்பதை அவரின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. ஜே.வி.பி.யின் கோட்பாடுகளை தாங்கள் கைவிடவில்லை என்று  அழுத்தம் திருத்தமாக இப்போது  ஜனாதிபதி கூறுவதில்லை. சிலவேளை  அவர் அவ்வாறு கூறியிருந்தால், காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகளில் இன்னமும் கூட அவர் நம்பிக்கை கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியினர் மறுதலையாக  குற்றஞ்சாட்டவும் தவறமாட்டார்கள்.

தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு கூறியதைப் போன்று சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீள்பேச்சுவார்த்தைக்கு உள்ளாக்குவது என்பது  சுலபமாகச் சாத்தியமாகக்கூடியது அல்ல என்பதை ஜனாதிபதி திசாநாயக்க தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளையே திசாநாயக்க தொடர்ந்து முன்னெடுக்கிறார் என்று ஐக்கிய தேசிய கட்சி அரசியல்வாதிகள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். 

சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் பிரகாரம் தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை முழுமையான பொருளாதார மீட்சியை அடையமுடியுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தற்போதைய தருணத்தில் அதன் நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் பொருளாதாரம் மேலும் மோசமடையக்கூடிய  ஆபத்து இருக்கிறது என்பதே கசப்பான யதார்த்தமாகும். இதே போக்கில் சென்றால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் பொருளாதாரக் கொள்கைகளை எப்போது நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. இதற்கு அரசாங்க தலைவர்களினால் உகந்த பதிலைக்  கூறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. 

இது இவ்வாறிருக்க, அண்மைய நாட்களாக கடுமையாக தீவிரமடைந்திருக்கும் பாதாள உலக கொலைகள் பட்ஜெட் விவாதத்தை பெருமளவுக்கு கிரகணம் செய்துவிட்டன. மக்களின் கவனம் துப்பாக்கி வன்முறைகள் மீது திரும்பியிருக்கிறது.  விவாதங்களின்போது பட்ஜெட் பற்றி பேசுவதை விடுத்து தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற  கொலைகள் குறித்தே பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும்போது  அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் தடுமாற்றத்தை அம்பலப்படுத்துகின்றன. 

குறைந்தபட்சம் இரு கொலைகளாவது இடம்பெறாமல் ஒரு நாளும் கூட கடந்த செல்வதாக இல்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலக குழுவின் ஒரு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவர் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டுக்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரைச் சுட்டுக்கொலை செய்தவர் ஒரு சட்டத்தரணி போன்று வேடமணிந்து நீதிமன்றத்திற்குள் வந்திருந்தார். 

கொழும்பு புதுக்கடையில் நீதிமன்றத்திற்குள் வைத்து பாதாள உலக பேர்வழிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. 2004 ஜனவரியில்  இதே போன்றே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குள்  தம்மிக்க அமரசிங்க என்ற பாதாள உலக பேர்வழி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரைக்  கொலைசெய்தவர்  சட்டத்துறை மாணவனாக வேடமணிந்து நீதிமன்றத்துக்கு வந்தார். அதே வருடம் நவம்பரில் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய அவரது கொழும்பு வாசஸ்தலத்துக்கு முன்பாக பாதாள உலகத்தவர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  

விரும்பிய விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்வதில் தங்களுக்கு இருக்கும் ஆற்றலை பாதாள உலக கும்பல்கள் பொலிசாருக்கு சவால் விடுக்கும் வகையில்  நிரூபித்த பல சம்பவங்களை கூறமுடியும். ஆனால், அரசாங்கங்களும்  பொலிசாரும் முன்னைய சம்பவங்களில் இருந்து எந்த படிப்பினையையும் பெறவில்லை. சம்பவத்துக்கு பின்னர் சகலரும்  புத்திசாலிகள் போன்று பேசுவது சுலபம். ஒவ்வொரு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னரும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து  பாதாள உலக கும்பல்களை முற்றாக ஒழித்துக் கட்டப்போவதாக அரசாங்கங்கள் சூளுரைத்தன. ஆனால் நாளைடைவில் எல்லாமே மறக்கப்பட்டுவிடும். அரசாங்கம் மீண்டும் உஷாரடைவதற்கு இன்னொரு பாதாள உலக வனமுறைச் சம்பவம் இடம் பெற வேண்டியிருக்கும்.

ஜனாதிபதி  விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2023 பிற்பகுதியில் பாதாள உலகக் கும்பல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழித்துக் கட்டுவதற்கு அன்றைய பொதுப் பாதூகாப்பு அமைச்சர் ரிறான் அலஸும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனும் பெரும் ஆரவாரத்துடன் ‘யுக்திய’ என்ற நடவடிக்கையை தொடங்கினார்கள். கடுமையான அத்துமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு்க்களுக்கு மத்தியில் சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அந்த  நடவடிக்கையின் விளைவாக பாதாள உலக வன்முறைகளும் போதைப்பொருள் கடத்தலும் பெருமளவுக்கு ஒடுக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் பிரகடனம் செய்தார். அதன் இலட்சணத்தை கடந்த பல மாதக்களாக நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் பாதாள உலக கொலைகள் பிரகாசமாக வெளிக்காட்டுகின்றன.

பாதாள உலக கும்பல்களையும் போதைப்பொருள் வியாபாரத்தையும் இரு போயா தினங்களுக்குள் ஒழித்துக் கட்டப்போவதாக சூளுரைத்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்தது  என்பது  எல்லோருக்கும் தெரியும். அண்மைய  சம்பவங்களுக்கு பிறகு  முன்னைய அரசாங்க தலைவர்களைப் போன்றே ஜனாதிபதி திசாநாயக்கவும் அவரது அமைச்சர்களும் பாதாள உலக கும்பல்கள் முற்றாக துடைத்தெறியப்படும் என்று சூளுரைக்கிறார்கள். தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளின் விளைவாக அரசாங்கம் கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

குற்றச்செயல்களின் அதிகரிப்பின்  பின்னணியில் சதித்திட்டம் ஒன்று  இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கூறுகிறார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விசாரணைகளை தடம்புரளச் செய்வதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டைக் குலைக்கவும் முயற்சியொன்று மேற்கொள்ளப்டுவதாக தங்களுக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்  கடந்தவாரம் அவர் ஊடகங்களுக்கு கூறினார். 

பாதாள உலக கும்பல்களுக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் எதிரான தனது போரைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன கூறியது தற்போது நினைவுக்கு வருகிறது. அப்போது குற்றவியல் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த ரவி செனவிரத்ன இப்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் நோக்குடனேயே பாதாள உலக கும்பல்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருப்பதாக கூறும் விசித்திரத்தை காண்கிறோம்.

தற்போதைய வன்முறைகள் வெறுமனே பாதாள உலக  குழுக்களுக்கு இடையிலான மோதல்களின் விளைவானவையா அல்லது அவற்றின் பின்னால் மறைகரங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் கூறியிருக்கிறார்.

தற்போதைய துப்பாக்கி வன்முறைகளின் பின்னணியில், அரசாங்க தலைவர்கள் தேசிய பாதுகாப்பு என்பதற்கு வெவ்வேறு வியாக்கியானங்களை அளிப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் கண்டியில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி பாதாள உலக குழுக்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும், அண்மைய சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது மக்களின் பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலை தோற்றுவிக்வில்லை என்று கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தேன்றியிருப்பதாக கருதுவதற்கு மோதுமானளவு பாரதூரத்தன்மை கொண்டவையாக தற்போதைய வனமுறைகளை ஜனாதிபதி நோக்கவில்லையா? 

தேசிய பாதுகாப்பு என்பது தீவிரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை  கட்டுப்படுத்துவதும் வெளியில் இருந்துவரும் அச்சுறுத்தல்களை தடுப்பதுமாக மாத்திரம் அர்த்தப்படாது. நாட்டு மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத அளவுக்கு பயங்கரமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கக்கூடியதாக தீவிரமடைந்திருக்கும் துப்பாக்கி வன்முறைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

பாதாள உலக கும்பல்களுடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களும் வன்முறைகளும் திடீரென்று தோற்றம் பெற்றவை அல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. சடடவிரோத போதைப் பொருள் வியாபாரம், பயங்கரமான ஆயுதங்களின் பெருக்கம்  மற்றும் அரசியல் அனுசரணை ஆகியவற்றின் ஒரு கலவையே இன்றைய இந்த  பயங்கரமான நிலைவரத்துக்கு காரணமாகும். 

கடந்த பல தசாப்தங்களாக, அரசாங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக பாதாள உலக குழுக்களை பயன்படுத்தி வந்திருக்கின்றன. பணபலமும் அடியாள் பலமும் சேர்ந்து அரசியலைக் குற்றச் செயல்மயமாக்கியிருப்பதுடன் குற்றச் செயல்களை அரசியல்மயமாக்கியிருக்கின்றன. இந்த விசச் சுழலில் இருந்து இலங்கையை விடுவிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல. குற்றச்செயலும் அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கி்ன்றன. 

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு தடவை பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில், “மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள்  நாளடைவில் அவற்றை தயாரிப்பதை தொழிலாகக் கொண்டு சொத்துக்களைக் குவித்து இறுதியில் பாராளுமன்றத்திற்குள்ளும் வந்துவிட்டார்கள்” என்று கூறியது நினைவுக்கு வருகிறது. 

அவரின் ஆட்சிக் காலத்திலும் பாதாள உலக கும்பல்களுக்கு அரசியல் அனுசரணை இருந்தது.

ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு பதவிக்கு வந்த சகல ஜனாதிபதிகளின் ஆட்சிகளிலும் பாதாள உலக கும்பல்கள் அரசியல் அனுசரணையுடன் செயற்பட்டன. கொலை, பாலியல் வல்லுறவு, பணம்பறிப்பு போன்ற குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் அனுபவித்த பாதாள உலக பேர்வழிகளுக்கு ஜனாதிபதிகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து சமாதான நீதிவான் பட்டமும் கொடுத்த வரலாறும் இருக்கிறது. 

இனநெருக்கடியின் விளைவாக மூண்ட மூன்று தசாப்தகால உள்நாட்டுப்போரும் தென்னிலங்கையில் இரு ஆயுதக்கிளர்ச்சிகளும்  சமூகத்தில் ஆயுதங்கள் பரவலாக  புழக்கத்தில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களாகும். வன்முறைகளை தூண்டிய அரசியல் கலாசாரத்தின் விளைவுகளையே இலங்கை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை தோற்றுவிக்கப் போவதாக  கூறிக்கொண்டு பதவிக்கு வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி தற்போதைய நிலைவரத்தை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை  அறிவதற்கு  நாமெல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்ரீலங்காவை ‘கீளீன்’ பண்ணுவது சுலபமான வேலை அல்ல. 

https://arangamnews.com/?p=11861

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.