Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

05 Mar, 2025 | 10:56 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், யாழ். மத்திய கல்லூரி அணியில் இடம்பெறும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஆகிய இருவரே இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடியவர்கள் ஆவர்.

இரண்டு கல்லூரிகளினதும் இந்த வருட பெறுபேறுககளை நோக்கும்போது இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் கொண்டவையாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்த வருடப் போட்டி மிகவும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு அணிகளிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள், அதாவது மூன்றுக்கும் மேற்பட்ட வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெறுவது போட்டித்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என  கருதப்படுகிறது.

சென். ஜோன்ஸ் கல்லூரி இந்த வருடம் விளையாடிய 10 போட்டிகளில் 3 வெற்றிகளை ஈட்டியதுடன் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது.

யாழ். மத்திய கல்லூரி விளையாடிய 9 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்றதுடன் 2இல் தோல்வி அடைந்துள்ளது.

கடந்த வருடம் வரை நடைபெற்ற 117 வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி 39 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. 41 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளதுடன் 7 போட்டிகள் தொடர்பான விபரங்கள் இல்லை. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

கடந்த 4 அத்தியாயங்களில் இரண்டு கல்லூரிகளும் மாறிமாறி வெற்றிபெற்றுவந்துள்ளதால் இந்த வருடமும் வடக்கின் சமரில் முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென். ஜொன்ஸ் கல்லூரி கடந்த வருடம் நேசகுமார் எபநேசர் ஜெய்சால் தலைமையில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

யாழ். மத்திய கல்லூரி 2023இல் ஆனந்தன் கஜன் தலைமையில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

சென். ஜோன்ஸ் அணிக்கு இம்முறை 6ஆம் வருட வர்ண வீரர் ஜெயச்சந்திரன் அஷ்நாத் தலைவராகவம் 4ஆம் வருட வர்ண வீரர் முர்பின் ரெண்டியோ உதவித் தலைவராகவும் விளையாடுகின்றனர்.

அவர்களைவிட 3ஆம் வருட வர்ண வீரர்களான அபிஜோய்ஷாந்த், குகதாஸ் மாதுளன் ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர்.

யாழ். மத்திய கல்லூரிக்கு இம் முறை 5ஆம் வருட வர்ண வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் தலைவராகவும் 5ஆம் வருட வீரர் சதாகரன் சிமில்டன், 3ஆம் வருட வர்ண வீரர் தகுதாஸ் அபிலாஷ் ஆகியோர் இணை உதவித் தலைவர்களாகவும் விளையாடுகின்றனர்.

அவர்களைவிட விக்னேஸ்வரன் பாருதி, முரளி திசோன், கணேசலிங்கம் மதுசுதன் ஆகியோர் 3ஆம் வருட  வீரர்களாவர்.

வடக்கின் சமரில் தனி ஒருவருக்கான அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் சென். ஜோன்ஸ் வீரர் எஸ். சுரேன்குமார் ஆவார். இவர் 1990இல் நடைபெற்ற வடக்கின் சமரில் 145 ஓட்டங்களைக் குவித்தார். 

அரவது மகள் அமுருதா சுரேன்குமார், 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.

ஓர் இன்னிங்ஸில் 26 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்கள் என்ற அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை 1951இல் பதிவு செய்தவர் யாழ். மத்திய கல்லூரியின் வி. சண்முகம் ஆவார்.

jaffna_st._john_s_college_cricket_team_2

சென். ஜோன்ஸ் அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: ஏ. சஞ்சயன் (பயிற்றுநர்), எஸ். திலீபன் (பொறுப்பாசிரியர்), உதயணன் அபிஜோய்ஷாந்த், ஜெயச்சந்திரன் அஷ்நாத் (தலைவர்), வி.எஸ்.பி. துசீதரன் (அதிபர்), முர்பின் ரெண்டியோ (உதவித் தலைவர்), குகதாஸ் மாதுளன், சி. ஏ. அரவிந்தன் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: சிவகுமார் ஜோன் நதேனியா, இளங்கோ வெண்டட் மரியோ, சற்குணராஜா வினுக்ஷன், ரேமண்ட் அனுஷாந்த், சௌந்தரராஜன் ஆதர்ஷ், விஜயராஜா சஞ்சய், யோகசீலன் சாருஜன், கிருபாகரன் சஞ்சுதன், தினேஷ் லருன், பின்வரிசை: நாகேஸ்வரன் கிரிஷான், கஜந்தன் மிதுன், சிவசங்கர் கிரிஷான்,  ஜோன் ஸ்டபர்ட் ஆர்னல்ட், ராஜ்குமார் நிதுர்சிஜன்.

jaffna_central_college_cricket_team_2025

யாழ். மத்திய கல்லூரி அணியினர்: அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: வி. பாருதி, கே. பாலகுமார் (விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்), ரஞ்சித் குமார் நியூட்டன் (தலைவர்), எஸ். இந்திரகுமார் (அதிபர்), தகுதாஸ் அபிலாஷ் (இணை உதவித் தலைவர்), எவ். குலேந்திரன் ஷெல்டன் (பயிற்றுநர்), சதாகரன் சிமில்டன் (இணை உதவித் தலைவர்), எஸ். மணிமாறன் (பொறுப்பாசிரியர்), மத்திய வரிசை: செல்வராசா திசோன், மதீஸ்வரன் கார்த்திகன், சயந்தன் நியந்தன், நாகராசா சஜித், கணேசலிங்கம் மதுசுதன், தவராசா வேனுஜன், ரஞ்சித் குமார் அக்ஷயன், முரளி திசோன், ஏ. அபிஷேக், பி. நவிந்தன், ஏ. ஷாராளன், அன்டோநேசன் தனுஷன், பின்வரிசை: உதயராசா வோல்டன், ஜெயசீலன் ஜெனோஷன், வெலன்டைன் ஹரிஷ், ஸ்ரீதரன் சாருஜன்.

https://www.virakesari.lk/article/208394

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

118ஆவது வடக்கின் சமர் : யாழ். மத்திய அணி 131, சென். ஜோன்ஸ் 104 - 3 விக். அஷ்னாத் 5 விக்கெட் குவியல்

Published By: Vishnu

06 Mar, 2025 | 08:54 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (06) ஆரம்பமான சென். ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய  அணிக்கும்  இடையிலான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் மத்திய அணியை 131 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய  சென். ஜோன்ஸ்  முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலமான நிலையில் இருந்தது.

LS9A6570.jpg

(படம் உதவி : முருகையா சரவணன்)

சென். ஜோன்ஸ் வீரர் அஷ்னாத் சகலதுறைகளிலும் பிரகாசித்து அணியை நல்ல நிலையில் இட்டுள்ளார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ். மத்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் அன்ரன்ரேஷான் அபிஷேக் அதிகபட்சமாக 27 ஓட்டங்களைப் பெற்றார். அவரைவிட அணித் தலைவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரருமான ரஞ்சித்குமார் நியூட்டன், சதாகரன் சிமில்டன் ஆகிய இருவரும் தலா 24 ஓட்டங்களைப் பெற்றனர்.

ranjithkumar_newton...jpg

சென். ஜோன்ஸ்  பந்துவீச்சில் 6ஆம் வருட வர்ண வீரர் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18.2 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முர்வின் ரெண்டியோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை வீரர் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் சென். ஜோன்ஸ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பிரகாரம் யாழ். மத்திய அணியை விட 27 ஓட்டங்களால் சென். ஜோன்ஸ் பின்னிலையில் இருக்கிறது.

சென். ஜோன்ஸ் அணியின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது அதன் முதலாவது விக்கெட் வீழ்த்தப்பட்டதுடன் மற்றைய ஆரம்ப வீரர் சற்குணராஜா வினுக்ஷன் 2 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக ஓய்வுபெற்றார்.

இந் நிலையில் ராமன் அனுஷாந்த், முர்பின் ரெண்டியோ ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

முர்பின் ரெண்டியோ 20 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் நுழைந்த வினுக்ஷன் சொற்ப நேரத்தில் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

002.png

ராமன் அனுஷாந்த் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 49 ஓட்டங்களுடனும் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 29 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். 

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4 ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/208481

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

118ஆவது வடக்கின் சமர்: தடுமாற்றத்துக்கு மத்தியில் யாழ். மத்திய அணி 85 ஓட்டங்களால் முன்னிலை

Published By: Vishnu

07 Mar, 2025 | 07:45 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 118ஆவது வடக்கின் சமரில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் யாழ். மத்திய கல்லூரி அணி தடுமாறுகிறது.

newton_ranjith_kumar_jf_central.jpg

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 50 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த யாழ். மத்திய கல்லூரி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க 85 ஓட்டங்களால் யாழ். மத்திய கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (07) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். ஜோன்ஸ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.

ராமன் அனுஷாந்த் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ரஞ்சித்குமார் நியூட்டன் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். மத்திய அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 131 (அன்டன்ரேஷான் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 38 - 5 விக், முர்ஃபில் ரெண்டியோ 25 - 2 விக்., குகதாஸ் மாதுளன் 27 - 2 விக்.)

சென். ஜோன்ஸ் அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ராமன் அனுஷாந்த் 86, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29, கிருபாகரன் சஞ்சுதுன் 22, முர்ஃபின் ரெண்டியோ 20, ரஞ்சித்குமார் நியூட்டன் 62 - 5 விக்., முரளி திசோன் 47 - 2 விக்.)

யாழ். மத்திய அணி: 2ஆவது இன் - 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 135 - 8 விக். (சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28, கணேசலிங்கம் மதுசுதன் 17, முரளி திசோன் 16, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 54 - 3 விக்., குகதாஸ் மாதுளன் 17 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/208584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மத்திய அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி வடக்கின் சமரில் 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது சென் ஜோன்ஸ்

08 Mar, 2025 | 04:15 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (08) நிறைவுக்கு வந்த 118ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 118 வடக்கின் சமர்களில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

இதற்கு அமைய வடக்கின் சமரில் 118 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் சென். ஜோன்ஸ் கல்லூரி 40 - 29 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதன் மூலம் வடக்கின் சமரில் கடந்த 5 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக முடிவு கிட்டியுள்ளதுடன் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

சென் ஜோன்ஸ் அணியின் வெற்றியில் அணித் தலைவர் ஜெயச்சந்திரன் அஷ்நாத்தின் சகலதுறை ஆட்டம், ரேமன் அனுஷாந்த் பெற்ற பொறுமையும் திறமையும் கலந்த அரைச் சதம் என்பன பிரதான பங்காற்றின.

இந்த வருடப் போட்டியில் 93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு போட்டியின் மூன்நாம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி பகல் போசன இடைவேளைக்குப் பின்னர் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

உதயணன் அபிஜோய்ஷாந்த் 33 ஓட்டங்களையும் ஜெயச்சந்திரன் அஷ்நாத் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக மூன்றாம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மேலதிகமாக 7 ஓட்டங்களைப் பெற்று கடைசி 2 விக்கெட்களை இழந்தது. 

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்: ரேமன் அனுஷாந்த் (சென் ஜோன்ஸ்)

சிறந்த பந்துவீச்சாளர்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: அன்டன் நிரோஷன் அபிஷேக் ( யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த சகலதுறை வீரர்: ரஞ்சித்குமார் நியூட்டன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த விக்கெட் காப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென். ஜொன்ஸ்)

ஆட்டநாயகன்: ஜெயச்சந்திரன் அஷ்நாத் (சென். ஜோன்ஸ்)

கடந்த வியாழக்கிழமை (06) ஆரம்பமாகி இன்று சனிக்கிழமை நிறைவடைந்த இப் போட்டியின் எண்ணிக்கை சுருக்கம் வருமாறு:-

யாழ். மத்திய அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 131 (அன்டன் நிரேஷான் அபிஷேக் 27, ரஞ்சித்குமார் நியூட்டன் 24, சதாகரன் சிமில்டன் 24, மதீஸ்வரன் கார்த்திகன் 15,ஜெயச்சந்திரன் அஷ்நாத் 38 - 5 விக், முர்ஃபின் ரெண்டியோ 25 - 2 விக்., குகதாஸ் மாதுளன் 27 - 2 விக்., நாகேஷ்வரன் கிரிஷான் 6 - 1 விக்.)

சென். ஜோன்ஸ் அணி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 181 (ரேமன் அனுஷாந்த் 86, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29, கிருபாகரன் சஞ்சுதுன் 22, முர்ஃபின் ரெண்டியோ 20, ஜோன் ஆர்னல்ட் 11, ரஞ்சித்குமார் நியூட்டன் 62 - 5 விக்., முரளி திசோன் 47 - 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 15 - 1 விக்.)

யாழ். மத்திய அணி: 2ஆவது இன் -  சகலரும்   ஆட்டம் இழந்து 142 (சுதாகரன் சிமில்டன் 34, தகுதாஸ் அபிலாஷ் 28, கணேசலிங்கம் மதுசுதன் 17, முரளி திசோன் 16, விக்ணேஸ்வரன் பாருதி 13 ஆ.இ., ஜெயச்சந்திரன் அஷ்நாத் 54 - 3 விக்., குகதாஸ் மாதுளன் 17 - 2 விக்., உதயணன் அபிஜோய்ஷாந்த் 5 - 1 விக்,, முர்ஃபின் ரெண்டியோ 34 - 1 விக்.)

சென் ஜோன்ஸ் அணி: (வெற்றி இலக்கு 93 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 93 - 5 விக்;. (உதயணன் அபிஜோய்ஷாந்த் 33, ஜெயச்சந்திரன் அஷ்நாத் 29 ஆ.இ., முர்ஃபின் ரெண்டியோ 11, ஜோன் நெதேனியா 11, முரளி திசோன் 29 - 2 விக்., ரஞ்சித்குமார் நியூட்டன் 37 - 2 விக்., தகுதாஸ் அபிலாஷ் 11 - 1 விக்.)

st_john_s_winner.png

st_john.JPG

https://www.virakesari.lk/article/208643

  • கருத்துக்கள உறவுகள்

download-4.jpg?resize=750%2C375&ssl=1

வடக்கின் பெரும் சமரில் வெற்றி வாகை சூடிய பரி யோவான் கல்லூரி.

வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து நடைபெற்ற  இரண்டாவது இன்னிங்ஸில்  யாழ். மத்திய கல்லூரி 142 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி,5 விக்கெட்டுக்களை மாத்திரம்  இழந்து  வெற்றி  இலக்கை அடைந்தது.

https://athavannews.com/2025/1424491

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.