Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எச்.ஹுஸ்னா

நாட்டில் 2024 ஆம் ஆண்டு டெங்கு நோயினால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன்,  24 உயிரிழப்புகளும் பதிவான நிலையில் இந்த ஆண்டின் 3 மாத  நிறைவில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் டெங்கு நோயினால் மக்களும் டெங்கு நோயாளர்களினால் வைத்தியசாலைகளும் திண்டாடிவரும் நிலையில், டெங்குவின் குடும்பத்தை சேர்ந்த சிக்குன் குனியாவும் தற்போது ஜோடி சேர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் நுளம்புகளால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியா (Chikungunya) வேகமாகப் பரவி வருவதுடன்,  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே இலங்கை முழுவதும் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவ ஆலோசகர் டொக்டர் அச்சலா பாலசூரிய எச்சரித்துள்ளார்.

அதேபோன்றே நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் சிக்கன்குனியா நோய் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகளும்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம் மட்டுமே, சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் நுளம்புகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு இது பரவுகிறது. எனவே  சிக்குன்குனியா நோய் ஏற்படுவதற்கு ஏதுவான காரணிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரையில் அதன் பாதிப்புகளிலிருந்து மீண்டெழ முடியாத நிலையில் தவித்துவரும் மக்களை டெங்கு நோய் புரட்டி எடுத்துவருவதுடன், இப்போது டெங்குவுடன் சிக்குன் குனியாவும் கை கோர்த்துள்ளதால் வைத்தியசாலைகள் டெங்கு, சிக்குன் குனியா நோயாளர்களினால் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே டெங்கு நோய் தொடர்பில் பல தடவைகள் விளக்கமளிக்கப்பட்டுள்ளதனால் இம்முறை சிக்குன்குனியாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என பார்ப்போம்.

சிக்குன்குனியா என்றால் என்ன?

சிக்குன்குனியா என்பது ஆபிரிக்க மொழியான ‘மகோண்டீ’யில் (Makonde) இருந்து வந்தது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள், பல்வேறு மூட்டுகளின் வலியால் அவதிப்பட்டு, வளைந்து சுருண்டு படுத்துக்கொள்வார்கள். சிக்குன்குனியா என்றால், அந்த மொழியில் ‘வளைந்துவிடுதல்’ என்று பொருள். இந்தக் காய்ச்சலின் பாதிப்பு 1779-ல் தான் முதன்முதலில் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், இந்தக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கி விவரித்தவர்கள், மரியன் ரொபின்சன் மற்றும் லம்ஸ்டன் ஆகியோர்தான். இவர்கள்தான், 1952இல்  மோஸாம்பிக் மற்றும் தன்ஸானியா நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இக்காய்ச்சல் குறித்து ஆராய்ந்தார்கள். 1955ஆம்  ஆண்டு இக் காய்ச்சல் குறித்து முழுமையாக விளக்கினார்கள்.

இலங்கையில் சிக்குன் குனியா

இலங்கையைப்  பொறுத்தவரை, இவ்வகைக் காய்ச்சலின் பாதிப்பு முதன்முறையாக 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அப்போது இலங்கை மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையுடன் சேர்ந்து பிற தெற்காசிய நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு, மீண்டும் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின்னர்  2005, 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டு வரை இதன் தாக்கம் தொடர்ந்த்து. ஆனால், 2011 ஆம்  ஆண்டில் இருந்து இதன் தாக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது

 எப்படிப் பரவுகிறது?.

இந்த சிக்குன்குனியா காய்ச்சலையும் டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் வகை பெண் நுளம்புகள்தான் பரப்புகின்றன. எங்கெல்லாம் டெங்கு பரவும் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் சிக்குன் குனியாவும் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் இன நுளம்புகள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்து விட்டு இன்னொருவரை கடிக்கும்போது வைரஸ் பரவுகின்றது. இந்தக் காய்ச்சல் சிக்குன்குனியா (CHIK-V) வகை வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இந்த வைரஸில் இரண்டு உள்பிரிவுகள் உள்ளன. ஒன்று, ஆசிய பிரிவிலும், மற்றொன்று ஆபிரிக்கா பிரிவிலும் காணப்படுகிறது. இது ஒரு ஆர்.என்.ஏ. வைரஸ் வகை. டோகோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், ஆரம்பத்தில் தசைகளிலும் மூட்டுகளிலும் பெருகுவதால்தான் மனிதர்களுக்குப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இவை 60 முதல் 70 நானோமீட்டர் அளவு கொண்டவை. கோள வடிவத்தில் காணப்படும். நுளம்பு  கடித்த 3 முதல் 7 நாள்களுக்குள் நோயாளிக்கு சிக்குன்குனியா காய்ச்சல் ஏற்படும்.

பாதிப்புக்கள் என்ன?

காய்ச்சல், மூட்டுவலி இருக்கும். உடல் வலி, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு டெங்கு போல், தோல் சிவந்து போகலாம்.  சிலருக்கு வாந்தி, குமட்டல் ஏற்படலாம். பெரும்பாலும், ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும். ஆனால், மூட்டுவலி, தசைவலி இரண்டும் பல மாதங்கள் வரைகூட நீடிக்கலாம். தாங்க முடியாத உடல்வலி, தசைவலி, மூட்டுவலி மற்றும் வீக்கம்தான் இக் காய்ச்சலின்முக்கிய பாதிப்புக்கள். இவ்வகைக் காய்ச்சலின் பல பாதிப்புக்கள்  டெங்கு காய்ச்சலைப் போலவே இருக்கும். மேலும், ஜிக்கா  வைரஸ் காய்ச்சலும்  இதுபோன்ற பாதிப்புக்களை  ஏற்படுத்தலாம். இதில் விசேஷம் என்னவென்றால், டெங்கு என்றாலும், சிக்குன்குனியா என்றாலும், ஜிக்கா என்றாலும், இந்த மூன்று வைரஸ் வகைகளையும் பரப்புவது ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் தான்.

அறிகுறிகள்

சிக்குன்குனியாவின் அறிகுறிகள் பொதுவாக ஏடீஸ் வகை பெண் நுளம்புகள் கடித்த 4 முதல் 8 நாட்களுக்குப் பிறகு தோன்றும். பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சல்,  102°F (39°C) வரை காய்ச்சல் அடிக்கும், மூட்டு வலி,  தசை வலி,  தலைவலி,  குமட்டல் , களைப்பு,  தோல் அலர்ஜி போன்றன காணப்படும் . இந்த அறிகுறிகள் மிகப் பொதுவாக தெரிந்தாலும் வேறு பல காரணங்களாலும் உண்டாகக்கூடும், சில நாட்களுக்குத் தொடர்ந்து நீடித்தால், ஒரு மருத்துவ நிபுணரிடம் உங்களை பரிசோதனை செய்வது சிறந்ததாக அறிவுறுத்தப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், கண்கள் அதோடு நரம்புகள் மற்றும் இதயம் சார்ந்த சிக்கல்கள் போன்ற பெரும் பாதிப்புகளை அது உண்டாக்கலாம். வயதான நோயாளிகளில், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் இது இறப்புக்குக் கூட வழி வகுக்கலாம்

 எவ்வாறு தவிர்ப்பது?

நம்மால் இயன்றவரை வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிய அளவு கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் வகை நுளம்புகள் நன்னீரில் முட்டை இட்டு குஞ்சு பொரிப்பவை. மேலும் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை அணிவிக்கலாம். நுளம்பு வலை உபயோகித்து உறங்கலாம். நுளம்பு  எதிர்ப்பு களிம்புகளை பூசிக் கொள்ளலாம்.   அதீத காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். வந்திருப்பது சிக்குன் குனியா இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டும். சிக்குன்குனியா நோயில் வலி நிவாரணிகள் – ரத்தக் கசிவு தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மருத்துவப் பரிசோதனை 

நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது என்ன வகைக் காய்ச்சல் என்பதைக் கண்டறிய மருத்துவரை நாட வேண்டும். அவரது பரிசோதனைக்குப் பின் சில ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைச் செய்து சிக்குன்குனியா காய்ச்சலைப் கண்டுபிடிக்கலாம்..பொதுவாக, காய்ச்சலுக்குச் செய்யும் ரத்தப் பரிசோதனைகள்  , சிறுநீர் பரிசோதனைகள், நெஞ்சுப் பகுதி எக்ஸ்ரே ஆகிய அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். மேலும், சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை மூலம் (RT – PCR – Reverse Transcriptase – Polymerase Chain Reaction) இந்தக் காய்ச்சலைப் பிற வகை வைரஸ் காய்ச்சலில் இருந்து எளிதாக அடையாளம் காணமுடியும்..சிக்குன்குனியா பிசிஆர் பரிசோதனை,  காய்ச்சல் ஏற்பட்ட 6 நாள்களுக்குள் செய்வது நல்லது. ஆறு நாள்களுக்குப் பிறகும் காய்ச்சல் இருந்தால், மேக்-எலிசா (MAC-ELISA) பரிசோதனை செய்யவேண்டி இருக்கும். இதன்மூலம், இவ்வகை வைரஸ் வகைக்கு எதிராக உருவான எதிர்ப்பாற்றல் புரதங்களை  அளவிட முடியும்.

சிகிச்சைகள்

சிக்குன்குனியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், இந்த வைரஸை அழிப்பதற்கும் இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இவ்வகைக் காய்ச்சலுக்கும் பொதுவான சிகிச்சைகள், தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சைகள் என்ற அடிப்படையிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வகை சிகிச்சையில், நோயாளிக்கு முதலில் ஓய்வு எடுக்க வலியுறுத்தப்படுகிறது. காய்ச்சல் அதிகமாக இருந்தால், புற நோயாளியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி, பழரசம், இளநீர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இது, அவர்கள் சோர்வைப் போக்கும். வாய்வழி உணவு உட்கொள்ள முடியாமல் போனால், மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்குத் தேவையான திரவ மருந்துகள், விட்டமின் ஆகியவற்றை   குழாய்கள் வழியாகச் செலுத்தி சிகிச்சை செய்ய வேண்டும்.

தொந்தரவுகளைக் குறைப்பதற்கான சிகிச்சை. நோயாளியின் காய்ச்சல், உடல் வலியைக் குறைப்பதற்காக பரசிட்டமோல் மருந்து உட்கொள்ள கொடுக்கலாம். இந்த மருந்தை உட்கொள்ள முடியாத நிலையில், காய்ச்சலை குறைப்பதற்கான திரவ மருந்தை குழாய்  வழியாகச் செலுத்த வேண்டும்.

இதேபோன்றே, நோயாளிக்கு குமட்டல், வாந்தி ஆகியவற்றைக் குறைப்பதற்கான மருந்துகளையும் தொடர்ந்து கொடுப்பதுடன், நோயாளியின் காய்ச்சல் அளவு, நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசத் துடிப்பு, உள்செல்லும் நீர் மற்றும் வெளியேறும் நீரின் அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த நோயாளிகளுக்கும் அஸ்பிரின் (NSAIDS), பிற வலி குறைப்பான் மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்து அஸ்பிரின் மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், அதுகுறித்து மருந்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சிக்குன்குனியா தொற்றுகளைத் தவிர்க்க உடல் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல் தரும் விஷயம்.

சிக்குன் குனியா தொடர்பில் பொது மருத்துவர் டொக்டர் பரூக் அப்துல்லா கூறுகையில்,

வருடம் தோறும் நுளம்புகளினால் பரவும் காய்ச்சல்களான டெங்கு, சிக்குன் குனியா போன்றவை மழை காலங்களில் கூடும் என்பது நாம் அறிந்ததே. ஆயினும் இம்முறை சிக்குன் குனியா காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்  மரபணு மாற்றங்களுடன் வெளிப்பட்டு வருவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. பொதுவாக காய்ச்சல் மற்றும் தீவிர மூட்டு வலி ஆகியவற்றுடன் மட்டுமே சிக்குன் குனியா வெளிப்படும். ஆனால் இம்முறை  நரம்பியல் பாதிப்புகள் கூடவே பக்கவாதம் ஏற்படுதல் – மூக்கு கறுப்பாக மாறுதல் (இரண்டு வாரங்கள் கழித்து திரும்ப பழைய நிலைக்கு திரும்பி விடுகிறது) – கால் பாத எரிச்சல் – நுரையீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளுதல் – மூன்றில் ஒருவருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படுவது போன்ற விசித்திர புதிய அறிகுறிகளுடன் வெளிப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்கின்றார்.

எனவே டெங்கு. சிக்குன் குனியாவிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் நுளம்புகள் கடிக்காமல் தடுப்பது, நுளம்புகளை  ஒழிப்பது , சுற்றுப்புறத்தைச் சுற்றி நீர் தேங்காமல் தடுப்பது, தூய்மையாக வைத்துக்கொள்வது போன்றவைதான் ஒரே வழி.

https://thinakkural.lk/article/316681

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.