Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜ லுணுவும் ஆனையிறவு உப்பும்

வை.ஜெயமுருகன்
சமூக அபிவிருத்தி ஆய்வாளர்

elephant-300x200.jpg

ஆனையிறவு உப்பளத்தில் புதிதாக பூத்த மறு உற்பத்தியாகும் ‘ரஜ லுணு’ வின் அறிமுகம் பலர் மத்தியில் ஒரு விவாத நிலையை உருவாக்கியுள்ளது. ‘ரஜ லுணு’ வின் பெயர் தான் இங்கு விவாதப்பொருள். ‘ஆனையிறவு உப்பு’ என்பதுதான் பொருத்தமான பெயர் என்றும் பல குரல்கள் வருகின்றன. மிக முக்கியமான உப்பு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பு புதிதாக உருவாகும் போது, இவ்வாறான விவாதங்கள் ஒரு பின்னடைவைத் தரும் எனக் கருதுவோரும்  உண்டு. விவாதங்கள் நல்ல முன்னெடுப்புக்களை கொண்டுவரும் என்று எண்ணுவோரும் உண்டு.

உண்மையில், புதிதாக உருவாகிய உற்பத்தி ‘ரஜ லுணு’ வும் அதற்குரிய பெயராக முன்மொழிந்துள்ள  ‘ஆனையிறவு உப்பு’ என்னும் சொற்கள் வேறுபாடுடையனதான். ஆனால் இவை இரண்டும் சுட்டும் நுகர்வுக்குரிய பொருள் ‘உப்பு’ தான். ஆனால், நுகர்வோர்கள் இதனைப் பார்க்கும் விதம், அதை அடையாளம் கொள்ளும் விதம் முற்றிலும் வேறுபடும். இது ஒரு சந்தைப் பொருளின் வர்த்தகப் பெயர் என்று குறுக்கிவிட முடியாத ஒரு வர்த்தகப் பெயர். இரு பெயர்களுக்கும் இடையில் நீண்ட அகன்ற பள்ளம் உள்ளது. பெயருக்கிடையிலான வலுவான மையம் கொள்ளும் நுண் அரசியல் மறைந்துள்ளது. குறியில் அறிவுத்துறை மூலம் இந்த இரண்டு பெயர்கள் கொள்ளும் வலுவான நுண் அரசியல் மற்றும் அரசியல் பொருண்மிய மையங்களை உடைத்துப் பார்க்கலாம்.

குறி அறிவியலில் (In semiotics), ஓர் “அடையாளத்தின் இடம்” என்பது குறிப்பானுக்கும் (the signifier) குறிக்கப்பட்டதற்கும் (the signified) இடையிலான உறவின் மூலம் புரிந்து கொள்ளப்படலாம். குறிப்பான் என்பது ஒரு சொல் அல்லது படம் போன்ற இயற்பியல் பிரதிநிதித்துவத்தை குறிக்கும். அதேநேரத்தில், குறிக்கப்பட்டது என்பது குறிப்பானின் கருத்தையும் அல்லது பொருளையும் குறிப்பிட்டுச் சுட்டும். இந்த இரண்டுக்கும் இடையிலான உறவே குழு அடையாளங்களை உருவாக்கவும் வெளிப்படுத்தவும் விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

‘ஆனையிறவு உப்பு’ என்னும் குறிப்பானுக்கும் அது உருவாக்கும் கருத்து அல்லது பொருளை விளங்கிக்கொண்டால், அண்மையில் வெளிக்கிளம்பிய ‘ரஜ லுணு’ க்கும், ‘ஆனையிறவு உப்பு’ என்னும் இரு பெயர்களுக்கிடையிலான விரிவான தெளிந்த விவாதத்தை முன்வைக்கலாம்.

‘ரஜ லுணு’ என்பது ஓர் அடையாளத்தை நீர்த்து கரைக்கும் நிலை நோக்கிய மேலாதிக்கப் போக்கின் குறிப்பானாக அமைகிறது.  ‘ஆனையிறவு உப்பு’  என்னும் குறிப்பான் தன் சுய அடையாளத்தை பேணவும், தன் வளமான பொருளாதார ஆதாரத்தின் இட அமைவை வலியுறுத்தும் ஒரு முனைப்பாகவும் பார்க்க முடிகிறது. அதனுடாக,  ஒரு வலுவான ஓர் இன இருப்புக்கான ஆதாரத்தை பேணுவதற்குமான, தன் அரசியல் பொருண்மிய அடையாளத்தை விட்டுக்கொடுக்காத, ஒரு முனைப்பின் வலுவான குரல் எனவும் நோக்க முடியும்.

2. பெயர் மாற்றம்: அதன் நுண் அரசியலும் அதனுள்ள ஒருத்தலுக்கான ஒத்திசைவும்

இலன் பப்பே ஆய்வுகளின் பிரகாரம் பெயர் மாற்றம் மீதான நுண் அரசியலும் அதனுள்ள இருத்தலுக்கான ஒத்திசைவுகளும் மிகவும் ஆராயப்பட்டுள்ளன. (The Ethnic Cleansing of Palestine , September 1, 2007,by Ilan Pappe). பட்டிப்பளை ஆறு கல் ஓயா ஆகவும், திருகோணமலை முதலிக்குளம் மொரவெவ எனவும் மணல் ஆறு இன்று வெலிஓயா எனவும் மாற்றம் கொண்ட கள அனுபவங்களின் தளத்தில் நிதானமாக பார்க்கையில் பெயர் மாற்ற நுண் அரசியலின் வகிபாகத்தை நன்கு அசைபோடலாம்.

இந்நிலையில், போரின் பின்னரான கால கட்டத்தில் புதிய பெயர்களின் வருகை என்பது அதுவும் குறிப்பாக பொருண்மிய உற்பத்தியின் அடைமொழியாக வருவதென்பது ஒரு பிரதேசத்தின் பொருண்மிய அடையாளங்களை ஒரு நீர்த்து, கரைத்து, உலர்த்தும் ஒரு தூர நோக்கின் வெளிப்பாடு தானோ என்பதன் பின்னணியில் ‘ரஜ லுணு’ க்கும் ‘ஆனையிறவு உப்பு’  க்கும் இடையிலான ஒரு ஆழமான பார்வை தேவையாக உள்ளது.

பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் செய்வது என்பது சாதாரணம். ஆனால்,  ‘ஆனையிறவு உப்பு’  ‘ரஜ லுணு’ வாக மாறுவது பெயர் மாற்றம் அல்ல; இது, ஒரு சந்தைக்குரிய பொருளின் பெயர் மாற்றம் அல்ல. இதன் பின் ஒரு வலுவான அரசியலும் அரசியல் பொருளாதாரத்துக்கான ஆபத்தும் மறைந்துள்ளது. ஒரு வலுவான அடையாள இருப்பின் அவசியம் என்பது ஒரு சமூக அரசியல் மற்றும் கலாசார விழிப்புநிலைக்கு தள்ளப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது. ஒரு இருப்பிட அடையாள உணர்வின் அவசிய தேவை என்பதை பிந்தைய பின் நவீனத்துவ கருத்தாடல்களில் மிக நுண்ணியமாகக் காணலாம்.

3. இலங்கையின் உப்பு சார் தொழில்துறை வளர்ச்சியில்,  வடக்கு மாகாணத்தின் வளமான உப்புத்தளங்கள்

இலங்கையின் உப்பு சார் தொழில் துறை வளர்ச்சியில், வடக்கு மாகாணத்தின் பங்கு மிக கணிசமானது. வட மாகாணத்தின் வளமான  உப்புத்தளங்கள் அதன் பலம் பொருந்திய வலுவான பொருளாதார மையங்கள். மேலும், அதன்மீது கட்டக்கூடிய  பல பொருளாதார வாய்ப்புகளை கொண்டுள்ளன. உப்பளங்களின் பிரகாசமான எதிர்காலம் என்பது உப்பு சார் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முன்னெடுப்புகளில் தங்கியுள்ளன. கடலும் தரையும் இணைந்து தரும் வளமான உப்பு ஒரு உணவு, மருந்து. இரசாயன தொழில் சார் துறையில் அடிப்படைக்கு ஆதாரம். வட மாகாணத்தின் தற்போதுள்ள  உப்பு நிலங்கள் உகந்த கடல் காற்றைக் கொண்டுள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் சூரிய ஒளியின் மிகுதியானது உப்பை அதிகமாக உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. நிலத்தின் உப்புக்கான புவியியல் திறன் என்பது வட மாகாணத்தின் கொடை என கொள்ளலாம். உப்பு சார் அபிவிருத்திக்கு சூரிய சக்தி மற்றும் காற்றாலைகளில் முதலீடு, மனித வள அபிவிருத்தி மற்றும்  சுற்றுச்சூழல் அக்கறை என்பன இத்துறையின் முழுமையான   ஆற்றலைக் வெளிக்கொணரும். வட மாகாண அபிவிருத்தியின் பிரகாசமான பக்கங்களை இது வெளிக்காட்டும்.

உப்பு உற்பத்தி மட்டுமே கவனம் கொள்ளும் காலம் போய்விட்டது. உப்பின் மூலம் பல பெறுமதிசார் புதுமைகளை வெளிக்கொணர வேண்டும். உப்பு சார்ந்த துறை பல துறைகளுக்கு அடிப்படை. கடல் உப்பு தரக்கூடிய வாய்ப்புகள் முடிவற்றவை. உப்புசார் உற்பத்திகள் ஏற்றுமதிச் சந்தையில் நுழைவதற்கும் உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதற்கும் பல வாசல்களை திறக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. மருந்து தயாரிப்பில் உப்பு ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது கண் மற்றும் காது சொட்டுகள் மற்றும் உமிழ்நீரை உருவாக்க பயன்படுகிறது. உயர்தர பற்பசை உற்பத்தியும் உயர்தர உப்பைப் பயன்படுத்துகிறது.

உப்பு உற்பத்தியின் மற்றொரு துணைத் தயாரிப்பு மீன் தீவனம், ஆர்டீமியா (உப்பு இறால்), உள்ளூர் சந்தைக்கு தேவைகள் அதிகமாகும். இலங்கையில் வளர்ந்து வரும் ஏற்றுமதி மீன் தொழிலில் ஆர்ட்டெமியா ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாகும். மேலும், மசாலா ஏற்றுமதியாளர்கள் உயர்தர உப்பை ஒரு பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் தயாரிப்புகளுக்கு மதிப்பு சேர்க்கிறது. இலங்கையின் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு பல வாய்ப்புக்கள் உள்ளன. உப்பளங்களின் எதிர்கால வளர்ச்சி பல பிரகாசமான சாத்தியங்களை கொண்டுள்ளது; நாம் பெரிய அளவில் சாதிக்க உதவும்.

4. இலங்கையில் உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்களின் தற்போதைய நிலை.

தற்போது, எல்லா உப்பளங்களும் அரசுக்கு சொந்தமானவை. இலங்கை மக்களுக்கு சொந்தமானவையாக இருந்ததை 1956 ஆம்   ஆண்டு பண்டாரநாயக்க அரசாங்கம் ஒரு தேசியமயமாக்கல் கொள்கையை அமுல்படுத்தி அதன் மூலம் பெரும்பாலான பொது பயன்பாட்டு அமைப்புகள் மற்றும் அத்தியாவசிய தொழில்கள் தேசியமயமாக்கப்பட்டன. அவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் அரச தொழில்துறை கழக சட்டம் இயற்றப்பட்டது. அதன் கீழ் பல பொது நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அவற்றுள் தேசிய உப்பு கூட்டுத்தாபனம் டிசம்பர் 3, 1957 இல் நிறுவப்பட்டது.

கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கிய இக்கூட்டுத்தாபனம் இலங்கையில் உப்புத் தொழிலைக் கைப்பற்றியது. உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்கள் அரசின் வசமாகின. 1977 க்குப் பிறகு தேசியமயமாக்கலில் இருந்து தனியார்மயமாக்கலுக்கு கொள்கை மாற்றம் ஏற்பட்டதால், பெரும்பாலான நிறுவனங்கள் புது வடிவம் பெற்றன. தனியாரிடம் இணைந்த ஒரு வகை மாற்றம் பெற்றன.1990 இல் இணைக்கப்பட்ட லங்கா சால்ட் லிமிடெட், தெற்கில் உள்ள ஹம்பாந்தோட்டை, புந்தல மற்றும் பலதுபான ஆகிய மூன்று உப்பளங்களை நிர்வகிக்கிறது.மாந்தை உப்பு லிமிடெட் 2001 ஆகஸ்ட் மாதம் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் செம்மணியில் உள்ள உப்பளங்களை கைப்பற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. 2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் தெற்கில் உப்பு உற்பத்தி தடைப்பட்டது. அதேவேளையில், வடக்கு உப்பளங்களில் உற்பத்தியானது உள்நாட்டுக் குழப்பங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டு செயல் நிலையற்ற நிலை உருவானது.

வடக்கு – கிழக்கு மாகாண உப்பளங்கள் இலங்கையின் வளமான உப்பு உற்பத்திப் பொருளாதார வலயங்களாகும். 1970 களில் நாட்டின் உப்புத் தேவையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண உப்பளங்கள் வழங்கின. இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம்.

கிழக்கு மாகாணத்தில் கும்புறுப்பிட்டி, நிலாவெளி உப்பளங்களும் வடமாகாணத்தில் ஆனையிறவு மற்றும் மன்னார் (மாந்தை) உப்பளங்களும் வளமான, வளரக்கூடிய சாத்தியமான பகுதிகளாகும். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இருப்பினும், உப்பு உற்பத்தியை வளர்ப்பதற்கான உந்துதல் இன்னும் முழுமையாக வளரவில்லை எனலாம். ஆனையிறவு உப்பளமானது நாட்டிலேயே மகத்தான உப்பு மையமாகும். இது உப்பளங்களின் அரசன் எனலாம்.

இலங்கையில் உப்பு கைத்தொழில் தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உப்பு உற்பத்தி எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி கணிசமாக குறைந்தது. தெற்கில் குறிப்பிடத்தக்க இரண்டு உப்பளங்களான ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் உப்பளங்கள் இயங்கி வருகின்றன. இருப்பினும், உள் சவால்களை, அரசியல் தலையீடு காரணமாக இரண்டும் நட்டத்தில் நடை போடுகின்றன.

உப்புத் திணைக்களம் 1966 இல் தேசிய உப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் உள்ள அனைத்து உப்பு மையங்களும் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருந்தன. அந்த ஆண்டு, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கு நிபந்தனையின் கீழ் பொது நிறுவன சீர்திருத்த ஆணையத்தின் (PERC) மேற்பார்வையில் இலங்கை அரசாங்கம் லங்கா உப்பு நிறுவனத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ், மன்னார் உப்பளம் தனியாக எடுக்கப்பட்டு மாந்தை உப்பு லிமிடெட் என மறுசீரமைக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பகுதிகளில்  உள்ள அனைத்து உப்பளங்களையும் தனியார்மயமாக்குவதை PERC மேற்பார்வையிட முடியாததால், இவை 1990 இல் மாந்தை உப்பு லிமிடெட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. மன்னார் நகரில் அமைந்துள்ள மாந்தை உப்பு லிமிடெட், 1991 மற்றும் 92 ஆம் ஆண்டுகளில், போர் காரணமாக ‘கம்பெனி’ உற்பத்தியை நிறுத்த வேண்டியிருந்தது. அக்டோபர் 2001 , அரசாங்கம் அந்த நிறுவனத்தை கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டு வந்தது.

இலங்கையில் உப்பு உற்பத்தியில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள மாந்தை உப்பு லிமிடெட் / நேஷனல் சால்ட் லிமிடெட்டின் தூர நோக்கு, வடக்கில் உப்பு சார்ந்த நிறுவனங்களை உருவாக்குதல், மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாகும். மாந்தை உப்பு லிமிடெட்,  சாதாரண உப்பு, அயோடின் கலந்த, நொறுக்கப்பட்ட மற்றும் தொழில்துறை உப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. முக்கிய உற்பத்திப் பகுதிகள் மன்னார் மற்றும் ஆனையிறவு (கிளிநொச்சி) மாவட்டத்திலும், அதன் நிர்வாக அலுவலகம் கொழும்பிலும் உள்ளது.

இலங்கையில் உப்புத் துறை 1938 இல் தொடங்கப்பட்டது. ஜூன் 2021 இல், இது நேஷனல் சால்ட் லிமிடெட் என மறு பெயரிடப்பட்டது. நாட்டின் மற்றொரு பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நிறுவனத்தின் உப்புடன் ஒப்பிடும்போது, வட மாகாணத்தின் உப்பு தரத்தில் சிறந்ததாக (96% NaCl) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மன்னார் உப்பளத்தில் 6,000 மெட்ரிக் தொன் கச்சா உப்பும், ஆனையிறவு உப்பளத்தில், ஆண்டுக்கு 17,000 மெட்ரிக் தொன் உப்பும் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதில், 64 நிரந்தரப் பணியாளர்கள் உள்ளனர். மேலும் சுமார் 250 பருவகால பணியாளர்கள் நிறுவனப் பணி புரிகின்றனர். அரசு நிறுவனமாக,  2007 ஆம் ஆண்டின் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்புத் தரத்தை உறுதி செய்வதற்காக இலங்கை தரநிலை நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது. மார்ச் 29, 2025 அன்று, தொழில்கள் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஆனையிறவில் ஒரு புதிய மேசை உப்பு உற்பத்தி நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். இது மணிக்கு 5 மெட்ரிக் டன் “ரஜ லுணு” உப்பை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உப்புப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இப்புதிய முயற்சி துவங்கியது. ஆனையிறவு உப்பள உப்பு 29-03-2025  தொடக்கம் ‘ரஜ லுணு’ Raja Salt (Elephantpass) என்ற பெயரில் அரசாங்க உப்பு விற்பனைக்கு வந்துள்ளது. இங்கிருந்துதான்,  ஆனையிறவு உப்பின் பெயருக்கான குரல்கள் வெளிவந்தன.

5. ஆனையிறவு – உப்பு தலைநகரம்

1990 க்கு முன், ஆனையிறவு மற்றும் குருஞ்சத்தீவு உப்பளங்கள் 1000 ஏக்கருக்கு மேலான பரப்பளவான மிகப்பெரிய உப்பளங்களைக் கொண்டவை. ஆண்டுக்கு 85,000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உற்பத்தியானது இலங்கையின் அனைத்து உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்ததுடன், ஏற்றுமதிக்கு போதுமான உபரியை விட்டுச் சென்றது. போரின் போது அழிக்கப்பட்ட இந்த உப்பளங்கள், புனரமைக்கப்பட்டு (2003)   மொத்த கொள்ளளவில் 15%க்கு  உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.

1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் யுத்தம் ஆனையிறவு மற்றும் குருஞ்சதீவில் உள்ள உப்பளங்களை காவுகொண்டன.  உப்பளங்கள் கவனிப்பாரற்று போகின. 2000 அளவில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பகுதியுடன் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (The Economic Consultancy House- TECH) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், 35 ஆண்டுகால உப்புத் தொழிலில் அனுபவம் வாய்ந்த எஸ். வேலாயுதபிள்ளை அவர்களின் உதவியுடன் அழிக்கப்பட்ட உப்புத் தொட்டி அமைப்பை மறுசீரமைப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் முயன்றது. வெற்றிகரமாக புதிய உப்பு உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது. ஆனையிறவில் உப்பு உற்பத்தியை இயந்திரமயமாக்கி மேம்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆராய்ச்சி ஆய்வகத்திற்கான உபகரணங்கள்,  ஆலைக்கான ஜெனரேட்டர்கள் மற்றும் உப்பு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் துணைக்கருவிகள் கொண்ட புதிய டிராக்டர் ஆகியவை இந்தியாவில் இருந்து நிதியுதவியுடன் இறக்குமதி செய்யப்பட்டன. யுனிசெஃப்  ரூ. 10 மில்லியன் வழங்கி உதவியது.

2003 இல் தி எகனாமிக் கன்சல்டன்சி ஹவுஸ் (TECH) ஆனது இரண்டு இடங்களிலும் தொடர்ந்து உப்பு உற்பத்தியை அதிகரித்தது.  குருஞ்சதீவு உப்பளத்தில் மூன்று கூடுதல் உப்புத் தொட்டிகளை நிர்மாணித்து, சுமார் 115 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. இந்தத் தொழிலகத்தில் 300 பேர் நிரந்தரமாக வேலை செய்ய முடியும். தற்காலிக மற்றும் பருவகால பணியாளர்களை சேர்த்தால், உப்பு செயல்பாட்டின் வேலை வாய்ப்பு 1000 ஐ தொடும்.

ஆனையிறவு உப்பளம் ஒரு பொருளாதார குறியீடு. அரசாங்க நிருவாகத்தின் போதும், இல்லாத போதும் இயங்கிய பெருமை ஆனையிறவு உப்பளத்தை சாரும். தரமான உப்பின் விளைநிலம் ஆனையிறவு. இலங்கையில்  குறிப்பாக வடமாகாணத்தின், கிளிநொச்சியின் உப்பின் அடையாளம் மற்றும் உப்புத் தலைநகரம் ஆனையிறவு உப்பளம் எனலாம். ஆனையிறவு உப்பளம் இலங்கையின் பெருமை. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு வர்த்தக அடையாளம். Tokyo  Cement  போல. நெய்தலின் பெருமை ஆனையிறவு. ஆனையிறவு என்னும் இடப்பெயர் ஒரு அடைமொழியாக வருவது என்பது உப்பு உற்பத்தியின் பெருமை. இலங்கையின் உப்பு பொருளாதாரத்துக்கு மகுடம் கொள்ளும் பெயர் ஆனையிறவு உப்பு.

உள்ளூர் உற்பத்தியும் உள்ளூர் பொருளாதாரமும், மண் பொருண்மிய அடையாளங்கள், எப்போதும் நெருக்கமாக இணைந்தவை;  பிரிக்கமுடியாதவை. ஏனெனில்,  உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு கலாசாரப் பாரம்பரிய அடையாளத் தளத்தின் உயிர். இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. உள்ளூர் உற்பத்தி அடையாள உணர்வு என்பது ஒரு  கலாசார பாரம்பரியத்தின் அடையாள தளத்திலிருந்து கட்டமைக்கப்படுகிறது. வளர்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வலுவான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் அதன் உற்பத்திகள் சமூகத்தின் தனித்துவமான தன்மையை வலுப்படுத்துகிறது.

மேலும், பொருளாதார அடையாளம் என்பது அமைவிட அடையாளம் தான். அத்துடன், அவ்விடத்துக்குரிய மக்களின்  அடையாளத்தையும் உள்ளடக்கியது. இந்த இரண்டு அம்சங்களும் பின்னிப் பிணைந்தவை, ஒன்றோடொன்று இணைந்திருப்பவை. ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு இறுக்கமான உருவாக்கம் எனவும் கருதலாம். இதனால், பொருளாதார அடையாளம் பிராந்தியத்திற்கு சொந்தமானது. பிரதேசத்துக்கு சொந்தமானது என்பது ஒரு உணர்வு நிலை. கொண்டாடப்படவேண்டிய ஒரு வாழ்வியல் முறைமை. உள்ளூர் அடையாளமும் தேசிய அடையாளமாக ஒரு புள்ளியில் இணையும் நிலை, ஒரு கூட்டு அடையாள நிலை கொள்கிறது. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளம் என்பது ஒரு கூட்டு நிலையின் நிலை. இந்த நிலையில்தான் ஆனையிறவு உப்புக்கு ‘ஆனையிறவு’ என்னும் அடைமொழியின் அவசியம் பற்றிய கோரிக்கை அணுகப்படவேண்டும். இது ஒரு அரசியல் கோஷம் இல்லை. ஒரு அரசியல் பொருண்மியத்தின் அடையாள கோஷம். விட்டுக்கொடுக்கமுடியாத நிலை.

உள்ளூர் சமூக பொருண்மிய கலாசார அடையாளம் மற்றும் அதன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது என்பது பல நன்மைகளை வழங்குபவை. தொழில்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல், கலாசார ஒருமைப்படுத்தலுக்கு (homogenization) வழிவகுத்துள்ளன. இதன் மூலம் உள்ளூர் மரபுகள் சார் உற்பத்தி மற்றும் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை அங்கீகரிப்பதில் இருந்து இந்த அணுகுமுறை உருவாகிறது. உள்ளூர் அனுபவங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், சமூகங்கள் தங்கள் மீள்தன்மையை வலுப்படுத்த முடியும்.மேலும்,  சந்தைப் பொருண்மியத்தின் வலுவான இருப்பையும் தக்கவைக்க, அதனுடன் இணைய, வழிசமைக்கும்.

உலகில், சமூகங்கள் தங்கள் அடையாளங்களை வடிவமைப்பதில் மிக கவனம் கொள்கின்றன. இதில், தங்கள் கலாசாரத்தின் பங்கைப் புரிந்துகொண்டு அடையாளங்களை வடிவமைத்தார்கள். தற்போது, உள்ளூர் உற்பத்தி அடையாளங்களும் ஒரு வலுவான இன அடையாளங்களுடன் இணைக்கின்றன. இந்த நுண்ணறிவு மிக்க அடையாள பெறுமதியாக்க செயல்முறைமை என்பது ஒரு வணிக அல்லது நிறுவன சூழலில் “மாற்றத்திற்குப் பிந்தைய கட்ட” (The “post-transformative phase”) முறைமைக்கு மிக அருகில் வருவது. “மாற்றத்திற்குப் பிந்தைய கட்டம்” என்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் அல்லது மாற்றத்திற்குப் பிந்தைய காலகட்டத்தைக் குறிக்கிறது. இதன் போது கவனம் அந்த மாற்றங்களைத் தக்க வைத்துக்கொள்வது, புதிய நடைமுறைகளை உட்பொதிப்பது மற்றும் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதில் மாறுகிறது.

இந்தப் போக்கு  உள்ளூர்  தனித்துவத்தை பெறுமதி கொள்ள, செழிக்க மற்றும் வளர்க்க உதவுகிறது. உள்ளூர் அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. வலுவான கூட்டுப் பெருமையை உருவாக்குகிறது. இது சுய அடையாளத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான தனிப்பட்ட சிறப்பை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, பிராந்திய அடையாளம் என்பது ஒரு சமூகம் அதன் சுற்றுப்புறங்களை நோக்கி கொண்டிருக்கும் நேர்மறையான உணர்வுகளை உள்ளடக்கியது.

தங்கள் நிலப்பரப்பின் மீதான ஒவ்வொரு பகிரப்பட்ட அனுபவங்களும் ஒவ்வொரு தனிமனிதர்களுடையவை என்னும் நிலை கொள்கின்றன. கடந்த கால அனுபவங்கள் மற்றும் செயல்கள் மூலம், தங்கள் பிராந்தியம் மீதான கவனம் கொள்ளப்படுகின்றது. இதனால், ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதோடு, ஒரு பெறுமதியான பொருளாதார அடையாளம் ஒன்றுக்கான திரள் நிலையும் உருவாகின்றது. இது தான் உப்பளப் பூக்களின் பொருண்மிய நிலை. ஆனையிறவு உப்பள பிரதேச பொருண்மிய அமைவிட அடையாளமாக புலரும் நிலை.

போரின் காலத்துயர் அனுபவங்கள் பல்பரிமாண நிலை கொண்டவை. அவரவர் அனுபவ நிலை சார்ந்தது. அதேபோல, போர்க்கள அமைவிடம் ஒரு குறிப்பிட்ட கள நிலை அனுபவம். அக்கள நிலை, தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பு என்பது அதன் அமைவிட ‘பொருள் நிலை’ கொண்டது. அவ் அமைவிடத்துக்காக கொடுக்கப்பட்ட விலை என்பது தன்னுள் கொண்ட தந்திரோபாய மதிப்பின் பெறுமதியை தருவது.  ‘ஆனையிறவு’ என்பது காலனியத்துவ காலம் முதல் இன்று வரை ஒரு இடத்தின் பெயர் மட்டும் அல்ல; ஒரு வரலாற்றின் பொதிவிடம்; பொக்கிஷம் மற்றும் அடையாளம்.

போரின் பிந்திய சமூகங்களின் உணர்நிலை எப்போதும் ஒரு வகை பதட்டநிலைக்குரியது; சந்தேகம் கொண்ட திரள் நிலை. அதனால் தான் போருக்கு பிந்திய சமூகங்களின் பொருளாதார திட்டமிடலில் சமூகத்தின் உணர்நிலை பற்றிய ஒரு பூரண அறிவு நோக்குநிலை எப்போதும் தேவையான முன்நிபந்தனையாக உள்ளது. (Post  war /conflict political  economic  and  cultural  sensitivities). போரின் பாதிப்பின் பின்னாலான சமூக – பொருளாதார கட்டமைப்பில்  பாதிக்கப்பட்ட பகுதிகளின் அரசியல் சமூக மற்றும் பொருளாதார கலாசார மற்றும் பிராந்திய அடையாளங்கள் மீதான கவனம் அவசியமானதாக கருதப்பட வேண்டும்.

போரின் மீள் கட்டுமானம் என்பது உள்ளூர் மக்களின் இடம் மற்றும் அவர்களின் பொருளாதார அடையாளங்கள் இரண்டையும் உள்ளடக்கியது. அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தன்மை என்பது அப்பகுதிக்குரிய பிராந்தியத்திற்கு சொந்தமானது. ஒரு இடத்தின் பெயர் அடை மொழியாக வருவதற்கு காரணம் அவ்விடம் ஒரு நீடித்த நினைவக நிலப்பரப்பின் ஒரு பகுதிதான். ஒரு காலத்தின் சாட்சிதான். பகுதியில் வசிப்பவர்களுக்கு தங்கள் நினைவு மண்டலத்தின் பிரிக்கமுடியாத பகுதி. பிராந்திய அடையாளம், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் நிலப்பரப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கூட்டுப் பெருமையின் வலுவான உணர்வை உருவாக்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடனான தனிப்பட்ட தொடர்பை பிரதிபலிக்கும் சுய அடையாளத்தின் ஒரு அம்சமாக கருதவேண்டும்.

பிராந்திய அடையாளம் ஒரு தளம். சதா பகிரப்படும் பிரதிபலிக்கும்  அனுபவ மற்றும் செயல்கள் கொள்ளும் தளம். தனிநபர்கள் சமூக ஒற்றுமையை வளர்த்து, ஒரு பிராந்திய பொருளாதார சமூகத்தை உருவாக்குவதற்கு இத்தளம் அவசியம் தேவை. பொருளாதார அடையாளம் ஓர் இனத்தின் இருப்பின் அடித்தளம். சமூக உள்ளடக்கத்தின் புவியியல் அம்சத்தை இணைக்கும் ஒரு பாலம்.

பிராந்திய பொருளாதார அடையாளம் மற்றும் வரலாற்று உணர்திறன்களைக் கருத்தில் கொள்ளாமல், பிராந்திய பொருளாதார உற்பத்தி உணர் நிலையை கவனம் கொள்ளாது வேண்டுமென்றே மறுபெயரிடப்பட்டால், அது பிராந்திய அடையாளத்தின்  இருத்தலியல் அச்சுறுத்தல் உணர்வுகளைத் தூண்டி, ஒற்றுமையின்மைக்கு வழிவகுக்கும். ஒரு மாறு கால சமாதான காலகட்டத்தில் மேலும் பல சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விளைவிக்கும்.

இலங்கையின் வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன.

புவிசார் குறியீடு என்றால் என்ன?

”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள்” புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது” என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி. (https://www.bbc.com/tamil/articles/c72vjlg4212o) .

‘ஆனையிறவு உப்பு’ என்பது புவிசார் குறியீடு உடையது. ‘ரஜ லுணு’ என்னும் வர்த்தக பெயர் என்பது ‘ஆனையிறவு உப்பு’ என்பதற்கு ஈடாகாது. அமைவிடம் கருதாது; உப்பு உற்பத்தியின் வரலாறு கருதாது ஏதோ ஒரு அவசரத்தில் ‘ரஜ லுணு’ உப்பு எனப் பெயரிட்டது ஒரு வித ஒவ்வாமையாக உள்ளது. ‘ஆனையிறவு உப்பு’ என்பது ஒரு சந்தையில் மிக மதிப்புக்கொண்ட பொருள். ஆகவே ‘ஆனையிறவு உப்பு’ என்று வருவது தான் மிகப்பொருத்தம். காங்கேசன்துறை சிமெண்ட், பரந்தன் கெமிக்கல் என்பது போல ‘ஆனையிறவு உப்பு’ என்பது தான் மிகப்பொருத்தம். இடம் சார் பொருண்மிய உற்பத்தி பெயருக்கு வலுக்கொடுக்க வேண்டும். ‘ஆனையிறவு உப்பு’ என்றால் ஆனையிறவுக்கும் உப்புக்கும் பெருமை. இலங்கைக்கும் பெருமை.

https://thinakkural.lk/article/316956

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.