Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


- ஐ.வி.மகாசேனன்-

HJK.jpg

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் போட்டி கொதிநிலையை நோக்கி நகர்ந்துள்ளது. அரசியல் செய்தியிடல்களில் குட்டித் தேர்தல் என்றவாறு அழைக்கப்படுகின்றது. எனினும் தேர்தல்கள் யாவுமே மக்கள் எண்ணங்களை நாடிபிடித்து பார்க்கும் செயற்பாடாக அமைவதனால், அதன் பெறுமதிகள் உயர்வானதாகவே அமைகின்றது. அதனடிப்படையிலேயே ஆளும் தரப்பாகிய தேசிய மக்கள் சக்தியினர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் என அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் யாவரும் தீவு முழுமையாக சூறாவளி பிரசார செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகப்பகுதியிலும் தேசிய மக்கள் சக்தி தமது வெற்றியை பாதுகாத்துக் கொள்ள அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முழுமையாக வடக்கில் தீவிர பிரசார செயற்பாட்டில் உள்ளார். இதனைவிட இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் என இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக வடக்கு – கிழக்கில் முகாமிட்டு பிரசார செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

மறுமுனையில் தமிழ் அரசியல் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்ய உள்ளூராட்சி சபை தேர்தலில் போராட வேண்டி உள்ளது. எனினும் அதற்குரிய வியூகங்களை களத்தில் காணமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இக்கட்டுரை உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் வியூகத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரசியலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரதான வகிபாகத்தை பெறுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளுக்கு பெரும் நெடிக்கடியை உருவாக்கி இருந்தது. வடக்கில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வாக்கு சிதறலால் பாராளுமன்ற ஆசனங்கள் குறைவடைந்திருந்தது. குறிப்பாக தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தலா ஒரு ஆசனங்களையே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் பெற்றுக் கொண்டனர். எனினும் தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆசனங்களை பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே தமிழரசுக்கட்சி செல்வாக்கு செலுத்தியிருந்தது. இப்பின்னணியில் தமிழ்த் தேசியத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. சர்வதேச களங்களிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் உறுதியான பலத்தைப் பெற்றுள்ளமையை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழ்த்தேசியம் வெறுமனவே தமிழ்க்கட்சிகளிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளமையால், தமிழ்த்தேசிய இருப்பை காட்சிப்படுத்த, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் வெற்றி அவசியமாகின்றது.எனினும் இப்புரிதலை தமிழ் கட்சிகள் கொண்டுள்ளனவா என்பதில் சந்தேகமே காணப்படுகின்றது.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளின் ஆசனங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி, வாக்குச் சிதறல்களே பிரதான காரணம் என்பதை பல அரசியல் அவதானிகளும் சுட்டிக்காட்டியிருந்தனர். வீழ்ச்சியின் பின்னரும்  தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே வினைத்திறனான மாற்றத்தை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்முயற்சிகளில் இனங்காண முடியவில்லை. பொது எதிரியாக தேசிய மக்கள் சக்தியை பிரசாரம் செய்கின்ற போதிலும், தமக்குள் பொதுக்கூட்டையோ அல்லது பொது ஒத்துழைப்பையோ நிறுவ தவறியுள்ளார்கள்.

தமிழரசு கட்சியில் ஆதிக்கம் செலுத்தும் அதன் பதில் செயலாளர், தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாதவராகவும், தமிழரசுக் கட்சியை தொடர்ச்சியாக தமிழ்ப் பரப்பின் பிரதான சக்தியாக வலியுறுத்தும் நிலைமைகளே காணப்படுகின்றது. இக்கருத்தை பின்பற்றியே தமிழரசுக்கட்சியின் பதில் தலைவரும் கூட்டு முயற்சிக்கு விட்டுக்கொடுப்புடன் இணங்க தவறியிருந்தார். ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழரசுக் கட்சியிடம் காணப்படும் பரவலான கட்டமைப்பு மற்றும் வடக்கு – கிழக்கு முகமே ஓரளவு கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் அரசியல் இருப்பை பாதுகாத்தது. எனினும் தமிழரசுக்கட்சி வீட்டுச்சின்னத்தின் ஏகபிரதிநிதித்துவம் பலவீனப்பட்டுள்ளது என்ற எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள தவறுகின்றனர்.

மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை அவதானிக்க கூடியதாகவும் வரவேற்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பாராளுமன்ற செயற்பாட்டு தளத்தில் கூட்டுக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சியின் ‘பெரியவர்’ எண்ணங்களால் அம்முயற்சி பலவீனப்பட்டது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு சிறு கூட்டு முயற்சியை சாத்தியப்படுத்தி உள்ளது. எவ்வாறாயினும் வாக்கு சிதறல்களை கட்டுப்படுத்தக்கூடிய முழுமையான கூட்டணி அல்லது தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீளுருவாக்கம் சாத்தியப்படவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளிடையே பிரதானமாக மும்முனைப் போட்டிகள் காணப்படுகின்றது.

குறிப்பாக வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சியும் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசிய பேரவையாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியினரும் மற்றும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினரும் வடக்கு – கிழக்கு முழுமையாக போட்டியிடுகின்றனர். மேலும், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கணிசமான சபைகளில் மீன் சின்னத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரும் போட்டியாளர்களாக காணப்படுகின்றனர்.

அரசியல் கொள்கை சார்ந்த கூட்டுகள் மற்றும் குறுகிய இலக்குகள் சார்ந்த கூட்டுகள் தொடர்பான அரசியல் அணுகுமுறைகளை தமிழ் அரசியல் கட்சிகள் உள்வாங்க தவறியுள்ளார்கள். இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் பிரதான கொள்கை எதிர் சக்திகளான சோவியத் ஒன்றியம் – அமெரிக்க, பிரிட்டன் நேசநாட்டு கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டிருந்தது. ஹிட்லர் தலைமையிலான நாசிசத்தை எதிர்த்து போரிட இருமுனை கொள்கை நிலைப்பாட்டினர் ஒன்றிணைந்தார்கள். போர் வெற்றியின் பின்னர் தமது கொள்கை சார்ந்து முரண்பட்டு கொண்டார்கள். அவ்வாறே இந்திய தேர்தலை பொறுத்த வரை கூட்டணியாக செயற்படுவதனூடாகவே சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற வெற்றிகளை பெற முடியும். ஆசனங்களை மையப்படுத்தியே கூட்டணிகளும் உருவாக்கப்படுகின்றன. தேர்தல் வெற்றியின் பின்னர் தமது கொள்கைவழி செயற்படும் நிலைமைகள் காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக அகில இந்திய காங்கிரஸ் தலைமையிலான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியில் தி.மு.க, வி.சி.க மற்றும் ம.தி.மு.க போன்ற தமிழக கட்சிகள் காணப்படுகின்றன. ம.தி.மு.க பொதுச்செயலாளர் இக்கூட்டணியினூடாக மாநிலங்களவை ஆசனத்தை பெற்றிருந்தார். பின்னர் மாநிலங்களவையில் ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலையில் காங்கிரஸின் தொடர்பு பற்றி கண்டித்திருந்தார். தற்போது 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை மையப்படுத்தி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டணியும் கொள்கைக்கு வெளியே பொது எதிரியாக திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) ஆட்சி மாற்றத்திற்கானதாகவே பிரசாரம் செய்யப்படுகின்றது.

இப்பின்னணியில் அரசியலில் கூட்டணி உருவாக்கங்கள் ஒருவகையிலான அணுகுமுறையாகவே அமைகின்றது. எனினும் தமிழ் கட்சிகளிடையே காணப்பட்ட பெரியவர் எண்ணங்களும்   அவநம்பிக்கைகளும் அரசியல் அறிவின்மைகளும் கூட்டணிக்கான வாய்ப்புக்களை இல்லாமல் செய்து விட்டது. இது பொது எதிரிக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் அரசியல் களத்தையே உருவாக்கியுள்ளது.

கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ள சூழலிலும், தமிழ் அரசியல் கட்சிகள் தந்திரோபாயமாக பொது எதிரியை கையாளுவதற்கான வாய்ப்புகள் இன்னும் தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளில் காணப்படவே செய்கின்றது.

ஈழத் தமிழரசியலின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ தொடர்பில் உரையாடியிருந்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை கையாள்வது தொடர்பிலும் மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் கருத்தை பரிந்துரைத்திருந்தார். தமிழ் அரசியல் களம் அதனை புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு தசாப்த காலம் தேவைப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலேயே சிவில் அமைப்புகள் மற்றும் கட்சிகள் ஒன்றிணைந்த பொது கட்டமைப்பினூடாக தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியலில் சாத்தியப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அனுபவங்களில், பொது எதிரியை கையாள்வதற்கான ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ பற்றிய கருத்தை சுயநல அரசியலுக்குள் பயணிக்கும் அரசியல் கட்சிகள் எந்த அளவு புரிந்து கொள்வார்கள் என்பது சந்தேகமாகவே காணப்படுகின்றது.

‘போட்டி இல்லா ஒப்பந்த’ அணுகுமுறை என்பதில் மு.திருநாவுக்கரசு அவர்கள், ‘தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கிடையே போட்டியிடுவதை தவிர்த்து, பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படுவதையே’ விபரித்துள்ளார். குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். தமது பலம் பலவீனங்களை சுயபரிசோதனைக்குட்படுத்தி சபைகளை ஒதுக்கிக் கொள்ளலாம். உதாரணமாக வல்வெட்டித்துறை நகரசபைக்கு எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை கூட்டணியினர் பொருத்தமானவர்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியை தவிர்த்து கொள்ளலாம். அவ்வாறே கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை மையப்படுத்தி தமிழரசுக்கட்சி பலமானதாகும். மன்னார் நகர சபையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை மையப்படுத்தி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி போட்டியிட ஏனைய தமிழ்க் கட்சிகள் போட்டியிலிருந்து விலகலாம். நல்லூர் பிரதேச சபையில் முன்னாள் தவிசாளர் தலைமையிலான பத்மநாதன் மயூரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பலமான கட்சியாகும்.

இவ்வாறு வடக்கு – கிழக்கு உள்ளூராட்சி சபைகளை தமிழ்க் கட்சிகள் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறானதொரு விட்டுக்கொடுப்பினூடாக பொது எதிரியை தோற்கடிப்பதை இலக்காக கொண்டு செயற்படக்கூடிய அணுகுமுறை தற்போது வரை தமிழ்க் கட்சிகளிடம் காணப்படுவதை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஏற்படுத்தக்கூடிய தடைகளுக்கு எதிராக இதய சுத்தியுடன் தமிழ் அரசியல் கட்சிகள் செயற்பட விரும்பின், ஆசிரியரின் அணுகுமுறை பொருத்தமானதாகும்.

தமிழ் அரசியல் கட்சிகள் பிரசாரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளில் தேசிய மக்கள் சக்தியை, தமிழ் மக்களுக்கு ஆபத்தான எதிரிகளாக, விளிக்கின்ற போதிலும், தொடர்ச்சியாக தமக்குள் மோதிக் கொள்ளும் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். ஒரு நிமிடம் தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பார்களாயின், இரு நிமிடங்கள் தமிழ் கட்சிகளை விமர்சிக்க நேரம் ஒதுக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது.

இதனடிப்படையில் தமக்குள் சண்டையிடவே தமிழ் அரசியல் கட்சிகள் அதிக நேரத்தை ஒதுக்கீடு செய்கின்றன.  இது பொது எதிரிக்கு சாதகமான பிரசாரமாகவே அமைகின்றது. பொது எதிரியின் பிரசாரத்தையும் இணைத்தே தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விமர்சனங்களுக்கு சமாந்தரமாகவே வீடு எதிர் சைக்கிள் எதிர் சங்கு விமர்சனங்களும் உயர்வாகவே காணப்படுகின்றது. தமிழ் கட்சிகள் போட்டியிடுவதாயினும், குறைந்தபட்சம் தமக்குள் வாய்த்தகராற்றில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி தமிழ் அரசியல் பரப்புக்கு எத்தகைய பாதகமானது என்பதையே தமிழ் மக்களிடம் முன்னிறுத்த வேண்டும். மேலும் தத்தமது செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கலாம். மாறாக தமிழ்க் கட்சிகள் தமக்குள் வசைபாடுவது ஆபத்தானதாகும். தமிழ் மக்களிடையே தமிழ்க் கட்சிகள் தொடர்பில் சலிப்பையே உருவாக்கும்.

எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபை தேர்தல் என்பது தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பொது எதிரியான தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதை இலக்காகக் கொண்டதாக அமைதலே தமிழ் அரசியலுக்கு பொருத்தமானதாகும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இத்தகைய தூய எண்ணம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் தமிழ் மக்களிடமும் சிவில் தரப்பிடமும் சந்தேகங்களே காணப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே கடந்த தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதில் முன்னணியில் செயற்பட்டிருந்த சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் உள்ளுராட்சி சபை தேர்தலில் பெரிய அக்கறையின்றி காணப்படுகின்றார்கள்.

இறுதி வாய்ப்பாக மு.திருநாவுக்கரசு அவர்கள் தமிழ் அரசியல் இருப்பு சார்ந்த பற்றுறுதியில் தன்னார்வமாக ‘போட்டி இல்லா ஒப்பந்தம்’ அணுகுமுறையை பரிந்துரைத்துள்ளார். இதனை இறுகப்பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் இருப்பையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் பாதுகாப்பார்களாயின் பயனுடையதாகும்.

https://thinakkural.lk/article/317169

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.