Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல், கிரிக்கெட், விளையாட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வைபவ் சூர்யவன்ஷி என்ற பெயர் நேற்று முதல் விளையாட்டுச் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து வருகிறது. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, நேற்று (ஏப்ரல் 28) நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தக் காரணமாக இருந்தது சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்.

இந்நிலையில், அவருக்கு கிரிக்கெட் உலகின் பிரபல ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

'அச்சமற்ற அணுகுமுறை'

சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் சூர்யவன்ஷி ஒரு சிக்ஸர் மூலம் சதத்தை எட்டும் காணொளியைப் பகிர்ந்து, "வைபவின் அற்புதமான இன்னிங்ஸிற்கு, அவரது அச்சமற்ற அணுகுமுறை, பேட்டிங் வேகம், பந்தைக் கணிக்கும் திறன், அந்தப் பந்தின் சக்தியைத் தனக்குச் சாதகமாக மாற்றுவது ஆகியவையே காரணம். சிறப்பான ஆட்டம்" எனப் பதிவிட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல், கிரிக்கெட், விளையாட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சச்சின் டெண்டுல்கர்

யுவராஜ் சிங் தனது எக்ஸ் பதிவில், "14 வயதில் இப்படி விளையாடுவதை நம்ப முடியவில்லை. இந்தச் சிறுவன் கண்ணிமைக்காமல், உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொள்கிறான். வைபவ் சூர்யவன்ஷி. இந்தப் பெயரை நினைவில் கொள்ளுங்கள், அச்சமற்ற மனப்பான்மையுடன் விளையாடுகிறான். அடுத்த தலைமுறை பிரகாசிப்பதைக் கண்டு பெருமைப்படுகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், "14 வயதில், பெரும்பாலான பிள்ளைகள் ஐஸ்கிரீம் குறித்துக் கனவு கண்டு சாப்பிடுகிறார்கள். வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் மிக அற்புதமான ஒரு சதத்தை விளாசினார். அவரது வயதுக்கு அப்பாற்பட்ட அமைதி, நிதானம் மற்றும் தைரியம். ஒரு நட்சத்திரத்தின் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இதோ..." என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல், கிரிக்கெட், விளையாட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.

இதைத் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்தியர் என்ற சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அதுவும் நான் செய்தது போலவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சதமடித்தது இன்னும் சிறப்பு," என்று பாராட்டியுள்ளார்.

மேலும், "இந்த அணியில் இணையும் இளைஞர்களிடம் ஏதோ 'மேஜிக்' உள்ளது. நீ இன்னும் அடைய வேண்டிய உயரங்கள் அதிகம், சாம்பியன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி, "வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அற்புதமான திறமை. வெறும் 14 வயதில் சதம் அடிப்பது நம்ப முடியாதது. தொடர்ந்து சாதனைகளைக் குவிக்க வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

'இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன'

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல், கிரிக்கெட், விளையாட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் காணொளியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "உன் ஆட்டம் என்னை நிச்சயமாக 'என்டர்டைன்' (Entertain) செய்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப், வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தளத்திற்குப் பேட்டியளித்த அவர், "இன்னும் அவருக்கு நிறைய சவால்கள் உள்ளன. குறிப்பாக இதேபோன்ற ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் அவர் மீண்டும் வெளிப்படுத்தத் தவறினால் சவால்கள் இருக்கும். எனவே தோல்வியைச் சமாளிப்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

தோல்வியைச் சமாளிப்பதில், நான் பார்த்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் பிரையன் லாரா. நாங்கள் 14 அல்லது 15 வயதிலிருந்தே ஒன்றாக விளையாடினோம். லாரா, எப்போதும் தோல்வி தன்னைப் பாதிக்காதவாறு செயல்படுவார். இன்னும் சிறப்பான ஒன்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருக்கும். இதை அவர் லாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "அவர் எட்டிய இந்த நம்ப முடியாத உயரத்தைத் தக்க வைக்க, மேன்மேலும் முன்னேறுவதை உறுதி செய்ய, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அவரைச் சுற்றி சரியான நபர்களை வைத்துக் கொள்வதும் மிக முக்கியமானது" என்று இயன் பிஷப் அறிவுறுத்தியுள்ளார்.

'பாகிஸ்தானில் இப்படி செய்திருந்தால்..?'

வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல், கிரிக்கெட், விளையாட்டு, ராஜஸ்தான் ராயல்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி, 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகமானார். ஏப்ரல் 19 அன்று லக்னௌ அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே, சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர் அடித்தார். அந்தப் போட்டியில் 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் சூர்யவன்ஷியை விராத் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

"அவர் (வைபவ் சூர்யவன்ஷி) விராட் கோலியை போல 20 ஆண்டுகள் ஐபிஎல் விளையாடுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். கோலி 18 வயதில் ஐபிஎல் விளையாடத் தொடங்கி 18 சீசன்களில் விளையாடியுள்ளார். அவர் அடித்த ஆயிரக்கணக்கான ரன்கள், சதங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். அதுதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பிறகு நீங்கள் ஒரு நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று நினைத்தால், வரும் ஆண்டுகளில் உங்களை நாங்கள் பார்க்க முடியாமல் போகலாம்" என்று சேவாக் தெரிவித்திருந்தார்.

அதேபோல முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலியும், சூரியவன்ஷியின் துணிச்சலான அணுகுமுறையைப் பாராட்டி சில நாட்களுக்கு முன்பாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

"வைபவ் சூரியவன்ஷி என்ற14 வயது சிறுவன், முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த விதம் ஒரு மிகப்பெரிய விஷயம். பாகிஸ்தானில், ஒரு வீரர் முதல் பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்று அவுட்டாகி வெளியேறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்? மக்கள் என்ன சொல்லியிருப்பார்கள்?

பாகிஸ்தான் மக்கள் அவரை அணியிலிருந்து தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் சூரியவன்ஷியை போலத்தான் நம்பிக்கை விதைக்கப்படுகிறது, அது பின்னர் பலனளிக்கிறது" என்று கூறியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cvg955y94zxo

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொல்லை நோக்கி வ‌ரும் ப‌ந்தை த‌டுக்க‌னும்

இந்த‌ சிறுவ‌ன் கூட‌ அவுட் ஆகின‌து பொல்லு மூலம்...................அத்தோடு நிதான‌மும் தேவை

ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு இந்த‌ சிறுவ‌னுக்கு.................................

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன? - இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அனுபம் ப்ரதிஹாரி

  • பதவி, பிபிசி ஹிந்திக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான திறமை நம் கண் முன்னே வெளிச்சத்திற்கு வந்தது. கிரிக்கெட் உலகம் இவரின் திறமை மற்றும் ஆட்டத்தை வியந்து கொண்டாடியது.

இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில், பதினான்கே வயதான வைபவின் அதிரடியான ஆட்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ரஷித் கான், முகமது சிராஜ், இஷாந்த் ஷர்மா, ப்ரசித் கிருஷ்ணா போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவம்சம் செய்தார் அவர்.

இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு ஆட்டங்களில் அவர் பெரிதாக ரன்கள் ஏதும் எடுக்காமல், பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறியது அவரின் ஆட்டம் குறித்த கவலைகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த 101 ரன்களை எப்படி ஒருவர் மறக்க இயலும்?

குறுகிய காலத்தில் இவர் அடித்து ஆடிய ஆட்டங்கள் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் காரணமாக சில நாட்கள் ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டன. அப்போது இந்த இளம் ஆட்டக்காரர் தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டது போல் இருந்தது.

முதலில் பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் அவர் 40 ரன்கள் குவித்தார். அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்து தன்னுடைய ஆட்டத்தை வலுப்படுத்தினார்.

வைபவின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மெனுமான சபா கரிம், "19 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டிகளிலும் வைபவின் ஆட்டத்தை வீடியோக்களில் பார்த்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார். அப்போதே, இந்த சிறுவனிடம் ஒரு சிறப்புத் திறமை இருக்கிறது என்று உணர்ந்தேன்," என்று கூறினார்.

வைபவின் திறமைக் குறித்து பேசும் போது, "அவர் ஒரு சதம் அடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மணிக்கு 145 கிலோமீட்டர்கள் வேகத்தில் வரும் சிறப்பான பந்துகளை எதிர்த்து ஒரு 14 வயது பேட்டர் ஆடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று கூறினார்.

கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ப்ரவீன் அம்ரேவால், வைபவின் ஆட்டம் குறித்து எழுந்த குதூகலத்தை வெளிப்படுத்தினார்.

"நேரத்தை சரியாக பயன்படுத்துவது தான் வைபவின் விளையாட்டில் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. நீங்கள் ஆட்டத்திற்கு புதிதோ அல்லது நல்ல அனுபவம் மிக்கவரோ, பேட்டிங் என்பது எப்போதுமே நேரம் சார்ந்தது. வைபவின் ஆட்டம் அவர் எப்படி துல்லியமாக நேரத்தை பயன்படுத்துகிறார் என்பதை காட்டுகிறது. எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்."

திறமையான மனிதர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருக்கின்றனர். மிகவும் துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள். எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வைபவின் பயிற்சியாளருமான பிகாரின் மணீஷ் ஓஜா இது குறித்து பேசும் போது, "2018-ஆம் ஆண்டு வைபவும் அவருடைய அப்பா சஞ்சீவும் முதன்முறையாக என்னுடைய பயிற்சி மையத்திற்கு வந்தது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. வெறும் 7 வயதே ஆன வைபவ், ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் உறுதியாக இருந்தார். முதல் நாளில் அவருக்கு சில உடற்பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினேன். பிறகு வலைப்பயிற்சி மேற்கொள்ளுமாறு கூறினேன். அந்த வயதிலேயே அவரிடம் இருந்த அற்புதமான திறனை நான் கண்டறிந்தேன்," என்று கூறினார்.

அன்று, அந்த முதல் நாளிலேயே தியாகம் மற்றும் கடின உழைப்பிற்கான பயணம் துவங்கியது.

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும், எப்போது பவுண்டரிக்கு விளாச வேண்டும் என்பதை நன்றாக அவர் அறிந்து வைத்திருக்கிறார் என முன்னாள் வீரர்கள் புகழாரம்

கடின உழைப்பும், வெற்றிக்கான பயணமும்

பாட்னாவின் புறநகர் பகுதியில் ஜென்-நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாதெமி என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் மணீஷ், "ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு வைபவின் அம்மா, அவருடைய மகனுக்கும் கணவருக்கும் உணவு தயாரிப்பார். இருவரும் நான்கு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்திற்கு வருவார்கள். பிறகு வைபவின் பயிற்சி மாலை நான்கு மணி வரை நீடிக்கும். அவரின் பயிற்சி முடியும் வரை, அவருடைய தந்தை பொறுமையாக அவருடைய காரில் அமர்ந்திருப்பார்," என்று தெரிவிக்கிறார்.

இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார்.

பயிற்சிக்காக அப்பாவும் மகனும் சமஸ்திபூரில் அமைந்திருக்கும் தாஜ்பூர் என்ற கிராமத்தில் இருந்து 90 கிலோமீட்டர்கள் பயணித்து பயிற்சி மையத்திற்கு வருவார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்த பயணம் தொடர்ந்தது.

ஆனால் இது மட்டும் போதவில்லை. சஞ்சீவ் அவருடைய வீட்டின் முகப்பில் பயிற்சிக்காக வலைகளுடன் கூடிய சிறிய பயிற்சி மையத்தையே உருவாக்கியிருந்தார்.

"அவர்கள் இருவரும் மிகவும் வித்யாசமானவர்கள் என்று நான் புரிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் மிகவும் தைரியமானவர்கள். அவர்களின் கனவை நோக்கி, நிற்காமல் சென்று கொண்டிருந்தனர். இப்படியான ஒரு எடுத்துக்காட்டை என்னுடைய வாழ்வில் நான் முதன்முறையாக பார்த்தேன்," என்று மணீஷ் கூறினார்.

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இடது கை ஆட்டக்காரரான அவர் தொடர்ச்சியாக வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் இவ்வாறு பயிற்சிகள் மேற்கொள்வார்.

ஆரம்பகால அறிகுறிகள்

ஏழு வயதிலேயே அவருடைய 'டைமிங்' மிகவும் துல்லியமாக இருந்தது.

"அவன் என்னிடம் வரும் போது அவனிடம் இருந்த மூன்று முக்கிய சிறப்புகளை நான் கவனித்தேன். வைபவின் டைமிங் துல்லியமாக இருந்தது. பந்துகளை விளாசும் போது அவருடைய உடல் நல்ல சமநிலையில் இருந்தது. பலவிதமாக பந்துகளை அடிக்கும் கலைகளை கற்றிருந்தார். ஆனால் சிறுவனாக இருந்ததால் பலம் குறைவாக இருந்தது. ஆனால் விரைவில் எதையும் கற்றுக் கொள்ளும் திறனும், பேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் அதிகமாக இருந்தது," என்று மணீஷ் கூறுகிறார்.

"ஒரே விதமான ஷாட்டை, ஒரு நாளில் 400 முறை விளையாட வேண்டும் என்று பல நேரம் நான் அவரிடம் கூறியுள்ளேன். சில நேரங்களில் பயிற்சி பெறும் வீரர்கள் பந்து வீசுவார்கள். சில நேரங்களில் மெஷின்கள் மூலம் பந்து வீசப்படும். சில நேரங்களில் ஒரு போட்டியில் இருக்கும் போது எப்படி இருக்குமோ அத்தகைய சூழலை உருவாக்கி அதில் விளையாடும்படி கூறுவேன். அவருடைய நினைவில் (muscle memory) ஒரு அங்கமாக இத்தகைய ஷாட்டுகள் மாற வேண்டும் என்பதற்காக அத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டன."

இந்த ஆண்டு ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். அவரின் அதிரடி ஆட்டத்திற்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக இளம் வயதில் இத்தகைய சாதனையைப் படைத்த முதல் வீரராகவும் அவர் அன்று அறியப்பட்டார்.

இது சில நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது தான். சஞ்சீவ் மற்றும் மணீஷ் இதற்கான அறிகுறிகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பார்த்துவிட்டனர்.

"2022-ஆம் ஆண்டில் எங்களுடைய அகாடமியில் ஒரு ஆட்டம் நடைபெற்றது. அப்போது எதிரணியினரின் பந்துகளை எதிர்கொண்டார் வைபவ். ராஞ்சி மற்றும் 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த எதிரணியில் இடம் பெற்றிருந்தனர். தடுமாற்றம் ஏதுமின்றி 118 ரன்கள் எடுத்து அசத்தினார் வைபவ். அந்த போட்டியில் வைபவ் விளாசிய அனைத்து சிக்ஸர்களும் 80-90 மீட்டர் நீளம் கொண்டவை," என்று கூறுகிறார் மணீஷ்.

"2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற, அண்டர் 19 யூத் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் இன்னிங்ஸில் 62 பந்துகளில் 104 ரன்களை குவித்தார் வைபவ். இது சாதாரண ஆட்டம் இல்லை என்று நான் வைபவின் அப்பாவிடம் அன்று கூறினேன். இது கடவுளின் ஆசிர்வாதம்," என்றும் கூறுகிறார் மணீஷ்.

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஏப்ரல் 28, டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய நாளாக மாறியது. வெறும் 35 பந்துகளில், பதின்பருவ வீரர் ஒருவர் சதம் அடிப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்

வைபவின் ஆட்டத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்த நிபுணர்கள்

வைபவின் பேட் சுழலுவது மற்றும் அதன் வேகத்தைப் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பேட்டை சுழற்றும் தன்மை மிகவும் தனிச்சிறப்பு கொண்டதாக இருக்கிறது. முதலில் அவருடைய பேட் கீழே சென்று உடனடியாக மேலே திரும்பும். பிறகு பந்தை முழு வீச்சில் அடிப்பதற்கு முன்பு அவருடைய பேட் கீழே வரும். பந்தை அடித்த பிறகு, அவருடைய பேட் அவருடைய வலது தோள்பட்டையில் இருக்கும். இந்த உத்தி, தூரத்தில் இருந்து வரும் பந்துகளை சிக்ஸராக மாற்ற உதவுகிறது.

"நீங்கள் பேஸ்பால் பேட்டர்களின் ஆட்டத்தைப் பார்த்தால் புரியும். அந்த பேட்டர்கள் 'நிலை', 'பிக்-அப்', மற்றும் நேரம் என்ற மூன்று படிகளைக் கொண்டிருப்பார்கள். இன்று டி20 பேட்டர்களில் பெரும்பாலானோர் தெரிந்தோ, தெரியாமலோ இதே படிகளைப் பின்பற்றி பவர்ஃபுல்லான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இது வைபவிற்கு மிகவும் இயற்கையாகவே வருகிறது," என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் தெரிவிக்கிறார்.

"சாட்டைப் போன்று அவர் பேட்டை சுழற்றுகிறார். இது பெரிஸ்கோபிக் பேக்-லிஃப்ட் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதனை சாத்தியமாக்க உடல் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். சுழற்சியும் மிகவும் 'ஸ்மூதாக' இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பேக்-லிஃப்டை உயர்த்த இயலும். இதன் மூலமாகவே சாட்டையைப் போன்று பேட்டை சுழற்றி பலமாக பந்துகளை அடிக்க இயலும்," என்றும் அவர் விளக்கினார்.

அவரிடம் இருக்கும் மற்றொரு திறமை பந்தின் தூரத்தை துல்லியமாக கணிப்பது. "இது பேட்டருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பந்தின் தூரத்தை விரைவாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து பந்தை அடித்து ஆட முடியும்," என்றும் சபா கூறுகிறார்.

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,இந்த இளம் வயதில், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும் கூட வெளிப்படுத்த முடியாத அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் ஆட்டம் குறித்து எழும் கவலைகள்

38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அதிரடி காட்டிய வைபவ், அடுத்து ஆடிய இரண்டு ஆட்டங்களில் பூஜ்ஜியம் மற்றும் நான்கு ரன்களில் வெளியேறினார்.

இரண்டு முறையும், ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வந்த பந்துகளை அடிக்க முயன்றே அவுட் ஆனார். அவரின் பலவீனம் என்ன என்பதை பந்துவீச்சாளர்கள் கண்டறிந்துவிட்டனரா?

இது வைபவின் மோசமான ஆட்டம் தான். சமீபத்தில் 40 பந்துகளில் 57 ரன்கள் அவர் குவித்ததும் இதையே காட்டுகிறது.

இது குறித்து பேசிய ப்ரவின் அம்ரே, "வைபவின் பேட்டிங்கில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். இது இயற்கை. அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் மூலம் அவர் இதை கற்றுக் கொள்வார். நீண்ட நாட்களுக்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவருடைய பேட்டர் இன்னிங்கிஸில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த இன்னிங்ஸில் ஆடிய ஷாட்களை தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஆட வேண்டும். இப்போது தான் ஆட்டம் பற்றிய மனவோட்டம் முக்கிய பங்காற்றும். இது போன்ற சூழ்நிலைகளை கையாளும் திறன் வைபவின் தற்போதைய பயிற்சியாளரிடம் இருக்கிறது என்று நம்புகின்றேன்," என்றார்.

சபாவும் இதே கருத்தை முன்வைக்கிறார். "மிட்செல் ஸ்டார்க், பும்ரா போன்ற தேர்ந்த பந்துவீச்சாளர்கள், வைபவை வெளியேற்றும் வழிகளை நிச்சயமாக கண்டறிவார்கள் என்று நான் நம்புகிறேன். தன்னிடம் இருந்து விலகிச் செல்வதாக தோன்றும் பந்துகளை அவர் அடிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால் அவர் ஆஃப் சைடில் நன்றாக விளையாடும் வீடியோக்களை நான் பார்த்திருக்கின்றேன். சிறப்பான பந்துவீச்சாளர்களை அவர் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் போது, போட்டியின் தன்மையை அவர் அதிகமாக அறிந்து கொள்வார். பந்து வீச்சாளர்கள் அவரை வெளியேற்ற பயன்படுத்தும் உத்திகள் குறித்தும் அவர் விரைவாக புரிந்து கொள்ள முடியும்," என்று கூறினார் சபா.

"ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர், சைராஜ் பஹுதுலே, மற்றும் ஜூபைன் பருசா உள்ளிட்ட பயிற்சியாளர்களைக் கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் விளையாடுகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் கூறினார். இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். இந்த வீரர்களின் ஆட்டத்தை மேம்படுத்த கடின உழைப்பை அவர்கள் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் இத்தகைய இளம் வீரர்கள் முன்னால் இருக்கும் பெரிய சவால் என்னவென்றால், இப்படியான அதிரடியான துவக்கத்தை கொடுக்கும் இவர்கள் தங்களின் முழு கவனத்தையும் தொடர்ச்சியாக விளையாட்டில் காட்டுவார்களா என்பது தான்.

"தொடர்ச்சியாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கான வழக்கத்தைக் கொண்டிருப்பது முக்கியம். அவர் அப்படியான, சிறப்பான வழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய திறமைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மைதானத்திற்கு வெளியே அவர் செய்யும் செயல்கள், அவருடைய விளையாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. வைபவைக் காட்டிலும் அதிக திறமைக் கொண்ட வீரர்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவர்களின் கவனம் சிதறிவிட்டது. இவருக்கும் அது நிகழக் கூடாது என்று விரும்புகிறோம்," என்று அம்ரே தெரிவித்தார்.

வைபவ் சூரியவன்ஷி, கிரிக்கெட், IPL 2025,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இளம் வீரர்கள் வளர்வதற்கான சூழலை ராஜஸ்தான் ராயல்ஸின் பயிற்சியாளர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர்

வைபவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தற்போது பேசுபொருளாகியுள்ள இந்த பேட்டரின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

"உடல் தகுதி, உணவு மற்றும் செயல்பாடு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சௌகரியமான, எளிமையானவைகளை அவர் தொடர்ந்து பின்பற்றும் போது, அது அவருக்கு பலனளிக்கும். அவருடைய பெற்றோர்கள் மற்றும் அவரின் ஆட்டம் குறித்து நன்கு அறிந்த முன்னாள் பயிற்சியாளர் உள்ளிட்டோரிடம் தொடர்பில் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான புகழ் தனித்து செயல்படும் இளமையின் தன்மையை அழித்துவிடும். இதனை அவர் தவிர்க்க வேண்டும். அவரின் கவனம் சிதறும் வகையிலான சுதந்திரமாக செயல்படும் போக்கை அவருக்கு வழங்கக்கூடாது," என்று சபா கூறுகிறார்.

"மற்றொரு பரிந்துரை என்னவென்றால் அவர் அவரின் படிப்பை முடிக்க வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதற்கான வழியை கண்டுபிடிக்கும். குறைந்தபட்சம் அவருடைய கல்லூரி படிப்பையாவது முடிக்க வேண்டும்," என்று சபா கூறுகிறார்.

வைபவின் முழுத்திறனை வெளிப்படுத்த இந்த சில இன்னிங்ஸ்கள் மட்டும் போதுமா? ஓரிரண்டு ஆண்டுகளில் இந்திய டி20 கிரிக்கெட் அணியில் நேரடியாக இடம் பெற வாய்ப்புகள் வழங்கப்படுமா?

"ஏன் கூடாது? அவர் ஏற்கனவே அண்டர்-19 அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது போன்றே அவர் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால், அவரின் பெயர் பரிசீலனைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன," என்று சபா கூறுகிறார்.

இதே கேள்வியிடம் மணீஷிடம் கேட்ட போது, "அவர் உடனடியாக இந்திய டி20 அணியில் இடம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அணியில் விளையாட ஆரம்பித்த பிறகு அவரின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சச்சின், விராட் போன்று பெரிய வீரராக வர வேண்டும் என்றும், அதிக ரன்கள் எடுத்து இந்தியா மற்றும் பிகாருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce39eyy2eydo

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெடிய‌ன் இங்லாந் மைதான‌ங்க‌ளில் த‌ன‌து அதிர‌டி விளையாட்டை வெளிப்ப‌டுத்துகிறார்...................அடுத்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்க‌ இருக்கும் 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பைக்கு த‌யார் ஆகும் அணிக‌ளுட‌ன் , இப்ப‌டி சில‌ போட்டிக‌ளை வைப்பின‌ம் , முத‌லாவ‌து விளையாட்டில் சிக்ஸ் ம‌ழை.....................இந்தியா இள‌ம் வீர‌ர்க‌ளை , இங்லாந் இள‌ம் வீர‌ர்க‌ளால் வெல்ல‌ முடியாது

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பைய‌ அடுத்த‌ வ‌ருட‌ம் இந்தியா சிம்பிலா வெல்லும்............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.