Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ind-jpg.jpg?resize=750%2C375&ssl=1

இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!

பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய தலைவரான நம்பலா கேஷவ ராவ் என்கிற பசவராஜு உட்பட 27 கிளர்ச்சியாளர்களை இந்திய கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தியுள்ளார். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாவோயிஸ்ட் தலைமையிலான கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து, இந்த இயக்கம் நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடுத்து வந்தது. இப்போது, மூன்று தசாப்தங்களில் இல்லாத ஒரு திருப்புமுனையாக, முதல் முறையாக மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் நிலையில் உள்ள ஒரு தலைவர் நமது படைகளால் நடுநிலையாக்கப்பட்டுள்ளார் என அமித் ஷா பெருமையுடன் தெரிவித்தார்.

நம்பலா கேஷவ ராவ் என்கிற பசவராஜு, நக்சல் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவராகவும், அதன் முதுகெலும்பாகவும் கருதப்பட்டார். அவரது மரணம், இந்த கிளர்ச்சிக்கு ஒரு தீர்க்கமான அடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு சில கிராம மக்கள் தங்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததில் இருந்து, 12,000 க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 2000களின் நடுப்பகுதியில் அதன் உச்சக்கட்டத்தில், சுமார் 15,000 முதல் 20,000 போராளிகளுடன், நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் இந்த கிளர்ச்சி கட்டுப்படுத்தியது. இத்தகைய ஒரு பெரும் அச்சுறுத்தலை ஒடுக்கிய நமது துணிச்சலான பாதுகாப்புப் படைகள் மற்றும் முகமைகளுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று அமித் ஷா மேலும் கூறினார்.

விரிவான நடவடிக்கைகளில், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 84 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். இது அரசின் தீவிரமான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. “மோடி அரசாங்கம் மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளது,” என்று அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, இந்திய பாதுகாப்பு படைகளின் அசைக்க முடியாத உறுதியையும், நக்சலிசத்தை முழுமையாக ஒழிப்பதற்கான அரசின் தீவிரமான நிலைப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.

https://athavannews.com/2025/1432757

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிஸ்ட் தலைவர் பசவராஜூ கொல்லப்பட்டது நக்சல் அமைப்பின் முடிவை உணர்த்துகிறதா?

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,SALMAN RAVI/BBC

படக்குறிப்பு,பஸ்தரில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படை வீரர். (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலோக் புதுல்

  • பதவி, ஹிந்திக்காக

  • 22 மே 2025, 10:54 GMT

1992 மே மாதத்தில், கோடைக்காலம் உச்சத்தில் இருந்தபோது, அப்போதைய மிகப்பெரிய நக்சல் அமைப்பான 'சிபிஐ (எம்எல்) மக்கள் போர்க் குழு'-வில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது.

ஆந்திராவில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டு ஒரு வாரம் கூட ஆகவில்லை. ஆனால் கட்சியின் மத்திய குழு செயலாளர் கொண்டபள்ளி சீதாராமையா ஏற்கனவே தனது சகாக்களுடன் சேர்ந்து ஒரு தனி அமைப்பை உருவாக்கும் யோசனையை முன்வைத்திருந்தார்.

சீதாராமையாவுடன் செல்வதற்குப் பதிலாக, வாரங்கல் பல்கலைக்கழகத்தில் தனது பி.டெக் படிப்பை முடித்து, பின்னர் 1980-களில் அமைப்பில் சேர்ந்த நம்பல்லா கேசவ ராவ், மக்கள் போர் குழுவில் தொடர முடிவு செய்தார்.

ஜூன் 1992-ல், கணபதி என்ற முப்பல்ல லட்சுமண ராவ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டபோது, நம்பல்ல கேசவ ராவ் அவரது நெருங்கிய உதவியாளராக உருவெடுத்தார். கட்சியின் மத்திய குழுவில் நம்பல்ல கேசவ ராவுக்கு இடம் வழங்கப்பட்டது.

அந்த நம்பல்லா கேசவ ராவ் தான் நக்சல் இயக்கத்தில் பசவராஜு என்று அழைக்கப்பட்டார்.

புதன்கிழமை, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த மோதலில் நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு மற்றும் 27 மாவோயிஸ்டுகளைக் கொன்றதாக போலீசார் கூறினர்.

ஆயுதமேந்திய மாவோயிஸ்டு போராட்டத்தின் முடிவின் தொடக்கமாகவும் புதன்கிழமை நிகழ்வுகளை பலர் பார்க்கிறார்கள்.

பஸ்டர் ஐ.ஜி பி சுந்தர்ராஜ் கூறுகையில், "2024 ஆம் ஆண்டில் நக்சலைட்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை நடத்தியது போல, 2025 ஆம் ஆண்டிலும் நாங்கள் அதை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இதன் விளைவாக, மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் கொல்லப்பட்டார். இவர் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். சத்தீஸ்கரில் முதன்முறையாக அரசியல் தலைமைக்குழு மற்றும் பொதுச்செயலாளர் மட்டத்தில் இருந்த மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்" என்றார்.

"நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் ஒரு வரலாற்று சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த நடவடிக்கையில், சிபிஐ-மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர், நக்சல் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர் மற்றும் முதுகெலும்பான நம்பல்லா கேசவ ராவ் என்ற பசவராஜு உட்பட 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றுள்ளனர்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தில் பசவராஜூவின் கொலை ஒரு வரலாற்று சாதனை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

பொறியாளர் முதல் மாவோயிஸ்ட் வரை

ஹைதராபாத்திலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஜியன்னாபேட்டை கிராமம்.

மாவட்ட தலைமையகமான ஸ்ரீகாகுளத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான வாசுதேவ் ராவ் இப்பகுதியில் பிரலமானவர்.

கிராமத்தின் பெரியவர்களிடம் பேசும்போது, அவர்கள் வாசுதேவ் ராவ் மற்றும் வாசுதேவ் ராவின் மகன் நம்பல்லா கேசவ் ராவ் பற்றிய பல கதைகளைச் சொல்கின்றனர்.

வாசுதேவ் ராவ் தனது மூன்று மகள்களுக்கும் மூன்று மகன்களுக்கும் நல்ல கல்வியைக் கொடுக்க முயன்றார்.

வாசுதேவ் ராவின் மகன்களும் - தில்லேஸ்வர ராவ் மற்றும் கேசவ ராவ் கல்வியில் சிறந்து விளங்கினர்.

வாசுதேவ் ராவ், தனது மகன் கேசவ் ராவை வாரங்கலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தார்.

பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோது, கேசவ ராவ் புரட்சிகர மாணவர் சங்கத்தில் சேர்ந்ததாகவும், சமூக இயக்கங்களில் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் கிராமத்தை எட்டத் தொடங்கின.

கேசவ் ராவ் மீது காவல்துறையில் சில வழக்குகளும் பதிவாகின.

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சத்தீஸ்கரில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான டிரோன் பயிற்சி (கோப்புப் படம்)

ஸ்ரீகாகுளம் சமூக ஆர்வலர் குணா ஸ்ரீபிரகாஷ் கூறுகையில், "கேசவ் எம்.டெக் படிப்பில் சேர்ந்தார். ஆனால் தனது பெரும்பாலான நேரத்தை அரசியல் நடவடிக்கைகளில் செலவிடத் தொடங்கினார். சிபிஐ லிபரேஷன் கட்சிகாக வேலை செய்யத் தொடங்கியதும், சில நாட்களில்யே அவர் தலைமறைவானார். கேசவ் ராவின் சகோதரர் தில்லேஸ்வர ராவ், குடும்பப் பொறுப்பை பார்த்துக் கொண்டார். அவர் துறைமுகத்தில் நல்ல வேலையில் இருந்தார். ஆனால் கேசவ ராவ் குறித்து எந்த தகவலும் வரவில்லை'' என்கிறார்.

எம்.டெக் படிக்கும் போது, கேசவ் ராவ் நக்சலைட் அமைப்பான சிபிஐ மக்கள் போர் குழுவில் சாதாரண தொண்டராக அமைப்பில் சேர்ந்த கேசவ் ராவ், அடுத்தடுத்த பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு தலைமையின் நம்பிக்கையை வென்றார்.

கேசவ் ராவின் பொறுப்பும், பகுதியும் மாறிக் கொண்டே இருந்ததுபோல, அவரது பெயரும் ககன்னா, பிரகாஷ், கிருஷ்ணா, விஜய், கேசவ், பிஆர், பிரகாஷ், தர்ப நரசிம்ம ரெட்டி, ஆகாஷ், நரசிம்மா, பசவராஜ், பசவராஜு என தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது.

1992 ஆம் ஆண்டில், மக்கள் போர்க் குழு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தபோது, கணபதியுடன் நின்ற கேசவ் ராவுக்கு மத்திய குழுவின் உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டது, இது அவரை அமைப்பில் முக்கியமானவராக ஆக்கியது.

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,ALOK PUTUL/BBC

படக்குறிப்பு,கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பார்வையிடுகின்றனர்.

பசவராஜூவுக்கு மத்தியக் குழுவில் எப்படி இடம் கிடைத்தது?

1992 ஆம் ஆண்டில் மக்கள் போர் குழுவின் மத்திய குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கேசவ் ராவ் மாவோயிச அமைப்பில் சிறப்பு கொரில்லா படைக்கு நீண்ட காலம் தலைமை தாங்கினார்.

ஆயுதங்கள் முதல் பயிற்சி வரை அனைத்திற்கும் பொறுப்பாக இருந்த கேசவ் ராவுக்கு, பிரிக்கப்படாத ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் அமைப்பை விரிவுபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.

1994-95 இல் கொரில்லாப் படை தொடங்கப்பட்டிருந்தாலும், மே 1999 வாக்கில், மத்திய கொரில்லாப் படை கலைக்கப்பட்டு, பிளாட்டூன்கள், உள்ளூர் கொரில்லா அணிகள் மற்றும் சிறப்பு கொரில்லா அணிகள் தொடங்கப்பட்டன என்பதை மாவோயிச ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இக்காலக்கட்டத்தில், முதன்முறையாக, ஆயுதக்குழு மற்றும் அமைப்பு வேலைகளுக்காக தனித்தனி கட்சிகள் உருவாக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவ் மத்திய ராணுவ ஆணையத்தின் பொறுப்பாளராக பணியாற்றினார்.

2000 ஆம் ஆண்டில், மாவோயிஸ்ட் அமைப்பு. மக்கள் விடுதலை ஆயுதக்குழுவை உருவாக்கியது, இந்த காலக்கட்டத்தில்தான் கேசவ் ராவ் அமைப்பின் மிக உயர்ந்த குழுவான அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றார்.

இந்த காலக்கட்டத்தில், கேசவ் ராவின் பெயர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் நடவடிக்கைகளுடன் இணைத்து பேசப்பட்டது. மேலும் பல்வேறு மாநில மற்றும் மத்திய அமைப்புகளால் இவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

என்.ஐ.ஏ, சி.பி.ஐ மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கேசவ் ராவின் தலைக்கு அறிவித்த மொத்த பரிசுத்தொகை ஒன்றரை கோடி ரூபாயையும் தாண்டிவிட்டது.

பெரிய தாக்குதல்களில் பசவராஜூவின் பங்கு

கேசவ் ராவ் முதன்முதலில் 1987 இல் ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு தாக்குதலை வழிநடத்தினார் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 6 போலீசார் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பிறகு, 'கேசவ் ராவ் நடத்திய கொடூரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இப்போது போலீஸ் ஆவணங்களின் ஒரு பகுதியாகும்' என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 10, 2010 அன்று தாந்தேவாடாவில் 76 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம், 2013 மே 23 அன்று தர்பா பள்ளத்தாக்கின் ஜீராம் படுகொலை என பல்வேறு பெரிய சம்பவத்திலும் கேசவ் ராவ் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதப்படுகிறது.

ஜீரம் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

"2018 ஆம் ஆண்டில் அரக்கு தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ கிதாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரி சோமா ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கும் கேசவ் ராவ் பொறுப்பாக்கப்பட்டார். 2019 ல் கட்சிரோலியில் 15 கமாண்டோக்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் கேசவ் ராவ் இருந்தார். அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான தாக்குதலின் பின்னணியிலும் கேசவ் இருந்தார். ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிறையில் தாக்குதல் நடத்தியதற்கும் கேசவ்தான் காரணம்" என்று போலீஸ் அதிகாரி கூறுகிறார்.

எப்படி கேசவ் ராவ் மாவோயிஸ்ட் தலைமை பொறுப்புக்கு வந்தார்?

2009 இல் கோபாத் காந்தி மற்றும் 2010 இல் அரசியல் தலைமைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பிஜோய் டா என்கிற நவீன் பிரசாத் என்கிற நாராயண் சன்யால் ஆகியோர் கைது செய்யப்பட்டது அமைப்புக்கு பல நெருக்கடிகளை உருவாக்கியது.

இதற்கிடையில், ஜூலை 2010 இல் சிபிஐ மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆசாத் மற்றும் 2011 நவம்பரில் கோட்டேஸ்வர ராவ் என்ற கிஷன்ஜி ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பில் கேசவ் ராவின் பிடி வலுவடைந்தது.

நோய்வாய்ப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் முப்பபல்லா லட்சுமண ராவ் என்கிற கணபதி அமைப்பின் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, கேசவ் ராவ் இயல்பாகவே சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்டளையை ஏற்க முன்னணி போட்டியாளராக ஆனார்.

2018 ஆம் ஆண்டில், நம்பல்லா கேசவ் ராவ் என்ற பசவராஜு கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பெரும்பாலான மார்க்சிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர் பதவி கிடையாது. பொதுச் செயலாளர் என்பது இந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியாகும்.

இந்த வகையில், பி.டெக் படித்த கேசவ் ராவ், மாவோயிஸ்ட் அமைப்பில் ஒரு சாதாரண தொண்டராக இருந்து மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.

27 ஆண்டுகளாக மத்திய குழு உறுப்பினராகவும், 18 ஆண்டுகளாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய கேசவ் ராவை பொதுச் செயலாளராக நியமித்ததை அறிவித்த சிபிஐ மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி செய்தித் தொடர்பாளர் அபய், கேசவ் ராவைப் பற்றி கூறுகையில், "துல்லியமாகச் சொல்வதானால், அவர் சமீபத்தில் பொதுச் செயலாளராக பரிணமித்துள்ளார், அதே நேரத்தில் 1992 க்குப் பிறகு ஒரு கூட்டுத் தலைமையாக வளர்ந்த மத்திய குழுவில் ஒரு முக்கியமான தோழராக இருக்கிறார்." என்றார்.

நெருக்கடியில் இருந்த மாவோயிஸ்ட் அமைப்பு

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,CPI (MAOIST)

படக்குறிப்பு,மாவோயிஸ்ட் முகாம் (கோப்புப் படம்)

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்புப் படை முகாம்கள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்ட சமயத்தில் மாவோயிஸ்டுகளுக்கு சிக்கல்கள் அதிகமானது.

இதற்குப் பிறகு, 2023 டிசம்பரில் வந்த பாஜகவின் விஷ்ணுதேவ் சாய் அரசு, சில மாதங்களுக்குள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஆக்ரோஷமான நடவடிக்கைகளைத் தொடங்கியபோது, கேசவ் ராவ் மாவோயிஸ்ட் அமைப்பைக் காப்பாற்றி பராமரிக்கும் சவாலை எதிர்கொண்டார்.

பாஜக அரசின் 15 மாத ஆட்சிக் காலத்தில், 450 க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், சிலர் காணாமல் போயினர். மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரும் சரணடைந்தனர்.

மாவோயிஸ்ட் அமைப்பு தனது பிடிவாதம் அனைத்தையும் கைவிட்டு நிபந்தனையற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியது. ஆனால் இப்போது அதற்கு அரசு தயாராக இல்லை.

மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கீழே போட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா தெளிவாகக் கூறினார்.

மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கமா இது?

பசவராஜூ : கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவரின் முழு பின்னணி

பட மூலாதாரம்,CG KHABAR/BBC

புதன்கிழமை கேசவ் ராவ் கொல்லப்பட்ட பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு குறித்து பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், "இந்த மரணம் மீதமுள்ள மாவோயிஸ்டுகள் மீது பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். கேசவ் ராவ் கொலைக்குப் பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பு தலைமையற்றதாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், இது மாவோயிஸ்டுகளின் முடிவின் தொடக்கம் என்று நீங்கள் கூறலாம். 2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் அமைப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு நிர்ணயித்திருந்தார். அது இப்போது உண்மையாகி வருவதாகத் தெரிகிறது."

இருப்பினும், சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக காவல்துறை இயக்குநர் பதவியை வகித்த விஸ்வரஞ்சன் இதை வேறுவிதமாகப் பார்க்கிறார்.

"கேசவ் ராவ் கொலை போலீசாருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மாவோயிஸ்ட் பிரச்னை சில ஆண்டுகளுக்கு அமைதியடைய வாய்ப்புள்ளது. ஆனால் 1973 இல் நக்சலைட் இயக்கம் மோசமாக நசுக்கப்பட்ட பிறகும், நக்சலைட்டுகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்களை புத்துயிர் பெறச் செய்தனர் என்பதை பழைய வரலாறு காட்டுகிறது." என்கிறார் விஸ்வரஞ்சன்

விஸ்வரஞ்சனின் கூற்றுப்படி, மாவோயிஸ்ட் இயக்கம் வரும் நாட்களில் அகிம்சை வடிவத்தில் உருவாகலாம் அல்லது வேறு ஏதேனும் வன்முறை வடிவத்தில் மீண்டும் எழக்கூடும். அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன.

ஆனால் யதார்த்தம் என்னவென்றால், கிட்டதட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு நம்பல்லா கேசவ ராவுக்கு மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட அதே மே மாதத்தில், அவர் கொல்லப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக நிலவிய கடுமையான வெப்பத்திற்குப் பிறகு, பஸ்தர் உட்பட சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், கேசவ் ராவ் மற்றும் பிற மாவோயிஸ்ட்களின் சடலங்களை மாவட்ட தலைமையகத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1mgzn7dpd0o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.