Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும்

மீநிலங்கோ தெய்வேந்திரன்

May 23, 2025 | Ezhuna

இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்டும்; அதுசார் வினாக்கள் எழுப்பப்பட வேண்டும். இலங்கையின் சமகாலம் குறித்த பெரும்பான்மையான எமது உரையாடல்கள் கவனம் குவிக்கத் தவறும் விடயங்களையும் அமைதியாகக் கடந்து செல்லும் களங்களையும் ‘சமகாலத்தைப் பொருள்கொள்ளல்: கவனம்பெறா அசைவியக்கங்கள்’ எனும் இத்தொடர் பேசமுனைகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையில் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. போருக்குப் பிந்தைய இக்காலப்பகுதியில் தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கிய முக்கிய சவால் அறம் பற்றியது. அது அரசியலில், ஆக்க இலக்கியத்தில், பொருளாதாரத்தில், அன்றாட சமூக அசைவியக்கத்தில் என அனைத்திலும் தாக்கம் செலுத்திய ஒன்றாக – இன்னும் சரியாகச் சொல்வதாயின் விமர்சனத்திற்குரியதாக – இருந்து வந்திருக்கிறது. ஒருவருக்கு அறமாகத் தெரிகின்ற ஒன்று இன்னொருவருக்கு அறமாகத் தெரிவதில்லை. ஒருவர் அறமற்றதாகக் கருதும் ஒரு செயலை இன்னொருவர் அறம் என்ற வியாக்கியானத்தோடு நியாயப்படுத்துகிறார். இதுவே போருக்குப் பிந்தைய கடந்தகால அனுபவமாகும்.

நாட்டின் வடக்குக் கிழக்கில் போருக்குப் பிந்தைய ஒன்றரைத் தசாப்தகாலத்தில் மேற்கொண்ட பல்வேறு களஆய்வுகளில் பல்வேறு தரப்பினர் பல்வேறு சூழ்நிலைகளில் அறம் என்கிற வினாவைத் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதில் பெரும்பான்மையானவை அரசியல் அறம் சார்ந்த கேள்விகள். ஆனாலும் அதற்குமப்பால் சமூகம்சார்ந்த, பொருளாதாரம்சார்ந்த அற நிலைப்பாடுகள், விழுமியங்கள், நெறிமுறைகள் குறித்த வினாக்கள், விசாரணைகள் மக்களிடமிருந்து எழுந்துள்ளன. ஆனால் அவை கவனத்திற்குரியனவாக அமையவில்லை. அக்கேள்விகளை, விசாரணைகளை இக்கட்டுரை கவனத்திற்கொள்கிறது.

இரண்டு கேள்விகளுடன் இதைத் தொடங்குவது பொருத்தம். போருக்குப் பிந்தைய சமூகங்களில் அறம்சார் சிக்கல்கள் ஏன் குறிப்பாக சர்ச்சைக்குரியதாகின்றன என்ற வினா முக்கியமானது. இரண்டாவது, அறம்சார் வேறுபட்ட வியாக்கியானங்கள் எவ்வாறு சமூகத்தின் மீள்எழுச்சியைப் பாதிக்கின்றன. இவ்விரண்டு வினாக்களும் சற்று விரிவான விளக்கத்தை வேண்டுவன.

போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் கடுமையான மோதல்களின் காலகட்டங்களிலிருந்து உருவாகின்றன; உடைந்த சமூகங்கள், சிதைந்த நம்பிக்கை மற்றும் நீதி மற்றும் ஒழுக்கம் பற்றிய முரண்பாடான கதைகளை விட்டுச்செல்கின்றன. ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காரணிகளால் அறம் என்பது சிக்கலுக்குரியதாகிறது. இதற்கு அடிப்படையாக நான்கு காரணிகளை நாம் இனங்காணலாம்.

1. தார்மீகத் தெளிவின்மை மற்றும் அதிர்ச்சி: போர் பெரும்பாலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகளை மங்கலாக்குகிறது; ஏனெனில் போர்க்காலங்களில் உயிர்வாழ்வது என்பது தனிநபர்களையும் குழுக்களையும் அமைதிக்கால நெறிமுறை விதிமுறைகளுக்கு முரணான செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, சியரா லியோன் உள்நாட்டுப் போரில் (1991–2002) குழந்தைப் போராளிகள் பாதிக்கப்பட்டவர்களாகவும் குற்றவாளிகளாகவும் இருந்தனர்; இது பொறுப்புக்கூறல் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைச் சிக்கலாக்கியது. இலங்கை நிலவரத்தில் விடுதலைப்புலிகள் சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தியமை, தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அக அறச்சங்கடங்களை உருவாக்கியதால், போர் தார்மீகக் கோடுகளை மங்கச் செய்தது. அதே நேரத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை போன்ற அரசு அட்டூழியங்கள் அறம்சார் அவலத்தின் இன்னொரு பக்கத்தை எடுத்துரைத்தன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு மற்றும் அரசாங்க வன்முறைக்கு இடையில் சிக்கிய தமிழ்ப் பொதுமக்கள், உயிர்வாழ்வினால் இயக்கப்படும் தார்மீக சமரசங்களை எதிர்கொண்டனர்; பொறுப்புக்கூறலைச் சிக்கலாக்கினர்.

2. போட்டியிடும் கதையாடல்கள்: வெவ்வேறு குழுக்கள் – பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பார்வையாளர்கள் – நீதி மற்றும் பொறுப்புக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறவெறிக்குப் பிந்தைய தென்னாபிரிக்காவில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் தண்டனை நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுடன் மறுசீரமைப்பு நீதியைச் சமநிலைப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டது, மன்னிப்புக்கும் பழிவாங்கலுக்கும் இடையிலான பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்குள், விடுதலைப் புலிகள் மீதான மாறுபட்ட கருத்துகள் – சிலரால் சுதந்திரப் போராளிகளாகவும், மற்றவர்களால் ஒடுக்குமுறையாளர்களாகவும் – அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. வெளிப்புறமாக, சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசின் ‘வெற்றி’ மற்றும் போர்க்குற்றங்களை மறுப்பது பற்றிய கதையாடல்கள் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்துகின்றன.

3. வளப் பற்றாக்குறை: போருக்குப் பிந்தைய சமூகங்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வளங்களை எதிர்கொள்கின்றன. புனரமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு அல்லது இழப்பீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் கடினமான தேர்வுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. போருக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு சிங்களவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்புகள், புத்த விகாரைகளின் கட்டுமானம் மற்றும் தொல்லியல்துறை மூலம் அரசு ஆதரவுடன் ‘சிங்களமயமாக்கல்’ மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்ச் சமூகங்களுக்கான வரையறுக்கப்பட்ட வளங்கள் பொருளாதார மீட்சிக்கு எதிராக நீதிக்கு முன்னுரிமை அளிப்பதைவிட அறம்சார் விவாதங்களை அதிகரிக்கின்றன.

4. நிறுவனரீதியான அவநம்பிக்கை: போர் பெரும்பாலும் நிர்வாகக் கட்டமைப்புகளை அழித்து, அறம்சார் முடிவெடுப்பதில் சட்டபூர்வமான தன்மை இல்லாத ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. குறிப்பாக போரின் முடிவு ஒரு தரப்புக்கு வெற்றியைத் தருகின்றபோது தோல்வியடைந்த தரப்பின் மக்கள்கூட்டம் நிறுவனரீதியாக ஒதுக்கப்படுகிறது. அதிகளவான இராணுவப் பிரசன்னம், கண்காணிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தன்னிச்சையான கைதுகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமை உள்ளிட்டவற்றைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்கிறது. இது அரசு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைச் சிதைத்து, அறம்சார் நிர்வாகத்தை மழுப்பலாக்குகிறது.

அகமுரண்பாடுகள்சார் அறம்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகம், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், ஆழமான அறம்சார் சவால்களை எதிர்கொண்டுள்ளது. போருக்குப் பிந்தைய சூழலில் தார்மீகத் தெளிவின்மை, போட்டியிடும் கதையாடல்கள் மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டல் ஆகியவை பல்பரிமாணரீதியில் அறம் என்கிற விடயத்தை  ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாற்றியுள்ளது. தமிழ்ச்சமூகத்தில் நிலவும் அக முரண்பாடுகளைப் புற முரண்பாடுகள் மேவியுள்ளதால், அகமுரண்பாடுகள் சார்ந்த விடயங்கள் பேசப்படுவது குறைவு. இந்த விடயங்கள் மூன்று முக்கியமான தளங்களில் சிக்கலானவை. இதனாலேயே தமிழ்ச் சமூகம் அறம்சார் அம்சங்களைச் சவாலுக்குட்படுத்தும் உள் முரண்பாடுகளுடன் போராடுகிறது:

1. விடுதலைப்புலிகளின் மரபு மற்றும் பொறுப்புக்கூறல்: விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரத் தந்திரோபாயங்கள், எதிர்ப்பை அடக்குதல் மற்றும் அவர்களின் அரசியல் எதிராளிகளை – தமிழர்களை குறிவைத்தல் உட்பட்டவை ஒரு சிக்கலான சித்திரத்தை வழங்குகின்றன. இது அவர்களின் போராட்டத்தை மகிமைப்படுத்துவதற்கும் அவர்களின் துஷ்பிரயோகங்களை ஒப்புக்கொள்வதற்கும் இடையிலான அறம்சார் கேள்விகளை எழுப்புகின்றன. எடுத்துக்காட்டாக, 1980களில், போட்டியாளர்களான தமிழ்ப் போராளிக் குழுக்களை விடுதலைப்புலிகள் ஒழித்தது; இது சமூகத்திற்குள் தொடர்ந்து பிளவுகளை உருவாக்கியது. இந்த முரண்பாடுகள் ஒரு பகிரப்பட்ட அறம்சார் கட்டமைப்பைச் சுற்றி ஒன்றிணைவதற்கான முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன.

2. சாதி மற்றும் பாலினம்: சாதிப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்க விதிமுறைகள் போன்ற உட்சமூகக் கட்டமைப்புகள், அறம்சார் பதட்டங்களை உருவாக்குகின்றன. போருக்குப் பிந்தைய காலத்தில், தமிழ்ப் பெண்கள், குறிப்பாக முன்னாள் போராளிகள், களங்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, 49% பேர் பதட்டத்தையும் 42% பேர் மனச்சோர்வையும் அனுபவிக்கின்றனர். இது பெரும்பாலும் சமூக எதிர்பார்ப்புகளால் அதிகரிக்கிறது. தமிழ்ச் சமூகத்திற்குள் சாதி அடிப்படையிலான பாகுபாடு, ஒற்றுமையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அதேவேளை போருக்குப் பிந்தைய சமூகத்தில் சாதிய மீளெழுச்சி சிக்கலான சமூகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

3. புலம்பெயர்ந்தோர்/ உள்ளூர் முன்னுரிமைகள்: புலம்பெயர்ந்த தமிழரில் ஒரு தொகுதியினர், சர்வதேச பொறுப்புக்கூறல் மற்றும் இனப்படுகொலை அங்கீகாரத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் உள்ளூரில் தமிழ் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருத்தாலும்கூட பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நில உரிமைகள் போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த வேறுபாடு கவனத்திற்குரியது. இது யாருடைய நலன்கள் முக்கியமானவை, யார் யாருக்காகப் போராடுவது போன்ற அறம்சார் விவாதங்களை உருவாக்குகிறது.

இந்தப் பின்புலம் மிகவும் முக்கியமானது. இம்மூன்று விடயங்களும் இன்றும் தமிழ் மக்களின் அறம்சார் செயலின்மைகளின் மையமாக உள்ளன. ஒரு சமூகமான எமது கடந்தகாலத்தை சுயவிமர்சன நோக்கில் பார்ப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற வினாவை இங்கு எழுப்புவது முக்கியமானது. போரின் முடிவின் 16 ஆண்டுகளின் பின்னர் ஈழத்தமிழரின் வாழ்வியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றதா என்பதை யோசித்தால் அரசியல் அரங்கிலும் பொருளாதார அரங்கிலும் அதற்கான பதிலைப் பெறுவது சிரமம் என்பதை நாமறிவோம். அதற்கப்பால் அறம்சார்ந்த சமூகமாக, அகமுரண்பாடுகளை அடையாளங்கண்டு ஏற்றுக்கொண்ட சமூகமாக நாம் இல்லை என்பதே இன்றைய முக்கிய சவாலாகும். இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் பேசுவதற்குச் சிரமமான சங்கடமான ஒரு விடயமாகும்.

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமும் பற்றிய தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்தகாலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை என்பதையும், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்கள் தவிர்க்க இயலாதன என்பதையும் நாம் ஏற்கவேண்டும். அதேவேளை நடந்து முடிந்த அனைத்தையுமே விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ மாறாக அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையினின்று விடுபடுவதும் முக்கியமானது. இது முக்கியமான ஒரு சமூகச் சவாலாகும். அறம் குறித்த பார்வைகள் இங்கு ஆழமான நேர்மையான பார்வையை வேண்டி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளை போராட்டத்தின் மையச்சக்தியாக ஆக்கிய அகக் காரணிகளையும் புறக் காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களை, மூர்க்கத்தனமான, நேர்மையற்ற நியாயப்படுத்தல்களைத் தவிர்த்து நோக்க வேண்டியுள்ளது. இதை வழிப்படுத்துவதற்கு அறம்சார்ந்த பார்வை முக்கியமானது.  ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கம் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியது. இது தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய கருவியாகும். இது அகமுரண்பாடுகளை மறைத்து தமிழர் என்ற பொது இனத்துவ அடையாளத்துக்குள் அனைத்தையும் கரைக்கும் ஒரு தந்திரமாகவே செயற்பட்டது என்பது உண்மை. அதேவேளை மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன்விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதைவிடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப்பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமல் போய்விடவில்லை. இன்று அவை, முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என்பதை இனியாவது நாம் உணர வேண்டும். தேசியத்தினுள் செயற்படும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாதபோது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது. விடுதலைப் புலிகளின் போரின்போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறுபலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகட்டும் நிலங்கட்கும் தொழில்கட்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக்கிடப்போரில் பெரும்பாலானோராக உள்ளனர். இவை ஒவ்வொன்றும் ஆழமாகப் பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். விடுதலைப் போராட்டம் என்பது அறம்சார்ந்தது என்ற புரிதலை நோக்கி நகர்தலும் அதை ஆழமாக விமர்சன நோக்கில் பார்க்கப் பழகுதலும் இன்றைய சூழலில் தவிர்க்கவியலாதது.

சமூக அசைவியக்கங்களில் அறம்சார் கேள்விகள்

போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அறம் குறித்த பார்வைகள் மிகவும் சிக்கலானவை. போரின் வீரமரபையும் விடுதலைப்போராட்டத்தையும் மையப்படுத்திய அறம்சார் பார்வை ஒருபுறமும், சமூகத்தின் பண்பாடு, மாண்பு, மானம், மரியாதை நோக்கிலான அறம்சார் பார்வை மறுபுறமுமாக கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஏராளமான வினாக்கள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. ஆனால் இவ்வினாக்கள் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாகத் தவறவிடுகின்றன. அது களயதார்த்தம் பற்றியது; அம்மக்களின் வாழ்நிலை பற்றியது. நீண்டகாலமாகப் பழக்கப்பட்ட சிந்தனைமுறை பற்றியது. ஆழமாக ஊறிப்போன பண்பாட்டு வரைமுறைகள் பற்றியது. 

முன்னாள் போர் வலயங்களுக்கு மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு சில ஆண்டுகள் கடந்திருந்த நிலையில் கள ஆய்வுக்காக கிளிநொச்சியில் இருந்து அரச பேரூந்தில் பயணமொன்றை மேற்கொண்டிருந்தேன். ஒரு தரிப்பிடத்தில் பேரூந்து நின்றது. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் பேரூந்தில் முன்பக்கமாக ஏறினார்கள். அவர்களின் தோற்றம் ஏழ்மையை உறுதிசெய்தது. வாடி மெலிந்த தேகம், ஆனால் முகத்தில் நம்பிக்கையும் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளும் இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள். எனக்குப் பின்னால் இரண்டு ஆண்குரல்களின் உரையாடலைத் தற்செயலாகக் கேட்கக் கிடைத்தது. அந்த உரையாடல் இவ்வாறு தொடர்ந்தது:

“இதுகள் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருந்திருக்கலாம். போராடப் போறம் என்று போய் எல்லாத்தையும் சீரழிச்சு இண்டைக்கு நடுத்தெருவில நிக்கிதுகள்.”

“இவயின்ர அப்பா, அம்மாவைச் சொல்லோனும். அவையள் எல்லோ கண்டிச்சிருக்கோணும்”.

“அப்படிச் சொல்லேலா, இவையளுக்கு அறிவெங்க போனது.”

“இதுகள் இயக்கத்துக்குப் போகேக்க 16 வயதுகூட இராது”.

“எல்லாம் முடிஞ்சுபோச்சு. இப்ப இவையளுக்கு யாருமில்லை”.

இதற்கு மேல் அந்த உரையாடலைக் கேட்க மனமில்லாமல், அவ்விடத்தில் இருந்து எழுந்து பேரூந்தின் பின்னால் நடக்கத் தொடக்கினேன். அப்போது அக்குரல்களுக்கு உரியவர்கள் யார் என்பதை அறியும் நோக்கில் அவர்களை நோட்டமிட்டேன். அக்குரல்களிற்குரியவர்கள் கிட்டத்தட்ட 60 வயதை உடையவர்கள்; உள்ளூர்க்காரர்கள்; சாரமும் பழைய சேர்ட்டும் அணிந்திருந்தார்கள். அவர்களுக்கு இப்பெண்களை நன்கு தெரிந்திருந்தது என்பதையும் என்னால் உணர முடிந்தது.

I-1-19.jpg

இந்நிகழ்வு அறம்சார் கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது. முதலாவது, இந்தப் பெரியவர்களின் விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. அந்தப் பெரியவர்கள் வெளிநபர்கள் அல்லர். அவர்களும் போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து, மீளக்குடியேறி அதேசமூகத்தில் வாழ்பவர்கள். அவர்களின் கருத்துகள்தான் அச்சமூகத்தின் பொதுக்கருத்து என்று எடுத்துக்கொள்வதா? அல்லது இரண்டு தனிநபர்களின் கருத்து என்று ஒதுக்கிவிடுவதா? விடுதலைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது என்ற கருத்தை இந்த உரையாடல் தகர்க்கிறது. அவ்வாறு இருந்திருக்குமாயின், இவ்வாறான குரல்கள் எழுந்திருக்காதல்லவா? விடுதலைப் போராட்டம் குறித்த மக்களின் எண்ணவோட்டம் என்னவாக இருந்தது? இன்றும் பெண்கள் குறித்த எம்சமூகத்தின் பார்வை என்ன?

இரண்டாவது, முன்னாள் போராளிகள் இவ்வாறு அனாதரவாய் விடப்பட்டமையை எவ்வாறு புரிந்துகொள்வது. உலகெங்கும் கோலாகலமாக ஈழத்தமிழர்கள் நிகழ்வுகளைச் செய்கிறார்கள். மாவீரர் தினங்கள், மே 18 எனப்பல நிகழ்வுகள் நடக்கின்றன. மில்லியன் கணக்கான பணம் சேர்க்கப்படுகிறது. ஆனாலும் வன்னி நிலப்பரப்பில் வாழும் ஒரு தொகுதி மக்கள் இவ்வாறு திக்கற்றவர்களாக விடப்பட்டிருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? இவ்விடத்தில் அறத்தின் அளவுகோல் என்ன? வன்னியில் ஒருதொகுதி மக்கள் அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும்போது, இவ்வாறான கொண்டாட்டங்கள் அறமா? அல்லது இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டுமா? பொறுப்புக் கூறவேண்டியவர்கள் புலம்பெயர்ந்த தனிமனிதர்களா? அமைப்புக்களா? அல்லது விடுதலைப்புலிகளின் கட்டமைப்புகளைத் தொடர்ந்து பேணுகிறோம் என்று அறிவித்துக் கொண்டவர்களா?

இந்த உதாரணம் அறம்சார்ந்த அம்சங்களின் சிக்கல்தன்மையைப் புலப்படுத்துகிறது. அதேவேளை இந்தக் கேள்விகளுக்கு நாம் சமூகமாக முகம் கொடுத்தாக வேண்டும். இந்த மனநிலை ஈழத்தமிழரிடம் இல்லை என்று அப்பால் நகர்ந்துவிட முடியாதபடியே நிகழ்வுகள் நடக்கின்றன. அதை நாம் ஏற்றாக வேண்டும். போரின் வடுக்களைச் சுமந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அறம் யாது? அதன் அளவுகோல்கள் என்ன? அவை சரியானவையா? போன்ற பதிலில்லாக் கேள்விகள் இன்றும் எம்மிடமுண்டு.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டபோது உயர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்துவந்த காலப்பகுதியில் அம்மக்கள் குறித்த ஏராளமான கதைகள் உலாவின. அவை கதைகள் என்பதைவிட நிகழ்வுகளின் பொதுமைப்படுத்தல்கள் என்று சொல்வது பொருத்தம். அவ்வாறான ஒரு கதைதான் ‘மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களில் வலுவற்றோர் இராணுவத்தால் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்’ என்பது. இந்தக்கருத்து பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்தேசங்களில் இது பாரிய பேசுபொருளானது. இது மிகக்கொடுமையான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இதன் செயற்படு தன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நினைத்தேன். எனது பணியிடத் தேவையின் பொருட்டு, இந்த விடயத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக, அதன் ஆழ – அகலங்களை விளங்கிக்கொள்வதற்காக வன்னிக்குச் சென்றேன்.

எனக்கு நன்கு பழக்கமான மனிதாபிமானப் பணியாளர்கள் பலரைச் சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் சொன்ன ஒரு விடயம், ‘இது பேசப்படுவதைவிட மிகச் சிக்கலான ஒன்று’. ஒற்றைப் பரிமாணத்தில் இதைப் பார்க்க முடியாது. அதேவேளை பலர் இது குறித்து விரிவாகப் பேசுவது சரியாக இராது என்று கருதினர். இன்னும் சிலர், இராணுவப் பிரசன்னத்தை அகற்றுவதற்கு இந்தக் கதையாடல் அவசியமானது, எனவே இப்போது சொல்லப்படுகின்ற அதேகதையாடல் தொடர வேண்டும் என்று விரும்பினர். பெரும்பாலானோரது கருத்து, ‘இந்த அதிர்ச்சி வைத்தியம் ஏற்படுத்தும் கவனயீர்ப்பு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்திற்கு முக்கியமானது’ என்பதாகும். அவர்கள் குறித்த விடயத்தை ஆழமாக ஆராயாமல் இப்படியே விட்டுவிடுவது நல்லது என்று கருதினர்.

சிலருக்கு அதில் மாற்றுக்கருத்து இருந்தது. உண்மை முக்கியமானது. அதேவேளை திரிக்கப்பட்ட உண்மை, நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்யவல்லது என்று அவர்கள் கருதினர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார், “நான் உங்களை இதனோடு தொடர்புடைய சிலரிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். பிறகு நீங்களே முடிவெடுங்கள்.” அதன்படி பலருடன் பேசக் கிடைத்தது. அதில் ஒரு உரையாடல் மட்டும் இன்றும் மனதை உலுக்கும் ஒன்றாக இருக்கிறது. அதைமட்டும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

I-2-19.jpg

அது வன்னியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வீடு. அதை வீடு என்று சொல்வதைவிட தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக இருப்பிடம் என்று சொல்வது பொருத்தம். மரம், தடிகள், தகரம் கொண்டு அமைக்கப்பட்டது. அங்கு ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு அவ்வளவு வயதல்ல. 25 வயதினைத் தாண்டியிருக்காது. அப்பெண் மிகவும் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசினார். வாழ்க்கை குறித்த அச்சவுணர்வு அப்பெண்ணிடம் இருக்கவில்லை. அப்பெண் சொன்னவற்றைச் சுருக்கமாகத் தருகிறேன்:

“நான் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சண்டை மீண்டும் தொடங்கிவிட்டது. இயக்கம் மீண்டும் ஆள்சேர்க்கத் தொடங்கியிருந்தது. என்னையும் கூட்டிப்போய்விடுவார்கள் என்று அப்பா பயந்தார். கலியாணம் கட்டிவைத்தால் பாதுகாப்பு என்று கருதினார். எனக்குத் திருமணம் நடந்தது. எனது கணவர் சிறுவியாபாரமும் விவசாயமும் செய்துவந்தார். மெதுமெதுவாக இடப்பெயர்வுகள் தொடங்கின. திருமணமானவர்களையும் இயக்கத்தில் இணைக்கத் தொடங்கினர். அதிலிருந்து தப்புவதற்காக நான் கர்ப்பமானேன். எனது கணவரை அழைத்துச் சென்றுவிட்டார்கள். யுத்தம் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் திரும்பி வந்தார். நாம் ஒன்றாகப் பாதுகாப்புத்தேடி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள்மீது விழுந்த குண்டில் எனது கணவர், எனது அப்பா, அம்மா என எல்லோரும் கொல்லப்பட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் உயிர்தப்பிவிட்டேன். எனது குழந்தையை முகாமில் பெற்றெடுத்தேன். என் அம்மாவுக்கு சொந்தமான நிலத்தில் மீளக்குடியமர்ந்தேன். தரப்பாள் வீடுதான். எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனது பிள்ளையை யாரிடமும் விட்டுவிட்டு கனதூரத்திற்கு வேலைக்குப் போகவும் இயலாது. கொஞ்சக்காலம் நிறுவனங்களின் உதவியில் வாழ்ந்தேன். பின்னர் வறுமையில் வீழ்ந்தேன். எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை. ஆண்துணையற்ற பெண்ணாக குழந்தையோடு வாழ்வது மிகவும் பாதுகாப்பற்றது. எனது சமூகமே என்னை ஒதுக்கியது. எனது ஊர் ஆண்களே என்னை அணுகினார்கள். உதவி செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் அதன் பின்னால் இருந்த நோக்கம் இரகசியமானதல்ல. ஒவ்வொரு இரவும் அச்சத்துடனேயே கழிந்தது. யாராவது இரவில் வலுக்கட்டாயமாக வந்துவிடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. எங்கள் ஊர் ஆண்கள் ஒருபுறம் என்றால் இராணுவச் சிப்பாய்கள் மறுபுறம். அவர்களின் பார்வையும் விசாரணைகளும்கூட உறுத்தலாய் இருந்தது. ஒருநாள் குழந்தையுடன் நான் நடந்துசெல்லும்போது, தற்செயலாக எமது பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி என்னைக்கண்டார். என்னைப் பற்றி விசாரித்தார். குழந்தைக்கு உணவு வாங்கும்படி சிறுதொகைப் பணத்தைத் தந்துவிட்டுப் போனார். இப்போதும் அடிக்கடி அவர் என் வீட்டுக்கு வருகிறார். என்னை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவர் என்னிடம் வருவதால் ஏனைய இராணுவச் சிப்பாய்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. நலவிசாரிப்புகள் இல்லை. அவ்வளவு பயம். எங்கள் ஊர் ஆண்களின் சொறிச்சேட்டைகள் இல்லை. நான் இப்போதுதான் பாதுகாப்பாக உணர்கிறேன்.”

இது ஆழமான அதேவேளை பேசப்படாத, பேசப்படவிரும்பாத ஒரு பேசுபொருளை உடையது. சமூக அறம், மானம், போன்ற மறைப்புகளுக்கு அப்பால் போரின் பின்னான சமூகங்களில் வாழ்வோரின் நித்திய போராட்டத்தின் ஒரு சிறுதுளிதான் இது. இந்த விடயத்தில் அறம்சார் உயர்நிலை என்ற பெயரில் அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்லமுடியமா? இதைப் பாலியல்தொழில் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலுமா? அந்தப் பெண்ணையோ, அவரின் நடத்தையையோ மதிப்பிடும் அதிகாரத்தை யார் தந்தது? இவ்வாறு பல கேள்விகளைத் தொடர்ச்சியாக நாம் எழுப்பிய வண்ணமே இருக்கலாம்.

போருக்குப் பிந்தைய சூழலில் அறம் என்பது எவ்வளவு சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன இரு உதாரணங்களும் போதுமானவை. இந்தப் பின்புலத்திலேயே தமிழ்ச் சமூகத்தின் அறம் பாடுதல், அறம் பறைதல் ஆகிய இரண்டையும் நோக்கியாக வேண்டும்.

போருக்குப் பிந்தைய சூழலில், பல குழுக்கள் தங்களது கொடுமைகளை, நஷ்டங்களை மற்றும் நினைவுகளை தம்மோடு சுமந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒருவரோ ஒரு குழுவோ “நாங்கள் அறமானவர்கள்” என்று கூறுவது மற்றவர்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தலாம். இது உணர்வுபூர்வமான எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே அறம்சார் உயர்நிலையை எடுப்பதென்பது சிக்கலானது. அதேவேளை இது பல சமயங்களில் அதிகாரமிக்கவர்களின் ‘மதிப்பீட்டுச் சிதைவான பார்வை’ (Biased perception) ஆக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்; இது நீதிக்கு எதிரானதாகவும் இருக்கலாம். போரினால் சிதறுண்ட சமூகங்களில் பலநிலை உண்மைகள் (Multiple truths) உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்க்காலங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும், குழுவுக்கும் தங்கள் பார்வை இருக்கிறது. “நாங்கள்தான் நியாயம் பேசுகிறோம்” என்று ஒருபக்கம் சொல்வது, மற்ற உண்மைகளை நிராகரிப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் கொள்ளப்படும். “நாங்கள் அறத்தோடு இருக்கிறோம்” என்று ஒருவர் சொல்வது, உண்மையான வருத்தங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்துகொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்கும். இது சமூகப் பிணைப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

நிறைவுக் குறிப்புகள்

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிளவுபட்ட சமூகங்களில் போருக்குப் பிந்தைய சூழலில் அறம்சார் நிலைப்பாட்டை எடுப்பதானது பல முக்கிய சவால்களைக் கொண்டது. போருக்குப் பிந்தைய சமூகங்களில், வெவ்வேறு குழுக்களுக்கு இடையே ஆழமான நம்பிக்கையின்மை இருக்கும். அறவிழுமியம்சார் நிலைப்பாடு எடுக்க முயல்பவர்கள், ஒரு தரப்பினரால் சந்தேகத்துடன் பார்க்கப்படலாம் அல்லது அவர்களது நோக்கங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது ஒரு தரப்பை மற்றொரு தரப்பிடமிருந்து மேலும் தனிமைப்படுத்தலாம்.

போருக்குப் பிந்தைய சமூகங்களில், அடிப்படைத் தேவைகளான உணவு, உறைவிடம், மற்றும் பாதுகாப்பு ஆகியன முன்னுரிமையாக இருக்கும். இதனால், உயர்ந்த அற நிலைப்பாட்டை எடுப்பது பல சமயங்களில் அடிப்படைத் தேவைகளையே கேள்விக்குட்படுத்தும். இந்நிலையில் அறமா? உணவா” என்ற கேள்வி எழும்போது, உணவே பிரதானம். இந்த நிலைப்பாட்டை எடுத்தவர்களை அறமற்றவர்கள் என்று சொல்ல முடியுமா?

இலங்கைச் சூழலில் போருக்குப் பிந்தைய தமிழ்ச்சமூகம் மீது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒருபிரிவினர் வைக்கிற ஒரு குற்றச்சாட்டு, ‘இவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டார்கள், மாறிவிட்டார்கள், விடுதலைப் போராட்ட உணர்வற்றவர்கள்.’ இந்தப் பிரிவினர் சோறா, சுதந்திரமா? என்ற வினாவுக்கு சுதந்திரமே பிரதானம் என்பவர்கள். ஆனால் வன்னியில் மக்களைப் பொறுத்தவரை முதலில் சோறு. ஏனெனில் அன்றாட உயிர்வாழ்க்கையே அவர்களுக்குச் சவாலானதாக இருக்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அறம்சார் உயர்ந்த நிலைப்பாடு எடுப்பது ‘பயனற்ற’ அல்லது ‘எதார்த்தமற்ற’ ஒன்றாகவே கருதப்படுகிறது.

தமிழ்ச்சமூகமாக நாம் கேட்கவேண்டிய சில கேள்விகள் உண்டு. நாம் அறம்பாட முதல் இந்த வினாக்களுக்கு இதயசுத்தியுடன் பதில்தேட விளைவது பயனுள்ளது:

போருக்குப் பிந்தைய இலங்கையில் தமிழ்ச் சமூகத்திற்கு, ஏன் அறம்சார் சிக்கல்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன?

தமிழ்ச் சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் மீட்சிக்கு எவ்வகையான உள் மற்றும் வெளிப்புற அறப்பிரச்சினைகள் சவால் விடுகின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ள அக முரண்பாடுகள் அறம்சார் நெறிமுறைகளை எவ்வாறு கேள்விக்குள்ளாக்குகின்றன?

அறம்சார் முன்னுரிமைகளை வடிவமைப்பதில் நீதி, நல்லிணக்கம் மற்றும் வள ஒதுக்கீடுகள் எவ்வகையான பங்கை வகிக்கின்றன?

தமிழ்ச் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் குணப்படுத்துதலை வளர்ப்பதற்கு, தமிழ்ச் சமூகம் இந்த அறம்சார் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்?


About the Author

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

https://www.ezhunaonline.com/post-war-morality/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.