Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2025-05-25T122740.867.jpg?re

கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருவனந்தபுரம் – விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த கப்பல் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழையினால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய நேரப்படி நேற்று இரவு 10.00 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2025/1433111

  • கருத்துக்கள உறவுகள்

அபாயகரமான இரசாயனங்களுடன் உடன் சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது - 24 ஊழியர்கள் மீட்பு

26 MAY, 2025 | 10:27 AM

image

திருவனந்தபுரம்: அபாயகரமான இரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பல் ஒருபக்கமாக சாயத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 21 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 3 பேர் சரக்கு கப்பலில் தொடர்ந்து தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பல் கடலில் மூழ்காமல் இருக்க 3 பேரும் அதிதீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலை சேர்ந்த வீரர்கள் நேற்று மீதமிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சரக்கு கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது.

சரக்கு கப்பலில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் சுமார் 20 கடல் மைல் தொலைவுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவை கேரள கடல் பகுதியில் கலந்து வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 24 பேர் லைபீரிய சரக்கு கப்பலில் பணியாற்றினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். என்ன காரணத்துக்காக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கப்பலின் மாலுமிகள், பொறியாளர்களிடம் விசாரித்து வருகிறோம்.

கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் கலந்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளின் கடல் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கும் அபாயமும் இருக்கிறது. எனவே மீனவர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள கடல் பகுதியில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், எண்ணெயை அகற்றுவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடலோர காவல் படையை சேர்ந்த சாக்சம் என்ற கப்பல், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கடற்படையின் கண்காணிப்பு விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா கடல் பகுதிகள், கடற்கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

https://www.virakesari.lk/article/215691

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் கடலில் மூழ்கிய கப்பல்; கரை ஒதுங்கும் ஆபத்தான கொள்கலன்கள் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

26 MAY, 2025 | 11:24 AM

image

கேரள கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய எம்.எஸ்.சி எல்சா 3 (MSC ELSA 3) சரக்குக் கப்பலில் இருந்த கொள்கலன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. இன்று (மே 26) கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் நான்கு கடலோரப் பகுதிகளில் இந்த கொள்கலன்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகையப் பொருட்களிலிருந்து மக்கள் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கப்பலில் 640 கொள்கலன்கள் கண்டெய்னர்கள் இருந்ததாகவும் அவற்றில் 13 "அபாயகரமான சரக்குகளையும்" 12 கால்சியம் கார்பைடையும் கொண்டிருந்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்திருந்தது. மேலும்கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசலும் 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் ஆயிலும் இருந்தன.

kochi_ship_1.jpg

இதையடுத்து மூழ்கிய கப்பலில் இருந்து வரும் கொள்கலன்கள் பலத்த காற்று மற்றும் நீரோட்டங்களுடன் மத்திய மற்றும் தெற்கு கேரளக் கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதால் மாநில அரசு கடற்கரையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தவிர கப்பலில் இருந்து கசியும் எண்ணெய் கேரளக் கடற்கரையின் எந்தப் பகுதியையும் அடையலாம் என்பதால் அது குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கசிந்த எண்ணெய்யின் மாசு வெளியான 36-48 மணி நேரத்திற்குள் ஆலப்புழா அம்பலப்புழா ஆற்றுப்புழா மற்றும் கருநாகப்பள்ளி ஆகிய கடலோரப் பகுதிகளை அடையலாம் என்று கூறியிருந்தது. "இந்தக் கடலோரப் பகுதிகள் மாசுபடும் அபாயத்தில் உள்ளன. சாத்தியமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்றும் அது குறிப்பிட்டது.

கரைக்கு ஒதுங்கிய கொள்கலன்களுக்கு அருகில் செல்பவர்களுக்கு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. சில கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதால் மக்கள் அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த சுங்கத்துறை அவற்றை ஆய்வு செய்யும்.

kochi_ship.jpg

தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் ( வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறைக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எண்ணெய் கசிவு கரைக்கு வரும் பட்சத்தில் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெற்கு மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் தலா இரண்டு துரித குழுக்களையும் வடக்கு மாவட்டங்களில் தலா ஒன்றையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/215704

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் - அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD

படக்குறிப்பு,கடலில் கவிழ்ந்த MSC_ELSA3 கப்பல்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 26 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 27 மே 2025

அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.

கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

என்ன நடந்தது?

மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் தனது பயணத்தை தொடங்கியது MSC ELSA 3 சரக்குக் கப்பல் . லைபீரிய நாட்டுக் கொடியுடன் ரஷ்யா, ஜார்ஜியா, யுக்ரேன், பிலிபினோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவுடன் கொச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

விழிஞ்சம் துறைமுகம் பெரும் சரக்குக் கப்பல்களை கையாள சமீபத்தில் தொடங்கப்பட்டதாகும். இது ஒரு ஆழ்கடல் கொள்கலன் சரக்கு ஏற்றும் துறைமுகமாகும்.

அங்கிருந்து புறப்பட்ட MSC ELSA 3 மே 24ம் தேதி கொச்சி துறைமுகத்தை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால் மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு கப்பலிலிருந்து ஒரு அபாய அழைப்பு வந்தது.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD

படக்குறிப்பு, மே 24ம் தேதி அதிகாலை 12:15 மணிக்கு இந்திய கடலோர காவல்படைக்கு அபாய அழைப்பு

640 கண்டெய்னர்களை ஏந்திக் கொண்டு கொச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, 184 மீட்டர் நீள கப்பலான MSC ELSA 3 சாயத் தொடங்கியது. கொச்சியிலிருந்து தென்மேற்கு திசையில் 38 நாடிக்கல் மைல் தூரத்தில் இருந்த போது தோராயமாக 26 டிகிரி அளவில் சாய தொடங்கியது சரக்குக் கப்பல்.

உடனடியாக இந்திய கடலோர காவல்படை அருகில் இருந்த கப்பல்களை மீட்புப் பணிகளுக்கு திருப்பிவிட்டது. நிலைமைகளை கண்காணிக்க வானில் விமானமும் வந்தது. கப்பல் தொடர்ந்து சாய்ந்துக் கொண்டே இருந்தது, சில கண்டெய்னர்கள் கடலில் விழத் தொடங்கின.

மே 24ம் தேதி மாலையில் இந்திய கப்பற்படை மீட்புப் பணியில் இறங்கியது. கப்பலில் உள்ள 24 பேரை மீட்க INS Satpura, INS Sujata என இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டன. INS Sujata இரவு 7 மணிக்கு வந்தது, INS Satpura எட்டு மணிக்கு வந்தடைந்தது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே 24ம் தேதி தொடங்கியிருந்தது. எனவே கடலில் வானிலை மோசமாக இருந்தது. "நாங்கள் மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. காற்று மணிக்கு 74.08 கி.மீ (40 நாட்ஸ்) வேகத்தில் வீசியது. கடலில் கழிவுகளும் கண்டெய்னர்களும் மிதந்தன. இதனால் இரவு நேரத்தில் கப்பலை நெருங்கிச் செல்வது கடினமாக இருந்தது" என்று INS Sujata கப்பலின் கேப்டன் அர்ஜூன் ஷேகர் ஏ என் ஐ செய்தி முகமைக்கு தெரிவித்தார்.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD

படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட ஊழியர்கள்

கப்பலிலிருந்த 24 பேரில் 21 பேர் உயிருக்கு ஆபத்தில்லாமல் அன்று இரவு மீட்கப்பட்டனர். கப்பலில் இன்னும் கண்டெய்னர்கள் இருந்ததாலும், கப்பல் முழுமையாக கவிழாததாலும், அதில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, நிலைமைகளை கண்காணிக்க கப்பலின் மாஸ்டர், தலைமை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் கப்பலிலேயே இருந்தனர்.

இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பற்படையினரின் கண்காணிப்புகளுக்கு இடையே அன்றிரவை மூவரும் கப்பலிலேயே கழித்தனர். மே 25ம் தேதி அதிகாலை சரக்குகள் வைக்கப்படும் பகுதி ஒன்றில் கடல்நீர் வெள்ளம் போல் உள்ளே நுழைந்தது. கப்பல் "வேகமாக" ஒரு புறம் கவிழத் தொடங்கியது. "அவர்கள் மூவரும் மேலும் அந்த கப்பலில் இருந்தால் அவர்களுக்கு ஆபத்தாகும் என்று கருதப்பட்டது" என்று இந்திய கப்பற்படை செய்தி தொடர்பாளர் அதுல் பிள்ளை தெரிவித்தார். ரஷ்யாவை சேர்ந்த கப்பலின் மாஸ்டர் உட்பட மூன்று பேரும் கப்பலை விட்டு வெளியேறினர். INS Sujata கப்பலில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல் INS Sujata கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டது

பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD

படக்குறிப்பு, INS Sujata கப்பல் மீட்புப் பணியில் ஈடுபட்டது

கப்பலில் என்ன இருக்கிறது?

MSC ELSA 3-ல் "640 கண்டெய்னர்கள் இருந்தன. அவற்றில் 13 கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்கு இருக்கிறது, 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது. மேலும் கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் ஃபர்னஸ் எண்ணெய் இருந்துள்ளது" என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்தை தவிர்க்க, கடலோர காவல்படையின் இரண்டு கப்பல்கள் 'சக்‌ஷம்' மற்றும் 'சமர்த்' மாசு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு டார்னியர் விமானமும் இந்தப் பணியில் இறங்கியுள்ளது.

இதையடுத்து, கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா கடற்கரை பகுதி முழுவதுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "எண்ணெய் கசிவு கேரள கரையில் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம். கண்டெய்னர்கள் கடலில் மணிக்கு 3 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. கண்டெய்னர்களில் இருக்கும் எண்ணெய் தவிர, கப்பலில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளும் கசியத் தொடங்கியுள்ளது" என்று உயர்மட்டக் கூட்டத்தின் முடிவில் கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 26ம் தேதி கொல்லம் மற்றும் ஆலப்புழா கரை அருகே கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. கண்டெய்னர்களில் ஆபத்தான சரக்குகள் இருக்கலாம் என்பதால் அவற்றை பொது மக்கள் தொட வேண்டாம் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

படக்குறிப்பு,MSC_ELSA3 கப்பல் கவிழ்ந்த இடம்

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எந்த திசையில் செல்லும்?

கடலில் காற்றின் திசை தெற்கு நோக்கியே வீசுவதால் கண்டெய்னர்கள் தெற்குப் பக்கமாகவே நகரக்கூடும் என்று மூத்த கடல்வள ஆராய்ச்சியாளரும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானியுமான டாக்டர் சுனில்குமார் முகமது கூறுகிறார். "கொச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த கப்பல் 30 கி.மீ வரை தெற்கு நோக்கிச் சென்ற பின்பே கவிழ்ந்துள்ளது. கப்பல் கவிழ்ந்த இடத்திலிருந்து 60 கி.மீ தெற்கு திசையில் கொல்லத்தில் கண்டெய்னர் கரை ஒதுங்கியுள்ளது. எனவே வடக்கு திசையில் இது நகர்வதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு" என்கிறார்.

இது குறித்து INCOIS (கடல்சார் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்) தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, "மே 25ம் தேதி இரவு 11 மணி நிலவரப்படி எண்ணெய் தென்கிழக்கு திசையில் நகர்கிறது. மே 26ம் தேதி காலை 11 மணியளவில் கிழக்கு-தென் கிழக்கு திசையில் எண்ணெய் கசிவு தொடர்ந்து கரையை நோக்கி நகரும். சுமார் 12 மணி நேரங்களுக்குப் பிறகு மே 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஆலப்புழாவுக்கு அருகில் கரையை அடைந்து, 11.4 நாடிக்கல் மைல் அளவுக்கு கரையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மறு நாள் மே 27ம் தேதி பாதிப்புக்குள்ளான கரையின் நீளம் 23 நாடிக்கல் மைல்லாக அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படுவதற்கு 80% வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுளது.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

INCOIS இயக்குநர் பாலகிருஷ்ணன் டி எம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எண்ணெய் கசிவு கொல்லம், ஆழப்புழா தாண்டி திருவனந்தபுரம் வரை செல்லும் என்று கணிக்கிறோம். இப்போது வரை எண்ணெய் அளவு அதிகமாக இருப்பதாக தெரியவில்லை. எனவே தமிழ்நாடு கரை வரை செல்லாது என்று நினைக்கிறோம்" என்றார். எனினும் கண்டெய்னர் மற்றும் கப்பலின் பாகங்கள் கன்னியாகுமரி வரை செல்லக்கூடும்" என்றார்.

ஆனால் உண்மையில் எவ்வளவு எண்ணெய் கசிந்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்பதே இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் என்றார். "அதிக அளவிலான எண்ணெய் கசிந்திருந்தால் அது அதிக தூரம் செல்லக்கூடும். சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட போது 100 கி.மீ வரை தெற்கு நோக்கி நகர்ந்தது. அதே போன்று இதிலும் அதிக அளவிலான எண்ணெய் இருந்தால், அது தமிழ்நாடு கரையை தொடக்கூடும். இரண்டு மூன்று நாட்களில் கன்னியாகுமரி வந்தடையும் அங்கிருந்து இலங்கை வரை கூட செல்லும், இது தான் எண்ணெய் கசிவின் கணிக்கப்பட்ட பாதையாக இருக்கும்" என்றார்.

என்ன ஆபத்து ஏற்படலாம்?

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,DR.BALAKRISHNAN

படக்குறிப்பு,பாலகிருஷ்ணன் டி எம், INCOIS இயக்குநர்

இந்தக் கப்பலில் 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைட் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்சியம் கார்பைட் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை துரிதமாக பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், இது மனித உட்கொள்ளுதலுக்கு உகந்தது அல்ல. இந்த விபத்தின் மூலம் கால்சியம் கார்பைட் கடலில் கசியலாம் என்று அஞ்சப்படுகிறது. "கால்சியம் கார்பைட் கடல்நீருடன் கலக்கும் போது, அது அசிடிலின் வாயுவாக மாறும். அது வாயுவாக மாறும் போது, ஆவியாக வெளியேறிவிடும் என்பதால் பெரும் பாதிப்புகள் எதுவும் இருக்காது" என்று கூறும் சுனில் முகமது இது குறுகிய கால பாதிப்பே, நாம் கவலைப்பட வேண்டிய நீண்ட கால பாதிப்புகள் பல இருக்கின்றன என்கிறார் சுனில்குமார் முகமது.

எண்ணெய் கசிவால் நீண்ட கால பாதிப்புகளின் தாக்கமே அதிகமாக இருக்கும். "இப்போது ஆலப்புழா கரைப்பகுதிகளில் காற்று மற்றும் அலைகள் காரணமாக கடலுக்கு அடியில் மண் திட்டுகள் (mud banks) உருவாகும் காலம். இந்நேரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், நீர், மற்றும் மண்ணுடன் சேர்ந்து அது கலந்து கருப்பு உருண்டைகள் (tar balls) உருவாகும். அவை கடலில் மிதந்து கரையை வந்து சேரும். 80 டன் எரிபொருள் உள்ளது. அது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது என்று தெரியாது" என்கிறார்.

இவை மட்டுமல்லாமல், "கப்பலில் 'ஆபத்தான சரக்கு' கள் உள்ளன என்று மட்டும் தான் கூறப்பட்டுள்ளது, அதில் என்னவுள்ளன என்று தெரிவிக்கப்படவில்லை. ரசாயனங்கள் இருக்கலாம், கதிரியக்கப் பொருட்கள் இருக்கலாம்"என்றார்.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,DR.SUNILKUMAR MOHAMED

படக்குறிப்பு, Dr. சுனில்குமார் முகமது, கடல்வள ஆராய்ச்சியாளர்

கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு

கேரள கடற்கரை கடல்வளங்கள் அதிகமாக இருக்கும் வளமான பகுதியாகும். எனவே அப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் மீன்வளங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். "ஒரு மதிப்பீட்டின் படி பத்து ஆண்டு காலத்தில் இங்குள்ள மீனவர்கள் 1000 வகையான உயிரினங்களை பிடித்துள்ளனர். இந்த இடத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அது உணவு சங்கிலியை வெகுவாக பாதிக்கும். எண்ணெய் கசிவினால் ஹைட்ரோ கார்பன்ஸ் வெளியாகும். இதனால் மீன்வளம் பாதிக்கப்படும், அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்" என்று சுனில் முகமது கூறுகிறார்.

"கேரள கரைப் பகுதியில் 'upwelling' ஆழத்தில் உள்ள சத்துகள் நிறைந்த நீர் கடற்பரப்பை நோக்கி மேல் எழும்புவது தீவிரமாக நடைபெறும். இதனால் அந்தப் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் மிக முக்கிய பங்காற்றும் phytoplankton எனும் கடல் தாவர வகைகள் அதிகம் உள்ளன" என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

எண்ணெய் கசிவின் தீவிரத்தைப் பொருத்து இவை எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார் அவர்.

கேரளாவில் ஆபத்தான சரக்குகளுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

பட மூலாதாரம்,X/@INDIACOASTGUARD

படக்குறிப்பு, கவிழ்ந்த கப்பலிலிருந்து விழுந்த கண்டெய்னர்கள்

மீனவர்களுக்கு பாதிப்பு

மீன்பிடிக்க ஏதுவான இடம் குறித்த தகவல்களை INCOIS தினசரி மீனவர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த விபத்து ஏற்பட்டது முதல் எண்ணெய் கசிவு அபாயம் இருப்பதால் தெற்கு கேரள கரையோரம் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மீனவர்களை வெகுவாக பாதித்துள்ளது என்கிறார் சுனில் முகமது, "தென்மேற்கு பருவமழை தொடங்கிய நேரத்தில், கடல் அமைதியாக இருக்கும். அலைகள் பெரிதாக இல்லாத இந்த காலத்தை மலையாளத்தில் 'சாகரா' (இறந்த கரை) என்று அழைப்பார்கள், இது மீன்பிடிக்க மிகவும் உகந்த நேரமாகும்" என்கிறார்.

மீட்புப் பணிகளுக்கு சவாலாக இருக்கும் பருவமழைக் காலம்

எண்ணெய் கசிவின் தீவிரத்தையும், வெளியே தெரிவிக்கப்படாத 'ஆபத்தான' சரக்குகளையும் கட்டுப்படுத்துவதே மீட்புப் பணிகளின் முக்கிய நோக்கமாகும். பருவமழை தொடங்கியுள்ளதால் கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. கடல் அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரம் வரை எழும்புகின்றன. இதனால் எண்ணெய் கசிவு ஒரு இடத்தில் இல்லாமல் மற்ற இடங்களுக்கு எளிதாக பரவும் வாய்ப்புள்ளது. "MSC ELSA 3 பழைய கப்பல் என்பதால் கண்டெய்னர்களுக்கு ஒரு அடுக்கு பாதுகாப்பு (single hull) மட்டுமே இருந்துள்ளது. எனவே எண்ணெய் கசிவு எளிதாக ஏற்படலாம்" என்று இந்த விவகாரங்கள் குறித்து அறிந்திருந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காற்று தெற்கு திசையில் வீசிக் கொண்டிருப்பதால் இந்த கசிவுகள் கரையை நோக்கியே வரும் என்றும் கடலுக்குள் செல்ல வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கரையை நோக்கி வரும் போது, அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவது எப்படி?

எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. கடலோர காவல்படையின் விமானம் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணெய் கசிவு எங்கு உள்ளது, எவ்வளவு தூரம் உள்ளது என்று கணிக்க முடியும். அதை பரவவிடாமல் ஒரே இடத்தில் கட்டுப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பம் உள்ளது. பிறகு எண்ணெய்யை இலகுவாக்கும் ரசாயனங்கள் கலந்து அவை கரையை வந்து அடையாமல் தவிர்க்கப்படும். அல்லது, எண்ணெய்யை பம்ப் செய்து வெளியேற்றவும் முடியும். கடலோர காவல்படையின் கப்பல் ஒன்று மாசு கட்டுப்படுத்தும் பணிகளுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு, பணியில் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2ejdvr7gwo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.