Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கமல்ஹாசன் சொல்வது போல் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததா? மொழியியலாளர்கள் சொல்வது என்ன?

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி, தக் லைஃப் திரைப்படம், ராஜ் கமல் ஃபிலிம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 ஜூன் 2025, 01:58 GMT

    புதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ஆனால், எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது எனக் கூறுவது சிக்கலானது என்கிறார்கள் மொழியியலாளர்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தபோது, அந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் பங்கேற்றிருந்தார்.

கமல்ஹாசன் அவரைப் பற்றிப் பேசும்போது, "ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என் பேச்சைத் தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்" என்று பேசியிருந்தார். சிவராஜ்குமார் இதைக் கேட்டுப் புன்னகைத்தார்.

ஆனால், கமல்ஹாசனின் கன்னட மொழித் தோற்றம் குறித்த இந்தக் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதலமைச்சரில் துவங்கி, கன்னட அமைப்புகள் வரை இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இருந்தபோதும், தனது பேச்சுக்காகப் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன்.

இப்போது இந்தப் பிரச்னையின் காரணமாக 'தக் லைஃப்' திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது.

திராவிட மொழிகளில் பல மொழிகள் அல்லது அனைத்து மொழிகளும் தமிழில் இருந்து தோன்றியவை என்ற கருத்து புதிதானதல்ல. நீண்ட காலமாகவே தமிழ்த் தேசிய கருத்தாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து வருகின்றனர். ஆனால், திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்பதில்லை.

திராவிட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியா, சகோதர மொழியா?

திராவிட மொழிகள் குறித்த ஒரு விரிவான ஒப்பீட்டு ஆய்வை முதன்முதலில் செய்தவராக 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமயப் பரப்பாளரும் மொழியியலாளருமான ராபர்ட் கால்ட்வெல்லை குறிப்பிடலாம்.

இவருடைய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages) நூல் திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை முறையாக ஒப்பிட்டு, சில கருத்துகளை முன்வைத்தது.

"தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள், இந்தோ - ஆரிய மொழிகளில் இருந்து தோன்றியவை அல்ல. அவை தனித்த, திராவிடம் எனும் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை" என்ற கருத்தை கால்ட்வெல் முன்வைத்தார்.

மேலும், தொல் திராவிட மொழி என்ற மொழியில் இருந்தே திராவிட மொழிகள் தோன்றின என்றும் இந்த தொல் திராவிட மொழியோடு, தமிழே கூடுதல் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் ராபர்ட் கால்ட்வெல்.

ஆனால், 20ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் தமிழ் திராவிட மொழிகளுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருத்தை தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்வைத்தனர். இதற்குப் பிறகு தொடர்ந்து இந்தக் கருத்து ஒரு சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், மொழியியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனேயே பேசுகின்றனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி என்பதையும் தனித்துவமான இலக்கியங்களைக் கொண்டது என்பதையும் ஏற்கும் இவர்கள், ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது என்பதை ஏற்பதில்லை.

செக் நாட்டைச் சேர்ந்த இந்திய மொழியியல் அறிஞரான கமில் ஸ்வலபில், திராவிட மொழிகளின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டுக்குள் தொல் தென் திராவிட மொழிகள் சிதற ஆரம்பித்தன.

கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டுக்குள் தமிழ் ஓர் இலக்கிய மொழியாக நிலை பெற ஆரம்பித்தது என்ற கருத்தை திராவிட மொழிகளின் வரலாற்றாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில், பழங்கால தமிழ் இலக்கியத்தின் ஆரம்பக் கட்டத்தில், செய்யுள் என்ற வடிவத்தை உருவாக்குவதில் இலக்கணவாதிகள் கவனம் செலுத்தினார்கள்," எனத் தன்னுடைய The Smile of Murugan நூலில் குறிப்பிடுகிறார்.

இவரது இந்தப் புத்தகத்தில், "தமிழும் கன்னடமும் பிரியும் இறுதிக் கட்டத்தில்" என்ற சொற்தொடர் மட்டுமே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்ற பொருளைத் தருகிறது. ஆனால் தமிழைத் தவிர, பிற முக்கியமான திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றின் துவக்க கால இலக்கியங்கள் வேறு ஏதோ மொழியில் இருக்கும் இலக்கியங்களைப் பிரதி செய்தவை அல்லது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டவை என்கிறார் அவர்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி,

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர். நரசிம்மாச்சார்யா எழுதிய கன்னட மொழியின் வரலாறு (History of Kannada Language) என்ற நூல், அந்த மொழியின் தோற்றம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், கன்னட மொழி தமிழுடன் கூடுதல் நெருக்கம் கொண்டது என்று குறிப்பிடுகிறது.

"கன்னடம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையது. இலக்கண ரீதியாக இந்த இரு மொழிகளுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. தமிழில் இருந்து கன்னடம் வேறுபடுவதைவிட, தெலுங்கு மொழியிடம் இருந்து கூடுதலாக வேறுபடுகிறது" என்கிறார் ஆர். நரசிம்மாச்சார்யா.

தொல் திராவிட மொழியில் இருந்தே, பிற திராவிட மொழிகள் தோன்றியதாக ஒரு கருதுகோள் வைக்கப்படும் நிலையில், அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி தமிழ்தான் என்கிறார் நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் சென்டரின் இயக்குநரான எம்.டி. முத்துக்குமாரசாமி.

"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் பிற மொழிகள் தமிழில் இருந்து தோன்றியவை எனக் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக தொல் திராவிட மொழி என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். அந்தத் தொல் திராவிட மொழிக்கு நெருக்கமான மொழி, தமிழ்தான் என்றார்.

அவரைப் பொறுத்தவரை, எல்லா திராவிட மொழிகளும் சகோதர மொழிகள் எனக் குறிப்பிட்டார். இவருக்குப் பிறகு வந்த மொழியியலாளர்கள் இந்த தொல் திராவிட மொழிகளை வடக்கு தொல் திராவிடம், தெற்கு தொல் திராவிடம் என்பன உள்படப் பல வகைகளாகப் பிரித்து ஆராய்ந்தனர்," என்று விளக்கினார் எம்.டி.முத்துக்குமாரசாமி.

மேலும், "திராவிட வேர்ச்சொல் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டது. இந்த வேர்ச்சொல் அகராதியில் இடம்பெற்ற பெரும்பாலான சொற்களின் மூலம் தமிழாகவே இருந்தது. அது தவிர, கன்னட மொழியில் உரைநடையே 10ஆம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது.

ஆகவே இப்போதைய கேள்வி, தமிழுக்கு கன்னடம் அக்காவா, அம்மாவா என்பதுதான். அக்கா என்றால் எல்லோரும் ஏற்கிறார்கள். ஆனால், இந்த அக்கா மொழி, அம்மா அளவுக்கு மூத்த மொழி என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது," என்றும் அவர் விவரித்தார்.

கமல்ஹாசன், கன்னட மொழி சர்ச்சை, தமிழ் மொழி, கன்னட மொழி,

பட மூலாதாரம்,GETTY IMAGES

எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் தமிழிலில் இருந்து பிற திராவிட மொழிகள் தோன்றின என்று கூறுவது சரியான கருத்தல்ல என்கிறார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், "மூல திராவிட மொழி என்ற ஒன்றிலிருந்து பிற மொழிகள் அனைத்தும் பிரிந்திருக்க வேண்டும் என்னும் மொழியியலாளர் கருத்தையே நானும் ஏற்கிறேன். அப்படியானால் அந்த மூலதிராவிட மொழி எங்கே என்று கேட்கின்றனர். ஒரு கல்லை உடைத்தால் அது பல துண்டுகளாகச் சிதறிவிடும். மூலக்கல் எங்கே என்று கேட்க முடியாது.

மொழியிலும் அப்படித்தான். தமிழில் இல்லாத மூல திராவிட மொழியின் சிற்சில கூறுகளைப் பிற திராவிட மொழிகள் தக்க வைத்திருக்கின்றன. ஆகவே இவற்றைச் சகோதர மொழிகள் என்று சொல்வது சரியானது. மேலும் இன்றைய அரசியல் சூழலில் இந்தத் 'தாய்-சேய் உறவு' என்பதை வலியுறுத்துவது நன்மை பயக்காது. எங்கள் மொழியில் இருந்தே உங்கள் மொழி பிறந்தது என்று பிறரை நோக்கிச் சொல்வது ஒரு வகையில் ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் உள்ள பல மொழியியலாளர்கள் இந்தச் சர்ச்சையில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள். எதிர்பார்த்தபடியே கன்னட மொழியியலாளர்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

"தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறான கருத்து. தமிழும் கன்னடமும் சகோதர மொழிகள். ஒரு மூத்த மொழியில் இருந்து பிறந்த மொழிகள். தொல் திராவிட மொழியில் இருந்துதான் கன்னடம் தோன்றியதே தவிர, தமிழில் இருந்து தோன்றவில்லை," என்கிறார்.

இந்த இரு மொழிகளிலும் தொல் திராவிட மொழியின் வார்த்தைகள் ஒரே மாதிரி இருப்பதே இதற்குக் காரணம். "உதாரணமாக, காதைக் குறிப்பிட கன்னடத்தில் கிவி என்கிறோம். தமிழில் செவி என்கிறார்கள். இந்த இரண்டு சொற்களும் ஒரே தொல் திராவிட மொழியில் இருந்து உருவான இருவேறு ஒலிப்புகள். ஆகவே, தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்பது முழுக்க முழுக்கத் தவறானது" என்கிறார் கன்னட மொழி வளர்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரான பேராசிரியர் எஸ்.ஜி. சித்தராமைய்யா.

திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள், தென் மத்திய திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

தென் திராவிட மொழிகளில் தமிழ், கன்னடம், மலையாளம், இருளா, கொடவா, தோடா, கோட்டா, படகா, கொரகா, துளு உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன.

தென் மத்திய திராவிட மொழிப் பிரிவில் தெலுங்கு, கோண்டி, குயி, கோயா உள்ளிட்ட மொழிகளும் மத்திய திராவிட மொழிப் பிரிவில் கோலமி, துருவா, ஒல்லரி, நாய்க்கி ஆகிய மொழிகளும் வட திராவிட மொழிப் பிரிவில் குருக், மால்டோ, ப்ராஹுவி ஆகிய மொழிகளும் இடம்பெற்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgq3knznj01o

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையை புரிந்துகொள்ளல்

11 JUN, 2025 | 10:39 AM

image

பெருமாள் முருகன்

" கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது " என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து பல்வேறு விவாதங்களை மூளவைத்திருக்கிறது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. இது இரு நூற்றாண்டுகளாக தமிழ் உலையாடல்களில் இருந்து வந்திருக்கிறது.

பொதுவான ஆதித்திராவிட மொழி (Proto - Dravidian language ) ஒன்றில் இருந்து கிளைவிட்டவையே திராவிட மொழிகள் என்று றொபேர்ட் கால்ட்வெல்லும் மற்றைய மொழியியல் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகல திராவிட மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவையே என்று அவர்களன உரிமை கோரினார்கள். இந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் தமிழே உலகின் முதலாவது மொழி என்றும் உலகின் ஏனைய மொழிகள் சகலதும் அதிலிருந்து பிறந்தவையே என்றும் பிரகடனம் செய்யப்படுகின்ற அளவுக்கு விரிவடைந்தது.

பெரிதும் ஏற்புடைய கருத்து

இன்றும் கூட தமிழ் அறிவுஜீவிப் பரப்பில் இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ந்து மேம்பட்டுக் காணப்படுகின்றன. ஆதித்திராவிட மொழி ஒன்று பற்றிய கருத்து தமிழ்நாட்டுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ் சகல மொழிகளினதும் தோற்றுவாய் என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்தியாவின் பன்மொழிப் பின்புலத்தில் மொழி ஆதிக்கத்தைச் சூழ்ந்த விழிப்புநிலை அரசியல் ரீதியாகவே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தேசியக்குழுவும் அதன் அடையாளத்தின் பிரதான குறியீடாக மொழியையே கருதுகின்றன. அவர்களது மொழியின் பெருமையை சிறுமைப்படுத்துவதாக கருதப்படக்கூடிய எந்தவொரு கருத்து அல்லது நடவடிக்கை ஆவேசமான எதிர்ப்பைக் கிளப்பும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பொதுவான ஒரு ஆதித்திராவிட தோற்றுவாயில் (Proto - Dravidian root) இருந்தே சகல திராவிட மொழிகளும் தோன்றின என்ற கருத்தை அழுத்திச் சொல்வதே பொது மேடைகளில் பெருமளவுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த கருத்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கப்போக்கையும் சமத்துவத்தையும் வளர்க்கும்.

மற்றைய மொழிகள் தமிழில் இருந்தே தோன்றின என்று கூறுவதை மற்றையவர்கள் தங்களது மொழியினதும் அடையாளத்தினதும் மதிப்பைக் குறைக்கும் ஒரு செயலாகவே எளிதில் நோக்கக்கூடும். தமிழே தங்களது மொழிகள் எல்லாவற்றினதும் தோற்றுவாய் என்று உரிமை கோருவதை மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் தங்கள் மீதான திணிக்கப்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கக்கூடும். தங்களது மூதாதைப் பெருமையை அரசியல் பிரசாரத்துடன் கலக்கும் தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை, தமிழே மற்றைய மொழிகளின் தோற்றுவாய் என்று கூறுவது புராதன மேன்மைக் கதையாடல் ஒன்றை கட்டமைக்க உதவலாம்.

ஆனால், அதற்கு அப்பால், சமகால அரசியலில் இந்த கருத்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும். வலிமையான - பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அறிவுசெறிந்த சான்று இல்லாமல், சகல மொழாகளினதும் தோற்றுவாய் தமிழே என்நு அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை. தமிழின் சிறப்புவாய்ந்த பண்புகளான அதன் தொல்பழமை, இலக்கியச் செழுமை மற்றும் இடையறாத இலக்கியப் பாரம்பரியம் ஆகியவற்றை ஏனைய மொழிச் சமூகங்களும் பரந்தளவில் உலகமும் நன்கு அறியும். இந்த சிறப்புக்களை எடுத்தியம்புவதே தமிழைக் கௌரவப்படுத்தப் போதுமானதாகும்.

இந்தியாவின் எந்தவொரு மொழியினதும் நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது கூட, தமிழ் உயர்வானதாக மாத்திரமல்ல, சமத்துவமானதாகவும் நிற்கிறது. தமிழின் இந்தச் செழுமையை பரந்த உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு உணர்வு முனைப்புடைய முயற்சிகளே இன்று எமக்கு தேவைப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சிறீ சர்வதேச பூக்கர் பரிசை வென்றார். இந்த வருடம் கன்னட எழுத்தாளர் பானு முஷ்ராக் அதே கௌரவத்தைப் பெற்றார். தமிழும் கூட அத்தகைய உலகளாவிய உச்சங்களை பெறுவதற்கு உரித்துடையது. எமக்கு தேவை அந்த திசையிலான தளராத கலாசார முயற்சியே அன்றி, ஏனைய மொழிகளைப் பேசுபவர்களை மனமுறிவுக்கு உள்ளாக்கக்கூடிய -- ஆத்திரமூட்டும் வகையிலான பயன்ற்ற கருத்துக்கள் அல்ல.

" தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது " என்று கமல்ஹாசன் கூறியபோது அவரது நோக்கம் அந்த மொழியை அவமதிப்பது அல்ல. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் அந்த மேடையில் இருந்தார். அவரது குடும்பத்துடனான தனது கனிவான உறவுமுறை பற்றி பெருமையாக ஹாசன் பேசினார். கன்னடத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பண்பொற்றுமையை சுட்டிக்காட்டிய அவர் ' நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள ; எம்மவை சகோதர மொழிகள்' என்று கூறுவதற்கே முயற்சித்தார்.

அந்த தருணத்தில், ' 'தமிழே மூலமொழி ' என்று தமிழ்ச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் ஒரு கருத்து அவரது சிந்தனைக்கு வந்திருக்கக்கூடியது சாத்தியம். ஆனால், அவரது நோக்கங்களை சந்தேகிப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. அத்தகைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு அவருக்கு கருத்து வெளிப்பாடாடுச் சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கருத்தை கொண்டவர்கள் அவருடன் இணங்காமல் விடலாம். பதிலை பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்த முடியும். ஆனால், அச்சுறுத்தல் விடுப்பது கருத்தை தெரிவிப்பதற்கான அவரின் உரிமையை மீறும் செயலாகும்.

நீதிமன்றத்தின் கருத்து

கமல்ஹாசனின் ' தக் லைவ் ' என்ற திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான ஒரு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்னிப்புக் கேட்குமாறு அவரை நீதிபதி பெரும்பாலும் நிர்ப்பந்தித்தார். இந்த விவகாரத்தை இரு பிராந்திய இனங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக மாற்றுவதற்கு மொழி அடிப்படைவாதிகள் தயாராக இருக்கின்ற ஒரு நேத்தில், அவர்களுக்கு அனுகூலமான முறையில் நீதிமன்றம் அதை அணுக வேண்டுமா?

பொலிசார் இந்த விவகாரத்தை சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக கையாளக்கூடும், ஆனால், நீதிமன்றம் அந்த வழியில் நோக்கக்கூடாது. வர்த்தக ரீதியான விட்டுக்கொடுப்பை கட்டாயப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து போன்று நீதிமன்றம் செயற்பட வேண்டுமா?

நீதிமன்றம் இதை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக அணுகியிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக எந்த ஒருவரும் கூறலாம். ஆனால், அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அளவு என்ன? எவருமே வேண்டுமென்று சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம். அத்தகையவர்களை சமரச ஏற்பாட்டுக்கான ஒரு தரப்பாக நீதிமன்றம் கருதமுடியாது.

கமல்ஹாசனுக்கு அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கிறதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும் என்று தான் நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். அத்துடன் இந்த பிரச்சினைக்கும் திரைப்படத்தின் வெளியீடடுக்கும் எந்த தொடர்பும் இல்லை; பொலிஸ் பாதுகாப்புடன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.

எந்த வழியில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கோணத்திலேயே அதை நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கான இறுதிப் புகலிடம் நீதிமன்றமேயாகும்.

கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. " எனது கருத்து தவறானது அல்ல. அது தவறாக விளங்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது" என்று அவர் விளக்கமளித்தார். வழமையாக, திரைப்படம் ஒன்று தொடர்பாக ஏதாவது பிரச்சினை எழுந்தால், உடனடியாக மன்னிப்புக் கோருவது, காட்சிகளை அகற்றுவது, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு வசதியாக சமரசத்தை ஏற்படுத்துதே நடைமுறை நியதியாகும். முதற்தடவையாக திரைப்படத்துறை சார்ந்த ஒருவர் " நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன் " என்று கூறியிருக்கிறார்.

அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல. சுயமரியாதைப் பிரச்சினை. கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும்.

அத்தகைய கருத்துக்களுக்கு ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், வன்முறை அச்சுறுத்தல்களை விடுப்பதோ அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையை நிராகரிப்பதோ தண்டனைக்குரிய குற்றங்களாக கணிக்கப்பட வேண்டும்.

(கட்டுரையாளர் தமிழகத்தின் கல்விமான், இலக்கிய வரலாற்று பதிவாளர்)

(தி இந்து)

https://www.virakesari.lk/article/217133

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.