Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் அருளானந்தம்- நேர்காணல்

திராவிடமணி மே 25, 2025

செல்வம் அருளானந்தம்   எனும் இயற்பெயரையுடைய இவர் ‘காலம் செல்வம்’  என்றே இன்று எல்லோராலும் அழைக்கப்பெறுகின்றார். இவர் 1953ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் யாழ்ப்பாணம் சில்லாலையில் சவேரிமுத்து, திரேசம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமது தொடக்கக்கல்வியை  சில்லாலை  ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்பு  புனித ஹென்றி கல்லூரியிலும் முடித்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில்  பாரிஸில் உள்ள  செயின்ட் அகஸ்டின் பிரெஞ்சு மொழிப் பள்ளியில்  பிரெஞ்சு  மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.  பிற்பாடு  கனடாவில், டொரொண்டோவில் உள்ள செயின்ட் டேனியல் கல்லூரியில் நர்சிங் டிப்ளோமா பெற்றுள்ளார். 

      இவர் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தேவராணி என்பரை மணந்தார். இவர்களுக்கு நிரூபன், என்ற மகனும், செந்தூரி, கஸ்தூரி என இரண்டு மகள்களும் உள்ளனர். மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தார்.

 இலங்கையிலிருந்து பாரிஸிக்குப் புலம்பெயர்ந்த இவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அங்கிருந்து கனாவிற்குப் புலம்பெயர்ந்தார். 32 ஆண்டுகளாக  கனடாவில் உள்ள டொராண்டோ நகரில்  தம் குடும்பத்தாருடன்  வாழ்ந்து வருகிறார்.  

537687.jpg?resize=600%2C400&ssl=1

    இவர் பல்வேறு இலக்கிய அமைப்புகளுக்கு அடித்தளமிட்டதோடு அவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். பாரிஸிலிருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்த பொழுது அங்கு மான்றியல் எனும் நகரத்தில் வாழ்ந்தார். அங்கே தமிழ்ஒளி எனும் அமைப்பில்  வேலைசெய்தார்.  அங்கிருந்த காலத்தில்  “பார்வை“  எனும்  இலக்கிய இதழைத் 1987 இல் தொடங்கி நடத்தினார். அதில் 17 இதழ்கள் வெளிவந்துள்ளன.  அங்கிருந்து டொரொண்டோ நகரத்திற்குக் குடிபெயர்ந்த சூழலில் இவ்விதழ் 1989இல் நின்றுபோனது.  டொரொண்டோவில் “தேடல்” எனும் இதழின் ஆசிரியர் குழுவில்  உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்த நிலையில்,  1990இல்  “காலம்” எனும் இலக்கிய இதழை டொரொண்டோவில் தொடங்கி நடத்திக்கொண்டு இருக்கிறார். இது  30 ஆண்டுகளுக்கு மேலாக வெகுசிறப்பாக இயங்கிவருகின்றது. 60க்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் ஈழம், தமிழக புலம்பெயர்ந்த  படைப்பாளர்கள் தமது ஆக்கங்களைப் படைத்தளித்து வருகின்றனர். காலம் இதழ் வெளியிட்டுள்ள தமிழ் படைப்பாளர்கள் பற்றிய சிறப்பிதழ்கள் குறிப்பிடத்தக்கவை. கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

      எஸ் பொன்னுதுரை,  ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றோரை தமது இலக்கிய முன்னோடிகளாகக் கொண்டுள்ள செல்வம் அவர்கள், தொடக்க காலத்தில் கவிதைகளையே விரும்பி எழுதினார். பாரிஸில் வாழந்த பொழுது இவரது நண்பர் உமாகாந்தன் நடத்திய “தமிழ்முரசு” இதழில்தான் முதன்முதலில் கவிதைகளை எழுதத்தொடங்கினார்.  ”கட்டிடக் காட்டிற்குள்“ எனும் கவிதைத் தொகுப்பையும், தமது   புலம்பெயர் வாழ்வை மையப்பொருளாகாக் கொண்டு  ”எழுதித் தீரா பக்கங்கள்” (தமிழினி, காலச்சுவடு வெளியீடு), சொற்களில் சூழலும் உலகம்”  (காலச்சுவடு வெளியீடு) என்ற இரு தன்வரலாற்று நூல்களைப் படைதளித்துள்ளார். மேலும்  “பனிவிழும் பனைவனம்” (காலச்சுவடு வெளியீடு)      எனும் நூலையும் எழுதியுள்ளார்.

       தமிழ் இலக்கியங்களிலும் அதன் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு உடைய இவர். கடந்த 30 ஆண்டுகளாக “வாழும் தமிழர்“ எனும்  புத்தகக்கண்காட்சியை  ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்திவருகின்றார். மேலும்,  இலங்கை, இந்தியா எனப் பல்வேறு நாடுகளில் வாழும் இலக்கிய ஆளுமைகளைக் கொண்டு    300 மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளார். தற்போதும் நடத்திக்கொண்டும் இருக்கிறார்.

     சிறுவயது முதலே யாழப்பாண கத்தோலிக்க மரபு  கூத்துகளில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர்  ஒருங்கிணைப்பாளராக இருந்து  தாய்வீடு, காலம் இதழ்களின் சார்பாக  ஏழு கூத்துகளை நிகழ்த்தியுள்ளார். 

    “காலம்“ பதிப்பகத்தின் வாயிலாக கிட்டதட்ட 25 நூல்களை வெளியிட்டுள்ளார்.  அவற்றில் N.K. மகாலிங்கத்தினுடைய “சிதைவுகள்“, மணிவேலுப்பிள்ளையின்  “மொழியினால் அமைந்த வீடு”  “போன்ற  நூல்கள் மிகவும் பேசப்பட்ட நூல்களாகும்

  “தேடகம்“ மற்றும் கனடா  தமிழ் இலக்கியத் தோட்டம்“ போன்ற அமைப்புகளில் தொடக்க காலம் முதல்  உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். 

நேர்காணல்

தங்கள் படைப்புகளின் ஊற்று எது? அது எவ்வாறு காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது?

     எனது படைப்புகளின் ஊற்று என்பது உண்மையில் எனது வாழ்க்கையும்,  அது உணர்த்திய உண்மைகளும்தான்.  இதில் எனது அன்னையிடமிருந்து  பெற்றவையும், கற்றவையும் அதிகம் என்றே நம்புகிறேன்.

      வாழ்க்கை என்பது என்னளவில் உடல் தேவை மற்றும்  மகிழ்ச்சி சார்ந்த லௌகீக வாழ்க்கை பற்றியதல்ல. இது பிற மனிதர்களுடனான தொடர்புகளும் உறவுகளும் அவை உணர்த்தியவற்றையுமே வாழ்க்கை என இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

     குறிப்பாக எனது அன்னையின் உறவும், அவரது வாழ்க்கைப்பாங்கும் எனக்கும், என் படைப்புகளுக்கும் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

      அம்மா மிகச்சிறந்த வாசகி. கிராமம் நன்கறிந்த அம்மானைப் பாடகி. அதில் அதீத ஈடுபாடு கொண்டவர். அம்மானைப் பாடல்களை மனனம் செய்துவைத்திருந்தார்; உணர்ந்து பாடுவார். கிராமத்து எளிய மனிதர்கள், முதின் பருவத்து மாந்தர்கள் பலரையும் குதூகலப்படுத்தும் வகையில் பாடுவார். இவற்றைச் சிறுவயதிலிருந்தே கேட்டு எனக்கு நானே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறேன். இது என்னுள்ளே மெல்ல மெல்ல கவிதை புனையும் ஆற்றலை உருவாக்கி இருக்க வேண்டும்.

      இலங்கையில் இருந்தவரை நான் எதுவுமே எழுதவில்லை. நான் பாரிசுக்கு அகதியாக வந்த பிற்பாடு எனக்கு ஏற்பட்ட அலைச்சலும், சில அனுபவங்களும்,  சில ஆதங்கங்களும் ஒரு கவிஞனாக என்னை இலக்கிய உலகத்துக்கு  அறிமுகப்படுத்தின.

        ஒரு மொழியின் உன்னதம் அல்லது உச்சம் கவிதை என்றே நம்புகிறேன். இப்போது நான் கவிதை எழுதுவதில்லை. காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும்  பேராற்றல் கவிதைக்கு உண்டு என நம்புகிறேன்.

        “மோகமுள்“ நாவலை வெவ்வேறு வயதுகளில் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். ஆனால்   இப்போது அதில் ஒரு சொல் கூட என் நினைவில் இல்லை. ஆனால் கம்பனின் கவிதைகளையும் இளமையில் படித்திருக்கிறேன். அவை அப்படியே பசுமரத்தாணி போல அப்படியே நிற்கின்றன. இதுதான் கவிதையின் வெற்றி என நான் நினைக்கின்றேன்.

            ”வம்பிழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைத்துக்

             கொம்பிழை மானின் பின்போய்க் குலப் பழி கூட்டிக் கொண்டீர்

             அம்பிழை வரிவில் செங்கை ஐயன்மீர்! ஆயுங்காலை

             உம்பிழை என்பதல்லால் உலகம்செய் பிழையும் உண்டோ?”

இது எங்கள் போராட்டத்துக்கும் பொருத்தமாகவேயுள்ளது. இதுதான் கவிதை மொழியின் சிறப்பு என்று நினைக்கிறேன்.

    சில புலமையாளர்கள் உரைநடை வந்த பின்பு கவிதை தேவையில்லை என்கின்றனர். ஆனால் கவிதைதான் தமிழர்தம் வரலாறு; அதுதான் தமிழர்தம் தொன்மை ; அதுதான் தமிழர்தம் சிறப்பு.

தங்கள் படைப்புகளுக்கும் தன்னனுபவங்களுக்கும் இடையே இருக்கும் உறவு, ஊடாட்டம் என்ன?  உங்கள் படைப்புகளைத் தன்வரலாறு சார்ந்தவை எனச் சொல்வீர்களா?

          நீங்கள் சொல்வது சரிதான். தன்னனுபவங்கள்தான் என் படைப்புகள். எனது நாடும், எனது வாழ்வும், எனது சிந்தனையிலும், உணர்விலும் முடிவில்லாத துயர்மிகு அனுபவங்களைத் திணித்துக்கொண்டே இருந்தன;  இப்போதும் அது முடியவில்லை.

      இளைஞர்கள் அரசியலைத் தங்கள் கையில் எடுக்கத்தொடங்கிய காலத்தில் எங்கள் மண்ணில் சிறுவனாய், இளைஞனாய் அலைந்தவன்; கோபமும், வேகமும் நிறைந்த இளைஞர்களுடன் பழகியவன்; பல சம்பவங்களைப் பார்த்தவன். ஆயுத அரசியல் தொடங்கியபோது புதியவர்களாய் மனிதர்கள் வேற்று வடிவங்கள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அவர்களுடனான உறவுகள்  அவற்றை நான் பார்த்த முறைகள் அவற்றுள் புதைந்து கிடந்த பொய்மைகள், போலிகள், துரோகங்கள் இனப்பற்று போன்ற பலவற்றையும் மிக அருகில் பார்த்தவன்.  இவைதான் எனது  “எழுதித் தீராப் பக்கங்கள்“ என்ற என் முதல் நாவல்.  இவை என் வரலாற்றின் ஒரு பக்கம்தான். இன்னும் நிறையவே இருக்கிறது என் வாழ்வின் பல நிலைகள் பற்றி எழுதுவதற்கு.

          என் வரலாறு மூன்று கட்டங்கள் கொண்டது. முதலில் புலம் பெயர்வதற்கு முந்திய கிராமிய வாழ்வு. புலம் பெயர்ந்து தொடக்ககாலத்தில் அச்சத்துடனும், பசியுடனும், அவநம்பிக்கைகளுடனும் ஐரோப்பிய நகரங்களில் அலைந்த வாழ்வு இரண்டாவது வாழ்க்கை. கனடாவில் குடும்பமாகவும் நண்பர்களோடும் காலம் இதழ் சார்ந்த பணிகளோடும் வாழ்வது மூன்றாவது வாழ்வு.

தங்கள் படைப்புகளில் பிறரது வாழ்வனுபவங்களின்  தாக்கம் எவ்விதம் வசப்படுகிறது? மற்றவர்களுடைய அனுபவங்களை அடியொற்றியும் படைப்புத் தரக்கூடிய  ” படைப்பாக்க உணர்வுத் தோழமை”  என்ற வகையில் எழுத முயற்சித்திருக்கிறீர்களா? எடுத்துக் காட்டாக பலஸ்தீன மக்கள், இனப்படுகொலைகள், ஆதிகுடிகள், பெண்கள் போன்றோரது அனுபவங்கள்?

      பிறரது வாழ்வனுபவங்களின் நீட்சி,  பல மூலங்களிலிருந்து என்மீது தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  2000- இல் கனடாவுக்கு வந்து சேர்ந்த நான் அதன்பின் தாயகத்துக்குப் பலதடவைகள் சென்று வருவதுண்டு. அங்கு  வாழ்கின்ற உறவினர் , நண்பர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடியுள்ளேன்.  அவர்களது அனுபவங்கள் பல்வேறு  வகையானவை.  உள் நாட்டிலேயே  பல தடைகள்,  இடம்பெயர்ந்து, குடும்பங்கள் சிதைந்து, சொந்த கிராமங்களை மறந்து வாழ்பவர்களது  அனுபவங்கள் பலவற்றை கேட்டுள்ளேன். மனதில் அதிக சுமையோடு  அவை நிறைந்து கிடக்கின்றன. சொந்த கிராமங்கள் பலவற்றில்,  அக்கிராமத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்தவர்கள் அங்கில்லை. கிராமங்களின் பண்பாட்டு முகம் சிதைந்து  அங்கொன்று இங்கொன்றுமாக சிலர் வாழ்வது; விரக்தியோடும் பல்வேறு துயர்மிகு அனுபவங்களோடும்; அவநம்பிக்கையோடும் பலர்  வாழ்கின்றனர்.  அவற்றை என் பார்வையில் எழுதியது சிறியதுதான்.

         எனது “பனி விழும் பனைவனம்” நாவல் அத்தகைய ஒருவகை வாழ்வனுபவங்களின் தாக்கம் என்றே கூறவேண்டும். மூன்று தசாப்தங்களாக பல நாட்டு இராணுவத்தினரை எதிர்கொண்ட எளிய மக்கள் உணர்வுகளில் வரட்சியும், கையறுநிலையும் நிறைந்துகிடந்தன. எனது மண், எனது மக்கள், எனது பண்பாட்டு வாழ்க்கை, எனக்குத் தெரிந்த துயரங்கள் என்ற வகையில் அவை  கற்பனைகளாவதில்லை. பல இயக்கங்கள் ஒரே இலக்கோடு எனப் போராட்டங்களைத் தொடங்கினாலும் தாய் மண்ணிலும், புலம் பெயர்ந்து தஞ்சமடைந்த நாடுகளின் நகரங்களிலும்  அவர்களிடையிலான முரண்பாடுகளும், உட்பகைமையும், இழப்புக்களும் என ஏராளமான கதைகள் சொல்வதற்கு உள்ளன. மனதை முட்டிக் கிடக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் அங்க வீனர்களான போராளிகளும், தலைவனை இழந்த குடும்பத் தலைவியரும், நீண்ட காலம் வசதிகள் ஏதுமின்றி, வாழ்வை நிலைநிறுத்துவதற்குப் போராடும் குடும்பங்களின் அவநம்பிக்கை நிறைந்த வாழ்க்கையனுபவங்களையும் கேட்டிருக்கிறேன்; அத்தகையவற்றை எழுதும்  ஊக்கமும்  ஆசைகளும் நிறையவே உள்ளன.

     கனடாவில் நிரந்தரமாக குடியேறிய பின்  இருபது ஆண்டுகளுக்கு முன்பு  காலூன்ற முயற்சிகள் மேற்கொண்ட பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன். பல பழைய எனது வாழ்விடங்களையும், பழைய நண்பர்கள் சிலரையும் காணும்போதெல்லாம் துயர் நிறைந்த  பழைய வாழ்வின் நிகழ்வுகள் வந்து போகும். என்மீதே நான் கழிவிரக்கம் கொள்வதுண்டு. இறந்து போன பல இளைஞர்களையும் அவர்களுடன் பிணைந்திருந்த அக்கால சோகங்களும் நினைவுக்கு வரும். அதிலிருந்து விடுபட சில தினங்கள் ஆகும். காலத்தால் ஆற்ற முடியாத துயரங்களின் கதைக் குவியல்கள் நிறையவே என் மனதில் நிறைந்து கிடக்கின்றன. சிலவற்றை எழுதுகிறேன். எழுதித் தீராதவை ஏராளம் உள்ளன.

புலப்பெயர்வால் தங்களது கதை அல்லது பா பொருண்மையில், மொழிநடையில், படிமங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?

      எனக்கு எண்ணங்கள் வரும்போது எழுதுகிறேன். கல்வி கற்ற புலமையாளர்கள் எழுதுவதுபோல அல்லது அரசியல் தலைவர்கள் எழுதுவது போல எழுதுவதற்கான தனி ஏற்பாடுகள் என ஏதுமில்லை. கதைகளின் மொழி என்பது இயல்பாக எழுதும் போது வந்துவிழுகின்ற எனது மக்களது மொழி,  நான் மொழி பயின்ற எனது பண்பாட்டுச் சூழலின் மொழி. இயல்பாகவே என்னுடைய உணர்வுகளை, அனுபவங்களைக் கவிதையாக்கும் போது தானாக வந்து விழுகின்ற மொழிதான்  எனது கவிதை மொழி. எனது கவிதைக்கான மொழிநடை கூட அவ்வாறுதான் வடிவம் கொள்கிறது. எங்கள் தொல்தமிழ் இலக்கியங்களின் வழியாகவும் பண்பாடு சார்ந்த ஆய்வாளர்களது மொழியின் வழியாகவும், இனப்படுகொலை பற்றிய புனைவுகளை எழுதியவர்களது உணர்வு வழியான மொழி வழியாகவும்; உரைநடைகளைப் பல மாதிரிகளில் கற்றிருக்கிறேன். இரசித்து வருகிறேன். எனது முதல் நாவலான எழுதித்தீராப் பக்கங்கள் முழுவதும் செயற்கையானதல்ல. நான் வலிந்தும் தேடிப் பாவித்த சொற்களும் அல்ல. ஒவ்வொரு கதாபாத்திரமும் எங்கள் கழனியில் எப்படிப் பேசினார்களோ அப்படியே உள்வாங்கி எழுதியிருக்கிறேன்.  ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ்  இலக்கிய படைப்புகளுக்குத் துணை செய்வதில்லை, வாசிப்பவர்களுக்குப் புரிவதில்லை என்றெல்லாம் 1960 களில் தமிழக இலக்கியவாதிகள் சொல்வதுண்டு. இன்று முத்துலிங்கம், ஷோபாசக்தி, டானியல் போன்றோர்களது எழுத்துக்களும் , புனைவுகளும்  தமிழக மக்களாலும், உலகத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  எனது கதாபாத்திரங்களின் உரைநடையும், பேச்சு மொழியும்  விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பது  என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

         இயன்றளவு எனது கிராமத்து மொழியை வாசிப்பின் வாயிலாக மாற்றியுள்ளேன். அதேபோல் பொருண்மையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு எனது வாழ்க்கை நகர்ந்துள்ளது.  இதேபோல வேலைக்குப் புறம்பான சமூகவாழ்க்கை  எனது தாய் மண்ணில் முதன்மையாயிருந்தது. கனடா தொழிலை மையப்படுத்திய வாழ்வு. தொழில் பற்றிய சமூக உணர்வு, தனிமனிதனைப் பாதிப்பிலிருந்து விடுவிக்கிறது; இது கனடிய வாழ்வு பிள்ளைகள் மீதான பெற்றோர் கட்டுப்பாடு சமூக பண்பாட்டிலிருந்தது. கனடாவில் பிள்ளைகளின் முடிவுகளுக்கு இணங்குகின்ற பெற்றோராக வாழ்தல் அவசியமாகிவிட்டது. இத்தகைய புலம் பெயர் வாழ்வு கற்பித்துவருகின்ற சமூகப் பண்பாட்டு அசைவுகள்  பற்றியதான பொருண்மைகளில் உடன்பாடு எனக்குண்டு. எனது சம்பாசனைகளில், உரையாடல்களில் மாத்திரமன்றி எனது கதைகளிலும் அவற்றைப் பின்பற்றுகிறேன்.

            பா அல்லது கவிதை அல்லது நாவல்களில் ஊடாடும் மனிதர்கள் மாறும்போது, அவர்களது வாழ்வியலுக்குரிய பண்பாட்டுச் சூழல் மாறும் போது நிச்சயமாக பொருண்மை, மொழி நடை, படிமம் என்பவற்றில் மாற்றம் ஏற்படவேண்டும் என்று நம்புகிறேன். அனுபவ முதிர்ச்சி பெற்ற  அநேக எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த மாற்றங்கள் இயல்பாக நிகழ்வதாக நான் நம்புகிறேன்.

ஒரு படைப்பாளராய்த் தாங்கள் உணர்ந்த தருணம் எது?

          எனது முதல் நாவல் “எழுதித்தீராப் பக்கங்கள்“ பல தடவைகள் மறுபதிப்புச் செய்யப்பட்ட போதும், பல நாடுகளில் படைப்பாளர்களின் கலந்துரையாடல்களில் அதுபற்றி  சிலாகித்துப் பேசப்பட்ட போதும், மின்னியல் ஊடகங்களில் பலமாதிரி விமர்சனங்கள்  அதுபற்றி வந்தபோதும்  ஒரு உணர்வு, தன்னம்பிக்கை துளிர்த்தது. புலம் பெயர் இலக்கியம் என்ற அடையாளத்துடன் இலக்கியங்கள் வகையீடு செய்யப்பட்டபோது, அதற்குள் ஒதுங்குகின்ற படைப்பாக பலரும் பேசுகிறபோது தள்ளி நின்று ரசித்தேன். மெல்ல மெல்ல படைப்பாளனாக உணரத் தலைப்பட்டேன்.

       அநேகமான நண்பர்கள் என்னைக் கவிஞர் செல்வம் என்று அழைப்பதை உள் மனதில் அதிகம் ரசிப்பேன். இதே போல கூத்துக்களை எழுதும்போதும், அதற்கான இசைப் பாடல்களைப் பாடும் போதும் கூட அதிக மனநிறைவை நான் பெறுவதுண்டு.

     ஆனால் ஏராளமான தொழில்நுட்ப ஆற்றல் மிக்கவர்கள் பலரது துணையோடு ஒரு திரைப்பட நடிகர் பெறுகின்ற அங்கீகாரத்துடன் ஒப்பிடும்போது இலக்கியப் படைப்பாளர்கள் பாவம்தான். 

அறிவும் தர்க்கமும் ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்யலாம். உணர்வே இன்றியமையாதது எனும் கருத்தியலைப் பற்றிய உங்கள். எண்ணம் என்ன?

      ஆக்க இலக்கியம் என்பதில் அறிவு, தர்க்கம், உணர்வு போன்றன தொடர்பான கருத்தியல் பற்றி ஏராளமான விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆக்க இலக்கியம் என்பதன் பரப்பு தொடர்ந்து அகலப்படுத்தப்பட்டே வருகிறது. தலித் இலக்கியம், பெண் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், மின்னியல் இலக்கியம் என்றவாறு ஆக்க இலக்கிய வகையீடு விரிந்து செல்கிறது. இதற்கு அதிகம் தர்க்கமும் துணை செய்ததா?  ஊறு விளைவித்ததா? என்ற ஒரு கேள்வி எழுகிறது.

      உணர்வுகள் பற்றி பேசுகிறபோதுதான் கல்விமான்களின் கட்டுரைகளிலிருந்து ஆக்க இலக்கியம் வேறுபடுகிறது.

      உணர்வுகள்தான் இலக்கியப் படைப்புகளுக்குத் தனியான அடையாளங்களையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளன. வாசகர்களின் வழியாகவே ஆக்க இலக்கியங்கள் கவனத்தையும், கணிப்பையும் பெற்று வருகின்றன. நியதிகள் எதற்கும் அகப்படாமல், மனிதர்கள் தம் போக்கில் வாழ்க்கையில் குதூகலம் நிறைவாகும் நிலைமைகளிலும், துன்பமும், தோல்வியும் மனித வாழ்வைக் கடித்துக் குதறும் போதும் உணர்வுகள்தான் மேற்கிளம்புகின்றன. அதன் வழியாகவே மொழியும் நடத்தைகளும் வடிவம் பெறுகின்றன. படைப்புச் சூழலின் தனித்தன்மை அதிலிருந்துதான் கட்டமைக்கப்படுகிறது.

       எங்கள் வாழ்வியல் அனுபவங்களும் சூழல்களும் அச்சமும், அவநம்பிக்கையும், ஏக்கமும்,  வடிந்துவிடாத துயர்களும் நிறைந்ததாகவே இன்றும் காணப்பட்டுவருகின்றன. யுத்த பூமியிலிருந்து அகதியாக புலம் பெயர்ந்த பிறகு கூட தனது சிதைந்துபோன குடும்ப உறவுகளை ஒன்றிணைப்பதற்கும், புதிய சூழலில் கால் ஊன்றுவதிலான தடைகளும், அதற்குமேல் மாற்றங்களுடன் இசைந்து செல்வதிலான செயல்களும் பலமாதிரி உணர்வுகளையே முன்னிறுத்துகின்றன.   இந்தப் போக்கில் உணர்வே முதன்மையானது. 

     குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும்  நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன. சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜெயமோகன், புதுமைப்பித்தன் படைப்புகளில் உணர்வும், அறிவும், தர்க்கமும் பிரிக்கமுடியாமல் பிணைந்துக் கிடப்பதை அவதானிக்கலாம். இதில் எனக்கு உடன்பாடு உண்டு.

        தர்க்கம் எதுவுமேயில்லாமல் உணர்வுகளின் வழி படைக்கப்படும் ஆக்க இலக்கியம் தன்னை எப்படி நிலைநிறுத்தமுடியும்?. சிலப்பதிகாரத்திலும் கண்ணகி வழக்குரை காதையில் “தேரா மன்னா?“ என்கிறாள். இது உணர்வுதானா? தர்க்கம் தானா? இரண்டுமே இணைந்ததா?

        சில பேரிலக்கியங்கள் அறிவு தர்க்கம் என்பவற்றைப் பின்தள்ளி உணர்வு வழியாக சம்பவங்களை  விரிப்பதாகவேயுள்ளன என்ற ஒரு விமர்சனப் பார்வையும் உண்டு.

         என் பார்வையில் தர்க்கமும் உரியவாறு உணர்வுகளைச் சுமந்து மனித உரையாடல்களிலும், சமூக நிகழ்வுகளிலும் படைப்பிலக்கிய மொழியாக எப்போது விரிகிறதோ அப்போது ஆக்க இலக்கியங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். உணர்வு முரண்களே இலக்கிய இரசனைகளில் ஆதிக்கம் செலுத்துவுது இயல்பு என்றே உணர்கிறேன்.

       மாக்சிய இலக்கிய பார்வை கொண்டவர்கள் சிலப்பதிகாரத்தைக் கற்பின் மேன்மை பற்றியதாக பார்க்காமல் சத்திரியர், வைஷியர் போட்டியாக அணுகி, அதன்வழி கண்ணகியின் குரலையும், கோபத்தையும் விளக்குவதை இங்குத் தொடர்புபடுத்தலாம். இது அறிவு மற்றும் தர்க்க சிந்தனை சார்ந்த கருத்தியலுக்கு உட்பட்டதாக இளங்கோவடிகள் காவியத்தை அணுகுவதாகும்.

           ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் கதாநாயகியின் பேச்சும் செயலும் எத்துணை அறிவு பூர்வமானவை; எத்துணை தர்க்க ரீதியானவை; அதற்காக உணர்வு வழி நின்று பாத்திரங்கள் பேசவில்லையா?

        இலக்கிய படைப்பாளிகளில் அறிவு நிலைப்பட தர்க்கிப்பதும், அதேசமயம் உணர்வுகளின் வழி சமுதாய பிரச்சினைகளையும் தனிமனித முரண்பாடுகளையும் இரசனைக்குரியதாக வெளிப்படுத்துவதும் நியாயமான ஒன்றே என நம்புகிறேன். இது ஆக்க இலக்கியத்துக்கு ஊறு செய்வதாகாது என்பது எனது உறுதியான கருத்துநிலை. முரண்பாடுள்ள விவாதங்கள் இவை தொடர்பாக விரிவடைந்தால், ஆக்க இலக்கியம் புதிய பாதையைக் கட்டமைக்கமுடியுமல்லவா?  

தமிழின் சொற்களஞ்சியங்களுக்குள்ளும் சொற்கிடங்குகளுக்குள்ளும் உரிய சொற்களைத் தேடுவதுண்டா? எப்படி?

            ஆக்க இலக்கியங்களைப் படைக்கின்ற படைப்பாளிகளது வாழிடங்கள் இன்று தமிழகத்துக்கு வெளியே விரிந்துகிடக்கின்றன.  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்  போன்ற நாடுகளுக்கும் வெளியே பரந்து கிடக்கின்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற பல வேற்றுமொழிப் பேசும் நாடுகளிலிருந்தும் தமிழ் மொழியில் ஆக்க இலக்கியங்களும், பத்திரிகைகளும் வெளிவருகின்றன. எங்கள்  இலங்கைத் தமிழர்களது பண்பாட்டுச் சூழலில் பயன்படும் தமிழ்ச் சொற்கள் பல வகைகளில் மாறிவந்துள்ளன. புதியவகை சொற்கள்  சரியாகவும் அல்லது சிதைவடைந்த மாதிரியிலும் புனைவுகளில் நிறைந்து வருகின்றன. பிரெஞ்சு, ஜெர்மனிய, போர்த்துக்கீசியச் சொற்கள் அந்தந்த நாடுகளின் சிறுகதைகளில் தமிழ்ச் சொற்கள் போலவே பேச்சுமொழியாகியிருக்கின்றன:  தமிழ்மொழி போலாகின்றது.

      இலங்கையில் கொழும்பு மற்றும் மலை நாடுகளில் வாழ்கின்ற தமிழ்ப் படைப்பாளிகளின் மொழியில், சொற்களஞ்சியங்களில் சிங்களச் சொற்கள் இயல்பாக விரவிக்கிடக்கின்றன.

        தமிழ்ச் சொற்களஞ்சியங்களுக்குள்ளிருந்தும் உரிய சொற்களை நான் தெரிவு செய்வதுண்டுதான். திருக்குறள், நாலடியார், பைபிள், திருமந்திரம் போன்றவற்றில் நிறைந்துகிடக்கும் எளிய கருத்தாழம் மிக்க தமிழ்ச் சொற்கள் என்னில் அதிக ஆதிக்கம் செலுத்துவதுண்டு. அவை எனது உடன்பாடில்லாமலேயே எனது புனைவுகளில் ஆங்காங்கே வருவதுண்டு. அது நல்லதென்றே எண்ணுகிறேன். வேண்டுமென்றே சொற்களஞ்சியங்களில் சொற்களைத் தேடுவதில் விருப்பமில்லை : உடன்பாடுமில்லை.

        ஆயுத கலாச்சாரம் வளர்ந்த சூழலில் அநேக புதுவகைச் சொற்களை இயக்கங்கள் கையாண்டு, அச்சூழலில் வாழ்ந்த புதிய தலைமுறையினரின் பிரயோகங்களாகியுள்ளன. அவை எனது புனைவுகளில் வந்திருக்கலாம். அது தவறானதென்று நான் உணர்ந்ததுமில்லை.

       உயர்கல்வி நிறுவனங்களில் முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபடுவோர்க்கானச் சொற்தொகுதிகளில் கட்டுப்பாடுகள் மற்றும்  வழிகாட்டல்கள் உள்ளன.

       இலக்கியவாதிகளுக்கு அப்படி எதுவும் தேவையில்லை.  மக்களின் மொழியும், அவர்களது பயன்பாட்டுச் சொற்களும் எனக்கு எப்போதுமே சொற்களஞ்சியங்களாகவும், சொற்கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. அதில் நான் நிறைவு காண்கின்றேன்.

      தமிழிலக்கிய படைப்புலகம் இன்று எல்லாக் கண்டங்களின் பல நகரங்களிலும் பரந்து கிடக்கின்றது. எல்லாப் பிரதேச பண்பாட்டின் வழிவந்த பல மொழிச் சொற்கள் தமிழாகி வருகின்றன. எனது வாசிப்பின் வழியாக அவை என் படைப்புகளில் வந்துவிடலாம்.

       படைப்பாளிகள் சமூகத்தின் சூழல்களிலிருந்து வளர்கின்ற  தாவரங்கள், பயன்தரு மரங்கள், படைப்பாளிகளுக்குரிய, கதைக்குரிய கருவையும், பாத்திரங்களையும், ஊடாட்டங்களின் தனி இயல்புகளையும் பேசுகின்ற மொழியையும் சூழலிலிருந்துதான் படைப்பாளி பெறுகின்றான். அகதிமுகாமில் வாழ்கின்ற படைப்பாளியின் எழுத்து, நியூயோர்க் பெருநகர நவீன ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் ஒருவனது படைப்பாளிக்குரிய எழுத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதாகவேயிருக்கும். படைப்பாளிகளின் படைப்புகளுக்குரிய கருப்பை சமூகம்தான்

         இதனால் அவன் கவிதையோ, கதையோ, நாவலோ, புனைகின்றபோது அதிக பொறுப்புணர்வுடன்தானே படைக்கவேண்டும்.  காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் பேராற்றல் நல்ல படைப்புகளுக்கிருக்கிறது. டால்ஸ்டாயின் போரும் அமைதியும் அல்லது சேக்ஸ்பியரின் மெர்ச்சன்ட் ஓஃப் வெனிஸ் இன்றும் நிலைக்கிறது;  இரசிக்கப்படுகிறது. படைப்பாளியின் கூர்ந்த அவதானங்களும், சமூகசெயற்பாடுகள் பற்றிய தொலைநோக்கும் பொறுப்புணர்ச்சியும் இதற்கு அடிப்படையாகின்றன. சுந்தர ராமசாமியின் ஜே .ஜே யின் குறிப்புக்கள் எத்துணை விவாதங்களை எத்தனை வருடங்கள் நீட்சியுறச் செய்து வருகின்றன. இதில் படைப்பாளிகளின் பொறுப்புணர்ச்சி  மிக மிக முக்கியமானதல்லவா?

      எனது படைப்புக்கள் செல்வச் செருக்கில் வாழ்கின்ற மேட்டுக்குடியினரை மையப்படுத்தியதல்ல. நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை உரிமைகள் மறுக்கப்படுகிற இனத்தின் இன்னல்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் பற்றிய புனைவுகளையே செய்து வருகின்றேன். எங்கள் இனத்தின் போராட்ட வரலாறு நேர்மையாக வரலாற்று படைப்பிலக்கியங்களில் பதியப்படவேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும், பொறுப்புணர்ச்சியும் எனக்குண்டு. 

  கடந்த கால சமூக அனுபவங்களும், வரலாறுகள் தானே!

படைப்பாளி என்ற வகையில் உங்கள் பொறுப்புணர்வு என்ன?

    எங்கள் வாழ்விடங்கள்தான்  எங்கள் நிகழ்கால மற்றும் எதிர்கால புனைவுகளின் தேவையையும், மரியாதையையும் நிலைநிறுத்தும். இதன்படி எனது “காலம்“ சஞ்சிகையில் பிரசுரத்திற்காகக் கதைகளையோ, கட்டுரைகளையோ, நாவல்களையோ, கவிதைகளையோ தெரிவு செய்யும்போது அதிக சமூகப் பொறுப்புடன் செயற்படுகிறேன்.

      எனது படைப்பு சிறிதானால் என்ன, பெரிதானால் என்ன வாசிக்கவும், விமர்சிக்கவும் கண்டனம் தெரிவிக்கவும் கனடாவிலேயே நல்ல இலக்கியவாதிகள் உள்ளனர். இலக்கிய இதழ்களும் உயிர்ப்புடன் இயங்குகின்றன. அவை என்னை எப்போதுமே பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு எச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

     சில படைப்புகள் மேற்குலகில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. படைப்பாளி இறந்து பல வருடங்களின் பின்பே வாசகருக்குக் கிடைக்கத்தக்கதாக அவை பிரசுரமாகியிருக்கின்றன. இவை சில எச்சரிக்கைகளைத் தருகின்றன.

     பள்ளிச் சிறுவன் கையெழுத்துப்பிரதியில் எழுதுவதுபோல் நான் எழுதமுடியாது. எழுதக்கூடாது எனத் தெளிவாக  இருக்கின்றேன்.

     பலவாறான மாற்றுச் சிந்தனையுடன் பல இயக்கங்கள் போராட்டங்களில் தூய இலட்சியங்களோடு ஈடுபட்டன. அவை பற்றிப்   புனைவுகளைப் படைக்கும்போது பொறுப்புணர்வுப் பற்றிய விமர்சனங்கள் மாறுபட்டத் தளங்களிலிருந்து வெளிவந்துள்ளன; நிச்சயம் வெளிவரும். எங்கள் படைப்பிலக்கிய சூழல், கடந்த நான்கு தசாப்தங்களாக ஒடுக்கப்படும் இனம் சார்ந்த வாழ்வியல் பற்றியதாகவேயுள்ளது. இதில் என்னைப் போன்று இச்சூழலிலிருந்து விலகிவிடாமலே  வாழ்கின்ற ஒரு எழுத்தாளன் நிச்சயமாக சமூகபொறுப்புடன்தான் எழுதுவான்; செயற்படுவான்.

 உங்கள் படைப்புக்களின் தலைப்புகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

      இது ஒரு நல்ல கேள்வி. இப்போதுதான் யோசிக்கிறேன். எப்படித்தான் தலைப்புகளைத் தெர்ந்தெடுத்தேன்?  என்னுடன் பழகுகின்ற சாதாரண மனிதர்களின் உரையாடல்களிலிருந்துதான் தலைப்புகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இயல்பாக நண்பர்களுடன் படைப்புக்கள், படைப்பாளர் பற்றி உரையாடும்போது சில தொடர்கள் இயல்பாக வெளிப்படும். அவை எனது இதயத்தில் அல்லது மூளையின் எங்கோ ஓரிடத்தில் பதிவாகிவிடுகிறது. உரியபோது அவை என்னை மீறி தானாக வெளியே வந்து விழுந்துவிடுவதுண்டு.

     திக்குத்தெரியாத காட்டில் அலைகின்ற ஒரு எளிய மனிதனது பயம், உணர்வு, நாதியற்ற நிலை போலவே நான் “கட்டிடக் காடுகள்“ எனும்  முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டபோதும் உணர்ந்தேன்.  உதவியில்லாமல், நம்பிக்கை ஒளி தெரியாமல் சின்னஞ் சிறுவனாக பிரான்சின் நகரங்களில் அலைந்தபோது கட்டிடக்காடுகளுக்குள் அலைகின்ற உணர்வுதான் ஏற்பட்டது. வியப்பும், பயமும், அவநம்பிக்கையும் கட்டிடகாடுகள் என்று பெயர்வைக்க தூண்டின.

    இப்படித்தான் ஏனைய படைப்புகளுக்குரிய தலைப்புக்களும்;  இலக்கியங்களிலிருந்து தலைப்புக்களைத் தேடும் மன ஓட்டமோ, நாட்டமோ எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. எளியவர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கே சமர்ப்பிக்கும்போது அவர்களது மொழியிலிருந்தே என் தலைப்புக்கள் பிறக்கின்றன.

  மற்றைய படைப்பாளிகளின் ஆக்கங்களை வாசித்து விட்டு, அட, இதனை நான் எழுதியிருக்கலாமே என ஆதங்கப் பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் என்ன படைப்பு அது? மாதிரிக்குச் சிலவற்றைச் சொல்ல முடியுமா?

         எந்தவொரு படைப்பாளிக்கும் இத்தகைய ஏக்கம் அல்லது ஆசை அல்லது தன்னிலை ஒப்பீடு இயல்பாக வரக்கூடியதுதானே!

     வியப்பு மேலிடச் செய்யும் ஆற்றலும் புனைவுகளின் ஒருவகை வெற்றிதான்!  புனைவுகளின் கருவோ கையாளப்படுகின்ற சொற்களோ, சொற்களின் ஒட்டுமுறைகளோ,  வெளிப்படும் சந்தங்களோ, ஒத்திசைவோ, கையாள்கின்ற உதாரணங்களின் ரசிப்புக்களோ, தாங்கள் கூறுவது போன்ற ஆதங்கத்தை ஏற்படுத்தலாம். எனக்கும் பல தடவைகள் அவ்வாறு ஏற்பட்டதுண்டு.

      மீண்டும் மீண்டும் வாசிக்கும் துடிப்பை, ஆவலை இத்தகைய ஆக்கங்கள் ஏற்படுத்தலாம் சிலர் சில நூல்களைத் தமக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஆசையைக்கூட இத்தகைய நினைப்புக்கள் உருவாக்குவதுண்டு.

     கட்டிளமைப் பருவத்தில் நான் ஜெயகாந்தனின் “உன்னைப்போல் ஒருவன் “ நாவலை வாசித்தேன். அப்போது  எனக்குள் எழுந்த உணர்வு  “அட என்னைப் பற்றியல்லவா எழுதியிருக்கிறார் ஜெயகாந்தன் என்று எண்ணி வியப்படைந்தேன். பிற்காலத்தில் ஜெயகாந்தன் படைப்புகள் மீது  பெரிய உடன்பாடுகள் வளரவில்லை. ஆனாலும் அவரது உன்னைப் போல் ஒருவனின்   படைப்பாக்கத்தில் பல அம்சங்கள்  என்மீது பெரிய ஆதிக்கத்தைச்  செலுத்தியிருந்தன என்பது  உண்மைதான்..

       கதாபாத்திரத்தின் பண்புநலன்கள் மற்றும் மொழிநடை என்ற இரண்டுமே என்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

      என்னை அதிக பாதிப்புக்குள்ளாக்கியவன் கம்பன்தான். அவனது சொல்லுகின்ற மானிட மேம்பாடு சார்ந்த கருத்துக்களும் என்னிடம்  இத்தகைய இரசனையையும்  வியப்பையும் இன்று வரை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

      ”அறையும் ஆடு அரங்கும் மடப்பினைகள்

        தறையில் சீறிடில் தச்சரும் காய்வரோ

       இறையும் ஞானம் இலாத என்புன்கவி

       முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ”

இந்தப் பாடலில் கம்பனின்  கண்ணோட்டம், பொறாமையற்ற பார்வை அதனுள் புதைந்துகிடக்கும் கருத்தாழம் என்பன வியக்கத்தக்கவை.

         சுந்தரராமசாமியின் கட்டுரைகளின்  தனித்தன்மை  என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றது.  பலர் கற்றுக் கொள்ளக்கூடிய சிறப்புப் பண்புகள் கொண்ட புலமைப்பள்ளியாக அவரைப் பார்க்கிறேன். கட்டுரைகளில் கையாளும். சொற்சிக்கனமும் கருத்துக்களின்  தொடர்புகளில் நிறைந்துகிடக்கும் ஒழுங்கும், தர்க்கமும்  என்னை  அதிகம் ஆட்கொள்வதுண்டு.

       தளைய சிங்கத்தின் சுய சிந்தனையும், ஏ.ஜே. கனகரட்னாவின் இலக்கிய ஞானமும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.ஜே.வை எனது நண்பராகவும், வியக்கத்தக்கச்  சிந்தனையாளராகவும், மறக்கமுடியாத மேதையாகவும் உணர்வதுண்டு.  இந்த உருவகம் அவரது உரையாடல்களின் வழியாக உருவானதொன்றுதான்.

       முத்துலிங்கம், கவிஞர் சேரன், ஷோபசக்தி போன்றவர்களது எழுத்துகளும், படைப்புகளும் எங்கள் மண்ணின் துயரங்கள், தமிழ் மக்களது துயர் சுமந்த வாழ்வின் அப்பழுக்கற்ற பல மாண்புகள் பற்றியதாக உள்ளமை தனித்தன்மைதான். தமிழ் மக்கள் பற்றியும், பிரச்சினைகள் பற்றியும் ஏராளமானவர்கள்  எழுதுகிறார்கள். இன்னும் எழுதவருவார்கள். ஆனால் இவர்கள் தனியான அடையாளங்களைப் பதித்திருக்கின்றார்கள் என்பது என்னில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியமைக்குக் காரணமாகின்றது.

      எஸ்.பொ. முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றி இப்படிச் சொல்கிறார்,  துன்பம் எனும் நாளில் மகிழ்ச்சி எனும் பூக்களைத் தொடுத்த மாலைதான் என்ற அர்த்தப்பட எழுதியிருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயுள்ள எழுத்தாளர் முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்  பற்றி  இதே உணர்வும், கருத்தும் எனக்குண்டு.

        புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் அணியொன்று உருவாகிக்கொண்டு வருகிறது. ஆர்வமும், ஆற்றலும் கொண்டவராகவும், எதிர்காலத்தில் இலக்கியம், புனைவுகள் தொடர்பான நம்பிக்கையை விதைப்பவர்களாகவும் அவர்கள் வளர்ந்துவருகிறார்கள் என்பதும்  மகிழ்ச்சியானதாகும்.

https://solvanam.com/2025/05/25/செல்வம்-அருளானந்தம்-நேர/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.