Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறியப்படாத கடல்

நாராயணி சுப்ரமணியன்

நாராயணி சுப்ரமணியன்

June 3, 2025

அறியப்படாத கடல்


“பூமியில் முக்கால் பங்கு கடல்” என்பதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். இதையொட்டிய வேறு சில தரவுகள் இருக்கின்றன. முக்கால் பங்கு என்பது கிட்டத்தட்ட 360 மில்லியன் சதுர கிலோமீட்டர். 200 மீட்டர் ஆழத்துக்கும் அதிகமான கடற்பகுதி ஆழ்கடல் (Deep sea) என்று அழைக்கப்படுகிறது. மொத்தக் கடற்பரப்பில் 93% இப்படிப்பட்ட ஆழ்கடலால் ஆனதுதான். ஆக, பூமியின் பரப்பில் 66% ஆழ்கடல் பகுதியாக இருக்கிறது. இவ்வளவு பரந்துள்ள இந்தப் பகுதியில் என்ன இருக்கும் என்ற கேள்வி நமக்கு முன்பே வந்துவிட்டது. 1958ம் ஆண்டு முதலே ஆழ்கடல் ஆராய்ச்சியை மனித இனம் தொடங்கிவிட்டது. அப்போதிலிருந்து 2025ம் ஆண்டு வரை, அதாவது 67 ஆண்டுகளாக நாம் ஆழ்கடலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

இத்தனை ஆண்டுகளில் நாம் தெரிந்துகொண்டது என்ன என்ற ஒரு கேள்வியோடு ஆராய்ச்சியைத் தொடங்கினார் அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தரீன் பெல் என்ற கடல்சார் ஆராய்ச்சியாளர். தனது குழுவினரோடு இணைந்து, 67 ஆண்டுகளில் நடத்தப்பட்ட எல்லா ஆழ்கடல் ஆய்வுகளின் தரவுகளையும் பரிசோதித்திருக்கிறார். இவரது ஆய்வு முடிவுகள் மே 2025ம் ஆண்டு சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

கேத்தரீனின் ஆய்வு உண்மையில் சில அதிர்ச்சிகரமான தரவுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பல தசாப்தங்களாக மனித இனம் ஆழ்கடலை ஆராய்ந்து வருகிறது என்றாலும், உண்மையில் 0.001%க்கும் குறைவான ஆழ்கடல் பரப்பை மட்டுமே நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று கேத்தரீன் சொல்கிறார்! கடலின் தரைப்பகுதி வரை ஒரு ரோபாட் கருவியை அனுப்பி அதன் வரைபடத்தை உருவாக்குவது, மாதிரிகள் சேகரிப்பது, பிற சூழல் கூறுகளை ஆராய்வது என நேரடி ஆய்வில் பல அம்சங்கள் உண்டு. இவை எல்லாம் முடிந்தபின்னரே அந்த இடம் நம்மால் முழுமையாக அறியப்பட்டதாகும். இந்தப் பின்னணியில் பார்த்தால், மொத்தக் கடற்பரப்பில் 0.0006% முதல் 0.001% வரையிலான பகுதிகள் மட்டுமே நமக்குத் தெரியும். இது ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டிய தகவல் தட்டுப்பாடு. மொத்தக் கடலில் ஒரு துணுக்கைக் கூட நாம் அறியவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

வேறு சில முக்கியமான, கவனிக்கத்தக்க அம்சங்களையும் கேத்தரீன் சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு நாம் அறிந்து வைத்திருக்கும் 0.01% கடற்பரப்பில் கிட்டத்தட்ட 65% கடற்பகுதிகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கடற்கரையை ஒட்டி இருப்பவை! இந்த நாடுகளோடு பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டால் சதவிகிதமானது 97% ஆக எம்பிக் குதிக்கிறது. ஆக, நாம் அறிந்து வைத்திருப்பதே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான கடற்பகுதி, அதிலும் தொண்ணூற்று ஏழு விழுக்காடு ஐந்து நாடுகளைச் சுற்றியே இருக்கிறது. கடல்சார் ஆய்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகளை நடத்தியிருக்கும் நாடுகளில் 94 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை பணக்கார நாடுகள் என்றும் கேத்தரீன் கண்டறிந்திருக்கிறார்.

சரி, குறைந்தபட்சம் எல்லாக் கடற்படுகை அம்சங்களும் ஒரே முக்கியத்துவத்தைப் பெறுகின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஆழ்கடலில் இருக்கும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடலுக்கு அடியில் இருக்கும் சமவெளிகள் அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.

இந்த ஆய்வின் தரவுகளைப் பின்னணியாகக் கொண்டு யோசித்தால் பல முக்கியமான கேள்விகள் எழும். ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சிக்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை? ஏன் ஒரு சில நாடுகள் மட்டுமே அதிகமாக ஆய்வு செய்திருக்கின்றன? ஏன் சில அம்சங்கள் அதிகமாக ஆராயப்படுகின்றன?

ஏன் ஆழ்கடல் ஆராய்ச்சி பரவலாக நடப்பதில்லை என்பது முக்கியமான கேள்விதான். ஆனால் அந்தத் துறையைப் பொறுத்தவரை அது பழைய கேள்வி. போதுமான நிதி வசதியும் தொழில்நுட்பங்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது பல ஆண்டுகளாகவே “அடிப்படை ஆராய்ச்சி” (Fundamental research) என்ற அளவில் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்திலிருந்து மிகவும் விலகி, மனித இனத்தின் ஆர்வத்துக்கான ஒரு தேடலாக அது முன்வைக்கப்பட்டது. கடலோரப் பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆழ்கடல் பகுதிகள் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை.

ஆனால் வெகு சில ஆண்டுகளாக நாம் ஆழ்கடலைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறோம். காரணம் சற்றே வேதனையானது. கடலுக்கடியில் என்ன இருக்கிறது என்ற அறிவுத்தேடலால் உந்தப்பட்டு நாம் ஆழ்கடலை நாடவில்லை. கடலோரப் பகுதிகளில் மீன்வரத்து குறைந்துவிட்டது. காலநிலை மாற்றம் நம் கழுத்தை நெரிக்கத் துவங்கிவிட்டது. புதிய எரிபொருட்களும் புதிய கனிம வளங்களும் தேவைப்படுகின்றன. ஆகவே மீன்களுக்காகவும் கனிமங்களுக்காகவும் ஹைட்ரோகார்பனுக்காகவும் காலநிலைத் தீர்வுகளுக்காகவும் நாம் ஆழ்கடலை ஆராய விரும்புகிறோம். ஒரு சில நாடுகள், அந்தப் பகுதிகளைக் கையகப்படுத்திக்கொள்வதற்காகவும் ஆழ்கடலை அறிய விரும்புகின்றன. ஆனால் இந்தப் போக்கு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதால் இதிலிருந்து தெளிவான ஆய்வு முடிவுகளும் தரவுகளும் தெரிய இன்னும் கொஞ்ச காலமாகும்.

ஏன் சில நாடுகளில் அதிகமான ஆராய்ச்சி நடக்கிறது என்ற கேள்விக்கான பதில் எளிமையானது. போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், அதி நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் அங்குதான் கூடுதலாக இருக்கின்றன. ஆகவே அந்தக் கடற்பகுதிகள் கூடுதலாக ஆராயப்பட்டுள்ளன. ஏன் சில இடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துத் தரவுகள் சேகரிக்கிறார்கள் என்றால், அந்தப் பகுதிகளில் சில சிறப்பம்சங்கள் உண்டு. கடலுக்கடியில் உள்ள மலைகள் மீன் கூடும் இடங்களாக இருக்கின்றன. ஆகவே அவை மீன்பிடித் தொழிலுக்கான பகுதிகள். கடற்பரப்பில் உள்ள வேறு சில அம்சங்கள் நிலநடுக்கம், கனிம வளம் போன்றவற்றுக்கான சாத்தியக்கூறு கொண்டவை. இவை எதுவும் இல்லாத ஆழ்கடல் சமவெளிகள் போதுமான கவனத்தைப் பெறுவதில்லை.

ஆராய்ச்சி வேகமாக இயங்குகிறதோ இல்லையோ, வணிகம் பின்னங்கால் தலையில்பட ஓடி வந்து முன்வரிசையில் நின்றுவிட்டது என்பதுதான் வேதனை. இவ்வளவு குறைவாக நாம் அறிந்துவைத்திருக்கும் கடற்பகுதியில் இருக்கும் கனிம வளங்களையும் எரிபொருட்களையும் எடுத்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் போட்டி போடுகின்றன. கடற்படுகையில் நடக்கும்  செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேசக் கடற்படுகை ஆணையம் (International Seabed Authority) என்ற அமைப்புக்கும் உலக நாடுகளுக்கும் தினசரி இழுபறி நடக்கிறது. சில நாடுகள் ஏற்கெனவே தங்கள் எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளில் கனிம வளங்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஒரு இடம் எப்படிப்பட்டது, அங்கே என்னென்ன உயிரினங்கள் இருக்கின்றன என்பதை அறிவியல் தெரிந்துகொள்கிறதோ இல்லையோ, அங்கு உள்ள வளங்களை எடுத்துக்கொள்ள உரிமம் வேண்டும் என்ற கூக்குரல் நிறுவனங்களிடமிருந்து எழுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியல் சிக்கல்களும் கொடுக்கல் வாங்கல்களும் தலைசுற்ற வைக்கின்றன.

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு, குறிப்பாக அடிப்படையான ஆழ்கடல் ஆராய்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படவேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் நவீனத் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்படவேண்டும். வணிக நோக்கத்துக்கு அப்பாற்பட்டுக் கடற்பகுதிகள் அறிவியல் நோக்கில் ஆராயப்படவேண்டும். ஆராய்ச்சிகளில் இருக்கும் பாரபட்சங்கள் களையப்பட வேண்டும். இவை நடக்கும்வரை ஆழ்கடல் வணிக நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படவேண்டும். இதுவே இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும். ஆனால் இதை எழுதும்போதே இப்படி நடப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என்பது புரிகிறது.

ஆழ்கடலை, “இறுதி எல்லை” (Final Frontier) என்று வர்ணிக்கிறார்கள். அதாவது, மனித இனம் எட்டித் தொட்டுவிட நினைக்கும் இறுதி எல்லையாக ஆழ்கடல் உருவகப்படுத்தப்படுகிறது. எட்டித் தொட்டபின்னர் அது என்னவாகும் என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி.

தரவுகள்

  1. Katherine C Bell, Kristen N Johannes, Brian R C Kennedy, Susan Poulton. 2025. How little we’ve seen: A visual coverage estimate of the deep seafloor.

  2. Donna Ferguson, 2024. Scramble for the oceans : how countries are racing to name and claim remoter parts of the seabed. Guardian

  3. Sarah Rose Bieszczad, Maximillian Fochler and Sarah de Rijcke. 2025. Societal Relevance within their epistemic living spaces. Minerva.

  4. Danica Coto. 2025. Canadian company turns to Trump for permission to mine international waters, bypassing a UN agency. AP News.


Thadari.com
No image preview

Thadari.com


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.