Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரோகிகள் Vs தியாகிகள்!

June 15, 2025

துரோகிகள் Vs தியாகிகள்!

— கருணாகரன் —

தமிழரசுக் கட்சி ஆரம்பித்து வைத்த தியாகி – துரோகி ஆட்டத்தை, தமிழரசுக் கட்சியே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவோடு உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியதோடு ஈ.பி.டி.பியும் துரோகிப் பட்டியலில் இருந்தும் அரச ஒத்தோடிகள் என்ற பழிப்பெயரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட புனிதமளிப்பு நடைபெற்றுள்ளது. இனி, ஈ.பி.டி.பியை தமிழரசுக் கட்சியினர் துரோகிப் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர்களும் தமிழ்தேசிய அரசியலில் சங்கமித்துள்ளனர். 

இதுவரையிலும் ஈ.பி.டி.பியை துரோகி என்று சொன்ன வார்த்தைகள் அனைத்தும் அந்த வார்த்தைகளைச் சொன்னவர்களுடைய முகங்களிலேயே காறி உமிழ்ந்துள்ளன. அல்லது அவ்வாறு ஈ.பி.டி.பியைத் துரோகப்பட்டியலில் இன்னும் உள்ளதாகக் கருதும் தமிழரசுக் கட்சியினர், அதிலிருந்து வெளியேறி, தாங்கள் வலியுறுத்தும் புனிதத் தன்மையை நிரூபிக்க வேண்டும். தமது கண்டனங்களைத் தமிழரசுக் கட்சியின் தலைமையை நோக்கித் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அப்படியெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்பு சுத்தமாக  இல்லை. 

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழரசுக் கட்சி, ஈ.பி.டி.பியின் ஆதரவோடு அதிகார பூர்வமாகப் பதவியேற்று ஒரு முழுநாள் ஆகிவிட்டது. தம்மைச் சுத்தவாளிகள், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியினர் என்று சொல்லிக் கொள்ளும் – காட்டிக் கொள்ளும்  சிவஞானம் சிறிதரன் அணி கூட கனத்த மௌனத்தையே கொண்டுள்ளது. 

அந்த  அணியைத் தவிர, வேறு எவரும் தமிழரசுக் கட்சிக்குள் தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. நடிப்பில் உச்சத்தைத் தொடுவதுமில்லை. 

ஆகவே அவர்களும் ஈ.பி.டி.பியை புனிதமாக்குவதற்குச் சம்மதமாகியுள்ளனர். அல்லது அவர்களும் தமிழரின் அரசியலில் துரோகியாகியுள்ளனர். 

இதொன்றும் புதியதோ புதுமையானதோ இல்லை. நடிப்புச் சுதேசிகள் என்று பாரதியார் தன்னுடைய கவிதையில் பாடியதைப்போலவே இவர்கள் தங்களுடைய அரசியல் வாழ்வை முன்னெடுத்து வந்திருக்கின்றனர், வருகின்றனர். அதனுடைய வெளிப்பாட்டுக் காட்சிகளே இவையாகும்.

துரோகி அரசியலின் தொடக்கமும் வரலாறும்:

1950 களில் இலங்கை அரசியலில் செல்வாக்கோடு இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த நல்லையா (மாஸ்டர்)  அவர்களை வீழ்த்துவதற்காக எஸ். ஜே. வி.செல்வநாயகம் தூக்கியதுதான் இந்தத் துரோகி என்ற ஆயுதம். அதற்குப் பிறகு அமிர்தலிங்கம் அதைத் தூக்கி யாழ்ப்பாணத்தில் துரையப்பாவைத் துரோகியாக்கித் தொலைத்தார். பிறகு அமிர்தலிங்கமே துரோகியாக்கப்பட்டு புலிகளால் கொல்லப்பட்டார். இப்படியே நீண்ட துரோகிப் பட்டியல் ஈழ விடுதலை இயக்கங்களையும் விட்டு வைக்கவில்லை. இடதுசாரிகளையும் பலியெடுத்தது. சுருக்கமாகச் சொன்னால், ஈழ அரசியல் அரங்கிலும் அதற்கு வெளியிலும் பல ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலி கொண்டது.

அதேவேளை முன்னர் துரோகி என்று அடையாளப்படுத்தி, ஒதுக்கு அரசியலை (புறக்கணிப்பு அரசியல் அல்லது விலக்க அரசியல்) மேற்கொண்டவர்களே, பின்னர் தாம் ஒதுக்கிய, புறக்கணித்த தரப்பைப் புனிதத் தண்ணீர் தெளித்து, அரவணைத்த சங்கதிகளும் இந்த வரலாற்றில் உண்டு.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைத் துரோகியாக்கி, தன்னைத் தியாகியாக்கித் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஆதிக்கத்தைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி, 1970 களின் முற்பகுதியில் காங்கிரசுடன் கூட்டு வைத்தது. அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். தமிழரசுக் கட்சி, தன்னுடைய அரசியல் இயலாமையை மறைத்துக் கொள்வதற்காகக் காங்கிரசுடன் சமரசமாகிக் கூட்டுச்சேர்ந்தது. அதோடு தன்னுடைய செல்வாக்கையும் தொடர்ந்தது. 

இப்படித்தான் 1980 களின் நடுப்பகுதியில் சக விடுதலை இயக்கங்களைத் துரோகிகளாக்கி ஒதுக்கிய விடுதலைப் புலிகள், 2000 த்தின் முற்பகுதியில் சமரசமாகி அவற்றைச் சேர்த்துக் கொண்டனர். அதுவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகியது. 

இதை நாம் திரும்பத்திரும்பச் சொல்லியே தீர வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் அரசியற் பரப்பில் மூத்தோர் தொடக்கம் இளையோர் வரையில் பெருந்திரளானோர் இந்தத் துரோகி – தியாகி விளையாட்டில் தொடர்ச்சியாகவே ஈடுபட்டு வருகிறார்கள். 

வரலாறு எத்தனை தடவை மகத்தான உண்மைகளையும் யதார்த்த நிலைகளையும் எடுத்துச் சொன்னாலும், தன்னை நிரூபித்துக் காட்டினாலும் இவர்கள் அதிலிருந்து எதையும் படித்துக் கொள்வதேயில்லை. அதற்குத் தயாராகுவதும் இல்லை. 

அதனால் இந்த வரலாற்று உண்மைகளை திரும்பத்திரும்ப, திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். புத்திசாலிகளுக்கு ஒரு சொல். மூடர்களுக்கு ஆயிரம் வார்த்தைகள் என்பார்கள் அல்லவா! 

உலகில் இந்தளவுக்குத் துரோகி என்ற சொல்லோடு மிக நீண்ட காலம் – ஏறக்குறைய 75 ஆண்டுகள் – சீரழிந்த இனமோ சமூகமோ வேறு இருந்திருக்க முடியாது. அரசியலில் மட்டுமல்ல, கலை இலக்கியத்திலும் ஊடகத்துறையிலும் இந்தத் ‘துரோகி‘ முத்திரை குத்தும் போக்கு நீடித்தது. 

ஆக இந்த முட்டாள்தனம் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும் செழித்துப் பரந்து வளர்ந்துள்ளது. 

இதற்குக் காரணம்:

தங்களையும் விட திறனாளர்களாகவும் ஆற்றல்களாகவும் விவேகத்தோடும் துணிவோடும் காரியமாற்றியவர்களை எதிர்கொள்ள முடியாதபோது  “தியாகி” என்ற ஆயுதத்தைத் தூக்கி, எதிர்த் தரப்பினரைத் தாக்கினார்கள். அதை எந்தக் கேள்வியுமின்றி, எத்தகைய விமர்சனமும் இல்லாமல் முழுத் தமிழ்ச்சமூகமும் கொண்டாடியது. விலக்குகள் மிகச் சொற்பமே.  

மறுவளத்தில் தங்களுடைய தவறுகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைத்துத் தற்காத்துக் கொள்வதற்குத் “தியாகி” என்ற கேடயத்தைப் பயன்படுத்தித் தம்மைத் தற்காத்துக் கொண்டனர். கூடவே ரகசியமாக அரசுடன் கூட்டு வைத்துக் கொள்வது தவறல்ல என்றும். ஆனால் பகிரங்கத் தளத்தில் அப்படிச் செய்வது மாபெரும் குற்றச் செயல் என்றும் மக்களுக்குக் காட்டப்பட்டது. 

துயரம் என்னவென்றால், இதையிட்டுப் புத்திஜீவிகளும் பெரிய அளவில் மறுத்துப் பேசியதில்லை. பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கூட இது குறித்துத் துணிச்சலாக எதையும் சொன்னதில்லை. பதிலாக அனைவரும் இதையே ஒப்பித்துக் கொண்டனர். 

என்பதால்தான் தமிழ்ச்சமூகத்தில் இந்தளவு மிக நீண்ட காலத்தை (முக்கால் நூற்றாண்டை) “துரோகி – தியாகி” விளையாட்டில் சீரழித்துக் கொள்ள வேண்டியிருந்தது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது துரோகி – தியாகி விளையாட்டில் பலியாகுவது உயிர்களும் ஜனநாயகமும் என்பதை. ஈழத் தமிழ் அரசியலில் இது நிரூபணம். ஈழத் தமிழ் அரசியலின் பின்னடைவுக்கும் தோல்விக்கும் காரணமும் இதுவே. இந்த நோய், பல ஆயிரம் ஆற்றலர்கள் பலரைப் பலியெடுத்த்தோடு, சிறந்த – பொருத்தப்பாடுடைய கருத்துகளுக்கும் இடமளிக்காமல் கொன்று வெட்டை வெளியாக்கியது. 

வரலாற்றுக் காரணம்:

தமிழ்க் கலை, இலக்கிய வரலாறும் அரசியல் வரலாறும் துரோகி – தியாகி விளையாட்டுக்கு (நோய்க்கு) இடமளித்து வந்துள்ளது. பலருக்கும் தெரிந்த உதாரணங்கள். 

1.   வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் (திரைப்படத்திலும்தான்) எட்டப்பன் பாத்திரம். எட்டப்பன் காட்டிக் கொடுத்தபடியால்தான் வெள்ளையரிடம் கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டார் என்ற புனைவு. 

2.   அதை அடியொற்றி, பண்டாரவன்னியன் கதை. காக்கை வன்னியனால்தான் பண்டாரவன்னியனை வெள்ளையர்கள் இலகுவாகத் தோற்கடிக்க முடிந்தது என்ற வரலாற்றுக் கட்டமைப்பு. 

தமிழர்களுடைய வீரத்தை உயர்த்திக் காட்டுவதற்கு (அந்நியருடைய போர்த்திறனையும் சாணக்கியத்தையும் தந்திரோபாயத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மறைத்துக் கொள்வதற்கு) இட்டுக் கட்டப்பட்ட புனைவுகளே இத்தகைய கட்டுக் கதைகளும் மிகுவாக்கமுமாகும். 

இதை நவீன அரசியல் சமூகமும் தனக்குள் ருசியாக விருப்போடு எடுத்துக் கொண்டது. இதற்காக அது இழந்ததும் பலி கொடுத்ததும் ஏராளம். இன்னும் இந்த நோய் முற்றாகத் தீரவில்லை. தமிழரசுக் கட்சி தன்னுடைய இயலாமைக் கட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும்தான்.

தற்போதைய நிலவரம்: 

கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றில் ஏனைய தமிழ்க்கட்சிகளை விட கூடுதலான இடங்களைத் தமிழரசுக் கட்சி பெற்றாலும் அது பலவீனமான நிலையிலேயே உள்ளது. தமிழ்க்கட்சிகளில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சியைச் சிலர் அடையாளப்படுத்தினாலும் உள்ளே அது கோறை விழுந்தே உள்ளது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி எதிர் ஏனைய தமிழ்க்கட்சிகள் என்ற நிலையே காணப்படுகிறது. கூடவே தனக்குள்ளேயே அது கடுமையான உள்முரண்பாடுகளையும் பலமான இடைவெளிகளையும் கொண்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தமிழரசுக் கட்சி சிக்குண்டிருப்பதை நினைவிற் கொள்ளலாம். 

ஆகவே தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தலைமைச் சக்தியாக வளர்த்துக் கொள்வதற்கும் தமிழரசுக் கட்சி கடுமையாக முயற்சிக்கிறது. அது சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ற அளவில் அதனுடைய முயற்சிகளும் தீவிரமாக – எல்லை கடந்ததாக உள்ளன. தமிழரசுக் கட்சியின் தலைமைச் சக்தியாக சுமந்திரன் இருப்பதால், காய்கள் துரிதமாக நகர்த்தப்படுகின்றன. தியாகி – துரோகி என்ற அடையாளப்படுத்தலுக்கு சுமந்திரன் அஞ்சிப் பணிகின்றவர் அல்ல. 

மட்டுமல்ல, சம்மந்தன் இருந்த காலத்திலேயே தமிழரசுக் கட்சிக்கும் – தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துரோகி அடையாளம் வரத் தொடங்கியிருந்தது. இதனால்தான் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் அணி வெளியேறியது. 

சம்மந்தனின் இறுதிக் காலம் கூட ஏறக்குறைய துரோகி என்ற அடையாளத்தோடுதான் கழிந்தது. ஒருசாரார் அவரைத் துரோகியாகக் கடுமையாகச் சாடினர். இது அவருடைய மரண நிகழ்விலும் எதிரொலித்தது. பின்னர் மாவை சேனாதிராஜாவின் மரண நிகழ்விலும் தியாகி – துரோகி விளையாட்டுகள் நீடித்தன. 

அப்போதும் தியாகிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் தமிழரசுக் கட்சியின் சிறிதரனின் அணி கள்ள மௌனமே காத்தது. சம்மந்தனை இறுதிவரையிலும் தலைவராக – தலைமைச் சக்தியாகவே ஏற்றுக் கொண்டது இந்த அணி. 

இது சுமந்திரனின் காலம். ஆகவே அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகத் தமிழரசுக் கட்சியைக் கொண்டு வந்துள்ளார். 

மறுபக்கத்தில் தம்மைத் தியாகப் பரப்பு என்று சொல்லிக் கொண்ட கஜேந்திரகுமார் அணியும் (தமிழ்த் தேசியப் பேரவையும்) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கூட்டு வைத்துள்ளது. அதில் சமத்துவக் கட்சியின் முருகேசு சந்திரகுமாரும் உள்ளார். 

ஆக மிஞ்சியிருப்பது, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள்தான். அவையும் ஒருநாள் புனிதப்படுத்தப்படும்.

இன்னும் பிள்ளையான் அணி மாத்திரந்தான் துரோகி பட்டியலில் தொடருகின்றனர். அதாவது அவர்கள் கிழக்கு என்ற காரணத்தால் இன்னமும் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டுள்ளார்களோ?”

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை. சூழ்நிலைகளே எதையும் தீர்மானிக்கின்றன என்று சமாதானம் சொல்லிக்  கொள்ள வேண்டியதுதான்.  

கண்கெட்ட பின் சூரியோதயம்.

இதெல்லாவற்றுக்கும் ஒரு காரணம் NPP ஆகும். NPP யின் அரசியல் விளைவு, தமிழ் அரசியற் சூழலில் தியாகி – துரோகி என்ற அடையாளத்துக்கு முடிவைக் கொண்டு வந்துள்ளது. இப்பொழுது அனைவரும் துரோகிகள். அல்லது தியாகிகள்.

https://arangamnews.com/?p=12089

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.