Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் "தி கிரேட் இண்டியன் கபில் ஷோ" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.

தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை எழுப்பினர்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த சல்மான் கான் தான் மூளை அனீரிஸம் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தனக்கு இருக்கும் உடல்நலக்குறைவு குறித்து பேசிய சல்மான், சிக்கந்தர் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு விலா எலும்பில் காயம்பட்டதாக தெரிவித்தார்.

"நாங்கள் தினமும் எலும்புகளை உடைத்துக்கொள்கிறோம், விலாக்கள் உடைக்கப்படுகின்றன, டிரைஜிமினல் நியுரால்ஜியா இருந்தாலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். மூளையில் அனீரிஸம் இருக்கிறது, இருந்தாலும் வேலை செய்கிறேன். தமனி குறைபாடு (Arteriovenous malformation) இருக்கிறது, ஆனாலும் நடந்துகொண்டு இருக்கிறேன். நான் சண்டைக் காட்சிகளில் நடிக்கிறேன். என்னால் நடக்க முடியவில்லை, ஆனாலும் நடனமாடிக் கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கின்றன" என்றார்.

சல்மான் இவ்விதம் கூறிய பின்னர் மூளை அனீரிஸம் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்தது. மூளை அனீரிஸம் என்றால் என்ன? அது எவ்வளவு அபாயகரமானது?

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸம் (சித்தரிப்பு படம்)

மூளை அனீரிஸம் என்றால் என்ன?

ரத்த நாளத்தில் ஏற்படும் வீக்கம் அனீரிஸம் எனப்படுகிறது. ரத்த நாளம் பலவீனமடைவதால், அதிலும் குறிப்பாக அது இரண்டாக பிரியும் இடத்தில் இந்த வீக்கம் ஏற்படுகிறது.

இந்த பலவீனமான பகுதி வழியாக ரத்தம் பாயும்போது, அந்த அழுத்தம் அந்த பகுதியை வெளிப்புறம் நோக்கி ஒரு பலூன் போல வீங்கச் செய்கிறது.

வீக்கம் உடலில் எந்த நாளத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் இரண்டு இடங்களில் ஏற்படுகின்றன.

  • இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி

  • மூளை

மூளையில் வீக்கம் ஏற்பட்டால் அது மூளை அனீரிஸம் எனப்படுகிறது.

மூளை அனீரிஸத்தின் வகைகள்

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸங்கள் முக்கியமான மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

சாக்குலர் அனீரிஸம்: இது பெர்ரி அனீரிஸம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அனீரிஸம் பார்ப்பதற்கு ஒரு கொடியில் திராட்சை தொங்குவதைப் போல் காட்சியளிக்கிறது. அது முக்கிய தமனி அல்லது அதன் கிளைகளிலிருந்து வளரும் ரத்தம் நிரம்பிய ஒரு வட்டமான பையாகும். இது பெரும்பாலும் மூளையின் அடிப்பகுதியில் உள்ள தமனிகளில் உருவாகிறது. பெர்ரி அனீரிஸம் தான் சாதாரணமாக காணப்படும் அனீரிஸம் வகையாகும்.

ஃப்யுசிஃபார்ம் அனீரிஸம்: இந்த வகையான அனீரிஸத்தில் தமனியை சுற்றி வீக்கம் ஏற்படுகிறது. அதாவது தமனியின் அனைத்துப் பகுதிகளும் வீக்கமடைகின்றன.

மைகாட்டிக் அனீரிஸம்: இந்த அனீரிஸம் ஒரு தொற்றால் ஏற்படுகிறது. மூளையின் தமனிகளை ஒரு தொற்று பாதிக்கும்போது, அது அவற்றின் சுவர்களை பலவீனப்படுத்துகிறது. இது ஒரு அனீரிஸம் உருவாவதற்கு காரணமாக அமையலாம்.

மூளை அனீரிஸத்தின் அறிகுறிகள்

மூளை அனீரிஸம் வெடிக்கும்வரை அதனால் எந்த அபாயமும் ஏற்படுவதில்லை. அப்படி அது வெடித்தால், சப்அரக்னாய்டு ரத்தக்கசிவு என்ற மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். இது மூளையில் ரத்தம் பரவ காரணமாக இருக்கிறது. இது மூளையில் பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

மூளை அனீரிஸம் வெடித்தப்பின் தெரியும் அறிகுறிகள்:

  • திடீரென ஏற்படும் தீவிரமான, தாங்கமுடியாத தலைவலி (யாரோ உங்களை தலையில் பலமாக அடித்ததைப் போல)

  • நியுக்கல் ரிஜிடிட்டி எனப்படும் பின்கழுத்து விறைப்பு

  • குமட்டல் மற்றும் வாந்தி

  • வெளிச்சத்தை பார்க்கும்போது வலி

வெடிக்காத ஒரு மூளை அனீரிஸம், அதிலும் குறிப்பாக சிறியதாக உள்ள அனீரிஸம் பொதுவாக எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை.

அது பெரியதாக இருந்தால், அது அருகே இருக்கும் நரம்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலி, பார்வையில் மாற்றம் அல்லது முகம் மரத்துப் போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூளை அனீரிஸம் ஏன் ஏற்படுகிறது?

ரத்த நாளங்கள் ஏன் பலவீனமடைகின்றன என்பதை ஆய்வாளர்களால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியவில்லை, ஆனால் அதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

  • புகைப்பிடித்தல்

  • உயர் ரத்த அழுத்தம்

  • குடும்பத்தில் மூளை அனீரிஸம் இருப்பது (பரம்பரை காரணங்கள்)

  • சில நேரங்களில் ரத்த நாளங்கள் பிறப்பு முதலே பலவீனமாக இருக்கின்றன

  • தலையில் ஏற்பட்ட காயம்

  • மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு

அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின்படி, ஒவ்வொரு வருடமும், இங்கிலாந்தில் பதினைந்தாயிரம் பேரில் ஒருவருக்கு மூளை அனீரிஸம் வெடிப்பு ஏற்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரைன் அனீரிஸம் ஃபவுண்டேஷனின் கூற்றின்படி, அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் எட்டு முதல் பத்து பேருக்கு இது ஏற்படுகிறது.

இதற்கு என்ன சிகிச்சை?

அமெரிக்காவில் ஆரோக்கியம் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் தனியார் அமைப்பு மேயோ கிளினிக். இந்த அமைப்பு மூளை அனீரிஸம் குறித்து விரிவான தகவல்களை அளித்துள்ளது.

மூளை அனீரிஸத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு இரண்டு வகையான, பொதுவான சிகிச்சை முறைகள் உள்ளன – சர்ஜிகல் கிளிப்பிங் மற்றும் எண்டோவாஸ்குலர் சிகிச்சை.

சில சமயங்களில், வெடிக்காத அனீரிஸத்திற்கு இந்த சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த சிகிச்சையால் கிடைக்கும் பலன்களைவிட அபாயம் அதிகமாக இருக்கக்கூடும்.

சர்ஜிகல் கிளிப்பிங்

இந்த நடைமுறையில் அனீரிஸம் மூடப்படுகிறது. நரம்பியல் நிபுணர், ஒரு எலும்பை அகற்றுவதன் மூலம் அந்த வீக்கத்தை அணுகுகிறார். அதன் பின்னர் அவர் வீக்கத்திற்கு ரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளத்தை கண்டுபிடிக்கிறார். ரத்த ஓட்டம் அனீரிஸத்திற்குள் செல்லாத வகையில் ஒரு சிறிய உலோக கிளிப் அங்கு பொருத்தப்படுகிறது.

சர்ஜிகல் கிளிப்பிங் என்பது மிகவும் திறனுள்ளதாக கருதப்படுகிறது. கிளிப் செய்யப்பட்ட அனீரிஸங்கள் மீண்டும் உருவாவதில்லை. இதில் மூளைக்குள் ரத்த கசிவு அல்லது ரத்த உறைவு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்ஜிகல் கிளிப்பிங்கில் இருந்து உடல் நலம்பெறுவதற்கு 4 முதல் 6 வாரங்கள் ஆகிறது. வீக்கம் வெடிக்காமல் இருந்தால், மக்கள் மருத்துவமனையிலிருந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம். வெடித்த அனீரிஸமாக இருந்தால் மருத்துவமனையில் கூடுதல் காலம் இருக்கவேண்டும்.

அனீரிஸம், சல்மான் கான், மூளை நோய், மருத்துவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை தவிர்க்க ஒருவர் புகைப்பிடித்தல், மருந்துகளை தவறாக பயன்படுத்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்கவேண்டும்.

எண்டோவாஸ்குலர் சிகிச்சை

இதில் சர்ஜிகல் கிளிப்பிங்கை விட சற்றே எளிமையான சிகிச்சையாக இருப்பதால் சில சமயங்களில் அதைவிட பாதுகாப்பானதாகவும் இருக்கலாம். ஒரு மெல்லிய குழாய் (catheter) ரத்த நாளங்கள் வழியாக வீக்கத்திற்கு செலுத்தப்பட்டு சிறப்பு உலோக காயில்கள் உள்ளே வைக்கப்படுகின்றன.

சர்ஜிகல் கிளிப்பிங்கைப் போல, இந்த நடைமுறையிலும் மூளையில் ரத்த கசிவு அல்லது ரத்த ஓட்டம் தடைபடுவதற்கான அபாயம் சிறிதளவு உள்ளது. அதோடு அனீரிஸங்கள் மீண்டும் தோன்றக்கூடும். எனவே 'இமேஜிங் டெஸ்ட்' எனப்படும் உள்ளுறுப்பு படங்களை அவ்வப்போது எடுத்து பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.

ஃப்லோ டைவர்சன்

இதுவும் ஒரு எண்டோவாஸ்குலர் சிகிச்சையாகும். இதில், ரத்த ஓட்டத்தை அனீரிஸத்திடமிருந்து திசைதிருப்பும் வகையில் ரத்த நாளங்களில் ஒரு ஸ்டெண்ட் பொருத்தப்படுகிறது. இது அனீரிஸம் வெடிக்கும் அபாயத்தை குறைத்து உடல் அதை குணமாக்குவற்கு உதவுகிறது.

இந்த நடைமுறை பெரிய அனீரிஸங்கள் அல்லது அறுவை சிகிச்சை அல்லது காயிலிங் மூலம் சிகிச்சை அளிக்க கடினமான அனீரிஸங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மூளை அனீரிஸத்தை தடுப்பது எப்படி?

ஒரு அனீரிஸம் உருவாவதை தடுப்பதற்கு அல்லது ஏற்கனவே இருக்கும் ஒன்று மேலும் பெரிதாகி வெடிக்காமல் இருக்க சிறந்த வழி, ரத்த நாளங்களை சேதப்படுத்தும் பழக்கங்களை தவிர்ப்பது தான்.

இந்த விஷயங்களை தவிருங்கள்:

  • புகைப்பிடித்தல்

  • பொரித்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது

  • உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாதது

  • கூடுதல் எடை அல்லது உடல் பருமன்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cev0e7rw1e3o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2025 at 20:08, ஏராளன் said:

அனீரிஸம் எந்த வயதிலும் ஏற்படலாம், ஆனால் இது 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது. இவை ஆண்களை விட பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் எல்லோரையும்விட இன்று அதிகமாக அரசியல்வாதிகளாக வருவோருக்கு ஏற்படவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். உதாரணத்திற்கு தற்போதைய உலகநடப்பை ஆராய்ந்தால் அறியலாம்.🫣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.