Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலி, சிறுத்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 25 ஜூன் 2025, 08:46 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வால்பாறையில் அண்மையில் வட மாநிலத் தொழிலாளரின் 4 வயது மகளை சிறுத்தை கொன்றது மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மட்டுமல்லாது, புலிகளும் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்துள்ளன. புலிகளும், சிறுத்தைகளும் இவ்வாறு ஆட்கொல்லிகளாக மாறுவது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

புலிகளும், சிறுத்தைகளும் எளிதில் ஆட்கொல்லிகளாக மாறாது என்றாலும், சில சூழ்நிலைகளில் அவை 'மேன் ஈட்டர்'களாக (man eater) மாறக்கூடும் என்று காட்டுயிர் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதற்குத் தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர்.

மனிதன் - காட்டுயிர் மோதல்

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியிலும், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி மலைப்பகுதியிலும் மனித–காட்டுயிர் மோதல் என்பது ஒரு பிரச்னையாகவே நீடிக்கிறது.

கோவை வனக்கோட்டத்தில் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும் நடக்கிறது. இதைக் குறைக்கவும், தடுக்கவும் வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்பது அடுத்தடுத்து நடந்துவரும் உயிரிழப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

காட்டுயிர்களால் பலியான மனித உயிர்கள்

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,மனித–காட்டுயிர் மோதலுக்குக் காடு துண்டாடலும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் விஞ்ஞானி ரமேஷ்

  • கடந்த ஜூன் 20 அன்று, வால்பாறையில் பச்சமலை எஸ்டேட் பகுதியிலுள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மனோன் முண்டா–மோனிகா தேவி தம்பதியரின் 4 வயது மகள் ரோஷினி குமாரியை சிறுத்தை தாக்கிக்கொன்றது.

  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஊசிமலை எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அன்சாரி என்பவரின் 6 வயது மகள் அப்சரா சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.

  • 2023 ஏப்ரல் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனில் ஓரான் என்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சிறுத்தையால் தாக்கப்பட்டார். அவர் உயிர் பிழைத்துவிட்டார்.

  • நீலகிரியில் 2014ம் ஆண்டு சோலாடா, அட்டபெட்டு, குந்த சப்பை பகுதிகளில் 3 மனித உயிர்களைக் கொன்ற புலியும், 2015ம் ஆண்டு பிதர்காடு பகுதியில் மகாலட்சுமி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை கொன்ற புலியும், 2016ம் ஆண்டு கூடலுார் வுட் பிரேயர் எஸ்டேட்டில் வேலை செய்த வடமாநில தொழிலாளி மது ஒரன் என்பவரைக் கொன்ற புலியும் ஆட்கொல்லிகளாக அறிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டன.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு,தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிடில் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை

  • 2021 ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை கொன்ற டி23 என்று பெயரிடப்பட்ட புலியை, வனத்துறையினர் உயிருடன் பிடித்து மைசூரு தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

  • 2023 ஜனவரி 31 அன்று முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில், காட்டுக்குள் சென்ற பழங்குடி மூதாட்டியை புலி ஒன்று தாக்கிக் கொன்றது.

  • 2025 மார்ச் 26 அன்று கொல்லகோடு பகுதியைச் சேர்ந்த தோடர் இனத்தைச் சேர்ந்த கேந்தர்குட்டன் என்பவர் வனப்பகுதியில் புலி தாக்கி உயிரிழந்தார்.

காடுகளில் உள்ள மற்ற விலங்குகளை வேட்டையாடும் இயல்புடைய புலியும், சிறுத்தையும் எந்தச் சூழ்நிலைகளில் ஆட்கொல்லியாக மாறுகின்றன என்பது குறித்து மக்களிடம் விவாதங்கள் வலுத்து வருகின்றன.

'மேன் ஈட்டராக' எப்போது மாறுகின்றன?

ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆகிறது என்றால், அதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன என்று விளக்குகிறார், முதுமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவரான ராஜேஷ். அவரது கூற்றின்படி,

  • சில புலிகளுக்கு வயதாகி வேட்டையாடும் திறனை இழந்திருந்தால், அவை எளிதில் கிடைக்கும் இரையாக மனிதர்களைத் தாக்கும் வாய்ப்புள்ளது.

  • வயது குறைவாக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் காயமடைந்து வேட்டையாட முடியாத சூழலில் மனிதர்களைத் தாக்கி இரையாக்கிக்கொள்வதுண்டு.

  • சில இடங்களில் காட்டுக்குள் செல்லும் மனிதர்களை ஒரு விபத்தைப் போல புலிகள் தாக்குவதுண்டு.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

''பெரும்பாலான புலிகள், காயம்பட்டாலும், வயதானாலும் அவ்வளவு எளிதில் காட்டை விட்டு வெளியில் வராது. பல புலிகள் அங்கேயே இருந்து இறந்துவிடும். அத்தகைய சூழலில் யாராவது மனிதர்கள் சிக்கினால் இரையாக்கிக் கொள்ளும். அப்படி ஒரு முறை மனிதரை எளிதாக வேட்டையாடி இரையாக்கிக் கொள்ளும் பட்சத்தில் மீண்டும் மனிதர்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது.'' என்கிறார் ராஜேஷ்.

ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' என்ற நுாலில், இதுபற்றி விரிவாக எழுதியுள்ளதைக் குறிப்பிடும் நீலகிரி கானுயிர் சங்கத்தின் காட்டுயிர் புகைப்படக்காரர் சத்தியமூர்த்தி, மனிதர்களைக் கொன்று இரையாக்கிக் கொள்ளும் புலி மற்றும் சிறுத்தை ஆகியவை, 'மேன் ஈட்டர்'களாக மாறிவிட்டால் அவற்றைக் கொல்வதே தீர்வு என்று ஜிம் கார்பெட் பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

1900 முதல் 1930 -ஆம் ஆண்டு வரை மனித உயிர்களை பலி கொண்ட பல புலிகள் மற்றும் சிறுத்தைகளை சுட்டுக்கொன்ற ஜிம் கார்பெட், புலிகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்க்கை முறை, வேட்டையாடல் குறித்து நுணுக்கமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அதே நேரத்தில் புலிகள், சிறுத்தைகளைக் காப்பதன் அவசியம் குறித்தும் ஏராளமான நுால்களை எழுதியுள்ளார்.

''மனிதத் தசைகளில் உள்ள உப்பின் சுவையை ருசிக்கும் புலிகள், மீண்டும் அதைத்தேடி மனிதர்களை வேட்டையாடும் வாய்ப்பு அதிகம் என்று ஜிம் கார்பெட் கூறியுள்ளார். ஆனால், அன்றைக்கிருந்த காட்டுச் சூழலும், இன்றைக்கு உள்ள சூழலும் முற்றிலும் மாறியுள்ளன. காடுகள் துண்டாடப்பட்டு, காடுகளும், மனித குடியிருப்புகளும் நெருங்கி விட்டதால் மனிதர்கள் குறித்த புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர்களின் அடிப்படைத் தன்மைகளும் மாறியுள்ளன. அதற்கேற்ற புரிதல்கள் மக்களுக்கு வேண்டும்.'' என்கிறார் சத்தியமூர்த்தி.

"ஒதுங்கி வாழும் புலி, ஊரைத் தேடி வரும் சிறுத்தை"

106ca070-50c1-11f0-8c47-237c2e4015f5.jpg

படக்குறிப்பு,ஜிம் கார்பெட் எழுதிய 'Man Eaters of Kumaon' நூலின் அட்டைப்படம்

பொதுவாக, புலிகள் மனிதர்களைக் கண்டால் கூச்சத்தில் ஒதுங்குகிற காட்டுயிர், மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதனால் வாழ முடியாது என்று கூறும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ், ஆனால் சிறுத்தைகளுக்கு அந்த அச்சம் கிடையாது, மனிதர்கள் வாழும் பகுதிகளில் எங்காவது பதுங்கிக்கொண்டு, ஆடு, நாய், கோழிகளைப் பிடித்து இரையாக்கிக் கொண்டு வாழக்கூடியவை என்கிறார்.

இதே கருத்தைச் சொல்லும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் (Nature Conservation Foundation–NCF) மூத்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''எந்தப் புலியையும் நகருக்குள் பார்க்கவே முடியாது. ஆனால், சிறுத்தைகள் காடும், குடியிருப்பும் கலந்துள்ள பகுதிகளில் வாழும். கோவை போன்ற பெரு நகரங்களிலே கூட சில நேரங்களில் சிறுத்தைகள் வந்து செல்வதைப் பார்க்க முடியும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும்"

புலிகள், எல்லா வயதினரையும் தாக்கிக் கொல்வதும், சிறுத்தைகள் பெரும்பாலும் குழந்தைகளைக் கொல்வதும் கடந்த கால சம்பவங்களின் மூலமாகத் தெரியவந்துள்ளது. இதற்கும் சில காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் உயரம், எடைக்கேற்பவே தனது இரையை வேட்டையாடும் என்கிறார் விஞ்ஞானி ஆனந்தகுமார்.

"சாதாரணமாக ஒரு பெரிய புலியின் எடை 250 முதல் 300 கிலோ வரை இருக்கும். ஆனால், ஆரோக்கியமான சிறுத்தையாக இருந்தாலும் அதிகபட்சம் 70–80 கிலோ அளவுதான் இருக்கும். புலி 120 செ.மீ. உயரம் வரையிருக்கும். ஆனால், சிறுத்தை அதிகபட்சமே 70 செ.மீ.க்கு உள்ளாகவே இருக்கும். அதனால் அந்த உயரத்துக்குள் இருக்கும் குழந்தைகளை அவை தாக்குவதாக" அவர் கூறுகிறார்.

''சிறுத்தைகளின் முக்கிய இரை, காட்டுப்பன்றிகள்தான். புள்ளி மான் குட்டி, கேளையாடு, சருகுமான் (Mouse Deer), காட்டு முயல், காட்டுக்கோழி, தெருநாய் ஆகியவற்றையும் அவை அதிகமாக வேட்டையாடும். சில நேரங்களில் பெருக்கான், தவளை, காமன் லங்கூர், நீலகிரி லங்கூர், சாதாரண குரங்குகள் (bonnet macaque) போன்றவற்றையும் வேட்டையாடி உண்ணும். தேயிலைத் தோட்டப் பகுதிகளில் உள்ள கடமான் குட்டிகள் அவற்றுக்கு விருப்பமான வேட்டை உணவு.'' என்கிறார் வனத்துறை மருத்துவர் ராஜேஷ்.

சிறுத்தைகள் பெரும்பாலும் அதன் கண்களுக்கு நேராக அல்லது அதற்கான சம அளவில் உள்ள சிறிய உயிர்களை மட்டுமே வேட்டையாடும் என்று கூறும் ராஜேஷ், இதனால்தான் குழந்தைகள் அதிகமாக தாக்கப்படுவதாக கூறுகிறார்.

குழந்தைகளை சிறுத்தைகள் குறிவைப்பது ஏன்?

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,SCIENTIST RAMESH

படக்குறிப்பு,புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

சமீபகாலமாக தேயிலைத் தோட்டங்களில் உள்ள குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தெருநாய்களைக் கொல்லவும் சிறுத்தைகள் அவற்றை நோக்கி வருவதாகச் சொல்கிறார், இந்திய காட்டுயிர் மையத்தின் (WII-Wildlife Institute of India) மூத்த விஞ்ஞானி ரமேஷ். அந்த உயரத்திலுள்ள குழந்தைகளையும் தனக்கான இரை என்று கருதி அவை வேட்டையாடுவதாகச் சொல்கிறார் அவர்.

ஜிம் கார்பெட் நுாலில் எழுதியுள்ளதைக் குறிப்பிடும் விஞ்ஞானி ரமேஷ், ''இரண்டு சம்பவங்களில் இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டிருக்கும் போது, 2 பெண்களை புலிகள் தாக்கிக் கொன்றதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே விறகு பொறுக்கக் குனியும் போதும், புலிகள் மற்றும் சிறுத்தைகளால் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார். சமீபகால நடைமுறையிலும் இதுபோலவே பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.'' என்கிறார்.

இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை விஞ்ஞானி ஆனந்தகுமார் பேசுகையில், ''தெரு நாய்களைத் தேடி சிறுத்தைகள் வருகின்றன. அதே உயரத்தில்தான் குழந்தைகளும் இருப்பதால் அவர்களைத் தாக்குகின்றன. உண்மையில் இதுபற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காடும், குடியிருப்பும் கலந்து இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணமென்பதை மறுக்க முடியாது.'' என்கிறார்.

புலி மற்றும் சிறுத்தைகளைப் பொறுத்தவரை, அவற்றின் வாழ்விடங்களைப் பொறுத்து, அதன் வாழ்வியலும், வேட்டையாடலும் அமைவதாகச் சொல்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

''புலிகள் சாதாரணமாக 2 வயதானவுடன் தாயை விட்டுப் பிரிந்து வெளியேறி வேட்டையாடப் பழகும். அப்போது எந்த இரை எளிதாகக் கிடைக்கிறதோ அதைத்தான் அவை தாக்கும். அதேபோன்று, காயம் பட்ட புலிகள் மனிதர்களை வேட்டையாடும். ஆனால், காயம்படும் புலிகள் வெகுநாட்கள் இருக்காது; இறந்துவிடும். '' என்கிறார் ரமேஷ்.

மனிதரை இரையாக்கிய பின்னும் 'மேன் ஈட்டர்' ஆகாத புலி

இதற்கேற்ப முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் வனத்துறை அதிகாரி ஒருவர் விளக்கினார். கடந்த 2023 ஜனவரி 31 ஆம் தேதியன்று, முதுமலை தெப்பக்காடு முகாமிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காட்டுக்குள் விறகு பொறுக்கச் சென்ற ஒரு பழங்குடி மூதாட்டியை அடித்துக் கொன்ற இரண்டரை வயது புலியை, கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாகக் கண்காணித்தும் அதற்குப் பின் எந்த மனிதர்களையும் அது தாக்கியதில்லை என்று அவர் விளக்கினார்.

இதுபோன்று தற்செயலாக நடக்கும் சம்பவங்களால் புலிகள், உடனே 'மேன் ஈட்டர்'களாக மாற வாய்ப்பில்லை என்பதை இந்த ஆய்வு விளக்குவதாக வனத்துறையினர் விளக்குகின்றனர். அதனால்தான், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ஒரு புலி 'மேன் ஈட்டர்' ஆக மாறியதை ஆதாரப்பூர்வமாக வனத்துறை நிரூபிக்காவிட்டால் அதை சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புலிகளும், சிறுத்தைகளும் ஆட்களைக் கொல்வதிலிருந்து மக்களைக் காக்க, ஒவ்வொரு பகுதியையும் சம்பவத்தையும் ஆராய்ந்து தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென்பது விஞ்ஞானிகள் பலருடைய ஒருமித்த கோரிக்கையாகவுள்ளது. காடுகளை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு அதற்கேற்ப விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மனிதன் – காட்டுயிர் மோதலை தவிர்ப்பது எப்படி?

மனித–காட்டுயிர் மோதல் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இயற்கை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஆனந்தகுமார், ''நகருக்குள் சாலைகளை ஒட்டி வீடுகள் இருக்கின்றன. அங்கே வாழும் குழந்தைகளை சாலைக்குப் போகக் கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பது போல, காட்டை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இத்தனை மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது, விளையாடக் கூடாது என்று குடும்பங்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார்.

புலியும் சிறுத்தையும் ஆட்கொல்லிகளாக மாறுவது எப்போது?

பட மூலாதாரம்,NCF

படக்குறிப்பு, புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது இதற்கு ஒரு தீர்வு கிடையாது என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்

வால்பாறையில் மட்டுமின்றி, கேரள மாநிலம் வயநாடு, மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதி என இந்தியாவில் குடியிருப்பும், காடும் உள்ள பகுதிகளில் மனித–காட்டுயிர் மோதல் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானி ரமேஷ், "புலி, சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பது ஒரு தீர்வு கிடையாது, அந்தந்தப் பகுதிக்கேற்ப நுண் திட்டங்களை (Micro Plan) உருவாக்க வேண்டும்" என்கிறார். தங்கள் அமைப்பின் ஆராய்ச்சியில், மனித–காட்டுயிர் மோதலுக்கு காடு துண்டாடப்படுவதும் முக்கியக் காரணமாகத் தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அவர்.

''தேசிய அளவில் மனித–காட்டுயிர் மோதலுக்கான மையத்தை கோவையில் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தண்ணீர், தெரு விளக்கு என அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி அளவில் திட்டம் தீட்டுவதுபோல, இதிலும் ஊராட்சி அளவில் திட்டங்களைத் தீட்டுவதற்கு வாய்ப்புள்ளது. ஒரு பகுதியில் மோதல் வந்தபின் தீர்வு காண்பதை விட வராமல் தடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்குவது அவசியம்.'' என்கிறார் விஞ்ஞானி ரமேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0j4nq3d7g1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.