Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெட்ரோ சான்செஸ்

பட மூலாதாரம்,PIER MARCO TACCA/GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும்.

ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய நட்பு கூட்டணியும் நம்பகமானதாக இல்லை.

இந்நிலையில், சில ஐரோப்பிய தலைவர்களும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது அவசியம் என கருதத் தொடங்கியுள்ளனர்.

ராணுவக் கட்டுப்பாடு

அமெரிக்க வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, யுக்ரேனில் நேட்டோ பயிற்சிகளில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் யோசனை 1950 களில் இருந்து தோன்றியது என்று கூறுகிறார் நெதர்லாந்தில் உள்ள கிளிங்கெண்டேல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவரான டிக் சாண்டி.

"இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியைப் பற்றியும் கவலை இருந்தது, ஆனால் ஜெர்மனியில் ஜனநாயக அரசு நிறுவப்பட்ட பிறகு இந்தக் கவலை மறைந்துவிட்டது.

இருப்பினும், 1950 ஆம் ஆண்டு கொரியப் போர் தொடங்கிய பிறகு, சோவியத் யூனியனிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது என்பது தெளிவாகியது. அதைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது" என்று டிக் சாண்டி கூறுகிறார்.

இந்தக் கூட்டுப் படைக்கு 'ஐரோப்பிய பாதுகாப்புச் சமூகம்' என்று பெயரிடப்பட்டது.

லக்சம்பர்க், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அதனை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் இந்த திட்டத்தை நிராகரித்தது. பின்னர் இந்த லட்சியத் திட்டம் தோல்வியடைந்தது.

1949 இல் நேட்டோ நிறுவப்பட்டதும், இந்த திட்டத்தை பாதித்தது.

அந்தக் கூட்டணி தொடங்கப்பட்டபோது, அமெரிக்காவும் கனடாவும் அதன் முக்கிய உறுப்பு நாடுகளாக இருந்தன.

1980களில் சோவியத் யூனியனின் அச்சுறுத்தல் குறைந்திருந்தது, ஆனால் பின்னர் சூழல் மீண்டும் மாறத் தொடங்கியது .

2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்று டிக் சாண்டி கருதுகிறார்.

1990 களில் ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்று தோன்றியது.

ஆனால் தொடர்ந்து அப்படியான சூழல் நிலவவில்லை. யுக்ரேன் போர் முழு ஐரோப்பாவையும் பாதிக்கிறது.

அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் ஆசியாவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று டிக் சாண்டி கூறுகிறார்.

அதே நேரத்தில், சீனா ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது.

எனவே, டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐரோப்பா அதன் பாதுகாப்பை முன்பை விடவும் மிகத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

2018 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஐரோப்பிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் பல நாடுகளும் அதற்கு எதிராக உள்ளன.

"கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் இதற்கு எதிராக உள்ளன, ஏனெனில் இது அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து தூர விலக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நெதர்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக இல்லை" என்கிறார் டிக் சாண்டி.

"இருப்பினும், அவர்கள் நிச்சயமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆதரிப்பார்கள்.

ஆனால் ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதை ஆதரிக்கின்றனவா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.

அவர்கள் ஐரோப்பாவில் ஒரு ராணுவ அமைப்பை உருவாக்குவதை கடுமையாக எதிர்க்கலாம்."

மேலும் ஐரோப்பிய ராணுவம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் டிக் சாண்டி குறிப்பிடுகிறார்.

மிகப்பெரிய படை

நேட்டோ உச்சி மாநாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த வாரம், நேட்டோ உச்சி மாநாடு நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெற்றது.

அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கினால், அது அமெரிக்க ராணுவத்திற்கு சமமாகவும், ரஷ்ய ராணுவத்தை விட பெரியதாகவும் இருக்கும் என்று பாரிஸைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் உல்ரிக் ஃபிராங்க் கருதுகிறார்.

ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, இது அவ்வளவு எளிதானது அல்ல. அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை சேகரித்து, தேவைக்கேற்ப அவற்றை நிலைநிறுத்துவது பல சவால்களை முன்னிறுத்துகிறது " என்று அவர் கூறுகிறார்.

ஐரோப்பாவில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் போன்ற வளங்கள் உள்ளன.

"ஐரோப்பாவில் மூன்று அல்லது நான்கு நாடுகளில் மட்டுமே பெரிய ராணுவப் படைகள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமாக பிரிட்டனும் அடங்கும், ஆனால் இப்போது அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகியவை முக்கிய ராணுவ வளங்களைக் கொண்டுள்ளன" என்று முனைவர் பிரான்கி குறிப்பிடுகிறார்.

பிரிட்டன் மற்றும் பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன.

ஐரோப்பா போருக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளது என்று முனைவர் பிராங்கியிடம் கேட்டபோது, தெளிவான பதில் இல்லை என்றும், ஆனால் ஐரோப்பாவிடம் நிச்சயமாக போதுமான ராணுவ வளங்கள் இருப்பதாகவும் கூறினார்.

"எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடு தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதலின் தன்மையைப் பொறுத்து மற்ற நாடுகள் பதிலளிக்கும். பல நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தேவையான அளவு ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் விளக்குகிறார்.

முனைவர் உல்ரிக் ஃபிராங்கேவின் கூற்றுப்படி, நேட்டோவிற்கு தனக்கென ஒரு நிரந்தர ராணுவம் இல்லை. அதன் ராணுவத் திறன் அதன் உறுப்பு நாடுகளின் படைகளைச் சார்ந்துள்ளது. நேட்டோ ஒப்பந்தத்தின் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அது முழு கூட்டணியின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது.

"ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் பிரிவு 42.7 இன் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து உறுப்பினர்களும் அதற்கு உதவ கடமைப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருதரப்பு ராணுவ ஒப்பந்தங்களும் உள்ளன" என்கிறார் முனைவர் பிரான்கி.

இருப்பினும், போர் போன்ற சூழ்நிலையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உத்தி சார்ந்த ஒருங்கிணைப்பு, வீரர்களை அனுப்புதல் மற்றும் ஆகியவை பெரும்பாலும் நேட்டோவின் மூலம் நடைபெறுகின்றன.

அதனால் தான், நேட்டோ இல்லாமல் போரின் சவால்களை சமாளிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய ராணுவம் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அனைத்து நாடுகளின் ராணுவங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.

மற்றொரு பரிந்துரை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ராணுவத்தை வைத்திருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய ராணுவத்திற்காக ஒரு தனி படையையும் உருவாக்கலாம் என்பதாக உள்ளது.

ஆனால் இந்த யோசனையுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

உதாரணமாக, ஐரோப்பிய ராணுவத்தை யார் வழிநடத்துவார்கள்? எந்த நாடு எவ்வளவு வளங்களை வழங்கும், எவ்வளவு செலவை ஏற்கும் என்பதை தீர்மானிப்பதும் சிக்கலானது. இது ஒரு பெரிய பிரச்னை, இதைத் தீர்ப்பது எளிதல்ல என்று முனைவர் உல்ரிக் ஃபிராங்கே கூறுகிறார்.

ராணுவ அதிகாரத்தில் சமநிலை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ.

குறைந்தபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரும் முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளருமான ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார்.

மேலும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள் விரைவில் முறிந்து விடுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று லுங்கெஸ்கு கூறுகிறார்.

"எதிர்காலத்தில் நேட்டோவில், ஐரோப்பாவின் பங்கு அமெரிக்காவை விட முக்கியமானதாக இருக்கும் வகையில் சமநிலைப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்.இதில், ஐரோப்பிய ராணுவமும் அதன் திறன்களும் மேம்படுத்தப்படும். மேலும், ஐரோப்பா-நேட்டோ ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்படும். இது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும்" என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

இருப்பினும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருக்கலாம்.

கடந்த காலத்தில், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்கும் யோசனையை ரஷ்யாவின் பிரச்சார இயந்திரம் ஆதரித்தது, ஏனெனில் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்று ஓனா லுங்கெஸ்கு விளக்குகிறார்.

அவரைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ராணுவத் திறன் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதைப் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது.

ஐசனோவர், நிக்சன், கென்னடி மற்றும் ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்களின் காலத்தில் பல ஆண்டுகளாக, ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்கு அதிகளவில் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருந்தது என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

"இப்போது அதிபர் டிரம்பும் அதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவரது கேள்வி நியாயமானது தான்" என்றும் லுங்கெஸ்கு கூறுகிறார்.

தொடர்ந்து பேசியபோது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனி ராணுவத்தை உருவாக்கினால், அது அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் சில பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் லுங்கெஸ்கு குறிப்பிடுகிறார்.

ஆனால், போர் ஏற்பட்டால் ஐரோப்பிய ராணுவத்தால் ஐரோப்பாவைப் பாதுகாக்க முடியாவிட்டால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது நடந்தது போல் அமெரிக்கா நிச்சயமாக அதன் உதவிக்கு வரும்.

நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐரோப்பா நேட்டோவிற்கு தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி வருகிறது (குறியீட்டு படம்)

இந்த ஆண்டு ஸ்பெயின் பிரதமர், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால் சமீபத்தில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, தற்போது யாரும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது குறித்து பேசவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், நேட்டோவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அனைத்துத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர்.

மேலும், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஆனால் ஜூன் 2025 இல், ஐரோப்பாவில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகளை வழிநடத்த ஒரு மூத்த அமெரிக்க ஜெனரலை நியமித்துள்ளார் அதிபர் டிரம்ப்.

1951 முதல், நேட்டோவில் ஐரோப்பிய கட்டளைக்கான பொறுப்பு ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம் இருப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது.

இந்தப் பதவிக்கு ஒரு அமெரிக்க ஜெனரலை நியமித்திருப்பது, அமெரிக்கா நேட்டோவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதையும், ஐரோப்பாவின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார்.

அமெரிக்க நிர்வாகமும் நேட்டோவை வலுவாக ஆதரிக்கும் அதே நிலைப்பாட்டையே முன்னெடுக்கிறது.

ஆனால், ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் நேட்டோவின் வலுவான கூட்டாளிகளாக மாற வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.

இந்த மாதம் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிலும் அதிபர் டிரம்ப் பங்கேற்பார். இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கவனம் பாதுகாப்பு முதலீடுகளில் இருக்கும்.

அடுத்த சில தசாப்தங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது ஐந்து சதவீதத்தை பாதுகாப்பு பட்ஜெட்டுக்காக செலவிட வேண்டும் என்பதை இது வலியுறுத்தும் என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார்.

"ஐரோப்பாவில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் தற்போது ஐரோப்பா தேவையான அளவு ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. ஆனால் இதற்கான நிதியை திரட்டுவது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

விநியோக சவால்

நேட்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ 1949 இல் வாஷிங்டன் டிசியில் நிறுவப்பட்டது.

தற்போது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புத் துறையில் முதலீட்டை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்வென் பிஷப்.

பனிப்போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறை தொடர்பான தங்களது செலவுகளைக் குறைத்ததாகவும், பல நாடுகளில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளதாகவும் அவர் விளக்குகிறார்.

"ஆனால் பாதுகாப்புத் துறையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது போதாது. ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்குவதை இது கடினமாக்குகிறது."

ஐரோப்பாவில் போலந்து தான் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஏழு மடங்கை, பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒதுக்கியுள்ளது.

அதே போல், லிதுவேனியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடுகள் இவை என்றும், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்கின்றன என்றும், அதனால் தான் இந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை விரைவாக அதிகரித்துள்ளன என்றும் முனைவர் பிஷப் கூறுகிறார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த ராணுவப் படைகள் மற்றும் ஆயுதக் குவியல்கள் மிகப் பெரியவை, ஆனால் அமெரிக்காவை விலக்கிவிட்டால், ஐரோப்பாவிற்கு குறைவான வளங்களே மிஞ்சும்.

"உதாரணமாக, ராணுவ செயற்கைக்கோள்கள், நவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற வளங்கள் தேவை. ஆனால் தனியாக இந்த முழு செலவையும் ஏற்பது என்பது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு கடினமான விஷயம். இந்த குறைபாடுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பதே மிகப்பெரிய சவால்" என்கிறார் முனைவர் பிஷப்.

கூடுதல் நிதி எவ்வாறு திரட்டப்படும்?

நேட்டோ வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நேட்டோ வீரர்கள் (மாதிரி புகைப்படம்)

பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க, அரசாங்கங்கள் மற்ற துறைகளில் இருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று முனைவர் ஸ்வென் பிஷப் கூறுகிறார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும், நேட்டோவில் உறுப்பினராகவே உள்ளது.

பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்க அதன் வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் குறைப்பது குறித்தும் பிரிட்டன் பரிசீலித்து வருகிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தன. நேட்டோவின் கூற்றுப்படி, அதன் 32 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் இந்த இலக்கை அடைந்துள்ளன.

இப்போது நேட்டோ இந்த இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக முனைவர் பிஷப் கூறுகிறார்.

"பாதுகாப்பு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். இது ஐரோப்பாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெற உதவும். இந்த இலக்கை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள் அறிவார்கள். அமெரிக்காவின் கவனம் உலகின் பிற பகுதிகளுக்கு திரும்பினால், போர் ஏற்பட்டால் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் கூறுகிறார்.

விரைவில் ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க முடியுமா என்ற முக்கிய கேள்வியைக் குறித்து இப்போது ஆராய்ந்தால், அதற்கான பதில் இல்லையென்பதாகவே உள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை அதிகரித்திருந்தாலும், அவை அமெரிக்காவைக் கைவிடத் தயாராக இல்லை.

ஐரோப்பிய ராணுவத்திற்காக பரப்புரை செய்யும் நாடுகள், தேவையான பணத்தை திரட்ட மற்ற பகுதிகளில் செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது ஐரோப்பிய ஒன்றிய சார்பு குழுக்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும்.

இது வெறும் பொருளாதாரச் சுமையைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல.

ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கடுமையான அரசியல் கேள்விகள் எழும்.

ராணுவத்தின் இத்தகைய முடிவுகள் நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கலாம்.

ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் முழுமையான ஒற்றுமை தேவைப்படுகிறது.

தற்போது, நடைமுறைக்கு மாறான யோசனையாக உள்ள இதனைக் குறித்து, ஐரோப்பிய நாடுகளிடையே ஆழமான வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz7ll33zx99o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.