Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்?

நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

கட்டுரை தகவல்

  • இம்ரான் குரேஷி

    பிபிசிக்காக

  • 38 நிமிடங்களுக்கு முன்னர்

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கிச் சென்றபோது, தங்க நிற முடியுடன் கூடிய ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே ஓடி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

"குகையைச் சுற்றி பாம்புகள் திரிவதைக் காண முடிந்தது. கடந்த ஆண்டு ராமதீர்த மலைகளைச் சுற்றி நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் இந்தப் பகுதி ஆபத்தானதாக உள்ளது. அதனால்தான் ரோந்துக் குழு சுற்றுப்புறங்களைச் சோதனை செய்து வருகிறது" என்று உத்தர கன்னட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். நாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.

'கடவுளுக்கு சேவை செய்வதாகக்' கூறும் ரஷ்யப் பெண்

குகைக்குள் நினா குடினா (40) என்ற ரஷ்யப் பெண்ணும், அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர்.

"அங்கு வாழ்வது ஆபத்தானது என்று அப்பெண்ணுக்கு உணர்த்த நேரம் ஆனது" என்கிறார் எஸ்பி நாராயணா.

ஒரு வாரத்திற்கு முன்பு, அந்த ரஷ்யப் பெண் சில காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்துள்ளார். அவர்கள் விறகுகளைப் பயன்படுத்தி சமைத்துள்ளனர். காவல்துறையினர் அங்கு பிரபலமான நூடுல்ஸ் மற்றும் சாலட் பிராண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.

"எங்கள் குழுவினர் பாண்டுரங்க விட்டல் சிலையை அவர் வணங்குவதைக் கண்டறிந்தனர். 'கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பினார். நான் தவம் செய்து வருகிறேன்' என்று கூறினார்'' என்கிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

நீனா, காவல்துறையிடம் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் அவரது பாஸ்போர்ட்டை கண்டுபிடித்தனர்.

அப்பெண் அவ்வப்போது இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது.

எப்போதில் இருந்து அப்பெண் அங்கு வசித்து வருகிறார்?

அப்பெண் முந்தைய ஆண்டுகளில் அவ்வப்போது இந்தியாவுக்கு அவ்வப்போது வந்துள்ளார். ஆனால் அவரது விசா 2017-ல் காலாவதியாகியுள்ளது.

படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார்.

விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது.

அதன்பின், நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார்.

இந்நிலையில், காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c74zdez707ko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகா: இரு பெண் குழந்தைகளோடு குகையில் வசித்தது ஏன்? ரஷ்ய பெண் விளக்கம்

கர்நாடகாவில் மலைக் குகையில் இருந்து மீட்கப்பட்ட நீனா குடினா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, கர்நாடகாவில் மலைக் குகையில் இருந்து மீட்கப்பட்ட நீனா குடினா

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மலைக் குகையில் வசித்தபோது இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக, தனது மகள்களைக் கொல்வதற்காக அங்கு இருக்கவில்லை என்றும் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு மலைக் குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமைக்கு நீனா குடினா என்ற அந்தப் பெண் அளித்த பேட்டியில் தங்களைப் பற்றிப் பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

"நான் எனது மகள்களைக் காட்டில் சாவதற்காக அழைத்து வரவில்லை. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் நீந்தி மகிழ்ந்தனர். அங்கு தூங்குவதற்கு மிக வசதியான இடம் இருந்தது. களி மண்ணில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியங்கள் வரைவது எனப் பல நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன்.

நாங்கள் நல்ல உணவைச் சாப்பிட்டோம். நான் சமையல் எரிவாயுவில் சமைத்தேன். அது நல்ல, சுவையான, ஆரோக்கியமான உணவு. எனக்குப் பித்துப் பிடித்து, என் குழந்தைகளுக்கு எதுவும் தரவில்லை என்பது உண்மையில்லை. எனது மகள்களுக்குச் சிறந்தவையே கிடைத்தன. அவர்கள் நன்கு உறங்கினர், அவர்கள் ஓவிய பாடங்களையும் எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டனர். அவர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கவில்லை. அது உண்மையில்லை," எனத் தெரிவித்தார்.

தனது இரண்டு மகள்களுடன் மீட்கப்பட்ட நீனா குடினா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு, தனது இரண்டு மகள்களுடன் மீட்கப்பட்ட நீனா குடினா மலைக்குகையில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாக கூறுகிறார்

இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஆரோக்கியத்தை உறுதி செய்வதாகக் கூறிய நீனா குடினா 20 வெவ்வேறு நாடுகளில் காடுகளில் வசித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இயற்கையோடு வசித்து இயற்கை தரும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தாங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் அவர் தமது பேட்டியில் கூறினார். "நாங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தோம். இன்று எங்களை மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக அவர்கள் அழைத்து வந்தனர். எனது மகள்கள் மருத்துவமனைக்கு வருவது இதுதான் முதல் முறை. அவர்கள் மிகவும் நலமாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டதே இல்லை. சளி போன்ற சிறு தொந்தரவுகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கும்," எனக் குறிப்பிட்டார்.

"நாங்கள் இயற்கையிலேயே வசிக்க விரும்புகிறோம் என்பதுதான் இதற்குக் காரணம். அதுவொரு குகை, இது ஏதோ ஒரு பெரிய காடு போலவோ, எல்லோரிடம் இருந்தும் தொலைதூரத்தில் இருக்கிறோம் என்பது போலவோ, உணவு கிடைக்காது என்பது போன்றோ இல்லை. அது கிராமத்திற்கு வெகு அருகில் இருந்தது, அத்துடன் அது மிகவும் பெரிய, அழகான ஒரு குகை. கடல் தெரியும் வகையில் ஜன்னல் போன்ற ஓர் அமைப்புடன் இருந்தது," என்றார் நீனா.

தாங்கள் அபாயகரமான இடத்தில் இருந்ததாகக் கூறப்படுவதையும் நீனா மறுத்தார்.

"அது அபயாகரமான இடமல்ல. சுற்றுலாப் பயணிகள் உள்பட யார் வேண்டுமானாலும் போகக்கூடிய இடம்தான். பாம்புகளைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு சில பாம்புகளைப் பார்த்தது உண்மைதான். ஆனால் கோகர்னாவில் வீட்டுக்குள், சமையலறை, கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் பாம்புகள் வந்த புகைப்படங்களைப் பார்க்கிறோம். இதுவும் அதைப் போன்றதுதான். நாங்கள் அவற்றைப் பார்த்தோம். அவை அதன் வழியில் செல்கின்றன. நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். யாருக்கும் ஆபத்தில்லை," என்று விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்ய பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தன்னுடைய விசா 2017ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுவது குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

"எங்களிடம் நடப்பு விசா இல்லை. அது காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில் காலவதியானது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் நான்கு நாடுகளில் வசித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தோம். எனது பெரிய மகன் உயிரிழந்துவிட்டான், அது நடந்ததால் விசாவை புதுப்பிக்காமல் நான் கொஞ்சம் கூடுதலாக நாட்டில் இருந்துவிட்டேன். ஆனால் அவர்கள் கூறுவது போல் அத்தனை நாட்கள் அல்ல."

ரஷ்யாவில் பிறந்திருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வருவதாகக் கூறுகிறார் நீனா.

"ரஷ்யாவை விட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டேன். அதற்குப் பிறகு நான் கோஸ்டா ரிக்கா, மலேசியா, பாலி, தாய்லாந்து, நேபாளம், யுக்ரேன் எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன்."

இயற்கையின் மீதுள்ள காதல்தான் காட்டில் வசிக்க வைப்பதாகவும் கூறுகிறார் அவர்.

"இது ஆன்மீகம் தொடர்பானது அல்ல. எங்களுக்கு இயற்கை பிடிக்கும், அது ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது, தரையில் வசிக்க முடிகிறது, உடலைத் தூய்மைப்படுத்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இயற்கையோடு இருப்பது என்பது வீட்டில் வசிப்பதைப் போல் அல்ல."

தொடர்ந்து இந்தியாவில் வசிக்க விருப்பிகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.

"எனக்கு உண்மையில் எந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் எங்கள் விசா காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில்தான் காலாவதியானது. எனது மகன் இறந்துவிட்டான். அவன் இறந்த பின்னர் நான் அதிகம் அழுதேன். அந்த நேரத்தில் நான் செய்யக்கூடியது ஏதும் இருக்கவில்லை," என்றார் நீனா.

"எனது மகள்கள் மிகவும் வசதியாக இருந்தனர். நாங்கள் குகையில் இருந்த நாட்கள் முழுவதும் வீடியோக்கள் மற்றும் போட்டோ பதிவுகளாக இருக்கின்றன. நாங்கள் எப்படி சுவையான உணவைச் சமைத்தோம், என்ன சாப்பிட்டோம், அவர்களுக்கு நான் எடுத்த வகுப்பு, ஓவியம் மற்றும் களிமண் பொருட்கள் செய்தது என அனைத்துமே வீடியோவாக உள்ளது."

ரஷ்ய பெண் காட்டில் எப்போதிருந்து வசித்து வந்தார்?

நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார்.

விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது.

அதன் பிறகு, நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx23v32pvpwo

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-4-2.jpg?resize=600%2C300&ssl

8ஆண்டுகள் குழந்தைகளுடன் குகையில் வாழ்ந்துவந்த பெண் வெளியிட அதிர்ச்சி தகவல்கள்!

கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார் , மண்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

அவரை விசாரித்தபோது, அவரது பெயர் நினா குடினா (40) எனவும், அவர் தனது 2 மகள்களுடன் அங்கு தங்கியிருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து 3 பேரையும் பொலிஸார் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கி விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை மேற்கொண்ட கோகர்ணா பொலிஸாரிடம் உண்மைகளை கூறிய நினா ,

”நான் ரஷ்யாவைச் சேர்ந்தவள். 2016ஆம் ஆண்டு சுற்றுலா பயணியாக கோவாவுக்கு வந்தேன். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து கோகர்ணாவில் 3 மாதங்கள் தங்கியிருந்தேன். இங்கிருந்து நேபாளத்துக்கு சென்று, 2017இல் மீண்டும் கோகர்ணாவுக்கு வந்தேன்.

இந்த குகையை எனக்கு கடந்த‌ 8 ஆண்டுகளாக தெரியும்.

ஆன்மிகத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதால் உள்ளூர் சாமியார் ஒருவர் தியானம் செய்வதற்காக இந்த குகையை காட்டினார்.

இந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் மூலம் 2 பெண் குழந்தைகளையும் பெர்றேடுத்துக்கொண்டேன்.

தற்போது அவரிடம் இருந்து பிரிந்து வாழும் நிலையில், என்னுடன் மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) இருக்கிறார்கள்.

என் மகள்க‌ளுக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்திருக்கிறேன், நாங்கள் தினமும் ஆற்றில் குளித்துவிட்டு 3 பேரும் தியானம் செய்வோம்.

10 நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குள் சென்று சாப்பிடுவதற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவேன்.

எனக்கு தேவையான பணத்தை உறவினர்கள் சிலரும், நண்பர்களும் அனுப்பி வைப்பார்கள். என்னிடம் தொலைபேசி இருந்தாலும், அதனை பெரிதாக பயன்படுத்த மாட்டேன்.

இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள்.

இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும். எனக் கூறியுள்ளார்.

குறித்த விசாரணையை அடுத்து பொலிஸார் ரஷ்ய பெண்ணையும், அவரது மகள்களையும் கோகர்ணா மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவர்களின் கடவுச்சீட்டு , விசா போன்றவற்றை பரிசோதித்து, ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

https://athavannews.com/2025/1439472

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.