Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நச்சுப் பாம்புகளை எளிதில் அடையாளம் காண்பது எப்படி? உதவும் புதிய கையேடு

பட மூலாதாரம்,RAMESHWARAN

படக்குறிப்பு, பூனைக்கண் பாம்பு

கட்டுரை தகவல்

  • க. சுபகுணம்

  • பிபிசி தமிழ்

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், "மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு" என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது.

இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு.

பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப் பார்த்தால் மட்டுமல்ல, காதில் கேட்டாலே மனித மனதில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

இதன் விளைவாக பாம்புகள் பாதுகாப்பு பற்றிய அறிவியல் பல உயரங்களைத் தொட்டாலும், பொது மக்கள் மத்தியில் அது குறித்த அச்சமும், தவறான புரிதல்களும், மூட நம்பிக்கைகளும் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன.

மக்கள் பாம்புக்கடியில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழலில் பாம்புகளின் பங்கை உணர்த்தவும் அடிப்படைத் தேவை, பொது மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே என்று காட்டுயிர் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர்.

உலக பாம்புகள் தினம், பாம்புக் கடி விபத்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாகப் பாம்பு உள்பட தமிழகத்தில் காணப்படும் 9 வகை நச்சுப் பாம்புகள் பற்றிய தகவல்களை இந்தக் கையேடு வழங்குகிறது.

அதோடு, பாம்பு கடித்த பிறகு ஒருவர் செய்ய வேண்டியவை குறித்து நிலவும் பல தவறான புரிதல்களே, பாம்புக் கடியால் உயிரிழப்புகள் அதிகம் நிகழக் காரணமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன் மற்றும் பாம்பின் நஞ்சு குறித்து ஆய்வு செய்து வரும் பாம்புக்கடி விஞ்ஞானி முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கியுள்ள பாம்புகள் தொடர்பான கையேடு, இத்தகைய தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படும் நஞ்சுள்ள, நஞ்சில்லாத பாம்புகள் பற்றிய அறிவையும் எளிய வகையில் வழங்குகின்றன.

பாம்பு கடிப்பதால் உடலில் என்ன நடக்கும்?

ஒருவரை நச்சுப் பாம்பு கடித்துவிட்டாலும், உடனடியாக மரணம் ஏற்படாது என்று கூறும் இந்தக் கையேடு, "நம்பகத்தன்மையற்ற மருத்துவ முறை, மூட நம்பிக்கைகள், காலம் தாழ்த்துதல் ஆகியவையே பாதிப்பைத் தீவிரப்படுத்துவதாக" கூறுகிறது.

அதோடு, பாம்பின் நஞ்சு துரிதமாகச் செயல்படுவதால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் அதுகுறித்த விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும் எனவும் "தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு வலியுறுத்துகிறது.

உலக பாம்புகள் தினம், பாம்புக் கடி விபத்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கட்டு வரியன்

இப்படியாக, தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் 30 வகையான பாம்புகள் குறித்து விரிவான புகைப்படங்களுடன், அவற்றின் உடலமைப்பு, வடிவம், நஞ்சின் தன்மை மற்றும் வீரியம், காணப்படும் நிலப்பகுதிகள், உலவக்கூடிய நேரம் என அனைத்துத் தகவல்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய 9 வகையான நச்சுப் பாம்புகள் பற்றிய ஆழமான அறிவியல்பூர்வ தகவல்களும் புகைப்படங்களும் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது.

"பாம்புகள் குறித்த அடிப்படைப் புரிதலோ, முதலுதவி குறித்த தெளிவோ இல்லாததுதான் பெரும்பாலான பாம்புக் கடி மரணங்களுக்குக் காரணமாக உள்ளன.

இந்தக் கையேடு மக்களிடையே அந்தத் தெளிவை ஏற்படுத்தும். அதன்மூலம், பாம்புக் கடியைத் தவிர்ப்பது முதல் கடித்துவிட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது வரை தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான ஆழமான புரிதல் ஏற்படும்," என்று விவரித்தார் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் மனோஜ்.

யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான இவர், "ஒவ்வொரு பாம்பின் நஞ்சும் எத்தகையது, அதனால் உடலில் எவ்வித பாதிப்புகள் ஏற்படும் என விரிவான தகவல்கள் இந்த நூலில் உள்ளதாக" தெரிவித்தார்.

உலக பாம்புகள் தினம்

படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன், முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கிய இந்தக் கையேட்டை தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது.

பாம்பு கடித்தவுடன் முதல் நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும்?

பாம்புகளை அடையாளம் காண்பது முதல் அவை கடித்தவுடன் உடலில் என்ன நடக்கும், எப்படிச் செயலாற்றுவது என்பதை மக்கள் தெரிந்து கொள்வதே பாம்புக்கடியால் நிகழ்வும் இறப்புகளைத் தடுக்கப் பெரியளவில் உதவும் என்கிறார் முனைவர் மனோஜ்.

மேலும், அந்த அறிவை பள்ளிக் குழந்தை முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் எளிதில் பெறுவதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கையேட்டில், பாம்பு கடித்துவிட்டால் அதன் முதல் நிமிடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றுவது வரை என்ன கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு, ஒருவரை பாம்பு கடித்துவிட்டால், அது நஞ்சுள்ளது, நஞ்சற்றது என எதுவாக இருந்தாலும் முதல் நிமிடத்தில், "உடனடியாக அருகில் இருப்பவரை உதவிக்கு அழைக்க வேண்டும். அல்லது அவசர உதவி எண்ணை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். கடிபட்ட நபர் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப, சாத்தியக்கூறுகளை உணர்ந்து, உடனடியாக எப்படியாவது மருத்துவமனையை அடைவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்," என்று கையேடு வலியுறுத்துகிறது.

இப்படியாக, மக்கள் பாம்புகளைப் புரிந்துகொள்ளவும், பாம்புக் கடியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய நச்சுப் பாம்புகள்

உலக பாம்புகள் தினம், பாம்புக் கடி விபத்துகள்

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN

படக்குறிப்பு, சுருட்டை விரியன்

தமிழ்நாட்டில் 130 பாம்புகள் 11 அறிவியல் குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 8 அறிவியல் குடும்பங்களைச் சேர்ந்த, தமிழ்நாட்டில் மக்களிடையே அதிகம் காணப்படும் பாம்பு இனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கையேடு, தமிழகத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் தென்படும் பாம்புகள் என ஒன்பது நச்சுப் பாம்புகளைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் மிகவும் அதிகமாகத் தென்படும், அதிக பாம்புக்கடி விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும் நான்கு வகைப் பாம்புகளும் அடக்கம். அவை,

  • நாகப் பாம்பு

  • கட்டு வரியன்

  • சுருட்டை விரியன்

  • கண்ணாடி விரியன்

இவைபோக, மேலும் ஐந்து நச்சுப் பாம்புகள் குறித்து புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை,

பாம்புகளை தெரிந்துகொள்வதால் மக்களுக்கு என்ன பயன்?

உலக பாம்புகள் தினம்

படக்குறிப்பு, 'தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்' கையேட்டை 200 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக கொண்டு செல்லத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார் சுப்ரியா சாஹு

தங்கள் அன்றாட வாழ்வில் பாம்புகளை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய மக்களிடையே, அவை குறித்த புரிதல் முழுமையாக இல்லை என்பதைத் தனது 24 ஆண்டுகால கள ஆய்வுகளின்போது உணர்ந்ததாகவும், அதுவே இப்படியொரு கையேட்டை தமிழில் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதைத் தனக்கு உணர்த்தியதாகவும் கூறுகிறார், "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற நூல் உருப்பெறுவதில் முக்கியப் பங்காற்றிய சுயாதீன ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன்.

பாம்புக் கடியால் மக்கள் பாதிக்கப்படுவது, மக்களால் பாம்புகள் கொல்லப்படுவது என இரண்டுமே நிகழ்வதற்குச் சில பொதுவான காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் ரமேஸ்வரன்.

அதில் முதன்மையான காரணம் பாம்பின் நஞ்சு. "பாம்பின் நஞ்சு தங்களுக்கு ஆபத்தானது என்று கருதுவதால் மக்கள் அவற்றைக் கண்டதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்."

ஆனால், அதேவேளையில், எந்தெந்த பாம்புகள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நஞ்சுள்ளவை, எவை நஞ்சற்றவை என்பதில் பொது மக்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லை என்கிறார் அவர்.

இதுவே, "நஞ்சற்ற பாம்பு என்ற தவறான புரிதலில் நஞ்சுள்ள பாம்பிடம் எச்சரிக்கையின்றி செயல்படுவதும், நஞ்சுள்ள பாம்பு என்று அஞ்சி ஆபத்தில்லாத, நஞ்சற்ற பாம்பை அடித்துக் கொல்வதும் நடக்கின்றன. நஞ்சுள்ளது, நஞ்சற்றது என இரு வகைப் பாம்புகளுமே சுற்றுச்சூழலுக்கு அளப்பறிய சேவைகளைச் செய்கின்றன. அதே வேளையில், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, ஆபத்தான பாம்புகள் குறித்த அறிவும் மக்களுக்கு அவசியம்" என்று விளக்கினார் ரமேஸ்வரன்.

அவரது கூற்றுப்படி, பாம்புகள் கொல்லப்படுவதையும், பாம்புக் கடிக்கு ஆளாவதையும் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வு, "மக்களிடையே அவை குறித்த அறிவியல் புரிதலை ஏற்படுத்துவதுதான்."

அதையும் அவர்களின் மொழியிலேயே வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறிய ரமேஸ்வரன், "இந்த நோக்கத்துடன் தான் பல்லாண்டுக் காலமாக, அனுபவ அடிப்படையில், கள ஆய்வுகளின் மூலம்" பாம்புகள் பற்றிய அறிவியல்பூர்வ தகவல்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் கிராமங்களைவிட நகரங்களில் பாம்புகள் மீதான அச்சம் அதிகம் எனக் குறிப்பிடும் தமிழக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ, "அந்த அச்சத்தைப் போக்குவதற்கான அடிப்படைத் தேவை அவை குறித்த அறிவுப் பகிர்வுதான். அதைச் சாத்தியமாக்குவதில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடு பேருதவியாக இருக்கும்," என்றார்.

மேலும், வனத்துறையால் வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டை பசுமைப் பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கும் 200 அரசுப் பள்ளிகளுக்கு முதல்கட்டமாகக் கொண்டு செல்லவிருப்பதாகவும், அடுத்தடுத்த முயற்சிகளில் இதை மேலும் பரவலாகக் கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c307yjr9ry2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.