Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய 102 ஆவது வயதில் காலமானார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை இவர் கேரளாவின் முதலமைச்சராக பதவி வகித்திருந்தார்.

https://thinakkural.lk/article/319195

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள்

அயராத போராளி வி.எஸ். அச்சுதானந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்.

அயராத போராளி வி.எஸ். அச்சுதானந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.

மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன்

ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்.

அயராத போராளி வி.எஸ். அச்சுதானந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன்.

1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன்.

அயராத போராளி வி.எஸ். அச்சுதானந்தன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன்.

தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர்

வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன்.

அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

"பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார்.

ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czey475denlo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.