Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • அன்பு வாகினி

  • பிபிசி தமிழுக்காக

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம் கருத்தரிப்பிலிருந்து இரண்டு வயது வரையிலான முதல் 1000 நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் உடல், மன, உணர்வுபூர்வமான வளர்ச்சி வேகமாக நிகழ்கிறது. இந்த நாட்களில் சரியான ஊட்டச்சத்து கிடைப்பது குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியம், அறிவுத்திறன், உற்பத்தித்திறனை தீர்மானிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் 'தாய்ப்பால் கொடுப்பதை முன்னுரிமைப்படுத்துங்கள், நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்'. உலகளவில் 44% குழந்தைகளுக்கு மட்டுமே 6 மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்கிறது உலக சுகாதார மையம். இந்தியாவில் இது 64% ஆக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS 5) கூறுகிறது. ஆண்டுதோறும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்கள், தாய்ப்பால் ஊட்டத்தால் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம், தாய்ப்பாலின் பங்கு, ஊட்டச்சத்து தேவைகள், தாய்ப்பால் இல்லாத நிலையில் ஏற்படும் பாதிப்புகள், இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டுதலின் நிலை, சமூக-பொருளாதார தாக்கங்கள், தேவையான கொள்கை மாற்றங்கள் பற்றி விரிவாகக் காணலாம்.

முதல் 1000 நாட்கள் ஏன் முக்கியமானது?

1. உடல் - மூளை வளர்ச்சி

கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை, இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகின்றன. பிறந்த பிறகு முதல் 2 வயது வரை, எலும்புகள், தசைகள், உள் உறுப்புகள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன. மூளையின் 80% இரண்டு வயதுக்குள் முழுமையாக வளர்ச்சி அடைகிறது. DHA (ஓமேகா-3), இரும்பு, அயோடின், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், வளர்ச்சி குன்றிய நிலை (Stunting), ஐ.க்யு. (IQ) குறைவு, கற்றல் திறன் பாதிப்பு ஏற்படும்.

2. நோய் எதிர்ப்பு சக்தி

தாய்ப்பாலில் இம்யூனோகுளோபுலின் IgA, லாக்டோஃபெரின் போன்ற நோயெதிர்ப்புப் பொருட்கள் உள்ளன. இவை குழந்தையை வயிற்றுப்போக்கு, நிமோனியா, அலர்ஜி போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகத் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது

3. எதிர்கால ஆரோக்கிய குறைபாடுகள்

முதல் 1000 நாட்களில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், பிற்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை எளிதாக வருவதற்கு சாத்தியம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் ஏன் குழந்தைக்குப் பொன்னான உணவு?

(1) தாய்ப்பாலின் ஊட்டச்சத்து மதிப்பு

தாய்ப்பாலில் புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்புப் பொருட்கள், ஹார்மோன்கள் போன்றவை உள்ளன.

கொலோஸ்ட்ரம் (சீம்பால் அல்லது முதல் பால்) பிறந்த முதல் 2-3 நாட்களில் வெளியாகும் மஞ்சள் நிறமான பால். இதை இயற்கையான தடுப்பூசி என்று அழைக்கிறார்கள். IgA, லாக்டோஃபெரின், வைட்டமின் A நிறைந்தது. DHA (மூளை வளர்ச்சிக்கு), லாக்டோஸ் (ஆற்றல் தரும்), ஓலிகோசாக்ரைடுகள் (oligosaccharides) (குடல் நோய்க்கிருமிகளை ஒழிக்கும்) இதில் அதிகமாக உள்ளது.

(2) தாய்ப்பால் ஊட்டுதலின் நன்மைகள்

(i) குழந்தைக்கான நன்மைகள்

நோய்த்தடுப்பு:

வயிற்றுப்போக்கு, நிமோனியா, காது தொற்றுகள், திடீர் குழந்தை மரணம் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மூளை வளர்ச்சி:

DHA மற்றும் ARA கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களை வலுப்படுத்துகின்றன. தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் ஐ.க்யு. 5-7 புள்ளிகள் அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உணர்ச்சிப் பிணைப்பு:

தாயுடன் உள்ள உடல் தொடர்பு, கண்காணிப்பு குழந்தையின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

(ii) தாய்க்கான நன்மைகள்

புற்றுநோய் குறைப்பு:

மார்பகப் புற்றுநோய் 28%, சூலகப் புற்றுநோய் (ovarian cancer) 21% குறைகிறது என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன.

உடல் எடை குறைதல்:

தாய்ப்பால் கொடுப்பதால் 500 கலோரிகள் ஒரு நாளில் செலவிடப்படுவதால், தாயின் உடல் எடை கூடாமல் பாதுகாக்கப்படுகிறது.

மகப்பேறு மன அழுத்தம் குறைப்பு:

ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் தாய்மார்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது

தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர முடியுமா?

தாய்ப்பால் இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது நடைமுறையில் சாத்தியமே. ஆனால், உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப், பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆய்வுகள் தாய்ப்பால் இல்லாத வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் (Victora et al., 2016; World Bank, 2020) ஏற்படுவதை தெளிவாக நிரூபிக்கின்றன. 2023இல் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸில் வெளியான ஒரு மெட்டா-அனாலிசிஸ் ஆய்வின்படி, தாய்ப்பால் பெறாத குழந்தைகளில் நிமோனியா, வயிற்றுப்போக்கு நோய்களின் விகிதம் 50% அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தாய்ப்பாலில் உள்ள IgA, லாக்டோஃபெரின், லைசோசைம் போன்ற சிறப்பு புரதங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதே (Ballard & Morrow, 2013; Chowdhury et al., 2015).

மூளை வளர்ச்சியின் அடிப்படையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 10 வருட ஆய்வு ஒன்று தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் மூளையில் சுமார் 20-30% அதிக நரம்பியல் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்துள்ளது (Isaacs et al., 2010. இந்த வித்தியாசத்துக்கு தாய்ப்பாலில் அதிக அளவில் காணப்படும் டோகோசா ஹெக்சானோயிக் அமிலம் (DHA) (Ballard & Morrow, 2013) முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது. 2022இல் நேச்சர் நியூரோசயின்ஸில் வெளியான ஆய்வு தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பள்ளியில் 12% சிறந்த செயல்திறன் கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது. நீண்ட கால ஆரோக்கியத் தாக்கங்களில், லான்செட் ஜர்னலின் 2021ஆம் ஆண்டு ஆய்வு தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தைகளின் பிற்காலத்தில் டைப்-2 நீரிழிவு வருவதற்கான சாத்தியம் 35% (Victora et al., 2016)அதிகமாக இருப்பதை கண்டறிந்தது.

தாய்ப்பாலின் சமூக - பொருளாதார முக்கியத்துவம் குறித்து உலக வங்கியின் 2020 அறிக்கை குறிப்பிடுகையில், தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்த பின் சராசரியாக 20% அதிக வருமானம் ஈட்டுவதாக கணக்கிட்டுள்ளது. இந்த வித்தியாசத்துக்கு மேம்பட்ட அறிவுத் திறன், குறைந்த நோய் தாக்க நாட்கள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன (Victora et al., 2015; World Bank, 2020).

எப்போது தாய்ப்பால் கொடுக்கக் கூடாது?

தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது எனினும், சில சூழ்நிலைகளில் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. தாய்க்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், HTLV-1 புற்றுநோய்கள், நரம்பு மண்டல பிரச்னைகள் போன்ற நோய்கள் இருந்தால், அவற்றை குழந்தைக்கு பரப்பும் அபாயம் இருப்பதால் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

குழந்தை கேலக்டோசீமியா (Galactosemia) போன்ற மரபணுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், பாலில் உள்ள சர்க்கரையை ஜீரணிக்க முடியாமல் போகும். மேலும், புற்றுநோய் சிகிச்சை (Chemotherapy), கதிரியக்க மருந்துகள் (Radioactive drugs) அல்லது சில தீவிர மருந்துகளைத் தாய் எடுத்துக்கொண்டால், அவை பாலில் கலந்து குழந்தையை பாதிக்கலாம்.

அதிகப்படியான மது அல்லது போதைப்பொருள் பயன்பாடு, சிகரெட் புகைப்பது போன்றவை பாலின் தரத்தை பாதிக்கின்றன. குழந்தைக்கு கடுமையான இரைப்பை குடல் நோய் (NEC) இருந்தாலும் தாய்ப்பால் தவிர்க்கப்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்று ஊட்டமுறைகளை பின்பற்றுவது நல்லது.

தாய்ப்பால், தாய்ப்பால் வாரம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தாய்ப்பால் சேமிப்பை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும்.

தாய்ப்பால் சேமிப்பு முறைகள் - முக்கியத்துவம்

தாய்ப்பால் சேமிப்பு என்பது ஒரு அறிவியல்பூர்வ முறை. இதை சரியாக புரிந்துகொண்டு பயன்படுத்தினால், தாய்மார்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகும். பணிபுரியும் தாய்மார்கள், படிப்பில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் அல்லது வேறு காரணங்களால் குழந்தைக்கு நேரடியாகப் பாலூட்ட முடியாத நேரங்களில், இந்த முறை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

தாய்ப்பாலை சரியான முறையில் சேமிப்பதன் மூலம், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாவிட்டாலும், முன்பே பாலை எடுத்து பிரிட்ஜ் அல்லது பிரீஸரில் சேமித்து வைக்கலாம். இந்த முறை மூலம், தாய்மார்கள் தங்கள் வேலை, குழந்தை பராமரிப்பையும் சமநிலைப்படுத்த முடிகிறது. பால் சேமிக்கும்போது குளிர்சாதன பெட்டியில் (4°C) 4 நாட்கள் வரை அல்லது ஐஸ் பாக்கெட் உள்ள கூலர் பையில் பாதுகாப்பாக வைக்கலாம். நீண்ட காலத்துக்கு பிரீஸரில் (-18°C) 6 மாதங்கள்வரை சேமிக்கலாம்.

தாய்ப்பால் வணிகமயமாக்கல்

தாய்ப்பாலின் வணிகமயமாக்கல் என்பது சமீபத்தில் உலகளவில் வளர்ந்துவரும் ஒரு தீவிர பிரச்னை. தாய்ப்பால் எடுத்து சேமிப்பது ஒரு பயனுள்ள முறையாக இருந்தாலும், இதன் வணிகரீதியான பயன்பாடு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இணையதள சந்தை, தாய்ப்பால் வங்கிகள் மூலம் இந்த தாய்ப்பால் விற்பனை செய்யப்படுகிறது. இது தூய்மை, பாதுகாப்பு, நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, ஏழைத் தாய்மார்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பாலை விற்கும்போது அவர்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.

உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி மருத்துவமனை, பால் வங்கிகள் மூலம் முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள், அவசர தேவை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப்பால் பெறப்பட்டு வழங்கப்பட வேண்டும். இது ஒரு சமூகப் பொறுப்பாக கருதப்படுகிறது. இந்த வணிகமயமாக்கல் முயற்சிகள் தாய்ப்பாலின் தரம், பரிமாற்றத்தின் பாதுகாப்பு, தாய்மார்களின் உரிமைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்குக் கடுமையான சட்டரீதியான கட்டுப்பாடுகள், நெறிமுறை வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.

மகப்பேறு விடுப்பு, குழந்தையின் வளர்ச்சியில் அதன் தாக்கம்

தாய்மார்களுக்கான மகப்பேறு விடுப்பு (Maternity Leave) ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி, அறிவாற்றல் முன்னேற்றத்துக்கு முக்கியமானது. முறைசார்ந்த, முறைசாரா துறைகளில் இந்த விடுப்பின் மூலம் கிடைக்கும் தன்மை, அளவு குழந்தையின் வளர்ச்சி மீது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.

இந்தியாவில், அரசு/தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தாய்மார்களுக்கு 26 வாரங்கள் (6 மாதங்கள்) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு (Maternity Benefit Act 2017) வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே தரப்பட வேண்டும். இந்த காலத்துக்கு விடுப்பு கிடைப்பது இதை உறுதி செய்கிறது.

முறைசாரா துறையில் (விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள்) பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய விடுப்பு கிடைப்பதில்லை. பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் பிறந்த 2-3 மாதங்களுக்குள் வேலைக்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதனால் தாய்ப்பால் ஊட்டுதல் குறைகிறது. இது குழந்தையிடம் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது.

முறைசாரா வேலையில் ஈடுபட்டுள்ள தாய்மார்களின் குழந்தைகள் முதல் 1000 நாட்களில் சரியான ஊட்டச்சத்து- பாதுகாப்பைப் பெற, குழந்தைப் பராமரிப்பு மையங்கள் ஒரு அவசியத் தீர்வாகும். இது தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவிக்கும், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைக்கும், தாய்மார்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும் உதவும். எனவே, இந்த மையங்களை அரசு கொள்கைகள், சமூக நலத் திட்டங்களின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம்.

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்:

·தாய்மார்களுக்கு கூடுதல் ஊதிய விடுமுறை (குறைந்தது 26 வாரங்கள்).

·பணியிடங்களில் பால் ஊட்டும் வசதிகள் (குழந்தை பராமரிப்பு அறை, பால் ஊட்டும் இடைவேளை).

·ASHA தொழிலாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்.

·ஃபார்முலா பால் விளம்பரங்களை கட்டுப்படுத்துதல்.

·பால் வங்கிகளை அதிகரித்தல்

தாயின் ஆரோக்கியம், சமூக ஆதரவு

தாய்ப்பால் ஊட்டுவதை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன. தாயின் ஊட்டச்சத்து நிலை, மன ஆரோக்கியம், குடும்ப ஆதரவு, பொருளாதார நிலை ஆகியவை முக்கியமானவை. ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பால் குறைவாக இருக்கும். பிரசவத்துக்கு பிந்தைய மன அழுத்தம் தாய்ப்பால் ஊட்டுதலை பாதிக்கும். கணவர், குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால், தாய்ப்பால் ஊட்டுதல் எளிதாகிறது. ஏழைத் தாய்மார்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது கடினமாக உள்ளது.

தாய்ப்பால் ஊட்டுதல் என்பது தனிப்பட்ட தேர்வு மட்டுமல்ல, அது பொது சுகாதாரத் தேவை. தாய்ப்பால் ஊட்டுதலை நாடு ஊக்குவிக்க தேசிய அளவில் கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும். சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமூக கற்பிதங்களைக் களைய வேண்டும். முதல் 1000 நாட்களில் முதலீடு செய்வது ஆரோக்கியமான, புத்திசாலியான, உற்பத்தி திறன் மிக்க தலைமுறைக்கு வழிவகுக்கும். குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், அறிவுத் திறனுக்கு தாய்ப்பால் முக்கியமானது. எனவே, ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கான சரியான வழிகளை அறிந்துகொள்ள வேண்டும். அரசு, சமூகம், குடும்பம் அனைவரும் இதில் பங்கு வகிக்க வேண்டும்.

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gmvdlr225o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.