Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை அருகில் இருந்த போதே 13 வயது மகனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை - மேற்கு கரையில் என்ன நடக்கிறது?

பாலத்தீனம் - இஸ்ரேல், மேற்கு கரை, காஸா

படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் மஜர்மே தனது 13 வயது மகன் இஸ்லாமின் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கிறார்.

கட்டுரை தகவல்

  • லூசி வில்லியம்சன்

  • பிபிசி மத்திய கிழக்கு செய்தியாளர், ஜெனின்

  • 22 செப்டெம்பர் 2025, 05:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

நாடுகள் குடிமக்களைப் பாதுகாக்கத்தான் இருக்கின்றன. ஒரு தந்தையும் தனது பிள்ளையைப் பாதுகாக்கவே விரும்புகிறார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், தனது 13 வயது மகன் இஸ்லாம், இஸ்ரேலியப் படைகளால் இந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அப்தெல் அஜீஸ் மஜர்மே அருகில் நின்றுகொண்டிருந்தார்.

"என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. ஒரு ராணுவ ஜீப் அருகில் வந்து, ஐந்து அல்லது ஆறு வீரர்கள் தங்கள் ஆயுதங்களால் என்னைக் குறிவைத்து, என்னை அங்கிருந்து செல்லும்படி கத்தினர். என் மகன் கொல்லப்பட்டான் என்று கூட எனக்குத் தெரியாது. நான் அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தேன்."

ஜனவரி முதல் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முகாமிற்கு தான் சென்றது, அங்கிருக்கும் தனது வீட்டிலிருந்து குடும்ப ஆவணங்களை எடுக்கத்தான் என்று அப்தெல் அஜீஸ் கூறினார்.

"நான் யாரிடமும் புகார் அளிக்க முடியாது," என்று அவர் என்னிடம் கூறினார். "அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பாலத்தீன அதிகார சபையால் தங்களையே கூட பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை - அது யூதர்களின் முடிவுகளை மட்டுமே செயல்படுத்துகிறது."

ஒரு பாலத்தீனராக, அப்தெல் அஜீஸ் தனது அதிகாரமற்ற நிலையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், ஒரு தந்தையாக அவர் வேதனையில் துடிக்கிறார்.

"என் மனதிற்குள்ளேயே, அந்த வீரனிடம் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஏன் ஒரு 13 வயது பையனைத் தேர்ந்தெடுத்தாய்? நான் அவனுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தேன். என்னைச் சுட்டிருக்கலாம். ஏன் குழந்தைகளைச் சுடுகிறீர்கள்? நான் இங்கே இருக்கிறேன், என்னைச் சுடு."

பாலத்தீனம் - இஸ்ரேல், மேற்கு கரை, காஸா

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அப்தெல் அஜீஸ் செப்டம்பர் 9-ஆம் தேதி தனது மகன் இஸ்லாமைப் புதைத்தார்.

சந்தேக நபர்களால் ஏற்பட்ட அச்சுறுத்தலைச் சமாளிக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

அந்தப் பதின்ம வயது சிறுவன் என்ன அச்சுறுத்தலை ஏற்படுத்தினார் என்பதை விளக்க அது மறுத்துவிட்டது.

ஜெனின் போன்ற நகரங்கள், இஸ்ரேல்-பாலத்தீன ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு பாலஸ்தீன அதிகார சபையின் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. இவை ஒரு அரசு உருவாவதற்கான விதைகளாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

ஆனால், அங்கு வளர்ந்தது பயங்கரவாதம் என்று இஸ்ரேல் கூறுகிறது. ஜனவரியில், காஸாவில் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, ஆயுதமேந்திய பாலத்தீன குழுக்களை ஒடுக்க ஜெனின் மற்றும் அண்டை நகரமான துல்கரேமிற்கு அது டாங்கிகளை அனுப்பியது.

அப்போதிருந்து, இஸ்ரேலியப் படைகள் அங்கேயே முகாமிட்டுள்ளன. இரு நகரங்களிலும் உள்ள அகதிகள் முகாம்களில் பெரும் பகுதிகளை அழித்து, மற்ற பகுதிகளில் கட்டடங்களை இடித்து வருகின்றன.

இஸ்ரேலின் கட்டுப்பாடு மேற்கு கரை முழுவதும் பரவும் அதேவேளையில், காஸா போரும் தொடரும் நிலையில், பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. மேலும் பல நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரிக்கத் தயாராகி வருகின்றன.

ஜெனின் மேயர் முகமது ஜாரர், இஸ்லாம் சுடப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள முகாம் நுழைவாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார். நான் முன்பு சென்றபோது இங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் இப்போது இல்லை. ஆனால், ஒரு பெரிய மண் திட்டு சாலையைத் தடுத்துள்ளது. இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் வீரர்கள் இன்னும் உயரமான கட்டடங்களிலிருந்து அந்தப் பகுதியை நோட்டமிடுகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

ஜெனின் நகரத்தில் சுமார் 40% பகுதி இப்போது இஸ்ரேலியப் படைகளுக்கான ஒரு ராணுவப் பகுதியாக உள்ளது என்றும், முழு முகாமையும் உள்ளடக்கிய சுமார் கால் பகுதி குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் ஜாரர் என்னிடம் கூறினார்.

"இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல, ஒரு பெரிய அரசியல் திட்டம் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்தது," என்று அவர் என்னிடம் கூறினார்.

"இந்த இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கு கரையை இணைக்க விரும்புகிறது. அதற்கான தயாரிப்பாக, அதன் திட்டத்திற்கு எந்த [ஆயுதமேந்திய] எதிர்ப்பும் இல்லாமல் இருக்க அது விரும்புகிறது."

ஆசிரியர்கள் மற்றும் காவலர்களுக்கு ஊதியம் வழங்க பாலத்தீன அதிகார சபைக்கு தேவைப்படும் வரி வருவாயைத் தடுத்து, அதை நீண்ட கால பொருளாதார முற்றுகையின் கீழும் இஸ்ரேல் வைத்துள்ளது.

கொல்லப்பட்ட பாலத்தீன பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக இஸ்ரேல் அதன் மீது குற்றம் சாட்டுகிறது. பாலஸ்தீன அதிகார சபையோ இப்போது அந்த நிதி உதவித் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறுகிறது.

உள்ளூர் மக்களுக்கு அடிப்படை சேவைகளை வழங்குவதும், இளைஞர்களை வெளியேறாமல் இருக்கும்படி சமாதானப்படுத்துவதும் கூட இப்போது மிகவும் சவாலான காரியமாக உள்ளது என்று ஜாரர் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில், ஏற்கனவே 140-க்கும் மேற்பட்ட நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்திருந்தாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் அதை அங்கீகரிப்பது முக்கியமானது என்றார் அவர்.

"இது, ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தாலும் கூட பாலத்தீன மக்களுக்கு ஒரு அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது," என்று அவர் என்னிடம் கூறினார்.

"இந்த அங்கீகாரம் மேற்கு கரையில் [அதிகமான] ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அது பாலத்தீன மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சர்வதேச சமூகம் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அழைக்கப்படும்."

பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் ஒரு பாலத்தீன அரசு அங்கீகரிக்கப்படுவது, இஸ்ரேலுக்கும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் உள்ள அரசியல் பிளவை அங்கீகரிப்பதாகவும் உள்ளது.

"ஒரு பாலத்தீன அரசு இருக்காது," என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேற்கு கரையில் குடியேறியவர்களிடம் கடந்த வாரம் கூறினார். "இந்த இடம் எங்களுடையது. எங்கள் பாரம்பரியத்தையும், எங்கள் நிலத்தையும், எங்கள் பாதுகாப்பையும் நாங்கள் கவனித்துக் கொள்வோம்." என்றார் அவர்.

நெதன்யாகு ஒரு பாலத்தீன அரசைத் தடுப்பதன் மூலமே தனது அரசியல் வாழ்க்கையை உருவாக்கினார். அவரது அரசு மேற்கு கரையில் யூத குடியேற்றங்களை விரிவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அவரது தீவிர வலதுசாரி கூட்டாளிகள் அந்த பகுதியை இஸ்ரேலுடன் முறையாக இணைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் சமீபத்தில் மேற்கு கரையில் 82% பகுதியை இணைத்துக்கொள்வதற்கான ஒரு திட்டத்தை கோடிட்டுக் காட்டினார். மீதமுள்ள பாலத்தீன பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று துண்டிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பாலத்தீன அரசை அங்கீகரிப்பதை எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை.

1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேல் ஜோர்டானிடமிருந்து மேற்கு கரையைப் பிடித்தது. பின்னர் அதை விட்டு வெளியேறவில்லை.

ஜெனிவா உடன்படிக்கைகளின்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் குடிமக்களின் குடியிருப்புகளை நிறுவுவது சட்டவிரோதமானது. ஆனால், மேற்கு கரைக்கு ஒரு வரலாற்று யூத உரிமை உள்ளது என்று இஸ்ரேல் வாதிடுகிறது.

சுமார் அரை மில்லியன் குடியேற்றம் செய்யப்பட்டு, இப்போது அங்கு வாழ்கின்றனர். குடியேற்ற விரிவாக்கத்தைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய அமைப்பான 'பீஸ் நௌ' (Peace Now), கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு கரை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட புதிய புறக்காவல் நிலையங்கள் தோன்றியுள்ளதாகக் கூறுகிறது.

தொலைதூர குடியிருப்புகள் சர்வதேச மற்றும் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானவை. ஆனால், நெதன்யாகு அரசிடமிருந்து அவை சாலைகள், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வடிவில் மறைமுக ஒப்புதலையும் அரசு ஆதரவையும் பெறுகின்றன.

இந்த கோடைக்காலத்தின் தொடக்கத்தில், நப்லஸின் தெற்கே தனது வீட்டுக்கு அடுத்துள்ள மலையில் புதியவர்கள் குடியேறியிருப்பதை அய்மான் சூஃபான் கண்டார்.

தனது ஜன்னலிலிருந்து, அவரும் அவரது பேரக்குழந்தைகளும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் அமைத்த எளிய மரக் கூடாரம் மற்றும் தகர கொட்டகையைத் தெளிவாகக் காண முடிகிறது. அவர்கள் அருகிலுள்ள இட்சார் குடியேற்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று அய்மான் கூறுகிறார்.

பாலத்தீனம் - இஸ்ரேல், மேற்கு கரை, காஸா

படக்குறிப்பு, நப்லஸுக்கு அருகில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தொலைதூர குடியிருப்பு தோன்றியது.

"எங்களை எங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றத்தான் அவர்கள் இங்கு இந்த தொலைத்தூர குடியிருப்பை அமைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடியேற்றவாசி வந்து, வீட்டின் கதவை தட்டி, 'வெளியேறு, வெளியேறு!' என்று கத்துகிறான்," என்று அவர் என்னிடம் கூறினார்.

"அவர்கள் தங்கள் குப்பைகளை எங்கள் வீட்டு வாசலில் எறிகிறார்கள். நான் அதிகாரிகளை அழைக்கிறேன். அவர்களோ, 'நாங்கள் ராணுவத்தை அனுப்புவோம்' என்று கூறுகிறார்கள். ஆனால், ராணுவம் ஒருபோதும் வருவதில்லை. குடியேற்றவாசிகள் தான் ராணுவம், அவர்கள்தான் போலீஸ், அவர்கள்தான் எல்லாம்."

1967-ல் இஸ்ரேல் மேற்கு கரையை ஆக்கிரமித்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, புரின் கிராமத்திற்கு அருகில் அய்மானின் குடும்பம் இந்த வீட்டைக் கட்டியது.

பாலத்தீனம் - இஸ்ரேல், மேற்கு கரை, காஸா

படக்குறிப்பு, தனது வீட்டிலிருந்து புதிய தொலைதூர குடியிருப்பை அய்மானால் பார்க்க முடிகிறது.

இந்த கிராமப்புற பகுதிகள் போன்ற இடங்கள், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களின் கீழ், அங்குள்ள குடியேற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்கால பாலத்தீன அரசிடம் இறுதியில் ஒப்படைக்கப்படும் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டன.

ஆனால், அங்கே இஸ்ரேலிய கட்டுப்பாடு நிலைத்துவிட்டது, குடியேற்றங்கள் பெருகியுள்ளன. இஸ்ரேலியப் படைகள் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆதரவளிக்கின்றன என்று மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.

2003-ல் குடியேற்றவாசிகள் வீட்டிற்குத் தீ வைத்தபோது தனது தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார் என்றும், அதற்குப் பிறகு தனது வீடு பலமுறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என்றும் அய்மான் கூறினார்.

"யார் என்னைப் பாதுகாக்க வேண்டும்," என்று அய்மான் கேட்டார். "பாலத்தீன போலீசா? நகரங்களில் இது நடப்பதைத் தடுக்க கூட அவர்களால் முடியவில்லை, இங்கு எப்படி வருவார்கள்? இங்கே, எனது பாதுகாப்பு, என்னை ஆக்கிரமித்தவர்களின் கைகளில் உள்ளது."

களத்தில் எதுவும் மாறாது என்றாலும் ஒரு பாலத்தீன அரசை சர்வதேச ரீதியாக அங்கீகரிப்பது ஒரு நல்ல விஷயம் என்று அவர் கூறுகிறார்.

பாலத்தீனம் - இஸ்ரேல், மேற்கு கரை, காஸா

"வரப் போவது இன்னும் மோசமானது," என்று அவர் கூறினார். "ஆனால், நான் இந்த வீட்டை விட்டு வெளியேறினால், அது நான் பிணமாக வெளியேற்றப்படும் போதுதான். நான் பிறந்த, வளர்ந்த, என் குழந்தைப் பருவத்தைக் கழித்த இந்த வீட்டில் ஒவ்வொரு மூலையிலும் எனக்கு ஒரு நினைவு உள்ளது. நான் எப்படி இதை விட்டு வெளியேற முடியும்?"

ஓஸ்லோ ஒப்பந்தங்களுக்குப் பிந்தைய தசாப்தங்களில், இஸ்ரேலிய விவரிப்புகள் கடுமையாகியுள்ளன. ஆயுதமேந்திய பாலஸ்தீன குழுக்கள் வலுப் பெற்றுள்ளன. பாலஸ்தீன அதிகார சபையின் கட்டுப்பாடு குறைந்துவிட்டது.

"பாலத்தீனம் ஒருபோதும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததில்லை. ஒருபோதும் இருக்கவும் போவதில்லை," என்று மகனை இழந்த தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கூறினார். "இன்றோ, நாளையோ, ஒரு ஆண்டிலோ அல்லது இரண்டு ஆண்டுகளிலோ, அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவார்கள். பாலத்தீனம் விடுவிக்கப்படும்."

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரண்டு தனிநாடுகள்தான் இங்குள்ள மோதலுக்கான தீர்வு என்ற யோசனையை பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆதரிக்கின்றன. பாலத்தீன பிரதேசங்கள் ஆக்கிரமிப்பில் உள்ள போதிலும், பாலத்தீன அமைப்புகள் பலவீனமடைந்துள்ள போதிலும் இந்த நிலைப்பாட்டில் அந்நாடுகள் உள்ளன.

இப்போது, நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டாளிகள் இணைப்பிற்காக அழுத்தம் கொடுப்பதால், காஸா போர் மற்றும் அதற்குப் பிறகு காஸாவை யார் ஆள்வார்கள் என்ற கேள்விகள் அந்த அரசியல் முட்டுக்கட்டையை வெளிப்படையான மோதலாக மாற்றியுள்ளன.

சட்டங்கள் மற்றும் அறிவிப்புகளால் அல்லாமல் அரசும் இறையாண்மையும் களத்தில் உள்ள உண்மைகளால் தீர்மானிக்கப்படும் என்று சில இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர்.

தனது ஒப்புதல் இல்லாமல் ஒரு பாலத்தீன அரசு இருக்க முடியாது என்று இஸ்ரேல் நீண்ட காலமாக வாதிட்டு வருகிறது.

இப்போது, அங்கீகரிப்பை முன்னெடுப்பதன் மூலம், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் இஸ்ரேலால் மட்டும் தனிநாடு உருவாவதை தடுக்க முடியாது என்று சமிக்ஞை செய்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czx0043gnrxo

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to "ஒரு பாலத்தீன அரசு இருக்காது," - இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தீன நாடு உருவாகாது - நெதன்யாகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.